306 views

வணக்கம் தோழமைகளே,

           என்னை இங்க பல பேருக்கு தெரிய வாய்ப்பில்ல. ஆனா இங்கயுள்ள பலர் படைப்பை நான் படிச்சுருக்கேன். எல்லாருமே நல்ல எழுத்தாளர்கள். மூனு மாசம் முன்னாடி அகவழகியோட டீசர் போட்டதோட சரி அப்புறம் சில பர்ஸ்னல் வேலைகளால அப்டேட் குடுக்கவேயில்ல. மேகவாணிக்கிட்ட முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளாக் ஆரமிச்சப்ப போட்ட டீசர் சில வேலைகளால அப்டேட் போட முடில. இனிமே தாமதிக்க மாட்டேன். அகவழகி ஒரு பொண்ணோட கதை. கேட்டு பார்த்து அனுபவப்பட்ட சில நிகழ்வுகளால ஏற்பட்ட தாக்கத்துல உருவான கதை இது. என்ன மாறி கதைனு போக போக புரியும்னு நம்புறேன். நான் ஆரம்பநிலை எழுத்தாளர் தான். என் படைப்பையும் படிச்சு ஆதரவு தந்து நிறை குறைகள் கூறுமாறு உங்க எல்லாரையும் கேட்டுக்குறேன். இனி நீங்க கதைய படிக்கலாம்.

அத்தியாயம்- 1

 

செங்கதிரோன் முழுதாய் மலை முகடுகளுக்குள் முடங்கிய வேளையில் மகிழுந்து அச்சிறிய அழகிய வீட்டின் முன் நின்றது. உறங்கியிருந்த அதிரனை தூக்கிக் கொண்டு இறங்கிய அகவழகி வாசலில் காத்திருக்கும் அவனைக் கண்டதும் எழுந்த கோபத்தோடு நிரஞ்சனை முறைத்தாள்.

அவசரமாக இறங்கிய நிரஞ்சன் பதறி, “அழகி முறைக்காத. நான் வரச் சொல்லல. டேய் ஏன்டா என் உயிரை வாங்குறதுக்குனே வருவியாடா. ஏற்கனவே நீ பத்த வச்சதே இன்னும் அணையாம குபுகுபுனு எரியுது. இன்னும் அதுல எண்ணெய் விட்ற மாதிரி வந்து நிக்கிற. என் மேல கொஞ்சம் கூட இரக்கம் இல்லையாடா உனக்கு.”, அழகியிடம் தொடங்கி அவனிடம் பல்லைக் கடித்து வார்த்தைகளை துப்பி முடித்தான்.

“அடச்சீ தள்ளு.”, என்று அவனின் பாதை மறித்த நிரஞ்சனை ஒரு கையால் தள்ளி, “வெல்லக்கட்டி தூங்கிட்டானா!? என்ன அழகி மா நீ? அவன் பிறந்த நாளுக்கு நான் இன்னிக்கு ட்ரஸ் கொண்டு வரேன்னு சொல்லிர்ந்தேன். ரொம்ப எக்ஸைட்டடா இருந்தான் வெல்லக்கட்டி. நீ இப்படி அவன தூங்க வச்சுட்டியே.”, அகவழகியின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த அதிரனின் தலைக் கோதியபடி அவன் உரைத்தான்.

“பேசியே அவன எழுப்பி விட்றாத. ட்ரஸ் தானே குடுக்க வந்த என்ட்ட குடுத்துட்டு போ.”, என அவனை முறைத்தாள்.

“ஓகே இந்தா.”, பையை நீட்டியவன் சட்டென்று பின்னிழுத்து, “என் வெல்லக்கட்டிக்கு ட்ரஸ் பிடிச்சிருக்கானு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லணும் ஓகேனா தரேன்‌. இல்லனா நானே வெல்லக்கட்டி முழிக்கிற வரை வெயிட் பண்ணி குடுத்துட்டு போறேன்.”, வேண்டுமென்றே வம்பு செய்தான்.

“ஃபோன் தானே பண்ணி தொலைக்கிறேன்.”, அவனின் இம்சை விட்டால் போதுமென்று கடுப்பில் வார்த்தைகளை கடித்து துப்பி அவனிடமிருந்த பையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

“ம்ம் அது. நீ ஃபோன் பண்ணல நாளைக்கு காலைல நீ என் மூஞ்சில தான் முழிக்க வேண்டியிருக்கும் அழகி.”, புருவம் உயர்த்தி தோள் குலுக்கி புன்னகைத்தவனை கண்டு அவளின் கோபம் எல்லை மீறிக் கொண்டிருந்தது.

“அடேய் எல்லை மீறி போரடா. கதிரவா உனக்கு கட்டம் சரியில்லை.”, மனதில் நினைத்த நிரஞ்சன், “அடேய் கிரஹம் புடிச்சவனே. அதான் குடுத்துட்டல்ல கிளம்புடா ராசா உனக்கு புண்ணியமா போகும்.”, கதிரவனின் கையைப் பிடித்து இழுத்தான்.

“இப்ப கிளம்புறேன். ஆனா நீ ஃபோன் பண்ணலனா… நான் சொன்னா செய்வேன்னு உனக்கு தெரியும். அப்றம் உன் இஷ்டம்.”, புன்னகையோடு தோளை குலுக்கிய கதிரவன் மேல் எழுந்த கோபம் ஒட்டு மொத்தமாக இடையில் புகுந்த நிரஞ்சன் மீது திரும்ப அவனை எரித்து விடுவது போல் முறைத்தாள்.

“டேய் கிளம்புடா.”, நிரஞ்சன் கதிரவனை பிடித்து தள்ளாதக் குறையாகக் கூற,

“பை அழகி செல்லம். இப்ப கிளம்புறேன்னு நீ கவலைப்பட்றது உன் கண்ணுல தெரியுது. மாமா காலைல வரேன் செல்லம்.”, கண்ணடித்து சிரித்து “டேய் மச்சான் வரேன் டா தங்கச்சிய பத்திரமா பார்த்துக்கோ.”, நிரஞ்சனின் தலையில் தட்டிவிட்டு தன் வண்டியை உயிர்ப்பித்து கதிரவன் கிளம்ப,

“போடா டேய் அப்பா போ.”, தலையை தடவி கும்பிடு போட்டு திரும்பிய நிரஞ்சன் வெடிக்கும் எரிமலையாய் நின்றிருந்த அகவழகியை கண்டு எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

“ஆத்தி கடுகு போட்டா பொறிஞ்சுரும் போலயே. சிக்கி சின்னா பின்னமாகுறதுக்குள்ள தப்பிச்சிர்றா நிரஞ்சா.”, மனதினுள் எச்சரிக்கை மணி அடிக்கவும் “சரி அழகி நீ ரொம்ப கோவமா இருக்க. நான் நாளைக்கு வரேன். அதி குட்டிய உள்ள தூக்கிட்டு போ பனில நனைஞ்சா அவனுக்கு சளி புடிக்கும்ல. நான் கிளம்புறேன். காலைல வரேன்.”, என்றவன் நில்லாமல் மகிழுந்தின் அருகில் சென்றான்.

அவனை தீயென முறைத்துவிட்டு தன்னிடமிருந்த சாவி மூலம் வீட்டைத் திறந்து உள்ளேச் சென்றவள் கதவை அறைந்து சாற்ற, நிரஞ்சனுக்கு அவன் கன்னத்தில் அவ்வறை விழுந்தது போன்றதொரு பிரம்மை. தலையைச் சிலுப்பிக் கொண்டவன் பெருமூச்சோடு மகிழுந்தை உயிர்ப்பித்து இயக்கினான்.

உள்ளேச் சென்ற அகவழகி அதிரனை மெத்தையில் கிடத்தி கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்த அவனின் முகத்தினைக் கண்டு கவலைக் கொண்டாள். இம்மாதிரி ஆகும் சமயங்களில் அதிரனை தேற்றி இயல்பிற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகிவிடும். ஆகையால் எப்படியேனும் அவனை நாளை மறுநாள் வரும் அவனின் பிறந்தநாளிற்குள் இயல்பாக்கிட வேண்டுமென்னும் பெரும் பொறுப்பு அவள் முன் நிற்க மனதின் கவலையை ஒதுக்கிட முனைந்தாள். நேற்று எவ்வளவு மகிழ்வாக இருந்தான். இன்று இப்படி ஆகிவிட்டதே! என்ற வேதனை அவள் முகத்தினில் படர்ந்தது. அவளின் நினைவு முதல் நாள் நடந்த நிகழ்வுகளுக்குப் பயணப்பட்டது.

         ஒளியோனின் கிரணக் கைகள் வான்மகளின் மேல் இளமஞ்சள் குழைத்துப் பூசிட, அவர்களின் இணக்கத்திற்கு இடையூறாய் இருக்க விரும்பாத முகில்கள் வேறு யாரும் இடையூறு தந்திடா வண்ணம் மென்பனித் திரையை விரித்து விட்டு உற்சாகம் பொங்கப் பசுமையாடைப் போர்த்திய மலைமகளின் மேல் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. 

           மலைகளின் அரசியான கொடைக்கானலில் இவ்வழகியக் காலை வேளையை நாள் தவறாதுக் கண்டுக் களித்திடும் அவளின் அதரங்களில் மென்னகைத் துளிர்த்திருக்க, கைகள் குளிருக்கு இதமாய் போர்த்தியிருந்த சால்வையைப் பற்றியிருந்தன. இமை மூடி நாசிக்குள் காற்றை இழுத்து விட்டவளின் வதனத்தில் நிம்மதியின் சாயல். இமைத் திறந்து மீண்டும் ஒருமுறை பார்வையை இயற்கையில் பதித்தவளின் முகத்தினில் வைராக்கியம் குடிக்கொள்ள, திரும்பி வீட்டிற்கு நடையிட்டாள்.

            வீட்டிற்கு அருகே இருக்கும் சிறு குன்றின் மேல் விடியலில் சென்று நின்றுக் கொள்வதும் ஒளியோன் தான் வந்து விட்டதைத் தெரிவித்தப் பின்னே வீடு திரும்புவதும் கொடைக்கானலுக்கு வந்த நாள் முதல் அவளது வழமையாய் போயிற்று. நித்தமும் அங்குச் சென்றாலும் அக்குன்று முழுதும் பரந்திருக்கும் புற்பாயின் மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் கால் வழியே உட்புகுந்து மனதின் அழுக்குகளை நீக்குவதாகத் தோன்றும் உணர்வினால் அவள் ஆச்சர்யம் கொள்வதும் நித்தமும் நிகழ்ந்தேறும் நிகழ்வு.

             வீட்டிலிருந்துப் பார்த்தாலே இவ்வெழிலானக் காட்சி கண்களுக்கு விருந்தாகுமேயானாலும் அவளுக்கு அக்குன்றின் மேல் நின்று காண்பதே அலாதி இன்பம். 

           ஐந்து நிமிட நடையில் இருக்கும் வீட்டை மெல்ல நடந்து பத்து நிமிடத்தில் அடைந்தவள் வாசலில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள். உறங்கிக் கொண்டிருக்கும் அப்பிஞ்சின் அழகை இரசித்தவள் உறக்கம் கலையா வண்ணம் குழந்தைக்கு முத்தமிட்டு அடுக்களைக்குச் சென்றாள்.

             பின் தன் அன்றாட சமையல் வேலைகளை முடித்து பாத்திரம் கழுவி எடுத்து வைக்கையில் “அழகி” என்ற இனிமையானக் குரல் செவித் தீண்டவும் அப்படியே வேலையை நிறுத்திவிட்டு உதட்டில் மென்னகைத் தவழ படுக்கையறைக்குச் சென்றாள்.

            தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கி அழகாய் அமர்ந்திருந்தவனின் அருகேச் சென்று “அதி குட்டி எழுந்தாச்சா.” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

           “ம்ம். இன்னிக்கு கோவிலுக்கு போகணும் தானே அழகி.”, அதி.

            “ஆமா தங்கம். அதி குட்டி சீக்கிரம் ப்ரஷ் பண்ணிட்டு வாங்க. அழகி அதிக்கு சூடா பாதாம் பால் கலக்கி வைக்கிறேன். குடிச்சுட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்பலாம்.”, அகவழகி கூற வேகமாக தலையசைத்து சிரித்து விட்டு குளியலறை நோக்கி ஓடிய அதியை புன்னகையோடு பார்த்திருந்த அழகி பால் கலக்க அடுக்களைக்கு விரைந்தாள்.

            அதி பல் துலக்கிவிட்டு வெளியே வர, அழகி சூடாக அவனுக்கு பாதாம் பாலும் தனக்கு குளம்பியும் கலந்து வைத்திருந்தாள்‌. இருவரும் வீட்டின் முன் வேப்ப மரத்தடியில் இருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தனர்.

           “அழகி நான் போன பர்த் டேக்கு எடுத்த ட்ரெஸ் போட்டுக்கட்டுமா.”, அதி.

           “போட்டுக்கோ குட்டி. ஸ்மார்ட்டா ஹேன்ட்ஸமா இருப்ப.”

            “ஹை ஜாலி. அழகி கோவிலுக்கு போய்ட்டு என்னை எங்க கூட்டிட்டு போவ. இன்னிக்கு லீவ்ல.”

             “லீவ மறப்பேனா. எப்பவும் உன் சாய்ஸ் தானே நீயே சொல்லு எங்க போலாம்.”

              “ம்ம்.” என்று முகவாயில் விரல் வைத்து தீவிரமாக சிந்திந்த அதிரனின் அழகில் மயங்கி மென்னகைத்த அகவழகி அவனின் ஆசையை நிறைவேற்றிடும் ஆவலோடுக் காத்திருந்தாள்.

             “கவியோட விளையாட கூட்டிட்டு போறியா. தாடி தாத்தாவோட கதையும் கேக்கலாம்.” என்று விழிகள் விரிய கேட்ட அதிரனின் எதிர்பார்ப்பை சரியென்று தலையசைத்து நிறைவேற்றினாள் அழகி.

             “ஹைய்யா ஜாலி.” என்று கத்தியபடி ஊஞ்சலிலிருந்து குதித்த அதிரன் வீட்டிற்குள் ஓட, அகவழகியும் சிறு புன்னகையோடு அவனைத் தொடர்ந்தாள்.

              பால் குடித்த கோப்பையைக் கழுவி வைக்கும் அதிரனை பார்த்த அகவழகியின் உதடு புன்னகைப்பது போல் இருந்தாலும் கண்களில் வைராக்கியமும் உறுதியும் மின்னியது.

              இருவரும் குளித்து தயாராகினர். அழகி அதிரனை சாப்பிட அழைக்க, இள ஊதா டீஷர்ட்டும் அதன் மேல் வெள்ளை நிற குளிரங்கியும் கருப்பு ஜீன்ஸூம் அணிந்து வந்தவனை கண்கள் விரியக் கண்ட அழகி, நெட்டி வழித்து,

          “ஹேன்ட்ஸம் பாய். சரி வா வந்து சாப்பிடு. சீக்கிரம் போகணும்ல.”, என்று கூற,

          “யூ டூ லுக் ப்யூட்டிபுல் இன் திஸ் ப்ளூ சேரி அழகி.” என்று பெரிய மனிதன் போல் கூறி சாப்பிட அமர்ந்த அதிரனை வாய்ப்பிளந்து பார்த்த அழகி பின் சிரித்து,

         “தேங்க் யூ வாலு கூட்டி. சாப்பிடு வேகமா.” என்று இட்லியும் அதிரனுக்கு பிடித்தப் புதினா துவையலும் தட்டில் வைக்க, அதிரன் அமைதியாய் தட்டில் கவனமானான்.

          தனக்கு தட்டில் உணவெடுத்து வைத்த அகவழகிக்கு எண்ணங்கள் பின்னோக்கிச் செல்ல, அவளின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது. சில நொடிகளில் தான் கொண்ட வைராக்கியத்தால் இறுக்கத்தை உதறி உணவை உட்கொள்வதில் கவனம் பதித்தாள்.

          இருவரும் உணவு உண்டு முடித்து கிளம்பி, வீட்டை பூட்டிவிட்டு வெளி வந்து வண்டியை எடுக்கையில், வீட்டின் முன் வந்து நின்ற சிவப்பு நிற மகிழுந்தைக் கண்டதும் அதிரன் “ஹை டார்லிங் வந்தாச்சு.” என்று கத்தியபடி உற்சாகமாய் மகிழுந்தை நோக்கி ஓடினான். அகவழகியும் வண்டியை எடுக்காது அப்படியே நின்றாள்.

         மகிழுந்திலிருந்து இறங்கிய ஆடவன் முகங்கொள்ளா புன்னகையோடு “ஹாய் டார்லிங்.” என்று அதிரனை கையில் அள்ளிக் கொண்டு அகவழகி நின்ற இடம் வந்தான்.

         “ஹாய் அழகி கிளம்பியாச்சா. நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்துட்டேன்.”

         “ஹாய் நிரஞ்சன். நீங்க வருவீங்கனு தெரிஞ்சுருந்தா இன்னும் சீக்கிரம் கிளம்பியிருப்பேன்.” என்ற அழகியை ஏன் என்பது போல் நிரஞ்சன் பார்க்க, அழகி என்ன என்பது போல் பார்க்க, நிரஞ்சன் பெருமூச்சு விட்டான்.

        “நான் உன்னை பார்க்க வரல. நான் என் டார்லிங் கூப்டதுனால டார்லிங்க கூட்டிட்டு கோவிலுக்கு போகலாம்னு தான் வந்தேன் மிஸ்ஸஸ். அகவழகி.”

        “அதிரன் என் பர்மிஷனில்லாம யார் கூடவும் வரமாட்டான் மிஸ்டர். நிரஞ்சன்.”

        “அப்போ உன் பர்மிஷனோட தான் என்னை வர சொன்னானா? ஏன் டார்லிங் அப்பிடியா.” என்று தூக்கி வைத்திருந்த அதிரனை பார்த்தான்.

        அகவழகியை பாவமாய்ப் பார்த்த அதிரன், “இல்ல டார்லிங்.” என்க, நிரஞ்சன் அழகியை கண்டு இப்ப என்ன சொல்ற என்பது போல் புன்னகைக்க, அகவழகி அதிரனை முறைக்கவும் அதிரனின் முகம் சுருங்கியது.

          அதிரனின் முகவாட்டத்தைக் காணவியலாத அகவழகி கோபத்தைக் கைவிட்டு, “ஏன் அதி குட்டி.” என்று உள்ளெழுந்தக் கவலையை உள்ளிழுத்து வினவிட,

         “சாரி அழகி. டார்லிங் பாவம். போன தடவை டார்லிங் வந்தப்ப நான் நாம போற கோவில் பத்தி பக்கத்துல இருக்குற பால்ஸ் பத்திக் கேட்டேன் டார்லிங்கு தெரியவேயில்ல அங்க போனதேயில்லனு சொன்னாரு. நாம இன்னிக்கு கோவிலுக்கு போறோம்ல அதான் டார்லிங்கையும் நம்ம கூட கூட்டிட்டு போய் பால்ஸ்ல விளையாடலாம் ஜாலியா இருக்கும்னு வர சொன்னேன். டார்லிங் லீவ்ல தனியா தான் இருப்பேன்னு சொன்னாரு. பாவம் தானே இன்னிக்கு நம்ம கூட இருக்கட்டும்.” என்று நீண்ட விளக்கமளித்தான் அதிரன்.

        அதிரனின் பதிலில் நிரஞ்சன் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டான். என்றோ ஒரு நாள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறானே! குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்கள் என்பது எவ்வளவு மெய்யென்று நெகிழ்ந்தான். 

         “சரி தங்கம். என்ட்ட சொல்லிற்கலாம்ல டார்லிங்க வர சொன்னத.” என்று சற்று முன் அவன் மேல் கோபம் கொண்டதற்காக வருந்தி அகவழகி கேட்க,

         “நேத்து நைட் நீ ஃபோன் பேசிட்டு வந்தோனே சொல்ல தான் வெயிட் பண்ணேன். அப்பிடியே தூங்கிட்டேன் அழகி. காலைல எழுந்ததும் கவியோட விளையாட போறத நினைச்சுட்டே மறந்துட்டேன். சாரி அழகி.” என்று முகம் வாடிய அதிரனை நிரஞ்சனிடமிருந்து தன் கைகளில் வாங்கிக் கொண்டு,

         “நானும் சாரி அதி குட்டி. அதி குட்டி எவ்ளோ குட் டா யோசிச்சுருக்கீங்க அது தெரியாம கோவப் பட்டேன். சாரி. இன்னிக்கு அதி குட்டிக்கிட்ட கோவப்பட்டேன்ல அதுனால இன்னிக்கு அதுக்கு பனிஷ்மென்ட்டா அழகி அதிக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர போறேன் ஓகே வா.” என்று விழி விரித்துக் கேட்க,

          விழிகள் மின்ன சிரித்த அதிரன், “ஐ ஜாலி. ஐஸ்கிரீம் சாப்பிட போறேனே.” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “அழகி டார்லிங்கையும் நம்ம கூட கோவிலுக்கு கூட்டிட்டு போகலாம் தானே.” என்று விழி சுருக்கிக் கேட்க, அழகி மென்னகைத்து இமை மூடி திறந்து தலையசைக்க, “ஹைய்யா. டார்லிங் நாம பால்ஸ்ல விளையாட போறோமே.” என்று நிரஞ்சனிடம் தாவ, நிரஞ்சன் சிறு சிரிப்போடு அவனை அணைத்து முத்தமிட்டான்.

            நிரஞ்சன் அழகியை பார்க்க, “சாரி நிரஞ்சன். லீவ் டேஸ் எங்க ரெண்டு பேருக்கான ஸ்பேஸ்னு தெரியும்ல அதான் அப்பிடி பேசினேன்.” என்று மன்னிப்பு வேண்டினாள்.

        “இட்ஸ் ஓகே அழகி. இவன் உன்ட்ட சொல்லிட்டு தான் கூப்புட்றான்னு நினைச்சேன். இல்லன்னா உங்க வேல்யூ டைம்ல நான் வந்துருக்க மாட்டேனே.”, நிரஞ்சன்.

         “ம்ம் தெரியும் நிரஞ்சன். சாரி ஏதோ கோவத்துல…”

           “ஹே கூல் அழகி. ஃப்ரீயா விடு. நேரமாகுது கிளம்பலாம். லெட்ஸ் என்ஜாய் தி டே வித் மை டார்லிங்.” என்று அதிரனை புன்னகையோடு பார்த்தவன், “அழகி நீ தப்பா நினைக்கலனா உனக்கு விருப்பமிருந்தா என் கார்லயே மூனு பேரும் போலாமா?” என்று வினவினான்.

           அகவழகி தயங்க, அதிரன் “அழகி போலாம் அழகி ஜாலியா இருக்கும். ப்ளீஸ்.” என்று விழி சுருக்கிக் கெஞ்சவும் மென்னகைத்து அரைமனதாய் தலையசைத்தாள்.

           அதிரன் நிரஞ்சனிடமிருந்து இறங்கி மகிழுந்தை நோக்கி ஓடி முன்னிருக்கையில் ஏறி அமர அவனின் மகிழ்வில் புன்னகைத்த நிரஞ்சன் அவனை பின் தொடர்ந்து மகிழுந்திலேறி இயக்கினான். அகவழகி சற்று நேரம் தயங்கி பின் பெருமூச்சு விட்டு பின்னிருக்கையில் அமர, மகிழுந்து சாலையில் கோவிலை நோக்கி நகரத் துவங்கியது. 

வருவாள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *