Loading

திமிர்-3

மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் நெய்க்காரப்பட்டியை வந்து சேர்வதற்கே கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் ஆகியிருந்தது.

கொடைக்கானல் மலையடிவாரத்தை ஒட்டினாற் போல் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தான் பெரிய அம்மாபட்டி. இன்னும் பெரிதாக வளர்ச்சியடையாத, அதாவது சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாத, விவசாயத்தையே முதன்மைத் தொழிலாய் கொண்ட ஊர்.

கொடைக்கானலின் மலையடிவாரத்தை ஒட்டினாற் போல், அமைந்திருக்கும் ஊர் என்பதால், வருடம் முழுதும் குளுமைக்குக் குறைவில்லை. பழநிமலை, பாலாறு அணை, தொட்டிமடை ஃபால்ஸ் என அதிக தொலைவு செல்லாமல், பக்கத்திலேயே சுற்றிப் பார்க்க இடங்களும் இருந்தது. நம் அன்றாட இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, சில நாட்கள் இயற்கையோடு ஒன்றி வாழ ஆசையிருந்தால், தாராளமாய் இங்கே வரலாம்.

ஆனால், பெருநகரங்களைப் போல், கைக்கு எட்டின தூரத்தில், கடைகளோ, பல்பொருள் அங்காடிகளோ இங்கே கிடையாது. ஆத்திர அவசரத்திற்காய், இருபத்துநான்கு மணிநேர மருத்துவமனை ஒன்றும், துவக்கப்பள்ளி ஒன்றும் ஊரின் மத்தியில் இருந்தது. படிப்பிற்காகவோ, பொருட்கள் வாங்கவோ, கால்நடைகளுக்கோ, மனிதனுக்கோ, மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால், அம்மாபட்டியிலிருந்து அரைமணிநேர பயணம் செய்து நெய்க்காரப்பட்டிக்குத்தான் வர வேண்டும்.

“ஏன்டா! சீமையிலேயே இல்லாத ஊருன்னு இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து வந்தியாக்கும்? ஊரு இத்துனூண்டு தான் இருக்கு. ஊரு முழுசும் தேடினால் கூட முழுசா முவாயிரம் பேர் இருப்பாய்ங்களான்னு தெரியலை!” வீரபத்ரனின் பின்னால் அமர்ந்தபடியே பேசிக் கொண்டே வந்தான், காத்தவராயன்.

வீரா கிளம்பியதும், அதிர்ந்து சில நொடிகள் அமர்ந்த அரசி, மறுநொடியே சுதாரித்து, காத்தவராயனைப் பின்னாலேயே மகனுக்குத் துணையாய் அனுப்பி வைத்திருந்தார்.

“ரொம்ப அமைதியான ஊருதான்! பக்கத்திலேயே கொடைக்கானல் மலை இருக்கிறதால், பொழுதுக்கும், காற்றும் மழையுமாய் தான் இருக்குமாம்.!”

“டேய் டவர் கிடைக்குமா? கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஒரு செல்ஃபோன் டவரையும் காணோம்.! உன்னை நம்பி நானும் இம்புட்டு தூரம் வந்துட்டேனே? என் கயலு, தினமும் ஃபோன் பண்ணுவா டா! உங்க ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும், என்னை ஒண்டிக்கட்டையா திரிய வைக்கிறதுதேன் வேலையா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ராசா! ஊரு அழகா இருக்குமேன்னு வந்துட்டேன். எனக்கே இங்கண என்ன காத்திருக்குன்னு தெரியாது.!” எனச் சொன்னவனின் நரம்போடிய கரம் இருசக்கர வாகனத்தின் வேகத்தைக் கூட்டியது.
முன்னுச்சிக் கேசம், எதிர்க்காற்றில், அழகாய்ப் பறக்க, கண்களில் குளிர் கண்ணாடியும், பாதி முகத்தை மறைத்த தாடியுமாய், பார்க்க சினிமா கதாநாயகர்களின் தோற்றத்தில் தான் இருந்தான் வீரபத்ரன். நல்ல சிவந்த நிறமும், அடர் கபிலநிற கேசமும், அவனுக்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது.

“உனக்கே இங்கே என்ன இருக்குன்னு தெரியாது, அப்பறம் என்னத்துக்குடா என்னைக் கூட்டிட்டு வந்தே?”

“நான் ஒண்ணும் உங்களை வரச் சொல்லலையே மிஸ்டர்.காத்து!”

“அடேய்! அநியாயம் பிடிச்சவிங்களா! ஏன்டா என்னைய இப்படி சாவடிக்கிறீங்க? எந்த சென்மத்தில் என்ன பாவம் பண்ணித் தொலைச்சேன்னு தெரியலை. இப்படி உங்கக் குடும்பத்திற்கு வாக்கப்படாமலே சிக்கி சின்னாபின்னமாகுறேன்.!”

“அதெல்லாம் உங்க தலையெழுத்து. அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. நான் வேணும்ன்னா பஸ் ஏத்தி விடுறேன். நீங்க வேணும்ன்னா திரும்பி மதுரைக்கே போயிருங்க!” சாதாரணமாய்ச் சொன்னான் வீரபத்ரன்.

“என்னத்துக்கு ராசா, என்னைத் துரத்திவிடப் பார்க்கிறே? உங்க அப்பத்தா கிழவி வாய்க்குள்ளே வெத்தலையாய் அரைபடுறதுக்கு, நான் மருதைக்குப் போவணுமாக்கும்? அங்கண போய் அரைபடுறதுக்கு. இங்கணையே இடிபடுவோம்.! அழகருக்கு தம்பியா போய்ட்டியேன்னு உங்கூட வர்ரதுக்கு நான் சம்மதிக்கிறேன்.!”

“ஊரு சுத்திப் பார்க்க உங்களுக்கு ஒரு காரணம் கிடைச்சிருச்சே! அடடா ஆச்சர்யக்குறி!”

“ஏன்டா! என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்கியே.. என்னமும் திட்டம் போட்டுட்டுதேன் இங்கண வந்திருக்கியோன்னு தோணுதே?” சந்தேகமாய் நீட்டி முழக்கினான் காத்தவராயன்.

“ஹான்! என் மாமன் பொண்ணு மயிலம்மா எனக்காக காத்துக் கிடக்காளாம்! பிரித்விராஜன் சம்யுக்தாவைத் தூக்கிட்டு போனது மாதிரி, திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு அந்தப் புள்ளையைக் கடத்திப்புடலாம்ன்னு பார்க்கிறேன்.!”

“ஆத்தே! எம்புட்டு பெரிய விவகாரத்தில் சிக்க வைக்க பார்க்குறியான் இவன்? ஏன்டா வீரபத்ரா நெசமாவே மாமன் மவளைக் கடத்திட்டுப் போற திட்டத்தோடதேன் இங்கண வந்திருக்கியா? உடம்பெல்லாம் நடுங்குதுடா! உங்க ஆசை அய்த்த மவ, அழகரைக் கட்டும் முன்னே ஒரு பஞ்சாயத்தை இழுத்துட்டு வந்தாள். இப்போ அடுத்தப் பஞ்சாயத்தை நீ கூட்டப் போறியா? என்னவெல்லாம் நடக்கப் போகுதோ? யார் சம்பவம் பண்ணினாலும், நம்ம கழுத்தில்தேன் கத்தியை வைக்கிறாய்ங்க! ஆத்தா மீனாட்சி! எந்தச் சேதாரமும் இல்லாமல், என்னைக் காப்பாத்தி விடுத்தா!” என வானத்தைப் பார்த்து வேண்டியவன்,

“முன்னெல்லாம், உங்க அப்பத்தா அந்த முழியாங்கண்ணிதேன், ஓயாமல் மீனாட்சியைக் கூப்பிடும். இப்போ அதையே என்னைப் பண்ண வச்சிட்டீங்களேடா? இவிங்க செய்ற ஒவ்வொரு விஷயத்திலேயும், உசுரு போய்.. உசுரு வருதுடா சாமி!” எனக் காத்தவராயன் புலம்பிக் கொண்டே வர, அவன் புலம்பல்களைக் கேட்டு பக்கெனச் சிரித்துவிட்டான் வீரபத்ரன்.

“நான் சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீங்க என்னவோ நெசமாவே எனக்காக ஒரு மயிலு காத்துட்டே இருக்கிற மாதிரி பேசுறீங்களே..?”

“அடேய்! உன்னையும் உன் குடும்பத்தையும் நம்பவே முடியாதுடா! உங்க நொண்ணே அழகரு, கருவிழியை மனசில் வச்சுக்கிட்டே, அவளை இன்னொருத்தனுக்குக் கட்டிவைக்க போனான். இப்போ நீ என்னடான்னா, மாமன் மவள்ன்னு சொல்ற, மயிலுன்னு சொல்லுற, நம்ப முடியலை ராசா!”

“நம்பித்தான் ஆகணும் ராசா! நான் சொல்றதை நம்பலைன்னா சோறு கஞ்சி கிடைக்காது ராசா!” என விளையாட்டாய் சொன்னான் வீரபத்ரன்.

“ம்க்கும்! நீங்க போடுற சோறு கஞ்சிக்குதேன் நாங்க காத்து கிடக்கோமாக்கும்? என் கயிலு ஒன்பது ஊருக்கு, ஒட்டுக்கா உலை வச்சு சோறாக்கிப் போடுவா! அவள் கைப்பக்குவத்திற்கு, பச்சரிசி சோறு கூட பூவா மணக்குமே!” தன் மனைவியின் கைப்பக்குவத்தை எண்ணி சிலாகித்துப் பேசினான் காத்தவராயன்.

“நானும் நெதமும், கயலு ஆக்கிப் போடுற சோற்றைத்தான் சாப்பிட்டேன். எனக்கு எந்த பூ வாசமும் வரலையே?” வாகனத்தைச் செலுத்தியபடியே காத்தவராயனை வம்புக்கு இழுத்தான் வீரபத்ரன்.

“என்கிட்டே ஒரண்டை இழுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் பொழுது அடையாதே?” எனச் சொல்லிக் கொண்டிருந்த காத்தவராயனின் பேச்சு, பாதியிலேயே நின்று போக, கிட்டத்தட்ட அம்மாபட்டி ஊருக்குள் நுழையப்போகும் அதே நேரம்,

“அடேய்! வண்டியை நிறுத்து!”

“பராக்கு பார்த்து ஓட்டாமல் முன்னால் பாருடா!”

“அடேய்! ஒட்டு மொத்தமா, மேலே போகப் போறோம் டா! அடேய் வீரபத்ரா எதிரில் பாருடா!” என்ற காத்தவராயனின் பயம் நிறைந்த அலறலில், வாகனத்தை நிதானமாக்கி எதிரில் நோக்கினான் வீரபத்ரன்.

“மாடு தானே நிக்கிது? என்னத்துக்கு இந்தக் கத்து கத்தறே?!” கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்ற கருப்பு நிற காளை மாட்டைப் பார்த்தவண்ணமே சொன்னான் வீரபத்ரன்.

“கொம்பைப் பார்த்தால் தெரியலையா? ஜல்லிக்கட்டு மாடு கணக்கா நிக்கிது. பக்கத்தில் போனோமின்னா முட்டித் தூக்கிரும் டா!”

“மிஸ்டர்.காத்து! வருஷா வருஷம் எங்க அண்ணன் கூட, ஜல்லிக்கட்டுக்குப் போறீங்களே.. அங்கே போய் இப்படித்தேன் பம்மிக்கிட்டு நிப்பீகளோ?” என நக்கலாய்க் கேட்டான் வீரபத்ரன்.

“முச்சூடும் கேமிராவும் கையுமா அலைஞ்ச உனக்கு என்னடா தெரியும்.? இது ஜல்லிக்கட்டு மாடுதேன். நான் இந்த ஆட்டத்துக்கு வரலைடா சாமி! நீ வண்டியை நிப்பாட்டு, நான் இறங்கி வந்த வழியே ஓடிடுறேன்.!” என காத்தவராயன் இறங்க முயல,

“அட இருங்க! மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்ட மாட்டைப் பார்த்து பயந்துக்கிட்டு..!” என்றவன் தன் இருசக்கர வாகனத்தை முன்னோக்கி செலுத்த, இவர்களின் வாகனம் முன்னே செல்ல செல்ல, பாதையை மறைத்தைபடி குறுக்கே வந்து நின்றது அந்த மாடு.

“பார்த்தியா! பார்த்தியா? நான்தேன் சொன்னேன்ல்ல? எப்படி குறுக்கே வந்து வழியை மறைச்சுட்டு நிக்கிது பாரு மாடு!”

“எல்லாம் தெரிஞ்ச முனிவர் மாதிரி பேச வேணாம்! இறங்கிப் போய் அந்த மாட்டை விரட்டி விடுங்க!”

“ஆத்தாடி ஆத்தா! நான் மாட்டேன் சாமி!” வண்டியிலிருந்து காத்தவராயன் இறங்கியிருக்க,

“யோவ்! சும்மா சீனைப் போடாமல் போய் விரட்டுய்யா!” எனப் பொறுமையின்றி கத்தினான் வீரபத்ரன்.

“நானெல்லாம் அம்புட்டு தைரியமானவன் இல்லை வீரபத்ரா! நீ தைரியமான ஆளுதானே நீ போய் விரட்டுறது? என் உசுருக்கு உலை வைக்கிறதே உங்களுக்கு சோலிக் கழுதையாப் போச்சு!” சின்னப் புன்னகையுடன் நக்கலாய் சொன்னான் காத்தவராயன்.

“நான் ஒண்ணும் உன்னை மாதிரி தொடை நடுங்கிப் பயல் இல்லை! இப்போ இந்த மாட்டை விரட்டுறேனா இல்லையான்னு பாரு!” சட்டென இத்தனை நேரமாய் இருந்த மரியாதைக் குறைந்துப் போக, வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய வீரபத்ரன், மாட்டை விரட்டுவதற்காய், ஒரு குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டான். இரண்டடிகள் மாட்டை நோக்கி எடுத்து வைத்த அந்த நொடி, மண், தரையில், தன் நீண்டக் கொம்பால் முட்டி, கழுத்து மணிகள் சிணுங்க, அவனைப் பார்த்து உடலைக் குலுக்கி நின்றது அந்தக் காங்கேயம் காளை.

“ஆத்தி! முட்டி தூக்கி வீசிப்புடுமோ?” எனப் பயத்துடன் முனகியவன், போனதை விட, வேகமாய் திரும்பி வந்திருந்தான்.

“உன் தைரியம் இம்புட்டு தானாடா? என்னமோ, வீரசூர புலின்னு நினைச்சேன். பேரில் மட்டும்தேன் வீரமோ?” என்ற காத்தவராயனின் கேள்விக்கு, அவனை முறைத்தே எரித்தான் வீரபத்ரன்.

“என்னை முறைச்சுப் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை ராசா! அந்த மாட்டை விரட்டுற வழியைப் பாரு!” என வீரபத்ரனைப் பார்த்து, காத்தவராயன் சொல்ல,

“ஆத்தி! அது கொம்பைப் பார்த்தால் பயந்து வருது! அது போகும் வரை இங்கணையே வெய்ட் பண்ணுவோம்ய்யா!” எனச் சொன்னான் வீரபத்ரன்.

“ம்க்கும்! மண்டை வெடிக்கிற இந்த மொட்டை வெயிலில், இங்கணையே குத்தவச்சு உட்காரணுமாக்கும். உங்க ஆத்தா சொன்ன ஒத்தை வார்த்தைக்காக, உன்னைத் தேடி உன் வண்டி பின்னாலேயே ஓடி வந்தேன் பார்த்தியா என்னைச் சொல்லணும். உன்னை நம்பி வந்ததுக்கு என்னை நடுத்தெருவில் நிறுத்திப்புட்டியே?”

“வயசில் மூத்தவருன்னு கூடப் பார்க்க மாட்டேன். தொணதொணன்னு புலம்பாமல், கொஞ்ச நேரம் இருய்யா! நீ ஒருபக்கம் நொய் நொய்ங்கிற! இந்த மாடு வேற முறைச்சு முறைச்சு பார்த்துக்கிட்டு போய்த் தொலைய மாட்டேங்குது.!” என பொறுமையிழந்து வீரபத்ரன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், அந்தக் கருப்புநிறக் காளைமாடு இவர்களை நோக்கி வேகமாக ஓடிவரத் துவங்கியிருந்தது.

“ஆத்தாடி! இம்புட்டு நேரம், அமைதியாய் தானே நின்னுச்சு? என்னத்துக்கு நம்மளை விரட்டுது.?” எனப் புலம்பியபடியே ஓடினான் காத்தவராயன்.

“அடேய் வீரபத்ரா! நெட்டைக்காலை வச்சிக்கிட்டு ரெண்டே எட்டில் முன்னே ஓடிட்டியேடா? நில்லுடா நானும் வாரேன்.!” என பின்னாலேயே காத்தவராயன் ஓட, பின்னால் திரும்பிக் கூடப் பார்க்காமல், பின்னங்கால் பிடரியில் பட ஓடத் துவங்கியிருந்தான் வீரபத்ரன்.
அதே நேரம், சீழ்க்கை ஒலியுடன், எங்கிருந்தோ கேட்ட சிரிப்பு சத்தம், வீரபத்ரனின் ஓட்டத்தை இழுத்து நிறுத்தியது.

“யாருடா! இங்கண வந்து கெக்கபிக்கேன்னு சிரிக்கிறது.?” என முணுமுணுத்தபடியே திரும்பியவனின் கண்களில் விழுந்தாள் அவள்.

“இந்தாம்மா! என்னத்துக்கு லூசு மாதிரி சிரிச்சுட்டு நின்னுட்டு இருக்கே? உன்னைய மாடு விரட்டினாதேன் தெரியும்!” கோபமாய் உரைத்தபடியே அவளை நெருங்கி வந்தான் வீரா. அவன் அருகே நெருங்க, நெருங்க, அந்தப் பெண்ணின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கியது.

“யோவ்! யாருய்யா நீங்க? எங்க ஊருக்குள்ளே வந்து கோமாளித்தனம் பண்ணிட்டு கிடக்குறீங்க?!” என அந்தப் பெண் கேட்க,

“என்னாது கோமாளியா? யாரு நீயி? பெக்கே பெக்கேன்னு பல்லைக் காட்டிட்டு கோமாளிங்கிறே? உன் ஊருன்னு சொல்றே? என்ன உன் பேரில் பட்டாவா போட்டு வச்சிருக்காய்ங்க? பொட்டைப் புள்ளைன்னு பார்க்கிறேன். இல்லைன்னு வையி..!” என அவளை மிரட்டிப் பார்த்தான் வீரபத்ரன்.

“ஆனால் அதே நேரம், அவள் பின்னால் நின்றிருந்த காளைமாடு, ஏதோ புரிவது போல், தலையை உலுக்கிக் கொண்டு முன்னால் வர, பயந்து பின்னால் நகர்ந்தான் வீரபத்ரன்.

“அடேய்! குத்தித் தூக்கி வீசிறப் போவுதுடா! உங்க அப்பன், ஆத்தாளுக்கு நான்தேன் பதில் சொல்லணும். அந்தப் புள்ளைக்கிட்டே என்டா ஒரண்டை இழுக்கிறே? அங்கே பாரு, மூக்கணாங்கயிறு அந்தப் புள்ளை கையில்தேன் இருக்கு. வா! நைஸா எஸ்கேப் ஆகா ஓடிருவோம்!” இரகசியமாய் காதுக்குள் கிசுகிசுத்தான் காத்தவராயன்.

“யோவ்! போய்யா! அந்தப் புள்ளை நம்மளைக் கோமாளிங்குது! சுரணைக்கெட்டு அப்படியே போகச் சொல்லுறியாக்கும்? நாம யாருன்னு அந்தப் புள்ளைக்கு காட்ட வேணாமா?!” சிலிர்த்துக் கொண்டான் வீரபத்ரன். அதே நேரம், அந்தப் பெண்ணின் பின்னால் நின்றிருந்த காளை, கழுத்துமணிகள் அசைய துள்ளிக் கொண்டே இருக்க,

“அடேய்! கருப்பா! சும்மா இரேன்டா! நீ வீரன்டா! இந்த மாதிரி பொடிப் பசங்கக் கிட்டே இல்லாம், நாம மோதக் கூடாது. நமக்குன்னு ஒரு தகுதி இருக்கா இல்லையா?” என காளை மாட்டிடம் அந்தப் பெண் பேச, எதோ பூனைக் குட்டியைப் போல் தலையைத் தலையை ஆட்டியது அந்த மாடு.

“ஆத்தாடி ஆத்தா! இம்புட்டு பெரிய காளை மாட்டையே சுண்டு விரலுக்குள்ளே வச்சிருக்கு இந்தப் புள்ள! இவள் மட்டும் உன் மாமன் மவளா இருந்தாள், நீ செத்தடா வீரபத்ரா!” எனக் காத்தவராயன் சொல்ல,

“ஏய் இந்தாருடி! யாரைப் பார்த்துடி பொடிப் பையன்னு சொன்னே? இந்தக் கருப்பனைத் துணைக்கு வச்சிருந்தால் பயந்துருவோமா? வர்ரவிங்க, போறவிங்களை மாட்டை வச்சு பயம்காட்டி ஓட வைக்கிறீங்க? இதெல்லாம் ஒரு பொழப்பு?” என வேண்டுமென்றே பேசினான் வீரபத்ரன்.

“அடேய்! வந்தும், வராததுமா ஒரண்டை இழுத்துக்கிட்டு திரியாத டா! இது நம்ம ஊரு இல்லைடா!” வீரபத்ரனைத் தடுக்க முயன்றான் காத்தவராயன்.

“இந்தாரு! இது எங்க ஊரு! எங்களுக்கு பட்டாப் போட்டுத்தேன் வச்சிருக்கு. என் ஊரு, என் மாடு! அது இப்படித்தேன் நடுவழியில் நிக்கும். முடிஞ்சால் என் கருப்பனைத் தாண்டிப் போய்யா பார்க்கலாம்!” எனச் சொன்னபடியே அந்தப் பெண் விசிலடிக்க, அவள் சொன்ன செய்தி புரிந்தது போல், பாதையை மறைத்தபடி நின்றது கருப்பன்.

“ஏன்டா! கோளாறு பிடிச்சவனே! உன் வாய்தான்டா உனக்கு எதிரி. வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டியாடா? வீம்புக்குன்னு ஒரண்டை இழுத்து, அந்தப் பொண்ணு மாட்டை நடுவழியில் நிறுத்தி வச்சிருச்சு. அந்தக் கொம்பனைத் தாண்டிப் போயிருவியா? அவன் கொம்பைப் பாரு, ஒரே குத்தில் உலகத்தை விட்டுப் போயிருவோம் போல! உங்க ஆத்தா அம்புட்டு சொன்னுச்சே! போவாதடா! போவாதடான்னு சொன்னுச்சே கேட்டுத் தொலைச்சியா? பொட்டப்புள்ளைகளே இம்புட்டு திமிரோட அலையுதுங்க! ஆம்பிள்ளைங்க எப்படி இருப்பானுங்களோ?”

“உனக்குக் காத்தவராயன்னு பேரு வச்சதுக்குப் பதில் புலம்பல் ராயன்னு வச்சிருக்கலாம். பொழுதன்னைக்கும் புலம்பிக்கிட்டே கிடக்க!” என வீரபத்ரன் சொல்ல,

“அடேய்! ஊருக்குள்ளே எப்படிப் போறதுன்னு சொல்லுடா! அந்தப் புள்ள மாட்டை நடுவழியில் நிறுத்திப்புட்டு, தோப்புக்குள்ளே போயிருச்சு. நீ என்னடான்னா கால் மேல் கால் போட்டு, சொகுசா புல்லட்டு மேலே உட்கார்ந்திருக்கிறே?” எனக் கேட்டான் காத்தவராயன்.

“அவள் என்ன பொழுதுக்கும் இங்கணையேவா இருக்கப் போறாள்? எப்படியும் போய்த்தானே ஆகணும்? மாடு நகர்ந்ததும் நாம போய்க்கிடுவோம்.!” என அவன் சாதாரணமாய் சொல்ல,

“உன்னை நம்பி வந்தேன்ல்ல? என்னைச் சொல்லணும்!” எனப் புலம்பியபடியே, அந்த மாந்தோப்பை நோக்கிப் போனான் காத்தவராயன்.

“எம்மா! பொண்ணு!”

“ஹலோ!”

“ஏம்மா! மாட்டு ஓனரு!”

“அந்தப் பையன் தெரியமால் பேசிப்புட்டான். கொஞ்சம் மாட்டை நகர்ந்து நிக்கச் சொல்லுமா!” என்றபடியே அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான் காத்தவராயன்.

“அப்போ அவனை வந்து மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்க! நீங்க எதுக்குண்ணே வாரீங்க? எங்க அப்பணுக்கு மட்டும் தெரிஞ்சுது உங்கக் கூட வந்தவன், கை கால் இல்லாமல்தேன் திரியணும்!” என மரத்தின் பின்னாலிருந்து, எட்டிப் பார்த்து மிரட்டினாள் அவள்.

“இம்புட்டு பேசுறியே.. நீ யாரும்மா?”

“ஹான்! அதைத் தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீக?”

“ஜல்லிக்கட்டு மாடெல்லாம் வச்சிருக்கீங்க? முகஜாடையைப் பார்த்தால், நம்ம ஊருக்கார பொண்ணு மாதிரியே இருக்கேன்னு கேட்டேம்மா! சொல்ல விருப்பமில்லைன்னா வேணாம்!” எனக் காத்தவராயன் சொல்ல,

“பெரிய அம்மாபட்டி, நாச்சியப்பன் மவதேன் நானு. என் உடம்பொறந்தவிங்க மூணு பேரு. மூணு அண்ணேங்களுக்குப் பிறகு பொறந்த ஒரே தங்கச்சி நான்தேன். என்கிட்டே ஒரண்டை இழுக்கறதை எங்க அண்ணேங்க பார்த்தாய்ங்க, கொன்னு பொலி போட்டுருவானுங்க! ஒழுங்கு மரியாதையாய் அந்தாளை வந்து மன்னிப்புக் கேட்டுப்புட்டுப் போகச் சொல்லுண்ணே!” என்ற அந்தப் பெண்ணின் பதிலில் அதிர்ந்து விழித்தான் காத்தவராயன்.

“அடேய்! வீரபத்ரா, டைரக்ட்டா சிங்கத்தோட குகைக்குள்ளேயே வந்து சிக்க வச்சிரீக்கியே டா! உங்க ஆத்தா கூடப் பொறக்காத தம்பி, நாச்சியப்பன் பெத்த மவதான் இவ. உங்க அம்மா யார்க்கிட்டே சிக்கக் கூடாதுன்னு சொன்னிச்சோ அங்கேயே வந்து வசமா சிக்கியிருக்க ராசா! இவிங்க பஞ்சாயத்துக்குள்ளே சிக்காமல் நாம உசிரைக் காப்பாத்திக்கிட்டு ஊரு போய் சேந்துரணும்!” எனத் தனக்குள்

புலம்பியபடியே மாந்தோப்பிலிருந்து வெளியே வந்த காத்தவராயன், வீரபத்ரனை நோக்கிச் சென்ற அதே நேரம், வீரபத்ரனின் முன்னால் உறுமலுடன் நின்றது அந்தக் கருப்பு நிற ஜீப்.

தித்திக்கும்…🔥

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நாயகி வீரம் உள்ளவள் தான்.