Loading

அத்தியாயம் 26

தவளைகளும் பூச்சிகளும் வித விதமான சத்தங்களை எழுப்பும் பின்னிரவு நேரம்…

தூக்கம் தழுவி மெத்தைத் தாங்கும் உடல்கள் இன்று கண்களில் தூக்கத்தை விரட்டிக் கண்ணீரோடு மருத்துவமனை அறை முன்பு காத்துக் கிடந்தனர் மருத்துவரின் வருகைக்காக. வெற்றியை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தவர்கள் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தனர். அதை நம்பும் படியாகவும் இல்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. செவிலியர் வந்து சத்தம் போட்டதால் எல்லாரும் அமைதியாக இருந்தனர். கனிமொழியும் முத்தம்மா பாட்டியும் கூட அமைதியாகக் கண்ணீர் வடித்தனர். கட்டியவளோ எங்கோ வெறிக்க கண்ணில் தேங்கிய கண்ணீரை வெளியேற்றாமல் வெறித்துக் கொண்டிருந்தாள். 

மருத்துவர் வெளியே வந்ததும் சிவகுரு ஓடிச்சென்று “டாக்டர் இப்போ என் மகனுக்கு எப்படி இருக்கு?. நல்லா இருக்கானா?. பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே?” என்று கலக்கத்தோடு கேள்விகளை அடுக்கினார்.

“வெயிட் வெயிட் ஏன் இவ்வளவு பதட்டம்?. அவருக்கு கீழே விழுந்ததுல முதுகுல புல்லா சிராய்ச்சி விட்டுருக்கு. அப்புறம் கத்தில தோள்லக் குத்துப்பட்டுருக்கு. காயத்துக்கு கட்டுப் போட்டுருக்கு. பிளட் கொஞ்சம் போயிருக்குறதால மயக்கத்துல இருக்குறாரு. மயக்கம் தெளியவும் போய் பார்க்கலாம். இது அட்டெம்டு மர்டர் கேஸ்ங்குறகால போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம். அவங்க வரவும் டீடெயில்ஸ் குடுங்க” என்று மருத்துவர் அவர் அறைக்குச் சென்று விட்டார்.

அப்பொழுது தான் செவிலியர் வாங்கி வரச் சொன்ன மருந்தை வாங்கிக் கொண்டு வந்தான் தமிழ். அவனைக் கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த ஆதங்கத்தையும் வார்த்தைகளால் கொட்டினார் முத்தம்மா பாட்டி. தமிழின் சட்டையைப் பிடித்து “அடேய் படுபாவிப் பயலே… மண்ணைத் தான் நாசமாக்கப் பார்த்தனா இப்படி மனுஷனையும் நாசமாக்கத் துணிஞ்சுட்டியேடா?. இப்படி கொலை பண்ற அளவுக்கு வன்மம் வைக்குறதுக்கு அவன் உனக்கு என்னடா பண்ணான்?. என் குலசாமியை இப்படிப் படுக்க வைச்சிட்டியேடா?” என்று அவனை அடித்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். 

அவர் ஒப்பாரியில் செவிலியர் வெளியே வந்து “பாட்டி இது ஹாஸ்பிடல். இந்த நேரத்துல இப்படி கத்துனா பேஷன்டுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகும். அமைதியா இருக்குறதா இருந்தா இருங்க இல்லை யாராவது ரெண்டு பேர் இருந்துட்டு மத்த எல்லாரும் வீட்டுக்குப் போங்க” என்று திட்டி விட்டு “சார் உங்களை அப்பவே மருந்து வாங்கிட்டு வரச் சொன்னா இப்படி அசால்டாக நிக்குறேங்க. மருந்தைக் குடுங்க” என்று தமிழின் கையில் இருந்ததை வாங்கிச் சென்றார்.

“அம்மா அமைதியா இரும்மா?. காதாலக் கேட்குறத வச்சு எதுவும் சொல்ல முடியாது. மொத வெற்றி முக்கியம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. குமார் நீ போய் அப்பத்தாவை வீட்ல விட்டுட்டு வா” என்றார் சிவகுரு. 

அவர் சென்றவுடன் “இங்க பாருங்க பெரியப்பா எல்லாரும் சொல்ற மாதிரி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை” என்றான் அதுவரை அமைதியாக இருந்த தமிழ். 

மதி அவனை அர்த்தமாக ஒரு பார்வைப் பார்த்தாள். சிவகுரு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்து விட்டார். மற்ற ஊர்க்காரர்களும் கிளம்பி விட்டனர்.

போலீஸ் விசாரணைக்கு வந்து விட்டனர். வந்தவுடன் தமிழிடம் வந்து “உங்க மேல தான் எல்லாரோட சந்தேகமும் இருக்கு. ஏனா நீங்க தான் சம்பவ இடத்துலே இருந்துருக்கேங்க. உங்களுக்கும் வெற்றிக்கும் முன்பகை வேற இருந்துருக்கு. அதுனால என்குயரிக்கு ஸ்டேஷன் வாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அய்யோ சார் நான் எதும் பண்ணலை. காதுல கேட்டதை வச்சு நீங்க அரெஸ்ட் பண்ணுவேங்களா?” என்று ஆத்திரப்பட்டான்.

மதி இன்ஸ்பெக்டரிடம் வந்து “சார் அவங்க இதைப் பண்ணிருக்க மாட்டாங்க. வெற்றிக்கு மயக்கம் தெளியவும் நீங்க விசாரணையை வச்சுக்கோங்க. அவர் மேல எங்களுக்கு சந்தேகம் இல்லை” என்றாள். 

வீட்டு ஆளுங்களே சந்தேகம் இல்லை என்று சொன்னவுடன் இன்ஸ்பெக்டரும் சென்று விட்டார். ‘இத்தனை நாள் பார்த்த நமக்கே சந்தேகம் இருக்கும் போது இவள் எப்படி நம்புகிறாள்?’  என்று கனிமொழியும் சிவகுருவும் நினைத்தனர். ‘ஏதாவது காரணம் இருக்கும் அதைக் கேட்பதற்கு இது சரியான நேரமில்லை’ என்று மருமகளின் மேல் உள்ள நம்பிக்கையில் அமைதியாக இருந்தனர். 

குமாரோ ‘இந்த அண்ணி என்ன லூசா?. இவனைப் பத்தி இவங்களுக்கு என்ன தெரியும்னு இவனுக்கு சப்போர்ட் பண்றாங்க?’ என்று எண்ணம் மதியிடம் இருந்தாலும் எரிக்கும் பார்வை முழுவதும் அமைதியாக நின்று கொண்டிருந்த தமிழிடமே இருந்தது.

வெற்றி கண் விழிப்பதற்குள் இரவு நாம என்ன நடந்தது என்று பார்த்து விட்டு வரலாம்…

வெற்றி தூரத்தில் தெரிந்த காரின் வெளிச்சத்தை பார்த்து விட்டு “எவன்டா அவன் இந்த நேரத்துல?” என்று அருகில் நெருங்கவும் அங்கு நின்றிருந்த ஐந்தாறு தடியன்களில் ஒருவன் நீளமான கட்டையை எடுத்து அவன் வண்டி முன் நீட்டவும் வண்டி சறுக்கிக் கவிழ்ந்து விழுந்ததில் முதுகில் சிராய்த்து விட்டு வலியில் “ஆஆஆ” என்று கத்தி எழ முடியாமல் இருந்தான்.

மீண்டும் ஒரு தடியன் வந்து “ஏன்டா நிலத்தைக் குடுத்துட்டு போனா குடுக்காம இப்படி வீணா பெரியாளுங்க கூட மோதி உயிரை விடப் போறீயேடா?. தேவையா உனக்கு இது?” என்று கையில் இருந்த அரிவாளைக் கொண்டு வரவும் வலியைத் தாங்கிக் கொண்டு தடுமாறி எழுந்த வெற்றி அரிவாளை இறுகப் பிடித்து அவன் கையைத் திருப்பி ஓங்கி ஒரு குத்து விட்டான் மூக்கில். வெகு நேரம் அவர்களுடன் சண்டை போட்டவன் அவர்கள் ஐந்தாறு பேர் என்பதாலும் முதுகில் ஏற்பட்ட வலியாலும் அவர்கள் நடுவில் மாட்டி கீழே விழுந்தான். அவன் கழுத்திற்கு நேராக அரிவாளை ஓங்குவதற்குள் தொலைவில் வண்டி சத்தம் கேட்டு அப்படியே நின்றனர்.

தமிழ் தான் வண்டியில் வந்து நின்றான். அவனைக் கண்டவுடன் காரில் இருந்து திருமுருகன் வெளியே வந்தான். “டேய்.. தமிழு நம்மாளு தான். பயப்படாம போடுங்கடா அவனை” என்றான்.  ‘இவன் வேலையா இது?’ என்று ஒரு நிமிடம் அதிர்ந்தான் வெற்றி.

திருமுருகன் சொல்லவும் மீண்டும் அரிவாளை ஓங்கியவர்களை ஒரு மிதி மிதித்து தூரத் தள்ளினான் தமிழ். திருமுருகனும் மற்றவர்களும் ஆச்சர்யத்தில் இருக்க வெற்றிக்கு கைக்கொடுக்க அவனும் அவன் கைப்பிடித்து எழுந்தான். 

“ஏன்டா நிலத்தை மட்டும் தான் உன்கிட்ட விற்க சம்மதம் சொன்னேனே தவிர விவசாய நிலத்தை அழிக்க நீ பிளான் போடுவ எனக்கு சோறு போடுற நிலத்தை அழிக்க நானும் சம்மதம் சொல்வேனு நினைச்சேங்களா?. ம்ம். அன்னைக்கு வேனும்னே வெற்றி நிலத்துல மருந்தைக் கலந்துட்டு உன் ஆளை என் வண்டில ஏற வச்சு என் மேல பழி வர்ற மாதிரி பண்ண. இன்னைக்கு என்ன கொலைப் பழியா?” என்று அவர்கள் திட்டத்தை நேரில் பார்த்தவன் போல் சொல்லவும் திருமுருகனுக்கு திடுக்கிட்டது.

“இல்லை… இல்லை தமிழு. உன்னை அப்டிலாம் விட்ருவோமா?. இவனோட நிலமும் கிடச்சுட்டா உனக்கு சேர்த்து பணம் தர்றேன்” என்று அந்த நேரத்திலும் விலை பேசினான்.

“ஏன்டா நீ சொகுசா இருக்க எங்க நிலத்தையும் அழிச்சு கொலைப் பழி வேற ஏத்துக்கனுமா?. விவசாயம் பண்றவனுக்கு விவசாயம் பண்றவனே எதிரியா இருந்தா மத்தவன் எப்படி உதவி பண்ணுவான்” என்று எல்லாரையும் அடித்து துவைக்க ஆரம்பித்து விட்டனர் வெற்றியும் தமிழும். சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டானு அண்ணனும் தம்பியும் ஒருத்தர் விடாமல் கோவத்தை அவர்கள் மேல் காண்பித்தனர். தமிழ் வெற்றியின் புறம் சாய்ந்ததில் திருமுருகனுக்கு ஆத்திரம் வர தமிழின் பின்னால் சென்று கத்தியை குத்துவதற்குள் “தமிழ்ழ்ழ்” என்று வெற்றி அந்தக் குத்தைத் தன் தோளில் வாங்கிக் கொண்டான். அதன்பிறகு மற்ற அடியாட்கள் ஓடி விட்டனர். திருமுருகனைப் பிடிப்பதற்குள் அவனும் ஓடி விட்டான். 

அதுவரை ‘நமக்காக இவன் ஏன் உள்ளே வந்தான்’ என்று அதிர்ச்சியில் இருந்த தமிழ் வெற்றிக்கு இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதை உணர்ந்து கத்தியைப் பிடிங்கி எறிந்து விட்டு துணியை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். வெற்றி அதிக இரத்தம் போனதால் மயக்கத்திற்கு சென்று விட்டான். அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஊர்க்காரர் ஒருவர் இருவருக்கும் உள்ள பகையால் தமிழ் தான் இப்படி செய்து விட்டான் என்று பேச ஆரம்பித்து விட்டார் நடந்தது தெரியாமல். “நடந்தது தெரியாம பேசாதிங்க” என்று அவரிடம் சண்டை போட்டுக் கொண்டே தமிழும் வெற்றியுடன் மருத்துவமனை வந்தான். இது தான் நடந்தது. நடந்தது தெரியாமல் தமிழின் மீது சந்தேகம் கொள்கின்றனர்.

மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தவன் காலைக் கதிரவன் ஜன்னல் வழியே தன் கதிர்களை அவன் முகத்தில் வீசவும் மெதுவாகக் கண் விழித்தான். செவிலியர் வந்து “சத்தம் போடாம போய் பாருங்க” என்று சொல்லவும் உள்ளே சென்றனர் அனைவரும். 

முதுகு மற்றும் தோளில் ஏற்பட்ட காயத்தால் ஒரு பக்கமாக படுத்திருந்தான். கனிமொழியும் சிவகுருவும் “என்னாச்சுயா வெற்றி” என்கவும் அவன் தமிழை ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்ததை சொல்லி முடித்தான். 

“தமிழ் அந்த நேரத்துல வரலேனா என்னாயிருக்கும்னே தெரியாதுப்பா” என்றான். “எய்யா தமிழு என் புள்ளை உசுரக் காப்பாத்திக் கொடுத்ததுக்கு நன்றியா” என்றார் கனிமொழி சேலை நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

“நான் தான் பெரியம்மா நன்றி சொல்லனும். எனக்காக தான் வெற்றி உள்ள வந்து விழுந்துட்டான். என்னை மன்னிச்சுரு. சேராத ஆளுங்க கூட சேர்ந்தா அது நமக்கே வினையா வரும்னு இன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன்” என்று வெற்றியிடம் சொல்லி விட்டு “யாரும் என்னை நம்பாதப்போ நீங்க என்னை நம்புனதுக்கு நன்றிங்க” என்றான் மதியிடம். பிறகு தமிழ் அவர்களிடம் சொல்லி விட்டு சட்டையில் ரத்தக்கறையோடு இருப்பதால் வீட்டிற்குச் சென்று உடை மாற்றக் கிளம்பினான்.

சிவகுருவும் கனிமொழியும் வீட்டிற்கு உணவு எடுத்து வரச் செல்ல மதி மட்டும் அறையில் எதுவும் பேசாமல் வாங்கி வந்த மாதுளை ஜூஸை கிளாஸில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள்.

வெகுநேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் “ஏன்டி புருஷன்காரன் அடிபட்டுக் கிடக்கேன். என்ன ஏது எப்படி இருக்குன்னு ஏதாவது கேட்குறியா?” என்றான்.

“என்னடா கேட்கனும். இல்லை என்னக் கேட்கனும்?. நீ பாட்டுக்கு கண்ட நேரத்துல வேலை பார்க்கேனு டவுனுக்குப் போயிட்டு இப்படி அடி வாங்கிட்டு வந்துட்டு ராத்திரி முழுக்க கண்ணு முழிக்காம கிடந்துட்டு… இப்போ என்னைக் கேட்கிறியா?. எவ்வளவு பயத்துட்டேன் தெரியுமா?. நீ இல்லனா நான் என்னாயிருப்பேன்” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் கொட்டினாள். 

அதுவரை அவள் சிரிப்பதை மட்டுமே பார்த்தவன் முதல் முறை அழுகவும் மனது வலிக்க “ப்ச் வதனி என்னது இது?. இங்க வா” என்று அவளை அருகில் அழைத்து நெற்றி முட்டி “அப்படிலாம் உன்னை விட்டுப் போயிட மாட்டேன்டி. போனாலும் உன்னையும் கூப்டே போயிடுறேன். போதுமா?” என்று சமாதானம் செய்து அவள் அழுகையை நிறுத்தினான். 

இவர்கள் நெற்றி முட்டி கொஞ்சிக் கொண்டிருக்க முத்தம்மா பாட்டி பேரனை உடனே பார்க்கனும் என்று மகனுடன் வந்தவர் அறைக்கதவைத் திறந்ததும் இந்தக் காட்சியைக் கண்டு விட்டு “அடியே நாலு பேரு வந்து போற இடத்துல இதென்னடிக் கூத்து. ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட நேரம் காலம் இடம்னு இல்லை. இப்டித்தானா?. அடியே ஆம்பளைனா அப்டித்தான். என் ராசாக்கு சரியாகுற வரை நீதான் கொஞ்சம் தள்ளி இருந்து சூதானமா இருக்கனும்” என்று சொல்லி இருவரையும் வெட்கத்தில் தலைகுனிய வைத்தார். ‘அய்யயோ இந்தக் கிழவி இப்டியா மானத்தை வாங்கும்’ என்று இருவரும் மனதில் ஒரே போல் நினைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அதன் பிறகு ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு வந்தனர். வெற்றி இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை வாக்குமூலமாகக் கொடுத்தான்.

மறுநாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்தவன் அறையில் ஓய்வெடுத்தான். மதி அவனுக்கு மாத்திரை எடுத்து அவனிடம் கொடுக்கவும் வாங்கி விழுங்கியவன் “மதி ஒரு விஷயம் இடிக்குதே?” என்றான்.

“என்ன விஷயம்?”.

“எல்லாருக்கும் தமிழ் மேல டவுட் இருக்கும் போது நீ மட்டும் எப்படி நம்புன?” என்றான் சந்தேகமாக.

“அதுவா… அது வந்து…” என்று இழுத்தாள்.

“என்ன வில்லத்தனம் எனக்குத் தெரியாம பண்ணனு ஒழுங்கா நீயா சொல்லிடு. இல்லை…?” என்று முறைத்தான்‌.

“அது வந்து… அன்னைக்கு நீ நிலத்துல ரசாயன மருந்தைக் கலக்கப் பார்த்தாங்கனு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தியா… நீ பீல் பண்றதைப் பார்த்து எனக்கும் பீல் ஆயிடுச்சேப்பா” என்று உதட்டைக் கூட்டி வைத்துக் கொண்டு “அதுனால குழலியைக் கூப்டு தமிழைப் பார்க்கப் போனேன்” என்றாள் ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக.

“என்னாது!!!. அவனைப் பார்க்கப்போனியா?.  எப்போ எங்கிட்ட சொல்லவே இல்லை” என்று இன்னும் முறைத்தான்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment