Loading

அடிமையின் காதல்!

சிறைக்காவலர்கள் புடைசூழ ஜுவாலாமுகியுடன் வேறு வழியின்றி சென்றாள் அக்னி. செல்லும் பொழுது பார்வையால் ருத்ரனை அவள் எரித்துப் பார்க்க, அவனது பார்வையோ எப்பொழுதும் போல எந்த உணர்வும் காட்டாது அவள் கண்களுக்குள் ஊடுருவியது.

‘இந்தப் பார்வைக்கு என்ன தான் அர்த்தம்? ஏன் இப்படி பார்க்கறான் என்னை? என் மேல இவனுக்கு இருக்கறது கோபமா? வெறுப்பா? இல்ல.. வேற ஏதாவதுமா?’ என்று பத்தாயிரமாவது முறையாகக் குழப்பம் வந்தது அவளுக்கு.

அவள் அங்கிருந்து கிளம்பிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் அமரேந்தர்.

நடந்ததை எல்லாம் மற்ற காவலாளிகள் மூலமாக அறிந்து கொண்டு தான் அங்கு வந்து சேர்ந்திருந்தார் அவர்.

வந்ததுமே.. “பிரதாப்.. நீ உன் மனசுல என்ன திட்டத்தோட இருக்கேன்னு எனக்குக் கொஞ்சம் கூடப் புரியல..

நம்மள உளவு பார்க்க வந்தவளை நீ ஜெயில்ல போட்ட. நம்ம வழக்கத்துல ஒரு பொண்ணை ஜெயில்ல அடைக்கறதுன்ற ஒரு விஷயமே இல்ல. ஆனா நம்ம எதிரி ஆணோ, பெண்ணோ சரிசமமா தான் தண்டனை கொடுக்கணும்னு நீ சொன்னது எனக்கும் சரின்னு பட்டுச்சு.

ஆனா இப்போ அவளை ஏன் அக்கா கூட அனுப்பி வச்சிருக்க? அவளை எப்படி நம்ம ஊருக்குள்ள சுதந்திரமா நடமாட விட முடியும்?” என்று அவர் படபடத்துக் கேட்க, மென்மையாகத் தனக்குள்ளே சிரித்தான் ருத்ரன்.

“மாமா! என் அம்மா என்கூட பேசிப் பதினஞ்சு வருஷமாச்சு!

அவங்க இத்தனை வருஷத்துக்கு அப்பறம் என்கிட்டே கேட்ட ஒரே விஷயம்.. அக்னியோட விடுதலை!

அவங்க இது அக்னியோட பாதுகாப்பபுக்காகன்னு சொல்லறாங்க.. ஆனா, தன் பையனோட மனசு, ஒரு அம்மாவுக்குத் தான் மாமா புரியும்!

அவளால.. அவ மேல எனக்குள்ள முளைச்சுருக்கற இந்த ராட்சச உணர்வால எனக்குப் பாதிப்பு வரும்னு அவங்க உள்ளுணர்வு சொல்லியிருக்கு.

அதனால தான் அவளை என்கிட்டே இருந்து பிரிக்க நினைச்சிருக்காங்க.

இந்தச் சிறை.. எனக்கும் அவளுக்கமான நெருக்கத்தை அதிகப்படுத்திடும்னு அவங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு!

அதனால தான் அவளை இங்க இருந்து விடுவிச்சு, எனக்குத் தண்டனை கொடுத்திருக்காங்க..” என்று அவன் கூறக் கூற, அமரேந்தரின் கண்கள் விரிந்தன!

அதைக் கண்டு மெல்லச் சிரித்தவன், “என்ன மாமா? ஆச்சர்யமா இருக்கா?” என்று கேட்க, அவரது தலையோ ஆமோதிப்பாய் மேலும் கீழுமாய் அசைந்தது!

“என் மேல அவங்களுக்கு அக்கறை இல்லைன்னு சொல்லறது அபத்தம் மாமா.. அவங்களுக்கு என் மேல அக்கறை இருக்கு.. பாசம் இருக்கு..

ஆனா அது எல்லாத்தையும் விட அவங்க பேச்சைக் கேட்காம நான் இப்படி ஆகிட்டேனேன்ற கோபம் இருக்கு.

அவங்களோட கோபத்தாலேயாவது நான் இதையெல்லாம் விட்டுட மாட்டேன்னான்ற ஆதங்கம் அவங்களுக்கு!

ஆனா நான் என் முடிவுல உறுதியா இருக்கவும், அவங்களால அதுக்கு மேல என்கூட போராட முடியாம அப்படியே விலகிட்டாங்க.

ஆனா இப்போ, என்னோட மனசு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுருக்கு.

அதே சமயம், அக்னியைப் பத்தியும் எல்லாருக்கும் தெரியும். நான் இதே ஊர்ல இருக்கற வேற யாரையாவது காதலிச்சிருந்தா அவங்களுக்கு சந்தோஷமா இருந்துருக்கும் மாமா!

ஆனா நான் காதலிக்கறது என்னைக் கொல்ல வந்தவளை..” என்று கூறி அவனே கேலியாய் நகைத்துக் கொண்டான்.

ஆனால் அவன் கூற்றில் இருக்கும் முரண் அவனுக்குப் புரிகிறதா இல்லையா? தன்னைக் கொல்ல வந்த ஒரு துரோகியைக் காதலிப்பதாக அவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவன் மனத்தில் என்ன தான் திட்டமிட்டிருக்கிறான் என்றே புரியாதவர், அதை அவனிடமே..

“ஆனா பிரதாப்.. இந்தக் காதலுக்கு எதிர்காலம் இருக்கா? நீ அக்னியைக் கல்யாணம் செய்துக்க முடியுமா? அவளை எப்படிப்பா நம்பி நம்ம வீட்டுக்குள்ள விடறது?

உனக்குப் பொண்டாட்டின்னா அவ இந்த சமஸ்தானத்தோட மகாராணி!

ஆனா இந்த அக்னியை நாங்க எப்படிப்பா மகாராணியா கொண்டாட முடியும்?” என்று அவர் சிறு ஆதங்கத்துடன் கேட்க, ருத்ரனோ அவரை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே..

“இந்தக் காளிக்ஷேத்ராவுக்கு ராஜான்னு யாரும் கிடையாது மாமா. அதே மாதிரி என்னோட பொண்டாட்டி இங்க யாருக்கும் மகாராணியும் கிடையாது. அவ எனக்கு மட்டுமே மகாராணி.

ஆனா நான்.. இந்தக் காளிக்ஷேத்ராவோட அடிமை!

என்னைத் தவிர இந்தக் காளிக்ஷேத்ரால யாரும் அடிமையா இருக்கக் கூடாதுன்னு நினைக்கற அடிமை!” என்றவன் தனக்குள்ளாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு..

“ஆனா, அடிமைக்குள்ளும் காதல் துளிர்க்கத் தானே செய்யுது? என்ன செய்ய?” என்றான் விரக்தியாய்!

ஆனால் உடனேயே ஓர் ஆழ்ந்த மூச்சை விடுவித்துக் கொண்டு தன்னை மீட்டுக் கொண்டவன்..

“அதை விடுங்க மாமா.. நமக்கு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. அதுல கவனம் செலுத்துவோம்.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அர்ஜுனும் அங்கு வந்துவிட, அவர்களைத் தங்களது கடற்கரையை நோக்கிச் சென்றனர்.

அங்கே கூடியிருந்த சிறு குழுவைப் பார்த்த ருத்ரன்..

“நாளைக்கு நம்ம வாழ்க்கைல ரொம்ப முக்கியமான நாள். இத்தனை நாளா நாம, நம்மள நோக்கி வந்த தாக்குதலுக்குத் தான பதில் தாக்குதல் நடத்திட்டு இருந்தோம். ஆனா இப்போ இந்த மிஷன்ல மட்டும் நாம ஜெயிச்சுட்டோம்னா, நம்மளை அடக்கணும்னு நினைக்கறவங்க, நம்மளைக் கண்டு பயந்து ஓடற மாதிரி செய்துடலாம்.

ஆனா.. அதுக்கு நம்மகிட்ட இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் தைரியம்.” என்று அவன் கூற அவன் எதிரில் இருந்த அத்தனை பேருக்கும் உடலில் வீரம் சுரந்தது!

“நாளைக்கு சாயந்தரம் நாம இங்க தயாரா இருக்கணும். அவங்க கரையைக் கடந்துட்டா நம்மளால எதுவுமே செய்ய முடியாது. அவங்கள கடல்லயே வச்சு மடக்கணும்.

ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க.. நம்ம எதிரி ஏற்கனவே நம்ம மேல பயங்கரமான பழி வெறில இருக்கான். அதனால நம்மளோட எந்த மூவும் அவனுக்குத் தெரிஞ்சுடாக் கூடாது!” என்று கூறியவனிடம் சம்மதமாகத் தலையசைத்தவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மற்றவர்கள் கிளம்பிய பிறகு அங்கிருந்த ஒரு சிறு கப்பலில் ஏறினார்கள் ருத்ரன், அமரேந்தர், அர்ஜுன் மூவரும்.

அந்தக் கப்பலில் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களெல்லாம் தயாராய் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டவர்கள், திருப்தியுடன் கீழிறங்கினார்கள்.

நாளை நடக்கப் போகும் சம்பவம் தான் தங்களது வாழ்க்கையில் நிகழும் மீக முக்கியமான வரலாற்றிச் சம்பவம் என அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே புரிந்திருந்தது!

அதே வேளையில் மும்பையின் ஒரு சொகுசுப் பங்களாவில் கண்களில் சீற்றத்துடன் அமர்ந்திருந்தான் கபீர்!

அந்த அமைச்சரைக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவனுக்கு நட்பாய் இருந்த பிற அரசியல்வாதிகளாலேயே அவனுக்குத் தொந்திரவுகள் அதிகமாயின!

இத்தனை வருடங்களாகத் தங்களுக்கு கீழே அடியாள் வேலை செய்து கொண்டிருந்தவன், இப்பொழுது தங்களுள் ஒருவனையே.. அதிலும் அரசு அதிகாரத்தில் இருக்கும் ஒருவனையே கொலை செய்திருந்தது அவர்களைப் பயம் கொள்ள வைத்திருந்தது!

அதனாலேயே அவனை அவர்கள் எல்லோரும் கூட்டாகச் சென்று எச்சரித்துவிட்டு வந்திருந்தனர்.

என்ன தான் இத்தனை நாட்களாகத் தனது உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டிருந்தாலும், இப்பொழுது இன்னொருவன் புதிதாய் முளைத்திருக்கும் இந்தத் தருணத்தில் இப்படி இவர்களும் தன்னை மிரட்டிவிட்டுப் போனது கபீருக்கு பெரும் சினத்தைத் தோற்றுவித்திருந்தது.

ஆனால் அவர்களிடம் அப்பொழுது எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாது அமைதி காத்தவன், தனக்கு இன்னமும் ஆதரவளித்து வரும் சில அரசியல்வாதிகளைக் கூட்டு சேர்த்துக் கொண்டான்.

அவர்களுடனான கூட்டில் அவன் கொண்ட லாபம் ஒன்றே ஒன்று மட்டும் தான்!

அது தான் அவன் விரும்பும், “மற்றவர்களின் பயம்!”

ஆம்.. அந்த அமைச்சரைக் கொன்ற பிறகு பிற அரசியல்வாதிகளுக்கு அவன் மீது பயம் வரும் என்று இவன் கணக்குப் போட்டிருக்க, அவர்களோ இவனை மிரட்டிவிட்டல்லவா சென்றிருக்கிறார்கள்?!

அதனால் ஏற்கனேவே வெறி பிடித்த மிருகமாய் மாறி, அடாத பாவங்களை எல்லாம் செய்துகொண்டிருப்பவனுக்கு இன்னும் ஆவேசம் முற்றிவிட்டது.

மற்றவர்களுக்காக ஆயிரக்கணக்கில் கொலை செய்திருப்பவன்.. தனக்காக ஒரு பெரிய வெடிகுண்டு சம்பவத்தையே அரங்கேற்றத் திட்டமிட்டிருந்த்தான்.

அதற்காக வெளிநாட்டிலிருந்து பல வெடிகுண்டுகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருந்தான்.

அதற்கு உதவி செய்தவன் தான் காளிக்ஷேத்ரா இருக்கும் மாநிலத்தின் முதலமைச்சர் மிதுன்!

மத்திம வயதுடைய மிதுனுக்கு இந்த ஒற்றை மாநிலத்தின் ஆட்சி மட்டும் போதவில்லை! அவனது அதிகாரம் இப்பொழுது ஒற்றை மாநிலத்துக்குள்ளாக மட்டும் சுருங்கியிருப்பதும் அவனுக்குப் போதவில்லை.

அவன் விரும்புவது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஏகபோக ஆட்சி அதிகாரம்!

அதற்கு அவனுக்குத் தேவை, பணம்!

அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல.. மலைமலையாய்.. குவியல் குவியலாய் பணம் தேவைப்பட்டது அவனுக்கு.

அதற்கு அவன் தேடியது குறுக்கு வழியை!

அவனது சட்டசபையிலிருக்கும் அமைச்சர்களுக்கெல்லாம் அது இதென்று ஆசை காட்டியும், அவர்களால் அவன் எண்ணிய அளவுக்குப் பணத்தைப் புரட்ட முடியவில்லை.

அதனால் அவன் இப்பொழுது இணைந்திருப்பது முன்னிலும் பயங்கரமான சதித்திட்டத்தில்!

தன்னிடம் இந்த நாடே பயந்து நடுங்குமளவு ஆயுதமிருந்தால், எல்லா அரசியல்வாதிகளும் முன்பு போல் தன்னைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள் என்று எண்ணித் திட்டம் போட்ட கபீருடன் சேர்ந்து கொண்டான் மிதுன்!

அப்படி கபீர் வாங்கியிருப்பது..‌அதி சக்தி வாய்ந்த ராக்கெட் ஏவுகணை!

அதைக்கொண்டு ஒரு பெரிய ஊரையே அழித்துவிடலாம்!

இப்பொழுது கபீர் வாங்கியிருக்கும் ஆயுதத்தைத் தனது மாநிலத்தின் கடற்கரை வழியாகக் கொண்டு வர அனுமதியளித்தால், அதற்குப் பெருமளவில் பணம் தருவதாக கபீர் வாக்களித்திருந்தான்.

ஏற்கனவே அவர்கள் பேசிய பணத்தில் பாதியை முன்பணமாகக் கொடுத்தும் இருந்தான்.

கூடவே வருங்காலத்தில் கபீரின் ஆதரவு முழு மொத்தமாக மிதுனுக்கு மட்டுமே இருக்கும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

எனவே தான் காளிக்ஷேத்ராவுக்கு அருகிலிருக்கும் கடற்கரை வழியாக அந்த வெடிபொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர் கபீரும், மிதுனும்!

இதைத் தனது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட ருத்ரனின் இதழ்கள் வஞ்சகமாக நகைத்துக் கொண்டன.

அப்பொழுதே அந்த ராக்கெட் ஏவுகணை வெடிபொருட்களைத் தன் வசமாக்கிக் கொள்ளும் திட்டம் அவன் மனதுக்குள் உதித்துவிட்டிருந்தது!

அந்தத் திட்டத்தில் செயலாக்கம் தான் அடுத்த நாள் நடைபெறுவதாக இருந்தது.

எல்லோரிடமும் பேசிவிட்டு தனது மாளிகைக்கு வந்தான் ருத்ரன். அவன் மாளிகையின் பின்புறம் தான் ஜுவாலாமுகி வசித்துவந்தார்.

இத்தனை நாட்கள் அவர் இருக்கும் இடத்தைக் கண்களால் பார்க்கக் கூட முயன்றதில்லை அவன்!

தன் மேல் அவர் கோபமாக இருக்கிறார் என்ற கோபத்தில் இருந்தவனோ அவரிடம் எந்தவித பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் இன்றோ, அவனது கால்கள் மெல்ல அவனது மாளிகையின் பின்புற பால்கனியை நோக்கிச் சென்றன.

அந்தப் பால்கனியே ஒரு பெரிய அறை போல இருக்கும்.

சுற்றிலும் செடிகள் வளர்ந்து ஓர் அழகிய நந்தவனம் போலிருக்கும் அந்தப் பகுதிக்கு இதுவரை அவன் சென்றதே இல்லை.

இன்றோ மெல்ல அவனது கால்கள் அந்த இடத்தினை நோக்கிச் சென்றன. அவன் மனத்திலோ ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு அவனைப் பிடித்து ஆட்ட.. அந்தச் சிறு நந்தவனத்திலிருந்து வந்த மகிழம்பூ செடியின் மணத்தில் கண்கள் சொருகியது அவனுக்கு.

கண்ணாடியால் போடப்பட்டிருந்த கதவைத் தாண்டி வெளியே சென்று அந்தப் பால்கனியின் கைப்படிச் சுவரைப் பற்றியபடி அவன் கீழே குனிந்து பார்க்க, அங்கே அவன் அம்மாவின் வீட்டின் முன்பு அந்த நேரத்திலும் பெருங்கூட்டம் கூடியிருந்தது.

‘என்ன விஷயமாய் இருக்கும்?’ என்ற சந்தேகத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருக்க, சுற்றிலும் இருந்த நட்சத்திரக் கூட்டத்தில் திடீரென்று முளைத்த பால் நிலவாய் வெளியே வந்தாள் அக்னி!

அவளைப் பார்த்ததும் தனையும் அறியாது ஒரு பெருமூச்சு ருத்ரனிடத்தில்.

அதே வேளையில் அங்கே மெல்லிய காற்று வீச, அந்தக் குளிர்க்காற்றோ ருத்ரனின் மூச்சுக்காற்றையும் சுமந்து கொண்டு அக்னியின் பொன் மேனியைத் தழுவியது.

அந்தச் சில்லிப்பில் மெதுவாய் தேகம் சிலிர்த்தவள்.. வீசிய சிறு காற்றில் கலைந்த கூந்தலை ஒதுக்கிவிட்டபடி மெல்ல மேலே நிமிர்த்து பார்த்தாள்.

அங்கே ருத்ரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கனவும், அதுவரை எடுத்துக் கொண்டிருந்த மூச்சு அடைத்துக்கொள்ள.. மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவளது இதழ்கள் பாதி பேச்சில் அப்படியே நின்றுவிட, கூந்தல் கோதிய விரல்களும் அந்தரத்தில் உறைந்து போய்விட, அவளது மான்விழிகளும், ருத்ரனிடமே நிலைகுத்தின!

அவள் இப்படிப் பாதிப் பேச்சில் சிலையாய் நிற்பதைக் காணவும் சுற்றி இருந்த அத்தனைப் பெண்களின் விழிகளும், அக்னியின் விழிகள் சென்ற திசையை நோக்கின.

என்ன தான் மனதின் அடியாழம் வரை ருத்ரன் மேல ஜுவாலாமுகிக்கு கோபம் மண்டிக் கிடந்தாலும், தன் மகனது முகத்தினை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எந்தத் தாய்க்குத் தான் ஆசை இருக்காது?

அதிலும் பக்கத்திலேயே வசிக்கும் மகனை, வீம்பினால் பார்க்கக் கூடாதென முடிவெடுத்தவர், அவன் எதேச்சையாகவாவது தன்னிடம் அவன் திருமுகத்தைக் காண்பிக்க மாட்டானா என்று ஏங்கித் தான் போயிருந்தார்.

ஆனால் மகனோ, அவரிருந்த பக்கம் தனது நிழலைக் கூடச் செல்ல விட்டதில்லை!

அப்படியிருந்த தன் மகன் இன்று இந்தப் பெண்ணுக்காகத் தானிருக்கும் இடம் தேடி வந்திருக்கிறான் என்ற எண்ணம் அவரது மனதுக்குள் சம்பட்டி அடியாய் வலியைக் கொடுத்தது.

கண்களில் வலியைத் தேக்கி அருகிலிருக்கும் அக்னியையும், மேலே அந்தப் பங்காளவிலிருக்கும் தன் மகனையும் பார்த்தவரோ, சிதறத் துடிக்கும் கண்ணீரை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அக்னியும், ருத்ரனுமோ.. தங்களை மறந்து, கரைகடந்த காதலை கண் பார்வையிலேயே வெளிப்படுத்தித் தங்களது மனப்புண்ணைக் கீறிக் கீறி.. அதில் காதலெனும் ஒளஷதம் தடவி ஆற்றிக்கொண்டிருந்தனர்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்