என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-02

Loading

   

         முகம் 02

 

 

“அபி கெட்டப், எவ்வளவு நேரம் தான் தூங்குவ? ஊருக்குப் போகத் திங்ஸ் எல்லாம் வாங்க வேணாமா? நீ சமத்தா கே.ஜி போய் வருவியாம். ஈவினிங் நாம கடைக்குப் போவோமாம். என் சித்துக்கு ஏதோ கிஃப்ட் வாங்கணும்னு சொன்னியே!” என்று சொல்லிக் கொண்டிருக்க,

“உன் சித்து இல்ல, என்னோட சித்து” என்று திருந்தியவன் எழுந்தமர்ந்தான்.

அதில் சிரித்து விட்டவள் “நோ நோ என் சித்து தான்” என்று அவன் முரண்டுபிடிப்பதைக் கருத்தில் கொள்ளாமல் அவனைக் கைகளில் அள்ளிக்கொண்டாள்.

“மொயி டோன்ட் டச், லீவ் மீ” என்று அவன் கத்த,

“முதல்ல ஒழுங்கா மொழின்னு சொல்ல ட்ரை பண்ணு, அப்பறம் நான் விடுறதப் பத்தி யோசிக்கிறேன்” என்றவள் அவனோடு குளியலறைக்குளுள் நுழைய, அடுத்த பத்து நிமிடங்களுக்கு அபியின் சத்தம் அந்த அங்கே தான் எதிரொலித்தது.

அடுத்த சில வினாடிகளில் வெளிய வந்த அபினவ் முறைத்தபடி நிற்க, அவனைத் தயார் செய்தவள், “பார்த்து போ அபி, தாத்தாவ தொல்லை பண்ணக் கூடாது” என்றாள். அவனும் கீழே வர, தியாகராஜன் அவனுக்காகக் காத்திருந்தார்.

“வா அபி, லேட் ஆகிடிச்சு பாரு. மொழி வர்றதுக்குள்ள சாப்பிடு” என்க, அவனும் பெரிய மனிதன் தோரணையில் தலையசைத்து அமர்ந்துகொண்டான்.

சாப்பிடும் நேரம் எதுவும் பேசவில்லை அவன். இத்தனை நேரத்துக்குக் குறைந்தது பத்து தடவையாவது ‘தியா’ என்று அழைத்து எதையாவது பேசிக் கொண்டிருக்கும் அபினவ் இன்று அமைதியாய் இருந்ததில் அவருக்கோ யோசனை.

“என்னாச்சு அபிக்குட்டிக்கு?” என்று அவர் கேட்க,

“அபிக்கு டாடி வேணும்” என்றான் குழந்தை.

அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மொழி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தாள்.

அவன் சொன்னது அவள் காதில் நிச்சயம் விழுந்திருக்கும் என்பது தியாகராஜனுக்குப் புரிந்தாலும் அவர் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.

அவர் அந்த விடயத்தில் குறையா குற்றவுணர்வுடன் இன்று வரை இருப்பவராகிற்றே! அதில் மொழியுடன் இன்றும் அவருக்கு மனஸ்தாபம் தான்.

கீழே வந்தவள் “அபி ரெடியா போகலாமா?” என்று கார் சாவியை எடுத்துக்கொள்ள, அவன் எதுவும் பேசாமல் அவனது பையுடன் முன்னே நடந்தான்.

“மொழிமா, அபி…” என்று தியாகராஜன் இழுக்க,

“முடிஞ்சதப் பத்திப் பேசிப் பயனில்லை மாமா விட்டுடுங்க, அபிக்கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றவள் வெளியேறி இருந்தாள்.

காரில் ஏறியது முதல் குழந்தை அபி அமைதியாகவே வர அவளுக்குக் கவலையாகிப் போனது.

“அபிக்கு இத்தனை நாள் அம்மாவத் தானே பிடிச்சிது. இப்போ என்ன திடீர்னு அப்பாவைக் கேக்குறீங்க?” என்று அவள் எத்தனை முயன்று கட்டுப்படுத்தியும் அவள் குரல் சற்று பிசறிவிட்டது.

“ம்மாஆ” என்றான் குழந்தை. அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. சில நாட்களாக அப்பா வேண்டும் என்றொரு எண்ணம் அவனுள் விதைக்கப்பட்டிருந்தது.

அவர்கள் வசிப்பது அமெரிக்கா. அங்கே குடும்ப அமைப்பு என்பது பெரிதும் குறைவு தான். அங்கே குழந்தைகளைத் தனியே வளர்ப்பவர்கள் பொதுவாக இருப்பது தான். ஆனால் அபினவ் படிக்கும் சிறுவர் பள்ளியில் அவனோடு படிக்கும் அவனது நண்பன் அக்ஷயின் குடும்பம் என்னவோ இந்திய வாசிகள்.

அக்ஷயின் தந்தை அவன்மீது காட்டும் பாசம் இவனைத் தந்தையைப் பற்றி யோசிக்க வைத்திருந்தது. கடந்த மாதம் தான் மொழியிடம் தந்தையைப் பற்றி முதலில் கேட்டிருந்தான்.

அவளுக்கு மறைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. இன்னும் சிறிது வளர்ந்ததும் சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்க, அன்று அவனே கேட்கையில் மறைக்கத் தோன்றாமல் அவன் வயதுக்குப் புரியும்படி தாங்கள் பிரிந்து விட்டதைச் சொல்லி இருந்தாள்.

அன்றிலிருந்து தந்தையைப் பார்க்க வேண்டும் என்று உள்ளே ஆசை பெறுக, தாயைத் தொல்லை செய்து கொண்டிருக்கிறான்.

“மொயிமா, என் டாடி எப்படி இருப்பாங்க, அக்ஷய் டாடி போல உயரமா, மீசை எல்லாம் வெச்சிருப்பாங்களா? என்னை முதுகுமேல எல்லாம் தூக்கிப்பாங்களா? ஏன் அவங்க என்னைப் பார்க்க வரல? டாடிக்கு அபிய பிடிக்காதா?” என்று குழந்தை ஏக்கமாய் கேட்க, அவனது ஏக்கம் அவளுக்குப் புரியாமல் இல்லை.

காரை ஓரமாய் நிறுத்தியவள் குழந்தையின் பக்கம் திரும்பி, “அபிக்குட்டிய உன் மொழிமா தூக்கிப்பேன் தானே ம்மா! அப்போ உனக்கு மொழிமா வேணாமா?” என்றாள்.

அபியோ “வேணும், டாடியும் அபிக்கு வேணுமே” என்க,

அவளோ முகத்தைச் சுருக்கியபடி “எனக்கு அபிக்குட்டி தானே டாடி மம்மி எல்லாம். அப்போ உனக்கு உன் மொழிமா அப்படி இல்லையா?” என்று அவன் கன்னத்தில் இதழ்பதிக்க, அபினவோ தாயையே பார்த்திருந்தான்.

அவன் எதற்கும் அடம்பிடிக்கும் குழந்தை எல்லாம் இல்லை, அவள் சொல்வதைத் தட்டாமல் கேட்கும் குழந்தை தான். இந்த ஒரு விடயம் தான் அவன் அடம் பிடிப்பதும் கூட, அவளுக்கும் எப்படி கையாள்வது என்பது புரியவில்லை.

அவள் நினைத்தால் சொல்லி விடலாம் தான். ஆனால் அவள் மனது அதற்கு உடன் படவில்லை. குறைந்தது தந்தையின் புகைப்படமாவது காட்டலாம் என்றால், அதன்பின் நிச்சயம் அபியின் பிடிவாதம் இன்னும் தான் கூடும் என அவள் அறிவாளே!

‘ம்ம்கூம், வேண்டாம். வேண்டவே வேண்டாம்’ என்று எண்ணியவள், அந்தப் பழைய நிகழ்வுகளை அடித்து விரட்டினாள்.

அவனையே பார்த்திருந்தவளது விழிகள் மகனின் தவிப்பில் கலங்க, கண்ணீரோ அவள் கன்னம் நனைத்தது.

அம்மா அழுவதைக் கண்டவனுக்கு ‘தன்னால் தானோ?’ என்று ஒரு எண்ணம் பிறக்க, அவள் கன்னத்தைத் துடைத்து,

“அபிக்கு மம்மி தான் டாடி, மொயிமா டோன்ட் க்ரை” என்றவன் அவள் கன்னத்தைத் துடைக்க, மகனது புரிதலில் அவன் அழுகை மேலும் வெடிக்கவே செய்தது. அதில் குழந்தை இன்னும் மிரண்டு தான் போனான்.

“மம்மி நோ, அபி குட் பாய், டாடி கேட்கமாட்டேன்” என்று அவள் கழுதைக் கட்டிக்கொண்டு அவனும் அழ,

தன்னை நிதானித்தவள் “அபி லுக் அட் மீ. மம்மி அழல பாரு” என்று அவன் முகத்தை உயர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தாள்.

“இன்னைக்கு அபியும் நானும் அவுட்டிங் போகப் போறோம்” என்று சொல்ல, கண்களை விரித்தான் அபினவ்.

அதன்பின் தாய் மகன் இருவரும் அவர்களது உலகில் சஞ்சரிக்க, மன அழுத்தங்கள் சற்று விலகி நின்று தான் வேடிக்கை பார்த்தது.

_____________________

அங்கே அவனறையில் அமர்ந்திருந்த இன்பன் முகத்தில் கவலையின் ரேகை. ‘இதற்கு என்ன தான் முடிவு?’ என்ற கேள்வி மண்டையைக் குடைய, அப்படியே அமர்ந்திருந்தான்.

அவன் மனதிலோ ஆயிரம் பிரச்சனை ஓட, தங்கை திருமணம் முடிய வேண்டுமெனக் காத்திருந்தவனுக்குப் புதிதாய் சிவரஞ்சனியின் காதல் வேறு.

‘எத்தனை சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாளே’ என்ற கடுப்பு அவனுள்.

அவளிடம் கடுமை காட்டி அவள் மனதை உடைக்கவும் முடியவில்லை. வேறு ஆளாய் இருந்தாலே அதனைச் செய்யமாட்டான். இதில் அவள் அவன் கூடவே வளர்ந்த அத்தை மகள் என்றிருக்கையில் எங்கே கடினம் காட்டுவது?

இப்படியே யோசித்துக் கொண்டிருப்பதில் எதுவும் பயனில்லை என்பதை உணர்ந்தவன் முதலில் அவளுக்குப் புரிய வைக்க எண்ணி வெளியே வந்தான்.

அங்கே முன்னறையில் தான் அமர்ந்திருந்தனர் இரண்டு பெண்களும். அவர்கள் அருகில் சென்றவன் மலர்விழியிடம்,

“சிவாவ பண்ணை வீட்டுக்கு, என்கூடக் கொஞ்சம் வரச் சொல்லு மலர்” என்று முன்னே நடந்தான்.

மலர்விழியோ தன் முன்னே அமர்ந்திருந்த சிவரஞ்சனியைப் பார்க்க, அவள் கண்சிமிட்டி புன்னகைத்தாள்.

“கூடவே சுத்துனியே செவ்வால, இந்த வேலைய எப்போ பார்த்த?” என்று அதிர்ச்சியாய் மலர் கேட்க,

“காதல் எல்லாம் ஒரு பட்டாம்பூச்சி செல்லக்குட்டி, அடைச்சு வெச்சா இருக்குமா அதான் பறந்து போயிடிச்சு” என்றாள்.

“அடிப்பாவி, மாமா கோபமா வேற, போகுதுடி. என்னடி சொல்லித் தொலைச்ச” என்று பேசிக்கொண்டிருக்க, வெளியே இன்பனோ காரில் இருந்தபடியே ஒலி எழுப்பியது கேட்க,

“வெற்றியோட வரேன் செல்லக்குட்டி” என்று மலர்விழியின் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே ஓடினாள் சிவா.

அந்த நேரம் அறையிலிருந்து வெளியே வந்த மீனாட்சியோ, “எங்கடி மலரு போறா இவ?” என்று கேட்க,

“இன்பா மாமா தான் தோட்டத்து வீட்டுக்குப் போகணும்னு கூப்பிட்டிச்சு அத்தை, அதான்” என்றவள், அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன்னரே அங்கிருந்து நழுவியிருந்தாள்.

________________

இதோ அவர்கள் இருவரும் பண்ணை வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் கடந்திருந்தது.

பேச வேண்டும் என்று அழைத்தவன் பேசும் வழியைக் காணவில்லை என்றதும் சிவரஞ்சனி குரலைச் செருமி “மாமா” என்று அழைத்தாள்.

சிந்தனையிலிருந்து விடுபட்டவனோ “சிவா, மாமா சொல்றத நீ சரியான முறையில புரிஞ்சிக்கணும்” என்று ஆரம்பிக்க,

முந்திக்கொண்டவளோ “உன்ன மறக்கணும் என்கிறத தவிர நீ என்ன சொன்னாலும் கேட்டுப்பேன் மாமா” என்றாள்.

அவளை முறைத்தவன் “சிவா, இது விளையாட்டு இல்ல” என்க,

“நானும் விளையாடல மாமா, ஏன் எனக்கு என்ன குறை? என்னை உனக்குப் பிடிக்கலையா மாமா?” என்று கேட்டாள் சற்றே கமறிவிட்ட குரலுடன்…

அவனுக்கோ அவள் கேள்வியில் உள்ளே உருகிவிட்டது.

“டேய் சிவா, என்னடா இது? குறை அது இதுனு பேசுற? மாமாக்கு உன்ன பிடிக்காம இருக்குமாடா?” என்று சிறிது நிறுத்தியவன்,

மீண்டும் “சிவா, மாமாக்கு கல்யாணம் ஆகிடிச்சுடா. யாருக்கும் சொல்லாம பண்ணிக்க வேண்டிய சிடுவேஷன். இப்போ நான் இன்னொரு பொண்ணோட புருஷன்” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்தான்.

அவனை நம்பாத பார்வை பார்த்தவளோ “பொய் சொல்லாத மாமா, உன்ன எனக்குத் தெரியாதா? இந்த ஊர்ல எல்லாரையும் நீ அக்கா தங்கச்சின்னு தான பார்ப்ப, என் மனச மாத்த பொய் சொல்லாத” என்று சொல்ல,

“உண்மை தான்டா சிவா, நம்ம ஊர் இல்ல, நம்ம துவா மாப்பிளையோட ஃபிரண்டு. அவளோட பெயர் கயல்மொழி” என்றான்.

அந்தப் பெயரைச் சொல்லும்போது அவன் குரலில் இருந்த மென்மையும் அவன் முகத்தில் இருந்த கனிவும் அது உண்மை தான் என்பதை சிவரஞ்சனிக்கு வலிக்க வலிக்க உணர்த்தியது.

இப்படியொரு உணர்வை அவன் முகத்தில் அவள் கண்டதே இல்லை. எப்போதும் பாசமாய் கனிவாய் பேசுபவன் தான். ஆனால் இன்று அவன் முகம் காட்டிய ஜாலம் அவளுக்குப் புதிது.

“மாமா…” என்றாள் வெளியே வராத குரலுடன்…

“என்னை மன்னிச்சுடுடா, உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் வர மாமா காரணமா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இதுக்கு மேலையும் உன்கிட்ட இருந்து மறைக்கத் தோணல. இதப்பத்தி சீக்கிரமே வீட்டுல பேசணும்னு தான் இருந்தேன்” என்றவன், சிறிது தன்னை நிதானப்படுத்தி,

மீண்டும் “கொஞ்சம் இல்லை நிறையவே பிரச்சனை. இதுக்கு மேல மறைக்க முடியாது ஏதாச்சும் பண்ணியே ஆகணும். அதான் துவா கல்யாணம் முடியட்டும்னு காத்திருந்தேன். அப்போ தான் நீ வந்து என்கிட்ட பேசுன, சத்தியமா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கூட மாமாக்குத் தெரியலடா” என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே புரியவில்லை…

இவள் புரிந்துகொள்ள வேண்டுமேயென அவன் முகத்திலோ தவிப்பும் இருக்கவே செய்தது.

கண்ணீர் வழிய நின்றிருந்த அவளையே பார்த்திருந்தவனுக்கு உள்ளுக்குள் வலித்தது தான். ஆனால் அவள் கவலைப்படுவாள் என்று இதை மறைத்தால் அது இன்னும் இன்னும் அவளை வதைக்கும் என்று அவன் அறிவானே!

அவனால் கயல்மொழியை விட்டு வேறு பெண்ணை மணக்க முடியாது என்பது சர்வ நிச்சயம்!

சிறிது நேரத்தில் தன்னை மீட்டிக் கொண்டவளோ “கங்கிராட்ஸ் மாமா, உங்க வைஃப்ஃப நான் பார்க்கலாமா?” என்று வரவழைத்த புன்னகையுடன் கேட்க,

“டேய் சிவா…” என்றான் அவன்.

“எனக்கு ஒண்ணுமில்ல மாமா, உங்க மனசுல வேற பொண்ணு இருக்குனு தெரிஞ்சிருந்தா நிச்சயம் நான் உங்ககிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன். உங்கள கஷ்டப்படுத்திட்டேன்ல சாரி மாமா” என்றாள்.

“நீ இப்படி பேசுறது தான்டா மாமாக்குக் கஷ்டமா இருக்கு?” என்றவன் அமைதியாய் நிற்க,

அவனிடம் மீண்டும் அவனது மனைவியின் புகைப்படத்தைக் கேட்க, தனது தொலைபேசியில் இருந்த கயல்மொழியின் புகைப்படத்தைக் காட்டினான்.

“டாக்டரா மாமா? சூப்பரா இருக்காங்களே! எவ்ளோ அழகு” என்று உண்மையாகவே அத்தனை ரசித்துத் தான் கூறினாள்.

அவள் கூறியது போல, கயல் உண்மையில் அத்தனை அழகு. பார்க்கும் யாரும் அவளை இன்னொரு முறை பார்க்காமல் கடப்பது கடினம் தான்.

அதனையும் விட அவள் மனது கோடி அழகு. அதுதான் இன்பனை அவள்மீது பைத்தியமாக்கி வைத்திருக்கிறது.

அடுத்த சில நிமிடங்களில் சிவரஞ்சினியை வீட்டில் விட்ட இன்பன் மீண்டும் வெளியே எங்கோ செல்ல, அவள் உள்ளே நுழைந்த நேரம் மலர்விழியும் தேன்மொழியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களைக் கடந்து அவள் மாடியேறப்போக, “என்ன சிவாம்மா, மருதாணி வாசம் வந்தும் திரும்பாமலே போறீங்க” என்ற தேன்மொழி சிவரஞ்சினியைப் பார்க்க,

“கொஞ்சம் தலைவலி தேனு” என்றாள் தலையைப் பிடித்தபடியே!

மலர்விழிக்கு மருதாணி வைத்து முடித்திருந்த தேன்மொழியோ “இங்க இருங்க சிவாம்மா, இஞ்சி சுள்ளுனு போட்டு ஒரு காஃபி குடிச்சா உங்கள பிடிச்ச தலைவலி ஓடியே போயிடும்” என்றவள், அவளை அமரவைத்துவிட்டு சமையறைப்பக்கம் ஓடினாள்.

மலர்விழியோ தோழியையே பார்த்திருக்க, சிவரஞ்சனி நிமிர்ந்தாளில்லை.

“எத மறைக்க ட்ரை பண்ணுற சிவா?” என்ற குரலில் நிமிர்ந்தவளது கன்னம் தொட்ட கண்ணீர், மலர்விழிக்கு விடயத்தின் சாரம்சத்தை விளக்கி இருந்தது.

“சிவா…” என்று மலர் அவள் கரத்தைப் பிடிக்கப் போக,

அவளோ “மலர், மருதாணி அழியப் போகுது பாரு” என்று தன் கரத்தை எடுத்துக்கொள்ளப் பார்த்த, தோழியை முறைத்தவள் எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்தாள்.

“ப்ச், என்ன மலரு?”

“ஆஹ் நொல்ல மலரு, என்ன ஆகிப்போச்சுனு இப்போ கண்ணீர் வடிக்கிற? மாமா திட்டிச்சு அவ்வளவு தானே! மாமாவ விட நச்சுனு ஒரு பிகர பார்க்குறோம் கவுக்குறோம் சரியா?” என்றாள் தோழியின் மனதை மாற்ற,

அவள் முயற்சி புரிந்தவளும் “பார்க்குறோம்னு உன்னையும் சேர்த்துகிற பார்த்தியா? அதெல்லாம் செல்லாது நான் மட்டும் தான் பார்ப்பேன்” என்றாள் வரவழைத்த புன்னகையுடன்…

உள்ளே எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவளைச் சுடாமலில்லை. நினைவு தெரிந்த வயதிலிருந்து உருவாகிய நேசம் அது. எப்போது காதலாய் மாறியது என்று அவளே அறியாள்.

அவனுக்கும் தன்னை பிடிக்கும் வீட்டிலும் எந்த எதிர்ப்பும் வராது என்று எண்ணி இருந்தவளுக்கு இப்படியொரு விடயம் அதிர்ச்சி தான். அதிலும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணமும் செய்திருக்கிறான் என்றால் நிச்சயம் விடயம் பெரிது என்று புரிந்தது.

இன்பனைப் பற்றித் தெரிந்தவளுக்கு அவன் பக்கம் நியாயம் இருக்கும் என்று சர்வ நிச்சயம்.

அவன் இனி தனக்கு இல்லை என்ற உண்மை அவளைப் பெரிதாய்க் காயப்படுத்தியது தான். ஆனால் அவனும் என்ன தான் செய்வான்?? அவன் பக்கமும் பேதைக்குப் புரியவே செய்தது.

‘மறந்து விடுவோம்’ என்று இப்போதைக்கு தோணவில்லை என்றாலும் ‘தேறிவிடுவோம்’ என்ற நம்பிக்கை இருந்தது.

மலர்விழியை அணைத்துக் கொண்டவளோ அமைதியாய் கண்ணீர் வடிக்க, சகோதரியின் தோளில் மேலும் ஆதரவாய் படிந்தது மலரின் கரங்கள்.

இருவரும் ஒரே வயதுப்பெண்கள். உறவில் அக்கா தங்கையாக இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருக்கும் நெருங்கிய தோழிகளும் கூட,

“சிவா, எல்லாம் சரி ஆகிடும். உன் ராஜகுமரன் சீக்கிரமே வருவான் பாரேன்” என்க,

சரியாக அந்த நேரம் “நான் வந்துட்டேன் சிவாம்மா இஞ்சி காஃபி ரெடி” என்று தேன்மொழியும் வர, பெண்கள் இருவரும் சிரித்துவிட்டனர்.

தேன்மொழிக்கு ஏன் என்று புரியாவிட்டாலும் அவளும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, அடுத்து சிவரஞ்சனிக்கு வடுவை உணர நேரம் இல்லாமல் போனது.

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்