அத்தியாயம் -6
கேம்பிற்கு வந்தவர்களுடம் அரட்டை அடித்து கொண்டிருந்தாள் கண்மணி.
” என்ன அக்கா சொல்லறீங்க? நிஜமாலுமே பாயாசத்துல உப்பு கலந்து கொடுத்துட்டீங்களா? “
“பின்ன? இந்த சரோஜா கிட்ட வால் ஆட்டுனா என்ன ஆகும்னு தெரிய வேணாமா? பாவம் மனுஷன் எல்லார் முன்னாடியும் துப்பவும் முடியாம, முழுங்கவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாரு. அப்போ பாக்கனுமே அவரோட மூஞ்சிய ஹாஹா.. கதவு இடுக்குல சிக்குன எலியாட்டம்..!”
” அட கடவுளே..! நெனச்சு பாத்தாலே ஒரே சிப்பு சிப்பா வருதுக்கா! “
” ஆமா வந்ததுல இருந்து பாக்கறேன் நீ அரட்ட தான் அடிச்சிட்டு இருக்க, செக் அப்புக்கு டோக்கன் வாங்குன மாறியும் தெரில இங்க வேலை செய்யறியா நீ? “
“ஹா.. அப்படியும் வெச்சிக்கலாம் “
“அப்போ டாக்டரா புள்ள நீ?”
“அப்படியும் சொல்லலாம் சொல்லாமயும் இருக்கலாம்.உங்களுக்கு ஆசையா இருந்தா நீங்க என்ன செல்லம்மா டாக்டரம்மானு கூட கூப்பிட்டுக்கலாம். எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல”
“வாயி.. வாயி..”
” ஏதோ அத வெச்சி தான் என் பொழப்பு ஓடுது நீங்க வேற ஏன் கா.. அச்சசோ என் பாஸ் வந்துட்டாரு பை பை பை..! ” அவர்களிடம் சொல்லி விட்டு வருணின் கண்ணில் படாமல் குனிந்து குனிந்து சென்று கொண்டிருந்தாள் கண்மணி.
” உன் ஷால கையில கெட்டியா புடிச்சிக்கோ அது காத்துல ஆடி உன்ன காட்டி கொடுக்குது பாரு”
“ஆமால்ல..அய்யயோ பாஸு..!” அவனை பார்த்து அசடு வழிந்தவள்,
“அது நம்ம கேம்ப்ப பத்தி தான் பாஸ் சொல்லிட்டு இருந்தேன். நாளைக்கு அவங்க தெருல இருக்க எல்லாரயும் கூட்டிட்டு வரேன்னு சொல்லிருக்காங்க. நாளைக்கு பாருங்க கூட்டம் எப்படி அலை மோதுதுன்னு. ஓவர் நைட்ல பேமஸ் ஆக போறீங்க பாஸ் நீங்க! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. சரி நா போய் வேலைய பாக்கறேன் பை ” அவள் நகர போக அவள் கையை பிடித்து தடுத்தவன் “ஒன்னும் வேணா என்கூட வா ” என கூறி அவனோடு கூட்டி சென்றான்.
‘ஒரு வேள நீ வேல செஞ்சு கிழிச்சது போதும்னு ஊருக்கு பஸ் வச்சுவிட கூட்டிட்டு போறாரோ? அய்யய்யோ இங்க வேற கிளைமேட் செமையா இருக்கு. ஒரு வாரம் இங்க தங்கி தமன்னா கலருக்கு நம்மளும் பாலிஷாகலாம்னு பார்த்தா மறுபடியும் அங்க போய் கருவா குஞ்சு ஆக்கிறவாரு போலையே..! நோ நோ.. கலராகாம இங்க இருந்து போகவே கூடாது..! ‘ என தீர்மானித்தவள்,
” பாஸ் பாஸ் கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்க. அவசரப்பட்டு எந்த தப்பான முடிவும் எடுத்துறாதீங்க “
அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் காரை வந்தடைந்தனர் இருவரும்.
“ஏறு ” என்றவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.
” மாட்டேன் நான் வரமாட்டேன். நான் இங்கதான் இருப்பேன்! நீங்க ஒரு வாரம் இருக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு நடுவுல என்ன அனுப்பி விட பாக்குறீங்களா ? உங்க மனசு என்ன கல்லா சார்? கல்லுல கூட ஈரம் இருக்கும், இப்படி பாறாங்கல்ல முழுங்குனவன் மாறியே பாக்கறீங்களே என் கண்ணீர் உங்களை நினைக்கலையா? என் வேதனை உங்களுக்கு புரியலையா?
என் கதறல் உங்களுக்கு கேட்கலையா? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க”
” சூப்பர் இதே மாதிரி தான் பேசணும் ஓகே ” என்றவன் சீரியஸாக பேச அதில் விழித்தவள்,
” என்ன பாஸ் சொல்றீங்க ஒண்ணுமே புரியல “
” இத முன்னாடியே கேட்க வேண்டியது தானே? எப்படா டைம் கிடைக்கும் எப்படா டிராமா போடலாமுனே இருக்கிற நீயு ?உக்காரு கண்மணி சொல்லறேன் “
‘ என்னமோ சொல்லறேனு சொல்லிட்டு ஒன்னுமே பேசாம வராரு? ‘ என மனதில் நினைத்தவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு கார் கண்ணாடியை இறக்கினாள். எதிர் காற்று வந்து அவள் முகத்தில் பலமாக மோத, லேசாக தலையை வெளியே விட்டு கண்களை மூடி அதை ரசித்து கொண்டு வந்தாள் கண்மணி.
“கண்ணாடி ஏத்து உள்ள டஸ்ட் வரும் “
” முடியாது என்ன எங்க கடத்திட்டு போறீங்கனு சொல்லுங்க அப்போ தான் கண்ணாடி ஏத்துவேன் “
” பலி கொடுக்க தான் வேற எதுக்கு? “
“ஏதேஏஏஏஏ..!!!” கண்கள் விரிய கேட்டவளிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்று தான் துடித்தது.
ஓர கண்ணால் அவளை பார்த்து அவன் சிரிக்க அதை கண்டு கொண்டவள்
அவனை முறைத்து பார்த்தாள்.
” ஒரு சின்ன இஷ்யூ ஆயிருச்சு கண்மணி. இந்த ஊர்ல கேம்ப் நடந்த அப்ரூவல் வாங்கி தான் நாம நடத்துறோம். ஆனா இப்போ திடீர்னு இந்த ஊர் தலைவர் அது எப்படி நீங்க நடத்தலாம்னு கொஞ்சம் பிரச்சனை பண்றாரு, அவர் சப்போர்ட் இல்லாம கண்டிப்பா இந்த கேம்ப் நடத்த முடியாது.
முன்னாடியே அவர் கிட்ட இத பத்தி பேசி பர்மிஷன் வாங்கி இருக்கணும், பட் நான் தான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். “
” இப்ப என்ன பாஸ் பண்றது? “
” அதான் எனக்கும் தெரில, காலையில போய் நான் பேசுனதுக்கு இன்னைக்கு நைட் குள்ள கேம்ப்ப வெக்கேட் பண்ண சொல்லிட்டாங்க. அதான் நீ வண்ணம் வண்ணம்மா நல்லா பேசுறியே, எங்க உன் திறமைய யூஸ் பண்ணி அவர நம்ம கேம்ப்புக்கு சம்மதிக்க வையு பாப்போம்..! “
“அவ்ளோ தானே..! இதுலா கண்மணிக்கு சப்ப மேட்டரு சால்டு வாட்டரு சாரே..! அவங்க எங்க இருக்காங்கனு மட்டும் சொல்லுங்க அப்றம் தெரியும் என்னோட பவரு..!”
“ம்ம்ம்.. ம்ம்.. அந்த இடத்துக்கு தான் கூட்டிட்டு போய்ட்டு இருக்கேன். “
ஊர் தலைவர் வீராசாமி வீட்டை
வந்தடைந்தனர் இருவரும்.
அவர்கள் உள்ளே செல்லும் முன்னரே
வாசலில் சிலர் கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்டது.
” எவளோ தைரியம் இருந்தா என் ஊருக்குள்ளயே வந்து கலப்பட பொருள விப்ப நீ!!” என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த வீராசாமி எதிரில் இருந்தவனின் கன்னத்தை பழுக்க வைக்க, இங்கு அவள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டாள் கண்மணி…!
” ஆத்தாடி என்னா அடி..! இங்க வரைக்கு சவுண்டு கேக்குது பாஸு “
அதற்குள் அங்கு வீராசாமி அவர் ஆட்களிடம், ” டேய் இவன புடிச்சி கட்டுங்கடா. இவனுக்கு விழுகற அடிய பாத்துட்டு இனி எவனும் நம்ம ஊருக்குள்ள காலடி எடுத்து வைக்கவே யோசிக்கனும்..! “
அங்கு கண்மணியோ, ” ஊர் தலைவருனு சொன்னீங்க? கட்டம் போட்டு கட்டி அடிக்கிற கட்டப்பா மாறில பேசிட்டு இருக்காரு.. எத்தன நாள் வன்மம் என் மேல? இங்க வந்து கோர்த்துவுட பாக்கறீங்க. நீங்க கேம்ப நடத்துங்க நடத்தாம போங்க, பர்மிஷன் வாங்குங்க வாங்காம போங்க, ஆள விடுங்க டா சாமிஈஈ. உசுரு முக்கியம் பிகிலேஏஏ..! ” என்றவள் விறுவிறுவென சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
வருண் தான் யோசனையாய் நின்று கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் அவனிற்கு எவ்வளவு முக்கியம் என அவனே அறிவான். ‘இந்த ப்ராஜெக்ட்டை குறித்த நேரத்தில் நல்லபடியாக முடித்து விட முடியுமா? ‘ எப்பொழுதும் எழும் கேள்வி தான். ஆனால் இன்று சந்தேகத்தோடு சேர்த்து கலக்கத்தையும் அவனிற்கு கொடுத்தது அந்த கேள்வி.
வருண் அங்கேயே நின்று கொண்டிருக்க, “ம்ம்ச் இவரு ஏன் தான் இப்படி பண்ணுறாரோ ” என்றவள் இறங்கி போய் அவனை அழைக்க போக, அவன் முகத்தில் இழையோடிய சோகம் அவள் மனதை பிசைந்தது.
” ஏன் இப்படி மூஞ்ச தொங்க போட்டு வெச்சிருக்கீங்க? இப்போ என்ன அவர் கிட்ட பர்மிஷன் வாங்கணும் அவ்வளவு தானே? வாங்கிறலாம் விடுங்க. இப்போ ஒரே கலவரமா இருக்கு அப்றம் பேசிக்கலாம் வாங்க ” என்றவள் அவனை பிடித்து இழுக்க அவளிடம் இருந்து தன் கரத்தை விடுவித்து கொண்டவன், ” விடு கண்மணி உனக்கு புரியாது ” என்றான் மெல்லிய குரலில்.
” எல்லாம் எனக்கு புரியும் கொஞ்சம் டைம் கொடுங்க என்ன பண்ணலாம்னு சேந்து யோசிப்போம் “
தலையில் கை வைத்து சோர்வாக அமர்ந்திருந்தாள் கண்மணி. வருண் வீராசாமியை பற்றி சொன்ன தகவல் அனைத்துமே அவர் நிச்சயம் இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார் என்ற ரீதியிலேயே இருந்தது.
” ரொம்ப ரக்கட் ஆன ஆளா இருக்காரே. நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லுற மாறி பேச்சு எல்லாம் இல்ல ஒரே வீச்சு தான் போல அவர் கிட்ட “
” அதான் நேர்லயே பாத்தியே..! இதுல வேற உனக்கு என்ன டவுட்?”
” மண்ட காஞ்சு வயிறும் காயிது டிபன் சாப்பிட்டா தான் மூள நல்லா எனர்ஜிடிக்கா வேல செய்யும். இங்க பக்கத்துல தான் ஒரு ஹோட்டல் இருக்கு அங்க போலாமா? “
” பக்கத்துலயா? இங்க ஒன்னும் இருக்கற மாறி தெரிலயே? “
“இல்ல பாஸ் நா பாத்தேன் மாரியம்மா மெஸ் செம கூட்டமா இருந்துச்சி, அதுவும் அங்க ஒருத்தர் கோன் தோசைய எடுத்துட்டு போனாரு பாருங்க.. ப்பா பார்வையிலையே தோசைய பிச்சு தின்னலாம் போல இருந்துச்சி ” என்றவள் எச்சிலை கூட்டி விழுங்க, அவளை மேலும் கீழுமாக பார்த்து வைத்தான் வருண்.
” வாழ்கையே ரசிக்கறதுக்கு தான் பாஸ்..! எப்படியும் வாழுறோம்னு ஆகிருச்சு நல்லா என்ஜாய் பண்ணியே வாழ்வோமே!”
அவள் சொன்ன மாரியம்மா மெஸ்ஸில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது.
செல்ஃப் சர்வீஸ் முறை படி தான் அந்த மெஸ் இயங்கி கொண்டிருந்தது. முதலில் கேஷ் கவுன்டரில் காசை கொடுத்து, டோக்கன் வாங்கி கொள்ள வேண்டும். பிறகு அந்த டோக்கனை கொடுத்து உணவை பெற்று கொள்ள வேண்டும்.
” ரொம்ப கூட்டமா இருக்கே வேற ஹோட்டல் போலாம் “
“வேணா வேணா இங்கயே சாப்பிடலாம். இவளோ கூட்டமா இருக்குனா அவளோ டேஸ்ட்டா இருக்குனு அர்த்தம் ” என்றவள் சட்டென கூட்டத்திற்குள் புகுந்து மறைந்து போனாள்.
“இவள..” என தலையில் அடித்து கொண்டவன். போனை எடுத்து அதில் ஐக்கியமானான்.
இருவது நிமிடங்கள் கழித்து, எங்கேயோ கேட்பது போல் மெல்லிய குரலாக கேட்டது ஒரு குரல். முதலில் அதை அலட்சிய படுத்தியவன், பிறகு கண்மணியின் குரல் போல் இருக்கிறதே என சந்தேகமாக ஏறிட்டு பார்க்க, அவள் கையில் மூன்று தட்டை வைத்து அதை பிடிக்க முடியாமல் தட்டு தடுமாறி “பாஸ் பாஸ்! ” என கத்தி கொண்டிருந்தாள். அவள் கத்திய கத்தில் அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவளையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
ஓடி போய் அவளிடம் தட்டை தாங்கி கொண்டவன் திட்டை இலவசமாக வாங்கி கொண்டான்.
” எவளோ நேரம் கூப்பிடறேன்? அப்படி என்ன போன்னு ? சப்போஸ் பேலன்ஸ் பண்ண முடியாம கீழ போட்டு இருந்தேனா என் தோசை என்ன ஆகியிருக்கும்? ஏதோ நா கொஞ்சம் திறமையான பொண்ணா இருக்க போய் சமாளிச்சிட்டேன். “
அதில் பக்கென சிரித்தவன், ” சரி வா.. வா.. ” என அவன் அமர்ந்திருந்த திட்டிற்கு கூட்டி சென்றான்.
இரண்டு பிளேட் தோசையும் ஒரு செட் பூரியும் வாங்கி இருந்தாள் கண்மணி.
” எவளோ ஆச்சி? ” என்றவன் அவனின் பர்சை எடுக்க, ” ஒன்னும் வேணா. சாப்பிடறதுக்கு எல்லாம் காசு பாக்க மாட்டா இந்த கண்மணி. “
” நீ ஏன் பாஸ் பாஸ்னு கத்துற? எல்லாரும் என்னய வித்யாசமா பாத்தாங்க தெரியுமா? “
” அப்போ வேணும்னா கொரில்லா கொரில்லானு கூப்பிடுட்டா? ” என்றாள் நக்கல் தெறிக்கும் தொணியில்.
” ஆபீஸ்ல மட்டும் பாஸ்னு கூப்பிட்டா போதும்,வெளிய… சிறிது நேரம் யோசித்தவன், ” யூ கேன் கால் மீ வருண்”
” அப்போ.. சரி ஓகே ஆதி.. ” என்றவள் மும்மரமாக தோசையை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
ஆதி என்ற அழைப்பு அவன் தாயின் ப்ரத்யேக அழைப்பு. அவளின் அழைப்பில் சிறிது நேரம் மௌனம் காத்தவன் பிறகு சகஜம் ஆகி கொண்டான்.
” இந்தாங்க பூரிக்கு தேங்கா சட்னி தொட்டு சாப்பிடுங்க சும்மா அல்ட்டியா இருக்கும்..!” என்றவள் அவள் தட்டில் இருந்த சட்னியை அவனிற்கு மாற்றி வைத்தாள்.
” எல்லாத்தையும் எடக்கு மடக்கா தான் பண்ணுவியா நீ? “
” அப்படி இல்ல.. புதுசா ட்ரை பண்ணிட்டே இருக்க வேண்டியது தான். புடிச்சா டேக் இட்..! இல்லனா ட்ராப் இட்.. அவ்ளோ தான் சோ சிம்பிள். எவ்ளோ டைம் இருக்கு நமக்கு “
“எல்லாருக்கும் அந்த டைம் அமையறது இல்ல கண்மணி. சரி விடு சாப்டா ஐடியா சொல்லறேன்னு சொன்னியே என்ன ஆச்சு? “
“அதுலா பக்காவா மண்டைக்குள்ள பிளான் போட்டாச்சு..! இப்போ நம்ம மொதல்ல ஊர் தலைவரோட டெய்லி ரோட்டின்ன வாட்ச் பண்ணுவோம் நெக்ஸ்ட் அதுக்கு ஏத்த மாறி பிளான் பண்ணுவோம். “
சாப்பிட்டு முடித்து இருவரும் வீராசாமியின் வீட்டை வந்தடைந்தனர். அப்பொழுது இருந்த கலவரம் இப்பொழுது இல்லை. ஆள் அரவம் எதுவும் இன்றி அமைதியாக இருந்தது அந்த பெரிய வாசல்.
” என்ன பாஸ் யாரையும் காணோ? ஒரு வேள வெளிய போய்ட்டாங்களோ? இருங்க அந்த பக்கம் அவங்க வண்டி எல்லாம் நிக்குதாணு செக் பண்ணிட்டு வருவோம்”
வெளியே எந்த வண்டியும் நிற்கவில்லை..!
” இப்போ என்ன பண்ணுறது ” என யோசனையாய் இருவரும் விழித்து கொண்டிருக்க, அப்பொழுது தான் அதை கவனித்தாள் கண்மணி.
” பாஸ் பாஸ் அங்க யாரோ காம்பவுண்ட் செவுருல ஏறாங்க “
வீராசாமியின் வீட்டின் மதில் சுவற்றில் ஏறி அந்த பக்கம் குதித்தான் ஒருவன்.
” ஆமா.. யாருனு தெரிலயே!”
“கண்டிப்பா திருடனா தான் இருக்கும் பாஸ் வாங்க அவன போய் புடிப்போம் ” என்றவள் முன்னேறி போக,
” ஹேய்.. போகாதா எதாவுது பிரச்னை ஆகிற போகுது “
” அதுலாம் ஒன்னு ஆகாது வாங்க பாஸ்! இந்த திருடன கையும் களவுமா புடிச்சி ஊர் தலைவர் முன்னாடி நிறுத்துனா நமக்கும் ஒரு நல்ல பேர் கிடைக்கும் கேம்ப்புக்கு பெர்மிஸ்ஸனும் கிடைக்கும். ஐடியா இல்லாத பாஸா இருக்கீங்களே!” என்றவள் ஒரு கல்லை போட்டு அதில் ஏறி காம்பவுண்டிற்க்கு அந்த பக்கம் தாவி விட்டாள். அவளை தொடர்ந்து வருணும் உள்ளே சென்றான்.
அந்த திருடன் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு கீழே கிடந்த ஏணியை எடுத்து சுவற்றில் சாய்த்து, அதில் ஏறி பால்கனி வழியாக வீட்டின் உள்ளே சென்று விட்டான்.
” ரொம்ப நாளா பிளான் பண்ணி வந்து இருப்பான் போல பாஸ்..! பாருங்க எல்லா வழியும் அவனுக்கு எப்படி தெளிவா தெரியுதுணு..! “
அவன் சென்ற பிறகு இருவரும் சிறது நேரம் கழித்து அவனை போலவே பால்கனி வழியே அந்த ரூம்மை வந்தடைந்தனர்.
மிகவும் விசாலமான அறை அது. அந்த பக்கம் இருந்த கபோர்டை நீக்கி எதையோ எடுத்து கொண்டிருந்தான் அவன்.
” பாஸ் இது தான் சரியான நேரம் நா போய் அவன பின்னாடி இருந்து புடிச்சிக்கறேன். அதுக்குள்ள நீங்க இந்த பெட் ஷீட்ட எடுத்து அவன் மூஞ்சிய மூடிருங்க. அப்றம் அவன கட்டி போட்டு தலைவர் கிட்ட ஒப்படைச்சிருவோம்! “
என்றவள் அவன் பதில் சொல்லும் முன்னரே போய்விட்டாள் அந்த திருடனை பிடிக்க..!
திடீரென அவர்களின் தாக்குதலை எதிர்பார்க்காத புதியவன் கொஞ்சம் மிரண்டு தான் போனான்.
“ஆஆ.. யார் நீ என்ன விடு “
“டேய் திருடா, திருட வந்த உனக்கு எதுக்கு டா பையோ டேட்டா. போடா டால்டா..! பாஸ் சீக்கிரம் வாங்க வந்து இவன் மூஞ்சிய மூடுங்க!”அவள் சொன்னது போலயே வருண் செய்ய இருவரின் பிடிக்குள் இருந்தும் வெளி வர போராடி கொண்டிருந்தான் அவன்.
” அய்யோ என்ன இப்புடி துள்ளுறான், இவன எப்படி எத வெச்சி கட்டி போடறது? ஸார் ஸார் திருடர் ஸார் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க ஸார்! எங்களோட மெடிக்கல் கேம்புக்கு இந்த ஊர் தலைவர் பர்மிஷன் தர மாட்டேங்குறாரு! உங்கள புடிச்சு கொடுத்தா நல்ல பேர் வாங்கி அப்படியே பர்மிஷனு அவர்கிட்ட வாங்கிடலாம். நீங்க நாங்க சொல்றபடி கேட்டீங்கன்னா உங்கள கொஞ்சம் கம்மியா அடிக்க சொல்லி ரெக்கமண்ட் பண்ணுவேன். எப்படி வசதி?!”
“ஏம்மா ஏய்..!! நா மொதல்ல திருடனே இல்ல..!”
“என்னது இல்லயாஆஆ..” அவள் அதிர்ந்த நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன் அவர்களின் பிடியில் இருந்து விலகி நின்றான். அவன் திருடன் இல்லை என கூறியதும் , அவனை கட்டிலில் தள்ளி விட்டு கண்மணியை இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான் வருண்.
பின் பக்க காம்பவுண்ட் சுவற்றில் ஏறி கொண்டிருந்தான் வருண். அதில் ஏறி உக்கார்ந்தவன் அவள் ஏறுவதற்காக கையை நீட்ட, அவளோ பயத்தில் கண்கள் விரிய நின்று கொண்டிருந்தாள்.
” ஆ.. ஆதி.. ஆ.. ” அவளின் வார்த்தைகள் தண்டியடிக்க அவள் முன்பு நின்றிருந்தது ஓர் நாய்.
“ஹேய்.. அத பாக்காத நீ பாட்டுக்கு ஏறி வா. பயந்தா தான் அது தொறத்தும் ” அவன் சொல்லி முடிப்பதற்குள், “அம்மா ஆஆ ” என கத்தி அந்த பக்கம் திறந்திருந்த சிறிய கேட்டை நீக்கி அவள் ஓட, அவள் பின்னே அவளை துரத்தி கொண்டோடியது அந்த நாய்.
“ஸ்சோஓஓஓ” என தலையில் அடித்துகொண்டவன், காம்போன்ட் சுவரை எட்டி குதித்து அவள் பின்னால் ஓடினான்.
” கண்மணி ஓடாதா ஓடுனா தான் எச்சா துரத்தும் ” அவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழுந்ததாய் இல்லை.
அவள் வேகதிற்கு ஈடு கொடுத்து அவளை முந்தி கொண்டு முன்னே வந்தவன், அவளின் கை பிடித்து நிறுத்த போக அதில் கால் இடறி அவள் அந்த பக்கம் விழ இருவரும் ஒரு பள்ளதாக்கில் உருண்டு விழுந்தனர்.
“ஸ்ஸ்ஸ்..” கையில் ஏற்பட்ட சிராய்பை தேய்த்து கொண்டிருந்தாள் கண்மணி.
” அந்த நாய் போயிருச்சா? ” என்றவள் சுற்றி முற்றி பார்த்தாள்.
” அது எப்பயோ போயிருச்சு. அது தொரத்தாமயே நீ இவளோ தூரம் ஓடி வந்துட்ட!”
“ஓஹோ.. நாய்னா மட்டும் தான் பயம் மத்தபடி ஐ ஆம் அ வெரி பிரேவ் கேர்ள் யூ நோவ்..”
“ம்ம்.. அதான் பாத்தேனே “
“ஆமா இது என்ன ஏரியா தீடிர்னு வீடு எல்லாம் காணோ ஒரே வயலா இருக்கு “
” தெரில வா.. எவளோ தூரம் வந்தோம்னு எனக்கும் சரியா தெரில. யார்கிட்டயாச்சி ரூட் கேட்டுட்டு போவோம் வா “.
” எனக்கு ரூட் தெரியும் பாஸ். ஓடிவந்த எனக்கு வந்த வழி தெரியாதா? ஜஸ்ட் ஃபாலோ மீ உங்கள பத்திரமா கூட்டிட்டு போயிறேன்!”
” நல்லா தெரியுமா இந்த வழி தானா? ரொம்ப நேரமா நடக்கறோம் “
“இதான் பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல தலைவர் வீடு வந்துரும் பாருங்க “
கடவுள் புண்ணியமாக அவர்களின் எதிரே சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார் ஒரு தாத்தா. அவரை நிறுத்தி
ஊர் தலைவரின் வீடு எந்த பக்கம் என விசாரித்தான் வருண்.
” எனப்பா இந்த பக்கம் வந்து கேக்கறீங்க? அந்த பக்கமால போகணும் அவர் வீட்டுக்கு! ” என்றவர் வழி கூறிவிட்டு கிளம்ப கண்மணியை முறைத்தான் வருண்.
” எம்மாடி!” என்றவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
“ரொம்ப வெயிலா இருக்குல்ல பாஸ் நடக்கவே முடில.. “
“இன்னும் கொஞ்சம் தூரம் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “
” பாஸ் வைட் வைட் இது தானே செல்வ கணபதி கோவில். அப்படி தான் போர்டுல போட்டு இருக்கு! அப்போ இங்க பக்கத்துல தான் சரோஜா கா வீடு இருக்கும் இருங்க பாத்துட்டு வரேன்”
“ஒன்னும் வேணா “
” அட நம்புங்க பாஸ் இந்த தடவை கண்டிப்பா ரூட் மிஸ் ஆகாது” என்றவள் அந்த கோவிலை ஓட்டி இருந்த தெருவிற்குள் நுழைய அவர் வீட்டின் முன்னே துணி காய போட்டு கொண்டிருந்தார் சரோஜா.
” சரோஜா கா..!” என்றாள் துள்ளல் குரலில்.
“ஹேய் கண்மணி வா.. வா.. காலையில கேம்ப்ல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி உன்ன தேடுன உன்ன காணோம். “
“அது ஓரு வேள வந்துருச்சி அதான். இவரு தான் எங்க பாஸ் இந்த கேம்ப் ஆர்கனைஸர். ” என வருணை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“வாங்க தம்பி, உள்ள வாங்க ரெண்டு பேரும் “
இருவருக்கும் தண்ணீர் கொடுத்து விட்டு.
” கண்டிப்பா சாப்பிடனும் ” என்றவர் இலையை போட்டு சாப்பாடு பறிமாற ஆரம்பித்தார்.
உள் அறையில் இருந்து அவர் மகள் எழுந்து வந்தாள். நிறைமாத கர்ப்பிணி.
“ஹேய் நா கெஸ் பண்ணுறேன் மகா அக்கா தானே நீங்க “
“ஆமா இவ தான். எதாவுது சாப்பிடறியா மகா?”
“இல்லம்மா கொஞ்ச நேரம் போகட்டும் இப்போ தானே தூங்கி எந்திரிச்சேன்.”
” இவ இப்படி தான் கண்மணி ஒன்னும் சாப்பிடறதே இல்ல.. ஆனா இவ அப்பனும் அண்ணனும் பண்ணுற அலும்பு இருக்கே.. அந்தாளு என்னடானா முழு கோழிய புடிச்சிட்டு வந்து புள்ளைக்கு சாய்ந்திரமா சூப்பு வெச்சி கொடுனு சொல்லிட்டு போகுது.
அவன் என்னடானா பழ கடையவே மொத்தமா வாங்கிட்டு வந்து கூட கூடயா அடுக்கி வெச்சிருக்கான். இந்தா புள்ள எதாவுது தின்னுனு கொடுத்தா ஒன்னும் வேணா ஒன்னு வேணானு இவ போய் படுத்துக்கறா. கடைசியில என் மண்டைய தான் எல்லாரும் புடிச்சி உருட்ட வேண்டியது.”
அதில் சிரித்த கண்மணி, மகாவின் கைகளை பார்த்து, ” கண்ணாடி வளையல் ரொம்ப அழகா இருக்கு ” என்றாள் ஆசையாக.
“இந்தா அப்போ நீயு போட்டுகோ” என்றவர். அலமாறியில் இருந்து எடுத்து நீட்ட அதை ஆசைதீர போட்டுக்கொண்டாள் கண்மணி.
” சரி டைம் ஆச்சு வரோம்! கண்டிப்பா இன்னொரு நாள் வரேன் விருந்து ரெடி பண்ணி வைக்கறீங்க ஓகே ” என்றவள் முகம் கொள்ளா புன்னகையுடன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள்.
மிக சிறிய அளவுடைய வீடு தான் அவர்களுடையது. மகிழ்ச்சி மட்டும் அளவே இல்லாமல் பொங்கி வழிந்தோடியது.
அவளை பார்த்து புன்னகைத்தான் வருண்.
” என்ன பாஸ் சிரிக்கிறீங்க? ஜீன்ஸ் குர்தி போட்டுட்டு கண்ணாடி வளையல் போட்டு இருக்கறது பாக்க காமெடியா இருக்கா? நான் வேணா கழட்டிருட்டா? “
” ஹே..அதெல்லாம் ஒன்னும் வேணாம். உனக்கு புடிச்ச மாதிரி நீ இரு, அவங்க என்ன நினைப்பாங்க இவங்க நினைப்பாங்க எல்லாம் யோசிக்காத.
நீ நீயா இருக்கறது தான் உனக்கு அழகு அதான் நல்லாவும் இருக்கு ” அவன் அப்படி கூறியதும் அவள் வயிற்றில் சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்க அதை மறைக்கும் விதமாக பேச்சை மாற்றினாள்.
“மாசமா இருந்தாலே ஸ்பெஷல் தான்ல”
“நீ ப்ரெக்னன்டானா கூட தான் உன் அம்மா உன்னை இப்படி தாங்குவாங்க “
அம்மாவின் பேச்சை எடுத்த உடனே அவளுள் சொல்ல முடியாது வலி ஒன்று தோன்ற சின்ன தலையசைப்புடன் முன்னே நடக்கலானாள்.
முன்னே சென்றவள் அப்படியே நிற்க,
“ஏன் நின்னுட்ட வா “என்றவன் அவளை அழைக்க அதை எல்லாம் செவியில் வாங்கி கொள்ளாமல் அங்கே வாக்குவாதம் செய்து கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே போய் அந்த ஆளை சப்பென அறைந்துவிட்டாள்.
“ஏன்டா குடிகார நாயே..! குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணுறதும் இல்லாம பொண்டாட்டியவே அடிப்ப நீ “
“ஏய்.. என்ன கேக்க நீ யாரு”
குடி போதையில் அவன் கண்மணியை தள்ளி விட தரையில் சுருண்டு விழுந்தாள் கண்மணி. கண்ணாடி வளையல் உடைந்து அவள் கையை கீறி பதம் பார்த்து வைக்க அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
மீண்டும் எழுந்து அவனுடனே சண்டைக்கு நின்றாள்.
அவளின் செயலில் அதிர்ந்த வருண் அவளை தடுக்க போக அதன் பலன் எனவோ பூஜியமே..!
” பொறுப்பில்லாத உனக்கு எல்லாம் எதுக்கு டா குடும்பம்.!” என்றவள் அவள் பாட்டிற்கு கத்தி கொண்டிருந்தாள். அக்கம் பக்கம் கூட்டம் சேர அவளை தூக்கி கொண்டு போகாதா குறையாக இழுத்து சென்றான் வருண்.
” என்ன விடுங்க, அவன எல்லாம் சும்மா விட கூடாது ” என்றாள் வெறி பிடித்தவள் போல். அவளின் இந்த பரிமானம் அவனிற்கு மிக புதிது.
எப்பொழுதும் பட்டாம் பூச்சி போல் படபடத்து சுற்றி வரும் கண்மணியை தான் அவனிற்கு தெரியும்.
அவளின் செய்கையில் குழம்பி போனவன்,
” அது அவங்க பர்சனல். நீ ஏன் இவளோ டென்ஷன் ஆகுற..?”
” இந்த மாறி என் அப்பாவ யாராவுது கண்டிச்சி இருந்தா எனக்கும் நல்ல குடும்பம் அமைஞ்சி இருக்கும்ல..!”
அவளின் சிவந்த விழிகளில் ஏக்கமும் சோகமும் போட்டி போட்டு கொண்டு வழிந்தோடியது..!!