Loading

அகிதனே காதல் கொள்வோமா? – 1

நாளங்களில் பாயும் செங்குருதியாய் ஆகாயத்தில் தன் கதிர்களை சுருக்கி அஸ்தமித்து கொண்டிருந்த ஞாயிற்றின் செய்கையை மாடத்தில் நின்று ரசித்து கொண்டிருந்தாள் மாயோள். 

வெய்யோன் வதனத்தில் இரட்டை பொருவில்லை பொருத்தி, அதில் துள்ளி ஓடும் கயல்விழியை 

மையிட்டு நிறுத்தி இருந்தாள். 

மைவடிவ குழலியர் வெய்த்தோள் முதல் பசும்பொற்கொடி வரை ஆட, 

அதற்கு ஏற்றார் போல் காற்றில் அசைந்தது அவளது குழையூசல்.

மேனி தழுவிய தென்றல் அவள் மெய்க்கூச, தரளவடல் போல் வெம்மையை பொருந்திய அவளது எயிறு திடீர் என்று எட்டி பார்க்க, 

நிற்பது பெண்ணவளோ? திருமகளோ? என்று கவிப்பாட தோன்றும் சாமானியனையும். 

நின் மூச்சில் யான் கலந்தால் அல்லவா? எந்தன் பிறவி பயனை யான் அடையமுடியும் என அங்குமிங்கும் அலைப்பாய்ந்தது தென்றல். 

அதன் அலைப்புறுதல் அவள் மேனியில் மெல்லிய நடுக்கத்தை ஏற்படுத்தியதையும் கருத்தில் கொள்ளாது இலக்கின்றி வெறித்து கொண்டிருந்தாள் திரிசல தேசத்தின் இளவரசி ஆழினி மைவிழியாள்.

சூரிய கதிர்கள் அவள் மேல் பட, திடீரென்று அவள் ரோமங்கள் சிலிர்த்து உடை மூடா இடம் சட்டென்று மினுமினுக்க ஆரம்பித்தது.

அதே சமயம், காட்டில் வேட்டை ஆடிக் கொண்டிருந்தவனின் ரோமங்களும் திடிரென்று ஜொலிக்க ஆரம்பதித்தது. கண் முன் நிற்கும் அந்த விலங்கை தவிர வேற எதுவும் அவன் கண்களுக்கு புலம்படவில்லை. அவன் கூர்மையான பார்வை முழுவதும் அவனது இலக்கை நோக்கியே இருந்தது. 

திடிரென்று மினுமினுக்கும் அவன் தேகத்தை கண்ட அந்த கருஞ்சிறுத்தை, வேகமாக அவன் மேல் தாவியது. இதற்காக தான் நான் காத்திருந்தேன் என்பது போல இடுப்பில் சொருகி இருந்த குறுவாளை அதன் தாடையின் கீழ்  இருந்து மேலே சொருக, அதுவோ உன் ஒற்றை தாக்குதலில் என் தோல்வியை யான் ஒற்றுக்கொள்ள மாட்டேன் என்று திமிறி மீண்டும் அவனை தாக்க வந்தது. அதன் தாடையில் சொருகி இருந்த குறுவாளை கைப்பற்றி மீண்டும் சொருகினான், இம்முறை மேல் இருந்து கீழாக. 

வலி, இரை தன்னிடம் தப்பி பிழைத்த கோவம் என்று எல்லாம் ஒன்று சேர, தோல்வியை ஒற்றுக்கொள்ள மனமின்றி வேங்கையாக நின்றவனிடம் மல்லுக்க நின்றது கருஞ்சிறுத்தை. 

என் இலக்கு இன்று உனை வெல்வது என்பது மட்டுமே என்று அவன் மனதில் ஓட, சொருகி இருந்த குறுவாள் ஒரு கையிலும் அவனது போர்வாள் மறுகையிலும் எடுத்து, சிறுத்தை அவனை தாக்குவதற்கு முன் சுழற்றி கண்ணிமைக்கும் கணப் பொழுதில் அச்சிறுத்தையை வீழ்த்தி அதன் மேல் ஏறி சிம்மாசனம் இட்டு அமர்ந்தான் உக்ரசாயி ரணதீரன். 

அத்துணை நேரம் அவன் கண்ணில் இருந்த சினமும், மின்னிய தேகம்  வெற்றிக்களிப்பில் சிறுது சிறிதாக மந்தமாகி மாயமும் ஆனது. தனக்கு  நினைவு  தெரிந்த நாள் முதல் ஏற்படும் மாற்றம் என்பதால் அதை பொருட்படுத்தாது சமிக்ஞை மொழியால் தன் புரவியை அழைக்க, காற்றை கிழித்து கொண்டு வாகீரம் இனத்தை சார்ந்த போர் குதிரை பாய்ந்து வந்ததா? பறந்து வந்ததா? என்று எண்ணும் அளவிற்கு வேகமாக அவன் முன் வந்து நின்றது. 

“வாகா பார்த்தாயா! இன்றும் உமது தமையன் தான் வென்றேன், எங்கே சென்றாய் அதற்குள். அந்த கரியனை கண்டதும் அவ்வளவு வேகத்தில் எங்கு சென்றாய்? அப்படி என்றால் உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை அப்படி தானே? உன் மேல் நான் கோவமாக உள்ளேன் செல் இங்கிருந்து” என்று முகத்தை திருப்பி கொண்டு சில அடிகள் நடந்தான் உக்ரசாயி ரணதீரன்.

அவன் சென்றதும் சத்தமாக கனைத்து அவன் பின்னே பாய்ந்து வந்தது அவனின் வாகா. 

“இனி இவ்வாறு நீ செய்தாய் என்றால், உன்னிடம் பேச மாட்டேன்” என்று அவன் பொய்யாய் மிரட்ட, அவன் முகத்தோடு அதன் முகத்தை தேய்த்து தன் அன்பை வெளிப்படுத்தியது அவன் தம்பியாக எண்ணும் அவனது வாகா. 

“சரி நாழி ஆகிவிட்டது அன்னை நம்மை தேடுவார்” என்று போர் பயிற்சி செய்து இரும்பாக உரமேறிய அவனது உடலை ஒரே உந்தலில் அதன் மீது ஏறியவன் புறப்படு என்று கட்டளையிட காற்றை கிழித்து பாய்ந்தது வாகா. 

“ஆழினி இங்கு என்ன செய்துக்கொண்டிருக்காய்?  உனது திருமணத்தை பற்றி அன்னையும் தந்தையும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயோ அந்த ஆதவனை விழுங்கி விடுவது போல் வெறித்துக் கொண்டு இருக்கிறாயே? என்ன ஆயிற்று தமக்கையாரே?” என்று அவள் கன்னம் பற்றினாள் இளவெயினி. 

“இளவெயினி என்னாயிற்று உனக்கு? வழமையாக நானல்லவா உன்னிடம் கேள்விக்கணைகளை தொடுப்பேன். இது என்ன விளையாட்டு?” என்று அவள் காதை திருகினாள் ஆழினி மைவிழியாள்.

“தமக்கையாரே! விட்டுவிடுங்கள் என் காதை, தெரியாமல் தங்களிடம் கேள்வி எழுப்பி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று முகத்தை சிறிதாக மாற்றி அவள் பேசிய விதத்தில் அவள் காதில் இருந்து கையை எடுத்தாள் ஆழினி.

“எமது பெயர் சொல்லும் அளவிற்கு எனது தங்கை வளர்ந்து விட்டாள், என்று ஆச்சர்யமாக இருக்கிறது இளவெயினி. இன்றும் அன்னை கையில் இருந்து உன்னை வாங்கிய அந்த நிமிடம் என் மனதில் பசுமரத்தாணியை போல் ஒட்டி இருக்கிறது கண்ணம்மா” என்று அவள் தலையை வருடினாள். 

“தமக்கையாரே! தங்களது திருமணத்தை பற்றி தாங்கள் ஏதாவது கனாக்கண்டுள்ளீரா?” என்று ஒரு வித துள்ளலோடு கேட்டவள் காதை திருக கையை உயர்த்தியவள் கையை பிடித்து நிறுத்தினாள் இளவெயினி. 

“தங்களுக்கு எனது காதின் மீது அப்படி என்ன மையல், இழுத்து தங்களிடமே வைத்துக் கொள்ள அத்தனை ஆர்வமாக கையாடல் செய்ய முனைகிறீர்கள். இது எல்லாம் சரியில்லை தமக்கையாரே. நான் அன்னையிடம் செல்கிறேன்” என்று புள்ளிமானை போல துள்ளி ஓடினாள். 

“பார்த்து செல் இளவெயினி, எங்காவது விழுந்து விட போகிறாய்” என்று ஆழினி கத்தியது காற்றில் தான் கரைந்தது. 

அவள் சென்றதும், சிறிது நேரம் இயற்கையை ரசித்தவள், தன் தந்தையை காண சென்றாள். 

ஆதவன் தன் கடமையை ஆற்றி முடித்து இல்லம் சென்று விட நிலவு மகள் தன் பணியை தொடர வந்துவிட்டாள். 

பல மணி நேர பயணத்திற்கு பிறகு அரண்மனையை அடைந்தவனை, வாயிலிற்கே வந்து வரவேற்றார் நன்முல்லையார் நாட்டின் அரசி வசுந்தரா தேவி.

“அன்னையே தாங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டுமா? சிறிது நேரத்தில் நானே உங்களை காண வந்திருப்பேன் அல்லவா?” என்றான் உக்ரசாயி ரணதீரன்.

“நாட்டிற்கு ராணியாக இருந்தாலும் உனக்கு நான் அன்னை அல்லவா. இரண்டு நாட்களாக உன்னை காணாமல் மனம் சொல்ல முடியாத வேதனையில் உழன்றது. படை வீரர்கள் வேண்டாம் தனியாக தான் செல்வேன் என்று பிடிவாதம் செய்து சென்றாய். உன்னிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சற்றுநேரத்திற்கு முன்பு தான் ஒற்றன் மூலம் நீ நாடு திரும்பிகிறாய் என்று தெரிந்தது. ஆதலால் உனை காண இங்கேயே வந்துவிட்டேன் உக்ரசாயா.”

“மன்னிக்கவும் அன்னையே வேட்டை ஆடுவதில் மனம் லயித்திருக்க மற்றத்தில் எதிலும் கவனம் செல்லவில்லை. வாருங்கள் அரண்மனைக்கு செல்வோம்” என்று அவரை அழைத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி விரைந்தான். 

தனக்குள் ஆயிர அதிசயத்தை புதைத்து வைத்திருக்கும் பவளக்கரை என்று அல்லாமல் இன்று பிரகாசமாக ஜொலித்தது. கிட்டத்தட்ட இருபத்தியொரு ஆண்டிற்கு பிறகு காட்டில் தன்னை மறைத்து வைத்திருக்கும் அந்த அதிசய நகரம் தன் வாயில் கதவை திறக்கும் நன்நேரத்திற்காக காத்திருந்தது. 

நாட்டு மக்களில் பலருக்கு வனத்தில் இப்படி ஒரு மாய நகரம் மறைந்திருக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்த சிலரும் அது வெறும் கட்டுக்கதை என்று நம்பினர். 

அந்நாட்டில் வசிக்கும் ஒரு சில மந்திர தந்திரம் தெரிந்த சொற்பவர்களுக்கு மட்டுமே இந்த மாய நகரின் அருமை பெருமை அனைத்தும் தெரியும்.

அனைத்தும் தெரிந்து என்ன பயன்?  வனத்திற்குள் இருக்கும் அம்மாய நகரத்தின் வாயிலை தேடிச் சென்ற அனைவரும் மர்மமான முறையில் இறந்தும் காணாமலும் மறைந்தனர். இந்த அச்சத்தால் வானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போட்டிருந்தார், திரிசல நாட்டின் மன்னன் எழினியாதன். 

இருப்பினும் சித்து வேலைகள் தெரிந்த ஆசாமிகள் விரும்பியே அந்த மரண வாயிலை தேடி திரிக்கின்றனர்.

கானகத்தில் தன்னை ஒளித்து வைத்திருக்கும் அந்நகரம், தங்களது சொந்தமான பொருளிற்காக இருபத்தியொரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தங்களை வெளிப்படுத்த காத்திருக்கிறது. 

‘வருவாய் நீயே என்னிடம், நின் வதனம் முழுவதும் இந்த பவளக்கரையிற்கே சொந்தம். உனை சொந்த கொள்ளயிருக்கும் அந்த மாயனும் இந்த நகரத்திற்கே சொந்தம். 

உனை ஒளித்து மறைத்து வளர்த்தால் என்னால் உனை நெருங்க முடியாது என்று உன்னை வளர்ப்பவன் போட்ட கணக்கு தப்பு என்று அவனுக்கு புரிய வைக்க நீயே வருவாய், உன்னை எனக்கு அர்ப்பணித்து. வெகு நாட்கள் இல்லை அதற்கும். 

உனது ராஜாங்கத்தை விட அனைத்திலும் மேலோங்கிய இந்நகரத்தை ஆள நீயே வருவாய் உன் பாதியை அழைத்துக் கொண்டு’ என்று வயதின் மூப்பு முகத்தில் தெரிய, நிலவை பார்த்தவாறு மனதில் சூளுரைத்தாள் அந்த நகரின் மூடி சூடா அரசி மந்திர தாரகை. 

“உனது முகத்தில் தெரியும் அந்த பிரகாசத்திற்கு காரணம் அவள் தானோ? உன்னை தேடி அவள் வருவாள். கவலையின்றி நித்திரை கொள் மந்திரா” என்று அவள் அருகே வந்தார் அங்கதன். 

“அரசே அவள் வரும் நாள் வெகு தூரம் இல்லை அல்லவா? அவளை என் கண் முன் வைத்து பாராட்டி சீராட்டி, நான் வைத்து கொள்ள நினைப்பது தவறா?” என்றாள் மந்திர தாரகை. 

“நீயும் தவறு இழைக்கவில்லை அவர்களும் தவறு இழைக்கவில்லை. விதியின் வசத்தில் நாம் அனைவரும் அன்று ஒரு நாள் ஒரே நேர் கோட்டில் பயணித்து. இத்தகைய இன்னலுக்கு தள்ளப்பட்டு விட்டோம். கவலை கொள்ளாமல் நீ உறங்கு” என்று தான் இந்நகரத்தின் அரசன் என்று மறந்து தன் மனையாளின் தலையை கோதினார் அங்கதன்.

‘இத்தனை ஆண்டு நான் காத்திருந்தது நீ ஆளப்போகிறதை பார்க்கவா? மாய வாயில் உனக்கு மரண வாயிலாக மாறி உன் உயிரை பிரிக்கவில்லை என்றாலும் என் கையால் உனை வதைக்க காத்திருக்கிறேன் இளவரசி’ என்று அந்த கோட்டை அதிரும் அளவிற்கு சிரித்தான் அவன். 

எத்தனை வருடங்களாக அரியசானத்தை பிடிக்க எம் வம்சம் பாடுபடுகிறோம் ஒவ்வொரு முறையும் உங்கள் கண்கட்டு வித்தைகளை கட்டி எங்களை ஏமாற்றுவது போல் இம்முறை நடக்காது’ என்று இடிப்போல் தன் அடியை கோட்டைச் சுவரில் இறக்க அந்த இடம் விரிசல் விட ஆரம்பித்தது. 

உறங்கி கொண்டிருந்தவள் அருகே அசரீரி போல் கேட்க கண்ணை விழித்தாள் ஆழினி. 

“என்னை தேடி வா மைவிழி, வெகுநாட்களாக காத்திருக்கின்றேன். வாராயோ எனை காண” என்று ஒரு பெண் குரல் கேட்க நன்றாக கண்ணை விழித்து பார்க்க காலை புலர்ந்து கொண்டிருப்பதை கண்டாள். 

‘யார் பேசியது? கனவா இல்லை எனது பிரம்மையா?’ என்கிற யோசனையில் எழுந்தாள் ஆழினி. 

தொடரும்…….. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    13 Comments

      1. Author

        Thank u sis 😍😍😍😍

    1. உங்களிடம் இப்படி ஒரு காவிய படைப்பை வெகு நாட்களாக எதிர்பார்த்தேன்.

      1. Author

        நனி நன்றி 🙏🙏🙏🙏🙏

    2. சூப்பர் ஆரம்பம் கா 😍😍, ஓரே ஒரு டவுட்டு பவளக்கரைங்கிறது வேற திரிசல நாடுங்கிறது வேற அப்படி தானே. எதுக்கு அந்த ராணியோட மகளே தூக்கிட்டு போய் வளர்க்குறாங்க அவங்க பேசுறதுலயிருந்து அது ஆழினின்னு தெரியுது.

      1. Author

        ஆமாம் டா இரண்டுமே வேறு வேறு. முடுச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் 🥰🥰🥰🥰🥰

    3. ஆரம்பமே அருமை🥰..
      மொழியாடல் மிக சிறப்பு.😍.

      1. Author

        நனி நன்றி sagi😍😍😍😍😍

    4. அருமையான அறிவியல் புனைவு கொண்ட கற்பனை சக்திக்கு அப்பாற்பட்ட கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

      1. Author

        🤩🤩🤩🤩🤩 தங்களின் மேலான கருத்துக்கு நன்றி 🙏🙏🙏

    5. சூப்பர் சுபா பேபி. நல்ல தொடக்கம். உன்னுடைய கதைகளில் இது நான் வாசிக்கும் முதல் கதை. அதுவும் சரித்திரக் கதை. ஆவலாக உள்ளேன் இந்தக் கதையைப் படிப்பதற்கு. 😍😍😍😍

      1. Author

        நன்றி செல்லக்குட்டி. இது என்னோட இன்னோரு பரிணாமமாக பார்க்கும் கதை. தொடர்ந்து படிச்சு உன் கருத்தை சொல்லு டா