Loading

 

அர்ஜுன் செந்தில்குமாரின் அறையில் நின்று இருந்தான். அங்கு மாட்டப்பட்டிருக்கும் அன்னையின் உருவப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளே நுழைந்த செந்தில்குமார் “இங்க என்ன பண்ணுற? தூங்கலயா?” என்று கேட்டார்.

“தூக்கம் வரல”

“மாத்திரை எல்லாம் போட்டுட்டியா?”

“ம்ம்…”

அவரும் அர்ஜுனின் அருகில் வந்து நின்று கொண்டார்.

“அம்மாவுக்கு தேசிய விருது வாங்கனும்னு ஆசையா பா?”

“யாரு சொன்னா?”

“அம்மு”

“ம்ம்.. ஆசை பட்டா.. கிடைக்கல.”

“என்னால தான?”

“உன்னாலயா? ஏன் அப்படி கேட்குற?”

“அப்படி தான் தோனுச்சு”

“உன்னால அவளுக்கு அவார்ட் கிடைக்கலனு ஏன் நினைக்கிற? யாருக்கு என்ன நடக்கனும்னு இருக்கோ அதான நடக்கும்?”

“எனக்காக தான அம்மா நடிக்கிறத விட்டாங்க”

“அதுக்கு முன்னாடி நடிச்சா தானே..? உன்ன ஏன் ப்ளேம் பண்ணுற? அப்படி எல்லாம் எதுவும் இல்ல”

“பின்ன?”

“நாங்க பண்ண தப்ப சரி பண்ண தான் விட்டா.. பிள்ளைய பெத்தா மட்டும் போதாது வளர்க்கனும் அதுவும் சரியா வளர்க்கனும்னு லேட்டா தான் புரிஞ்சுக்கிட்டோம்.”

“அதுவும் என்னால தான?”

“இல்ல.. நாங்க நல்ல பேரண்ட் இல்ல அவ்வளவு தான்”

“நானும் நல்ல பிள்ளை இல்லையா?”

“அப்படி எதுவும் கிடையாது. எல்லாருக்கும் அவங்க பெத்த பிள்ள தங்க கட்டி தான்”

“நான் அம்முவ வேலை பார்க்குற இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்”

“தாராளமா கூட்டிட்டு போ”

“அதுக்கு முன்ன சந்திராக்கு கல்யாணம் நடக்கனும்”

“அதையும் பண்ணிடலாம். அந்த பையன் நல்ல பையன். ரொம்ப அமைதியான பையன்.‌ கல்யாணம் பண்ணிட்டு இங்கயே நம்ம கூட இருனு கேட்டு பார்க்கலாம். ஒத்துக்கிட்டா சரி.. இல்லனா அவங்களோட அன்பரசிய போய் தங்க சொல்லிடலாம்”

“ம்ம்.. நாங்களும் போயிட்டா நீங்க?”

“நான் வீடடுல இருக்கதே கம்மி தான். எனக்கு தோனுச்சுனா அங்க வந்து உங்கள பார்க்குறேன். நீங்களும் என்ன வந்து இங்க பாருங்க”

“அம்மா மாதிரி உங்களுக்கும் எதாவது ஆசை இருக்கா பா?”

“ம்ம்”

“என்ன அது? நடந்துச்சா?”

“நடந்துடுச்சு”

“நிஜம்மாவா? என்ன?”

“என் பிள்ள என் கிட்ட நல்லா பேசனும்னு தான் ஆசை பட்டேன். இப்போ பேசிட்டல.. இது போதும்”

அர்ஜுன் பதில் சொல்ல முடியாமல் நின்றாள். சில நொடிகள் அன்னையின் முகத்தை பார்த்தான்.

“சாரி..”

“எதுக்கு?”

“அம்மா நம்மல விட்டு போனதுக்கு நீங்க தான் காரணம்னு உங்கள திட்டிட்டேன்”

“அதெல்லாம் பழைய கதை. உன் அம்மா இருக்காளே.. எல்லாத்தையும் மனசுல போட்டு பூட்டிப்பா. அவளா நினைச்சா தான் வாய திறந்து சொல்லுவா. வியாதிய சொல்ல கூடாதுனு முடிவு பண்ணிட்டா. அதுக்கு நாம என்ன செய்யமுடியும்?”

“உங்களுக்கு வேற எதாவது ஆசை இருக்கா? அது நடந்ததா?”

“ம்ம்..” என்றவர் அலமாரியை திறந்து காட்டினார். பல விருதுகள் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது.

“இத்தனையும் வாங்கினப்புறமும் கூட எதோ சந்தோசமில்லாத மாதிரியே இருக்கும். இன்னைக்கு அது எல்லாமே சரியா போயிடுச்சு.”

“நீங்க தூக்க மாத்திரை போடுவீங்களாமே?”

“அப்போ தான் தூக்கம் வரும்”

“இனி போடாம தூங்க பாருங்க. உடம்புக்கு நல்லது இல்ல”

“நீ சொல்லிட்டல பண்ணிடலாம்”

“நானும் தூங்குறேன் குட் நைட்”

அர்ஜுன் சென்றதும் செந்தில்குமாருக்கு சந்தோசம் நிறைந்தது. முகத்தில் ஒரு திருப்தியும் நிம்மதியும் வந்தது.

தன் அறைக்குள் அர்ஜுன் நுழைய அம்ரிதா எதோ யோசனையில் அமர்ந்து இருந்தாள்.

“ஓய்..”

“என்ன.. சாரி சொல்லிட்டியா?”

“ம்ம்..” என்றவன் அருகில் வந்து அவளது சடையை பிடித்துக் கொண்டான்.

“இப்போ நீ என் கிட்ட சாரி சொல்லு”

“சொல்லுறேன்.. சொல்லுறேன்” என்று சடையை அவனிடமிருந்து விடுவித்தவள் தள்ளி நின்று கொண்டாள்.

“காலையில இருந்து நான் சொன்னதெல்லாம் விசயமே இல்ல. இப்போ சொல்ல போறது தான் விசயமே”

“இதுக்கும் மேலையா? தாங்காது மா”

“அப்போ நாளைக்கு சொல்லவா?”

“ம்ஹும்.. நைட் தூக்கம் வராது.. இப்பவே சொல்லு”

அம்ரிதா சில நொடிகள் யோசித்தாள்.

“சரி வா.. நாம வெளிய போயிடலாம்”

“ஏன்?”

“அப்போ தான் நீ சடைய பிடிச்சு கொட்டுறதுக்குள்ள ஓட முடியும்”

“நீ சரியில்ல”

“வா..” என்று இழுத்துச் சென்றாள்.

அன்று அமர்ந்து இருந்த அதே கல் மேடையில் அவளும் அமர்ந்து அர்ஜுனையும் அமரச் சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ எழுந்து நின்று கொண்டாள்.

“அம்மு.. விசயத்த சொல்லு.. உன் பிகேவியரே சரி இல்ல”

“பர்ஸ்ட் விசயம்… நீ ஆக்ஸிடென்ட் ஆனப்போ எடுத்துட்டு இருந்த படம் ரிலீஸ் ஆகிடுச்சு”

“சரி..”

“அதுல நான் தான் நடிச்சேன்”

அர்ஜுன் விழிசுருக்கி பார்த்து விட்டு கையை கட்டிக் கொண்டான்.

“மேல சொல்லு”

“நீ கோமாக்கு போனப்புறம் நான் நடிச்சேன். அந்த படம் ரிலீஸ் ஆகி நாலஞ்சு மாசமாகுது”

“ம்ம்”

“கோபமா?”

“இல்ல.. மேல சொல்லு”

“அந்த படத்துல என் கேரக்டருக்கு அவார்ட் கூட கிடைச்சது”

“வாழ்த்துக்கள். அப்புறம்..?”

“இப்போ நான் மத்தத சொல்லுறேன். கோபப்படாம கேட்கனும்”

“ம்ம்”

“நான் உன்ன விட என் குடும்பத்த பெருசா நினைச்சுட்டேன். அது உன்ன காயப்படுத்திடுச்சு. சாரி.. உன்ன கேட்காம இல்ல உனக்கு சொல்லாம நான் எடுத்த முடிவு அது. உன்ன என் கிட்ட இருந்து பிரிச்சுடுச்சு. அதுக்கும் சாரி.

நாம திரும்ப பார்க்கும் போது என் பேர காப்பாத்திக்க சொன்ன. ஞாபகம் இருக்கா?”

“…”

“அது என்னால முடியல. என் அம்மா சரியானதும் அம்ரிதாவா நான் மாறிட்டா நீ என் கிட்ட வந்துடுவனு சொன்ன. அதுவும் ஞாபகம் இருக்கா?”

“…”

“ஆனா என்னால மாறவே முடியல. நான் மாற கூடாதுனு நினைச்சேன்.”

“ஏன்?”

“ஏன்னா?”

“அதுக்கு ஒரு காரணம் இருக்குமே.. அத சொல்லு”

“அப்போ காரணம் இருக்குனு நம்புறியா?” என்று கேட்டவள் குரலில் ஆர்வம் இருந்தது. அதை கண்டு கொள்ளாதவன் போல் தலையாட்டினான்.

“நிஜம்மா இருக்கு அர்ஜுன். கண்டிப்பா இருக்கு. நான் உனக்கு தகுதி இல்லனு நினைச்சுட்டேன். என் பேர் அசிங்கமாகிடுச்சு. இந்த அசிங்கபட்ட பொண்ணு அர்ஜுன் க்கு வேணாம்னு நினைச்சேன்.”

அர்ஜுன் அசையாமல் இருக்க அம்ரிதா தலை குனிந்து கொண்டாள்.

“நான் எல்லாத்துலையும் சரியா தான் இருந்தேன். ஆனா பாலனோட எதிரிங்க என் பேர இழுத்து விட்டாங்க. எல்லாருமே அத கண்ண மூடிட்டு நம்பினாங்க. நான் அத க்ளியர் பண்ண ட்ரை பண்ணேன். முடியவே இல்ல. சாரி”

“…”

“நான் அத நினைச்சு எத்தனை நாள் அழுதேன் தெரியுமா? எல்லாரும் திவ்யான்ஷி அழ மாட்டானு நினைக்கிறாங்க. ஆனா நான் அழுதேன். இனி எந்த மூஞ்சிய வச்சுக்கிட்ட அர்ஜுன் முன்னாடி நிற்பேன்னு அழுதேன். அவன் வந்து உன் பேர காப்பாத்த முடியலலனு கேட்டா செத்து போயிடனும்னு நினைச்சேன். நீ திரும்ப வரக்கூடாது. உனக்கு அங்கயே ஒரு பொண்ண பிடிச்சு கல்யாணம் ஆகிடனும்னு வேண்டிக்கிட்டேன். நீ என்ன மறந்துடனும்னு கூட வேண்டிக்கிட்டேன்.”

“…”

“எதாச்சும் சொல்லு”

“நீ சொல்லி முடி”

“நான் என்ன காப்பாத்திக்க முடியல.‌ பேர காப்பாத்திக்க முடியலனு துவண்டப்போ தான் மஞ்சு படிச்சு முடிச்சா. அவ வந்தப்புறம் தான் கொஞ்சம் தைரியமா சுத்துனேன். அதுக்கப்புறம் எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் எனக்குள்ள வருத்தப்படுவேன். யார் கிட்டயும் நீ சவால் விட்டத சொல்லவே இல்ல.”

“ம்ம்”

“அதுக்கப்புறம் சினிமாவே வேணாம் போனு ஒரு வருசமா நடிக்கவே இல்ல. ஆனா வீட்டுலேயே இருந்து ரொம்ப ஸ்ட்ரஸ் ஆகிடுச்சு. அதுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தேன். அவங்க எதாவது பண்ணுங்க பிடிச்சத பண்ணா சரியா போயிடுவீங்கனு சொன்னாங்க.

நான் அப்போ தான் காலேஜ் படிக்கலாம்னு முடிவு பண்ணேன். ஐடி தான் படிக்கனும்னு பி.எஸ்.ஸி ஐடி படிச்சேன்.‌ கரெஸ்ல தான். வாழ்க்கையில தான் உனக்கு நான் மேட்ச் இல்ல. அட்லீஸ்ட் படிப்பாவது ஒன்னா இருக்கட்டும்னு ஆசை.”

“…”

“கேட்க ரொம்ப கேவலமா இருக்குல? ஆனாலும் அப்போ என் மனச தேத்திக்க அதான் வழியா கிடச்சது. அதுக்கப்புறம் திரும்ப என்ன ஒரு டைரக்டர் படம் நடிக்க கேட்டாரு. நான் வேணாம்னு சொன்னேன். ஆனா மஞ்சு நீ இப்படி ஓடிட்டா உன் பேரு சரியா போயிடுமானு கேட்டா. என் பேர க்ளியர் பண்ணிக்கனும்னு திரும்ப நடிச்சேன். அடுத்து எந்த ஹீரோ கூட ரூமர் வந்தாலும் தைரியமா இருந்தேன்.

அந்த அந்த ஹீரோக்கு வேற பொண்ணு கிடைக்க ஆரம்பிச்சப்புறம் எல்லாமே குறைய ஆரம்பிச்சது. ஆனா பாலன் கூட வந்த ரூமர மட்டும் கடைசி வர ஒன்னுமே பண்ண முடியல. அதான் உள்ள உறுத்திட்டே இருந்துச்சு.

அத சரி பண்ணவே முடியாது. இனி அர்ஜுன் முகத்துல முழிக்கவே முடியாதுனு வாழ்க்கை இழுத்த இழுப்புல போயிட்டு செத்து போயிடுவோம்னு விட்டுட்டேன். நான் அப்படி விட்டு ஒரு வருசத்துக்கு அப்புறம் நீ வர்ரனு மாமா சொல்லுறார்.

அன்னைக்கு என்ன நினைச்சேன் தெரியுமா? நேர்ல பார்த்தா சவால பத்தி கேட்பியே உன்ன எப்படி ஃபேஸ் பண்ணுறதுனு ரொம்ப பயந்துட்டேன்”

“உனக்கு? பயம்?”

“ஆமா.. அம்ரிதாவும் பயப்படுவா திவ்யாவும் பயப்படுவா.. நான் பயந்தேன். நீ வீட்டுக்கு வரலனதும் சரி நம்மல பார்த்து கேள்வி கேட்க மாட்டான். நம்மல அப்படியே மறந்துடட்டும். திரும்பி போயிடட்டும்னு நினைச்சுட்டேன்”

“ஓ.. சரி”

“ஆனா நீ போகல. வந்துட்ட. நீ கேள்வி கேட்டா என்ன சொல்லனு பயந்தேன். அத பயமாவே காட்டாம கோபமா மாத்திக்கிட்டு உன்ன விட்டு ஓடுனேன். உன் கிட்ட பேசனும் போல ஆசையா இருக்கும். ஆனா சவால கேட்டுட்டா? அய்யோ அதுக்கு பேசாமலே இருக்கலாம்னு ஓடிட்டே இருந்தேன். ஆனா கடைசில கேட்டுட்ட. பாலன் கூட வந்த ரூமர் வச்சு பேசும் போது எனக்கு பதில் சொல்ல வராது. அத மறைக்க கோபப்பட்டு போயிடுவேன்”

“தெரியும்”

“எப்படி?”

“இது கூட புரிஞ்சுக்க முடியாத பச்ச குழந்தையா நான்? அப்புறம் என்ன?”

“அப்புறம் நீ வந்த ரெண்டு மூனு நாள்லயே பாலன் ஒரு கதை கொடுத்து அத படிச்சு பார்க்க சொன்னார். அதான் இப்போ நான் நடிச்ச படம். அது வேணாம்னு நீ மஞ்சு மாமா எல்லாரும் சொன்னீங்க. மாமா கூட நீ வந்து இருக்கப்போ புது பிரச்சனை வந்தா அத உன்னால தாங்கிக்க முடியாது.. இத விட்டுட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னார். நான் வேணாம்னு சொல்லிட்டு நடிக்க சரினு சொல்லிட்டேன்”

“ஏன் சொன்ன?”

“இத சொல்ல தான் வந்தேன்.” என்றவள் தன் போனை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். யோசனையோடு வாங்கி பார்த்தான்.  அதில் ஒரு காணொளி இருந்தது.

“அத முழுசா பாரு”

“அவார்ட் பங்சனா?”

“ம்ம்.. பாரு”

அர்ஜுன் அதை எடுத்து பார்க்க ஆரம்பிக்க அம்ரிதா அவனருகில் வந்து நின்று தானும் பார்த்தாள்.

“ரோல் ஆஃப் தி இயர்.. நாமினிஸ்” என்று அங்கு விழாவின் தொகுப்பாளர்கள் கூற திரையில் வரிசையாக அந்த வருடத்தில் சிறந்த கதாபாத்திரத்தின் பெயர்கள் வந்தது. அதில் திவ்யான்ஷியின் பெயரும் இருந்தது. மேகா என்ற கதாபாத்திரத்திற்காக திவ்யான்ஷியின் பெயர் வர அர்ஜுன் காணொளியை நிறுத்தினான்.

“இது அந்த மாடில எடுத்த சீன் தான?”

“ஆமா.. பாரு”

மீண்டும் காணொளியை பார்க்க ஆரம்பித்தான். திரையில் பெயர்கள் முடிந்ததும் விருதை கொடுக்க இரண்டு பேரை அழைத்தனர்.

அவர்களின் அறிமுகம் முடிந்ததும் வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது. திவ்யான்ஷியின் பெயரை வாசித்ததும் எல்லோரும் கை தட்ட கேமரா அவள் முகத்தில் வந்து நிலைத்தது.

புன்னகையுடன் எழுந்து சென்றாள். மேடையில் ஏறி அவள் வாங்கும் வரை கூட எல்லோரும் கை தட்டிக் கொண்டிருந்தனர்.

திவ்யா வாங்கி விட்டு நிற்க அதை கொடுத்தவர்கள் அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு சென்று விட்டனர்.

“கன்ட்ராஜ்லேஷன் மேம்… ஃபர்ஸ்ட் டைம் ஒரு நெகட்டிவ் ரோல்க்கு ரோல் ஆஃப் தி இயர்னு அவார்ட் கிடச்சு இருக்கு” என்று தொகுப்பாளன் கூற “மேகா நெகட்டிவ் ரோல்னு யார் சொன்னது?” என்று தனக்கு கொடுக்கப்பட்ட மைக்கை பிடித்து கேட்டாள் திவ்யா.

உடனே அவளது ரசிகர்கள் கூச்சல் போட்டு கரவொலி எழுப்பினர்.

“அது என்ன நெகட்டிவ் ரோலா?” என்று திவ்யா மக்களை பார்த்து கேட்க இனம்பிரிக்க முடியாத சந்தோச கூச்சல் கிளம்பியது.

“ஹான்.. கேட்டுக்கோங்க.. மேகா நெகட்டிவ் ரோல் எல்லாம் கிடையாது”

“இப்போ தெரியுதா போன பங்கசன்ல ஏன் திவ்யா மேம் இல்லனு வருத்தப்பட்டேன்னு?” என்று தொகுப்பாளன் அருகில் இருந்த தொகுப்பாளினியிடம் கூறினான்.

உடனே அதை நிறுத்திய அர்ஜுன் “போன தடவ இல்லனா? நீ போகலையா?” என்று கேட்டான்.

“இல்ல.. நீ ஊருக்கு போகும் போது மாமா ஒரு அவார்ட் பங்சன் வேலையில பிசியா இருந்தார்ல. அது தான். அது நடக்கும் போது நீ ஹாஸ்பிடல்ல சீரியஸா இருந்த. சோ எனக்கு பதிலா அந்த பட ஹீரோ அத வாங்கிட்டு வந்து கொடுத்தார்”

“ஓ… சரி”

மீண்டும் காணொளி ஆரம்பமானது.

“தெரியுதே.. நல்லா தெரியது.‌ அவங்க வந்ததுல இருந்து நீ விட்ட ஜொல்லுல இந்த இடத்தையே கழுவி விட்டரலாம். அவங்க வரலனு நீ அழுத அழுகையில போன முறை கழுவி விட்ட மாதிரி”

தொகுப்பாளினி அவன் காலை வார எல்லோருமே சிரித்தனர். திவ்யாவும் சிரித்தாள்.

“இவள கண்டுக்காதீங்க மேடம். அவ நம்ம ஹீரோ வர்ரப்போ விட்ட ஜொல்லுல முங்கி எந்திரிச்சுட்டேன். என்ன சொல்லுறா” என்று அவனும் வாரினான்.

அதற்கும் திவ்யா ஒன்றுமே சொல்லாமல் சிரித்தாள்.

“எப்பவுமே எல்லாரும் ஒன்னு சொன்னா நீங்க எதையாவது வித்தியாசமா சொல்லுவீங்க.. அத தான் மேம் ரொம்ப மிஸ் பண்ணேன்”

“நான் எனக்கு தோனுறத சொன்னேன். ஆக்ட்சுவலி மேகா கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன்ஸ மறச்சுட்டு போல்ட்டா இருப்பா. அதோட காதலுக்காக விடாம போராடுவா. அது நெகட்டிவ் ரோல் கிடையாது. எல்லாருமே காதலுக்காக ஒரு முறையாச்சும் போராடி இருப்பாங்க. அப்படி போராடுறது தப்பு இல்லையே?”

“ச்சே ச்சே… தப்பே இல்ல.. தப்பா மக்களே?”

அவன் மக்களை பார்த்து கேட்க மீண்டும் ஒரு கூச்சல் வந்தது.

“பாருங்க தப்பே இல்லையாம்”

“ஆமா.. தப்பே இல்ல.. வேதாக்கு மேகா பெட்டர்.. பட் அது ஆனந்த்க்கு கொடுத்து வைக்கல”

எல்லோரும் கத்த கேமரா அந்த படத்தில் ஆனந்தாக நடித்த நாயகனிடமும் இன்னொரு நாயகியிடமும் சென்றது. இருவருமே சிரித்து வைத்தனர்.

“ஹலோ.. ஹலோ… நான் கேரக்டர சொன்னேன்” என்று திவ்யா சொன்னதும் மீண்டும் சிரிப்பு சத்தம். பிறகு நன்றி சொல்லி விட்டு திவ்யா இறங்கி விட்டாள்.

அதோடு அந்த காணொளி முடிந்து போனது. அர்ஜுன் அவள் கேள்வியாக பார்க்க அடுத்த காணொளியை போட்டு கையில் கொடுத்தாள்.

“இதுவும்‌ அவார்ட் பங்சனா?”

“ம்ம்”

“ப்ச்ச்.. இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”

“அதான் சொல்லுறேனே பாரு தெரியும்”

அவனும் எடுத்து பார்த்தான். அவன் எதிர் பார்க்காத எல்லாமே அதில் இருப்பதை நம்ப முடியாமல் கால் வலியை கூட மறந்து எழுந்து விட்டான்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்