Loading

  அத்தியாயம்-4

ஆழினி முன்னே செல்ல அவளை தொடர்ந்து அவளறைக்குள் சென்றான் வர்தமானன்.

மிக நேர்த்தியான அறை, அரண்மனையில் எங்கும் இல்லாத எழில் இந்த அறையில் தென்பட, அதை ரசித்தவாறு அங்கு போடப்பட்டிருந்த அகல் தவிசுவில் அமர்ந்தான். அதற்கு நேர் எதிரே அமர்ந்த ஆழினி அவனை கேள்வியாக பார்க்க ஆழ்ந்த மூச்சை எடுத்து தான் சொல்ல நினைப்பதை இன்றே சொல்லி விட வேண்டும் என்று உறுதியுடன் ஆரம்பித்தான்.

“இளவரசி அவர்களே! நான் கூற போவது நாம் இருவருக்கு மட்டுமல்ல இன்னும் சிலருக்கு தெரிந்த விடயம்.”
“தாங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் உரைக்கலாம். என்னிடம் ஏன் தங்களுக்கு இத்தனை தயக்கம்.”

“இல்லை நான் கூறுவதை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள் என்று எனக்கு சிறு தயக்கம் இருக்க தான் செய்கிறது. இதில் தாங்கள் வெகுவாக சம்பந்தம் பட்டிருந்தாலும் தங்களிடம் இங்குள்ள எவரும் இதை பற்றிய செய்தியை தங்களிடம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். நான் இளவெயினியை மணமுடிக்கும் முன் தாங்கள் நடந்ததை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன். அது இந்நாளாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் கூறுவதை முழுமையாக கேட்டு அதன்பின் முடிவு எடுங்கள் இளவரசி அவர்களே.”

“நீங்கள் என்னவென்று கூறுங்கள் யுவராஜா. நான் பிறகு இதற்கான முடிவை கூறுகிறேன்”

மிழிகளை மூடி தனக்கு தெரிந்ததையும் கேட்டதையும் கூற ஆரம்பித்தான் வர்தமானன்.

“நமது திரிசல தேசம் இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன் எமது நித்தில தேசத்தோடு இணைந்து மாபெரும் சாம்ராஜ்யமாக காட்சியளித்தது.”

வர்தமானன் பேசுவதை உற்று கவனிக்க ஆரம்பித்தாள் ஆழினி.

“நமது தாத்தனர் இளஞ்செழியன் அவர்கள் இவ்வழகிய ராஜ்யத்தை தனியாக கம்பீரமாக ஆண்டு வந்தார். இப்பெரிய தேசத்தின் ஒற்றை யுவராஜாவாக திகழ்ந்தவர் தான் என் மாமன் எழினியாதன். அஸ்திக்கு மகன் ஆசைக்கு மகள் என்று பிறந்தவர் தான் என் அன்னை சம்யுக்தா தேவி .”

“திருமண வயது எட்டியதும் நித்தில தேசத்தின் குறுநில மன்னனான வைரவன் அவர்களின் ஒரே தவப்புதல்வனான எமது தந்தை தனவேந்திரனுக்கும் இந்நாடே நெகிழுமாறு திருமணம் நடத்தினார்.

திருமணம் நடந்த ஒராண்டு நிறைவு பெறும் முன்னே அவர்கள் கையில் தவிழ்ந்துள்ளேன்.

மாமன் அவர்களுக்கு நாடு நாடாக இந்த தேசமே வாயடைக்கும் படி அழகிலும் அறிவிலும் வீரத்திலும் முதன்மையாக விளங்கும் திருசங்கு தேசத்தின் இளைய இளவரசியான செம்பியன் தேவி அவர்களுடன் திருமணம் நடைப்பெற்றது.”

“அழகிய நந்தவனமாக நாட்டையும் நமது குடும்பத்தையும் கட்டி காத்து வந்தார் நம் தாத்தனார்.

திருமணம் ஆன சில நாட்களிலேயே தாத்தா அவர்களுக்கு உடல் நலம் குன்றி போக யுவராஜாவாக இருந்த மாமன் அவர்களுக்கு மகுடம் சூடி இத்தேசத்தின் மன்னனாக அரியாசனத்தில் அமர்த்தினார். அவர் அரசாளும் விதத்தை கண்குளிர கண்ட தாத்தனார் சில திங்களில் உயிர் நீத்தார்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க அந்த நன்னாளும் வந்தது.

மாமன் அவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற்றிருக்க, அதுசமயம் எனக்கும் மூன்றாம் அகவையும் நிறைந்திருந்திருந்தது.

இதனை சிறப்பிக்கும் நோக்கத்தில் வனத்தில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும்  எம்பெருமானுக்கு பூஜையிட வெகு விமர்சையாக  நடத்த முடிவு செய்து, அண்டை நாடான நன்முல்லையாரின் மன்னன் மற்றும் அவரது குடும்பத்தை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்தார் அரசர்.

இரு நாட்டு படைகள் சூழ மகழ்ச்சியை மட்டும் தத்தெடுத்து கானகம் நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தினர் என்று அன்று நிகழ்ந்த நிகழ்வை ஆழினியிடம் வர்தமானன் கூற ஆரம்பித்தான்.

அதே சமயம் நன்முல்லையார் அரசி தன் மனக்கவலையை அரசரிடம் பகிர்ந்து கொள்ள அங்கு வந்த ரணதீரனும் அதை கேட்க அந்த இடத்திலேயே நின்று விட்டான்.

“அரசரே அன்று நாம் அங்கு சென்றிருக்க கூடாது. அந்த நாள் இன்னும் மூன்று நாட்களில் வரவிருக்கு என்று நமது தேசத்தின் கைத்தேர்ந்த மாந்திரீக குரு சந்திர ராகவர் கணித்துள்ளார். எனக்கு ஐயமாக உள்ளது.

தவமாக தவமிருந்து நான் பெற்ற மகனை அந்த கானகத்திற்கு தாரைவார்கவா? என்ன நடந்தாலும் சரி என் மகனை இங்கிருந்து அழைத்து செல்ல நான் விடமாட்டேன்.”

“வசுந்தரா என்ன பேசுகிறாய் அன்று அந்த அசரீரி பேசியதை கேட்டாய் அல்லவா? இருபத்தியொரு ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் சத்துரு நாட்டில் வளரும் இளவரசியுடன் அன்றே அவளது பாதியாகிய நம் மைந்தன் மாய நகருக்குள் பிரவேசிப்பான் என்று”

“தாங்களே இவ்வாறு கூறலாமா? இந்த உண்மை அவனுக்கு தெரியவரக் கூடாது என்று தானே நான் அவனை தூரமாக இருந்த குருக்குலத்திற்கு பயில அனுமதித்தேன். உலகில் இருக்கும் அனைத்து மந்திர தந்திர கலைகளையும் பயிற்றுவித்தேன்.”

“அன்னையாக உனது நிலை எனக்கு தெரிகிறது. ஆனால் நம் கையை மீறிய இந்த விடயத்தை எப்படி கையாளுவது என்று எனக்கும் தெரியவில்லை. இந்த இருபத்தியொரு ஆண்டுகளாக நானும் போகாத கோவில் இல்லை கேட்காத மாந்திரீகர்கள் இல்லை. அனைவரின் பதில்களும் ஒன்று போல, அந்த நகரத்திற்குள் சாதாரண மனிதர்கள் பிரவேசிக்க இயலாத காரியம். இதுவரை தங்களோடு இருந்தவர்கள் பலர் அந்த நகரத்தை தேடி சென்றுள்ளனர். அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்ன நடந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு சக்தி எட்ட நின்று உதவுகிறது அதனால் தான் எங்களை போன்றவர்களுக்கு அப்பெண் தற்போது வரை எட்டாக் கனியாக இருக்கிறாள்.

அவளது பாதுக்காப்பு படையில் கூட மந்திர தந்திரம் தெரிந்தவர்கள் தான் உள்ளனர். உண்மை தெரியும் வரை அவளது சக்திகளை அவளால் பயன்படுத்த இயலாது என்று கூறுகின்றார்கள். அந்த நகருக்குள் அந்த பெண்ணோடு செல்வதை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் அங்கிருந்து அவனை வெளியேற்ற அந்த பெண்ணால் முடியும் என்று மூத்த மாந்திரீகர் ஒருவர் என்னை தனியாக அழைத்து இன்று கூறியுள்ளார்.

அப்பெண்னை சந்திக்க வேண்டும் என்று ஒற்றன் மூலம் தூது அனுப்பியுள்ளேன். அந்நாட்டு மன்னன் உத்தரவு அளித்தால் நாம் இருவரும் அப்பெண்னை சந்தித்து உதவுமாறு கேட்கலாம்” என்றார் நன்முல்லையார் மன்னன் சித்ரவர்மன்.

“உக்ரசாயிற்கு இது இறுதி வரை தெரியாமலேயே போகட்டும் மன்னா”

“அன்னையே எதை நான் தெரிந்துக் கொள்ளக் கூடாது” என்று உள்ளே வந்தான் உக்ரசாயி ரணதீரன்.

தாங்கள் எதை இத்தனை நாட்கள் மறைத்து வளர்த்தோமா அது தங்கள் வாயால் தாங்களே கூறுவோம் என்று இருவரும் நினைத்திருக்கவில்லை.

முதலில் சுதாரித்த சித்ரவர்மன், “வா உக்ரசாயு காலை உணவு உட்கொண்டாயா? அல்ல உனது தம்பி வாகாவுடன் எங்காவது செல்ல முடிவு செய்து வந்திருக்காயா?”

தன்னை திசை திருப்ப இப்படி பேசுகிறார் என்று உணர்ந்தவன் அவரை ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையே நான் தாங்கள் கூறியதை நம்பவில்லை என்று கூறியது.

அவர் அவனது பார்வையை தடுத்து வேறு திசையில் பார்த்தார்.
“தந்தையாரே தாங்கள் என்னிடம் ஏன் மறைக்கிறீர்கள். தாங்களும் அன்னையாரும் பேசியதை நான் கேட்டேன். என் தேகம் ஜொலிப்பதற்கும் தாங்கள் என்னிடம் மறைப்பதற்கும் ஏதோ ஒன்று பாலமாக இருக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது. என் பால்ய நாட்களை தங்களோடு அல்லாது கலைகளை கற்பதிலேயே கழித்ததுக்கும் அது தான் காரணமாக இருக்குமோ என்ற வினாவும் மனதில் எழுகிறது. என் அனைத்து வினாவிற்கும் தங்களிடம் பதில் இருந்தும் என்னிடம் மறைப்பது ஏனோ?” என்று வரிசையாக கேள்விகளை எழுப்பி அவரை பார்த்தான்.

எது தான் நடக்க கூடாது என்று இத்தனை நாட்கள் தவித்தேனோ அது இன்று நடந்துவிட்டதே என்றதை மனம் தாளாது கால் சரிந்து கீழே அமர்ந்தார் பட்டத்து ராணி வசுந்தரா தேவி.

“அன்னையே! என்னவாயிற்று”

“வசுந்தரா!”

“என் மகன் என்னை பிரிந்து அந்த கானகத்திற்குள் செல்ல போவதை என் கண்களால் காணப் போகும் நாள் வந்துவிட்டது. எந்த உண்மை இவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தமோ அது நம் வாயால் கூறும் நிலை வந்துவிட்டதே!”

“அன்னையே! நடந்து முடிந்ததை கூறினால், நடக்கவிருப்பதை கையாள வழி தேர்வு செய்யலாம். தாங்கள் எதுவும் கூறாமல் என்னிடம் மறைப்பதால் எதுவும் மாறப்போவதில்லை.”

“இதற்கு மேல் உன்னிடம் மறைத்து எந்த வித உபயமும் இல்லை. வசுந்தரா எழுந்து கொள். நடந்ததை அவனிடம் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார் சித்ரவர்மன்.

ஒரு வித கலக்கத்துடன் எழுந்து அங்கு போடப் பட்டிருந்த மஞ்சத்தில் அமர்ந்தார்.

இருவரின் உடல் மொழியில் ஒரு வித கலக்கம் தெரிய அதை கேட்க துடிக்கும் மனதை அடக்கி அவர் கூறுவதை கேட்க ஆரம்பித்தான்.

“உக்ரசாயு தற்போது நமக்கு சத்துரு தேசமாக இருக்கும் திரிசல தேசம் ஒருக் காலத்தில் நமது பாங்கம் தேசமாக இருந்தது. இரண்டு நாடுகளுக்கு நடுவே இருந்த நட்பை பேசிறாதவர்களே இல்லை”.

அப்படிப்பட்ட இரு நாடு இப்படி சத்துருவாக மாற காரணம் அந்த நாள் அந்த ஒற்றை நாள் நம் வாழ்வில் வந்திருக்காமல் இருந்திருக்கலாம். அந்த நாட்டு மன்னன் எழினியாதன் என் உயிர் தோழன். இருவரும் ஓர் உடல் ஈர் உயிராக இருந்தோம். அந்த ஒரு நாளில் எங்கே உன்னை இழந்து விடுவோமோ என்ற ஐயத்தில் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாக போயிற்று.

ஆத்திரத்திலும் பயத்திலும் அரசனாக இருந்தாலும் நிதானம் இழந்து தந்தை ஸ்தானத்தில் இருந்து தானே முடிவு எடுக்க வைத்தது இந்த மனம்.

திரிசல தேசத்தின் அரசர் அரசியின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு வனத்தில் வீற்றிருந்த ஈசனை தரிசிக்க இரண்டு நாட்டு படைச்சூழ சென்றோம் என்று  அன்று நடந்ததை கூற தொடங்கினார்.

************************

இருபுறமும் ஏழிலைப்பாலை மரம்     தன் கரத்தை நீட்டி அவர்களை வரவேற்க, தங்கள் தேன் குரலில் அவர்களுக்கு வாழ்த்து பாடின குயில்கள். அங்குமிங்கும் தாவி தங்கள் இருப்பை குரங்குகள் காட்ட, வரிசையாக பூத்து குலுங்கிய கொன்றை மரம் இவர்களை கண்டு நாண அதை ரசித்த தென்றல் அதனை தொட்டு உறவாட நாணம் தாளாமல் சிதறியது சிறு பூக்களை. அத்தனை எழிலோவியமாக காட்சியளித்த அந்த வெங்கை காட்டின் அழகை ரசித்தவாறு உள்ளே சென்றனர்.

ஆளுமையை கண்ணில் பொருத்தி பொறுமையை முகத்தில் பூசி நடந்து வந்த செம்பியன் தேவியை கண்டதும் தன் கைகளை உயர்த்தி தூக்க சிணுங்கிய மருமகனை முத்து பல் தெரிய சிரித்து தூக்கி அணைத்தார்.

“அண்ணியாரே! தாங்களுக்கு சிரமமாக இருந்தால் என்னிடம் அவனை தந்துவிடுங்கள்” என்றார் சம்யுக்தா தேவி.

அவள் கன்னம் கிள்ளி, “உங்களவரையும் சற்று கவனித்து கொள்ளுங்கள் நாத்தனாரே! பாவம் எனது தமையன், என் மருமகனை தாங்கள் கவனித்து கொள்ளும் போது அவர் கண்ணில் எப்போழுதும் உங்கள் மீது படியும் மையாலான பார்வை பொறாமையாக மாறுவது எங்களுக்கு கண்ணாடி போல் தெரிகிறது.”

செம்பியன் தேவியின் பேச்சில் மஞ்சள் முகம் இளஞ்சிவப்பாக மாற, அதை நெட்டி எடுத்து அவரை தனவேந்திரனுடன் தனிமையாக விட்டு எழினியாதனிடம் வந்தார் செம்பியன் தேவி.

“அரசியாருக்கு மற்றவர்கள் ஏக்கமும் காதலும் புரியும் அளவுக்கு உற்றவனின் காதல் புரியவில்லை போலும்” என்று பெருமூச்சை விட்டு தன் மருமகனை வாஞ்சையாக உறங்க தட்டிக் கொடுத்தார் எழினியாதன்.

அவர் கூறுவது புரிந்தாலும் அவரை காணாது வேறு புறம் முகத்தை திருப்பி நடக்க, அவரது பாவனையில் வாய் விட்டு சிரித்தார் எழினியாதன்.

திடீரென்று அவர் உரக்க சிரிக்க அவரிடம் வந்த சித்ரவர்மன், “என்னவாயிற்று இனியா?”

“அங்கு இருக்கும் புல்லை பற்றி உனக்கு தெரியுமா வர்மா?”

“அந்த புல்லில் அப்படி என்ன சிறப்பு விடயம் இருக்கு நீ சிரிக்கும் அளவிற்கு ” என்று அவரை கூர்ந்து பார்த்தார் சித்ரவர்மன்.

முன்னே செல்லும் செம்பியன் தேவி திரும்பி அவர்களை பார்க்க கனிவாக அவரை பார்த்த எழினியாதன்,”இந்த தென்றல் மையலாக புல்லை தழுவும் போது, அதனுடன் ஒன்ற நினைத்தாலும் அதனை விட்டு அதன் திசையில் நகருமாம் அது போல் இருக்கிறது சிலரது செய்கை. அதை நினைத்தேன் என்னை அறியாமல் உரக்க சிரித்து விட்டேன்” என்று அவரது இல்லத்தரசியும் பட்டத்தரசியுமாகிய செம்பியன் தேவியை பார்த்தவாறு அவர் மொழிந்ததை கண்ட சித்ரவர்மன்.

“இனியா உன் குறும்பு பேச்சிற்கு அளவில்லாமல் போய் விட்டது” என்று அவரது மனைவியிடம் சென்றார்.

“தந்தையாரே நான் அந்த குழந்தையோடு விளையாட விரும்புகிறேன் அன்னையை அழைத்து செல்ல பணியுங்கள்” என்று கண்ணை சிமிட்டி கொஞ்சும் மொழி பேசும் நான்கு வயது பாலகன் கேட்பதை எந்த தந்தையால் நிராகரிக்க முடியும்.

“அரசியாரே உக்ரசாயின் விருப்பத்தை நிறைவேற்றாலாமே ஏன் இந்த தயக்கம்”

“தயக்கமில்லை மன்னா சிறிது தொலைவில் ஆலயத்தை அடைந்து விடுவோம் அதன் பின் அவனோடு விளையாடலாம் என்று கூறியும் தங்கள் புதல்வன் தங்களை போல பிடிவாதம் பிடிக்கிறான்” என்று பேச்சுவாக்கில் செல்லமாக தன்னவனையும் பிடிவாதக்காரன் என்று சிரிக்காமல் கூறினார் வசுந்தரா தேவி.

“உக்ரசாயா உனக்கு பரிந்து பேச போய் உன் அன்னை இடையில் என்னையும் திட்டிவிட்டார் ” என்று குறுச்சிரிப்பை ஒன்றை உதிர்த்தார் சித்ரவர்மன்.

“தங்களும் தங்கள் மகனும் சேர்ந்து விட்டால் போதும், என்னை மறந்து விடுவீர்கள்” என்று சற்று பொறாமையுடன் கேட்டார் வசுந்தரா தேவி.

“உன்னை மறவேனடி
எந்தன் உயிர்ப்பு நீயடி
நின் இதழசைவு போதுமடி
என் மனம் சரணடைய” என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் உரைக்க, நாணுமும் காதலும் போட்டி போட்டு அவள் வதனத்தை செம்மையாக்க அவர் கைகளை பிடித்து தனியொரு உலகில் சஞ்சரித்தார்.

மூன்று ஜோடிகள் படைச் சூழ ஆலயத்தை அடைந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். குழந்தைகளை அரசிமார்கள் பார்த்துக் கொள்ள, அரசர்களின் மேற்பார்வையில் சில நிமிடங்களில் அக்கோவில் பூஜைக்கு தயாராகி இருந்தது.

மூவேழு அடி உயரத்தில், ஒற்றை காலை சம்மணமிட்டு, ஒற்றை காலை பூமியில் படரவிட்டு, கங்கையையும் பிறை நிலவையும் சிரத்தில் சுமந்து, தனக்கே உரிய சாம்பல் வாசனையை அவ்விடம் முழுவதும் பரப்பி, கையசைத்தால் உடுக்கை ஒலி அந்த இடம் முழுவதும் நிறையுமோ என்று நம்மை பிரம்மை கொள்ள வைக்கும் அளவிற்கு ஈசன் காட்சியளித்தார்.

இரண்டு வயது நிறைவடைந்த வர்தமானனின் உடல் கூசி எம்பெருமானிடம் தாவ அங்கிருந்த அனைவரும் அதிசயமாக அந்நிகழ்வை கண்டனர்.

அங்கிருந்த சிவனடியார் சங்கை முழக்க, மூன்று தம்பதிகளும் சிவ  மந்திரத்தை பாட, இனிமையாக பூஜை தொடங்கியது. அதே இனிமை பூஜை முடியும் போது அவர்களிடம் இருக்காது என்பதை அறியாது மனதை ஈசனின் பாதத்தில் சமர்பித்து அதில் லயித்தனர்.

உள்ளே சங்கு முழங்க அதற்கு ஜதியாக வெளியே மாரி பொழிய தாளமாக இடி காதை கிழக்க, விழியில் பட்டும் படாததுமாக மின்னியது மின்னல்.

அழகாக ஆரம்பித்த மழைப் பொழிவு நேரமாக ஆக கோரமாக உருவமெடுத்தது. இதை உணராது பக்தியின் பிடியில் சிக்கினர் உள்ளே இருந்தவர்கள்.

பூஜைக்கு நடுவே யாரோ தன்னை அழைப்பது போல தோன்ற பக்தியில் நினைந்தவர்களை கடந்து வந்தான் உக்ரசாயு. அங்கு இருந்த ஒருவர் கண்ணிலும் இவன் அகப்படவில்லையோ என்னும் அளவிற்கு அங்கிருந்து வெளியேறியவன் கண்டது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறுக்கு நடுவே காற்றில் பறந்து வந்த மாயத் தராசை தான்.

அச்சிறு வயதில் என்னவென்று அறிய வெள்ளத்தில் இறங்க காற்றாய் இருந்த அந்த உருவம் அவனை தராசில் மறுபுறத்தில் ஏற்றியது.

ஒரு புறம் பிறந்து சில மணி நேரமாகிய ரோஜா மொட்டு ஒன்று பட்டாடை உடுத்தி மழை நீர் தீண்டாதப்படி மாயக்கவசம் போடப்பட்டிருக்க இமை திறக்காது உறங்கி கொண்டிருந்தது. மறுபுறம் தராசில் என்ன நடக்கிறது என்று புரியாமல் கத்தி அழுகும் உக்ரசாயுவை தாங்கியிருந்தது.

ஒரு காற்று உருவம் அவர்களை பாதுகாக்க, எங்கிருந்தோ மாயத்திரை ஒன்றில் இருந்து எய்தும் கயிறு தராசில் சிக்கி அதை இழுக்க ஆரம்பித்தது. அதை கண்ட உருவம் மனதில் மந்திரா! தமக்கையாரே நின் புதல்விக்கு நின் உதவி தேவை என்று நினைக்க மயக்கத்தில் இருந்தவள் மாய திரை மூலம் காண, கானகத்தில் தன் ரத்தம் படும் துயரத்தை காண முடியாது தன் சக்தியை அவளுக்கு கடத்த அந்த நேரம் உறக்கத்தில் இருந்த பிஞ்சின் கை அழும் உக்ரசாயுவின் கையை தீண்ட மந்திராவின் சக்தி இருவரையும் அடைந்தது.

அந்த மாயக்கயிறு அறுந்து இவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. உருவமில்லா அந்த காற்று உருவம், காற்றில் கரைய ஆரம்பிக்க. மந்திரா சாம்பவி என்று உரக்க கத்த, அந்திரத்தில் தராசு மிதந்தது நான் கைவிட மாட்டேன் என்பதை உரைப்பது போல.

என்ன நடந்தது என்று எதுவும் புரியாமல் அந்த முழுமதி ஒளியில் பிள்ளை பெற்ற அவ்வுடலோடு மாய நகரத்தின் வாயிலை நோக்கி வந்தவளை கவர்ந்து சென்றான் வாதவேகன்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Abirami

      செம செம சுபா பேபி. ஸ்டோரி செமயா போகுது. சூப்பரா இருக்கு. படிச்சுட்டே இருக்கனும் போல இருக்கு. சூப்பர் சூப்பர் 😍😍😍😍😍

    2. Archana

      சூப்பர் எபி கா 😍😍😍😍 எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருந்திச்சு🙄🙄 அதுக்குள்ள எதுக்கு அந்த கோணவாய் வாதவேகனே வர வழிச்சு, பவளக்கரை ராணியை கடத்த வெச்சு, தப்பிக்க மந்திர தராசுலே போய்ட்டு இருந்த இளவரசி கூடவே தீரணையும் போக வெச்சு இப்படி அடுத்த என்ன நடக்கும்ன்னு என்ன கமெண்ட் போட வெச்சு உஃப் 🤧🤧 😓😓…..
      இன்ட்ரஸ்டீங்கா போகுது கா🤩🤩🤩🤩 அடுத்த எபிக்கு வெயிட்டிங்.