ஓஓ…சரி சரி அப்படியே இரு…ஒன்னும் பிரச்சனை இல்ல…உன் கிட்ட ஒன்னு சொல்லனும்னு இருந்தேன் ஆனா எப்படி மறந்தேனு தெரியல…அத இப்போ சொல்லவா…என்று வினா எழுப்ப… ம்ம் சொல்லு கேக்குறேன் என்று அவள் பதில் உரைத்தாள்….
பஸ்ல ஏன் சிரிச்சேனு கேட்டுட்டே இருந்தீல…அதுக்கான காரணத்ததான் இப்போ நான் சொல்லப் போறேன்….இல்ல பஸ்ல இடையில சாப்பிட இறங்குனப்போ நீ பஸ்க்கு உள்ள இருந்தீல..அப்போ முகத்துல பவுடர் அடிச்சியா உண்மைய சொல்லு….
“ச்சீ நான் ஒன்னும் அடிக்கல (சுவற்றின் பக்கம் இருந்த முகம் வேகமெடுத்து அவன் பக்கம் திரும்பியது)”
“ஏய்…. நடிக்காத….”
“நான் எதுக்கு நடிக்கனும் (வாய் திக்கி திக்கி பேசினாள்)”
“வாய் உழறுது பாரு…சரி உணமையாவே நீ பவுடர் அடிக்கலைனா என் கண்ண பாத்து சொல்லு நான் ஒத்துக்குறேன் “
“அப்படி எல்லாம் பாக்க முடியாது ( மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்….)”
அவள் அவன் அளவிற்கு ஏறி வரவில்லை என்றால் அடுத்த முயற்சி அவன் அவளுக்காக இறங்குவதே…. ம்ம்ம் அதையும் செய்தான்….கட்டிலில் இருந்து இறங்கி கட்டிலிற்கு அடியில் சென்று படுத்துக் கொண்டு….
மீரா நீ பண்ற இந்த சின்ன சின்ன விஷயங்கள ரசிக்காம இத்தன நாள் வேஸ்ட் பண்ணீட்டனேனு நெனச்சாலே கடுப்பாகுதுடி…..
“என்னது டி ஆஆஆ…..(சட்டென திரும்பினாள்….அவள் முகத்திலும் சில நேரம் வசிக்க வரம் பெற்ற அந்த பவுடரின் வாசனை அவன் சுவாசத்தைச் சேர்ந்தது)”
“ஆமா…டி தான்…ஏன் சொல்லக்கூதா?…யேய் மீரா இதே வாசனதான் நீ என்ன ஏமாத்ததாத”
“வாய கம்முனு வை மொத…இப்போ எதுக்கு நீ அவ்ளோ பெரிய கட்டில் இருக்கும் போது கட்டிலுக்கு அடியில படுக்குற….போ போய் மேல படு”
“இதே கேள்விய நானும் கேக்கலாம்ல….இவ்ளோ பெரிய கட்டில் இருக்கும் போது நீ ஏன் கீழ படுக்குறனு….”
“இத்தன நாள் நான் அப்படிதான் இருந்தேன்… எனக்கு அது பழகிருச்சு “
“இத்தன நாள் அப்படியே இருந்துட்ட சரி…அதுக்காக காலம் முழுக்க அப்படியே இருக்க முடியுமா….நானும் எவ்ளோவோ சாகசம் எல்லாம் பண்றேன்…ஆனா நீ அத கண்டுக்க கூட மாட்டேன்ற அதான் நானே கீழ இறங்கி வந்துட்டேன்…இனிமே நீ இருக்குற இடத்துலதான் நான் இருப்பேன் “
“நான் சொன்னா கேக்கவா போற…என்னமோ பண்ணு…..”
அவன் பேசிய வார்த்தைகளுக்கு தகுந்த பதில் செல்ல முடியாததால் அந்த வாதத்தை முடிக்கத் தேவையான அத்தனை வார்த்தைகளையும் கொட்டினாள்…அத்தனையையும் புரிந்து கொண்டு அவனும் அமைதியானான்…. ஆனாலும் அவளிடம் அவள் செய்த செல்லமான அந்த விஷயத்தை சொல்ல நாவெழுந்தது… ஆரம்பித்தான்….
மீரா….மீரா..என்று மெல்லிய குரலில் கூப்பிட்டான்…அவளோ தூங்குவது போல நடிக்க….அது அவனுக்கு கண்ணாடி போல தெரிந்தது….நீ தூங்கி விட்டாய் என்று என்று எனக்குத் தெரியும்….ஆனாலும் இப்பொழுது அதை பிதற்றி தீர்க்கவில்லை என்றால் என்னால் கண் மூடித் தூங்க முடியாது….
பேருந்து இருட்டுச் சுடருக்கு நடுவில் பூத்த பொற்சுடரைப் போல் நீ பூத்திருக்க….பரித்து ரசிக்க ஆசை எழும்பியது…பரிக்க வைத்தேன்…வாசம் சூவாசம் வழியாய் இதயமடைந்தது அது அங்கேயே தங்கி விட்டது… உன்னுடைய வாசம் உயிருடன் உரையாடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் சொக்கியிருந்த என்னைத் தெளிய வைக்க புத்துணர்வுடன் வீசியதே அந்த பவுடர் வாசம்….
எனக்கு உதவியாய் இருந்த அதை எப்படி நான் மறப்பேன்….என்னிடம் வந்து சேர்ந்த பவுடர் வாசம் காற்றில் மிதமாக மிதந்து வந்து சேர்ந்தது… ஆனால் நான் தரையிறங்கி பின் பேருந்தில் ஏறிய பின்னர் அந்த வாசம் உன் வாசத்தைத் தாண்டி….முழுவதுமாக காற்றில் கரைத்து விடப்பட்டது போல இருந்தது…..அப்போது நான் உறுதி செய்தேன் நீ என் கண்களையும் கவனத்தையும் ஈர்த்துக் கட்ட வேலை செய்திருக்கிறாய் என்று…..அதற்கு முன்பே உன் சேலையின் முன் பகுதியில் பொடிப் பொடியாய் சிந்தியிருந்த வெள்ளை நிற பொடியும்….தாடை அடிப்பகுதியில் நீ தேய்க்க மறந்த வெள்ளைச் சுவடும்….வானத்தில் படிந்திருந்த மேகக் கூட்டம் போல பார்பதற்கு வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருந்தது….வானத்தில் தூக்கியெறிப்பட்ட பஞ்சு மிட்டாய் கூட்டம் எப்போது பூமி வரும் என்ற ஆசைப் பசி ஓங்கி இருக்க ஏக்கத்துடன் பார்க்கும் சிறுபிள்ளை போல பார்த்துக்கொண்டிருந்தேன்….
நடந்த அத்தனை காட்சியையும் என் கருவிழி கணக்கில் வைத்திருக்கிறது….என்று அவன் சொல்லி முடிக்க படுத்து உறங்குவது போல் பாவித்த அவள் பட்டுடல் சிறுபிள்ளை சிரிப்பது போல லேசாகக் குலுங்கியது….
சிலருக்கு எல்லாம் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பது போல இவளுக்கு தூக்கத்தில் சிரிக்கும் வியாதி இருக்கும் போல….என்று அவன் சொல்லும் போது கூட அந்த அசைவு நிற்கவில்லை….
யப்பா….எப்படி நடிக்குறா பாரு….நாடகக்காரி….இவ்ளோ பேசுறனே திரும்புறாளா பாரு… கேட்டா நான் தூங்கிட்டனே நீயா எதுக்கு தனியா பேசிட்டு இருக்கனு சமாளிப்பா….இவளப் பத்தி நமக்கு தெரியாதா என்ன என்று அவளுக்கு கேட்கும்படி சத்தமிட்டு சொல்லிவிட்டு அவனும் புன்னகித்தபடியே கண் மூடினான்…..
என்ன செய்வது….எத்தனை ஆடம்பரம் அடுக்கடுக்காய் இருந்தாலும் மனம் சிறு நடை பயணத்திலும் ஒரு குவளைத் தேனீரிலும்தான் நிம்மதியடைகிறது…. இயற்கை எவ்வளவு பெரிய மாயை தெரியுமா?….பகட்டாய் பஞ்சு மெத்தை படுக்கை இருந்த போதிலும்….உடலைச் சுருக்கிக் கொண்டு ஒரு சிறு இடத்தில் படுத்துக் கொண்டு கதைத்துச் சிரிப்பதில்தான் சொர்க்கம் இருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்….வாழ்க்கையின் அழகை வாழும் விதம்தானே தீர்மானிக்கிறது…
அத்தனை பெரிய வீட்டில் அவர்கள் இருவருக்கும் பிடித்த இடமாக அந்த கட்டில் அடியும் கட்டில் சந்தும் மாறும் என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது….ஒரு அர்த்தமுள்ள கவிதை அழகாக வாசிக்கும் நபரிடம் போய் சேர்ந்தது போல அவர்களின் ஆசை குவியல்கள் எல்லாம் அச்சிரு இடத்திலே அடைந்திருந்தது….
வாழ்க்கை சின்ன சின்ன சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் போது எத்தனையோ சில செல்லச் சண்டைகள் வந்திருக்கலாம்….அந்த சண்டையின் நோக்கமே கடைசி சமாதானத்தில் ஒரு முத்தம் வாங்குவதாக மட்டுமே முடியும்….
மே மாத விடுமுறை ஊரில் இருக்கும் பாட்டி வீட்டில் எப்படி ஒரு நொடியில் கழியுமோ அதே போன்ற எண்ண அலைகள்தான் மீராவின் மனதை அடித்துக் கொண்டிருந்தது….
ஒரு நாள் இரவு உணவிற்காக ஒரு பெரிய ஹோட்டலில் அமர்ந்திருந்த தம்பதிகள் பேசிக்கொண்ட வார்த்தை இதுதான்…..
“இந்த ஒரு வருஷம் எப்படி போனதுனே தெரியலைல மீரா”
“என்ன சொல்ற என்ன ஒரு வருஷம்?”
…கதை தொடரும்…