
அழகான ஒரு காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் வைத்தியையும் மாறனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கைகளை வீசி நடக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் பேசிச் சிரித்தபடி கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களில் வயதான ஒருவர் மட்டும் நின்று வைத்தியிடம், “என்ன வைத்தி புது தோஸ்தா? உனக்கு ஏத்தாப் போலவே பிடிச்சிருக்கப்பா நீ! புது பையனா இருக்கானே, உனக்கு தெரிஞ்ச பையனா?” என மூக்குக் கண்ணாடியைக் கீழே இறக்கி மாறனை நோட்டம் விட்டபடி கேட்டார்.
அவனோ, அவரைப் பார்த்துவிட்டு வைத்தியைத் தான் பார்த்தான்.
வைத்தி சிரித்துக் கொண்டே, “நேத்து தான் இந்த வீட்டுக்குக் குடி வந்திருக்காங்க கிருஷ்ணா! தம்பி பேரு வெற்றிமாறன். தம்பியும் என் இனம் தான், அதான் உடனே தோஸ்து ஆகிட்டோம்…”
“ஏற்கனவே உன்னால வீட்ல திட்டு வாங்குறது பத்தாதுன்னு உன் கூட்டணியில ஆள் சேர்க்கிறியா வைத்தி? இளந்தாரியா வேற இருக்கான்! வீட்டு வேலையும் பார்ப்பான் போலயே? காலையில மட்டும் திட்டிட்டு இருக்கவ, இனி நைட்டும் திட்டுவாளே! நீ நடத்து வைத்தி!” என்று அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு நடந்தார்.
“என்ன பார்ட்னர், இப்படி பேசிட்டுப் போறார்?”
“நான் தான் சொன்னேனேப்பா! நான் வீட்டு வேலை பார்க்கிறதைப் பார்த்து அக்கம் பக்கத்துல இருக்கிற வீட்டு அம்மாக்கள் எல்லாரும் அவங்க புருஷன்மார்களை இடிக்க, அவனுங்க என்மேல வந்து காய்வாங்க! இப்ப நீ எனக்குக் கூட்டா சேர்ந்திருக்கிறதைப் பார்த்து டபுள் இடி கிடைக்கும். அதான் அந்த ஆதங்கத்தை மனுஷன் கொட்டிட்டுப் போறான். இவனுங்களும் பொண்டாட்டிக்கு உதவி செய்ய மாட்டானுங்க! பார்க்கிற நம்மளையும் செய்ய விட மாட்டானுங்க, வன்மம் பிடிச்சவனுங்க…” எனத் திட்டினார்.
“அதானே! சரியா சொன்னீங்க பார்ட்னர்… வீட்டு வேலை செய்யுறதுல, வீட்ல இருக்கிறவங்களுக்கு உதவி செய்யுறதுல என்ன இருக்கு? சரியான ஈகோ பிடிச்சவங்களா இருப்பாங்க போல பார்ட்னர். தானும் செய்யுறது இல்ல, அடுத்தவனையும் பேசி செய்ய விடுறதும் இல்ல. இந்த பேச்சுக்கெல்லாம் அசரக்கூடாது பார்ட்னர்! நமக்கு நம்ம கொள்கை தான் முக்கியம்… இவனுங்களை டீல்ல விடுங்க!” என்றவனைக் கண்டு புன்னகை செய்தார். இருவரும் நேரம் ஆவதைக் கண்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.
வேலையெல்லாம் முடித்துவிட்டுத் தனது கடைக்குச் செல்ல அவன் ஆயத்தமாக, சுடச்சுட அவனுக்குத் தோசை வார்த்தார் கோமதி. ‘அதையாவது நானே செய்கிறேன்’ என்று கேட்டு வாங்கிச் செய்கிறார், மகன் சூடாகச் சாப்பிட வேண்டும் என்று.
கிளம்பி வந்தவன் தோசையை வேகமாகப் பிய்த்து நாலு வாயில் உள்ளே தள்ளிவிட்டு, எழுந்தவன் பூஜை அறையில் நின்று ஒரு நிமிடம் கடவுளை வணங்கி, சாவியை எடுத்துக்கொண்டு வாசலில் வந்து நின்றான்.
கோமதியும் அவனோடு வாசலில் வந்து வழக்கமான ‘பத்திரம்’ பாட்டை அவனிடம் பாடினார். அவனும் சலிக்காமல் கேட்டுக்கொண்டான்.
தள்ளுவண்டியில் காய் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அவரைச் சுற்றிப் பெண்கள் காய் வாங்கிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட கோமதி இவனிடம், “என்ன காய் இல்லைன்னு சொல்லு வெற்றி! வாங்கி வைக்கிறேன்…” என்றார், சமையல் மகனின் பொறுப்பு என்பதால்.
அவனும் வண்டியை வெளியே எடுத்துக்கொண்டு, வீட்டிற்குத் தேவையான காய்கறிகளின் பெயரைச் சொல்லி, எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்று பாடம் எடுத்துவிட்டுச் சென்றான். அதைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் வாய் பிளந்து கை வைத்தனர்.
கோமதியும் உள்ளே சென்று கூடையும் பணமும் எடுத்து வந்து, அவன் சொன்ன காய்களை எல்லாம் பார்த்து எடுத்தார்.
“வளரோட அக்கா தானே நீங்க?” எனக் கைகள் வேலை செய்ய, வாய் அதன் பாட்டிற்குப் பேச ஆரம்பித்தது.
“ஆமாம்மா…”
“வீட்ல எல்லா வேலையும் உங்க புள்ளை தான் பார்ப்பாராமே!” எனக் கேட்டிட, “ஆமாம்மா! எனக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து தம்பி தான் பார்க்கிறான்…” என்றார் தக்காளியைப் பார்த்தபடி.
“உங்க வீட்டுக்கு வரப்போற மருமக கொடுத்து வச்சவ?” என்றதும் அவர் சிரிக்க, “வரன் எதுவும் பார்க்கலையா?” என்றார் பதிலுக்கு.
“இனி தான்மா வரன் பார்க்க ஆரம்பிக்கணும். பொண்ணு இருந்தா சொல்லுங்க…”
“அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு! நான் பார்த்து கட்டி வச்சதெல்லாம் ரெண்டு, மூணு புள்ளைக் குட்டிகளைப் பெத்துச் சந்தோஷமா இருக்குதுங்க…” எனத் தன் புகழ் பாடினார்.
கோமதியும் வியப்புடனே, “அப்போ என் பையனுக்கு ஒரு வரனைப் பார்த்துச் சொல்லுங்க. என் பையன் ரொம்ப நல்ல பையன், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. வேலை முடிஞ்சா வீடுன்னு இருப்பான். மெக்கானிக் கடை வச்சிருக்கான்; இதுபோக கார் வாங்கி விற்கிற தொழிலும் பண்றான். கைநிறையச் சம்பாதிக்கிறான்…” என்று மாறனின் புகழைப் பாடியவர், “நல்ல பொண்ணா, வீட்டு வேலை பார்க்கத் தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்! பொறுப்பா இருக்கணும். ஒரு டிகிரி இருந்தா போதும்…” எனத் தனது எதிர்பார்ப்புகளை அடுக்கிக்கொண்டே போனார்.
“ம்ம்… கண்டிப்பா சொல்றேன்மா… நம்ம பக்கம் பொண்ணு இருக்கான்னு பார்க்கிறேன்!” என இவரும் சொல்ல, இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக் கேட்டபடி நின்றிருந்த சம்ருதியும் வைத்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஏய் திமிங்கலம்… அதெப்படி ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நல்லவனா இருப்பான்? அதுவும் இந்தக் காலத்துல? நம்ப முடியலையே!” எனச் சந்தேகமாகக் கேட்டாள்.
“அந்த அம்மா சொன்னது போல மாறன் தம்பி ரொம்ப நல்ல பையனா தான் தெரியுறான் பாப்பா!” என்றார் அவளது வண்டியைத் துடைத்தபடி.
“ஓஹோ!” என்றவள் மேற்கொண்டு பேசவில்லை என்றாலும் உள்ளுக்குள், ‘அதெப்படி ரொம்ப நல்லவனா இருக்க முடியும்? அதுவும் நேத்து அவனோட முழியும் பார்வையும் சரியில்லையே! கண்டுபிடிக்குறேன்…’ என்றாள் தனக்குள்.
“வண்டியைத் துடைச்சிட்டேன் பாப்பா” என்று எழுந்தார்.
“ஆங்… நான் வர்றேன் வைத்தி! நேரத்துக்குச் சாப்பிடு. பழைய பூத் கேங்…” என ஆரம்பித்தவள் அவரது முறைப்பில், “சரி! உன் பழைய யூத் கேங்கோட அரட்டை அடிச்சிட்டு லஞ்ச் ஸ்கிப் பண்ணிடாத. கவனமா இரு, எதுனாலும் கால் பண்ணு!” என்று மிரட்டலும் எச்சரிக்கையுமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் செல்வதைப் பார்த்து நின்றவர் உள்ளே சென்றிட, அவர்கள் இருவரையும் நோட்டம் விட்ட கோமதி, வண்டியைக் கூடத் துடைக்காது பெரிய மனுஷனை வேலை வாங்கச் சொல்வதைக் கண்டு மேலும் அவள் மீது அதிருப்தி அடைந்தார். ‘இதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணப் போகுதோ?’ எனத் தலையில் அடிக்காத குறையாகப் புலம்பி, வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்தவள், தனது வருகையைப் பதிவு செய்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றாள் சம்ருதி.
பொதுநலம் மற்றும் இருதய மருத்துவர் என்பதால் அவளைப் பார்க்க நிறைய நபர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருக்க, பரிசோதனை செய்து தேவையான அறிவுரைகளையும் மருந்து மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்தபடி இருந்தாள்.
பின் இடைவேளையில் அவள் சிகிச்சை அளித்த உள்நோயாளிகளைப் பார்வையிட்டவள், செவிலியரிடம் அவர்களுக்குத் தேவையான மாத்திரைகளையும் மருந்தையும் கொடுக்கும்படி பணித்துவிட்டு வெளியே வந்தாள்.
விபத்தில் அடிப்பட்டுச் காலில் இரத்தம் வழியத் தாயுடன் வந்தவனுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வராத பட்சத்தில், சம்ருதி தான் அவனுக்குச் சிகிச்சை அளித்தாள். அவனுக்குச் சிகிச்சை தர, பக்கத்தில் நின்றிருந்த அவனது தாய் அழுதுகொண்டிருந்தார்.
“எப்படி ஆச்சு?”
“பைக்ல இருந்து கீழ விழுந்துட்டேன்.”
“எப்படி விழுந்த?”
“சட்டுனு ராங் வே-ல ஒரு மினி வேன் வந்துடுச்சு, மோதி கீழ விழுந்துட்டேன்…” என்றான் வலியோடு.
கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த தாயோ, “பொய் சொல்றான்மா! வண்டியை வேகமா ஓட்டிட்டுப் போய் எதிர்த்து வர்ற வண்டியில விட்டுருக்கான்மா… எதிரே வந்த வண்டி சின்ன வண்டின்னால இதோட போச்சு. பெரிய வண்டி எதுவும் வந்து ஒண்ணு கெடந்து ஒண்ணு ஆச்சுன்னா என்னம்மா பண்றது நானு? ஒத்தப் பிள்ளையை வச்சுட்டு என்னம்மா பண்ணுவேன்?” என்று கண்கள் கலங்கியபடி பேச, அவரது அழுகையையும் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் அவரது மகனையும் பார்த்தாள்.
அவளுக்கு விபத்தில் சிக்கிய அண்ணனின் ஞாபகம் வந்தது. கண்களை மூடித்திறந்து தன்னைச் சமன் செய்தவள், “என்ன வண்டி வச்சிருக்க?” என்றாள்.
“கே.டி.எம்!”
“என்ன வயசு உனக்கு?”
“இருபத்தொன்னு.”
“ம்ம்… படிச்சு முடிச்சிட்டியா?”
“ம்ம்… முடிச்சிட்டேன்…”
“இப்போ என்ன பண்ற?”
“சும்மா…” என இழுத்தவனால், அவளது அடுத்த பார்வையில் பேச்சு வரவில்லை.
“நீ யூஸ் பண்ற பைக் நம்ம ஊருக்குச் சுத்தமா செட் ஆகாத பைக். ஆனாலும், பைக் மோகத்துல உன்னை போல ஆட்களோட ஆசை தான் அந்த வண்டியை விற்கிறவனோட பேராசையா மாறுது! அந்த வண்டி வச்சிருந்தா ஹீரோவா நீ? இப்ப வரைக்கும் நீ ஜீரோ ஸ்டேஜ்ல தான் இருக்க!” என்று விரலை வைத்துக் காற்றில் வட்டம் போட்டுக் காட்டினாள்.
“உன் அம்மாவைப் பாரு. உன்னோட போராடி உனக்காக வாங்கிக் கொடுத்துட்டுத் தினம் தினம் செத்து பிழைச்சுட்டு இருக்காங்க. அந்தக் கவலை உனக்கு இல்லைல? உன் படிப்புக்கு, உன் தேவைக்குன்னு பணத்தைக் கொட்டினதுக்கு அவங்க அவங்களைக் கவனிச்சுட்டு இருந்திருக்கலாம். பாரு அவங்களை…” என்று அவரை நோக்கிக் கை காட்ட, அவனும் தன் தாயைப் பார்த்தான்.
“நல்லா சொல்லுங்க டாக்டர். இவன் ஒவ்வொரு நாளும் பைக்ல போகும்போது திரும்பிப் பத்திரமா வரணும்னு வேண்டிக்காத கடவுளே இல்லை. இவன் வீட்டுக்கு வந்ததும் தான்மா எனக்கு உயிரே வரும். அடம் பிடிச்சு பைக்கை வாங்கிட்டான்மா. இப்போ அதுக்கும் சேர்த்து உழைக்கிறேன் நான்…” என அவன் கூற, சம்ருதி அவனைத் துச்சமாகப் பார்த்துவிட்டு கைகளுக்கு மருந்து போட்டுவிடக் கைச்சட்டையை உயர்த்தினாள்.
அதில் “night_hero” என்று தலைக்கவசம் போட்டபடி ஒருவனின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான் அவன்.
“இது யாரு?”
“இவர் தான் நைட் ஹீரோ, இவரோட ஃபேன் நானு!” என்று ஆர்வமாகச் சொன்னவனின் பேச்சு அப்படியே இறங்கியது அவளது முறைப்பில்.
“என்ன பண்ணான் இவன்?”
“இவர் பைக் வச்சு ஸ்டண்ட் போடுவார் பாருங்க, ஸ்கிட் ஆக வாய்ப்பே இல்லை! இவர் போடுற வீடியோ செமையா இருக்கும். ஒரு சக்கரத்துலேயே பைக் வச்சுட்டுச் சுத்துவார். எப்படி தான் இவரால முடியுமோ!” என அவனைப் பற்றிப் பேசியதும் குதூகலமாகச் சொன்னான்.
அவளும், “ஓ… சர்க்கஸ்காரனா?” என்றாள். அவன் அப்படியே நிமிர்ந்து பார்த்தான்.
பல்லைக் கடித்தபடி, “இந்த நாயைச் செருப்பால அடிச்சா தான் அவனை ஃபாலோ பண்ற நீங்க திருந்துவீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கம்மா…” என்று கோபத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
தன் முன்னே வண்டியைத் தடவிக்கொண்டே அழுபவனைக் கண்டு மாறனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“அண்ணே!! பைக் சரியாக ஒரு வாரம் ஆகுமா?” எனப் பத்தாவது முறையாகக் கேட்டுவிட்டான்.
அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் வண்டிகள், வேலைப் பழுது அதிகம் இருந்த போதிலும், தன் முன்னே அழுது பேசுபவனிடம் தன்மையாகப் பேசிக்கொண்டிருந்தான் மாறன்.
“டேய் தம்பி! அழுதா மட்டும் பைக் தானா சரியாகிடுமா? நான் தான் சொல்றேனே! உன் பைக் பார்ட் லோக்கல் இல்லை. ஆர்டர் போட்டு வாங்கி, பிறகு தான் உன் பைக்கைச் சரி பண்ண முடியும். ஒன் வீக் ஆகும் தம்பி…”
“சரிண்ணே! முடிஞ்சா சீக்கிரமா கொடுத்துடுங்கண்ணே! என்னால பைக் இல்லாம இருக்க முடியல. பைத்தியம் பிடிக்குதுண்ணே. சீக்கிரமா சரி பண்ணித் தாங்க அண்ணே…” என்றவன் வண்டியை மீண்டும் ஒருமுறை தடவிக்கொடுத்துவிட்டுச் சென்றான்.
இவனும் சிரித்துக்கொண்டே தனது வேலையைப் பார்க்க, “ம்ம்… என்ன சொல்லு, பசங்களுக்கு பைக்னாலே தனி ஸ்பெஷல் தான்ல! காதலிக்கு இணையான ஃபீல் பண்றான் பார்றேன்…” என விஷால் கூறினான்.
“பசங்களுக்கும் பைக்குக்கும் இருக்கிற அட்டாச்மென்ட்டே வேறடா! உயிரினத்துல சேர்க்கலைனாலும் உறவுகளை விடக் காயப்படுத்தாத ஆறுதலை பைக் கொடுக்கும்டா. ஒரு ரவுண்ட் போனாலே போதும், மனசுல என்ன துக்கம் இருந்தாலும் பஞ்சாய்ப் பறந்திடும். மனசு லேசாகிடும், புத்துணர்ச்சி கொடுக்கும்…”
விஷாலோ, “ஒரு சாயா போல” என்று அவன் கையில் டீயைக் கொடுக்க, வாங்கிக்கொண்டான்.
“உனக்கு பைக்! எனக்கு டீ!” என்று ருசிக்க ஆரம்பித்தான்.
வேலைப்பழுவிலிருந்து இடைவேளை எடுத்துக்கொண்டு தனியாக அமர்ந்து இருவரும் பேசியபடி தேநீர் பருகினார்கள்.
“அப்புறம் மச்சி! எப்போ பைக் ரேஸ் தேதி அனௌன்ஸ் பண்ணப் போறாங்க?”
“சீக்கிரமே சொல்லப் போறாங்க. ஒரே எக்ஸைட்டடா இருக்குடா. நான் கலந்துக்கப் போற முதல் நேஷனல் லெவல் காம்பெடிஷன்… டிரைனிங் அகாடமியில நிறைய சப்போர்ட் இருக்கு, கண்டிப்பா நீ ஜெயிப்பேன்னு சொல்லிட்டு இருக்காங்க… ஜெயிக்கணும்டா!” என்று குதூகலமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மாறன்.
“நீ தான்டா ஜெயிப்ப! எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. இதுக்காக நீ எடுத்துக்கிட்ட டிரைனிங் கொஞ்ச நஞ்சமா! கண்டிப்பா நீ கப் அடிக்கிறதை நாங்க பார்க்கணும் மச்சி. என் நண்பன் கப் ஜெயிச்சா எனக்குப் பெருமை மச்சி…” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மாறனின் முகம் வாடிவிட்டது.
“என்ன மச்சி, என்னாச்சு?”
“இல்லை மச்சி, அம்மாக்குத் தெரியாம மறைச்சுப் பண்றதை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. எனக்கு இதுல அம்மா சப்போர்ட் கிடைச்சா டபுள் எனர்ஜியோட போட்டியில கலந்துட்டு இருப்பேன். ஆனா அவங்கள், நான் சாதாரணமா பைக்ல போனாலே பயந்து போறாங்க. கொஞ்சம் ஸ்பீட் ஏத்தினாலே ‘தம்பி’ங்குறாங்க. இதுல நான் மோட்டார் ரேஸ்ல கலந்துக்கப் போறேன்னு சொன்னா மயக்கம் போட்டே விழுந்திடுவாங்க. அவங்களுக்கு ஹார்ட் சர்ஜரி வேற பண்ணியிருக்கோம், அதிர்ச்சியான எதையும் சொல்லக்கூடாது. அதனாலே இப்படி மறைச்சுக்கலந்துக்கப் போறதை நினைச்சா தான் குற்றவுணர்வா, பாரமா இருக்கு மச்சி!” என நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலியுடன் கூறினான்.
“மச்சி கவலைப்படாத! நீ மட்டும் ஜெயிச்சிட்டா, அதை வச்சே மெல்ல மெல்ல அம்மாகிட்ட சொல்லி கன்வின்ஸ் பண்ணிடலாம்டா. அதுவரைக்கும் ஃபீல் பண்ணாத, மனசைத் தெளிவா வச்சிரு. எல்லாம் நன்மையில் முடியும்னு நினை…” என ஆறுதல் சொல்லித் தேற்ற, சரியெனத் தலையசைத்தான்.
சென்னையில் புகழ்பெற்ற மோட்டார் ரேஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்து, தகுதி ஒன்று இரண்டை வெற்றிகரமாக முடித்து, FMSCI உரிமம் பெற்று, இந்திய அளவில் வைக்கப் போகும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான். ஆனால் இதெல்லாம் கோமதிக்குத் தெரியாது. அவரிடம் சொல்லாமல் தான் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான்.
மகன் வண்டியில் சற்று வேகத்தைக் கூட்டினாலே பயம் கொள்பவர், மகன் பைக் ரேஸில் கலந்துகொள்ளப் போகிறான் என்று தெரிந்தால் அவ்வளவு தான்; அந்த நிமிடம் இதயத்தில் பெரும் வலி உண்டாகிச் சரிந்து விடுவார். அதற்குப் பயந்து தான் அவனும் அவரிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான்.
ஆனால், எவ்வளவு காலம் மறைத்து வைத்திருப்பது? ஒரு நாள் தெரியவரத் தான் போகிறது. அதற்கு முன்னே போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்துவிட்டு மெல்லமாகச் சொல்லி அவரை மாற்ற வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறான். விதி அவன் முடிவுக்கு இசைந்து கொடுக்குமா? இல்லை எதிர்த்து நிற்குமா? படைத்தவனுக்கே வெளிச்சம்!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

