Loading

அத்தியாயம் – 6

 

தன்னை யாரோ பின்னிருந்து, “ஏய்..” என்று அழைக்கவும், ராகவ் ஒரு கணம் திடுக்கிட்டுத் தான் போனான். திரும்பிப் பார்த்தால், மானபரன் தான் தலைமாட்டில் கை வைத்து முட்டுக் கொடுத்தபடி ராகவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் திரும்பிப் பார்க்கவும், மானபரனோ.. “எங்கடா போற?” என்றான் இன்னமும் அதிகாரக் குரலிலேயே!

அந்தக் குரலில் கையும், களவுமாகப் பிடிபட்ட கள்வனைப் போல சுவரோடு ஒண்டிய ராகவோ, திருட்டு முழி முழித்தான்.

“என்ன பார்க்கற?” என்று மீண்டும் அவன் கேட்க, அசடு வழிந்தான் ராகவ்.

“அது.. அது ஒன்னுமில்ல மனோ.. ரூமுக்குள்ள ஒரே புழுக்கமா இருந்துச்சு.. அதான் காத்து வாங்கலாமேன்னு போனேன்..” என்று மழுப்பினான்.

இப்பொழுது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த மானபரனோ..

“கல்யாணத்துக்கு இன்னும் டைம் இருக்கு தம்பி.. அதுவரைக்கும் கொஞ்சம் கண்ட்ரோலா இருங்க..” என்று கூற, ராகவ் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான்.

இன்னமும் அங்கேயே நின்றிருந்தவனை.. “என்ன? நான் தூங்கினதும் மறுபடியும் வெளில போலாம்னு நினைக்கறியா? வாங்க மாப்பிள்ளை.. வந்து தூங்குங்க..

உங்கள தாலாட்டு பாடி தூங்க வச்சுட்டுத் தான் நான் தூங்குவேன்..” என்று அவன் கூற, தலையில் அடித்துக் கொண்டான் ராகவ்.

‘முன்னாடி அவ என்கிட்டே தனியா பேச வந்தா.. அப்போ நான் அவள வேற மாதிரி டீல் பண்ணி சொதப்பிட்டேன்.. இப்போ நான் அவளை நேர்ல போய் பார்த்து பேசலாம்னா.. இந்தக் கரடி நடுவுல வந்து கெடுக்கறான்.. என்ன தான் செய்யறது..

பார்க்கலாம் இன்னும் ஒரு வாரம் இருக்கு.. அதுக்குள்ளே எல்லாத்தையும் அவகிட்ட தெளிவா பேசி புரியவச்சுடணும்..’ என்று தனக்குள்ளாக முடிவெடுத்துக் கொண்டான்.

ஆனால்.. அந்த வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவே போவதில்லை என்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

மறுநாளில் இருந்து மணியை வீட்டின் மற்ற அனைத்து உறுப்பினர்களும் அடைகாத்தனர் என்று கூறலாம்.. ஏனென்றால் ராகவால் மணி எந்த அறையில் இருக்கின்றாள் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாமல் போனது.

அதே வீட்டிலேயே அவன் இருந்தாலும் கூட..

ஏன் மணியே கூட அவனைத் தனிமையில் சந்திப்பதைத் தவிர்ப்பது போலவும் தோன்றியது.

ஒரு பக்கம் ராகவுக்குத் தன்னை நினைத்தே கடுப்பாக வந்தாலும், மணியின் இந்தக் கண்ணாமூச்சியில் கோபமும் வந்தது!

ஏதேதோ வழிகளில் மணியிடம் பேச முயற்சித்த ராகவ், அந்த அத்தனை வழிகளும் அடைபட்டுப் போகவும் மீண்டும் மானபரனிடமே வந்தான்.

“மனோ..” என்றழைத்தபடி தனது அலுவலக அறைக்குள் நுழைந்தவனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் மானபரன்.

“யாரது?” என்று நெற்றியில் கை வைத்து அவன் கிண்டலாகக் கேட்க, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கண் மூடித் திறந்தான் ராகவ்.

“மனோ.. நான் உன்கிட்ட சீரியஸா பேச வந்திருக்கேன்..” என்று அவன் கூற, மானபரன் அதற்கும் சிரித்தான்.

“இங்க பாரு மனோ.. இது சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. ப்ளீஸ் நீயாவது என்ன புரிஞ்சுக்கோ..” என்று ராகவ் கூற.. தனது இருக்கையில் இருந்து மேலே எழுந்த மானபரனோ..

“பாருடா.. இவ்வளவு நாள் வானத்த பார்த்தே நடந்துட்டு இருந்த மகாராஜா.. இப்போ என்கிட்டே எல்லாம் பேசறதுக்கு வந்திருக்காரு..

ஆனா.. மன்னிச்சுக்கோங்க மகாராஜா.. இப்போ உங்ககிட்ட பேச எனக்கு எந்த விஷயமும் இல்ல..” என்று கூறிவிட்டு வெளியே செல்ல, ராகவுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது.

‘இவனையெல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு பேச வந்தனே.. என் புத்திய தான் அடிக்கணும்..’ என்று தலையில் அடித்துக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் கனன்ற ஆத்திரம் மட்டும் மட்டுப்படவே இல்லை.

ஆம்.. இத்தனை நாட்களாய் மூடு பனியாய் அவர்களுக்குள் இருந்த நீயா நானா போட்டியை மறந்து ராகவ், மானபரனிடம் பேச முயன்றதே பெரிய விஷயம்.. அப்புறமும் மானபரன் அவனை மதிக்காது இப்படி நடந்து கொண்டால் அவன் அதை சாதாரணமாக ஏற்றுக்கொள்வானா என்ன?

இதில் மானபரனைக் குற்றம் சொல்லியும் ஒன்றுமில்லை.. ஏனென்றால் அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இருவரும் எதிரெதிர் கட்சி தான்.. ஒருத்தனுக்கு ஏதாவது பிடித்திருந்தால்.. அது மற்றவனுக்குப் பிடிக்காது போய்விடும்.. ஒருவன் இருக்கும் பக்கமே மற்றவன் போக மாட்டான்.. முகம் பார்த்து நேருக்கு நேர் பேசிக் கொண்டதில்லை.. மாறாக கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டு சண்டை தான் போட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ராகவ் தானாக வந்து பேசினால்.. அதை எப்படி மானபரனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? எனவே தான் அவன் அப்படி மதிக்காமல் போனது.

இப்படியே மூவரும் ஒவ்வொரு நிலையில் இருக்க.. ஒரு வழியாக திருமண நாளும் விடிந்தது.

அழகாக விடிந்தது என்று கூறுவதற்கு இடமளிக்காமல்.. மணமக்கள் இருவருமே இருவேறு மனநிலையில் இருக்க.. சுற்றி இருந்தவர்களின் கட்டளைகளின் படி செயல்படும் பொம்மைகளாக மட்டுமே இருந்தனர் இருவரும்.

தமிழ் முறைப்படித் திருமணம்! திருமறை ஓதி.. இருவரும் இன்ப, துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதாக உறுதியேற்று, கை பிடித்து சங்கல்பம் செய்கையில் மணிக்கும் சரி, ராகவுக்கும் சரி.. உள்ளுக்குள் கொஞ்சம் திக் திக் என்று தான் இருந்தது.

திருமணம் முடிந்து வரவேற்பில் நின்று.. வந்திருந்த அனைவரையும் இனிய முகமாய் வரவேற்று.. வாழ்த்துக்கு நன்றி கூறி.. பந்திக்கு அனுப்பி.. தொடக்கம் முதல் இறுதி வரை அனைவரையும் கவனத்தையும் அழகாய் ஈர்த்து.. இறுதியில் நன்றி கூறி விடை பெற்று வீடு வந்து சேறு வரைக்கும் இருவரும் நிச்சயமாக தங்கள் கூட்டை விட்டுப் பறந்து வேறெங்கோ சென்றுவிட்டதைப் போல உணர்ந்தார்கள்.

ஏனென்றால்.. அந்த ஒரு நாள் முழுமைக்கும் என்ன நடந்தது என்றே இருவருக்கும் புரியவில்லை.. ஏதோ இயந்திர கதியில், ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோட்களாக நடந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் தான் சற்று அப்பாடா என்று மூச்சு விட்டார்கள்.

ஆனால் அந்த தளர்வு ஒரே ஒரு நிமிடம் தான் இருந்தது மணிக்கு. அடுத்த நிமிடமே.. அவர்கள் திருமணத்திற்கு வந்திருந்த தர்ஷாவின் நினைவு தான் அவளுக்குள் உழன்றது.

அவளும்.. அவள் கூறிய வார்த்தைகளும்!

“நீ, ராகவ் மேல ஆசைப்படறேன்னு நாகரிகமா சொல்லியிருந்தா, நானே மனசார உனக்கு அவரை விட்டுக்கொடுத்திருப்பேனே.. இப்படி சீப்பா அவருக்கு சொத்து வராது.. அது இதுன்னு சொல்லி என்னையும் அவரையும் பிரிச்சுட்ட இல்ல?

ஆனா மணி, நான் உன்ன மாதிரி இல்ல.. சொத்து பத்தி நீ பேசினதுக்காக நான் குழம்பல.. இப்படி ராகவோட நெருங்கின சொந்தமான நீ ஏன் அவரை பத்தி இப்படி தப்பா சொல்லணும்னு யோசிச்சேன்.

உங்க வீட்டுல உனக்கு இருக்கற வலிமை எனக்கும் தெரியும்.. உன்ன பகைச்சா.. மொத்த குடும்பத்தையும் பகைச்சுக்கற மாதிரி. என்னால ராகவ், அவரோட மொத்தக் குடும்பத்தையும் பகைச்சுக்க வேண்டாம்னு தான் நான் அமைதியா இருந்தேன்.

ஆனா நீ.. குள்ளநரித்தனமா வேலை செஞ்சு.. என்னையும், ராகவையும் பிரிச்சு.. கல்யாணத்தையே நடத்தி முடிச்சுட்டியே.. நிஜமாவே நீ ரொம்ப சாமர்த்தியசாலி தான்..” என்று அவள் நக்கலாகக் கூறவும், மணிக்கோ இதயமே அதன் துடிப்பை நிறுத்தி விட்டது போலானது!

‘அப்போ ராகவ்.. நிஜமாவே இவளை காதலிச்சிருக்கானா? அப்பறம் ஏன் வீட்டுல கேட்டதும் எனக்கு ஒகே சொன்னான்?’ என்று குழம்பிக் கொண்டிருந்தவளை, மீண்டும் தன் பக்கம் இழுத்தது தர்ஷாவின் குரல்.

“அவரோட காதலை மட்டுமே எதிர்பார்த்திருந்த என்ன விட்டுட்டு, அவர் பணத்தை மட்டுமே பார்த்த உன்ன கல்யாணம் செய்திருக்கார் ராகவ். அவர் மனசுக்குள்ள காதலோட வலி இருக்கும் மணி.. ப்ளீஸ் அவரை நல்லா பார்த்துக்கோ..

உன்னோட குள்ளநரித்தனமெல்லாம் ராகவுக்கு தெரிய வேணாம்.. வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கறவர் அவர்.. அவங்களுக்காக உன்ன கல்யாணம் செய்துக்கிட்டாலும், கண்டிப்பா உன்ன அவர் ரொம்ப நல்லாவே பார்த்துப்பார்..

ப்ளீஸ் நீயும், இனிமேலாவது பணம், காசுன்னு மட்டும் இல்லாம.. அவர் மனசையும் புரிஞ்சு நடந்துக்கோ..” என்று அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தை சம்மட்டியால் அடித்தன!

‘இவள தான் ராகவ் காதலிச்சிருந்தான்னா அவன் ஏன் என்ன கல்யாணம் செய்துக்கணும்?’ என்று சுனாமியாய் மனதுக்குள் பெருங்கேள்வி எழுந்தது.

விடை.. தர்ஷா பேசியதில் இருந்தே கிடைத்தது!

ஆம்.. உண்மையில் பணத்துக்காக.. சொத்துக்காக திருமணம் செய்தது அவளல்ல.. அது ராகவ் தான்.. பாட்டியின் சொத்துக்காக அவளைத் திருமணம் செய்திருக்கிறான்.

அது தெரியாமல், இந்த தர்ஷா வந்து, இவளிடம் கண்டபடி உளறிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அவளிடம் உண்மையை சொல்லவும் முடியவில்லை மணியால்.. முதலாவது காரணம்.. ஒரு நல்லதை எண்ணியே என்றாலும் ராகவைப் பற்றித் தவறாகச் சொல்லி ராகவையும், தர்ஷாவையும் பிரிக்க முயன்றது அவளே தானே?

இப்பொழுது போய் உண்மையை சொல்லி, தன்னை நல்லவள் என்று காட்டிக் கொள்ள இயலவில்லை அவளுக்கு..

குற்றமுள்ள நெஞ்சல்லவா? குறுகுறுக்கத் தானே செய்யும்?!

மற்றொன்று.. அது மணியே ஒத்துக்கொள்ளாத.. ஒத்துக்கொள்ளப் பிடிக்காத ஒன்று!

அது.. மணியால், ராகவை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியவில்லை.. அவன் எவ்வளவு வஞ்சகமானவனாக இருந்தாலும், என்னவோ அவளால் வாய் வார்த்தையாகக் கூட அது முடியவில்லை.

மனமெல்லாம் குழப்பமும், குற்ற உணர்ச்சிகளும் மொத்தமாய் அவளை வாட்டி எடுத்தது!

இதில் இந்த அலங்காரமும், சுற்றி இருக்கும் சொந்தங்களின் சீண்டல்களும்..

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாய் களைந்து போட்டுவிட்டுத் தனது அறைக்குள் சென்று முடங்கிவிட வேண்டும் என்று தோன்றியது மணிக்கு.

சமையலறையில் இருக்கும் பாட்டியிடம் கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிடலாம் என்று எழப்போனவளை, தேவகியின் குரல் தடுத்தது.

“மணி.. எங்க போற? இப்போ எங்கயும் போகக்கூடாது.. ராகவ் பக்கத்துலயே உட்கார். பாலும், பழமும் சாப்பிட்டுட்டு அப்பறம் எழுந்துக்கலாம்..” என்று கூற, உள்ளுக்குள் கனன்றது அவளுக்கு.

ஒட்டுமொத்தமாய் தன் சுயத்தை முழுவதும் இழந்துவிட்டதாய் உணர்ந்தாள் அவள். இத்தனை நாட்களாய் தான் சுதந்திரமாய் வளைய வந்த தன்ஹ சொந்த வீட்டிலேயே இப்பொழுத் கைதியைப் போல உணர்ந்தாள் அவள்.

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக பால் பழமெல்லாம் சாப்பிட்டுவிட்டு, அவள் அறைக்கு வந்தாலும், அடுத்து குளித்து முடித்து, புதுப்புடவைக்கு மாறி.. இரவு உணவுக்கு வரும் பொழுதும், “ராகவ் பக்கத்துல உட்காரு மணி..” என்று பாட்டி உத்தரவிட, அவளுக்கு வெறுப்பாய் வந்தது.

வாழ்க்கையையே நொந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு எழுந்தவளை, அப்பொழுதும் ஓய்வெடுக்க அனுப்பவில்லை.. முதலிரவுக்காக அவளைத் தயார் செய்ய, தேவகி கூட்டிக் கொண்டு போகயில், அவள் தேவகியிடமே கூறிவிட்டாள்.

“அத்தை.. ரொம்ப டயர்டா இருக்கு அத்தை.. இதெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாமே?” என்று அவள் சோர்வுடன் கூற, அவளது முகத்தைத் தொட்டு நிமிர்த்திய தேவகி..

“கல்யாணம் செஞ்சுட்டா.. உடனே எல்லாமே நடந்துடணும்னு இல்லடா.. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தான?

ரெண்டு பேரும் இவ்வளவு நாள் சும்மா மாமா பையன், அத்தை பொண்ணு அப்படிங்கற நிலைல இருந்தீங்க..

சாதாரணமா பார்த்து பழகின ஒருத்தன் தானடா ராகவ்? அவன்கிட்ட கொஞ்சம் உங் வாழ்க்கை பத்தி சீரியஸா பேசிப் பழக ஒரு வாய்ப்புன்னு நினைச்சுக்கோ..

உன்ன யாரும்.. எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ணமாட்டாங்க.. என்ன?” என்று ஆறுதலாகக் கூற.. அவர் கூற்றில் கொஞ்சம் மனம் சாந்தப்பட்டாலும், முழுவதுமாக சமாதானமடைய மறுத்தது!

அவரிடம் சரியென்று மனமில்லாது தலையசைத்தவளை, மிதமாக அலங்கரித்து ராகவின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

இங்கு ராகவுக்கும் உள்ளுக்குள் குழப்பம் தான். என்னவோ திருமணப் பேச்சு நிகழ்வதற்கு முன்பு, மணி ஒரு பட்டாம்பூச்சியைப் போல அங்குமிங்கும் திரிந்தவள்.. திருமணப் பேச்சுக்குப் பிறகு, அவளது அத்தனை துள்ளல்ளும் அடங்கி மூலையில் ஒடுங்கிப் போய்விட்டதைப் போலத் தோன்றியது அவனுக்கு.

மணியிடம் மனதில் இருப்பதையெல்லாம் முழுவதுமாக எடுத்துக் கூறிவிடவேண்டும் என்று ஆவலாகத் தான் காத்திருந்தான் ராகவ்.

மெல்லக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.

உள்ளே வந்தவள், பழக்கமில்லாத சேலையினாலோ.. அன்றி அன்று முழுவதும் இருந்த உடல் மற்றும் மனச்சோர்வின் காரணமாகவோ, மெல்லத் தடுமாறவும், ஓடிச் சென்று அவள் கீழே விழாமல் மெல்ல அணைத்தபடி தாங்கிக்கொள்ள.. அவ்வளவு தான்.. சட்டென மணியின் கையில் இருந்த பால் பாத்திரம் கீழே விழுந்து அதிலிருந்த பாலெல்லாம் தரையில் கொட்டிச் சிதறியது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்