இனி டாக்டரானா என்ன? இஞ்சினியர் ஆனா என்ன? ஒரு வருஷம் விவசாயம் பாடமா படிக்கணும்னு சட்டம் வந்தா எப்படி இருக்கும். இது என் மனதின் குரல்.
இதை சுத்தியே நிறைய கதைகள் எழுதிருக்கேன். இனி இதை தொட்டு எழுத வேண்டாம்னு நினைச்சாலும், என்னோட எழுதுகோல் அதைத் தொடாம எழுதவிடல. சில சமயம் அலுப்பும் களைப்பும் வருதே தவிற, கதை எழுதி முடிச்ச களிப்பு வரல. காரணம் கதையில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஏட்டு சுரைக்காயாவே இருக்கு. ஒரே விஷயத்தை பல கோணங்களில் சொல்ல போறேன். ஏற்கனவே ஆரம்பிச்ச கதைதான். நாலு எபி நாலு மாசம் முன்னாடியே எழுதிட்டேன். திரும்ப மீண்டும் ஒரு தொடக்கம்.
தோகைமயில் சிறகொடிச்சு,
கோகிலத்தின் குரலறுத்து,
கோலமகளுக்கு மூளி வேசம் –
விழி முன்னே கடைப்பரப்பி விரிச்சு வச்சாலும் கண் கொண்டு காண்பவரும் இல்ல.
காது கொடுத்துக் கேட்பவரும் இல்ல.
புருவ மத்தியில் முடிச்சும் விழாம கடந்து போறான், நான் விதைச்ச நெல்லில் வயிறு வளத்தவன்.
அஞ்சாறு பயிர் செஞ்சு அறுசுவை நான் படைச்சேன்.
ஊருக்கு வயிறு நிறைஞ்சா என் வீட்டு பத்தாயமும் நிறைஞ்சு போகுமே.
நான் கேட்டதெல்லாம் என் வீட்டு பத்தாயம் முழுக்க பச்சை நெல் மட்டும்தான்.
பட்டினியாக் கிடக்கும் என் வீட்டுக்கு வருஷம் முழுக்க பந்தி வைப்பேனே வயிறு வளர்க்க.
கதையொன்னு சொல்லி, வாழ வகையொன்னு சொல்றேனு வெள்ளாமை செஞ்ச பூமிய அரிச்செடுக்க அமிலக்கரைச்சல் ஊத்தியாச்சே.
சீமையில் சமர்த்தனா என் புள்ள வருவான்னு கணாக் காண, கழனியில் உழவினத்தை அழிக்க ஒருத்தன் வருவான்னு நினைக்கலையே!
நான் பெத்தெடுத்த ரத்தினத்தை என் கண் முன்னே சீரழிக்க வருவான்னு எண்ணாம போனேனே!
வாழ வகையுமில்லை.
வயிறு நிறைய தொகையுமில்லை.
பரதேசியாய் பல தேசம் சுத்தியும் நெஞ்சு நிறையல – அதனால பல பனுவலுக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டேன். நஞ்செய்யும் புன்செய்யும் காகிதத்திலாவது வாழட்டும் என்று.
பரவாயில்லை. அதுக்கு கொஞ்சம் நன்றியுணர்ச்சி இருக்கு. மரக்கூழில் இருந்து வந்தேன்னு அது பெருமை பேசல. மாறா என் வரண்டு போன பசுமையை காய்ந்து போன காகிதத்தில் தாங்கி நிக்கிது.
வாழ வழியில்லாம பிச்சை கேட்டு வரல.
உங்களுக்கும் வாழ வழிவகை செஞ்சு தாரேன்.
எனக்காக குரல் மட்டும் குடுங்க – இது ஒரு இனத்தின் குரல்.
வார்த்தைகள் வக்கணையாக வரிசைக்கட்டி நின்னாலும் நெஞ்சு முழுக்க பதட்டம் மட்டுமே இருக்கு.
மீத்தேனுக்காக கையகப்படுத்தப்பட்ட சோழ மண் என்றேனும் மீண்டும் நமக்கு கிடைக்குமாங்கிற கேள்வி.
சுதந்திரம் கிடைக்கும் முன்னரே ஆடுவோமே பள்ளு பாடுவோமேனு தோத்திரம் பாடிவிட்டான் பாரதி. எனக்கும் அப்படி பாட வேண்டும் என்ற எண்ணம். அதில் உதித்த கதைதான் இது.