திவ்யான்ஷி குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டாள். தலை ஈரமாக இருக்க அவசரமாக அதை ஹேர் ட்ரையரில் காய வைத்தாள்.
கண்ணுக்கு சிக்கிய எதோ ஒரு பொட்டை வைத்து விட்டு பாதி காய்ந்து இருந்த கூந்தலை ஒரு ரப்பர் பேண்டில் அடக்கி விட்டாள். தனது போனையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு வேகமாக படியிறங்கினாள்.
“மாமா.. நான் முதல்ல போறேன். நீங்க சாப்பிட்டு வாங்க..” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு சென்றவள் அவசரமாக நின்று “மாத்திரை மறக்காம போடனும்” என்று கூறி விட்டு ஓடினாள்.
காரை ஓடிக் கொண்டே சாவியில் உள்ள பட்டனை அழுத்தி திறந்தவள் வேகமாக காரில் ஏறி அமர்ந்து ஓட்ட ஆரம்பித்தாள்.
அவள் போகும் வேகத்தை பார்த்து விட்டு செந்தில் குமார் பெருமூச்சு விட்டார்.
திவ்யா கரை வேகமாக ஓட்டிக் கொண்டு ஒரு மருத்துவ மனையில் சென்று நின்றாள். உள்ளே நுழையும் முன் தன்னுடைய தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டாள்.
முகத்தை யாருக்கும் காட்டாமல் குனிந்தபடி லிஃப்டில் நுழைந்தாள். உடன் நுழைந்தவர்கள் எல்லோரும் இறங்கி விட விஐபி பகுதியில் திவ்யா இறங்கினாள்.
தொப்பியை கலட்டாமல் வேகமாக நடந்து அங்கிருந்த ஒரு அறைக்கதவை திறந்தாள். உள்ளே அர்ஜுன் படுத்து இருந்தான்.
கையில் மாட்டியிருந்த ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருக்க அதை நிறுத்தி விட்டாள். நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவன் முகத்தை பார்த்தபடி அமர்ந்தாள்.
தலையிலிருந்த தொப்பியை கலட்டி போட்டு விட்டு முடியையும் விரித்து விட்டாள். பிறகு கையை கட்டிக் கொண்டு அர்ஜுன் முகத்தை பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.
இரண்டரை மணி நேரம் கடந்தது. திவ்யா ஒரு நொடி கூட அசையவில்லை. அப்படியே அமர்ந்து இருந்தாள்.
அர்ஜுன் மெதுவாக கண் திறந்தான். பார்வையை சுழற்றி பார்த்தான். அதில் திவ்யான்ஷி விழ விழி மூடித்திறந்து பார்த்தான்.
திவ்யா அசையவே இல்லை. அவளையும் அறையையும் மாறி மாறி பார்த்தவன் எதோ பேச வாயை திறந்தான். வார்த்தைகள் வரவில்லை. திரும்பவும் வாயை மூடிக் கொண்டு நிதானித்தான். பிறகு ,
“நீ.. நீங்க…?” என்று இழுத்தான்.
யாரையோ பார்ப்பது போல் அவன் பார்க்க திவ்யா அதிர்ச்சியோடு எழுந்து விட்டாள்.
“இது என்ன இடம்?” என்று கேட்டவன் தன்னைத்தானே குனிந்து பார்க்க முயற்சித்தான்.
கை கால்களில் கட்டு போட்டு இருந்தது. கையை தூக்க முயற்சிக்க உயிர் போகும் அளவு வலித்தது. முகத்தை சுருக்கியபடி கையை கீழே விட்டு விட்டான்.
காலை பார்க்க முயற்சிக்க “டேய்.. என்ன கேட்ட?” என்று திவ்யா கேட்டாள்.
“இது என்ன இடம்?”
“அதுக்கு முன்ன?”
“நீங்க யாருனு…”
திவ்யா பொத்தென நாற்காலியில் அமர்ந்து விட்டாள். அவளது அதிர்ச்சியை புரியாமல் பார்த்தான். பிறகு அந்த அறையை நன்றாக பார்த்து விட்டு “இது ஹாஸ்பிடலா? வீடா?” என்று கேட்டான்.
காரணம் அங்கே தொலைகாட்சி சோபா என்று எல்லாமே இருந்தது. கூடவே மருத்துவ உபகரணங்களும். அவனால் அது மருத்துவமனையா வீடா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.
“உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா?” என்று கேட்டவளுக்கு கண்ணீர் வர பார்த்தது.
“என்ன ஞாபகம்?”
“நான்.. என்ன தெரியலையா?”
“ம்ஹும்.. சாரி.. நீங்க எனக்கு தெரிஞ்சவங்களா?”
“தெரிஞ்சவங்களாவா?”
“இல்ல.. எனக்கு ஞாபகம் இல்ல.. கோச்சுக்காதீங்க”
திவ்யா இடிந்து போய் அமர்ந்து விட்டாள்.
“இது வீடு தானா?”
“இது ஹாஸ்பிடல்”
“ஓ… எனக்கு கையில எப்படி அடிபட்டுச்சு?”
“கீழ விழுந்துட்ட”
“நீங்க தான் காப்பாத்துனீங்களா?”
திவ்யா மறுப்பாக தலையசைத்தாள்.
“அப்புறம் நீங்க எப்படி இங்க?”
“ஏன்னா நான் உன் பொண்டாட்டி”
அர்ஜுன் அதிர்ச்சியோடு பார்த்தான்.
“என்ன மறந்துட்டல? நம்ம கல்யாணத்த கூட மறந்துட்டல?”
“க.. கல்யாணம் ஆகிடுச்சா?”
“ஆமா.. அது கூட ஞாபகம் இல்லயா?”
“இல்ல.. அது…”
“என்ன தான் மறந்த நம்ம ரெண்டு பிள்ளையாச்சும் ஞாபகம் இருக்கா?”
“பிள்ளையா? ரெண்டா?”
“அத கூட…” என்றவள் வாயை மூடிக்கொண்டு அவனை வேதனையோடு பார்க்க அர்ஜுன் முகத்தில் சிரிப்பு வந்தது.
“நிஜம்மா நான் மறந்திருந்தேன்னு வை… நீ சொல்லுறத அப்படியே நம்பிருப்பேன். என்ன ஒரு ஆக்டிங்!”
திவ்யா ஒரு நொடி அமைதி காத்தாள். பிறகு வேகமாக சென்று அவனை அணைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர் விட அர்ஜுன் அவளது தலையை அடிபடாத கையில் தடவிக் கொடுத்தான்.
“அழாத அம்மு..”
“ஏன்டா அப்படி பண்ண?”
“நீ விழுறத வேடிக்க பார்த்துட்டு நிக்கனுமா?”
“அதுக்கா நீயே மேல ஏறிடுவியா?”
“அப்போ அது தான் தோனுச்சு”
அம்ரிதா எதுவும் பேசாமல் அழுதாள். சில நிமிடங்களுக்கு பிறகு அர்ஜுன் கண்ணை துடைத்து விட்டான்.
“நான் மறந்துட்டேன்னு நம்பிட்டியா?”
“ம்ஹும்”
“ச்சே உன் அளவுக்கு திறமை இல்ல எனக்கு”
“அதுனால இல்ல. நேத்து நைட்டே உனக்கு கான்சியஸ் வந்துடுச்சுனு கால் பண்ணி சொல்லிட்டாங்க. அதோட உனக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க. அப்பவே கிளம்புனேன். வர வேணாம். அவரு தூங்கட்டும்னு சொல்லிட்டாங்க. அதான் மார்னிங் வேகமாக கிளம்பி வந்தேன்”
“ச்சே ச்சே… இப்படி சொதப்பிட்டாங்களே”
“ஆமா ஆமா”
“என்ன ஆமா..? போய் டாக்டர கூப்பிடு..” என்றதும் வேகமாக அங்கிருந்த பட்டனை அழுத்தினாள்.
“சீக்கிரம் வந்துடுவாங்க” என்று கூறி விட்டு அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“தின்னுற மாதிரி பார்க்காத.. இதுக்கு முன்ன என்ன பார்த்ததே இல்லையா?”
“இவ்வளவு நாள் பேச்சே இல்லாம அசையாம இருந்த. திடீர்னு பேசும் போது கனவா போய்ட கூடாதேனு இருக்கு”
“அப்படியா? எவ்வளவு நாள் இருந்தேன்?”
“நாள் இல்ல வருசம்”
“என்னது? ஹேய் மறுபடியும் விளையாடுறியா?”
தன் போனை எடுத்து தேதியை காட்டினாள். அதை பார்த்தவனுக்கு தலை சுற்றி விட்டது. உடனே கணக்கு போட்டவன் “ஒன்றரை வருசமா?” என்று அதிர்ந்தான்.
“பேனிக் ஆகாத.. ரிலாக்ஸ்” என்று அமைதிபடுத்தினாள்.
மருத்துவர் வந்து விட திவ்யா வெளியே வந்து விட்டாள். அவனை முழுமையாக பரிசோதித்த மருத்துவர் திவ்யாவை அழைத்தார்.
“எல்லாமே நல்லா இருக்கு. இருந்தாலும் ஒரு செக் அப் பண்ணிக்கலாம். ரிப்போர்ட் வந்தப்புறம் எல்லாம் முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறி விட்டார்.
அடுத்த இரண்டு மணி நேரம் சோதனைகளிலேயே கடந்தது. திவ்யா எல்லாவற்றிற்கும் கூடவே இருந்தாள். செந்தில் குமாரும் வந்து விட்டார். ஆனால் அர்ஜுனை பார்க்கவில்லை. திவ்யாவிடம் மட்டுமே பேசி விட்டு ஒதுங்கி நின்றார்.
சோதனைகள் செய்த களைப்பில் அர்ஜுன் மீண்டும் தூங்கி விட்டான். சோதனை முடிவுகள் வர செந்தில் குமாரும் திவ்யாவும் மருத்துவர் முன்பு அமர்ந்து இருந்தனர். எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட்டு மருத்துவர் பேசினார்.
“கை எலும்பு கால் எலும்பு எல்லாம் ஜாயின்ட் ஆகிடுச்சு. ஆனா அத யூஸ் பண்ண இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகலாம். ரெகுலர் ப்ராக்டீஸ் பண்ணிக்கலாம். மத்தபடி எல்லாமே சரியாகிடுச்சு. இன்னும் ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்து ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ணட்டும். இம்ப்ரூவ்மெண்ட் பார்த்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”
திவ்யா நிம்மதி பெருமூச்சு விட்டாள். செந்தில்குமாரும் மௌனமாக தலையாட்டினார்.
அர்ஜுனை பார்க்கப் போக நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அவனோடு திவ்யா அமர்ந்து விட செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று விட்டார். இருக்கச்சொன்ன திவ்யாவை மறுத்து விட்டு…
நன்றாக தூங்கி எழுந்த அர்ஜுனிடம் திவ்யா மருத்துவர் சொன்னதை எல்லாம் சொன்னாள்.
“நிஜம்மாவே நான் ஒன்றரை வருசமா கோமால தான் இருந்தனா?”
“ம்ம்”
“டாக்டரும் சொன்னாரு. ஆனா நம்பவே முடியல அம்மு.. எதோ நேத்து விழுந்து இன்னைக்கு எழுந்த மாதிரி இருக்கு”
“அத பத்திலாம் யோசிக்காத”
“எப்படி? அதெப்புடி கோமா? நான் விழுந்ததுக்கு வேற எதாவது ஆகி இருக்கனும்”
“டாக்டர் முதல்ல உன்ன காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. ஒரு நாள் ஆகிடுச்சு உன் உயிர காப்பாத்தவே. அதுக்கப்புறம் தான் கோமாக்கு போயிட்ட”
“இந்த கோமா எல்லாம் நிஜம்மா? நான் எதோ சும்மா சொல்லுறாங்க அந்த மாதிரிலாம் இருக்க வாய்ப்பே இல்லனு நினைச்சுட்டு இருந்தேன். இப்பவும் எனக்கு அடி பட்டு ஒன்றரை வருசம் ஆகிடுச்சு சொன்னா பொய் மாதிரி இருக்கு”
“விடுடா.. எல்லாத்தையும் யோசிச்சு டயர்ட் ஆகாத”
“கோமா னா ப்ரையின் டெத் மாதிரினு கேள்வி பட்ருக்கேன்”
“அப்படி இல்ல.. நீ கோமால இருந்த தான். ஆனா கொடுக்குற மருந்துக்கு உன் உடம்பு சரியா வேலை செஞ்சுச்சு. உன் கை எலும்பு கால் எலும்பு எல்லாமே அசையாம இருந்ததோட கொடுத்த மருந்துக்கு ஒழுங்கா சேர ஆரம்பிச்சுடுச்சு. இது வரை உனக்கு எத்தனையோ ஆப்ரேஷன் நடந்துடுச்சு. அதெல்லாம் உணராம நீ மயக்கத்துல இருக்கதே பெரிய விசயம்னு நினைச்சேன்”
“கை கால்.. வேற என்ன?”
“உன் லன்ங்ஸ்க்கு ஆப்ரேஷன் நடந்துடுச்சு. அந்த கட்டிடம் உன் மேலேயே விழுந்துடுச்சுல. அதுல உன்னால மூச்சு விட முடியலனு சொல்லிட்டாங்க. கொஞ்சமா நஞ்சமா.. ஆறு மாசத்துக்கு முன்னாடி வர எல்லா ட்ரீட்மெண்ட் உம் நடந்துச்சு.
கிட்டத்தட்ட போட்ட தையலே ஆறிடுச்சு. ஆனா நீ மட்டும் முழிக்கவே இல்ல. உடம்பெல்லாம் சரியா இருக்கு. பேஷண்ட்க்கு தான் முழிக்க மனசு இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்க”
“நான் அப்படிலாம் நினைக்கலையே”
“அது எனக்கு தெரியாது. ஆனா எவ்வளவு நாள் தான் என்ன ஏமாத்திட்டு கண்ண மூடியே இருப்பனு பார்க்குறேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
“ஆமா ஏமாத்திட்டேன். உனக்கு ரெண்டு பிள்ளைய கொடுத்துட்டு இங்க வந்து படுத்துட்டேன்ல. அப்படி தான் சொல்லுவ”
“போதும். நீ நிறைய பேச கூடாது. மூச்சு வாங்கினா பிரச்சனை ஆகிடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க. இருமல் வந்தா சும்மா இருக்காத. ஒரே ஒரு இருமல் வந்துட்டாலும் டாக்டர் கிட்ட சொல்லிடனும். இப்போ தூங்கு”
“எவ்வளவு நேரம் தான் தூங்குறது? ஒன்றரை வருசம் தூங்கினது பத்தாதா?”
“அது தூக்கம் இல்ல. இனி நீ தூங்குறது தான் தூக்கம். கை கால் வலிக்குதா?”
“கால் தெரியல. கைய அசைச்சா வலிக்குது”
“சரியா போயிடும். தூங்கு” என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுனும் கண்ணை மூடிக் கொண்டான். தூக்கம் வராது என்று நினைத்தவன் சில நிமிடங்களில் தூங்கி விட்டான்.
அடுத்த இரண்டு நாட்களும் மருந்துகளோடும் தூக்கத்தோடும் கடந்தது. திவ்யா இரவு தவிர மற்ற நேரம் கூடவே இருந்தாள்.
அர்ஜுனின் நிலை முன்னேற்றம் அடைய அவனை வேறு அறைக்கு மாற்றினார்கள். அங்கு திவ்யாவும் தங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.
திவ்யா இல்லாத நேரம் நர்ஸிடம் விசாரிப்பான். அந்த பெண் சிரிப்போடு ஒன்றரை வருடத்தில் நடந்த ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லுவாள்.
அர்ஜுன் கோமாவிற்கு போனப்பின்பு திவ்யா தினமும் மாலை சரியாக விஸிட்டர் நேரத்திற்கு வந்து விடுவாள். எதுவும் பேச மாட்டாள். எதையும் செய்ய மாட்டாள். அர்ஜுனின் அடிபடாத கையை பிடித்துக் கொண்டு அமர்ந்தே இருப்பாள். நேரம் முடியும் போது தான் கிளம்புவாள்.
அப்போதும் நர்ஸிடம் “பார்த்துக்கோங்க சிஸ்டர்” என்று கூறி விட்டுச் செல்வாள். இது தான் கடந்த ஒன்றரை வருடமாக நடக்கிறது.
அதை திரும்ப திரும்ப கேட்டு மனதில் பதித்துக் கொள்வான். கேட்கும் போதே மனம் குளிர்ந்து போகும்.
திவ்யாவும் தங்கிக் கொள்ளலாம் என்று கூறிய பின் முழு நேரமாக அவனோடு இருந்து விட்டாள். அர்ஜுன் இரண்டு முறை தந்தையை பற்றி கேட்டு விட்டான். திவ்யா எதையோ சொல்லி மழுப்பி வைத்தாள்.
இன்று கேட்க வேண்டும் என்று உறுதியோடு இருக்க செந்தில்குமாரே வந்து விட்டார். அவரிடம் சில நிமிடங்கள் அவன் பேசிக் கொண்டிருக்க திவ்யா அர்ஜுனுக்கு உணவு பற்றி விசாரிக்க சென்று விட்டாள்.
அவள் வரும் போது இருவரும் அமைதியாக இருக்க “உங்க மீட்டிங் முடிஞ்சதா? நான் பேசலாமா?” என்று கேட்டாள்.
“பேசு.. பேசு.. ” என்று அர்ஜுன் சொன்னதும் மருத்துவர் சொன்னதை விளக்கினாள்.
“சோ இதே போல உன் ஹெல்த் ஒழுங்கா இருந்தா ஒரே மாசத்துல வீட்டுக்கு போயிடலாம்.”
“அது என்ன கவனிக்குற உன் பொறுப்பு”
“நான் ஏன் உன்ன கவனிக்கனும்?”
“ஏன்னா.. நீ தான என் ரெண்டு பிள்ளைக்கு அம்மா..”
அதை கேட்டு திவ்யா தலையில் கைவைக்க அர்ஜுன் சிரித்தான்.
“ஏய் சிரிக்காத” என்று திவ்யா பதறினாள். அவனது சிரிப்பும் நின்று விட்டது. நெஞ்சில் எதோ வலிப்பது போல் உணர்ந்தான்.
“வலிக்கிதா…? அமைதியா இரு. நீ சிரிக்கக் கூடாது. இல்லனா லன்ங்ஸ்ல பிரச்சனை ஆகிடும்.”
“தும்மக் கூடாது சிரிக்கக் கூடாது இரும கூடாது.. முடியல”
“அத மேல ஏறி கீழ விழுறதுக்கு முன்ன யோசிச்சுருக்கனும்” – செந்தில்குமார்.
“சரி நான் ரொம்ப பேசிட்டேன். தூக்கம் வருது” என்று கண்ணை மூடிக் கொண்டான்.
திவ்யா சலிப்பாக பார்க்க செந்தில்குமார் புன்னகைத்தார். ஒரு வாரமும் இப்படியே கடந்தது. தினமும் செந்தில் குமார் வருவார். பேசி விட்டு சென்று விடுவார். திவ்யா ஒரு எங்கும் போகாமல் அவனோடு தான் இருந்தாள்.
அர்ஜுன் தான் கோமாவில் இருந்த போது நடந்ததை எல்லாம் கேட்பான். திவ்யாவும் சுவாரஸ்யமான விசயங்களை கூறுவாள்.
“மஞ்சு எங்க? என்ன வந்து கூட பார்க்கல?”
“அவ ஹனிமூன்ல இருக்கா”
“ஹனிமூன்னா? எப்ப கல்யாணம் நடந்துச்சு?”
“நாலு மாசத்துக்கு முன்ன”
“ஃப்ரண்ட் ஒருத்தன் கோமால கிடக்குறான். இவளுக்கு கல்யாணம் கேட்குதா? வரட்டும் பேசிக்கிறேன்”
“அவள ஒன்னும் குறை சொல்லாத. அவளோட ஆள் தான் கல்யாணம் பண்ணியே ஆகனும்னு அடம்பிடிச்சாரு. வீட்டுல இருக்கவங்களும் வயசு போகுது கல்யாணம் பண்ணப்போறியா இல்லையானு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேல தப்பிக்க முடியாதுனு பண்ணிக்கிட்டா”
“ஆமால.. இருபத்தி ஏழாச்சுல”
“ம்ம்.. இதுக்கும் மேல எப்படி அவ இஷ்டத்துக்கு விடுவாங்க?. அவ ஆள் வேற வெயிட் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சாரு”
“யார் அது?”
“உன் ஃப்ரண்டு தான்”
“என் ஃப்ரண்ட்டா? லெனின் அவளுக்கு அண்ணன்ல?”
“லூசு… உன்னோட இன்னொரு ஃப்ரண்ட்”
“எவன் அவன் எனக்கு தெரியாம?”
“யஷ்வந்த்”
“என்ன சொன்ன?”
“யஷ்வந்த் டா.. உன் ஃப்ரண்ட் தான?”
அர்ஜுனுக்கு இதை நம்பவே முடியவில்லை. இது எப்படி என்று ஆச்சரியமாக பார்த்தான்.
“நிஜம்மாவா?”
“ம்ம்.. அவர் தான் உன்ன ஹாஸ்பிடல்ல சேர்த்ததுல இருந்து ஹெல்ப் பண்ணாரு. மஞ்சுவும் அவ அப்பா அம்மாவும் இங்க தான் இருந்தாங்க. யாஷ்வந்த்க்கு ஏன் மஞ்சுவ பிடிச்சதுனு தெரியல. நீ கோமாக்கு போய் மூனு மாசத்துல அவரோட பேமிலி மஞ்சுவ பொண்ணு கேட்டாங்க. இவ எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு என் கூடவே சுத்துனா. கடைசியா ஆறு மாசத்துக்கு முன்ன மரியாதையா கல்யாணம் பண்ணுனு அடிச்சு துரத்தி விட்டேன். நிச்சயம் கல்யாணம்னு எல்லாம் உடனே முடிஞ்சது. யஷ்வந்த்க்கு வேலை இருந்துச்சு.. அது முடிச்சு இப்போ தான் ஹனி மூன் போனாங்க. ரெண்டே நாள்ல நீ கண் முழிச்சுட்ட.
உடனே அவங்கள வரச்சொல்லவா முடியும்?. விசயத்த மட்டும் சொல்லிட்டு பொறுமையா வாங்க. இங்க விசிட்டர்ஸ் அளோட் இல்லனு சொல்லிட்டேன். அவங்க வரப்போ நாம வீட்டுக்கு போயிடலாம்”
“அற்புதம்.. இவன் மட்டும் தானா இல்ல லெனினுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா?”
“அவருக்கு எல்லாம் ஆகல. அவர் நாளைக்கு வந்துடுவாரு. அவரோட ஸ்டடீஸ்காக ஃபாரின் போயிருந்தார். நீ முழிச்சத சொன்னேன். ஒரு வாரம் கழிச்சு தான் டிக்கெட் கிடைச்சது. நாளைக்கு கண்டிப்பா இங்க இருப்பார்”
“அத்த.. சந்திரா?”
“அம்மா சந்திராக்கா ரெண்டு பேருமே சென்னையில தான் என் கூட இருக்காங்க. அம்மாவ ஹாஸ்பிடல் அலைய வேணாம்னு சொல்லிட்டேன். சந்திராக்கா ஊருல இல்ல. இன்னைக்கு நைட் வருவாங்க. வந்ததும் உன்ன பார்க்க வருவாங்க”
“நான் கண் முழிச்சு ஒரு வாரம் ஆச்சு. நீ அப்பா மட்டும் தான் பார்க்க வரீங்க. மத்தவங்கள காணோமேனு பார்த்தேன். எல்லாம் அவங்க அவங்க வாழ்க்கையில பிசி.. ம்ம்…”
“சந்திராக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு”
“நிஜம்மாவா?”
“ம்ம்.. ஆனா நீ கண் திறந்தப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க. இனி அவங்க ரூட் க்ளியர்”
“யாரு மாப்பிள்ளை?”
“அவங்கள போலவே ஒருத்தர். அவருக்கும் யாருமே இல்ல. சந்திரா அக்காவ மனசார ஏத்துக்கிட்டாங்க. அவங்க வெயிட் பண்ண சொன்னாலும் கோபமே படாம ஏழு மாசமா வெயிட் பண்ணுறாங்க”
“எவ்வளவு மாறிடுச்சுல..”
“எல்லாமே மாறிடுச்சு.. “
அன்றைய நாள் முடிந்தப்பின் சந்திரா வந்து சேர்ந்தாள். அவளும் அதன் பின் தினமும் அவனை பார்க்க வர ஆரம்பித்தாள். அன்று மாலை லெனின் வந்தான்.
அர்ஜுனை நன்றாக பார்த்ததுமே லெனினுக்கு கண் கலங்கி விட்டது. அவனை பார்த்து பேசி விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பேசினான். அன்பரசியிடம் போனில் பேசினான் அர்ஜுன்.
ஆனால் அவன் அதிகமாக பேசக்கூடாது என்பதால் திவ்யா தினமும் பேச விடவில்லை. ஒரு மாதமும் ஓடிப்போக அர்ஜுனை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அன்று மாலை மஞ்சுளாவும் அவளது கணவன் யஷ்வந்த்தும் ஓடி வந்தனர். இருவரும் நலம் விசாரிக்க “நான் கோமால இருக்கப்ப ஜாலியா கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்ல பிள்ளையா வந்து நிக்கிறத பாரேன்” என்றான்.
“நீங்க எந்திரிக்கிற வரை வெயிட் பண்ணா இவ என்ன கோமாக்கு அனுப்பிடுவா. கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ண சம்மதிக்க வச்சேன்”
“எப்படியோ நல்லா இருந்தா போதும். மஞ்சுளா ரொம்ப நல்ல ஃப்ரண்ட். எனக்கு இல்ல திவ்யாக்கு மட்டும்.”
மஞ்சுளா முறைத்து வைத்தாள்.
“உடம்பு இன்னும் சரியாகலனு பார்க்குறேன்” என்று மிரட்ட “உனக்கு மிரட்ட ஒருத்தன் கிடச்சுட்டான்ல. திரும்ப ஏன் இந்த அப்பாவி ஃப்ரண்ட டார்க்கெட் பண்ணுற?” என்று கேட்டான்.
அதன் பின்பு மஞ்சுளாவும் யஷ்வந்த்தும் லெனினும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றனர்.
எல்லோரும் நல்ல விசயங்களையே பேசினர். அர்ஜுனும் எல்லோரிடமும் பேசிய பின் நிம்மதியாக உணர்ந்தான். இரவு எல்லோரும் சென்று விட அர்ஜுனுக்கு உணவை கொடுத்து மருந்து கொடுத்தாள் திவ்யா.
“அம்மு…”
“ம்ம்..”
“இங்க வாயேன்”
“என்னடா? எதுவும் வேணுமா?”
அவள் வேகமாக அருகே வர கையை பிடித்து இழுத்தான். தன் மீது விழுந்தவளை இமைக்காமல் பார்க்க “என்ன?” என்றாள் யோசனையோடு.
மீண்டும் ஒரு நொடி அவள் முகத்தை பார்த்து விட்டு வேகமாக அவளிதழில் தன் இதழ்களை பதித்தான். அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் விழித்தவள் உடனே இமைகளை மூடிக் கொண்டாள். இதழ்கள் புன்னகையில் விரிய துடிக்க அதற்கு அனுமதி கிடைக்காமல் அவனிடம் சிறை பட்டுக் கிடந்தது.
அவனது ஆரம்பம் அவளையும் இணைத்துக் கொண்டது. இணைந்தே பயணித்து அந்த இனிமையான தருணத்தை அனுபவித்தனர்.
ஆரம்பித்தவனே விலகி விட முகத்தை அவன் தோளில் புதைத்துக் கொண்டாள். அரை நிமிடத்திற்கு பிறகு அவளது உடல் மௌன சிரிப்பில் குலுங்குவதை கவனித்தான்.
“ஏய்.. எதுக்குடி சிரிக்கிற?” என்று கேட்க அவளது சிரிப்பு அதிகரித்தது.
“உன்ன தான் அம்மு.. ஏன் இந்த சிரிப்பு?”
“மருந்து வாடை.. டானிக் டேஸ்ட்” என்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு நொடி யோசித்தவன் புரிந்து விடவும் சுட்டு விரலால் நெற்றியை தேய்த்தான். ஆனால் அவனுக்கும் சிரிப்பு வர சிரித்து விட்டான்.
அவனது சிரிப்பை கேட்டதும் அவளும் மௌனச்சிரிப்பை விட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
இருவரின் சிரிப்பு சத்தமும் அந்த அறையை நிறைத்தது.
தொடரும்.
💞😳😳😳😳😳 டேய் இது எதுவும் கனவு இல்லையே
💞 அஜ்ஜு வ ஏன் இப்படி ஒன்றரை வருடம் கோமாவில் விட்ட
💞 பாவம் அம்முவும் மாமாவும்
💞👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி
Ithukku mela kanavu eluthina serial mathiri aaidathu 🙊 ellam nijamme
😜😜😜😜😜😜👍👍👍👍👍👍
விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.