Loading

அத்தியாயம் 21

கதிரவனை வழியனுப்பிக் கனிந்த அந்திப் பொழுது வானம் மஞ்சள் நிற உடையுடுத்தி மயக்கிய வேளை…

தமிழ் தன் காதலை குழலியிடம் சொன்னதிலிருந்து பல குழப்பத்தில் இருந்தாள். ‘இவனுக்கு திடீர்னு எங்கிருந்து என்மேல் காதல் வந்தது. இவன் நல்லவனா கெட்டவனா?. மாமாக்கு வேற தொல்லைக் கொடுத்துட்டு இருக்கான். இவனை எப்படி நம்புறது?. யாரு கூடவும் ஒட்டாம தான் புடுச்ச முயலுக்கு மூனு காலுனு அலையுறான். நாளைக்கு நம்ம அம்மா அப்பாவையும் ஏதாவது சொல்லி இவன் ஏதாவது பேசிப்புட்டா?’ என்ற அவள் மூளையின் கேள்விக்கு மனமோ ‘அப்போ அவன் கூட கல்யாணம் வரைக்கும் போயிட்டியா?. அதுக்கு மொத உங்கப்பா அம்மா ஒத்துக்கனும்’ என்றது.

‘சே சே கல்யாணமா… அப்டியில்லை. நல்லவன் தான் ஆனால் நல்லவன் இல்லை’ என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் மனம் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது.

அவன் நினைவிலே வந்தவள் திடீரென்று அவன் எதிரில் வந்து நிற்கவும் திடுக்கிட்டு நின்றாள். ‘இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று விட்டு அவனைத் தாண்டி நடந்தாள்.

அதையெல்லாம் அவன் பொருட்படுத்தாமல் பின்னாலே சென்று “உங்கப்பா வரலயா கூப்ட?. தனியா நடந்து போற?” என்றான்.

“வரல” என்று திரும்பிப் பாராமல் நடந்து கொண்டே இருந்தாள்.

“உன்கிட்ட தானக் கேட்கிறேன். திரும்பி கூட பார்க்காம நடந்துட்டே இருக்க. சரி வா நான் ஊருக்குள்ள விடுறேன். நீ உங்க வீட்டுக்கு போயிடு” என்று வண்டியில் அழைத்தான்.

“இவ்வளவு நாள் நீங்க தான் விட்டேங்களா?. எங்க வீட்டுக்கு போக எனக்குத் தெரியும்” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“ஏன் என் கூட வர பயமா?. இவ்வளவு நாள் இல்லனா என்ன நீ ஓகே சொன்னா இனிமேல் தினமும் நானே விடுறேன்” என்று கண்ணடித்துச் சொன்னான்.

‘கடவுளே இன்னைக்குனு பார்த்து ஒரு மனுஷ ஜனங்களைக் கானுமே!’ என்று மனதில் புலம்பி விட்டு “தேவையில்லை” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள்.

“ஏய் இன்னைக்கு யாருமே இல்லை தனியா போறனு தான் கூப்டேன். எனக்கென்ன ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த வேலிக் காட்டுக்குள்ள இருந்து திருட்டுப்பயங்க வந்து யாரு செயினையோ அத்துட்டு போயிட்டானு சொன்னாங்க. நீ தனியா போ. உன் கழுத்துல கத்தியை வைக்கட்டும்” என்று சிறிது பயமுறுத்திப் பார்த்தான்.

அவள் கைகள் தன்னால் கழுத்தைத் தொட்டுப் பார்த்தது. அதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் “வர்றியா இல்லை போகவா?” என்றான்.

அவள் மனதில் போகவா வேண்டாமா என்று பல யோசனைக்குப் பின் சரி இவன் கூடவே இன்னைக்கு போயிடலாம் என்று வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஒரு சைடாக அமர்ந்து ஒரு கை புத்தகத்தைப் பிடித்திருக்க மறு கை வண்டியில் உள்ள கம்பியில் இருந்தது.

அதைப் பார்த்தவன் ‘ஓஓ எங்களலாம் புடுச்சுக்க மாட்டேங்களோ?. இருடி வர்றேன்’ என்று வண்டியை மிக மெதுவாக ஓட்டினான் அவளுடன் செல்லும் பயணத்தை நீட்டிக்க.

“நான் நடந்து போனாலே இன்னேரம் வீடு போய் சேர்ந்திருப்பேன். எப்பவும் முறுக்கிட்டு அலையுறவரு இன்னைக்கு என்ன மாட்டுவண்டியா ஓட்டுறேங்க?” என்றாள்.

“வேகமா போனுமா செல்லம். மாமாகிட்ட சொன்னா வேகமாப் போகப்போறேன்” என்று வண்டியைத் திடீரென முறுக்கியதில் பயந்து போனவள் கை தானாக அவன் தோளைப் பிடித்தது.

அவன் ‘எப்படி?’ என்று புருவம் உயர்த்தி சிரித்த தோரணையில் அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது. அவனிடம் காண்பிக்காமல் வேறுபுறம் திரும்பி சிரித்துக் கொண்டாள். ஆனால் கள்ளனவனோ கண்டுபிடித்து விட்டான். அலை அலையான காற்றில் பறக்கும் கேசம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி, முறுக்கு மீசை, எப்போதும் சிடுசிடுவென இருக்கும் முகம் இன்று சூரியகாந்தி பூவாய் மலர்ந்திருந்தது. அவனையை ரசித்துக் கொண்டு வந்தவள் இறங்குமிடம் வந்தும் அவனையே ரசித்துக் கொண்டிருக்கவும் “வீட்ல வந்து இறக்கி விடவா செல்லம்” என்கவும் அதன் பிறகே “சே” என்று தலையில் தட்டி விட்டு நன்றி கூட சொல்லாமல் ஓடி விட்டாள். போகும் அவளையே சிறிது நேரம் அதே இடத்தில் நின்று ரசித்து விட்டு கிளம்பி விட்டான். 

நீ அன்பாய் 

ஒரு வார்த்தை பேச 

என் மனம் 

மண்டியிட்டு ஏங்குகிறது

படாதபாடு படுத்துகிறாய்

என் பிஞ்சு நெஞ்சம் பாவமடி

கட்டி வைத்திருக்கும்

உன் காதலதை

கட்டவிழ்த்து விடு

ஆழ்கடலின் ஆழத்தை விட

கொஞ்சம் அதிகமாய்

அன்பு செய்து

உன் இதயத்தை

ஆள்வேனடி..! 

முழுநிலவு ஒளியின் குளுமை உடலைத் தாக்க அவளவனின் நினைவு மனதைத் தாக்க என்று மாலை அவனுடன் வண்டியில் வந்ததையே நினைத்துப் பார்த்துக் கொண்டு தூக்கம் வராமல் உருண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

‘சே படுபாவி காதல் அது இதுனு மனசை பாடாப்படுத்துறான். நான் பாட்டுக்கு சுத்திட்டு இருந்தேன். இப்படி என் மனசுல கல்லெறிஞ்சு விட்டுட்டியேடா சிடுமூஞ்சி’ என்று அவனைத் திட்டும் சாக்கில் அவனை நினைத்துக் கொண்டாள். 

என் மனமானது 

முன்னும் பின்னுமாகப் 

போவதும் வருவதுமாக 

இருதலைக் கொள்ளியின் 

உள்ளே அகப்பட்ட 

எறும்புபோல அலைகிறதே

ஆழம் தெரியாமல் காலை விட்டு

எனைத் தவிக்க விடுவாயா இல்லை

ஆழ்கடலின் ஆழமாய் உன்னுள்

மூழ்கி முத்தெடுப்பேனா..! 

இரவு முழுவதும் உருண்டு புரண்டு தூக்கம் வராமல் நடுராத்திரிக்கு மேல் தான் உறக்கத்தைத் தழுவினாள். 

மறுநாள் “ஏன்டி பேய்கீய் அடுச்சுருச்சா?. ரெண்டு நாளா மந்திருச்சு விட்டவ மாதிரியே அலையுற” என்ற அவளது தாய் லட்சுமியின் குரலைக் காதில் வாங்காமல் அவசர அவசரமாக கல்லுரிப் பேருந்தைப் பிடிக்க ஓடினாள்.

அவன் நினைவிலே வந்தவள் கல்லூரி பேருந்து புறப்படும் முன் எப்போதும் போல் வந்து நின்றவனை கண்டு திடுக்கிட்டாள் இன்று. எப்போதும் வெடுக்கென்று திரும்பி செல்பவளால் இன்று செல்ல முடியவில்லை. அவன் புறம் அலைபாயும் கண்களை தடுக்கும் வழியறியாது சிறு பெண்ணவள் தவித்துப் போனாள். இது சரியா தவறா என்று பகுத்தறிய முடியாமல் கண்களில் சிறுதுளி கண்ணீரும் துளிர்த்தது.

தமிழின் காதல் இப்படி இங்கு இப்படி இருக்க சென்னை சென்ற வெற்றி முதல் முறை திருமணமாகி வந்திருப்பதால் இரண்டு நாட்கள் இருந்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று மாமியாரின் செல்லக் கட்டளை வேறு. வெற்றி வரும் போதே டிரான்ஸ்போர்ட் பார்த்து வைத்து விட்டு வந்ததால் சிவகுருவே காய்கறிகளை ஆந்திராவிற்கு அனுப்பி வைத்து விட்டார். அதனால் அப்போதைக்கு அவனுக்கு அவசர வேலை இல்லாததால் அவனும் சரி என்று தங்கி விட்டான்.  இரண்டு நாட்கள் அங்கிருக்கும் போதே FIEO பற்றி அறிந்து கொள்ளலாம் என்று மதியும் வெற்றியும் அதற்காக அலைந்து கொண்டிருந்தனர்.

உலக நாடுகளில் இந்தியாவில் விளையும் எல்லா வகை காய்கறிகளுக்குமான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் அதிக அளவில் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காய்கறிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

இந்தியாவைப் பொறுத்த வரை, காய்கறிகளுக்கான உள்நாட்டுத் தேவை மிகவும் அதிகரித்துக் காணப் படுகின்றன. அதனால் உள்நாட்டுத் தேவை போகத் தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருவதால், நமக்கான ஏற்றுமதித் தேவை அதிகரித்தே காணப்படுகிறது. 

ஆனால் விவசாயிகளிடையே அதைப் பற்றிய போதிய அறிவின்மை மற்றும் ஆழம் தெரியாமல் இறங்கி விட்டு பல இன்னல்களை சந்திக்க நேருமோ? என்ற பயத்திலே உள்ளூர் வியாபாரிகளிடமே தாங்கள் விளைவித்தைக் கொடுத்து விட்டு விலை இல்லை என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏன்? நிறைய பேருக்கு இது போன்ற அமைப்பு இருப்பதேத் தெரியாது என்பதே உண்மை. தெரியாது என்பதை விட தெரியப்படுத்தவில்லை என்பது தான் உண்மை. அதற்கு ஏதோ மிகப்பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கற்றால் எதுவும் எளிது தான். FIEO அமைப்பைப் பற்றியும் எவ்வாறு அதில் உறுப்பினராவது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

——————————————————

FIEO(Federation of Indian Export Organisations) இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பாகும்.

மேலும் இது ஏற்றுமதியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இயங்கி ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

முதலில் நாம் கவனிக்க வேண்டியது எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையாக இருக்கிறது என்பதைத் தான். தரமும், பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் இந்த தொழிலுக்கு முக்கியம்.

எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே கொடுத்து உதவுகின்றன.

ஏற்றுமதி இறக்குமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்த தொழிலில் இறங்கிவிடலாம். ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை முடிவு செய்த பிறகு அதற்கான மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இவர்கள் மூலமாகக் பெற்றுக் கொள்ளலாம்

அரசு தடை செய்துள்ள பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட் களையும் ஏற்றுமதி செய்யலாம்

காய்கறி ஃபார்ம் ஃப்ரெஷ் காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து, சரியான முறையில் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.

நிறுவனத்தை தொடங்குவது எப்படி?

தனிநபராக ஏற்றுமதி செய்ய முடியாது. நிறுவனமாக பதிவு கொண்டால் தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் கிடைக்கும். எனவே முதல் வேலை நிறுவனத்தை பதிவு செய்வதுதான். நாம் என்ன தொழிலில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது, பொருட்களை நாமே உற்பத்தி செய்வது, பிறரிடமிருந்து வாங்கி மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வது இதில் எந்த வகையில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை முடிவு செய்து கொண்டு நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை வைக்கலாம்.

குறிப்பாக நிறுவனத்தின் பெயர் Exports, International , Overseas என்று முடியுமாறு இருக்க வேண்டும்.

லைசென்ஸ்( IE CODE)

கம்பெனிக்கு பெயரை முடிவு செய்த பிறகு இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லேட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை தயாராக வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்வதற்கு இது அவசியம். மேலும் வங்கிக் கணக்கு தொடங்க லைசென்ஸ் (IE Code) அவசியம். இவை தயாரான பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வணிகத்திற்கான இயக்குநகரத்தில் பதிவு செய்து லைசன்ஸ் வாங்க வேண்டும்.

இந்த அனுமதி கிடைத்து, ஏற்று மதிக்கான ஒப்பந்தங்களும் கிடைத்து விட்டால் உங்கள் தொழிலை தொடங்கி விட வேண்டியதுதான்.

நம்மூரில் நிறைய காய்கறிகள் விளைவதால், அதை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் இறங்கலாமே!. விலையில்லை விலையை நிர்ணயிக்க உரிமையில்லை என்று புலம்பாமல் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும் படித்து விட்டு விவசாயம் செய்வதோடு இதையும் செய்தால் லாபமும் கிடைக்கும். படித்த படிப்பும் வீணாய் போகாது.

——————————————————

வெற்றியும் மதியும் ஏற்றுமதி தொழிலில் இறங்குவதற்கான எல்லா விவரங்களையும் சென்னையில் உள்ள FIEO அமைப்பில் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். பாதி நேரம் அங்கு ஏற்றுமதி பற்றி கிளாஸ் முடித்து விட்டு மீதி நேரம் மூவி, மால் என்று சுற்றிக் கொண்டிருந்தனர். எப்போதும் வேஷ்டி சட்டையில் இருப்பவன் இன்று புளூ கலர் ஜீன்ஸ் பேன்ட்டும் வெள்ளை நிறச் சட்டையும் என ஆளை மயக்கும் மாயக்கண்ணனாக இருந்தான். கூடவே வெற்றியை சந்திப்பதற்கு வைஷாலியும் வந்து விட்டாள்.

வந்ததும் “ஹலோ மாம்ஸ்… ஆளே பார்க்கவே வித்தியாசமாக சூப்பரா இருக்கேங்க”  என்றாள்.

‘மாம்ஸ் ஆஆஆ!! நம்மளைத் தான் சொல்லுதா இந்தப் பொண்ணு’ என்று திகைத்து விட்டு “ஹாய் நல்லா இருக்கேங்களா” என்றான்.

அவன் திகைப்பதை உணர்ந்து தோழிகளின் டீலை அவனிடம் சொல்லி விட்டு “என்ன நீங்க பேர் சொல்லியேக் கூப்டலாம். வாங்க போங்க வேண்டாம்” என்று சிரித்தாள்.

அவனும் ‘நல்ல டீலிங்’ என்று சிரித்து விட்டு “சரிம்மா” என்றான்.

அதன்பின் மூவி லஞ்ச் என்று முடித்து விட்டு வைஷாலி சென்று விடவும் மதி பத்ரகாளியாக முறைத்தாள். 

“என்ன ஏன்டி முறைக்குற?” என்றான்.

“எதுக்கு முறைக்குறேனா?. அவ மாம்ஸ்னு கூப்டா  உடனே சிரிப்பியா?. அண்ணனு கூப்ட சொல்ல மாட்டியா?” 

“அடிப்பாவி அவ கூப்டா என்ன ஏன்டி முறைக்குற. உன் பிரண்ட் தான அவகிட்டயே கேட்க வேண்டியது தான. டீலிங் போட்டது நீங்க பலியாடு நானா?. சும்மா வாடி. என் தலைல நீதானு எழுதியிருக்கும் போது வேற யாரையும் பார்க்க முடியுமா?” என்று சலித்துக் கொண்டான்.

“அவனவன் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறான். உனக்குலாம் தானா வந்தது கிடைச்சா இப்டித்தான் இதுவும் பேசுவ இன்னமும் பேசுவடா” என்று அவனுடன் சண்டையிட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

ரவிக்கு இரண்டு நாட்கள் அந்தக் கேஸிலே வேலை முழுவதுமாக இருந்ததால் மகளுடனும் மருமகனுடனும் நேரம் செலவழிக்க முடியாமல் இருந்தது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு மூன்றாவது நாள் முழுநேரம் அவர்களுக்காக ஒதுக்கினார். 

மதி செய்ததை நினைத்துக் கோவம் இருந்தாலும் அவளால் தான் இந்தக் கேஸ் முடிவுக்கு வந்தது என்பதால் அவள் மீது கோவம் கொள்ளவில்லை. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது “வெற்றி நீங்க வேணா பக்கத்துல கொடைக்கானல் எங்காவது ஹனிமூன் போயிட்டு வாங்களேன்” என்றார் ரவி.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது. ‘இதற்கு என்ன சொல்வது? என்று தெரியாமல் மதியைப் பார்த்தான். அவளோ ‘அப்டியே ஒன்னும் தெரியாத பாப்பா’ என்று அவனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாள். 

“வர வர ரொம்ப தான்டி கண்ணைக் காட்டி மிரட்டுற” என்று பார்வையாலே சொல்லி விட்டு “ம் மதி கிட்ட கேட்டு பிளான் பண்றேன் மாமா” என்று எழுந்து அறைக்குள் சென்று விட்டான். அவன் பின்னாலே சென்றவள் “ஏன்டா காட்டான் என்னை இப்படி அசிங்கப் படுத்துற. சும்மாவாது பாக்குறேனு சொல்ல வேண்டியது தான. ஒன்னும் தெரியாத பச்சை மண்ணு என்னைக் கேட்டு தான் பிளான் பண்ணுவாரு இவரு” என்று உதட்டைச் சுழித்தாள். 

சுழிக்கும் இதழை இரு விரலால் பிடித்து “ஏன்டி அந்த மாதிரி பிளேஸ்க்குலாம் பொண்டாட்டி விருப்பமில்லாமயா போவாங்க. உனக்கு ஓகேனா சொல்லு உடனே புக் பண்ணிடுறேன்” என்று கண்ணடித்தான்.

‘கண்ணைச் சிமிட்டியே மயக்கிடுவான்’ என்று நினைத்து விட்டு “சரி சரி தள்ளி நில்லு. ரெண்டு நாள் கொடைக்கானல் போயிட்டு அங்கிருந்து ஊருக்குப் போலாம்” என்றாள்.

“ரெண்டு நாள் போதுமா செல்லம்” 

“உன் பேச்சே சரியில்லை. நான் தூங்கப் போறேன் போடா” என்று பெட்டில் சென்று தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவள் செய்கையைக் கண்டு சிரித்து விட்டு அவனும் இரண்டு நாள் பறிபோன தூக்கத்தை இன்று நிம்மதியாகத் தூங்கினான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment