
அத்தியாயம் 25
மேற்கே கதிரவன் மறைய துவங்கிய பொன் மாலை நேரம். ஓரளவிற்கு வெளிச்சமாகவே இருந்தது, பொழுது. வானம் அடர் நீலம், சிவப்பு, மஞ்சள் வெள்ளை என வரிசையாய் நிறக் கலவைகளை பூசி காட்சி தந்தது.
நூலகத்தில் பொறுப்பாளருக்கான இருக்கையில் அமர்ந்து குனிந்து பணி செய்து கொண்டிருந்த விஜயன் எதிரே நிழலாடுவதை உணர்ந்து, “எஸ், சொல்லுங்க!” என்றபடி நிமிர்ந்து நோக்கினான்.
எதிரே நின்றிருந்த மனைவியின் தந்தையைக் கண்டதும் உடலிலும் மனதிலும் லேசாய் பதற்றம் தொற்றிக் கொண்டது.
கால்கள் அனிச்சையாய் செயல்பட, தேகம் எழுந்தது அமர்ந்த நிலையில் இருந்து.
“சா.. சார்..” என்றவனின் குரலில் மெலிதான நடுக்கம்.
சுற்றி வளைக்காமலும் எவ்வித மேற்பூச்சு வார்த்தைகளும் இன்றி, “என்ன தம்பி நடந்துச்சு.?” என நேரடியாய் வினவினார் நடராஜன்.
அவன் தயக்கத்துடன் பார்க்க, “எதுனாலும் சொல்லுங்க. எனக்கு, என் மகளோட குணம் என்னனு தெரியும். உங்களைப் பத்தியும் ஓரளவுக்குத் தெரியும்.”
“ஒரு நிமிஷம் சார், முதல்ல நீங்க கொஞ்சம் உட்காருங்க.” என்று சற்று தள்ளி ஓரமாய் இருந்த இருக்கையைக் காட்டிய விஜயன், நூலகத்தின் உதவியாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஒரு நிமிட இடைவெளியில் தானும் சென்று முகம் பார்க்கும் படியான தூரத்தில் அமர்ந்தான்.
இரண்டு நிமிடங்கள் அமைதியாய் கடந்தது.
“என்ன அமைதியா இருக்கீங்க?” என மீண்டும் அவரே முதலில் பேச்சைத் துவக்கினார்.
“அது சார்?”
“எங்க பொண்ணு வீட்டை விட்டுப் போனா, அப்படியே விட்டுடுவோமா நாங்க? பெத்தவங்க மனசு அந்த அளவுக்கு கல்லு இல்ல. இன்னைக்கு ஒரு பிரச்சனைனு ஆனதும், அவ அங்க தான வந்து நின்னா? அப்புறம் எப்படி விட முடியும், நாங்க பெத்த பிள்ளையை.? என்னனு சொல்லுங்க. பேசுவோம்.”
“சஞ்சு எதுவும்..” என்று அவன் கேள்வியாய் நிறுத்த, “அவ சொல்லல. சொல்லி இருந்தா, அதை தீர்க்கிறதுக்கு என்ன வழினு தான் யோசனை செஞ்சிருப்பேன்.”
“அவ சொல்லாதப்ப, நான் மட்டும் எப்படி சார்.?”
“சரி, நீங்க சொல்ல வேண்டாம். நான், இதுக்கு மேல எதுவும் கேட்க மாட்டேன். வந்து, உங்க பொண்டாட்டியைக் கூட்டிப் போங்க.”
அவன் அதிர்ந்து பார்க்க, “என்ன அப்படிப் பார்க்கிறீங்க? இவ்வளவு தானா, உங்கக் காதல்?”
“சார், நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.”
“நீங்க எதுவும் சொல்லாதப்ப, எனக்கு என்ன தோணுதோ அதைத்தான நான் காரணமா நினைக்க முடியும் தம்பி?”
ஒரு நீண்ட மூச்சை எடுத்துக் கொண்டவன், “தப்பு என்மேல தான் சார். நான் கொஞ்சம் யோசிக்காம வார்த்தையை விட்டுட்டேன். அது, சஞ்சுவை ரொம்ப ஹர்ட் பண்ணீடுச்சு.”
‘தன் மேல்தான் தவறு என்று பொறுப்பேற்று கொள்பவனின் மீது மேலும் குற்றம் சாட்டுவது சரியல்ல!’ எனத் தோன்றிட, “அப்படி என்ன பேச்சு வார்த்தை நடந்துச்சு உங்களுக்கு இடையில?” என்று தனது விசாரணையை வேறு விதமாய் மாற்றினார், அந்த அனுபவம் வாய்ந்த மனிதர்.
விஜயன் தயங்கி அமைதியாய் இருக்க, “நீங்க பேசுனது மட்டும் தான், சஞ்சனா இப்படி கிளம்பி வர காரணமா?”
மறுத்து தலை அசைத்தான் அவன்.
“அப்ப முன்னாடியே ஏதோ நடந்திருக்கு. உங்களோட பேச்சு அவளைக் காயப்படுத்தவும் அதுக்கு மேல அங்க இருக்க முடியாதுனு நினைச்சு விலகி வந்துட்டா, அப்படித் தான?”
“ம்ம்..”
“சரி, நீங்க பேசுனதை விட்டுடுவோம். சில நேரங்கள்ல நம்மளை அறியாம ரெண்டு மூனு வார்த்தைகள் விழுகுறது இயல்பு தான். அது ஒன்னும் தப்போ குற்றமோ இல்ல. ஆனா, ஆளுங்களைப் பொறுத்து இந்த எண்ணம் மாறுபடும். சஞ்சனாவுக்கு இதைப் புரிய வச்சிடலாம்.”
விஜயன் அவரை வியப்புடன் நோக்கினான்.
‘காதல் திருமணம் செய்து வீட்டில் இருந்த வெளியேறிய நிலையில், ஒரு பெண்ணின் தந்தை இந்த அளவிற்கு இறங்கி வந்து நிதானமாய் பேசுவார்!’ என அவர் எதிர்பார்க்கவில்லை.
அவனது பார்வையை உணர்ந்தவர், “என்ன தம்பி?”
“ஸாரி சார்.”
மெலிதாய் சிரித்த நடராஜன், “எதுக்கு இந்த ஸாரி.?”
“நான் சஞ்சுவை அப்படிக் கல்யாணம் செஞ்சு கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாது. உங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம்? ரொம்ப வருத்தப்பட்டு இருப்பீங்க இல்ல? அவ என்னைத் தேடி வந்திருந்தாலும், நான் அந்த சூழ்நிலையை கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணி உங்கக்கிட்ட வந்து பேசி இருக்கலாம். எனக்கு இதுவே கொஞ்சம் தப்பு செஞ்சிட்ட மாதிரி நினைப்பைத் தருது.”
“எதைத் தம்பி தப்புனு நினைக்கிறீங்க, என் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதயா?”
“ஐயோ! இல்ல சார். உங்க பர்மிஷன் இல்லாம கல்யாணம் செஞ்சதைத்தான் தப்புனு நினைக்கிறேன். பெத்தவங்களோட ஆசிர்வாதம் தான, பிள்ளைகளை நல்லபடியா வாழ வைக்கும்? எங்களுக்கு, அப்படி எந்த ஆசீர்வாதமும் கிடைக்கல இல்ல? அதுனால தான் இப்படி ஆகிடுச்சோ, என்னமோ? உங்களைக் கஷ்டப்படுத்துனதுக்கு, இப்ப நாங்க கஷ்டப்படுறோம்!”
“சஞ்சனா உங்களைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னப்ப, நான் ஏன் அன்னைக்கு அமைதியா வந்துட்டேன்னு தெரியுமா தம்பி?”
அவன் கேள்வியாய் நோக்க, “இப்ப குடியிருக்கிற ஏரியால, வருஷக் கணக்கா இருக்கோம். உங்க அப்பாவோட நகைக் கடைக்குனு, ஒரு பேரு இருக்கு. அவரைப் பத்தியும் கேள்விப்பட்டு இருக்கேன். உங்க அக்கா குடும்பமும் பக்கத்து தெருவுல தான், பத்து வருஷத்துக்கும் மேல இருக்காங்க. எனக்கு, அதுனால உங்க குடும்பத்து ஆளுங்களைப் பத்தியும் அவங்க குணமும் ஓரளவுக்குத் தெரியும். அதேபோல, உங்களைப் பத்தியும் கொஞ்சம் புரிதல் இருக்கு. அதுனால தான் என்னோட பொண்ணை நல்லா பார்த்துப்பீங்கனு, நம்பி விட்டேன்.’
சஞ்சனாவின் தந்தைக்கு தன்மீது இருக்கும் நம்பிக்கையை எண்ணி கண்கள் கலங்கிட, “ஸாரி சார், உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திட்டேன்.!” என மன்னிப்பு வேண்டினான் விஜயன்.
“அப்படி எல்லாம் இல்ல. இதோ இன்னைக்கு இவ்வளவு தூரத்துக்கு என்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கீங்களே? என்னோட நம்பிக்கை வீண் போகல. இப்ப, இது முக்கியம் இல்ல. முதல்ல உங்க பிரச்சனை என்னனு பார்ப்போம்.”
“தப்பா நினைக்காதீங்க சார். அதை வெளிய சொல்லுறதுல எனக்கு விருப்பம் இல்ல. நானே கொஞ்ச நாள்ல வந்து சஞ்சனாக்கிட்டப் பேசி சமாதானம் செஞ்சு கூப்பிட்டுக்கிறேன்.”
“உங்களுக்கு இடையில சண்டை வந்தாலும் அவ அங்கேயே இருந்திருந்தா, அது பெரிய விஷயமா தெரிஞ்சிருக்காது. பெரியவங்க நாங்களும் தலையிடாம, அமைதியா இருந்திருப்போம். ஆனா, இப்ப நாலு சுவத்துக்குள்ள இருக்க வேண்டிய உங்க பிரச்சனை, ரெண்டு வீட்டுக்கு நடுவுல இருக்கிற தூரத்தோட அளவுக்கு மாறிடுச்சு. அதோட, நீங்க வந்து கூப்பிட்டதும் சஞ்சனா வந்துடுவாளா? உங்களுக்கு அந்த உறுதி இருக்கா?”
அவன் மறுமொழி சொல்ல திடம் இல்லாது இருக்க, “சொல்லுங்க தம்பி.”
“எனக்குத் தெரியல சார்.”
“நான் என் பொண்ணு நல்லா வாழணும்னு நினைக்கிறேன். அதுனால?” என்று அவர் பாதியில் நிறுத்த, அதற்கு மேல் மறைக்க மனம் இல்லாது நடந்த அனைத்தையும் அப்படியே ஒப்புவித்தான் விஜயன்.
நடராஜன் அமைதியாய் பார்த்திருக்க, “இன்னும் ஒரு வாரத்துல எக்ஸாம் வருது சார் எனக்கு. இந்த நேரத்துல கவனம் சிதறுறதை நான் விரும்பல. சோ அதுவரைக்குமே கொஞ்சம் விலகி இருப்போம்னு நினைச்சிருந்தேன். அதுனால தான், உடனே வந்து சஞ்சுக்கிட்ட பேசல.”
“ஓ.. இதுதான் உண்மையான காரணமா தம்பி?”
அவன் எதுவும் பேசாமல் இருக்க, ‘நீ வெளிப்படையாய் பேசாமல், இன்று நான் செல்வதாய் இல்லை!’ என்பது போல் அமர்ந்து இருந்தார்.
“எங்க உறவு ஆழமானதா இல்லையோனு எனக்கு ஒரு எண்ணம் சார். காதலிக்கிறதா நாங்க நினைக்கிறோம். ஆனா, அது வெறும் ஈர்ப்பா இருந்துட்டா.? ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்க. அது ரெண்டும் வடிஞ்ச பின்னாடி, எங்களுக்கு இடையில காதல் இல்லேனா, அப்புறம் இந்த கல்யாணத்தோட அர்த்தம் தான் என்ன? அதுனால உணர்ச்சியை அடக்கி, எங்க காதலை டெஸ்ட் பண்ணி பார்க்க முடிவு செஞ்சேன்.”
சின்னதாய்ச் சிரித்தவர், “படிச்ச பையன் நீங்க. இவ்வளவு தூரம் குழப்பிக்கிறது நல்லது இல்ல. சஞ்சனா, இப்ப வீட்டுல தான் இருக்கா. அப்படியே இருக்கட்டும். நீங்க சொன்னதுல, அவ குடும்ப வாழ்க்கையைப் பத்திப் புரிஞ்சுக்காம சிறுபிள்ளத் தனமா நடந்துக்கிறானு தெரியிது. பக்கத்துல இருந்தா, ஒரு கட்டத்துல உறவு கசந்திடும். கொஞ்சம் விலகி இருக்கலாம்னு, நீங்க நினைக்கிறதும் சரிதான். அவளுக்கு உள்ளேயும் இந்த பிரிவு மாற்றத்தைக் கொடுக்கும்னு நம்புறேன்.
நானும் அவ அம்மாவும், வாழ்க்கைனா என்னனு கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறோம். கவர்மெண்ட் பரிட்சையில மட்டும் இல்ல, உங்களுக்கான பரிட்சையிலும் பாஸ் ஆகிட்டு வாங்க மாப்பிள்ள. என் பொண்ணை முறைப்படி உங்கக்கூட அனுப்பி வைக்கிறேன்!” என்றுவிட்டு எழுந்தார் அவர்.
உடன் எழுந்தவன் சற்றே திகைத்து, “சார்.?”
“பரிட்சைக்குப் படிக்கிறது முக்கியம் தான். அப்படியே உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க.” என விடைபெற்றுச் சென்றார்.
விஜயனிற்கு, ஏதோ பெரும் பாரம் இறங்கியது போல் இருந்தது.
சர்வ நிச்சயமாய், அவனிற்கு சஞ்சனாவிடம் கொண்டிருக்கும் காதலின் மீது எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் செய்து கொண்ட அவசரத் திருமணம், சிந்தனைக்குள் சிக்கலைப் புகுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
நடராஜன் வந்து பேசியதில் தற்போது அந்த குழப்பங்கள் மெல்ல தெளிவடைய துவங்க, நிர்மலமான மனதுடன் தேர்விற்காக தயாரானான் விஜயன்.
*
அப்பொழுது தான் விடிந்தது. படுக்கையில் இருந்து எழுந்த ஆசைக்கனி காலைக்கடனை முடித்து விட்டு வர, சரியாய் கைப்பேசி ஒலித்தது.
செவியோடு இணைத்தவள், “ஹலோ..”
“ஏய் கனி..”
மறுபுறம் கேட்ட குரலில் பாவையின் மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது.
“டேய் செல்வா.?” என அவள் தம்பியை அழைத்த அதே நொடியில், “அக்கானு கூப்பிட சொன்னா கேட்குறியா நீ.?” என்று காளீஸ்வரி மகனிற்கு வசவு வழங்கியது கேட்டது.
பதிலிற்கு, “போம்மா நீ!” என வாதாடினான் அவன்.
அன்னையும் மகனும் முட்டிக் கொண்டதில், “சித்தி.?” என்றவளின் குரல் அவர்களிற்குக் கேட்காமலேயே போனது.
பெற்றவள் இருந்து வளர்த்து ஆளாக்க வில்லை எனினும், பொருளாதாரத்தைத் தவிர எவ்வித குறையும் இல்லாத தனது பிறந்த வீட்டைப் பற்றி எண்ணியதுமே பாவையின் விழிகள் கலங்கத் துவங்கியது.
“ஹேப்பி பர்த்டே கனி அக்கா..” என வாழ்த்துத் தெரிவித்த இளவலின் சொற்களில் நிகழ்வுக்கு மீண்டவள், “தேங்க்ஸ்டா செல்வா.”
“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?”
மெலிதாய்ச் சிரித்தவள், “வேற என்ன வேணும்?”
“எனக்கு சாக்லெட் வேணும். அதுவும் பெருசா.”
“சரி, ஊருக்கு வரும் போது வாங்கித் தர்றேன்.”
“ஹை.. ஜாலி ஜாலி. ஆமா கனி, சாக்லெட் வாங்குறதுக்குக் காசு வச்சிருக்கியா.?”
“அதெல்லாம் நிறைய வச்சிருக்கேன். உன்னோட மாமா கொடுத்துருக்காரு எனக்கு.”
“அப்ப, பத்து சாக்லேட் வேணும் எனக்கு! அதோட ஐஸும்!”
“சரிடா!” எனும் பொழுதே, கைப்பேசி காளீஸ்வரியின் கைகளிற்கு இடம் மாறியது.

