Loading

அத்தியாயம் – 4

தீயாய் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ராகவ்.

‘இப்போ இவன் எதுக்கு என்ன இப்படி முறைக்கறான்?’ என்றபடி மீண்டும் மணி, ராகவ் பக்கம் திரும்பிச் செல்ல.. அவள் தன்னருகே வரவும்.. ராகவோ,

“என்ன? உன்ன இந்தப் பக்கம் அனுப்பிட்டு, அங்க உன் அண்ணன் என் கடைக்கு இன்கம் டாக்ஸ் ரெய்டு வரதுக்கு ஏற்பாடு செய்திருக்கானா?” என்று கர்ஜிக்கும் குரலில் கேட்க, அவனை ஏளனமாய் பார்த்தாள் மணி.

“என்ன பார்க்கற?” என்று அவன் மறுபடியும் கர்ஜிக்க.. மணியோ,

“இல்ல.. நீ பிறந்ததுல இருந்தே இப்படித் தானா?” என்று கேட்க.. ராகவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“ஏய்.. என்ன பேசறேன்னு பார்த்து பேசுடி..” என்று இவன் சீற, மணியோ..

“டேய்.. உன் கடைல என்ன நடந்தாலும் அதுக்கு அந்த மானபரன் தான் காரணமா?

ஏண்டா அவனுக்கு வேற வேலையே இல்லையா?” என்று இவளும் கோபத்துடன் சீறினாள்.

அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்த ராகவோ..

“அவனுக்கு வேற வேலை இல்ல தாண்டி.. அவன விட நான் ஒரு படி மேல போனாலும் அவனுக்குப் பொறுக்காதே.. இதுக்கெல்லாம் நீயும், உன் அண்ணனும் நல்லா அனுபவிப்பீங்க..” என்று அவன் கூற, அவனைக் கேவலமாகப் பார்த்து வைத்தாள் மணி.

“இங்க பாரு இன்னமும் சின்னப்புள்ளத்தனமா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க.. காம்பிளான் குடிச்சு கொஞ்சமாவது வளருங்களேண்டா சில்லி பாய்ஸ்..” என்று கேலியாகக் கூறிவிட்டு அவள் மீண்டும் விருந்தினர் அறைக்குள் சென்றுவிட.. கடுப்புடன் காலை உதைத்தான் ராகவ்.

அவன் அந்த வருமானவரித்துறை அதிகாரிகளுடன் தீவிரமாகப் பேசி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் பொழுது, வரிசையாக பழரசங்களும், சில சிற்றுண்டி வகையறாக்களும் விருந்தினர் அறைக்குச் செல்ல, அதையெல்லாம் எடுத்துச் செல்லும் பணியாளைப் பிடித்தான் ராகவ்.

“ஏய்.. இங்க எத்தன பிரச்சனை நடந்துட்டு இருக்கு.. நீங்க யாருக்கு இதெல்லாம் எடுத்துட்டு போறீங்க?” என்று அவன் கேட்க, அந்தப் பணியாளோ..

“எல்லாம் நம்ம மணி மேடமுக்குத் தான் சார்.. பசிக்குதுன்னு சொன்னாங்க.. அதான்..” என்றான் அவன் வாயெல்லாம் பல்லாக!

ராகவுக்கு வந்த ஆத்திரத்துக்கு என்ன செய்திருப்பானோ.. நல்லகாலமாய் அப்பொழுது மற்றொரு அதிகாரி அவனிடம் சில டாக்குமெண்ட்டுகளை கேட்க, அதை எடுத்துக் கொடுக்கப் போய்விட்டான்.

‘இங்க என்ன நடந்துட்டு இருக்கு.. இவ என்ன செஞ்சுட்டு இருக்கா?’ என்று எரிச்சலுற்றபடியே கண்ணாடியூடு அவளைப் பார்த்து அவன் முறைத்து வைக்க, அவளோ அலட்சியமாக முடியை சிலுப்பினாள்!

அதை பார்த்து கட்டுப்படைந்த ராகவோ, விறுவிறுவென அந்த அறைக்குள் சென்று அவளைப் பார்த்து முறைத்தபடி நின்றான்.

“என்ன பார்க்கற? பசிக்குதா?” என்றபடி ஒரு பிஸ்கட்டை கடித்தவளை, ஆத்திரமாய் முறைத்தவன்..

“இங்க எவ்வளவு பெரிய விஷயம் நடந்துட்டு இருக்கு.. நீ இப்படி சாப்பிட்டுட்டு இருக்க?” என்று அவன் கேட்க, அவளோ தோளைக் குலுக்கினாள்.

“இது உன்னோட கடை.. இங்க ரெய்டுன்னா நீ தான் பதட்டப்படணும்.. அதுவும் நீ ஏதாவது ப்ராடுத்தனம் செஞ்சிருந்தா..

நீ ஒழுக்கமா டாக்ஸ் எல்லாம் கட்டி, கணக்கெல்லாம் சரியா வச்சிருந்தா நீ மட்டும் எதுக்கு பயப்படணும்?” என்று அவள் கேட்க, ராகவுக்கோ.. “அட..!” என்று இரு.

அவள் கூறுவதும் சரி தானே? மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்?!

என்னவோ.. அவளது ஒற்றைக் கேள்வியில் இவன் மனதின் குழப்பங்கள் எல்லாம் வடிந்தது போல ஓர் உணர்வு!

ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை அவன்.. சிறு வயதிலிருந்தே அவளை சீண்டி சீண்டி சிரிப்பவன் தானே?

எனவே இப்பொழுதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு..

“ஆமா.. நீ ஏன் பேச மாட்ட? எல்லாம் உன் அண்ணனோட ஏற்பாடு.. நான் நல்லா இருந்தா தான் அவனுக்குப் பிடிக்காதே?

அதான் இப்படி இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு பொய்யா தகவல் கொடுத்திருப்பான்.. இப்போ உன் அண்ணன் சந்தோசமா இருப்பான் தான? அதனால தான் நீயும் இப்படி குஷியா இருக்க..” என்று அவன் மனதில் இருந்த சந்தேகத்தையும் சேர்த்துக் கூற, தலையில் அடித்துக் கொண்டாள் மணி.

“என்ன? என் அண்ணன் தான் இதுக்கு காரணமா? டேய்.. உனக்கு மண்டைல மூளைன்னு ஏதாவது இருக்கா?

அதையும் விட, அவனுக்காக நான் சந்தோசப்படறனா? குட் ஜோக்.!

எனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.. அவன பத்தி என்கிட்டே பேசாத.

அதுமட்டும் இல்லாம.. இப்படி சீப்பா எல்லாம் அவன் பிஹேவ் செய்ய மாட்டான். அவனுக்கு வேற வேலை இல்ல?” என்று சீற, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான் ராகவ்.

‘அண்ணன் மேல பாசமே இல்லையாம்.. ஆனா, அவனை பத்தி ஒரு வார்த்தை சொன்னா உடனே பத்திக்கிட்டு வருதாம்..’ என்று மனதிற்குள் நினைத்தவன்..

“உன் அண்ணனுக்கு என்ன வேலை இருக்குனு எல்லாம் எனக்கு கவலையில்லை.. ஆனா இனியும் என் காரியத்துல அவன் தலையிட்டா நடக்கறதே வேற.. சொல்லி வை..” என்று கோபமாகக் கூறிவிட்டு வெளியேறினான்.

அவனைப் பார்த்து மீண்டும் தலையில் அடித்துக் கொண்ட மணியோ..

‘இந்த காம்பிளான் பாய்ஸ்க்கு நடுவுல நான் மாட்டிக்கிட்டனே..’ என்று நொந்து கொண்டாள்.

அதன் பிறகு ஒரு வழியாக அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தால், மானபரன் வீட்டில் கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

தன் போக்கில் ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடி வீட்டுக்குள் நுழைந்தவளை, “ஏய் நில்லு..” என்று கோபக் குரலில் தடுக்க, மணியோ, விடிலடித்தபடியே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன?” என்று விசிலிலேயே அவள் கேட்க, “எங்க போயிட்டு வர?” என்றான் இறுகிய குரலிலேயே அவன் கேட்க, மணியோ..

“ராகவ் கடைல இருந்தேன்..” என்றாள் மணி.

“இந்நேரம் வரைக்கும் அவன் கூட என்ன வேலை உனக்கு? மணி எட்டாகுது.. இவ்வளவு நேரம் அவன் கூட இருந்துட்டு வந்தா, மத்தவங்க என்ன நினைப்பாங்க உன்ன?

கல்யாணம்னு பேச்சு வந்ததும், ரொம்ப குளிர் விட்டுப் போச்சா உனக்கு?” என்று அவன் படபடவெனப் பொரிய, வயிற்றுக்குள் அமிலக்கரைசல் பிறந்தது மணிக்கு.

“ஏய்.. என்ன விட்டா ஓவரா பேசிட்டு இருக்க?

உனக்குத் தெரியாது.. நான் ஏன் இவ்வளவு நேரம் அந்தக் கடையிலேயே இருந்தேன்னு உனக்குத் தெரியாது?

இன்கம் டாக்ஸ்க்கு தகவல் சொன்னதே நீ தான்.. ஆனா என்னமோ ஒன்னுமே தெரியாத மாதிரி என்ன பேச்சு பேசிட்டு இருக்க?” என்று, அவன் தன்னைத்தவராக குற்றம் சாட்டியதில் உண்டான கோபத்தில் இவளும் அவனை வேண்டுமென்றே குற்றம் சுமத்த.. கண்கள் சிவந்தன மானபரனுக்கு!

“ஆமாண்டி.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ..

இத்தனை நாள் ஆகாதவனா இருந்தவன், இன்னைக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதுமே அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்ட இல்ல?” என்று அவன் கேட்க, மணியோ அவனை எரிப்பது போலப் பார்த்தாள்.

“கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னனது நீயும், அவனும்..

உங்க சண்டைக்கு என்ன பகடைக்காயா யூஸ் பண்ண நினைச்சீங்க.. ரெண்டு பேரும் தூங்கறப்போ தலைல கல்ல போட்டு கொன்னுடுவேன்..” என்று ஆத்திரமாய் கூறிவிட்டு அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.

செல்லுபவளையே கோபத்துடன் பார்த்திருந்தவனை, முதுகில் ஓர் அடி வைத்து திருப்பினார் பாட்டி.

“என்ன பாட்டி..” என்று இவன் சலிப்பாகக் கேட்க, பாட்டியோ..

“இப்போ எதுக்கு தேவை இல்லாம அவ கிட்ட கோபப்பட்டுட்டு இருக்க?” என்று அவர் கேட்க, மானபரனோ..

“அதென்ன பாட்டி.. இத்தனை நாளா அவன பிடிக்கல.. பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்தவ.. இப்போ அவனுக்காக இப்படி பேசலாம்?

எப்படி அவ, அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்?” என்று கோபத்துடன் அவன் கேட்க, வாயில் கை வைத்து சிரித்தார் பாட்டி.

“என்ன சிரிக்கறீங்க?” என்று அவன் கேட்க, பாட்டியோ..

“நீயும், ராகவும் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?

மணி என்ன உங்க கைல இருக்கற பொம்மையா? நீங்க உங்க இஷ்டத்துக்கு அவளை ஆட்டிவைக்க?” என்று அவர் கேட்க, அவரை மறுத்து ஏதோ பேச வந்த மானபரன், சட்டென வாயை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

“ஆனா பாட்டி.. அவ எப்படி?” என்று மீண்டும் ஆரம்பித்தவனை கை நீட்டித் தடுத்தார் பாட்டி.

“இங்க பாரு தம்பி.. நீ நினைக்கற மாதிரியெல்லாம் நடந்துக்க அவ ஒன்னும் நீங்க ப்ரோக்ராம் பண்ணி வைக்கற ரோபோட் கிடையாது.. அவளும் மனுஷி தான்..

அவ என்ன உங்க கைல இருக்கற பொம்மையா? நீ சொல்லறபடி எல்லாம் நடந்துக்க?

டேய்.. ஏதோ நீயும், ராகவும் சொன்னதுக்காக தான் அவள ராகவுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கறோம்னு நினைச்சுட்டு இருக்கீங்க.. ஆனா அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்..

இது இன்னைக்கு உங்க யாருக்கும் தெரியாது.. பின்னாடி நீங்க புரிஞ்சுப்பீங்க.. அப்போ வந்து இந்த பாட்டிகிட்ட நீயே சொல்லுவ..” என்றுவிட்டு அவர் நகர, மானபரனோ எதுவும் புரியா குழப்பத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் ராகவுக்கும், மணிக்குமாக நிச்சயதார்த்த விழாவுக்கான நாளும் வந்தது.

வெளியாட்கள் அதிகம் இல்லாது அவர்கள் குடும்பத்துக்குள்ளாக நெருங்கிய சொந்தங்களுடன் மட்டுமே இந்த விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் முடிவு செய்திட, இங்கு மணியின் வீட்டிலேயே நிச்சய விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.

இத்தனை நாட்கள்.. ராகவுக்கும், அவளுக்கும் திருமணம் என்ற பேச்சு வந்த பிறகும் கூட கொஞ்சம் பயம் மட்டும் தான் இருந்தது மணிக்கு. ஆனால்.. கடைசியாக ராகவை அலங்காரில் சந்தித்த பிறகு பயம் போய்.. படபடப்பு ஏறிக்கொண்டது அவள் மனதில்!

அங்கு அவன் காட்டிய நெருக்கமும்.. அவளிடத்தில் இதுவரை இல்லாது அவன் புதிதாய் எடுத்துக் கொண்ட உரிமையும்.. சற்று அவளை சலனப்படுத்தியதென்னவோ உண்மை தான்!

‘ஏன் இப்படி நடந்துக்கிட்டான்? சும்மா என்ன சீண்டிப் பார்க்கறதுக்காகவா? இல்ல.. என்ன கல்யாணம் செய்துக்க நிஜமாவே அவன் தயாராகிட்டானா?

எதையாவது நிதானமா தெளிவா பேசினா தான எனக்குப் புரியும்?

எடுத்ததுமே காஞ்ச மாடு கம்மங்கொல்லைல பாய்ஞ்ச மாதிரி நடந்துக்கிட்டா நான் என்னன்னு எடுத்துக்கறது?’ என்று உள்ளுக்குள் குழம்பித் தவித்தவள், மீண்டும் ஒரு முறை அவனிடம் தெளிவாகப் பேசிவிடலாமா என்று யோசித்தாள்.

ஆனால் கடந்த முறை அவரிடம் ராகவ் நடந்துகொண்ட முறையில் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.

‘அய்யயோ.. வேணாம்டா கடவுளே.. போன முறையே ஏதோ அந்த இன்கம் டாக்ஸ்காரங்க வந்ததால நான் தப்பிச்சேன்..

அதுவும் அவனோட செய்கைகள் எதுவுமே என்ன பாதிக்காத மாதிரி அவன்கிட்ட விளையாட்டா பேசி அங்கிருந்து தப்பிச்சு வந்துட்டேன்.

இன்னொரு முறை அவன் என்கிட்டதா இப்படி நடந்துக்கிட்டா.. என்னால ஸ்ட்ராங்கா நிக்க முடியுமான்னு தெரியல..

ச்சே.. இவன்கிட்ட எப்படி நான் இப்படி உருகலாம்.. புருஷன்னு ஆகிட்டா உடனே அவனுக்கு நான் அடிமையாகணுமா? நான் எப்பவுமே இப்படி தான் இருப்பேன்..

ஆனா, இந்த உறுதியெல்லாம் அவனை நேர்ல பார்த்தா இருக்குமா? மறுபடியும் அவன் என்கிட்டே அப்படி நடந்துக்கிட்டா?’ என்று யோசித்தவள்.. வெட்கத்தில் தனையும் அறியாது தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அதே நேரம், அவள் கதவு திடுமெனத் திறக்கப்பட, விரித்துவிட்ட முடிக்கற்றை காற்றில் பறக்க, நிமிர்ந்து பார்த்தால்.. அங்கு ராகவின் அம்மா நின்றுகொண்டிருந்தார்.

“ஏய்.. என்னடி இன்னமும் இப்படி பனியனும், டவுசரும் போட்டுட்டு பெட்ட விட்டு கூட எழுந்துக்காம இருக்க?

உனக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்டி.. இங்க பாரு பார்லர்ல இருந்து கூட ஆளுங்க வந்துட்டாங்க..” என்று கூற, படுக்கையில் குப்புற படுத்திருந்தவள், திடுக்கிட்டு எழுந்தாள்.

“ஹோ காட்..!” என்று தலையில் அறைந்து கொண்டவள்..

“இதோ அத்தை டக்குனு குளிச்சுட்டு வந்துடறேன்.. சாரி.. சாரி..” என்றுவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘நல்ல பொண்ணு தான்.. இன்னைக்கு நிச்சயம்னு கூட மறந்துட்டு இப்படி தூங்கிட்டு இருக்கா..’ என்று தனக்குள் நொந்துகொண்டு அவரும் கீழிறங்கி நிச்சய வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

வீட்டில் பாட்டிக்குப் பிறகு இருக்கும் ஒரே பெண் தேவகி தான். எனவே அத்தனை வேலைகளையும் அவரே தான் கவனித்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது.

என்ன தான் வீட்டிலேயே விஷேஷம் என்றாலும் அலங்காரத்துக்கு, சமையலுக்கு என அத்தனைக்கும் ஆட்கள் இருந்தாலும், அத்தனையும் அருகே இருந்து மேற்பார்வை செய்ய அவர் தானே அருகே இருக்க வேண்டியதாய் இருந்தது?

தேவகியுடன் சேர்த்து, பாலாஜி, மானபரன் மட்டுமல்லாது.. கல்யாண மாப்பிள்ளை ராகவுமே சுற்றி சுழன்று வேலை தான் செய்து கொண்டிருந்தான்.

இதில் தேவகி எழுப்பிவிட்டு அரைமணி நேரத்திற்கும் மேலாகியும் கூட மணி குளித்துவிட்டு வந்திருக்கவில்லை.

அவளுக்கு கீழிருக்கும் ஓர் அறையில் அலங்காரம் செய்வதாய் இருந்தது. எனவே பார்லரில் இருந்து வந்த பெண்களும் அங்கு தான் காத்துக் கொண்டிருந்தனர்.

“ஏய்.. என்ன இன்னும் மணி குளிச்சுட்டு வரலையா? யாராவது போய் அவளை சீக்கிரம் வரச் சொல்லுங்க..” என்று தேவகி கத்திக் கொண்டிருந்த சமயம் அவரருகே இருந்த அனைவரும் ஏதோ ஒரு வேலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, பாட்டி மட்டும் தான் ஒரு நாற்காலியில் அமர்ந்து சமையலை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

எனவே அவரே எழுந்து.. “இரும்மா.. நானே போய் பார்க்கறேன்..” என்று கூற, அப்பொழுது தான் வெளி வேலையை முடித்துவிட்டு அங்கு வந்துகொண்டிருந்த ராகவோ..

“என்ன பாட்டி.. என்ன போய் பார்க்கணும்? நான் போய் பார்க்கறேன்.. நீங்க உட்காருங்க..” என்று கூற, தேவகி அவனையே போய் மேலே மணி குளித்துவிட்டாளா என்று பார்க்கச் சொன்னார்.

“ஆமா.. சும்மாவே அந்தம்மா நாலு மணிநேரம் குளிப்பா.. இன்னைக்கு இன்னும் எத்தன மணிநேரம் குளிப்பாளோ?” என்று சலித்தபடியே படியேறிச் சென்றவன், அவள் அறைக்கதவைத் தட்டப் போக, கதவு தன் போக்கில் திறந்துகொண்டது!

உள்ளே சென்று, “மணி..” என்று அவன் அழைப்பதற்குள், குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு அவளே வெளியே வந்தாள்.

உடம்பில் ஒற்றைத் துண்டு மட்டும் கட்டி.. வெற்றுத் தோளில் வழிந்தோடும் கூந்தலில் நீர்மணிகள் சொட்ட.. அதிர்ச்சியுடன் அவள், அவனைப் பார்க்க்க.. அவனது விழிகளோ அவளது கண்களிலிருந்து விலகி.. அவளது தோளில் படிந்து.. அவளது இதயத்தில் வழுக்கியது!

எத்தனை நேரங்கள் இருவரும் அப்படியே நின்றிருப்பார்களோ.. கீழிருந்து, “டேய்.. என்ன அவ குளிச்சுட்டாளா இல்லையா?” என்ற தேவகியின் குரலில் இருவருக்குமே விழிப்பு வர, மணியோ வேகமாக மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, ராகவோ விறுவிறுவென அவளது அறையில் இருந்து கீழிறங்கி வெளியே ஓடியே விட்டான்.

“இவன் எதுக்கு இப்படி தலைதெறிக்க ஓடறான்?” என்று தேவகி ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தயங்கியபடியே மணி, மாடியிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“அம்மாடி.. இவ்வளவு நேரமா? வா.. வா.. சீக்கிரம் வந்து ரெடியாகு வா..” என்று கூறி அவளை அறைக்குள் அனுப்பினார் தேவகி.

இறுதியாக அத்தனையும் தயாராகிவிட, மாப்பிள்ளையைத் தேடினால்.. அவனைக் காணவே இல்லை.

“டேய்.. எங்கடா போனான் எந் ராகவ்?” என்று பாலாஜி அலற, மானபரனோ..

“இவனுக்கெல்லாம் பொண்ணு கொடுக்கறோம் நாங்க?” என்று அவரிடம் கிண்டலடித்தான்.

அதற்குள் அவர்களிடம் வந்த தேவகியோ..

“ஆமாமா.. நிச்சயத்தன்னைக்கு கூட தூக்கத்த தியாகம் பண்ணாத உன் தங்கச்சிக்கு இந்த மாப்பிள்ளையே போதும்.. போ.. போய் உன் மச்சானை கூட்டிட்டு வா..” என்று அவனைக் கிண்டலடிக்க.. “ஹ்ம்க்கும்..” என்று நொடித்துக் கொண்டே, போனில் ராகவின் எண்ணுக்கு அழைத்தபடி வெளியே சென்று தேடினான் மானபரன்.

தோட்டத்தில் அவனது செல்போன் மணியடிக்க, அந்த மணியோசையைப் பின்தொடர்ந்து சென்றால், ராகவோ அங்கே இருந்த ஒரு தென்னை மரத்தில் தலையை முட்டியபடி..

‘ஹையோ.. இப்படியா பட்டிக்காட்டான் முட்டாய பார்க்கற மாதிரி பார்த்து வைப்பேன்.. என்ன பத்தி அவ என்ன நினனச்சிருப்பா?

அவளை இதுக்கு முன்னாடி நான் ஸ்லீவ்லெஸ்ல, குட்டி குட்டி ட்ரெஸ்ல எல்லாம் பார்த்திருக்கேன் தான? இப்போ மட்டும் என்ன புதுசா..

கடவுளே.. அந்த நினைப்பு மனச விட்டு போகவே மாட்டேங்குதே..’ என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க, அது மானபரனின் காதில் விழாவிட்டாலும், கூட அவன் இப்படி மரத்தில் முட்டிக் கொண்டிருந்த நிலை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹேய் ராகவ்..” என்று அவன் சத்தமாக அழைக்க.. திடுக்கிட்டு விழித்த ராகவைப் பார்த்து கேலியாய் சிரித்தான் மானபரன்.

“கஷ்டமா தான் இருக்கும்.. அதுவும் இந்த மணி மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கறதுன்னா இப்படி தான்.. தலைய எங்கயாவது முட்டிக்கலாமான்னு தான் இருக்கும்..

அதுக்குன்னு எவ்வளவு நேரம் இப்படியே முட்டிட்டு நின்னுட்டு இருப்ப.. சீக்கிரம் வா.. உன்ன தேடறாங்க..” என்று அவன் கூற, மணியைப் அப்ற்றி அவன் செய்த கேலியில் மூக்கு சிவந்தது ராகவுக்கு.

“ஏய்.. நான் ஒன்னும் மானிய கல்யாணம் செய்துக்கறதுக்காக இப்படி மரத்துல முட்டிட்டு நிக்கல.. உனக்குப் போய் மாப்பிள்ளையாகறனே.. அந்தக் கொடுமைய நினச்சு தான் இப்படி முட்டிகிட்டு நிக்கறேன்..” என்று அவனையே திரும்ப வாரவும், காதில் புகை வந்தது மானபரனுக்கு.

“என்னங்கடா.. இவன ஏதாவது சொன்னா, அவளுக்கு கோபம் வருது? அவள காமெடிக்கு ஏதாவது சொன்னா கூட இவன் உடனே பாஞ்சுகிட்டு வரான்.. என்னடா நடக்குது இங்க?” என்று அவன் தெளிவாகவே முணுமுணுக்க, ராகவோ, இவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தபடியே வீட்டுக்குள் ஓடினான்.

உள்ளே சென்றால், மணி மேடையில் அமர்ந்திருந்தாள்.

“சாரி.. சாரி.. ஒரு போன் வந்துச்சு..” என்று எல்லோரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு இவனும் வேகமாக அவளருகே சென்று அமரப் போக.. பின்னாலிருந்து வந்து கொண்டிருந்த மானபரனோ..

“மாப்பிள்ளை சார்.. கொஞ்சம் நில்லுங்க.. இது பொண்ணுக்கு மட்டும் செய்யற சடங்கு.. நீங்களும் ஒரு ஓரமா நின்னு தான் வேடிக்கை பார்க்கணும்..” என்று சிரியாமல் சொல்ல.. சுற்றி இருந்த மொத்த கூட்டமும் ராகவைப் பார்த்து கொல்லென சிரித்தது.

அதில் சற்றே அசடுவழிந்தபடி வேறொரு இருக்கையில் அமர்ந்தவன், தன்னையும் அறியாது மணியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சுற்றிலும் இருப்பவர் என்ன நினைப்பார்களோ என்ற எந்தக் கவலையும் இன்றி அவன் பார்த்துக் கொண்டிருக்க, வந்திருந்தவர்களில் ஒரு சொந்தக்காரரோ..

“என்ன மாப்பிள்ளை.. பொண்ணையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க.. இன்னும் ஆயுசு பூராவும் பார்த்துட்டு தான இருக்கப் போறீங்க..?” என்று கேட்டு சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் கலகலத்தனர்.

“ஏன் பெரியப்பா.. மாப்பிள்ளை பார்க்கணும்னு தான் இப்படி அலங்கரிச்சு இம்புட்டு அழகா பொண்ண கூட்டிட்டு வந்து கண்ணு முன்னாடி உட்கார வச்சிருக்கீங்க.. அப்பறம் பார்க்கறதுல என்ன தப்பாம்?” என்று அவன் கூச்சமே இல்லாது கேட்க.. மற்றவர்களோ.. ‘ஆ..’வென வாயைப் பிளந்தார்கள்.

மணியோ.. ‘அடப்பாவி.. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லையா?’ என்று எண்ணிக்கொள்ள.. அவளையே பார்த்திருந்தவன், இப்பொழுதாவது அவள் தன்னை நிமிர்ந்து பார்ப்பாளா என்று பார்க்க.. அவளோ, ஹுஹும்.. தலை நிமிர்த்தவே இல்லை.

அத்தனை அழகாக அவன் பார்வைக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தவள், ஒரே ஒரு நொடி தன்னை நிமிர்ந்து பார்க்கவேண்டும் என்று அவனும் அவ்வளவு ஆசைப் பட்டான்.. ஆனால் அவளோ என்ன காரணத்தினாலோ தலை நிமிராவே இல்லை!

இறுதியாக அவளுக்கு நலங்கெல்லாம் வைத்து முடித்த பிறகு, ராகவையும், அவளையும் மோதிரம் மாற்றிக் கொள்ளச் சொன்னார்கள்.

அதற்கு ராகவ் எழுந்து செல்ல, மணியும்.. கீழே இருந்த மனையிலிருந்து மேலே எழ முயன்றாள்.

அப்பொழுது அவள் எழுவதற்காக ஆசையாகத் தன் கையை ராகவ் நீட்டினான்.

ஆனால் மணியோ, அதை கண்டுகொள்ளக்கூட இல்லாமல், அருகில் இருந்த தேவகியின் கையைப் பிடித்துக் கொண்டு மேலே எழவும், ராகவின் பார்வை கடுத்தது!

அது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ.. தேவகிக்குப் புரிய, அவரோ உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள்.

அழகான இரு பிளாட்டினம் மோதிரங்களை வெள்ளித் தட்டில் வைத்து ஒரு சிறு வாண்டு நீட்ட, அதை முதலில் எடுதான் ராகவ்.

அவனிடம் தன் கையை நீட்டியபடி குனிந்த தலை நிமிராமல், அவள் காத்திருக்க, ராகவோ கையிலெடுத்த மோதிரத்தை அவள் விரலில் அணிவிக்கவே இல்லை!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
21
+1
5
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்