Loading

“என்னங்க சொல்றிங்க? வினுவ கேக்கறாங்களா?”

 

“ஆமா சாந்தா “

 

” என்னங்க இது? இப்போ தான் ஒரு பிள்ளை இப்படி பண்ணிட்டாலேன்னு மனசு ஒடஞ்சு போய் இருக்கோம், இப்போ என்னடான்னா அக்கா கல்யாணத்துக்கு வந்த பிள்ளையைக் கல்யாண பொண்ணா உக்கார சொன்னா என்னங்க அர்த்தம்? “

 

“அதெப்படிப்பா அக்ரீமெண்ட் ல ப்ரியாவை தான கல்யாணம் பண்ணி தரேன்னு சொல்லிருக்கீங்க, இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க அதெப்படி இப்போ செல்லும்” என தன் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாக ஆகப்போவதை அறிந்து கண்களில் கண்ணீருடன் பேசினாள் வினுமதி.

 

” இல்லம்மா, அக்ரீமெண்ட்ல என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன்னு மட்டும் தான் மா சைன் பண்ணிருக்கேன், பெரிய பொண்ணுன்னு சொல்லல வினு”

 

“சரிப்பா அது என்னவா வேணும்ன்னா இருக்கட்டும், இது என் வாழ்க்கைப்பா,என் வாழ்க்க ஒன்னும் பிஸ்னஸ் இல்லப்பா, உங்க அக்ரீமெண்ட் ல என் தலையை ஏன் ப்பா போட்டு உருட்டறீங்க”

 

“இப்போ அப்பாக்கு வேற வழி தெரில மா”

 

“அப்பா அதுக்கு நான் என்னப்பா பண்ணுவேன், வாங்கப்பா போலீஸ் கிட்ட போவோம் “

 

“போலீஸ் கிட்ட எல்லாம் வேணாம்மா, எதுக்கு மா பிரச்சனை பண்ணிக்கிட்டு”

 

“எதுக்கா? அப்பா நான் உங்க பொண்ணு தானப்பா, காசு தரலன்னு அவங்க பையனுக்கு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வெக்கறது அப்படிங்கிறதே முதல பெரிய தப்பு, வேற வழி இல்லன்னா அந்த பொண்ணுக்கு விருப்பம் இருக்கற வரை சரி தான், ஆனா அதே அந்த கல்யாண பொண்ணுக்கு விருப்பம் இல்லன்னா இது சட்டப்படி குற்றம்ப்பா, நாம நினைச்சா அவங்கள ஜெயில்ல கூட போட முடியும் தெரியுமாப்பா, அதுவும் அக்கா ஓடிப்போய்ட்டான்னு தங்கச்சிய கேக்கறது சீ.. சீ.. வாங்க இப்போவே போலீஸ் கிட்ட போகலாம்”

 

“போலீஸ் கிட்ட போனா முதல ஜெயிலுக்கு போறது உங்க அப்பாவ தாம்மா இருப்பேன்”

 

“என்னப்பா சொல்றிங்க?”

 

“உங்களுக்கே தெரியும் ல, உன் அப்பா ஒன்னும் நேர்மையா தொழில் பண்ணி அதுல லாஸ் ஆகி இப்போ கடன் ஆகுல, சூதாட்டத்துல தோத்து இப்போ கடனாகி நிக்கறேன் வினு, போலீஸ் கிட்ட போனா முதல என்னை தான் கண்ணு அர்ரெஸ்ட் பண்ணுவாங்க”

இதைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்ட சாந்தா,

 

“ஐயோ.. ஏங்க எத்தனை வாட்டி சொல்லிருப்பேன் உங்ககிட்ட, இந்த சீட்டு விளையாட்ட விட்ருங்க,விட்ருங்கன்னு. இப்போ எது வரைக்கும் கொண்டு வந்து விட்ருக்கு பாருங்க அந்த பாலா போன பழக்கம்”

 

“மன்னிச்சிரு சாந்தா,என்னை மன்னிச்சிரும்மா வினு”

 

“ஐயோ இப்படி மன்னிச்சிரு, மன்னிச்சிருன்னு கேக்கறத முதல நிப்பாட்டுங்கப்பா, உங்க மன்னிப்ப தூக்கி குப்பைல போடுங்க, யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு, பண்றத எல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து மன்னிச்சிருன்னு கூவிட்டு இருக்கீங்க, மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போய்டுமாப்பா ” என தேம்பி தேம்பி பேசியவள்,

 

“நான் முடிவு பண்ணிட்டேன், மாப்பிளையோட அப்பாகிட்ட நானே போய் பேச தான் போறேன், இந்த கல்யாணம் நடந்தா நான் கேஸ் போடுவேன்னு சொல்ல தான் போறேன்”

 

“அம்மாடி வினுமதி, அப்படி எல்லாம் செய்யாதம்மா, அப்படி செஞ்சா நானும் தானம்மா சேந்து மாட்டுவேன், இந்த அக்ரீமெண்ட் க்கு ஒத்துக்கிட்டு சைன் பண்ணது நானும் தானம்மா”

 

“எனக்கு அதை பத்தி கவலை இல்லை, எனக்குன்னு கனவு இருக்கு அதை நோக்கி நான் போகணும்” என கூறிவிட்டு தன் துப்பட்டாவால் கண்ணீரை அழுந்த துடைத்து விட்டு கதவைத் திறக்க போனாள். ராமசாமியோ வேறு வழி அறியாது படாரென வினுவின் காலைப் பிடித்துவிட்டார்.

 

“வினு அப்பாக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ மா, உன் கால்ல விழுந்து கெஞ்சறேன் “

 

“அப்பா என்னப்பா பண்றீங்க” எனப் பதறி அடித்து அவரைக் கை தாங்களாக மேலே தூக்கினாள்.

 

“உன் கால்ல விழுகறத தவிற வேற வழி தெரில எனக்கு”

 

“ஐயோ என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” எனத் தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

 

“அம்மா நீயாச்சும் சொல்லும்மா ” என அழுதுக்கொண்டே தன் அம்மாவைப் பார்க்க ஒரு நொடி உறைந்தாள்.

சாந்தாவோ இரு கைகளையும் கூப்பி சற்று உயர்த்தி,

 

“உன்னை கை எடுத்து கும்படறேன் சாமி,உன் அப்பாவைக் காப்பாத்து கண்ணு”

 

” என்னம்மா நீயுமா? உன் புருஷன தான் காப்பாத்தணும்னு, பாக்கறீயே தவிற என்னை பத்தி யோசிக்க மாட்டேங்குற”

 

“உன்னை பத்தி யோசிக்காம இல்லை கண்ணு, அவங்க குடும்பம் நல்ல குடும்பம் தான், இப்போ நடக்கறத வெச்சு அவங்கள எடை போட்றாத வினு”

 

“எல்லாரும் ஒன்னா கூடிட்டீங்களா? சபாஷ்,  சபாஷ் ” என சுவற்றில் சாய்ந்து அழ தொடங்கினாள் பெண்ணவள். இனி தனக்கு வேற வழி இல்லை என்பதை உணர்ந்தாள். இப்பொழுது அவளின் எண்ணங்கள் அனைத்தும் கேசவன் மீது தான் இருந்தது. கேசவனைப் பற்றி நினைக்க, நினைக்க அழுகை மேலும் மேலும் பீறிட்டு கொண்டு தான் வந்தது அவளுக்கு.

 

“அம்மா, என்னை கொஞ்சம் தனியா இருக்க விடறீங்களா?”

 

“இல்ல வினு இந்த மாதிரி நேரத்துல உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்”

 

“என் வாழ்க்கையையே தண்ணி தெளிச்சு விட போறீங்க, அது உங்களுக்கு பயமா இல்ல, இப்போ நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கறது தான் உங்களுக்கு பயம் தட்டுதா, பயபடாதீங்கம்மா உங்க பொண்ணு இந்த விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு கோழை இல்லைம்மா “

 

“நீ கோழை இல்லன்னு எனக்கு தெரியும் கண்ணு”

 

“அப்றம் என்னம்மா, கொஞ்சம் நேரம் விடுங்க, என் வாழ்க்கையைத் தான் என்னால ஆசைப்பட்ட மாதிரி வாழ முடியல, இங்க இப்போ கிடைக்கற கொஞ்ச நேரத்துலயாவது என் ஆசை தீர அழுது முடிச்சறேன்” எனக் கதவினை சாற்றி விட்டு ஒரு மூளையில் தனிமையில் அமர்ந்து அழத் தொடங்கினாள்.

 

சில நிமிடங்கள் கழித்து,

 

கேசவனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லலாம், என போனை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுக்க, அந்த பக்கம் அவனோ ப்ரெண்ட்ஸ் உடன் டின்னரை முடித்து  ரூமிற்கு லேட் ஆக வந்து இப்பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். முதல் தடவை போன் எடுக்காமல் போனதை அறிந்து,

 

“கேசவா நீயும் என்னை ஏமாத்தாத கேசவா” என முனுமுனுத்து விட்டு இரண்டு மூன்று முறை அழைக்க அந்த பக்கம் ஒரு பதிலும் இல்லை. போனைக் கீழே வைத்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை போனை மீண்டும் எடுத்து கேலரியைத் திறந்து தன் காதலனுடன் எடுத்த போட்டோக்களைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள். கடைசியாக நேற்று மாலை பேருந்தில் ஏறும் முன் எடுத்து கொண்ட போட்டோவும் அதில் இருந்தது. அதை பார்த்தவளிற்கு அவனிடம் கூறிய வசனங்கள் தான் அலைஅலையாக கண் முன்பு வந்து போனது.

“இன்னார்க்கு இன்னார்ன்னு கடவுள் முடிவு பண்ணிருப்பாரு……., எனக்கு நீ தான் டா ஜோடி………., அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம விஷயம் தான்…………,”

இவை அனைத்தும் அவள் நினைவுகளில் புகுந்து வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் அவள் மனதில் ரணத்தை ஏற்படுத்தின.இனி அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை அறிந்து கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு  அப்படியே சுவற்றில் சாய்ந்து சில நொடிகள் அமைதி காத்தவள்,

மெதுவாக அவளின் மனதிற்கு தோன்றிய பாடல்களை வரிசையாக முனுமுனுத்தாள்,

 

“ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா, மன்னிப்பாயா”

 

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…………

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி”

 

“எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை”

 

“நான் ஒரு சிந்து, காவடி சிந்து

ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை,

தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்லை,

அதை சொல்ல தெரியவில்லை”

 

பாடி முடித்தவளின் மனம் ஏதோ சற்று இளகியது போல் தோன்ற,அவள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.தனக்குள்ளேயே பேச தொடங்கினாள்,

 

“வினு இப்போ நீ என்னை பண்ணிட்டு இருக்கன்னு  புரிஞ்சு தான் பண்றியா?, இப்போ கேசவனுக்கு போன் பண்றதால என்ன நடக்க போகுது, அங்க இருந்து அவன் பறந்து வந்து உன்னை தூக்கிட்டு போக போறான்னா என்ன? , இல்ல ஒரு வேளை அப்டியே உன்னை தூக்கிட்டு போய்ட்டாலும், அப்றம் இங்க என்ன நடக்கும், பிரியா பண்ண அதே தப்ப தான் நீயும் பண்ண போறியா? உன் சந்தோஷத்துக்காக அப்பாவை ஜெயிலுக்கு அனுப்ப போறியா? இல்ல அப்பா அம்மா சந்தோஷத்துக்காக வாழப்போறியா? நீ தான் வினு முடிவு பண்ணனும்” என தனக்கு தானே பேசி தீர்த்து விட்டாள்.அழுகை இப்பொழுது நின்றது. நின்றது என்று சொல்வதை விட இவளுக்கு இப்பொழுது ஏற்பட்ட நிலைமையை காண முடியாமல் அது கண்களுக்கு உள்ளேயே உறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு முடிவுடன் எழுந்து நின்றாள்.

 

வெளியே நின்றிருந்த இவளின் பெற்றோருக்கோ வினு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்பது தெரிந்து இருந்தாலும், ஒரு பக்கம் இவ்வளவு நேரம் ஆகியும் கதவு திறக்க படவில்லை என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் படபடத்தது.ஒரு வேளை மனது மாறி ஏதேனும் செய்து விடுவாளோ என்று பயம் பிறக்க ஆரம்பிக்க, இனியும் தாமதிக்க கூடாது என சாந்தா அறை கதவினைத் தட்டப்போக தன் கையை ஓங்கும் முன், கதவு தானாக திறந்தது.

 

ராமசாமியும் சாந்தாவும் வினுமதியினைக் கண்டு அதிர்ந்து போய் நின்றனர்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்