“பாரு.. பேசாம பாரு உனக்கே புரியும்” என்று கூறி விட்டு அம்ரிதா அந்த காணொளியை ஓடவிட்டாள். அர்ஜுன் என்ன இருந்துவிட போகிறது என்று யோசித்துக் கொண்டே பார்த்தான்.
அந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான பெயர்கள் திரையில் தோன்றியது. பாலனின் பெயரும் திவ்யா நடித்த அதே படத்திற்காக வந்திருந்தது.
அர்ஜுன் ஆர்வமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விருதை கொடுக்க இருவர் வந்தனர். அவர்கள் பாலனின் பெயரை உச்சரித்ததும் கேமரா அவனை படம் பிடித்தது. உடனே திவ்யாவையும் படம் பிடித்தது.
திவ்யா கை தட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள். பாலன் படிகளில் தாவி ஏறி மேலே வர கரவொலியின் சத்தம் அதிகரித்தது.
சிரித்த முகத்தோடு அதை வாங்கிக் கொண்டான். விருதை கொடுத்தவர்கள் அவனிடம் மைக்கை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
தொகுப்பாளர்கள் இருவரும் வாழ்த்தை தெரிவித்தனர்.
“இன்னைக்கு ஹீரோவே நீங்க தான். அஞ்சு விருத உங்க படம் மட்டுமே தட்டிட்டு போயிருக்கு.. எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”
“இது என்னோட தனி உழைப்பு இல்ல. எல்லாரும் சேர்ந்து உழைச்சது தான். படத்துல நடிச்சவங்க மியூஸிக் போட்டவர் எல்லாருமே உருவாக்கின பொக்கிஷம் இது”
“எஸ்.. அத்தனை பேருமே அவார்ட் வாங்க தகுதியானவங்க”
“முக்கியமா மேகா கேரக்டர்… அந்த கேரக்டர் நல்லா அமையலனா படமே இல்ல” என்று பாலன் சொன்னதும் கேமரா திவ்யாவை காட்டியது.
மக்கள் மத்தியில் கூச்சல் கிளம்பியது. ஏனென்றால் இவர்களுக்கு இடையில் தானே வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் மக்களின் ஆரவாரத்துக்கு குறைவே இல்லை.
அந்த தொகுப்பாளன் சும்மா இல்லாமல் திவ்யாவை மேடைக்கு அழைத்தான். அது வரை கை தட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தவள் அவன் அழைத்ததும் மேடை ஏறினாள்.
அந்த படத்தின் நாயகனை பாலன் அழைக்க அவனும் வந்து விட்டான். பிறகு சிறந்த இசைக்காக விருது வாங்கிய இசையமைப்பாளரையும் மேடைக்கு அழைத்தான்.
நால்வரும் மேடையில் நிற்கும் போது மக்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
இடத்தை சுவாரஸ்யமானதாக்க தொகுப்பாளன் பேச “வெயிட்.. இந்த வெற்றிய நான் இன்னொருத்தர் கூட பகிர்ந்துக்கனும். பகிரலாமா?” என்று பாலன் கேட்டான்.
“தாராளமா”
“இந்த படத்தோட டைட்டில்ல கதை திரைக்கதை இயக்கம்னு போட்டு என் பேர் தான் வரும். திரைக்கதை இயக்கம் என்னோடது தான். ஆனா கதை வேற ஒருத்தர் எழுதினாங்க”
எல்லோருக்குமே இதை கேட்டு ஆச்சரியம் தான். படத்தில் கதை யாருடையது என்றே கூறவில்லையே.
“நிஜம்மாவா? இப்படி ஒரு கதைய எழுதுன அந்த தெய்வம் யாரு சார்?”
“இதோ அவங்க தான்.. என் தர்மபத்தினி” என்று மனைவியை பார்த்தான்.
சுற்றி இருந்த பல கேமராக்கள் பாலனின் மனைவியை வட்டமிட ஆரம்பித்தது. அதே நேரம் திவ்யாவின் முகத்தையும் வட்டமிட்டது. அவளது உணர்வை உள்வாங்கி அதை வைத்து கதை பரப்பலாமே என்ற எண்ணம் தான்.
ஆனால் பாலனின் மனைவி கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தவள் கேமராவை பார்த்ததும் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.
அவளை பாலன் மேடைக்கு அழைக்க தொகுப்பாளனும் அழைத்தான். வேறு வழியில்லாமல் அவள் மேடையேறினாள்.
கீழே பாலனின் இரண்டு குழந்தைகளும் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது கேமராவில் பதிவாகியது.
“மேடம் தான் கதாசிரியர். குட்டி குட்டியா நாவல் எழுதுவாங்க. அதுல ஒரு கதைய தான் எனக்கு கொடுத்தாங்க. இதுல படம் பண்ணா நல்லா இருக்கும்னு” என்று பாலன் சொல்ல யாராலையும் இதை நம்பவே முடியவில்லை.
அவனது மனைவி சிரிப்போடு நின்றிருந்தாள். அவளிடம் “மேடம் நீங்க தான அந்த கதைய எழுதுன தெய்வம்?” என்று கேட்க “ஆமா” என்றாள்.
“ஆகா.. வீட்டம்மா கதை எழுத வீட்டுக்காரு படமெடுக்க… என்னவொரு பர்ஃபெக்ட் பேமிலி… “
“தாங்க்யூ”
“ஆக்ட்சுவலி இந்த கதையோட மெயின் கேரக்டர் மேகாவ திவ்யான்ஷி பண்ணட்டும்னு சஜஜஸ்ட் பண்ணதே ரைட்டர் தானாம். அவங்க இல்லனா எனக்கு ஆவார்ட்டே இல்ல” என்று திவ்யா சொல்ல அர்ஜுன் “வாட்?” என்றான்.
காணொளிய நிறுத்தி விட்டு “நிஜம்மாவா?” என்று கேட்டான்.
“ஆமா.. திவ்யாக்கு இந்த கேரக்டர் நல்லா இருக்கும்னு அவங்க தான் சொல்லி இருக்காங்க. அத சொல்லாமலே பாலன் கதைய கொடுத்து படிக்க சொன்னார். எனக்கு மேகா கேரக்டர் பிடிச்சுருக்குனு சொன்னேன். எஸ் அதான் உங்களுக்குனு சொன்னார். அப்புறம் தான் யாரோட கதை இதுனு கேட்டா.. அவரோட வொய்ஃப் கதை. கேட்டுட்டு செம்ம சாக். அவங்க தான் என்ன சஜஜட்டே பண்ணி இருக்காங்க.”
“நம்மவே முடியல அம்மு… இவங்க இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் அவங்க சொந்த கதைய அவங்க ஹஸ்பண்ட் எடுக்குற படத்துக்கு உன்ன நடிக்க சொல்லி இருக்காங்களா?”
“காதல்டா.. காதல்… நீ என்ன நம்புறல அதே போல அவங்களும் அவங்க ஹஸ்பண்ட்ட நம்புறாங்க..”
“இது பாயிண்ட்.. லவ் னு சொன்னபுறம் ஓரளவு புரிஞ்சுடுச்சு”
நிறுத்தியிருந்த காணொளி மீண்டும் ஓடியது.
“ரியலி.. வாவ்…” என்று அந்த தொகுப்பாளன் கத்த எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தனர்.
“இத்தனை வருசத்துல இவ எழுதுற கதைய எனக்கு படிக்க கூட கொடுக்க மாட்டா.. நீங்க சுட்டு படத்துல போடுவீங்கனு சொல்லிடுவா. முதல் முறையா இத கொடுத்தா. இத படமா எடுத்தா நல்லா இருக்கும். இதுக்கு திவ்யா பண்ணாங்கனா நல்லா இருக்கும். இந்த அப்பா கேரக்டர் இந்த வில்லன் கேரக்டர் எல்லாம் இவங்க பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னா. மனைவி சொல்ல தட்டிப்பேச முடியுமா?”
எல்லோரும் இதற்கு சிரிக்க பாலனின் மனைவிக்கு வெட்கம் வந்து விட்டது. முகத்தை ஒரு கையால் மறைத்துக் கொண்டு சிரித்தாள்.
“எல்லாத்தையும் இவங்க இஷ்டப்படியே பண்ணேன். அதான் இத்தனை அவார்ட் இந்த படம் வாங்கி குவிச்சுடுச்சு. எல்லா ஆணோட வெற்றிக்கு பின்னாடியும் பெண் இருப்பானு சொல்லுவாங்க. அது மத்தவங்க வாழ்க்கையில நிஜம்மானு தெரியாது. ஆனா என்னோட எல்லா வெற்றிக்கு பின்னாடியும் என் மனைவி என் குழந்தைங்க தான் இருக்காங்க”
பாலன் சொல்லி விட்டு தன் மனைவியிடம் தான் வாங்கிய விருதை கொடுத்தான். அதை வாங்காமல் அவன் மனைவி வெட்கப்பட்டுக் கொண்டே நிற்க “ப்ரப்போஸ் பண்ணுற மாதிரி இருக்கு” என்று தொகுப்பாளினி கூறினாள்.
“அப்ப பண்ணிடுவோமா?” என்று கேட்ட பாலன் உடனே மனைவியின் முன்பு ஒரு காலை மடக்கி அமர்ந்து விட்டான். அவனுக்கு கொடுத்த விருதை நீட்டினான்.
திவ்யா “ஓஹோ…” என்று கத்தி கை தட்ட எல்லோருமே சந்தோச கூச்சலிட்டனர். பாலனின் மனைவி அதை வாங்கிக் கொண்டு அவனை எழுப்பி விட்டாள்.
எழுந்து அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான்.
“இதே மாதிரி உங்க கிட்ட நிறைய கதைய எதிர் பார்ப்போம் மேம்” என்று சொல்ல “நன்றி” என்றாள்.
எல்லோருமே அவர்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க தொகுப்பாளன் திவ்யாவின் பக்கம் தாவினான். அவன் காதில் மாட்டியிருக்கும் கருவியில் திவ்யாவிடம் பேசச் சொல்லி கட்டளை வந்து விட்டது.
“மேடம்… இப்படி ஒரு காதல் ஜோடி முன்னாடி நீங்க சிங்கிளா இருக்கீங்களே.. நீங்க எப்போ மேடம் நல்ல செய்தி சொல்ல போறிங்க?”
திவ்யா பேசும் போது பாலனின் மனைவி தன் கையில் இருந்த மைக்கை கொடுத்தாள்.
“கூடிய சீக்கிரம்” என்று திவ்யான்ஷி சொன்னதுமே அரங்கத்தில் எழுந்த கூச்சலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
“சீக்கிரமேனா.. ? எப்போ மேம்? யாரு மேம் உங்க மனச கொள்ளை அடிச்சது? அதுவும் எனக்கு தெரியாம?” என்று அந்த தொகுப்பாளன் சண்டைக்கு கிளம்புவது போல் நடிக்க “போதும் போதும்.. உன் கிட்ட சொல்லுற அளவு நீ பெரிய ஆளு இல்ல அடங்கு” என்றாள் தொகுப்பாளினி.
எல்லாருமே சிரிக்க அவன் பொங்கினான்.
“ஏய் யார பார்த்து என்ன சொன்ன? ஆறு அடி உயரத்துல இருக்கேன்.. என்ன பார்த்து பெரிய ஆளு இல்லங்குற?”
“இப்போ நீ பெரிய ஆளுனு சொல்லனுமா? சரி சொல்லிடுறேன். திவ்யா மேம் … இவன உங்க தாத்தாவா பெரிய மனுசனா நினைச்சு உங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டுருங்க மேம்”
“க்ரேட் இன்சல்ட் ” என்று அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
“நான் எப்படி கல்யாணத்துக்கு கூப்பிடுவேன்? மேகாவத்தான் யாருக்கும் பிடிக்கலையே”
“இந்த மேகாவ பிடிச்ச ஒருத்தர் அம்பு விடாமலா போயிடுவார்” என்று கேட்ட தொகுப்பாளன் பின்னாலிருந்து அம்பை எடுத்து விடுவது போல் சைகை செய்தான்.
உடனே சுற்றி இருப்பவர்கள் “ஓ…” என்று கத்த அர்ஜுன் வலியை மறந்து எழுந்து விட்டான்.
“ஹேய்.. என்னயா சொல்லுறாங்க?” என்று கேட்க அம்ரிதா மேலும் கீழும் தலையாட்டினாள்.
அவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவர்கள் எல்லோருமே அர்ஜுன் என்ற அவனை தான் குறிப்பிடுகிறார்கள்.
வில் கலையின் மன்னவனல்லா அர்ஜுன். அதை தான் குறிப்பாக உணர்த்தினார்கள்.
அர்ஜுன் அதிர்ச்சியில் நிற்க அம்ரிதா அவனை பிடித்து அமர வைத்தாள்.
“நடந்தா கண்டிப்பா சொல்லுறேன்” என்று திவ்யா கூறியதும் எல்லோருமே மேடையை விட்டு இறங்கினர். திவ்யா அணிந்து இருந்த பெரிய துப்பட்டா இறங்கும் போது தட்டி விட பார்க்க பாலனின் மனைவி அதை எடுத்து கையில் கொடுத்தாள். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இறங்கியதோடு காணொளி முடிந்து போனது.
“இதுல புரிஞ்சதா? அர்ஜுனா.. எதாவது புரிஞ்சதா?”
அர்ஜுன் அவளை இமைக்காமல் பார்த்தான்.
“இதுல எங்க பேரு க்ளியர் ஆகிடுச்சு. அவங்க பேமிலிக்கு நான் நல்ல ஃப்ரண்ட்னு ப்ரூவ் பண்ணிட்டேன். இப்போ எங்க பேர அசிங்க படுத்த யாருமே இல்ல. நானும் பாலனோட வொய்ஃப் உம் ரொம்ப நல்ல ஃப்ரண்டுனு ஊரு முழுக்க பரவிடுச்சு. என்னோட காதலன் அர்ஜுன் தான்னு எல்லாருக்குமே சொல்லிட்டேன்.”
“ஏன்டி? ஏன் இது?”
“ஏன்னா.. அந்த தப்பான பேரோட உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் இந்த படத்துக்கு சம்மதம் சொன்னதே என்னோட பேர காப்பாத்திக்கவும் அதோட சினிமாக்கு ஒரு கும்பிடு போடவும் தான்.
நான் வேற யார் கதையிலயும் பாலன் கூட வொர்க் பண்ணி இருந்தாலும் இத என்னால பண்ணிருக்கவே முடியாது. பட் இது பர்ஃபெக்ட்டா அமைஞ்சது. அதுக்கு தான் எல்லாரும் வேணாம்னு சொல்லியும் நான் இத எடுத்தேன்.
இப்போ திவ்யான்ஷி இல்ல.. இப்போ உன் முன்னாடி இருக்கது அம்ரிதா தான். அம்ரிதா பண்ண தப்ப எல்லாம் மன்னிச்சுட்டு அவள திரும்ப நேசிப்பியா? திரும்ப அம்மு அர்ஜுனானு சண்டை போட்டுட்டு வாழுற சந்தோசமான வாழ்க்கைக்கு போயிடலாமா?”
அடுத்தடுத்து அறிந்த விசயங்களில் அர்ஜுனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. என்ன சொல்வது எதை செய்வது என்றே புரியவில்லை.
அவன் இத்தனை வருடமாக காத்துக் கொண்டிருந்த தருணம். அம்ரிதாவாக அம்முவாக தன்னுடைய கலங்கமில்லா பெயரை காப்பாற்றிக் கொண்டு அவன் முன்னால் நிற்கிறாள். இனி அவளை திருமணம் செய்ய எந்த தடையும் இல்லை. நம்பவே முடியாமல் அவளை பார்த்தான்.
அவன் பதில் சொல்ல தாமதமானாலும் அம்ரிதா அசையாமல் நின்று இருந்தாள். அவன் இரவு முழுவதும் யோசித்தாலும் அவனது பதிலுக்காக அங்கேயே நின்று விடுவது என்று நின்றிருந்தாள்.
அர்ஜுன் அவளை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளும் அசையாமல் நிற்க வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.
அம்ரிதாவிற்கு சந்தோசத்தில் கண்கலங்கியது. அர்ஜுனுக்கும் அதை நிலை தான். அவளது பெயரை காப்பாற்றி விட்டாள். அவளது அர்ஜுனுக்கு தகுதியானவளாக திரைப்பட உலகை தூக்கி போட்டு விட்டு அவன் முழிப்பதற்காக காத்திருந்து இன்று அவனிடம் வந்து சேர்ந்து விட்டாள்.
நெஞ்சம் சந்தோசத்தில் விம்ம அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவர்கள் அணைப்பில் இருந்த சந்தோசம் இருவருக்குமே நன்றாக புரிந்தது.
“நான் இத எதிர்பார்க்கவே இல்ல அம்மு”
“நான் இதெல்லாம் செய்யாம உன்ன கல்யாணம் பண்ணா என் குற்ற உணர்ச்சியே என்ன கொன்னுடும். அதான் நீ ஹாஸ்பிடல் இருந்தப்போவும் நடிச்சேன். நீ கண் திறக்கும் போது உன்னோட அம்ரிதாவா இருக்கனும்னு நினைச்சேன். அத என்னால முடிக்க முடிஞ்சதே ரொம்ப சந்தோசம்.”
“தாங்க்ஸ் அம்மு”
“சாரி.. எல்லாத்துக்கும்” என்றவள் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
தொடரும்.