Loading

சுழலி-14

வள்ளியின் உதவியால் அனைவரும் வனத்திற்குள் நுழைந்துவிட்டனர். இவர்களை எதிர்நோக்கி காத்திருந்த காளிங்கன் படைகள் வெகுநேரமாக அங்கேயே காத்துக் கிடந்தன. ஆனால், யாரும் வெளிவராததால் அவர்களுக்கு குழப்பமே மிஞ்சியது.

ஏன், இன்னும் யாரும் வெளிவரவில்லை?” ஆவேசமாக சீறினான் காளிங்கன்.

இல்லாதவர்களுக்காகக் காத்துக்கிடப்பது வீண் காளிங்காஅவ்விடத்திற்கு வந்தாள் மஞ்சரி.

மஞ்சரி…?”

நானேதான் காளிங்கா! என் மகளோடு வந்திருக்கிறேன். இனியும் வீண்நம்பிக்கைக் கொண்டு செந்தூரன் வருவான் என்று காத்திருக்க வேண்டாம். அவனின் அழிவுக் காலம் ஆரம்பமாகிவிட்டது. சென்றுவிடுஎச்சரிக்கை விடுத்தாள்.

அவன் விடுதலையே எங்களின் விடுதலை. எனக்கிட்ட கட்டளையை நான் செய்தே தீருவேன். எங்கே அவர்கள்?”

சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டேன். இனி, அவர்களை உன்னால் மட்டுமல்ல நீலாவாலும் நெருங்க இயலாது

அதற்கு வாய்ப்பேயில்லை. இந்த பிராந்தியத்தை விட்டு அவர்கள் வனாந்திரத்திற்கு செல்ல வாய்ப்பேயில்லைமனத்திற்குள் எண்ணியவன் சொல்லியேவிட்டான்.

இந்த வழியில் தான் இந்த பிராந்தியம் ஆரம்பம். சுரங்கத்திற்கு மற்றொரு வழி இருப்பதனை மறந்துவிட்டாயோ?” எக்காளமாக சிரித்தாள் மஞ்சரி.

அதனையெப்படி மறந்தேன்? அய்யோ, இப்போது நான் நீலாவிற்கு என்ன பதில் சொல்வது? அடுத்து அவள் என்ன செய்வாளோ?’ உள்ளுக்குள் கதிகலங்கியது.

உனக்கும் உன் படைக்கும் மற்றுமொரு வாய்ப்பு தருகிறேன். இந்த இடத்தை விட்டு, புறப்பட்டு உடனே கொல்லிமலைக்கு புறப்படுங்கள். இல்லையேல், அவனின் அழிவு, அவனைச் சார்ந்தவர்களுக்கும் நிகழும்

மிக அருமை, என் அருமைத் தோழியே! துரோகம் புரிந்து துயிலினை துறந்து உயிருக்காக ஓடிய நாட்களை மறந்துவிட்டாயோ? நீ வாய்ப்பை பற்றி பேசுகிறாயா?” அவ்விடம் வந்தாள் நீலா.

துரோகமா? யாருக்கு யார் செய்தது துரோகம்? தங்களின் பேராசைக்காக ஒரு ஊரையே அழிக்க நினைத்ததும், உயிர்வதை செய்ய துணிந்ததும் நட்பிற்கு நீ செய்த துரோகம். அவனைத் தடுத்து, அடைத்து வைத்தது நான் செய்த துரோகமா? இருக்கட்டும். செந்தூரன் வெளியே வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும், மொத்தமாக இந்த உலகத்தை விட்டேதான் செல்லப் போகிறான். நீ உன் இனத்தைக் காக்க ஆக வேண்டிய முயற்சிகளை செய்துக் கொள். நான் வருகிறேன்அவ்விடம் விட்டு மறைந்தாள் மஞ்சரி.

…..

வனத்தின் நடுப்பகுதி. மூன்றாம் நாள் மாலை. இரண்டாம் நாளிலிருந்து நீரைத் தவிர உண்ண நேரமுமில்லை. சுரங்கத்தில் உணவும் இல்லை. மேலும், அப்போதைய நிலைமை யாரையும் வேறு எதையும் யோசிக்கவும் விடவில்லை. தற்போது, சற்று ஆசுவாசமாக உணர்ந்தனர்.

சாமிங்களா, யாரு எதுக்கும் பயப்படாதீங்க. இந்த பக்கம் எதுவும் வராது. இனிமே அவன் எந்திரிச்சு வர வரைக்கும் உடம்பயும் மனசயும் திடகாத்திரமா வச்சுக்கனும். நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்என்று நகர்ந்தாள். அதன்பின்னே மற்றவர்களுக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறது என்ற எண்ணமே வந்தது.

அனைவரும் அப்படியே அமர்ந்தனர். அங்கை அந்த சித்தரையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று நினைத்திருந்த தனது குரு தற்போது தன்னாலேயே கண்டுக்கொள்ள இயலாத ஒருவராக கண்முன் நிற்கிறாரே என்று உள்மனம் தவித்தது. மேலும், அவர் பட்ட மரணப் போராட்டம் கேட்க கேட்க ஈரக்குலை நடுங்கியது.

கார்த்திகேயனின் தொடக்கத்தில் இருந்து, இப்போது வரை நடந்தவற்றை அசைப்போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு இதுபோன்ற விசயங்களிலெல்லாம் அறவே நம்பிக்கை கிடையாது. ஆனால், அவனும் இதில் ஒருவனாய் யாரென்று தெரியாத ஒரு எதிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறான்

இதனையெல்லாம் யோசித்தவாறே, கையில் கிடைத்த குச்சியால் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அப்போது அவனின் கண்ணிற்கு பளபளவென்று ஒரு கல் தோன்றியது. இன்னும் சற்று அவன் ஆழத் தோண்ட, அவனின் கையில் சிக்கியது மந்திரமாலை.

….

நீலா கடும்கோபத்தில் இருந்தாள். இப்போது தான் தனது குகைக்கு வந்தவள், தியானத்தில் அவர்களுக்கு மந்திரமாலை கிடைத்ததைப் பார்த்தாள், கூடவே யாழும் அங்கு இல்லாதது தனது திட்டமெல்லாம் பாழாய் போனதை எண்ணி அந்த குகையே அதிரும் அளவிற்கு கத்தினாள்.

எனது ஒவ்வொரு செயலிலும் குறுக்கே வந்து மீண்டும் மீண்டும் என் கோபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறாய் மஞ்சரி. இனியும் பொறுத்திருப்பது என்பது வீண். காளிங்கா, உடனே அந்த பெண்ணை கண்டுபிடிக்க படைகளை அனுப்பு. நான் வேள்வியைத் துவங்குகிறேன்.”

வேள்விக்கான பொருட்களை எல்லாம் மற்ற பாம்புகள் எடுத்து வந்து கொடுத்தன. நீலா தனது முழு சக்தியையும் திரட்டி மனித உருவெடுத்தாள். அவள் வம்சத்திலேயே பல வருடங்களாக உயிரோடும் அதே சக்தியோடும் இருப்பது நீலா மட்டுமே. மற்றவை அனைத்தும் எம்பெருமானிடம் பெற்ற சாபத்தால் தனது சக்திகளை இழந்து சாதாரண பாம்புகளாக இருந்தன. இவர்களின் சாபத்திற்கு ஒருவகையில் செந்தூரனும் காரணமாவான். அது தெரிந்தும் நீலா அவனுக்கு உதவிடும் நோக்கில் இருக்கிறாள் என்பது தான் இங்கு காளிங்கனே அறியாத புதிரான கேள்வி.

பெரிய பெரிய கற்களை எடுத்து வைத்தவள், வேள்விக்கான நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்.

….

அங்கதினி யாழை சரியாக வனத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டது.

இங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் உன்னுடன் வந்தவர்களின் இருப்பிடத்தை அடைந்துவிடலாம். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள். நான் எல்லையிலேயே இருக்கிறேன் என்று பிறைக்கு தெரிவித்துவிடுஎன்றபடி அங்கிருந்த மரத்தில் ஏறினாள்.

அந்த இராஜநாகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவள், வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அங்கை சொக்காஅன்புண்ணா….” கத்திக் கொண்டே நடந்தாள் யாழ்நிலா.

அவர்கள் வனத்திற்கு நடுவில் இருப்பதால் இவளின் குரல் இன்னும் அவர்களை எட்டவில்லை. இவளும் விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே முன்னேறி நடந்தாள்.

அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. இராட்சத காற்றாக இருந்தது.

எங்கு செல்கிறாய்? நீ எனது அடிமை. மறந்துவிட்டாயா? வாஎன்னைத் தேடி வாஉன் குருதி சிந்தி, என் ஆன்மாவினை வெளியேற்று. வா…” காட்டமான ஒரு குரல் அவளை வெகுவாக இழுத்தது.

இன்னொரு பக்கம் மஞ்சரி கத்தினாள். “அந்த குரல்ல உன்னோட காதுல வாங்கிக்காத நிலா. உடனே, காட்டுக்குள்ள போ. நீ அவன்கிட்ட போகக் கூடாது. அங்க, அங்கை உனக்காக காத்துட்டு இருக்கா. போ, வேகமா

பாவம் யாழ்தான், இரு காதுகளையும் அழுத்திக் கொண்டு இரண்டு குரல்களும் தன்னை தாக்காவண்ணம் இருக்க பிரம்மபிரயத்தனப்பட்டாள்.

சொக்காஆஆஆஆஆ என்னை வந்து கூட்டிட்டு போடாஆஆஆஅவளின் அந்த கத்தலுக்கு காட்டே அதிர்ந்து அடங்கியது.

….

என்ன குரல் அது? யாரோடது?” பிறைதான் முதலில் கேட்டான்.

சொக்கனும் அங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, இருவரும் ஒரே குரலில் யாழ்என்றனர்.

அப்போதுதான் கார்த்திகேயன் கையில் இருந்த மந்திரமாலையை அனைவரும் கவனித்தனர்.

இது…?” சிவரஞ்சன் சந்தேகமாகக் கேட்க,

அந்த குறிப்புல சொல்லப்பட்ட மந்திரமாலையா?” பிறை யோசனையோடு அவனின் சந்தேகத்தை உறுதிசெய்தான்

ஆம், அதேதான். இது இனிமே கார்த்திகேயனின் பொறுப்பு. எக்காரணத்தைக் கொண்டும், எந்தவித இடையூறு வந்தாலும் இதனை நீ யாரிடமும் கொடுக்கக் கூடாது. என்றும் இது உன் கழுத்திலேயே இருக்க வேண்டும். அவசியமான நேரத்தில், அதுவே அனைவரையும் காப்பாற்றும்என்றார் சித்தர்.

கார்த்திகேயன் எதுவும் பேசாது அந்த மாலையை கழுத்தில் அணிந்துக் கொண்டான். பின், சித்தரோடு அங்கை, பிறை, ஆரு இருக்க மற்ற அனைவரும் யாழைத் தேடி புறப்பட்டனர்.

யாழ் வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் குரல் வந்த திசையை தோராயமாக கணித்து அவளை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

யாழ்…” தூரத்தில் சொக்கன் குரலைக் கேட்டதும், இத்தனை நேரம் எங்கிருந்ததோ அத்தனை பலம் வந்ததுபோல் உணர்ந்தாள். தன் வேகத்தை இன்னும் கூட்டியவள் முடிந்தவரை வேகமாக நடந்தாள்.

நேரம் சென்றுக் கொண்டே இருந்தது. பொழுது அதற்குள் மறைய தொடங்கியது.

வேகமாக வந்த யாழ், பாறைத் தடுக்கி சரிவில் விழத் தொடங்கினாள். தொலைவில் இருந்து வந்துக் கொண்டிருந்த சொக்கன் அவளைப் பார்த்துவிட, “யாழ்…” என்று கத்தியபடியே அவளைத் தொடர்ந்தான்.

சடசடவென்று வேகமாக பள்ளத்திற்கு வந்துவிட்டாள் யாழ் நிலா. பிடிப்பிற்காக சட்டென்று ஒரு கிளையை இறுகப்பற்றியவள் பின்னர்தான் கீழே பார்த்தாள்.

யாழ் தற்போது இருபத்திரெண்டாம் கொண்டை ஊசி வளைவின் உள்ளே இருக்கும் வனப்பகுதியின் முடிவில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

சொக்கன் வேகமாக வந்து அவளின் கரத்தைப் பிடித்து இழுக்க, இரண்டு நாட்கள் சாப்பிடாததும், தொடர்ந்து மயக்கத்தில் இருந்ததும் யாழை பலமிழக்க செய்திருந்தது.

யாழ், கைய விட்றாத. அப்டியே பிடிச்சு மேல வா. யாழ்தொடர்ந்து அவளிடம் பேச முயற்சி செய்துக் கொண்டே இருந்தான்.

இருட்டிக் கொண்டே வந்தது.

என்னை விட்றமாட்டில?” கண்களில் பயம் அப்பிக் கிடக்க, அதையும் மீறி காதல் வெளிப்பட்டது.

விட்டுட மாட்டேன் நிலாம்மா. என் கைய விடாம புடிச்சுக்கோ.” அவனும் சிறிய கிளை ஒன்றினைத்தான் பிடித்திருந்தான். தொடர் பயணமும் உடலும் களைத்திருந்ததால் அவனாலும் சரியாக பிடிக்க முடியவில்லை.

தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவளை மேலே இழுக்க, அந்த கிளை வழுக்கிக் கொண்டு சென்றது.

இன்னும் சிறிது அவளை இழுத்தால் அவ்வளவுதான் அந்த கிளை மொத்தமும் அறுந்துவிடும். இருவரும் உயிர் பிழைப்பது என்பது கேள்விக்குறிதான்.

அவ்விடத்திற்கு மஞ்சரி முதலில் வந்துவிட்டாள். அவள் சக்தி கொண்ட அருவமாய் இருந்தாலும், இந்த இடத்தில் மானிடர்களைப் போல மட்டுமே அவளால் செயல்பட முடியும். ஆகவே, மஞ்சரியால் தற்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

கார்த்திண்ணா…. அன்புண்ணாகத்தினான் சொக்கன்.

அந்த கிளைவேறு அறுபட தொடங்கியது. காற்றின் வேகமும் அதிகரிக்கத் துவங்க, இவனின் குரல் அவர்கள் யாருக்கும் கேட்கவில்லை.

நேரம் சென்றுக் கொண்டேயிருந்தது. நான்காம் நாள் சுவடிக் குறிப்பு மிகவும் முக்கியம் என்பதை முன்னரே சித்தர் சொல்லியிருந்தார். அதற்குள் இவளையும் காப்பாற்றிவிட்டு, ஈசனை தொழுதிருக்க வேண்டும். வழிபாட்டில் சிறிய தவறு ஏற்பட்டாலும் குறிப்புகள் நமக்கு விளங்காது.

கிளையின் பிசிறுகளால் கை வேறு எரிச்சலை தந்தது. அதை அப்படியே விட்டுவிடலாம் என்றேத் தோன்றியது.

….

நீலா வெகு சிரத்தையாக வேள்விக்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டாள். இனி, நள்ளிரவு மட்டும் வந்துவிட்டால் வேள்வியை துவங்கி விடலாம்.

காளிங்கா, அந்த பெண்ணை உன்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அதே வயதுடைய ஒரு கன்னிப்பெண்ணை தற்போது பழிக் கொடுத்தால்தான், அந்த உதிரத்தின் துளிகள் செந்தூரனை விழிக்க வைக்கும். நள்ளிரவிற்குள் சென்று கன்னிக் கழியாத ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து வா. செல்காளிங்கனிற்கு கட்டளையிட்டவள், ஒருவேளை அந்த திட்டம் செயலற்று போனால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மனக்கண்ணில் செந்தூரனும் மஞ்சரியும் கைகள் கோர்த்து, கூடிக் குலாவிய நாட்கள் வந்து சென்றது.

இன்னும் சொச்சக் காலம் நீ மட்டும் அமைதியாக இருந்திருந்தால் இந்நேரம் செந்தூரனின் ஆட்சியில் அனைத்தும் நடந்திருக்கும் மஞ்சரி. காதல் என்னும் சுழலில் அவனை சிக்க வைத்துவிட்டு அவனின் பிள்ளைகளையும் அவனிடமிருந்து பிரித்து செந்தூரனின் கோபக் கனலுக்கு ஆளாகிவிட்டாய். காதல் என்னும் பெயரால் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாய் மஞ்சரி. ஏ காதல் சுழலி, வேள்வி முடியும் தருவாயில் செந்தூரன் வெளிப்படுவான். அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு முழு நிலவில் உன்னை அடைவான் உரக்கக் கத்தினாள் நீலா. அவளின் பச்சை நிற பளிங்குக் கண்கள் மின்னி மறைந்தது.

….

சொக்கன் கண்ணில் பயத்தை விட, அனைவரையும் இன்னலில் சிக்க வைத்துவிட்டு நாம் செல்கிறோமே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அந்த கிளை அறுபட்டுவிட, அதற்குள் தனது வாலால் சொக்கனை இறுகப் பிடித்தாள் மணிக்கொடி, பெரிய இராஜநாகம்.

பெரிய மரத்தண்டில் தனது உடலை பிணைத்து, சொக்கனுக்கு கயிறாக தனது வாலை நீட்டினாள் மணிக்கொடி.

சட்டென்று அவளின் வாலைப் பிடித்து, யாழையும் மேலேக் கொண்டு வந்திருந்தான்.

இருவரும் மூச்சுவாங்க நின்றிருக்க, நிதானத்திற்கு வந்த யாழ், மணிக்கொடியைப் பார்த்து பயங்கரமாகக் கத்தினாள்.

அச்சப்பட வேண்டாம். நான் அங்கதினியின் தாயார் மணிக்கொடி.” சொக்கனுக்கும் யாழுக்கும் பெரிதாய் எந்த அச்சமும் இல்லை. அவன் எல்லைக் கோவிலில் சிலை நாகம் பேசியதிலிருந்தே அவன் அனைத்தையும் எதிர்பார்த்திருந்தான்.

அங்கதினியுடன் சிறிது நேரம் இருந்ததனால் யாழும் பயப்படவில்லை. அவள், இவளை நீலா என்று நினைத்தே அதிர்ந்து கத்தினாள்.

காலம் சென்றுக் கொண்டிருக்கிறது மஞ்சரி. அங்கு நீலா வேள்வியைத் துவங்கி விட்டாள். விரைந்து அனைத்து பொருட்களையும் ஒன்று சேருங்கள். கன்னிப் பலி ஏற்படுவதற்குள் நான் வேள்வியைத் தடுக்க வேண்டும்என்ற மணிக்கொடியின் சொல்லுக்கு சரியென்று தலையசைத்தவள், அறிவைக் காண சென்றாள். அவள் பேசக்கூடிய ஒரே ஆள் தற்போது அறிவு மட்டுமே.

சொக்கனும் யாழும் செல்லும் மணிக்கொடியையே பார்த்திருக்க, மஞ்சரியின் சொல்படி அவ்விடம் விரைந்தனர் மற்ற நால்வரும்.

பின், அறுவராக வனத்தின் மையத்திற்கு சென்றனர்நான்காம் நாள் தொடங்கியது.

நான்காம் நாள் மொக்குள்

அனைவரும் வள்ளிக் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை உண்டு தயாராக இருந்தனர்.

நள்ளிரவு தொடங்கியது. ஒரு பக்கம் சுவடிகள் தனது குறிப்புகளை வெளிப்படுத்தத் துவங்க, மறு பக்கம் நீலா தனது வேள்வியைத் துவங்கினாள். கல்வராயன் மலையிலேயே இரண்டு இடங்களில் மட்டும் சிறு வெளிச்சம் தோன்றியது போல் இருந்தது. நீலா துவங்கிய வேள்வி நெருப்பானது தனது கனல்களை சிதறடிக்க, சுவடியில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சமோ கண்ணைப் பறிக்கும் அளவிற்கு இருந்தது.

தனது கையில் வெளிச்சத்தோடு வெப்பத்தையும் உமிழ்ந்துக் கொண்டிருந்த அந்த சுவடியின் எழுத்துக்களை படித்தவனின் விழிகள் அதிர்ச்சியில் இன்னும் விரிந்தது.

சொக்கா, அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?” சித்தர் கேட்டார். அவருக்கு என்ன நடக்கும் என்ற ஒரு யூகம் இருந்தாலும், விதியின் கணக்கானது எப்படி விடையளிக்கும் என்ற சூட்சமம் யாரும் அறியாத ஒன்று.

கைகள் நடுங்கியபடி அதில் இருந்ததை வாசிக்க தொடங்கினான் சொக்கன்.

கார்மேகங்கள் இடுஇடுங்க, கண்ணிமைகள் மின்னல் தாக்க, வேள்வி தீயானது வேகம் கொண்டு பரவிடுமாம். கன்னிப் பெண்ணின் உதிரம் தாக்க, முன்னரே வெளிவந்திடுமாம் செம்மை பூசிய செந்தூர நாகம். தாமதப்படுத்த தக்க பொருட்கள் உடனே சேகரித்திடு. முன்னரே தெளிவில்லாதவற்றை தெளிவுப்படுத்திடு. மறைக்க ஒன்றுமில்லை. மனதில் இருப்பதை உரைத்திடு. உள்ளே மறைக்கும் ஒவ்வொன்றும் நஞ்சாய் மாறும் வேள்வியால். அதுவே அழிவிற்கு வித்திடுமாம். மறைபொருளென்று வையகத்தில் ஏதுமில்லை. குறிப்புகளை அறிந்திட்டால் இனியொரு பொழுதும் ஓய்வுமில்லை.”

அனைவருக்கும் முழுதாகப் புரிந்திட இயலவில்லை எனினும், செந்தூரன் குறித்த நாளிற்கு முன்னதாகவே வெளிவந்திடுவான் என்ற ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது.

சித்தருக்கும் பெரிய அதிர்வுதான். பொருட்களுக்கான வழிகள் கிடைத்திடும் என அவர் எண்ணியிருக்க, முன்னரே செந்தூரன் வரப் போகிறான் என்பதை குறிப்பு உணர்த்திவிட்டது. இனி ஒரு நிமிடமும் தாமதப்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

இப்போது அனைவரும் சிவரஞ்சனைப் பார்த்தனர். இந்நேரம் அவனின் குறிப்புச் சுவடி ஒளிர்ந்திருக்க வேண்டும். ஆனால், அது எந்தவித அறிகுறியும் காட்டாது அப்படியே இருந்தது.

சொக்கனின் புரியாத புதிருக்கு சிவரஞ்சனின் குறிப்பே ஒரே வழி. ஆனால், தற்போது அதுவும் எந்த எதிர்வினையும் புரியாமல் இருக்க, மற்றவர்களுக்கு கிலி பிடித்தது.

ஐயா, இப்போ நாம என்ன செய்றது? இன்னும் முக்கியமான பொருட்கள நாம உடனே கண்டுபிடிச்சாகனுங்களே. கால தாமசம் ஆகக் கூடாதுஉள்ளுக்குள் எழுந்த படபடப்பை மறைத்தவாறு கேட்டார் வள்ளி.

மஞ்சரிசித்தரின் குரலுக்கு தனது அருவத்தை உருவமாகக் கொண்டாள் மஞ்சரி.

பிறையும் சொக்கனும் ஏற்கனவே அவளை பார்த்திருந்தாலும் இப்போது மஞ்சரியின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருப்பது போன்றதொரு உணர்வு.

ஆனால், அங்கையும் யாழும் மஞ்சரியை கண்டு அதிரத்தான் செய்தனர்.

அறிவு, உனக்கு முன்னாடியே இவங்க இருக்குறது தெரியுமா?” அன்பு விழித்த விழி மூடாமல் கேட்டான்.

தெரியும்என்றவன் மஞ்சரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கார்த்திகேயனிற்கும் அதிர்ச்சிதான். இந்த அதிர்வுக்கெல்லாம் காரணமானவள் புன்னகை முகம் மாறாது நின்றுக் கொண்டிருந்தாள்.

என்னங்கடா நடக்குது? மஞ்சரி அப்டியே யாழ் மாதிரியே இருக்காங்க?” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டாள் ஆருத்ரா.

ஆம், மஞ்சரி அப்படியே யாழ் நிலாவைப் போலத்தான் இருந்தாள். திருத்தம், யாழ் நிலாதான் தன் தாய் மஞ்சரியை உரித்து வைத்தாற்போல் இருக்கிறாள்.

மஞ்சரி, நீ உன் மகளின் அருகில் சென்று அறியாததை அறிவித்து விடு.” என்றார் சித்தர்.

மஞ்சரி புன்னகை முகமாக யாழிடம் செல்ல, அவளோ பயந்து இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள். அப்போது மழைத் தூறத் துவங்க, சிவரஞ்சனின் சுவடி ஒளிர்ந்தது.

உடனே அதனைக் கையிலெடுத்தவன், வேகமாகப் படிக்க ஆரம்பித்தான்.

படபடவென மழைத்துளிகள் சிதற,

கடகடவென மனதிற்குள் மின்னலடிக்க,

சடுகுடு சடுகுடு ஆட்டம் தொடங்குது.

வருவான் அவன் வருவான்

வேள்வித் தீயில் செம்மை பூசி

செந்தூரன் அவன் வருவான்!

வேடுவன் குகை ஒன்று,

வள்ளிக் குறி சொல்ல

மெல்ல அது திறந்திடுமாம்.

வான்துளி இனி அடங்காது,

அவன்கோரமும் இனி சிதறாது.

முழுநிலவன்று,

உதிரம் குடித்திடும் நாளோ!

உயிர் சிதறிடும் நாளோ!

பழி பெருகிடும் நாளோ!

வெறி அடங்கிடும் நாளோ!

இனம் காக்க ஒருத்தி,

தன்சொல்ல காக்க ஒருத்தி,

இருதுருவம் ஒன்றாக இணைந்தால்

எதிர்வரும் சிக்கல்கள் சிதறிடும் தூள்தூளாக!

நடுவில் ஒரு மாற்றம் உண்டாகும்,

அது மெய்யோ பொய்யோ அறிந்திட இயலாது.

பொருட்களின் தேடல் குகையினில் தொடங்க,

உண்மையின் தேடல் மனக்குகையினில் செதுக்க.

அறிந்தபின் அதிராது,

தொடருங்கள் பயணத்தை.

விதியை மதியால் வெல்லும்நாள்

வெகுதொலைவில் இல்லை.

நாதன் அவன் துணையிருப்பான்,

கணக்காக பலம் கொடுப்பான்.”

ஏதோ ஒரு உண்மை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. முதலில் இந்த மழையில் இருந்து காத்துக் கொள்ள ஒதுங்க இடம் வேண்டும் என்ற எண்ணத்திற்கும் முதல் வரியே பதிலாக வந்தது.

அதனை உணர்ந்துக் கொண்ட வள்ளி தன் குறிசொல்லும் குச்சியை நெற்றியில் வைத்து ஏதோ பாடத் துவங்கினாள்.

குகனே, குறும்பனே! வாக்கில் அமர்ந்திடுவாய். மெய் சொல்லும் நாவிதனில் மெய்யாய் அமர்ந்திடுவாய். ரேகைகள் இல்லாது வேர்களினால் குறி சொல்லிடுவாய். மண்ணோ மனமோ உனைத் தவிர்த்து ஏதும் இல்லை. உயிர்கள் காத்திடவே உடனே வந்திடுவாய். கெட்டது அழித்திடவே கெடுபிடி காட்டாது வாக்கு மலர்ந்திடுவாய்.” வேலவனை வணங்கியவள், அப்படியே அமர்ந்து மண்ணில் கைவைத்தாள்.

வேடுவனின் துணையிருக்கும் வேடன்குல குறத்தியிவள். குருவாய், திருவாய் மொழிகின்றேன் அன்னையே நீ எங்களை காத்திடணும். பெய்யும் மழையினிலே பெயரறியா உருவமொன்று, எங்களை துரத்தி வர, உயிர்காத்து உதவிடணும். கண்ணே கற்கண்டே, பாதகம் ஏதும் வாராமல் பாங்காய் பாதுகாக்க பாங்கி நீ முன் வரணும். மலையின்வாசன் அனுப்பி வைத்தான், மறுக்காமல் வந்திடணும். குறிப்புகளும் உன்னைக் கைக்காட்ட, குணமாய் திறந்திடணும். இருக்க இடம் தர, கைம்மாறு என்ன வேணும்? கருத்தாய் நீ மொழிந்தால் கலங்காமல் நாங்களிருப்போம்.”

கண்ணைத் திறக்காமலேயே, “அங்கை, பிறை. நீங்க ரெண்டு பேரும் மண்ணுல கை வச்சு, எந்த ஒரு சூழ்நிலைலயும் யாரோட இரத்தமும் இந்த கல்வராயன் மலைல சிந்த விடமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்கஎன்றாள் வள்ளி.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “நீங்க மலைத் தெய்வத்துக்கு வாக்கு தந்தா தான், அவ நமக்கு வழிகாட்டுவா. நம்புங்க, எந்த உயிரும் இங்க இரத்தம் சிந்தக் கூடாது. அதுக்கும் அவ நம்ம கூடவே இருப்பாஎன்று உறுதியளித்தாள்.

இயற்கையன்னைமீது பெரிய பாரத்தைப் போட்டு, இருவரும் மண்மேல் கைவைத்து வாக்கு பகர்ந்தனர்.

இந்த நிமிசத்துல இருந்து, எந்த சூழ்நிலை வந்தாலும் எந்த உயிரோட இரத்தமும் இங்க சிந்தாது. நாங்க ரெண்டு பேரும் ஒரே உயிரா இணைஞ்சு வாக்கு தரோம்என்றதும், இரண்டு மரங்களுக்கு இடையில் ஒரு பெரிய குகைவாயில் போல் ஒன்று திறந்தது.

மழை வலுப்பதற்குள் அனைவரும் உள்ளே செல்லுங்கள்என்ற சித்தர், அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு ஏதோ உந்த திரும்பினார்.

தூரத்தில் மலையின் உச்சியில், கையில் வில் அம்புகளோடு, தலையில் சேவல் இறகுகளை சுமந்தவாறு காட்சியளிக்கிறான் வேடன் என்னும் குறும்புக்காரன்.

சித்தர் அப்படியே நெடுஞ்சாணுக்கிடையாக விழுந்து தொழுகிறார். மனத்திற்குள், ‘அப்பனே சுப்பையா! பயணப்பட்டு கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் துணையாக இருந்து காத்தருள வேண்டுகிறேன். பயணம் முடியும் தருவாயில், உன் காலடியில் சராணகதி ஆகிட அருள் கொடுமய்யாஎன்று வேண்டிக் கொள்கிறார்.

அந்த சிறுவனின் இதழானது புன்னகை சிந்திட, சட்டென மறைந்தும் போனான்.

குகைக்குள் அனைவரும் சென்றனர். இரண்டு மரங்களுக்கு நடுவே சிறு படிகள் செல்ல, உள்ளே பெரிய குகை ஒன்று இருந்தது. இதற்கு முன் இங்கு யாரோ இருந்திருக்க வேண்டும். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சற்று தூசி படிந்து இருக்க, அனைவரும் இடத்தை சுத்தம் செய்தனர்.

நீ யாழுக்கு விளக்கிடு மஞ்சரி. அனைவரும் தெரிந்துக் கொள்ளட்டும்.” என்றார் சித்தர்.

முடிஞ்சத மறுபடியும் என்னால வெளிய சொல்ல முடியல. நான் சொல்றத விட, வள்ளி சொன்னா சரியா இருக்கும்னு நினைக்குறேன்புன்னகை பூசிய வதனம், பல வகையான உணர்வுகளை பிரதிபலித்தது.

அனைவரும் வள்ளியை நோக்கிட, நீண்ட பெருமூச்சொன்றை விட்டவள் மஞ்சரியோட காதல் கணவன்தான் செந்தூரன்.” என்று முந்தைய காலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

…..

நீலா வேள்வியைத் துவங்கி இருந்தாள். காளிங்கன், மலைமக்களின் கூட்டத்திலிருந்து ஒரு கன்னிப் பெண்ணை வசிய மருந்துக் கொடுத்து அழைத்து வந்திருந்தான்.

பிஞ்சின் முகம் எதையும் வெளிக்காட்டாது எதையோ வெறித்துக் கொண்டிருந்தது.

அந்த நள்ளிரவு நேரத்தில் கோட்டான்களின் சப்தத்தோடு, இன்னும் இனம் கண்டறியா இரைச்சலில் நீலாவின் வேள்வியும் நெருப்போடு துவங்கியது. தீ கங்குகள் எட்டுத்திக்கும் சிதறி தெறித்தன. அவளை சுற்றி கருநாகக் கூட்டம் மட்டுமே இருந்தது.

காளிங்கா, அனைத்து பொருட்களையும் எடுத்து வைஎன்று கட்டளையிட்டவள், மந்திரங்கள் சொல்லி வேள்வித் தீயை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

இம்முறையும் யாரும் அறியாமல் அந்த இடத்திற்கு வந்திருந்தாள் அங்கதினி.

இறைவா, எப்படியாவது இந்த வேள்வி தடைபட்டு விட வேண்டும். அவன் வெளியேற இன்னும் எட்டு தினங்கள் இருக்கிறது. அதற்கு முன் அவன் வந்துவிட்டால் இழப்புகள் பெரியதாய் இருக்கும்.’ என்று மனத்திற்குள் வேண்டியவள், நீலாவின் வேள்விப் பொருட்களை காளிங்கனுக்கு தெரியாமல் அப்புறப்படுத்தத் துவங்கினாள்.

அனைத்து பொருட்களையும் எடுத்து வந்த காளிங்கன், மீண்டும் அது இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

இப்போது தானே பொருட்களை கொண்டு வந்து வைத்தேன். அதற்குள் அனைத்தும் எங்கு சென்றன?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் எண்ணமானது, மறைந்திருந்து வந்த அங்கதினியின்மேல் திரும்பியது.

தனது நீண்ட வாலால் அவளை பிடித்தவன், “நீலா, இன்னுமொரு கன்னிப் பெண் கிடைத்துள்ளாள்.” என்றான்.

நீலா கண் திறந்துப் பார்த்தவள் எக்காளமிட்டு சிரித்தாள். “நினைத்தேன். எப்படியும் நீ தான் அந்த பெண்ணை காப்பாற்றி அழைத்து சென்றிருக்க வேண்டும். காவல் பரணிலிருந்து மற்றொரு வழிக்கு உன்னைத் தவிர வேறு யாராலும் அவளை அழைத்து சென்றிருக்க முடியாது. இப்போது இங்கு உனக்கென்ன வேலை?” வேள்வியைத் தொடர்ந்துக் கொண்டே கேட்டாள்.

காலம் இன்னும் இருக்கிறது அத்தையாரே. மீண்டுமொரு வாய்ப்பாக எண்ணி, அவனை வெளிக்கொணரும் நோக்கத்தை கைவிடுங்கள். மஞ்சரியம்மா உங்களுக்கு நல்லது செய்யவே எண்ணினார்கள். உண்மை அறியாமல் நீங்கள் இப்போதும் தவறுதான் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்தன்னால் முடிந்தவரை நீலாவிற்கு புரிய வைக்கும் நோக்கில் ஈடுபட்டாள் அங்கதினி.

மஞ்சரிஎனக்கு…. நல்லதுஎண்ணினாள்? கேட்கவே நகைப்பாக இருக்கிறது அங்கதினி. சரியோ, தவறோ நானும் என்னைச் சார்ந்தவர்களின் உயிரும் தற்போது என் கையில் இருக்கிறது. நம் இனம் என்றுமே வாக்கு தவறியதில்லை அங்கதினி. என்னைச் சார்ந்தவர்களை காப்பாற்ற நான் செந்தூரனை நிச்சயம் வெளிக்கொணர்வேன். அதற்கு எந்த எல்லைக்கும் நான் செல்வேன்

நான் இருக்கும்வரை நடக்க விடமாட்டேன் அத்தையாரே. நீங்கள் இந்த வேள்வியை நிறுத்தியே ஆக வேண்டும்.”

காலம் கடந்து இப்போது எனக்கு கனிந்துவிட்டது.” என்றவள், அங்கிருந்த சிறு பெண்ணின் மணிக்கட்டில் கத்தியால் கீறிட, பெருகிய உதிரத்தை நெருப்பிலிட்டாள்.

செம்மை நிறத்திற்கு சொந்தமானவனே! செந்தூரன் என்னும் நாமம் கொண்டவனே. உன் விடுதலைக்காக, கன்னிப் பெண்ணை தானம் செய்கிறேன். குருதி நாற்றம் முகர்ந்து, தடைகள் அனைத்தும் உடைத்து வெளியே வந்துவிடு. எங்களின் விடுதலையை தந்துவிடுஎன்றவள், அந்த பெண்ணை நெருப்பிலிட்டாள்.

சட்டென்று காளிங்கனிடம் இருந்து தப்பிய அங்கதினி, “நானிருக்கும் வரை, உனது சக்தி என்றும் முழுமையடையாது செந்தூராஉன் மகளும் மகனும் வரும் வரை அரைமனிதனாக உலாவிடுஎன்று கத்திக் கொண்டே அந்த நெருப்பில் குதித்தாள் அங்கதினி.

அங்கதினி…” நீலா அதிர்ச்சியாகிட, இடியென சத்தத்துடன் வெளிவந்தான் செந்தூரன்.

நீலாகொடுத்த வாக்கினை தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய். இன்றிலிருந்து நீயும் உன்னைச் சார்ந்தவர்களையும் நான் விடுவிக்கிறேன். நீங்களும் மற்றவர்களைப் போல் வாழலாம்என்றவன், அப்போதுதான் கவனித்தான்.

உடலின் மேல்பாகம் மட்டும் மனித உருவத்தோடு இருக்க, கால்களிரண்டும் கண்ணிற்கு தெரியாமல் இருந்தது. அதாவது, அவனின் இடுப்புப் பகுதியிலிருந்து கீழே மற்ற பாகங்கள் எதுவும் கண்ணிற்கு புலப்படவில்லை. அதில் பெரிதும் அதிர்ந்தான் செந்தூரன்.

எப்படி இது சாத்தியம்? நீ வேள்வியை சரியாகத்தானே செய்தாய்?”

சரியாகத்தான் செய்தேன். அதற்குள்…” நீலா தடுமாறிட,

அதற்குள் என்னவாயிற்று?” கர்ஜித்தான் செந்தூரன்.

அதற்குள் அங்கதினி நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.” என்றாள்.

அங்கதினி…” என்று கத்தியவன், “மஞ்சரி எங்கே?” பல்லிடுக்கிலிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவள்சுவடிகளை கண்டெடுத்து வன எல்லைக்குள் சென்றுவிட்டாள்.”

இடிஇடியென சிரித்தான் செந்தூரன். அவனின் கோரமுகம் இன்னும் கோரமாய் மாறியது.

, என் காதல் சுழலி மஞ்சரி! வந்துவிட்டேனடி. உன்னோடு கொஞ்சிக் கூடி குலாவிடும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். முழுநிலவன்று என் சக்தி முழுமையடைந்ததும் என் மடியில் உன்னை இருத்தி மஞ்சரியோடு மஞ்சம் பகிர்வேன்.” இடிகள் இடித்திட, மின்னல் மின்னிட, அந்த காடே அதிரும்படி அவனிட்ட கூக்குரல் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது.

வருவான் செந்தூரன்.

இனி நம் பயணம் அடுத்து செந்தூரனோடு தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்