Loading

எனதழகா – 53 ❤️

“அவசரப்பட்டு  வார்த்தையை  விடாத லஷ்மி! நமக்கும் குழந்தைகங்க இருக்காங்க “என்று  லஷ்மியின் காதுகளில் கிசுகிசுத்தார் வசுதேவர்.

பின்பு, ஆறுமுத்தை பார்த்து , ” நாளைக்கு மில்லுக்கு வந்திடு “என்று கூறிவிட்டு வசுதேவர் சென்று விட்டார். ஆறுமுகமும் லஷ்மியிடம் கூறிவிட்டு அவனின் தனிப்பட்ட அறைக்கு சென்றான். அங்கு மறைத்து வைத்திருந்த சாராயத்தை எடுத்து மடமடவென குடித்தான்.

வசுதேவரை எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு தூரம் வாயில் மென்று வசைபாடினான். பற்களை நறநறவென கடித்து கோபத்தை கட்டுபடுத்த முயன்றான். ஏனென்றால், வசுதேவர் கூற்று ஆறுமுகத்தின் காதில் நன்றாகவே விழுந்தது. அதனால் தான் இவ்வளவு கோபம்.

குடித்து விட்டு வெளியில் வந்தால் பிரச்சனை வந்து விடும் என்று நினைத்து, அமைதியாக உறங்கி விட்டான். மறுநாள் காலை கதவு தட்டும் சத்தத்தில் தான் விழித்தான். தட்டு தடுமாறி தன்னை சமன் செய்து கதவை திறந்த பொழுது எதிர்ப்பார்த்த மாதிரி அங்கு  லக்ஷ்மி தான் நின்று கொண்டிருந்தார்.

ஆனால், அவர் முகத்தில் பதட்டத்தின் சாயல் குடி கொண்டிருந்தது. அவரை கூர்ந்து நோக்கிய நொடி , ” உன் மாமா உன்னை தான் கூப்பிடுறாரு டா ” என்று கூறியவுடன் ஒரு நிமிடம் தான்  செய்ததை 
எதுவும் கண்டுபிடித்து விட்டாரோ என்று கிலி பரவியது மனதில் . இருந்தும் வெளியில் தைரியத்தை வரவழைத்து அவர் முன் நின்றான்.

அவர் நிமிர்ந்து ஆறுமுகத்தை கண்டு விட்டு அருகில் நின்று கொண்டிருந்த வடிவேலனை நோக்கி  , ” வடிவேலா இவன் என் மாப்பிள்ளை. பேரு ஆறுமுகம். லஷ்மியோட கடைசி தம்பி. அங்க ஏதோ வேலை செஞ்சு அப்பா அம்மாக்கு கஞ்சி ஊத்துனான் போல . இப்போ இங்க ஏதாச்சும் வேலைக்கு கேட்டான். வேலை செஞ்ச பிள்ளை இல்லையா ! அதான் சும்மா இருக்க மனசு வரல போல . நீ அவனை மில்லுக்கு கூட்டிட்டு போ . மீதி அந்த  மேனேஜர் பையன் பார்த்துக்குவான்” என்று கூறினார்.

வடிவேலனும் ஆறுமுகத்தை மில்லிற்கு அழைத்து சென்றான். அதில் கிருஷ்ண தேவர் என்று பெயரிட்டிருந்தது. கிருஷ்ண தேவர் தான் வசுதேவரின் தகப்பன். இவர் பிறந்த பின்பே இவர்கள் குடும்பத்திற்கு வெற்றி, பணம், அந்தஸ்து , ஆஸ்தி எல்லாம் என்று பெரியவர்கள் கூறுவர்.

அதனாலேயே பத்திற்கு எட்டு வியாபரத்திற்கு இவரின் பெயரையே ராசியாக நினைத்து வைத்திருந்தனர். அதையே காலப்போக்கில் வசுதேவர் தேவன் குரூப்ஸ் ஆப் கம்பெனி என்று மாற்றிக் கொண்டார்.

அந்த மில்லிற்கு நுழைந்ததும் அதிர்ந்து விட்டான். வெளியில் பார்ப்பதற்கு பாழடைந்தது போல் காணப்பட்டது. ஆனால், தேவைக்குரிய அனைத்து வசதிகளோடு, நவீன இயந்திரங்கள் கூட ஒரிரு இடத்தில் தென்பட்டது.

அவன் அனைத்தையும் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்ல, வடிவேலன் அங்குள்ள மேனேஜரிடம் கூட்டி சென்றான். அந்த மேனேஜர் ஆறுமுகத்தை நோக்கி அமர சொல்லி விட்டு, வடிவேலனுக்கு வணக்கம் தெரிவித்து விட, வடிவேலனும் பதிலுக்கு வணக்கம் சொல்லி கிளம்பி விட்டான்.

அவன் அமர்ந்தவுடன், ஒரு தாளையும் , பேனாவையும் எடுத்து அவன் கையில் கொடுத்து, அவன் பெயர், முகவரி போன்ற விவரங்களை எழுதக் கூறினான்.

” இல்லைய்யா எனக்கு பேரு தவிர எதுவும் எழுத தெரியாது” என்று கூறி விட்டு, சுற்றி சுற்றி அனைத்தையும் கண்ணால் அளந்து கொண்டிருந்தான். அவனின் போக்கில் எதுவும் சரியாக படவில்லை. இருந்தும் முதலாளியின் சொந்தக்காரன் என்று ஒன்றும் கூறாமல் அவனுக்கு ஏற்ற வேலையை நியமித்தான்.

ஒருவனை அழைத்து ஆறுமுகத்தின் வேலையைப் பற்றி கூற, ஆறுமுகத்தை அப்புதியவன் அழைத்து சென்ற இடம் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் இடம். அப்பொழுதே அவன் முகம் கறுத்தது. இருந்தும் பொறுமையாக  “எனக்கு இங்கு என்ன வேலை ”  என்று கேட்டான்.

” இல்லைய்யா, உங்களுக்கு இங்க வேலை இல்லை. உங்களை துணிக்கடைக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க ” என்று கூறிவிட்டு, சரக்குகளை ஏற்றி கொண்டிருப்பவர்களை வசைப்பாடி வேலை வாங்க சென்று விட்டான்.

அதை பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் பக்கென்று ஆகிவிட்டது. ஒரு வேளை நாம் சொந்தமாக இல்லாமல் இருந்தால் இத்தகைய வேலையில் தானே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மனதிற்கு பயம் உண்டானது. இருந்தும் வெளியில் காட்டாமல், துணிக்கடைக்கு பயணமானான்.

போகும் தூரம் வரை “நாம எப்படியாச்சும் இந்த மில்லை நம்ம பேருக்கு எழுதி வாங்கிடனும் . அப்போ தான்  நம்ம கடைசி வரைக்கும் சொகுசா வாழலாம். அக்கா என்ன சொன்னாலும் செய்யும். ஆனால், மச்சான் எப்படி ? ஏதாச்சும் செஞ்சு தான் வாங்கணும். இல்லைனா அம்புட்டையும் அந்த பொடுசுக்கு கொடுத்துருவாங்க ” என்று தேவையே இல்லாமல் கேசவர் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

ஆட்டோ ஒட்டுனர் கத்திய பிறகே சுயநினைவிற்கு வந்தான். “சொல்லுய்யா சொல்லுய்யா….. காதுலாம் கேக்குது. எதுக்கு இவ்ளோ கத்துற “என்று காதை குடைந்து கொண்டே கேட்க, “ஏன்ய்யா பேசமாட்டா ? இறங்கு முதல்ல. இது தான் அய்யாவோட துணிக்கடை ” என்று கூறி ஒரு இடத்தில் கையை காண்பிக்க, ஒரு சின்ன அறையளவு கூட இல்லாத, அனுமானமாக 15 x 15 சதுர அடிக் கொண்ட ஒரு ஐவுளிக்கடை இருந்தது.

அதில் அவன் மனம் ஒரு நிமிடம் வெகுண்டது. இருந்தும் அங்கு வசுதேவர் நிற்பதைக் கண்டதோடு, வசுதேவரும் இவனைப் பார்ப்பதை உணர்ந்து, அமைதியாக  அவரின் அருகில் சென்றான்.

“வாப்பா ஆறுமுகம். ஒரு நிமிஷம் ” என்று கூறி ஐந்து நிமிடத்திற்கு மேலாக முத்துசாமியிடம்  பேசிக் கொண்டிருந்தார்.

பதினொன்று மணி வெயில் முகத்தில் பட்டு, மனதிற்கும் உடலிற்கும் எரிச்சல் உண்டு பண்ணியது. இதற்கு மேல் பொறுக்காமல் “மாமா ….. “என்று குரல் கொஞ்சம் உயர்த்தியே அழைத்தான். முத்துசாமியிடம் முக்கியமான விஷயங்களை பேசிக் கொண்டிருந்ததால் அவனின்  குரல் வித்தியாசத்தை உணரவில்லை. அதனால், திரும்பி பார்த்தவர் ஆறுமுகத்தின் முகத்தில் வடியும் வியர்வை துளிகளை கண்டு அவனை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்றார்.

அவருக்கு அருகில் மண் பானையில்  வெளியில் வருவோர் போவோருக்கு வைத்திருக்கும் தண்ணீரை குடிக்க கொடுத்தார். அவனுடைய பெற்றோருடன் இருந்த வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு விட்டான். அக்காவின் இல்லத்தில் சகல மரியதை மற்றும் வசதிகளோடு வாழ கற்றவனுக்கு இச்செயல் அவமரியாதை செய்வது போன்று இருந்தது.

அவரையும் அவர் கையில் இருக்கும் லோட்டாவையும் மாறி மாறி பார்க்க, அந்நொடி ஒரு யாசகன் வந்து அந்த லோட்டாவை கேட்டு வாங்கி தண்ணீரை அருந்தி விட்டு , தன்னருகில் இருக்கும் ஆறுமுகத்திடம் கொடுத்து விட்டு சென்று விட்டான்.

அதே நேரம் வசுதேவருக்கு முத்தரசன் கலர் வாங்கி கையில் கொடுத்தான். அதை வாங்க திரும்பியவரின் முகத்தில் பட்டு தெறித்தது தண்ணீர்.

திரும்பி பார்த்த வசுதேவர் மற்றும் முத்துரசனுக்கு அதிர்ச்சியோடு கிலியும் உண்டாகியது.

எனதழகா – 54 ❤️

அங்கு ஆறுமுகம் முகம் வெளிறி நாக்கை கடித்து கொண்டு கால் கை நீட்டி  வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தான்.

அவனை கண்ட வசுதேவர் மற்றும் முத்தரசன் அதிர்ந்து விட்டனர். ஆனால், முத்தரசன் சுதாரித்து அவனுக்கு இரும்பு கொடுத்து சமநிலைக்கு கொண்டு வந்தார். பின்பு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற பொழுது, ஆறுமுகம் தன்னை தானே நிலைப்படுத்தி கொண்டு, வசுதேவரிடம் “மாமா, நான் நல்லாதான் இருக்கேன். இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே அப்போ அப்போ வரும். இதுக்கெல்லாம் ஆஸ்பத்தரி போனா எங்க வருமானம் என்னாகிறது. விடுங்க சரியாகிடும் “என்று கூறி, வசுதேவருக்கு வைத்திருந்த கலரை எடுத்து குடித்து விட்டு “எனக்கு  என்ன வேலைனு இன்னும் சொல்லலையே ? ” என்று கேட்டான்.

அவனின் நடவடிக்கைகளைக் கண்டு  இருவரும் வியந்தனர் . பின்பு, வசுதேவர் “ஆறுமுகம், இந்த துணிக்கடை என்னுடைய கனவு. அதே மாதிரி என்னுடைய படிப்புக்கு ஏத்த மாதிரி  கட்டிட தொழிலுக்கு படிச்சு அதை ஆரம்பிச்சு இருக்கேன். இந்த கட்டிட தொழில் என் அப்பா ஆசைக்கு . இந்த துணிக்கடை என் கனவு. அப்பாக்காக நான் முழு நேரமும் அங்க தான் இருப்பேன். இதை முத்தரசனும் நீயும் தான் பாக்கனும். பார்ப்பியா ? ” என்று உணர்ச்சி பொங்க ஆறுமுகத்தின் கைகள்  பிடித்து கேட்டார்.

ஆறுமுகத்திற்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. அதே நேரம் முத்தரசனுக்கோ சங்கடமாக இருந்தது. ஆனால், இருவரும் வசுதேவரின் நன்மைக்கே யோசித்தனர். அதனால், ஆறுமுகம் உணர்ச்சி வசத்தில் சரி என்று கூறி விட்டான்.

பின்னர், வசுதேவர் கடையை சுற்றி காண்பித்து அதிலுள்ள சரக்குகளையும் காண்பித்தார். அதன் பின்பு, அவனை அமர வைத்து “நாம கடையை திறந்து இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியனும். அதனால், இதைத் தவிர நிறைய சரக்கு நம்ம வீட்டு குடோனுல இருக்கு. நீ ஊர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு போய் வித்து இங்கு வர வைக்கனும். சரக்குடைய கணக்கு வழக்குலாம் முத்தரசன் இங்க இருந்து பார்ப்பாரு . அதே மாதிரி இந்த கடையையும் பார்த்துக்குவாரு” என்று கூறி முடித்த நொடி , ஏன் தான் ஒப்புக் கொண்டோம் என்று தலையில் அடிக்காத குறையாக நினைத்தான்.

ஆனால், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டான். ஏனென்றால், அதில் அவனுக்கு வருமானம் என்கின்ற பெயரில் அவனுக்கு மித மிஞ்சிய ரூபாயை தருவதாக கூறி விட்டார் வசுதேவர்.

பின்பு, ஒவ்வொரு ஊருக்கும் சென்று சரக்குகளை விற்பதற்கு அட்டவனையை தயாரித்து கொடுத்தான் வடிவேலன். அதன்படி முத்தரசனும் சரக்குகளை பிரித்து வைத்து கொண்டிருந்தார். உடைகளை பற்றி ஆறுமுகமும் வேண்டா வெறுப்பாக முதலில் கேட்டவர் பின்பு ஆர்வத்தோடு அனைத்தையும் மனதினில் பதித்து கொண்டார்.

இவ்வாறு மாலை வரை பொழுது செல்ல, வசுதேவரும் கட்டிட கம்பெனிக்கு சென்று விட்டு இங்கு வந்தார். முத்தரசன் அனைத்து தகவலும் கொடுத்தார். அதனை அமைதியாக வாங்கி படித்து முடித்து விட்டு, ஆறுமுகத்திடம் திரும்பி அத்தாளை கொடுக்காமல் “உன்னுடைய அபிப்பிராயத்தைக் கூறு” என்று கூறியவுடன் உள்ளம் நெகிழ்ந்தது ஆறுமுகத்திற்கு.

உடனே அவன் ஒரு சின்ன குச்சியை எடுத்து தரையில் ஒரு  வட்டம் வரைந்தான். அதை சுற்றளவில் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு ஆகிய இடங்களில் உள்ள மையப்பகுதியில் புள்ளி வைத்து அதைச் சேர்த்தான். இந்த நாளு புள்ளிக்கும் மையப் பகுதியாக, வட்டத்தின் மையப் பகுதி அமைந்தது.

அந்த புள்ளியை சுட்டிக் காட்டி, இது தான் மதுரை .” இந்த மதுரையை சுற்றி ஏறத்தாழ எனக்கு தெரிஞ்சே ஒரு ஐநூறு கிராமம் இருக்கும். எல்லாரும் நினைக்கிற மாதிரி வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ல உள்ள மையப்பகுதியில் இருக்கிற ஊரு எல்லாம் பெரிய இடம். அதனால அங்க போகலாம்னு சொல்லக்கூடாது. வடக்குப் பக்கமே  தனியா பார்த்தா நிறைய தாலுகா இருக்கும். அதனால, நம்ம தாலுகாவை பிடிக்கனும். இல்லைனா, இரண்டு மூணு ஊரு ஒரு ஊரு பேச்சைக் கேட்கும். அதுப்படி போய் அந்த ஊருல நம்ம வியாபாரம் பண்ணனும். இப்படி தான் பண்ணனும். செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும் ” என்று மூச்சு விடாமல் கூறினான்.

அவனின் யோசனை வித்தியாசமாக இருந்தது. வந்தால் லாபம் இல்லையென்றால் கிடையாது என்பது போல் இருந்தது. இரண்டு மூன்று ஊர்கள் சேர்ந்து ஒரு ஊரை கவரும் பொழுது , அந்த ஊரின் பேச்சைத் தான் பிற ஊர்களும் கேட்கும். ஏதாவது சின்னதாக இடையூறு நடந்தாலும் அத்தனை ஊரின் வியாபாரமும் தவிடு பொடியாகி விடும். அதனால் முத்தரசன் இதெல்லாம வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றார்.

சிறிது நேரம் யோசித்த வசுதேவர் சரக்குகளை இரு பாகமாக பிரித்து இருவரின் யோசனைப்படி தனிதனியாக செயல்படுமாறு கூறிவிட்டார்.

இருவரும் ஒரு மாத காலமாக இராப்பகல் என்று பாராமல் உழைத்தனர். ஆறுமுகம் மது, மாது என்று சுற்றி திரிந்தவன். மதுவை அசதி போக்குவதற்கு நாடியவன், மாதுவை துறந்தே விட்டான். இப்பொழுதெல்லாம் எவ்வூரில் என்ன என்ன வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே அவனின் யோசனை முழுவதும் இருக்கும்.

முத்தரசனும் ஆறுமுகத்திற்கு சளைத்தவன் இல்லை என்பதற்கு இணங்க , அவரும் முழு மூச்சில் இறங்கினார். ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், வசுதேவர் இருவரையும் அழைத்து அவர்களின் வேலையைப் பற்றி  வினவினார். இருவரும் அவரவர் பங்குகள், உழைப்புகள், வந்த வருமானம் , செலவுகள் என்று அனைத்து கணக்குகளையும் காண்பித்தனர்.

இருவரின்  கணக்குகளையும் பொறுமையாகப் பார்த்தவர், கடையில் தனிப்பட்டு வடிவேலன் எழுதிய கணக்குளையும் பார்த்தார். அதில் சில விஷயங்களை குறிப்பிட்டு கொண்டு, இருவரையும் அருகில் அழைத்து பொதுவாக கடையின் வியாபாரம் கணக்கை காண்பித்தார்.

பிற மாதங்களை விட இம்மாதம் பத்து மடங்கு வியாபாரம் நடைப்பெற்றிருந்தது.  அதைப் பார்த்த ஆறுமுகம் மனதினில் “இத்தகைய லாபத்திற்கு நாமத் தான் காரணம். இவரு கிழம். அதோட அவருக்கு பெரிசா என்ன வருமானம் வந்திருக்க போகுது. மாமா இதுக்கு எதாச்சும் சன்மானம் வேணுமானு கேட்டால் என்ன கேட்கலாம் ? ” என்று கோட்டை கட்டி கொண்டிருந்தான்.

“ஆறுமுகம் ….. ஆறுமுகம் …… யோவ் ஆறுமுகம் ” என்று வசுதேவரும் , “தம்பி ஆறுமுகம்….. ஏப்பா …. தம்பி ” என்று முத்தரசன் அவரின்  பங்கிற்கு கத்தினார்.

அதில் சுயநினைவு  பெற்றவர் “சொல்லுங்க மாமா!’ என்று கூறியவன் , வசுதேவரின் கூற்றில் அதிர்ந்து விட்டான்.

கீர்த்தி ☘️

 

 

    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்