
முகம் 04

வீட்டிலிருந்து கோபமாய் சென்ற கிருபாகரனோ எப்போதும் செல்லும் அந்த ஆற்றங்கரையிலே வானத்தைப் பார்த்தபடி தலைக்குக் கரத்தைக் கொடுத்துப் படுத்துக்கொண்டான்.
உரிமையாய் மாமன் மகளைக் கட்டிக்கொள்ள வேண்டியவன் தள்ளி நிற்கிறான். அதுவும் அவளால், அவள் ஒருத்தியால்…
இன்று நேற்று ஆரம்பித்ததா அவன் காதல்???
அரும்பு மீசை வளரத் தொடங்கிய காலத்திலிருந்து அவள்மீதான நேசமும் உரிமையாய் மொட்டவிழ்க்க ஆரம்பித்துப் பூந்தோட்டமாய் விகசித்திருந்தது.
தந்தை பகைமை பாராட்டினாலும் அவன் என்றும் அவர்களைப் பிரித்து நினைத்ததில்லை. அவர்களும் அப்படியே!
இன்பனின் வயது தான் இவனுக்கும், அவர்கள் ஒன்றாகப் படித்தவர்கள். நெருங்கிய நண்பர்களும் கூட, தீரனுக்கு இன்பன் எப்படியோ அப்படித்தான் கிருபாகரனும்…
அவன் காதல் விஷயத்தில் எல்லாம் சாதகம் தான். ஆனால் அவன் காதல் கேள்விக்குறியானது என்னவோ அவன் காதலிடத்தில் தான்.
அப்படியே படுத்திருந்தவனின் காதில் அவள் குரல், சட்டெனக் கண்களைத் திறந்தவனுக்கு அருகில் அவள் குரல் நெருங்குவது புரிய, இதழ்கள் தன்னால் விரிந்து கொண்டது.
“சீக்கிரம் வா சிவா? எதுக்கு இப்போ அன்ன நட நடக்கிற” என்று மலர் மேலும் அவளை இழுக்க,
“அடியேய் இப்போ இங்க எதுக்காகடி என்னை இழுத்துட்டு வந்த?” என்ற சிவரஞ்சினிக்குப் பதில் சொல்லாதவளோ முன்னே நடக்க, அவள் கரத்தைப் பற்றி நிறுத்தினாள் அவள்.
மலர்விழி என்னவென்று திரும்பிப் பார்க்க, அவளோ கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டியபடி கேள்வியாக இவளையே பார்த்திருந்தாள்.
“ப்ச், என்னன்னு சொன்னா தான் வருவியா?” என்று எரிச்சலுடன் கேட்டும் சிவாவிடம் பதில் இல்லை.
தான் சொல்லாமல் அவள் அசையவே போவதில்லை என்பதை உணர்ந்தவள், “இன்பா மாமா ஏன் வேணான்னு சொல்லிச்சுனு தெரிஞ்சிக்கணும்ல?” என்று கேட்டதும்,
“அதுக்கு…” என்று சிவரஞ்சனி கேள்வியாய் இழுக்க,
“அவங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சா தான சிவா நாம என்ன பண்ணுறதுனு யோசிக்கலாம். அவங்க ஃப்ரண்ட் இங்க தான இருப்பாரு அதான் விசாரிக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்” என்றாள் மலர்விழி.
அவளைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்த சிவாவோ “இது எனக்காக வந்த மாதிரி தெரியலயே!” என்க,
திருட்டு முழி முழித்த மலர்விழியோ “என்ன நீ உனக்காக நான் வந்தா என்னையே சந்தேகப்படுற, இப்போ அதுவா முக்கியம். இன்பா மாமா மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும். அப்பறம் அவங்க வழில போய் அவங்களக் கவுக்கணும். காதல்ல பின் வாங்க கூடாது செல்லக்குட்டி. ரன்னிங் ஃபயிட்டிங் எல்லாம் இருக்கணும்ல” என்றாள்.
சிவரஞ்சனிக்கோ அவள் விளக்கத்தில் தலையிலடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.
முகிழின்பன் அவன் திருமண விபரம் யாருக்கும் தெரியாது என்று சொல்லியதால், இவளும் அவனது தனிப்பட்ட விஷயத்தை மலர்விழியிடம் கூடப் பகிர விரும்பவில்லை.
இந்த ஒரு வாரமாக மலர்விழி எத்தனை கேட்டும் ‘தெரியாது’ என்ற பதில் தான் அவளிடம், அதுவே இப்போது வினையாகி விட்டது.
“ஒன்னும் தேவை இல்லை. அதான் மாமா வேணான்னு சொல்லிடுச்சுல. சோ எனக்கும் வேணா” என்று திரும்பி நடக்கப் போக,
“காதல் சிவா, காதல்… அப்படியெல்லாம் விடலாமா சொல்லு. ஒரு கை பார்க்க வேணாமா?” என்றாள் மலர்விழி. அதற்கு சிவரஞ்சனி ஏதோ பேசத் திரும்ப, சரியாக அந்த நேரம்,
“யாரு எதப்பத்தி பேசுறதுனு ஒரு நியாயமே இல்லாம போயிடிச்சு பாரேன் சிவா” என்று கிருபாகரண் அவர்கள் அருகில் வந்தான்.
அவனைக் கண்டு மலர்விழி திகைக்க, சிவரஞ்சனிக்கோ பயம் ‘எங்கே அவள் உளறிவிடுவாளோ’ என்று…
“மாமா… நீங்க எங்க இங்க?” என்றாள் சிவரஞ்சனி மலர்விழியை முந்திக்கொண்டு…
“இத உன் தங்கச்சிக்கும் கொஞ்சம் சொல்லிகொடு சிவா, நான் அவ மாமாவோட ஃபிரண்ட் மட்டும் தான அவளுக்கு” என்க, மலரோ உதட்டைச் சுளித்துக் கொண்டாள்.
“என்னப் பார்க்கத் தான வந்தீங்க அப்பறம் நான் இங்க எப்படினு கேட்டா என்ன சொல்றது?” என்றவன், அருகிலிருந்த திட்டில் பாய்ந்தமர்ந்து, அவர்களையே குறுகுறுவெனப் பார்க்க, பேசியது அவனுக்குக் கேட்டிருக்கிறது என்பது பெண்களுக்குப் புரிந்தது.
அதற்கும் சிவா “மாமா…” என்று இழுக்க,
“மாமா தான் சொல்லு சிவா, காதல்னு பேசிட்டு இருந்தீங்களே! யார் காதல்? எங்கிட்ட என்ன கேக்கணும்? இன்பாவப் பத்தியும் பேச்சு போச்சே!” என்று அத்தனையும் ஒன்று விடாமல் கேட்க, சிவாவோ அருகில் நின்றிருந்த மலர்விழியின் கையைக் கிள்ளி வைத்தாள்.
“ஆஆஆஆ… வலிக்கிதுடி” என்று கரத்தைத் தடவியபடி சிவாவிடம் சொன்னவள்,
கிருபாகரனிடம் “அதான் எல்லாம் கேட்டிச்சுல, அப்பறம் கேக்காதது போல என்ன நடிப்பு? இன்பா மாமா பத்தி தான். மாமா லவ் பத்தி தெரிஞ்சிக்கணும்” என்று சிவாவின் மறுப்பையும் மீறிச் சொல்லி விட்டாள்.
ஒரு நிமிடம் திகைத்தாலும் காட்டிக் கொள்ளாதவனோ “இன்பா லவ் உங்களுக்குத் தெரியுமா என்ன?” என்று எதிர் கேள்வி கேட்டான் அவன்.
“அதத் தெரிஞ்சிக்க தான் வந்தோம். மாமா மனசுல இவ இருக்கால்ல, இவ காதல நாம தான் சேர்த்து வைக்கணும்” என்று சொன்னதும் தான் தாமதம். அமர்ந்திருந்தவன் சட்டெனக் கீழே இறங்கி இருந்தான்.
“சிவா, நீ இன்பாவ…” என்று இழுக்க, அவளோ அவன் முகம் பார்க்காமல் தரையை நோக்கினாள்.
மலர்விழியோ “அதான் நான் சொல்லுறேன்ல, அப்பறம் என்ன அவ கிட்ட கேக்குறீங்க?” என்று இடையில் பேச,
“வாய மூடு மலர், இனி ஒரு வார்த்தை பேசினா பார்த்துக்க” என்று அழுத்தமாய் சொன்னவனது கண்களில் நிச்சயம் கேலி இல்லை.
ஏன் கோபம் என்று புரியாவிட்டாலும் மலர்விழி அடுத்து பேசவில்லை…
“சிவா, நான் அன்னைக்கே உன்கிட்ட என்ன சொன்னேன்?” என்றவன் கேட்க, சிவாவிடம் மௌனம்.
“எனக்குப் பதில் வேணும் சிவா?” என்று மீண்டும் தீர்க்கமாய் வந்தது அவன் வார்த்தைகள்.
“இன்பா மாமா, லவ் எல்லாம் பண்ணாதுன்னு என் ஃபிரண்ட் கிட்ட சொல்லச் சொன்னீங்க?” என்றாள் தயங்கியபடி…
“ஆஹ, அந்த ஃபிரண்ட் நீதான் அப்படித்தான? என்கிட்ட பொய் சொல்லிக் கேட்டியிருக்க” என்று கேட்க, அவள் தலையோ மேலும் கீழும் ஆடியது.
“சிவா, முதல்ல என்னப்பாரு. இன்பா கிட்ட பேசுனியா?” என்று கேட்க, அப்போதும் அவள் மௌனம் உடையவில்லை என்றதும் அவனுக்குப் புரிந்து போனது.
“மாமாகிட்ட அன்னைக்கே உனக்குன்னு கேட்டிருக்கலாமேடா, மாமா சொல்லி இருப்பேனே! இப்போ அவனுக்கு இருக்குற கவலை போதாதுன்னு உன் மனசக் கஷ்டப்படுத்துன கவலையும் சேரணுமா?” என்றான்.
மலர்விழிக்கோ ஒன்றும் புரியாத நிலை தான். ஆனால் கேட்க முடியாமல் அமைதியாய் நின்றிருந்தாள்.
சிவரஞ்சினியின் கண்களிலிருந்து உருண்ட கண்ணீர் கிருபாகரணுக்கு அவளுக்கு விடயம் தெரியும் என்பதை உறுதிப்படுத்தியது.
அவள் கரத்தை ஆதரவாகப் பற்றியவனோ “என்ன நடந்துச்சினு சொல்லு சிவா?” என்று கேட்க,
அதற்கு மேல் எங்கே மறைக்க, அன்று பண்ணை வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவளிடம் மௌனம்.
மலர்விழிக்கோ, ‘இன்பா மாமா திருமணம் செய்துவிட்டானா?’ என்ற அதிர்ச்சி…
தீரன் விடயத்தில் வீட்டில் நடந்ததை அவள் அறிவாளே! இன்றுவரை அவளது சக்தி மாமா மூத்த மகனிடம் பேசாத காரணமும் அது தானே!
கிருபாகரண் பேச வேண்டாம் என்றதை மறந்தவளோ “என்னடி சிவா சொல்லுற? உண்மையாவா?” என்றாள் அதிர்ச்சி மாறாமல்…
சிவாவோ தலையை மேலும் கீழுமாய் அசைக்க, அவள் விழிகள் மேலும் விரிந்து கொண்டதுதான் மிச்சம்.
‘இவ ஒருத்தி இந்தக் கண்ண விரிச்சி விரிச்சே என்னக் கொல்லுவா’ என்று மனம் போன போக்கில் திடுக்கிட்ட கிருபாகரனோ,
‘அட மானம் கெட்டவனே! இங்க என்ன நடந்துட்டு இருக்கு இப்போ உனக்கு இது ரொம்ப முக்கியமா?’ என்று எண்ணியபடி திரும்பிக் கொண்டான்.
அடுத்து மூவரிடமும் மௌனம். அடுத்து வார்த்தை வரவில்லை… என்னவென்று பேசுவது??
மலர்விழிக்கு தன் சகோதரியின் மனநிலை அன்று எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கையிலேயே கண்ணீர் வரப்பார்த்தது.
மௌனத்தை உடைத்தவளோ “ஏன் சிவா என்கிட்ட சொல்லல நீ? உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்?” என்று கேட்க,
மெல்லப் புன்னகைத்த சிவாவோ “மாமா சொல்லும்போது கஷ்டமா தான் மலர் இருந்திச்சி, ஏன் இப்பவும் கூட மறக்கணும்னு யோசிச்சதே வலிக்குது. ஆனா அதப் பண்ணித் தான ஆகணும். அதான் நான் மாமாவுக்கும் என் காதலுக்கும் செய்யிற உதவி” என்றாள்.
அவளது புரிதலில் கிருபாவுக்கு வியப்பு, ‘அவள் வயதில் தான் அப்படி யோசித்து இருப்போமா?’ என்ற கேள்விக்கு நிச்சயம் ‘இல்லை’ என்ற பதிலே அவனிடத்தில் வந்திருக்கும். அப்படி இருக்கையில் இவளது தெளிவான யோசனை அவனை பிரமிக்க வைத்தது.
மலரோ இன்னும் தெளியாத முகத்துடனே நிற்க, அவளது கரத்தைப் பற்றிக்கொண்டவளோ,
“நம்ம இன்பா மாமா அவங்க மேல அவ்வளவு காதல வெச்சிருக்கு தெரியுமா மலர்? அவங்க பேர சொல்லும்போது அது கண்ணுல எவ்வளவு காதல். அதையும் விட என்னைக் கஷ்ட படுத்துறோமேன்னு ஒரு வலிய அந்தக் கண்ணுல நான் பார்த்தேன் மலர். அத பார்த்தும் நான் மாமாதான் வேணும்னு நின்னா, நான் எல்லாம் என்னனு என் மாமாவை லவ் பண்ணேன்?” என்றாள்.
சிவாவை இறுக அணைத்துக்கொண்ட மலர்விழி “நீ ரொம்ப பெரிய ஆளாயிட்ட சிவா, நீ என் அக்கானு சொல்லுறது எனக்குப் பெருமையா இருக்கு தெரியுமா?” என்று உணர்ச்சி வசத்துடன் பேச,
“அடடா அப்ப என் தங்கச்சி இனிமேல் என்னை அக்கானு கூப்பிடுவா போலயே!” என்று அவளைச் சீண்டினாள் சிவரஞ்சனி.
அதற்கு அவளிடம் “ம்ம்ம்” என்று பதில் வர, சிவாவோ சுற்றும் முற்றும் எதையோ தேடினாள்.
மலர் புருவம் சுருக்கிப் பார்த்ததில், “ஒரு மாசம் முன்ன பொறந்தா எல்லாம் அக்காவான்னு கேட்குற மலர் எங்கன்னு தேடினேன்” என்று சிவரஞ்சனி சொல்ல, அதில் கிருபாவும் சிரித்து விட்டான்.
அவனைப் பார்த்த சிவாவோ அத்தனை நேரப் புன்னகை மறைந்து “ஏன் மாமா, அப்படி என்ன பிரச்சனை இன்பா மாமாக்கு, எதுவா இருந்தாலும் வீட்டுல சொல்லி இருக்கலாமே! எதுக்காக இப்படியொரு கல்யாணம். யாருக்கும் சொல்லாம பண்ணுற அளவுக்கு என்னதான் பிரச்சனை? இந்த விஷயம் தீரா மாமாக்குத் தெரியுமா?” என்று கேட்க,
அவனோ “தீராண்ணாக்கு இந்த விஷயம் தெரியாது சிவா, தெரிய வேணாங்கிறது தான் இன்பாவோட எண்ணம். நாங்க ரெண்டு பேரும் சீனியர் லாயர் சீனிவாசன் சார் கிட்ட ஜூனியரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம்ல அப்போ தான் அவங்களுக்குப் பழக்கம். திடீர்னு கல்யாணம் பண்ணிக்க வேண்டிய ஒரு சிட்டுவேஷன்” என்றவன்,
“கயலோட அப்பா ரொம்ப செல்வாக்கான ஆளு. எங்கே தன் அப்பா தன்னோட காதல பிரிச்சுடுவாங்களோன்னு கயலும் ரொம்ப பயந்துடிச்சு. அவ அவ்வளவு பேசியும் இன்பன் அதுக்கு ஒத்துக்கல. அவன் எவ்வளவு சொல்லியும் அவளும் கேக்குற மாதிரி இல்ல. சோ கடைசில அவ முடிவுபடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க, நான் தான் சாட்சி கையெழுத்தே போட்டேன்” என்றான்.
“சரி மாமா, அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கல்ல இப்போ சொல்லலாம் தானே? சட்டப்படி ஒன்னும் செய்ய முடியாதே!” என்று சிவா கேட்க,
“உனக்குத் தெரியாதா சிவா, வீட்டுல தீராண்ணா பிரச்சனையே எவ்வளவு தூரம் போச்சு. அதுக்காக தான் இன்பா அவ்வளவு எடுத்துச் சொல்லப் பார்த்தான். கயல் ரொம்ப பிடிவாதமா இருந்துடிச்சு” என்றான்.
“இப்போ என்ன பண்றது? நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமா? வேணும்னா வீட்ல சொல்லிடலாமா? என்னைக்கா இருந்தாலும் வீட்டுல இது தெரிய வேண்டியது தானே! அதுக்கப்பறம் இங்க நம்ம ஊர்ல அவங்க அப்பாவால எதுவுமே செய்ய முடியாதே!” என்றாள் மலர்விழி.
“அது உண்மைதான். ஆனா அவங்க ரெண்டு பேரும் அதுக்கு முதல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கணுமே” என்க, பெண்கள் இருவரும் “என்ன?” என்றனர் ஓரே நேரத்தில்…
“என்ன அக்காளும் தங்கச்சியும் கோரசா?” என்றவன்,
“அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்ல, கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பறம் என்ன பிரச்சனை வந்தாலும் வீட்டுல சொல்லலாம்னு இன்பா அன்னைக்கு பிடிவாதமா இருந்தான். ஆனா அதுக்கும் அவ சம்மதிக்கவே இல்ல. ஆர்கியூமென்ட் பெரிசாகி கல்யாணம் ஆனா அன்னைக்கே சண்டையும் போட்டுப் பிரிஞ்சிட்டாங்க” என்றான்.
மலர்விழி, “பிரிஞ்சிட்டாங்கன்னா?” என்று இழுக்க,
“வேற என்ன கோபம் தான். தன் மேல நம்பிக்கையே இல்லாம இப்படி அவசரமா கல்யாணம் பண்ணிக்க வெச்சிட்டான்னு இன்பாக்குக் கோபம். தான் இவ்வளவு சொல்லியும் என் மனசப் புரிஞ்சிக்கலனு கயலுக்குக் கோபம். ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டுன நான் ரொம்ப பாவம்” என்று முடிக்க, பெண்கள் இருவருக்கும் சட்டென அவன் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது.
“ஓகே நாம இன்னைலயிருந்து ஒரு மிஷன் ஸ்டார்ட் பண்ணுறோம். மிஷனோட பேரு ஐ.எம்” என்றாள் மலர்விழி உட்சாகமாக…
சிவா அவளைக் கேள்வியாய் பார்க்க, கிருபாவோ கேலியாக “என்ன ஐ எம் சாரியா?” என்க,
“உன் மூச்சி” என்று அவனுக்குப் பழிப்புக் காட்டியவள், “இன்பா மாமாவையும் அவங்க வைஃப் கயல்மொழியையும் சேர்த்து வைக்கப் போறோம்ல், சோ சீக்கிரட் மிஷன் இன்பமொழி. அத தான் ஷார்ட்டா ஐ.எம் னு வெச்சேன். எப்படி என் திறமை?” என்க,
கிருபா அவள் தலையில் தட்டியவன் “எல்லார் காதலையும் சேர்த்து யோசிக்கிற உன் மூளை என் காதல மட்டும் டீல்ல விட்டுடுதே ஏன் மலரு?” என்க அவளோ அவனை முறைத்தாள்.
சிவாவோ “உங்க சண்டையை அப்பறம் வைச்சிக்கோங்க, அவங்கள சேர்த்து வைக்கணும்னா முதல்ல அவங்கள மீட் பண்ண வைக்கணுமே! கல்யாணத்துக்கு அப்பறம் அவங்க மீட் பண்ணிக்கவே இல்லையா?” என்க,
“பேசிக்கிறதே இல்லங்கிறேன் இதுல எங்க மீட் பண்றது எல்லாம். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு இவன் தான் ஒத்துக்க மாட்டேங்கிறான்னு பார்த்தா அவ அதுக்கும் மேல, ஆனா ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்காம இருந்ததில்லை. என் மண்டைய உருட்டாத நாளும் இல்ல” என்றவன்,
“இதுல அவங்க விசாரிக்கிறது அடுத்தவங்களுக்கு தெரிய கூடாதாம். என் காதலி தொல்லை தான் தாங்கலன்னு பார்த்தா. இந்தப் புருசனும் பொண்டாட்டியும் காதலிச்சே என்னக் கடுப்படிக்கிறாங்க” என்றான் கிருபா மலர்விழியை ஓரக்கண்ணால் பார்த்தபடி…
அவளோ அதனை எத்தனையும் உணராமல் தீவிர யோசனைக்குப் பின் “மாமா ஒத்துக்காட்டி என்ன அவங்கள இங்க வர வைப்போம். அப்போ பார்த்துதானே ஆகணும்” என்றவளை சிவாவும் கிருபாவும் கேள்வியாகப் பார்த்தனர்.
கிருபா “இவனை அங்க சென்னைக்குக் கூட்டிட்டு போனாலே ரெண்டு பேரையும் சம்மதிக்க வெச்சு பார்க்க வைக்க முடியலங்கிறேன். இதுல அவளை என்னனு இங்க கூட்டிட்டு வர்றது. உருப்படியா ஏதாச்சும் யோசி” என்றான்.
“ஏன் முடியாது, அதெல்லாம் முடியும். மாமாவ பார்க்கனு ஏன் கூப்பிடனும், அவங்கள வேற வேலையா இங்க வர வைக்கலாமே!” என்றாள்.
“வேற வேலைக்குனா என்னது?” என்று அவன் கேட்க,
“ஹெலோ, எல்லாத்தையும் நானே சொன்னா நீங்க என்னத்த யோசிப்பீங்களாம். கொஞ்சமாச்சும் அந்த வக்கீல் மூளைக்கு வேலை கொடுங்க பாஸ்” என்றாள்.
கிருபாவோ “இவள பார்த்தியா சிவா, சொல்ல எதுவும் ஐடியா இல்லன்னதும் எப்படி நேக்கா எஸ்கேப் ஆகுறான்னு” என்று சிவாவிடம் சொல்ல,
அவளோ அவன் பேசியதை விட்டு ஏதோ யோசனை வந்தவளாக “மாமா, உங்கப்பா பிரீ மெடிக்கல் கேம்ப் நடத்தப் போறாங்கல்ல?” என்று நிறுத்த,
“ஆமா அதுக்கென்ன இப்போ?” என்றான் தந்தையைப் பற்றிக் கேட்தும் கோபம் வந்தவனாக…
“மாமா புரியலையா? இன்பா மாமா காட்டுன ஃபோட்டோல கயல்மொழி டாக்டர்னு தெரிஞ்சிது. இப்போ இங்க வர இருக்க மெடிக்கல் டீம் கூடச் சென்னைனு தான் போட்டிருக்கு, சோ அதுல அவங்களும் வர்ற போலப் பண்ணலாம்ல” என்க, அப்போது தான் கிருபாவும் அந்த வழியில் யோசித்தான்.
“டேய் சிவா சூப்பர்டா, இது நல்ல ஐடியா. இன்பெக்ட் கயலோட ஹாஸ்பிடல்ல இருந்து தான் மெடிக்கல் டீம் வருது. அதுல தான் நம்ம சித்தார்த் மாப்பிளையும் வேலை பார்க்குறாரு. மாப்பிளைக்கிட்ட சொல்லி இதுக்கு ஏதாச்சும் வழி இருக்கான்னு பார்க்கச் சொல்லுறேன்” என்றவனுக்கு வழி கிடைத்துவிட்ட மகிழ்வு.
ஈர்க்கும்…

