என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -03

Loading

முகம் 03

 

அன்று காலை வேதநாயகபுரக் காவல் நிலையம் அலறிய அலறல் அந்த ஊருக்கே கேட்டிருக்கும் அப்படியொரு சத்தம் அங்கே!

“ஏன்டா டேய், ஊருக்குள்ள மாமன் மச்சான் சண்டையைக் கோர்த்து விட்டுச் சிண்டு முடியிற வேலை பார்க்குறீகளோ? சீவிடுவேன். யாருடா உங்கள அனுப்புனது?” என்று லத்தியைச் சுழற்றியபடி வினவினான் ஏ.சி.பி ஜெயதீரன்.

இப்போது இங்கே சுற்றியுள்ள பதினெட்டு கிராமத்துக்கும் பொறுப்பான அதிகாரியாகக் கடமையில் இருக்கிறான்.

அவனது சொந்த காரணங்களால் வேலையைவிட இருந்தவனை அவனது நேர்மையைக் கருத்திற் கொண்டு ‘ஸ்பெஷல் கன்சிடரேஷன் போஸ்டிங்’ மூலம் அவனது கிராமத்தில் பணி புரிய அனுமதித்திருந்தார் அவனது உயர் அதிகாரி.

அவன் அடித்த அடியில் இருவரும் யாரென ஒப்புக்கொண்டதில் பல்லைக் கடித்த ஜெயதீரன். “ஜோதி” என்று சத்தம் கொடுத்தான்.

உள்ளே வந்த பரஞ்ஜோதி நண்பனை என்னவென்று பார்க்க, “அந்த சமரசத்தோட சமரசம் பேசணும் வண்டிய எடுடா” என்க,

பரஞ்ஜோதியோ “இன்னைக்கு அந்த சமரசத்துக்கு வாஸ்து சரி இல்லை போலயே! இருக்கு… நமக்கு இன்னைக்கு என்டர்டைமென்ட் இருக்கு” என்றபடி ஜீப்பை உயிர்பித்திருந்தான்.

கான்ஸ்டபில் பரஞ்ஜோதி தான் தீரனின் ஜீப் டிரைவர். ஜீப்பில் ஏறிவிட்டால் இறங்கும்வரை நண்பர்களுகிடையில் கலாட்டாவுக்குப் பஞ்சம் இருக்காது. தீரன் இங்கே மாற்றலாகி வந்ததும் முதலில் மகிழ்ந்தது ஜோதி தான்.

ஜீப் நேராகச் சமரசப் பாண்டியனின் அரிசி ஆளைக்குச் சென்று நிற்க, பாய்ந்து இறங்கிய தீரனோ “யோவ் சமரசம்” என்று சத்தம் ஒன்று வைக்க,

அவரும் அவர் வேலையாட்களும் வெளியே வந்தனர். வேலையாட்கள் என்பதை விட அவரது அடியாட்கள் என்றால் சரியாக இருக்கும். தனக்கெனக் கூலிக்கு மாறடிக்கும் சில ஆட்களை வைத்துக்கொண்டு அந்த ஊரில் களங்கம் செய்வதே அவர் தலையாயக் கடமை.

பரஞ்ஜோதியோ உள்ளே சென்று ஒரு இருக்கையை எடுத்து வந்து தீரனின் அருகில் போட, அதில் தோரணையாக அமர்ந்தவன், “என்ன சமரசம் நீயும் ஒவ்வொன்னா பண்ணுற ஆனா ஒரு நாள் கூடத் தாக்குப்பிடிக்காம மாட்டிக்கிறீயே!” என்று நக்கலாய் சொல்ல,

“டேய்…” என்றார் அவர் சத்தமாய்…

அதில் காதைக் குடைவதைப் போலச் செய்கை செய்தவன் “மரியாதை மனசுல இருந்தா போதும் உக்காரு ரசம், சமரசம்” என்றான் படுநக்கலாக…

“தீரா வீணா எங்கிட்ட மோதுற, வேணா” என்று கோபத்தை கட்டுப்படுத்தி அவர் சொல்ல,

“அடடே வீணா வேணா நல்ல ரைமிங். பட் டைமிங் தப்பாச்சே மிஸ்டர் ரசம்” என்றான்.

“நான் இன்னைக்கு பொறுமையா இருக்கேன் தீரா, என்னை சீண்டாத?” என்ற சமரசம், எதற்குப் பம்முகிறார் என்றே தீரனின் மனதில் கேள்வி முதலில் எழுந்தது.

‘எதோ சரியில்லையே!’ என்று எண்ணிய தீரனோ “இன்னைக்கு சாந்த சொரூபன் சமரசமா? அப்போ வசதியா போச்சு? நீ என்ன பண்ணுற நீயாவே ஏன் அவனுங்கள ஊருக்குள்ள விட்டன்னு ஒன்னு விடாம சொல்லிட்டன்னா என் சோலி முடிஞ்சிடும்” என்றான்.

அதற்கு அவரோ “எனக்குத் தெரியாது. எனக்கும் அந்த ரெண்டு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல?” என்றார்.

அவனோ பார்வையைக் கூர்மையாக்கி, “மங்குனி அமைச்சர்னு மணிக்கொரு முறை நிரூபிக்கிறியே சமரசம்” என்று சிரிக்க,

அவன் சொல்வது புரியாதவரோ “பெரியப்பான்னு ஒரு மரியாதை இல்லாம நடக்குற தீரா. வார்த்தையைப் பார்த்துப் பேசு” என்றவர் கடுகடுக்க…

இருக்கையை விட்டு எழுந்து அவர் அருகில் வந்தவனோ “அடடே பெரியப்பா சார்… உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆகுது சார்?” என்று அவரைப் பார்த்துக் கண்ணடிக்க,

அப்போதும் சமரசத்துக்குப் புரியவில்லை “என்னடா உளறுற? என்ன உன் தாத்தா அனுப்பி வெச்சரா? என்கிட்ட இருந்து பறிச்சுகிட்டது போதாதா உங்க குடும்பத்துக்கு” என்றார் கோபமாக…

“எலி எதுக்கு அம்மணமா ஓடும்னு எனக்குத் தெரியாதா மிஸ்டர் ரசம். அவனுங்க ரெண்டு பேர்னு நான் சொல்லவே இல்லையே! அப்பறம் எப்படித் தெரியுமாம்? சைட் பிஸ்னஸா ஜோசியம் ஏதும் பார்க்குறீங்களா பெரியப்பா சார்?” என்று கேலியுடன் கேட்க, சமரசப்பாண்டியனின் கண்களோ விரிந்து கொண்டது.

அந்த நேரம் சரியாக அரிசி ஆலைக்குள் நுழைந்தான் அவரது மகன் கிருபாகரன்.

அவனோ வண்டியை விட்டுக் கீழே இறங்கியதும் தான் தாமதம் “தீராண்ணா அது இவர் வேலை தான்ண்ணா. இந்த மனுஷனுக்கு புத்தி கெட்டுப் போய்க் கிடக்கு, தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்து வைக்கிறாரு. விவசாயதுக்காகப் பக்கத்து ஊருக்குப் போற தண்ணிய தடுக்க, இங்க ஆட்களைத் தூண்டி விடப் பார்த்திருக்காரு” என்று தான் விசாரித்த அனைத்தையும் ஒப்பித்தான்.

சமரசமோ ‘வந்துட்டான் அண்ணன் நொண்ணன்னுட்டு. இவனை எந்த நேரத்தில் சாவித்திரி பெத்து தொலைச்சாளோ? என் மானத்தை வாங்குறான்’ என்று எண்ணியபடி மகனையே முறைத்து நின்றார்.

“வா கிருபா, உன் அப்பா பண்ணதுன்னு தெரிஞ்சி தான் நானே வந்தேன். சும்மா ஒன்னும் இவரு எதுவும் பண்ணமாட்டாரே! உலக மகா கஞ்சம் இதுல, இலவச மருத்துவ முகாம் வேற, அதான் இடிக்கிது” என்று சொன்னவன்,

சமரசத்திடம் “என்ன மீறி ஊருக்குள்ள எதாச்சும் பண்ணலாம்னு கனவு காணாம, ப்ரசர் டேப்லெட் போட்டோமா ரெஸ்ட் எடுத்தோமான்னு இருக்கணும். இல்லனு வையேன், பொத்துனாப்ல தூக்கிட்டுப் போய் நானே லாகப்ல ரெஸ்ட் எடுக்க வைப்பேன்” என்றவன்,

கண்ணாடியைக் கண்களில் மாட்டியபடி “ஜோதி” என்று குரல் கொடுக்க, அந்தக் குரலுக்குக் காத்திருந்தவனோ அவனது அழைபேசியை ஒலிக்க விட,

‘பெரியப்பா… உனக்கு வைக்கிறேண்டா பெரிய ஆப்பா’ என்ற வடிவேலுவின் குரல் கேட்டது. ஜோதி அறியாத நண்பனின் எண்ணமா???

தீரனோ பரஞ்ஜோதியின் கழுத்தில் கரத்தைப் போட்டு “அப்பறம் என்ன பெரியப்பா சார், வரட்டா?” என்று அந்தப் பெரியப்பாவில் அழுத்தத்தையும் நக்கலையும் கூட்டியவன் ஜோதியுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

சமரசப்பாண்டியன் மாணிக்கவேல் பாண்டியனின் அண்ணன் மகன். மாணிக்கவேலின் தந்தை இருந்த காலத்தில் ஊருக்கு அத்தனையும் பார்த்துக்கொண்டது அவர் தான். அதில் எப்போதும் அவரது மூத்த மகனுக்கு உடன்பாடு இருந்ததில்லை.

திருமணம் செய்யும் வரை பொறுமையாக இருந்தவர், அதன் பிறகு அவரது பங்கைச் சண்டையிட்டு தான் வாங்கி இருந்தார்.

அதிலிருந்து அவருக்குக் குடும்பத்துடன் தொடர்பு சற்று குறைந்திருந்தது. அவரது பேராசையோ என்னவோ சொத்தை விரிவாக்குகிறேன் என அவர் செய்த அத்தனையும் தோல்வியில் தான் முடிந்தது.

மாணிக்கவேலின் தந்தை காலத்துக்குப் பிறகு, மாணிக்கவேல் தலைமை தாங்கியபோது, அண்ணனின் நிலையைப் பார்த்து மீண்டும் தங்களுடன் இணைத்து கொள்ளும்படி எத்தனை கேட்டும் அவரோ சம்மதிக்கவில்லை வீணாய் கோபத்தையே வளர்த்துக் கொண்டார்.

அதையே அவரது மகன் சமரசப் பாண்டியனிடமும் விதைத்திருக்க, தந்தையை விடப் பல மடங்கு வன்மத்தை இன்றுவரை சுமந்து கொண்டிருக்கிறார்.

பெரிய ஜமீனுக்கு அவர் செய்யாத தொல்லைகள் இல்லை எனலாம். முழு நேர வேலையாக அதையே தொடர, அண்ணன் மகன்மீது உள்ள கரிசனையால் மணிக்கவேலும் இதனைப் பெரிதாய் கண்டு கொள்வதில்லை.

அதிலும் வீட்டின் உள்ளவர்கள் அவரை எதுவும் செய்யாமல் பார்த்துக்கொள்வதும் அவர் தான்.

இன்பன் பல நேரங்களில் கோபத்தில் கொதிப்பதுண்டு, ஆனால் தீரனுக்கு தாத்தாவின் மனது புரியவே செய்தது.

சிறுவயது முதல் அண்ணன் வளர்ப்பில் வாழ்ந்த அவருக்கு, அண்ணனின் பாராமுகம் அத்தனை வலித்தது. அண்ணன் மகன் முகத்தில் அவரது அண்ணனைத் தான் இன்றைளவிலும் பார்க்கிறார். அதனாலேயோ என்னவோ சமரசப்பாண்டியனின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

தீரன் அவரை எதுவும் செய்வதில்லை என்றாலும் அவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பான். இப்படி அவர் எதையாவது செய்து மாட்டிக்கொள்ளும் வேலையில் அவர் பிபியை ஏற்றுவது இவன் வேலை.

இப்போது காவல் நிலையத்தை நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்த பரஞ்ஜோதியோ “ஏலேய் தோஸ்து அவர் தான் பண்ணார்னு தெரியுதுல அப்புறம் ஏன் சும்மா இருக்க, பெரியய்யாக்கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுக்க வேண்டியது தானே? ” என்று கேட்க,

புன்னகைத்தவனோ “ஏன்டா ஜோதிகா இத தான் இம்புட்டு நேரம் யோசிச்சிட்டு வந்தியாக்கும்? அவரு இதெல்லாம் பண்ணலனா தான் அதிசயம். ஆனா இந்த முறை அந்த மெடிக்கல் கேம்ப் தான் கொஞ்சம் இடிக்கிது, காசு எல்லாம் செலவழிச்சு நல்லது பண்ணுறாரே! ஏதோ இருக்கு. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்” என்றவனுக்கு உள்ளே ‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனை தான் ஓடியது.

____________

அதே நேரம் அங்கே சமரப்பண்டியனின் வீட்டில் கிருபாகரன் தந்தையைக் கத்திக் கொண்டிருந்தான்.

“இனிமேல் நீங்க ஏதாச்சும் இப்படி பண்ணீங்கன்னா நான் மனிசனா இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க” என்றான்.

“நீ எதுக்காக அந்தக் குடும்பத்துக்கு வாலாட்டுறன்னு தெரியும் அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன் கிருபா” என்று அவரும் பதிலுக்குக் கத்த…

“யாருக்கு வேணும் உங்க சம்மதம்? மலர் எனக்குத்தான் அத யார் வந்தாலும் மாத்த முடியாது. அவ எனக்கு இல்லைனா அப்படியே குமரவேல் வேதவல்லி பொண்ணா அந்த வீட்டுலேயே இருந்துட்டு போகட்டும். அவளுக்காக மட்டுமில்ல அங்க இருக்குற நல்ல உறவுக்காகவும் தான் இப்போ பேசிட்டு இருக்கேன். அவ்வளவு சொந்தம் இருந்தும் இப்படி தனியா நிற்க வெச்சிடீங்களே! என்னதான் அவங்க என்ன பிரிச்சு பார்க்கல அப்படினாலும் நீங்க செய்ற ஒவ்வொரு விசயத்திலயும் என்னைக் கூனிக்குறுகி நிற்க வைக்கிறீங்க” என்றவன்,

“உரிமையா என் தாத்தா என் மாமா என் அண்ணான்னு சொல்ல வேண்டிய நான், மூனாவது மனிசனாத் தள்ளி நிற்குறேனே! அன்னைக்கு வேதா அத்தை தீரா அண்ணனுக்குத்தான் மலர்னு பேசும்போது உரிமை இருந்தும் பேச முடியாம நின்னேனே! எல்லாம் யாரால உங்களால, இத உங்களுக்கு எப்படிச் சொன்னாலும் புரியாது. நீங்க இப்படியே இனிமேல் பண்ணிட்டு இருந்தா எப்போவும் போலப் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்க,

சமரசமோ அவன் பேசிய எதையும் புரிந்து கொள்ளாமல் “என்னடா பண்ணுவ?” என்று எகிற, மகன் அதற்கு மேல் எகிறினான்.

அத்தனை நேரம் மகனையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்திருந்த சாவித்திரியோ மகன் கணவரை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு கிருபாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தவர்,

“போடா இங்க இருந்து வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுற, முறைச்சிகிட்டு நிக்குற, அப்பான்னு ஒரு மரியாதை இருக்கா உனக்கு? உன்னை தூங்கத் தரைல போட்டா வலிக்கும்னு மார்லயே தூங்க வெச்சவருடா அவரு. நீங்க வளர்ந்தா பெரிய ஆள்னு நினைப்போ, போடா வெளிய” என்றதில் தன் தவறை உணர்ந்தவன்,

“சாரி மா, சாரி ப்பா” என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அதன் பிறகு சாவித்திரி கணவனையும் விட வில்லை, காய்ச்சி எடுத்துவிட்டார். அந்த குடும்பத்தின் மீதான பகையைத் தவிர்த்து அவர்மீது சொல்லிக்கொள்ளும்படி எந்தக் குறையும் இல்லை.

சாவித்திரியும் இத்தனை வருடம் போராடி விட்டார். ஆனால் மனிதர் மாறிய பாடு தான் இல்லை.

சில குணங்கள் மாறப் பெரும் பிரயத்தனம் வேண்டும், அதிலும் சமரசம் விடயத்தில் நடப்பது அரிது தான்.

_______________________

சென்னையில் கற்பகம் மருத்துவமனை அத்தனை பிரசித்தி வாய்ந்தது. உலகிலே விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் ஒருவரான ராம்பிரசாத்துடைய மருத்துவமனை அது. அவரது தந்தையினால் ஆரம்பிக்கப்பட்டது.

மருத்துவத்துறையை இலவசமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது கற்பகத்தின் என்ணம். மனைவியின் விருப்பத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட மருதுவமனை அது.

ஆனால் அதற்குச் சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு என்பதால் ஏழை மக்களுக்கு முற்றிலும் இலவசமாகவும், நடுத்தர வர்க்கத்தினரிடம் சிறு சலுகையுடனும், பணக்கார வர்க்கத்தினரிடம் ஏற்றுக்கொள்ளும் படியான கட்டணமும் என நிகழும் ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வாங்கப்படுகிறது.

அதுவும் அதிகம் என்றெல்லாம் இல்லை. சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது இங்கு மிகவும் குறைவுதான்.

அதற்காக எல்லாம் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் எந்தக் குறையும் வைத்ததில்லை கற்பகம். அவர் ஒரு இதய மருத்துவர்.

தங்களது சொந்தப் பணத்திலும் பல உதவி செய்ய முன்வரும் அமைப்புகளின் உதவியுடனும் தான் அவர் இந்தச் சேவையைச் செய்து வந்தார்.

உலகம் சுயநலமான மனிதர்களால் நிரம்பி இருப்பதைப் போல ஆங்காங்கே சில நல்லவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இவருடன் கைகோர்த்திருந்ததனால், இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் ராம்பிரசாத்தின் தலைமையில் முடியுமான வரை சேவை இன்றளவிலும் தொடர்ந்து செல்கிறது.

அங்கே மருத்துவரைக் காண வெளியே அமர்ந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, மனைவியானவளின் கரத்தில் கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி பொதிந்திருந்தது.

வியர்த்துப் போயிருந்த அந்தக் கரம் நடுங்க, கணவன் அவள் கரத்தை ஆதரவாய் பற்றிக்கொண்டான்.

அடுத்து சில நொடிகளில் அவர்கள் அழைக்கப்பட, மௌனமாய் எழுந்து உள்ளே சென்றனர் இருவரும்.

அங்கே மருத்துவர் அமரந்திருந்த மேசையில் ‘டாக்டர் பூங்கோதை ராம்பிரசாத். எம்.பி.பி.எஸ்(M.B.B.S), டி.ஜி.ஓ(D.G.O), எம்.டி(M.D). மகப்பேறு மற்றும் பெண்கள் நல நிபுணர்’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்தவர்களை கண்டு “வாம்மா மீனா, உக்காரு, நீங்களும் உக்காருங்க அரவிந்த்” என்ற பூங்கோதை அவர்களைப் புன்னகை முகமாகத் தான் பார்த்தார்.

அவர் என்றும் அப்படித்தான். அவரிடம் வரும் நோயாளிகளிடம் அவர் பேசுவதிலேயே அவர்களுக்குப் பாதிக் கவலை குறைந்துவிடும்.

அரவிந்த் தான் ஆரம்பித்தான். “டாக்டர், இன்னைக்கு ஸ்கேன்னுக்கு வரச் சொன்னீங்களே!” என்று ஆரம்பிக்க, பூங்கோதையின் முகம் சற்று இறுகி மீண்டும் சாதாரண நிலைக்கு வந்திருந்தது.

மீனாவை ஸ்கேன் செய்வதற்காக உள்ளறையில் தாதி ஒருவர் ஏற்பாடுகளைச் செய்ய, பூங்கோதையும் உள்ளே நுழைந்து சில வினாடிகளின் பின்னே வெளியே வந்தார்.

அவருடன் மீனாவும் வர, பூங்கோதையின் முகத்தை வைத்தே ஏதோ பெரிதாக இருக்கிறது என்பது அந்தத் தம்பதியினருக்குப் புரிந்தது.

“அரவிந்த், மீனா ரெண்டு பேருமே நான் சொல்றத சரியா புரிஞ்சுக்கணும். பதட்டப்படாதீங்க. இத சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில நான் இப்போ இருக்கேன். ஐ நோ இது உங்களுக்குக் கடக்க முடியாத கஷ்டமான சிட்டுவேஷன் தான். பட் கடந்து தான் ஆகணும்” என்றவர்,

சிறு அமைதிக்குப் பின் “மீனாவோட கர்ப்பபையில தங்க வேண்டிய குழந்தை. இப்போ அவளோட கர்ப்பப்பைக் குழாய்ல தான் தங்கி இருக்கு. இத நாங்க எக்டோபிக் பிரக்னன்சினு சொல்லுவோம். ஸ்கேன் எடுத்தா தான் கன்போர்ம் பண்ண முடியும் அதுனால தான் அன்னைக்கு நான் இதப்பத்தி எதுவும் சொல்லி உங்கள பயமுறுத்தல. ஆனா இதக் கண்டினியூ பண்ண முடியாது. இதுவே தொடர்ந்தா குழந்தையோட அளவு கூடும்போது கர்ப்பப்பைக் குழாய் கிழிய வாய்ப்பு அதிகம். நிறைய ப்ளட் லாஸ் ஆகும். அது மீனாவோட உயிருக்குதான் ஆபத்து. இப்போதைக்குக் கர்ப்பப்பைக் குழாய்க்கு எந்தச் சேதாரமும் இல்ல, இன்ஃபெக்ட் குழந்தையோட ஹார்ட் பீட் கூட இன்னும் ஸ்டார்ட் பண்ணல. சோ…” என்று அவர் வசனத்தை முடிக்காமல் நிறுத்த,

அவர் சொல்ல வருவது புரிந்த மீனாவோ வெடித்து அழுதுவிட்டாள். ஆனால் அவள் அழுகுறலோ எப்போதும் போல் குரல்வளையை விட்டு வெளியே வரவில்லை.

ஆம் அவளால் பேசவோ, பேசுவதைக் கேட்கவோ முடியாது. பேசும் நபரின் இதழ் அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ள முடியும். பிறவியில் இருந்தே அவளது நிலை அது.

அரவிந்தின் மனமோ மௌனமாய் அழ, கரங்கள் மனைவியை அரவணைத்துக் கொண்டது.

அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமாகி நான்கு வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இப்போது தான் ஒரு நல்ல செய்தி வந்திருக்க, இன்று அதுவும் இல்லை என்றதும் அவர்களால் தாங்க முடியவில்லை. அழுகையூடே “என் குழந்தை, எனக்கு இல்லையா?” என்று அவள் சைகையில் கேட்க,

“மீனா ரிலாக்ஸ்ம்மா, நீ எவ்வளவு ஸ்ட்ரோங் கேர்ள். இத எல்லாம் கடந்து வந்து தானே ஆகணும். கடவுள் நம்மகிட்ட இருந்து ஒன்ன எடுத்துக்கிறார்னா நிச்சயம் அது நமக்கானது இல்லைன்னு தானே அர்த்தம். அந்தக் குழந்தை பிறந்து கஷ்டப்படுறத விடக் கடவுள்கிட்டயே இன்னொரு கடவுளா போகப் போகுதுனு நினைச்சிக்கோடா. சீக்கிரமே உங்க குழந்தை உங்ககிட்டயே மறுபடியும் நல்ல ஆரோக்கியதோட வந்துடுவான் பாருங்க” என்றவர் ஆறுதலாய் மீனாவின் கரத்தைப் பிடிக்க, அவரது கரத்திலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அவள்.

குழந்தை இல்லையேயென ஆரம்பித்து இன்று வரை பூங்கோதையிடமே மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதனாலேயே அவருடன் அவளுக்கு ஒரு நெருக்கமான உறவும் உருவாகி இருந்தது. தாய் இல்லாதவள் அவரைத் தான் தாயாய் நினைத்தாள்.

அவள் அழுது முடிக்கட்டும் என்று அவர் பார்த்திருக்க, அவளோ களைத்து மயங்கி இருந்தாள்.

அரவிந்த் பதட்டத்துடன் அவளைப் பார்க்க, அவளைச் சோதித்த பூங்கோதையோ “டோன்ட் ஒர்ரி அரவிந்த், இது ஜஸ்ட் நார்மல் மயக்கம் தான். இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். இப்போ மீனா ரொம்ப எமோஷனலா இருக்கா, இந்த நேரத்துல நீங்க தான் அவ கூடவே இருந்து பார்த்துக்கணும். இன்னைக்கு ஈவினிங்கே ப்ரோஸஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவர் தாதியை அழைத்து மீனாவை வார்ட்டில் அனுமதிக்கும்படி கூறி, அடுத்த நோயாளியைப் பார்க்கத் தொடங்கினார்.

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்