Loading

சுழலி-18

பயணம் தொடங்கி இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிறது. பொதிய மலையை வந்தடைந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிறது. மூன்று நாட்களாக அனைவரும் சித்தமுனியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.

படைவீரர்களும் குதிரைகளும் சோர்ந்துதான் போயின. வஞ்சனுக்கு நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்துக் கொண்டே வந்தது.

செந்தூரா, நம் படைகளுக்கு சற்று ஓய்வு வேண்டும். அனைவரும் சோர்ந்துபோய் இருக்கின்றனர்.”

ஆகட்டும் வஞ்சா, இன்னும் சற்றுத் தொலைவில் ஒரு அருவி இருக்கிறது. அங்கு கூடாரம் அமைத்து விடலாம்.”

சரி, ஏன் இன்னும் நம்மால் சித்தமுனியைக் காண இயலவில்லை செந்தூரா? எனது நம்பிக்கைக் குறைந்துக் கொண்டே வருகிறது.” குரலில் வருத்தமும் இயலாமையும் மேலிட்டது.

எந்த சூழ்நிலையிலும் உனது நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே வஞ்சா. இது நமக்கான பரீட்சை என்றே வைத்துக்கொள்ளேன். அவர் நம்மை சோதித்துப் பார்க்கிறார். அதனால்தான் இன்னும் அவர் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. நிச்சயம், அவர் நம்முடன்தான் பயணிக்கிறார் என்று என் உள்மனம் அடித்துக் கூறுகிறது

எனக்குக் கோதையின் நினைவாகவே உள்ளது நண்பா. நாங்கள் என்ன பிழை செய்துவிட்டோம்? ஏன், இன்னும் எங்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காமல் இருக்கிறது? அவள்முன் நான் நன்றாக இருந்தாலும், என் மனதும் பிள்ளைக்காக ஏங்கியே தவிக்கிறது நண்பா. பெண்ணவள், அழுது அவளின் துயரங்களை கரைத்துவிடுகிறாள். நான் என்ன செய்ய?” கலங்கித் தவித்தான் வஞ்சன்.

மலையுச்சியிலிருந்து சில்லென்று விழுந்தது அருவி நீர். அதன் தாழ்வாரத்தில் அனைவரும் தத்தமது உடைமைகளை இறக்கி, இளைப்பாறினர். செந்தூரனும் வஞ்சனும் அருவியில் குளித்துக் கொண்டிருக்க, செந்தூரனின் காலை உரசிச் சென்றது ஒரு மாணிக்க நாகம்.

உணர்ந்தவன், சில நிமிடங்கள் அசையாது நின்றான். அது மெதுவாக அருவியின் பின்புறம் சென்றது. அதனை கூர்ந்து கவனித்தவன், உடனடியாக மேலாடையை உடுத்திக் கொண்டு அவ்விடத்திற்கு வந்தான்.

வஞ்சா, விரைந்து ஆடையை உடுத்திக் கொண்டு என்னுடன் வா. மற்றனைவரும் இங்கிருக்கட்டும்என்றவன், வஞ்சனை மட்டும் உடனழைத்து சென்றான்.

அருவிக்கு அடியில் குகை போன்ற அமைப்பு ஒன்று சென்றது. அதன் வழிதடத்தை பின்பற்றியவாறே இருவரும் சென்றனர். வேங்கை மலர்களை தன் வாயில் கவ்வியபடி முன்னே சென்றுக் கொண்டிருந்தது அந்த மாணிக்க நாகம்.

வஞ்சனுக்கு பேச்சே எழவில்லை. ஒருவித பயமும் தோன்றியது. ஆனால், செந்தூரனோ ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான். அவன் கேள்விப்பட்டவரை மாணிக்க நாகத்தை காண்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

அதுவும் தற்போது அது வேங்கை மலர்களை எடுத்துக் கொண்டு செல்கிறது என்றால், நிச்சயம் சிவபெருமானை வழிபாடு செய்யவே செல்லும் என்பதை அறிந்துக் கொண்டான். செந்தூரனிற்கு மற்றொரு கேள்வியும் உதித்தது. ஒருவேளை இவர்தான் சித்தமுனியாக இருக்குமோ? ஆனால், அதனை தற்போது வாய்திறந்து கேட்டு இந்த பொன்னான தருணத்தை அவன் இழக்க விரும்பவில்லை. இருவரும் சத்தமின்றி அதனைப் பின்தொடர்ந்தனர்.

செந்தூரன் யூகித்தப்படியே குகையின் முடிவில் சுயம்புலிங்கம் இருந்தது. அந்த இடமே அத்தனை சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டும் இருந்தது. நிச்சயம், இவ்விடத்தை யாரோ பராமரித்து வருகின்றனர் என்பதை இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இந்த பன்னிரெண்டு நாட்களும் சிவன்காப்பால் பல அமானுஷ்ய சக்திகளை அசாதாரணமாகக் கடந்து வந்துவிட்டான் செந்தூரன். எதையும் யாரிடமும் அவன் சொல்லவில்லை. தற்போது அதே சிவன்காப்பின் உதவியால்தான் யார் கண்ணிற்கும் தெரியாத மாணிக்க நாகம் இவன் கண்ணில் பட்டது. ஒருவேளை இவன் கண்ணில்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் காலில் ஊர்ந்து சென்றதோ?

சிவனின் லிங்கத்தில் மேல் ஏறி எம்பெருமான் அவன் தலையில் வேங்கை மலர்களை வைத்த மாணிக்க நாகம், பாந்தமாக அவனின் கழுத்தை சுற்றி படமெடுத்து நின்றது. அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்ட இருவரும் நெடுஞ்சாணுக்கிடையாக விழுந்து வணங்கினர்.

ஓம் நமசிவாய! எம்பெருமானே, தங்களின் திருக்கோலத்தைக் காண நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம் என்று தெரியவில்லை. புளகாங்கிதம் அடைந்தோம் எம் அப்பனே! இன்னல்களை களைந்து உபாயம் வேண்டி வந்துள்ளோம். அருள்புரியப்பாஇருவரும் மனமாற வேண்டினர்.

சட்டென்று அந்த மாணிக்க நாகம் மனித உருவெடுத்தது. செந்தூரனின் யூகம் பொய்த்துப் போகவில்லை. சித்தமுனிதான் அவர்.

மூவைந்து நாட்களாக நான் உங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இருவரும் நாட்டிற்காக வந்துள்ளீர்கள் என்பது எனது எண்ணம். ஆனால், இதில் யாருக்கு நான் உபாயம் கூறுவது?” அவர் கேட்ட கேள்வியில் இருவரும் திகைத்துதான் போயினர்.

ஆம், இருவரும் இருவேறு எண்ணங்களோடு வந்திருந்தனர். அதை பட்டென்று உரைத்தவுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வஞ்சன், “முனிவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். சுவாமி, கிரக நிலைப்படி எமது கொங்கு நாடு ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளது. பல வீரார்கள் படையெடுத்து வந்தாலும் எதிர்கொண்டு தாக்கி போர் புரிவோம். ஆனால், அதையும் மீறி ஏதோவொன்று நடக்கவிருப்பதாய் உள்ளம் எண்ணி தவிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் பசிப்பிணியால் அவதியுறுகின்றனர். ஒரு அரசனாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

அவர் புன்னகையோடு செந்தூரனைப் பார்த்தார். அவரின் கண்பார்வையின் அர்த்தத்தை அறிந்துக் கொண்டவன், தான் வந்ததற்கான காரணகாரியத்தை சொல்லலானான்.

நீங்கள் எண்ணியது சரியே! நாங்கள் இருவரும் நாட்டின் நலனிற்காக வந்திருந்தாலும், இருவரின் கோரிக்கையும் வேறுதான். இவன் என் நண்பனாக இருந்தாலும் மாபெரும் கொங்கு தேசத்தை கட்டியாளும் வேந்தள். ஒரு நண்பனாகவும், அவனின் வாழ்வு நலம்பெற வேண்டியும் எனக்கான உதவியினை தங்களிடம் யாசிக்கவே வந்தேன் யாம். என் சகோதரி கோதைக்கு இன்றுவரை பிள்ளைப் பேறு உண்டாகவில்லை. அரசாள வாரிசு ஒன்று இல்லையென்றால் மற்ற நாட்டினர் எளிதாக எங்களை எதிர்கொள்ளவியலும். மேலும், என் நண்பன் பெயர்சொல்லவும் அவனின் வம்சம் தளைக்கவும் உபாயத்தை நீங்கள் வழங்குவீர் என்றே நான் உங்களைத் தேடி வந்துள்ளேன்தன் எண்ணமதை சொன்னவுடன் வஞ்சனின் கண்கள் கலங்கித்தான் போனது.

இந்நாள்வரை முக்கிய சிலரைத் தவிர்த்து யாருக்கும் செந்தூரன் தனது நண்பன் என்று வஞ்சன் உரைத்தது கிடையாது. செந்தூரனும் அப்படித்தான். எந்த சூழ்நிலையிலும் நாடாளும் வேந்தள் இக்குறுநில மன்னனின் நண்பன் என்று இவனும் மார்த்தட்டியது கிடையாது. ஆனால், இருவரும் இன்றுவரை இணைபிரியா நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், விதி என்ற ஒன்று இவர்களை நோக்கி ஆயதம் ஏந்தி வருகையில் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இருவரையும் புன்னகையோடு பார்த்தார் சித்தமுனி. சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்தவரின் முகம் கலக்கம் கொண்டது. அறிந்துவிட்டார் இனி என்ன நடக்கப் போகிறது என்று. நீண்ட பெருமூச்சு அவரிடம்.

பிள்ளைகளே! இருவரில் ஒருவருக்கு மட்டுமே என்னால் உபாயம் தரவியலும். அதில் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, வஞ்சன் தன் முடிவினை கூறினான்.

நாட்டு மக்களின் நலனே தற்போது முக்கியம் சுவாமி. அதற்கான உபாயத்தை மொழியுங்கள்

தனது நண்பன் இப்படித்தான் கூறப்போகிறான் என்பதை முன்னரே அறிந்துதான் இருந்தான் செந்தூரன். மனதை திடப்படுத்திக் கொண்டான். அவனின் எண்ணங்கள் எத்தனை எத்தனை கனவுகளை கொண்டு இருந்தது.

எப்படியேனும் கோதைக்கு பிள்ளைப் பேற்றிற்கான உபாயத்தை அறிந்துவிட்டால், வஞ்சனின் உயிர் நிச்சயம் தப்பிக்கும். நான் இல்லாவிடினும் மஞ்சரிக்கு நல்வாழ்வு அமைத்து தருவான். தேசம் செழிக்க உபாயம் இதுவே. கோதையின் பிள்ளையால் மட்டுமே நாடு வளம்பெறும். நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்க இவராலும் தற்காலிக உபாயத்தை மட்டுமே நல்க இயலும். அதற்குப் பின்? நடக்கப் போவதை எண்ணி மனது கலங்கியது. தான் மடிந்து போவது உறுதி என்பதை அறிந்துக் கொண்டான். அதற்குள் வஞ்சனையும் படைவீரர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தான்.

வஞ்சனின் பதிலைக் கேட்ட சித்தமுனி ஏதும் பேசவில்லை. செந்தூரனின் எண்ணவோட்டமும் அவர் அறிந்ததே! தன்னால் இனி என்ன செய்ய இயலும்? என்று எண்ணியவர், எம்பெருமானை வணங்கி உபாயத்தை கூற முன் வந்தார்.

வஞ்சா! இந்நொடிவரை நீ நாட்டு மக்களுக்காக எண்ணுவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறேன். உன் நாட்டின் கல்வராயன் மலையின் உச்சியில் ஒரு வனக்காடு இருக்கிறது. அங்கு உனது முன்னோர்கள் பன்னெடுங்காலமாக புதையலை புதைத்து வைத்திருக்கின்றனர். அள்ளஅள்ள குறையாத செல்வங்களும் தானியங்களும் அங்கிருக்கிறது. அதனைக் கொண்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய். கிரகநிலை மாறுபாட்டால், இன்னும் சில மாதங்களில் பெரும் படையெடுப்பு ஒன்று நிகழும். அதற்கு உடனே முன்னேற்பாடுகளை செய்துவிடு.” என்றவர், செந்தூரன் பக்கம் திரும்பினார்.

செந்தூரா! உன் எண்ணமதை நான் அறிவேன். இந்த கமண்டல நீரை பாதுகாப்பாக எடுத்துச் செல். நடுவில் எந்த மனமாறுதலும் இன்றி இதனோடு நீ கோட்டையை நெருங்கிவிட்டாய் எனில், நடக்கவிருக்கும் பல இன்னல்கள் தவிர்க்கப்படும். நீ எண்ணியதுபோல் பெரும் இழப்பிலிருந்து அனைத்தையும் தடுத்துவிடலாம். இது உனது நல்லெண்ணத்திற்கும் உன் நட்பின் ஆழத்திற்கும் இறையருளியது. பத்திரம்.” அதனை வாங்கியவன் கண்கள் நன்றி நவிழ்ந்தது. ஒரு புதிய நம்பிக்கை அவனுள் துளிர்விட்டது.

இருவரும் பாதுகாப்பாக இம்மலையை விட்டு செல்லுங்கள். இந்த நீருக்காக பல சக்திகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பத்திரமாக எடுத்து செல்ல சேயோன் துணையிருப்பான்.” என்றவர், மாணிக்க நாகமாக மாறி அங்கிருந்து நகர்ந்தார்.

இருவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. மீண்டும் சிவபெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஒரு ஓலையில் வஞ்சன் படைகளோடு உபாயத்தை நோக்கி கல்வராயன் மலைக்கு செல்வதாகவும், செந்தூரன் கோட்டைக்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் எழுதி புறாவின் மூலமாய் அனுப்பி வைத்தனர். வெளியே வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

…..

கொங்கு நாடு.

ஈரைந்து நாட்களாக குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலயத்தை மேற்பார்வையிட வந்திருந்தாள் மஞ்சரி. அவளுக்குள் ஒரு எண்ணம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், அதனை முழுமையாக அறிந்திடாமல் யாருக்கும் சொல்ல அவள் எண்ணவில்லை. கோதைக்கும் குளிர்க்காய்ச்சல் கண்டுவிட்டதால் அனைத்து பணிகளையும் மஞ்சரியே செய்தாள்.

நீலாவின் உருவில் யட்சினி அவளோடு எந்நேரமும் இருந்தாள்.

நீலா

தேவி

நாளைக்குள் குடமுழுக்கிற்கான ஏற்பாட்டை முடிக்க வேண்டும். நாளை வேள்வி துவங்கினால்தான், ஒரு மண்டலம் முடியும்தருவாயில் குடமுழுக்கினை நிகழ்த்த முடியும். பணிகள் விரைந்து நடப்பதுபோல் தெரியவில்லையே. ஏன், பணிகள் மெதுவாக நடக்கிறது?”

நானும் விரைவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். தானியங்களும் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் ஏன் பணி தாமதமாகிறது என்று தெரியவில்லைஇருவரும் பேசிக்கொண்டே பணிகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அரண்மனை மருத்தவர் அனுப்பி வைத்ததாய் காவலன் ஒருவன் வந்தான்.

இளவரசிக்கு எனது வந்தனங்கள். அரசியார் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார். மன்னரிடமிருந்து தூது வந்திருக்கிறதுஎன்றவன், கையோடு அழைத்துச் சென்றான்.

அவள் இந்தப்பக்கம் சென்றவுடன், செம்பியன் ஏற்படுத்திய ஆட்கள், இன்னும் வேலைகளை தாமதப்படுத்தினர். நாளை வேள்வி துவங்கக் கூடாது என்பது அவரின் எண்ணமாய் இருந்தது.

அரண்மனை.

வீரர்கள் அனைவரும் குதூகலமாய் இருந்தனர். உபாயம் கிடைத்துவிட்டது என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் நிலை மாறும் என்று அனைவரும் களிப்புடன் இருந்தனர்.

என்ன அவசரகாரியம் அண்ணியார் அவர்களே! ஓலையில் என்ன குறிப்பிட்டு இருக்கிறது?” அறைக்குள் நுழைந்தவுடன் வினாவை எழுப்பினாள். அந்த ஓலையில் தன்னவனை பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளுற எழுந்தது.

இளவரசியே, நீங்கள் அத்தையாகப் போகிறீர்கள். நம் மகாராணியார் கருவுற்றிருக்கிறார்.” மகிழ்வான செய்தியை கேட்டதும் மஞ்சரிக்கு தலைகால் புரியவில்லை. யட்சினிக்கும் ஆனந்த அதிர்ச்சிதான். மேலும், ஓலையில் குறிப்பிட்ட செய்தியைக் கேட்டதும் மஞ்சரிக்கு ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும், இந்த நல்ல செய்தியைக் கேட்க சகோதரன் எப்போது வருவார் என்றே தோன்றியது.

திடீரென்று மஞ்சரிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, அப்படியே இருக்கையில் அமர்ந்தாள்.

தேவி, என்னவாயிற்று?”

ஒன்றுமில்லை, வெகுநேரமாக வெயிலில் நின்றது தலைசுற்றுவதுபோல் இருக்கிறது நீலா. சிறிது நீர் கொணர்ந்து வாயேன்முகத்தில் சோர்வு அதிகப்படியாய் தெரிந்தது.

மருத்துவச்சி, மஞ்சரியின் நாடியைப் பிடித்துப் பார்க்க, அனுபவம் நிறைந்தவர் முகத்தில் அத்தனை அதிர்ச்சி.

இளவரசியாரே! காலையில் உணவு உண்டீர்களா?” எப்படியேனும் அவளைத் தனியே அழைத்து விசயத்தை கூறிவிட வேண்டும் என்று எண்ணினார் மருத்துவச்சி.

இல்லையம்மா! ஆலயப்பணிகள் கவனிக்க வேண்டியிருப்பதால் நான் காலை உணவை மறந்துவிட்டேன்

அதனால்தான் இப்படி. இனி நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றவர், கொஞ்சம் குரலைத் தாழ்த்தி, “இரட்டைக் கருவைத் தாங்குகிறீர்கள் இளவரசி. பத்திரமாக இருங்கள்என்று சொல்லிவிட்டு சென்றார். அருகேயிருந்த யட்சினிக்கு அவர் சொன்னது தெளிவாகக் கேட்டது. அதிர்ச்சியோடு மஞ்சரியைப் பார்த்தாள். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மஞ்சரிக்கும் அதே அதிர்ச்சிதான். முதல் கூடலிலேயே கருவுற்றுவிட்டாள். இவர்கள் கந்தர்வ மணம் செய்துக் கொண்டது தெரிந்திருந்தாலும் தற்போது அவன் உடனில்லையே என்றுதான் மனம்பாடாய் படுத்தியது.

செந்தூரனை எண்ணி கண்கள் அனிச்சையாய் கலங்கியது. ‘விரைந்து வாருங்கள். உங்களுக்காக மூவர் காத்துக் கொண்டிருக்கிறோம்யட்சினிதான் இச்சமயத்தில் அவளுக்கு ஆதரவாய் இருந்தாள்.

மயக்கத்திலிருந்து எழுந்த கோதையும் மருத்துவச்சி சொன்னதைக் கேட்டு, மகிழ்வதா அதிர்வதா என்று தெரியாமல் ஏதோ ஒரு நிலையில்தான் இருந்தாள். செந்தூரன் வந்ததும், விரைந்து இருவருக்கும் திருமணம் நிகழ்த்திவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

இன்னும் பன்னிரெண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். எப்படியும் வஞ்சன், மலைவழியினைப் பின்பற்றி கல்வராயன் மலைக்கு சென்றிடுவார். ஆக, அவர் வருவதற்குள் செந்தூரன் வந்துவிட்டால் உடனடியாக திருமண வைபவத்தை நிகழ்த்திவிட வேண்டும் என்றே எண்ணினாள் கோதை.

ஆலயத்தில்

செம்பியன் ஏற்பாடு செய்த ஆட்கள் வேலையை தாமதப்படுத்த, மற்றுமொரு கூட்டம் சதிசெய்துக் கொண்டிருந்தது.

அவர் சொன்னதுபோல் அனைத்தும் ஏற்பாடாகிவிட்டதா?”

ஆகிவிட்டது. இன்று இரவு திட்டம் நிறைவேற்றப்படும். துக்கக் காரியம் நிகழ்ந்துவிட்டால் ஆலயப்பணிகள் அனைத்தும் தடைப்பட்டுவிடும். அதற்குபிறகு அவர் பார்த்துக் கொள்வார்

நல்லது. நான் வைகறையில் சந்திக்கிறேன்யாரோ இருவர் பேசிக்கொள்வதை அந்தப்பக்கம் சென்றுக் கொண்டிருந்த பணியாளன் ஒருவன் கேட்டுவிட்டான்.

உடனடியாக முன்னேற்பாடுகள் சிலதை செய்தவன், தான் அறிந்ததை இளவரசியிடம் தெரிவிக்க அரண்மனை நோக்கிச் சென்றான் அவன்.

அவன்மட்டும் அறிந்த சுரங்கவழியில் செல்ல அது முடிந்தது மஞ்சரியின் அறையில்.

திடீரென்று கேட்ட சத்தத்தில் மஞ்சரியின் அறையில் இருந்த யட்சினி திடுக்கிட்டு திரும்ப, மறைவிற்கு பின் ஒரு உருவம் வெளிப்பட்டது. அறைச் சுவரானது கதவாய் மாற, வெளிப்பட்டான் செவ்வேலன்.

மஞ்சரியை எதிர்நோக்கி வந்தவனிற்கு அங்கு நீலா இருப்பது யோசனையையும் குழப்பத்தையும்தான் தந்தது.

நீலா? நீ பொதியில் செல்லவில்லையா? இங்குதான் இருக்கின்றாயா?”

யட்சினிக்கு ஒன்றும் புரியவில்லை எனினும், அவனே பேசட்டும் என அமைதிக் காத்தவள், “இளவரசி இங்கு இருக்கும்போது, நான் எப்படி பொதியில் செல்வது?” என்றாள்.

நல்லவேளை, நான் அனுப்பிய தூது சரியாக உன்னிடமே வந்துவிட்டது. உனது சாபம் நீக்குவதற்கான வழியை தந்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறார். வீணாக சித்தமுனியைத் தேடி சென்று உனது முடிவை நீயே தேடிக்கொள்வாய் என அவரும் மிகவும் கவலையோடு தான் இருந்தார் நீலா. நீ செல்லவில்லையென்பதை உடனடியாக தந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும்அவளைக் கண்ட மகிழ்வில் செவ்வேலன் தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தான்.

ஆக, நாம் நினைத்ததுபோல் நீலா சாபம் வாங்கிய வேடர்குலத்தவள்தான். நிச்சயம், அவள் தற்போது பொதியைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். உடனே இந்த உண்மையை மஞ்சரிக்கு எடுத்துக் கூற வேண்டும். இனி, நீலாவை மஞ்சரி நம்பிக்கொண்டிருப்பது சரியாக இராது. இவள் அங்கு செல்வது இவனுக்கு உடன்பாடு இல்லையென்கிறான். தந்தை என்று வேறு சொல்கிறான். அப்போது, இவனும் தேவநாகவேடர் குலத்தினன் போலவே! இருக்கட்டும், இவன் வாயில் இருந்தே விசயத்தைக் கறக்க வேண்டும்.’ மனத்தினுள் எண்ணிக் கொண்டாள்.

அதனைப் பிறகு தெரியப்படுத்தலாம். வந்த காரணம் யாதோ?” தனது கருவிழிப் பார்வையினை மோகப் பார்வையாக மாற்ற ஆரம்பித்தாள்.

இருட்டில் அதனை அறியாத செவ்வேலன், ஆலயத்தில் தான் கேட்டதை பகிர்ந்தான். “யார் இதற்கு காரணம் என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவது மட்டும் உறுதி. இதனை உடனடியாக இளவரசியாரிடம் தெரிவிக்க வேண்டும்

அவன் சொன்னதைக் கேட்டவளின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

நீ கூறுவது எத்தனை தூரம் உண்மையென்று நான் நம்புவது?” அவள் நம்ப மறுத்தாள். ஏனெனில், சிறிது நேரம் முன்புவரை அவள் காவலுக்கு வைத்திருந்த அவளின் சக்திகள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்றுதான் சொல்லிச் சென்றன.

இளவரசியிடம் கூறி, என்னை அவரின் ஒற்றன்படையில் சேர்ப்பித்தவளே நீ தான். நீயே நம்ப மறுத்தாள் நான் என்ன செய்வது? நான் கூறியது அனைத்தும் உண்மையே. வேடர்குலத்தலைவன் மேல் ஆணையாகஇதற்குபின், அவள் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இவன் யார்? ஏன் நீலா இவனை ஒற்றன் படையில் சேர்க்க வேண்டும்? நீலா ஏன் சித்தமுனியைத் தேடிச் செல்ல வேண்டும்? இப்படி பல்வேறு கேள்விகள் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அவள் அறிந்தவரை, நீலா சாபவிமோச்சனம் பெறுவதற்காக பொதியில் சென்றிருக்கிறாள். அதனால், அவளின் உருவத்தில் இவள் இங்கு இருக்கிறாள். இதுமட்டும்தான் காரணமா என்று தற்போதுதான் சிந்திக்க துவங்கினாள் யட்சினி.

அவளின் அமைதி செவ்வேலனை என்னவோ செய்தது. இன்னும் அவள் தன்னை நம்ப மறுக்கிறாள் என்றே எண்ணினான்.

இன்னும் நீ நம்பவில்லையா நீலா?”

இல்லை. இதை உடனே இளவரசியிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், அரண்மனையிலும் பலர் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் யாரை நம்புவது என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

நானே சென்று அவரிடம் இதை கூறுகிறேன் நீலா. நீ இளவரசியின் அறைக்கு வந்துவிடுஎன்றவன், சட்டென இராஜநாகமாக மாறியவன், அங்கிருந்த ஒரு பொந்தின் வழியாக இளவரசியின் தனிப்பட்ட உள் அறைக்குள் சென்றான்.

யட்சினியின் இதழ்கள் மர்ம புன்னகை சிந்தியது. உடனே, அங்கிருந்து மறைந்தவள், மஞ்சரியின் அறைக்குள் வந்து சேர்ந்தாள்.

….

பொதியில்

வஞ்சனும் செந்தூரனும் அருவி குகையை விட்டு வெளியே வர, அவனின் பாதி படைகள் இறந்துக் கிடந்தன. மீதமிருக்கும் படைகளும் தொலைவில் யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் பெரும் அதிர்ச்சியில் இருக்க, அரையுயிராக ஓடி வந்த வீரன் ஒருவன், “காளிங்கன் படைகள்…” என்று சொல்லி முடிப்பதற்குள் முதுகில் அம்பு தாங்கி உயிரிழந்தான்.

செந்தூரா, இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உடனடியாக நீ கிளம்புஇடையில் சொருகியிருந்த வாளை எடுத்தவாறு சொன்னான் வஞ்சன்.

இல்லை, வஞ்சா! தற்போது இருவரின் பணியும் மிகவும் முக்கியம். நீ உடனே இங்கிருந்து புறப்பட்டு கல்வராயன் மலைக்குச் செல். இதோ, இந்த சிவன்காப்பை வைத்துக்கொள். அருவ சக்திகளிடமிருந்து இது உன்னைக் காக்கும். உடனே புறப்படு. இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

விரைவில் அரண்மனையில் சந்திக்கலாம். பத்திரம்என்றபடி செந்தூரனை அணைத்து விடுவித்தவன், தனது புரவியில் ஏறி வேறு மார்க்கமாக புறப்பட்டான்.

செந்தூரன், மனதார இறைவனை தொழுதவன் தனது புரவியில் மலைமேல் ஏற ஆரம்பித்தான்.

வஞ்சன், கல்வராயன் மலைக்கு செல்வதற்குள் நான் கோட்டைக்கு சென்றிருக்க வேண்டும். இந்த கலசநீரை கோதையிடம் கொடுத்துவிட்டு உடனே படைகளைத் திரட்டி கல்வராயன் மலைக்கு சென்று வஞ்சனிற்கு உதவிட வேண்டும்.’ மனதில் முடிவெடுத்தவனாய் புறப்பட்டான்.

குடநாட்டு மன்னன் செம்பியனின் இளைய மகன்தான் காளிங்கன். அவன் ஏன் தற்போது படைகளை திரட்டி வந்துள்ளான் என்பது செந்தூரனிற்கு குழப்பமாக இருந்தது. பொதிய மலையின் உச்சிக்கு செல்ல இன்னும் சில நாளிகையே இருந்தது. அங்கு சென்றுவிட்டால், அங்கிருந்து புரவியை வேறுப்பக்கம் அனுப்பிவிட்டு, பள்ளத்தாக்கிற்குள் இறங்கி மலைவாழ் மக்களிடமிருந்து புரவியை வாங்கிக் கொண்டு கோட்டைக்கு விரைந்திடலாம் என்று எண்ணியவனின் கவனத்தை அவனது புரவி கலைத்தது. மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதை கவனித்தவன், அருகே ஒரு ஓடையின்பக்கம் அதனை இளைப்பாற விட்டான்.

கண்மூடி சாய்ந்திருந்தவன், உணவு பதார்த்தங்கள் சமைக்கும் மணம் வர யோசனையோடு கண்களை திறந்தான். அப்போதுதான், தனக்கும் உண்டி உண்டு என்பதை அவனது மூளை எடுத்துரைத்தது.

குதிரையை அங்கேயே கட்டியவன், “நான் வரும்வரை இவ்விடத்தை விட்டு எங்கும் செல்லாதே கருப்பா.” என்று அதற்கு உத்தரவிட்டே சென்றான். எஜமானின் கட்டளைக்கான ஒத்திசைவை கனைத்து அறிவுறுத்தியது.

மெதுவாக அந்த குடிலுக்கு அருகினில் சென்றவன், “யாரேனும் இல்லத்தில் இருந்தால், அருந்த நீர் தாருங்கள்என்று கேட்டு நின்றான்.

பசிப்பிணியில் வாடித் தவித்த மக்கள் அனைவருக்கும், அள்ள அள்ள குறையாத அளவிற்கு தானியங்களையும் உணவையும் வாரி வழங்கிய செந்தூரன், தற்போது ஒருவாய் தண்ணீருக்கு கையேந்தி நிற்கிறான்.

குடிலிருந்து ஒரு வயதான முதியவர் நீரோடு வந்தார். கைகளில் தவழ்ந்த நீரின் தழும்பலே அவரின் நடுக்கத்தை பறைசாற்றியது.

முதலில் அந்த நீரை வாங்கிப் பருகிய பின்னர்தான், செந்தூரனின் மூளை தெளிவாக யோசித்தது. ஏன், காளிங்கன் படைகள் இங்கு வர வேண்டும்? அப்போது, நாட்டில் வேள்விகளின் நிலை? நிச்சயம் தவறு நடக்க யட்சினி விடமாட்டாள். மஞ்சரி பார்த்துக் கொள்வாள் என்ற போதிலும், நயவஞ்சகக்காரர்களை எப்படி இனம் காண்பாள் என்னவள்? விரைந்து கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று தன் மனத்திற்குள் பேசிக்கொண்டவன், அதன்பின்னரே நீரைக் கொடுத்தவருக்கு ஒரு நன்றிக் கூட சொல்லவில்லை என்று அவரை நிமிர்ந்துப் பார்த்தான். பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

தந்தையே! தாங்களா? இங்கு எப்படி?” வார்த்தைகள் நாவிற்கு அடியில் சிக்குண்டு வார்த்தைகளுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தியது.

செந்தூரா, என் மகனே! இளம்கன்றாய் கண்டவனை தற்போது ஆண்மகவாய் காண முடியாத பாவியாகிப்போனேனேபார்வை பறிபோய், மேகநோய் பீடித்து தனித்து நிற்கும் நிலையிலா நான் உன்னைக் காண வேண்டும். அந்தோ!” வீரமரணம் அடைந்துவிட்டார் என்று நினைத்திருந்த தன் தந்தையை இந்நிலையில் காணவே அவனுக்கு மனது வெம்பியது.

என்னவாயிற்று தந்தையே? இத்தனை வருடங்கள் நீங்கள் உயிரோடிருந்தும் பெற்றவரை பேணா மகனாய் இருந்துவிட்டேன். இனி, நான் இருந்து என்ன பயன்?”

அப்படிக் கூறாதே செந்தூரா! இனிதான் உனக்கு பல கடமைகள் இருக்கின்றது. நம் நாடும் மக்களும் இன்னலில் தவிக்கின்றனர். மேலும், நம்மை ஏமாற்றிய துரோகிகளுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டாமா? என்றும் என் மகனின் விழிகள் நீரை சொரியக் கூடாது. உள்ளே வா!” என்று அழைத்துச் சென்றார் செந்தூரனின் தந்தை.

எனக்கு விரிவாக விளக்குங்கள் தந்தையே. என்னவாயிற்று?”

போரில் என் மார்பில் அம்பு தைத்தது உண்மைதான். உயிர் பறவை உடலை விட்டு வெளியேற துடிக்கும் நேரம்தனில்தான் துரோகிகளை அடையாளம் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது செந்தூரா. குடநாட்டு மன்னன் செம்பியனின் தந்தை கடுங்கோ கொங்கிளகேசர் சிதறிய கொங்கு நாடுகளை தனதாக்கும் பணியில் இருந்தார். அந்நிய படையெடுப்பின்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் என்று நானும் வஞ்சனின் தந்தையும் நினைத்திருக்கும் வேளையில், அந்நிய நாட்டோடும் கரம் கோர்த்து நாட்டை சுரண்டும் முயற்சியில் தந்திரம் செய்திருக்கிறான் அவன்.

எனது உடல் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணியவன், அரையுயிராய் கிடந்த என்னை தேர்க்காலில் கட்டி வெகுதூரம் அனுப்பிவிட்டான். உடலில் காயங்களோடு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்பு தைத்த நெஞ்சோடு வாழ்விற்கும் சாவிற்கும் போராடிக் கொண்டிருந்தவனை இங்கு தவமிருக்க வந்த அகோரிகள்தான் காப்பாற்றினர். உடல் காயங்களுக்கு மருந்தளித்தவர்களால் என் உள்ளக்கனலுக்கு மருந்திட இயலவில்லை.

மாதங்கள் கடந்து அவர்கள் பயணம் மேற்கொள்ளும் சமயம் அவர்களோடு என்னையும் அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும், நிச்சயம் நான் உன்னை சந்திப்பேன் என்று. அந்நாளிற்கு காத்திருந்து நடந்தவற்றை உன்னிடம் சொல்லவே இன்றுவரை என் உயிர்பறவை கூட்டை விலக்காமல் இருக்கிறது. இதில், சில நாட்களில் உன் அன்னையையும் இழந்துவிட்டாய். அறிவேன் செந்தூரா. நீ எப்படி துரோகிகள் வலையில் சிக்காமல் இருக்கின்றாயோ என்றே அனுதினமும் நான் பிரார்த்திக் கொண்டிருக்கிறேன்அந்த இடமே பேரமைதி கொண்டது.

உடனே உங்களை என்னோடு அழைத்துச் செல்கிறேன் தந்தையே. அந்த செம்பியனையும் அவனின் நாட்டையும் தன்வசப்படுத்துகிறேன்.”

அது மட்டும் போதுமா செந்தூரா?”

வேறு என்ன செய்ய வேண்டும் தந்தையே? ஆணையிடுங்கள்தன் வாளைப் பிடித்தவாறு அவன் சொன்ன தோரணை உள்ளம் சிலிர்க்க வைத்தது.

இந்நொடி எதையும் ஆராயாது தந்தை சொல்வதை சிரமேற்கொண்டு செய்யும் நிலைக்கு ஆளானான் செந்தூரன்.

அகோரிகள் செல்லும் முன் என்னிடம் சிலவற்றை சொல்லிச் சென்றார்கள் செந்தூரா. நீ யட்சினியின் உதவியால் நாட்டைக் காப்பாய் எனவும், நாட்டின் இன்னலை சரி செய்ய நீயும் வஞ்சனும் பொதிய மலைக்கு வருவீர்கள் எனவும் அச்சமயம், சித்தமுனியின் கலசம் உன்னிடம் இருக்கும் எனவும் கூறினார்கள். அந்த கலசநீரை சிறிதை நான் அருந்தினால், இந்த மூப்பு நோயிலிருந்து விடுதலை கிட்டிவிடும். யார் நம்மை வஞ்சித்தார்களோ அவர்கள் முன்பு நான் இன்னும் வீழவில்லையடா மூடா என்று நிற்க வேண்டும்.

மற்றுமொரு துர்செய்தியையும் பகிர்ந்தார்கள் செந்தூரா

என்ன தந்தையே?” செந்தூரனின் மனம் தடுமாறியது.

இன்றைய நாள் அறுபது வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் வரும் முழுநிலவு நாள். கிரகங்களின் மாறுதலால் இன்று இரவுக்குள் வஞ்சன் வீழ்வான். செம்பியன் கொங்கு நாட்டை வசம் செய்வதற்குள் நாம் கொங்குநாட்டின் ஆட்சியை பிடித்திருக்க வேண்டும். உன்னை தவிர்த்து இந்த கொங்கு பிரதேசத்தை யாராலும் சிறப்பாக ஆள முடியாது செந்தூரா. இந்த இருவிசயங்களையும் நீ மக்களுக்காக செய்துதான் ஆகவேண்டும்.”

முன் சொன்ன விசயங்கள் மனத்தில் நெருடலாக இருந்தாலும், பின் சொன்ன விசயங்கள் அவனை சிந்திக்க வைத்தன. ஏற்கனவே கொங்கு நாட்டை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் இருந்தால், எப்படியெல்லாம் மக்களின் நல்வாழ்வுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணக்கிடங்கில் இருந்தவனுக்கு அவனின் தந்தை சொன்ன வார்த்தைகளே பிரதானமாக இருந்தது.

மேலும், அவரை வீழ்த்த நினைத்தவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி பழைய வீரனாய் அவரை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

சிவனின் காப்பு அவனின் கையில் இல்லாததும், கிரகநிலை மாற்றமும் அவனின் எதிரில் நிற்பது அவனின் தந்தையே இல்லை என்கின்ற உண்மையை அவன் கண்ணிற்கு மறைத்து விட்டது. செந்தூரனின் புத்தி சாதூர்யம் இவ்விடத்தில் சறுக்கித்தான் போனது. அவனின் சுயநலமும், ஆசைக்கான தூபமும் சற்று மேலே வர, மற்றவையெல்லாம் மங்கித்தான் போயின. இத்தனை வருடங்கள், அன்னை தந்தை இல்லாது அவன்பட்ட இரணங்களும், முதுகுக்குப் பின் அடைந்த அவமானங்களும் கொங்கு தேசத்தை தன் தந்தையோடு ஆள வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ விதைத்தது. நெல்லுக்கு இரைக்கும் நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். கலசநீர் கொஞ்சமேனும் தன் தந்தையின் உடலுக்குள் சென்றாலே அவர் குணமாகிவிடுவார் என்று எண்ணியவன், நீரை பருக வைத்தான்.

தியானத்தில் அமிழ்ந்திருந்த சித்தமுனி, சட்டென்று கண் விழித்தார். ‘தவறிழைத்துவிட்டாய் செந்தூரா! மாபெரும் தவறிழைத்துவிட்டாய். விதியின் வசத்தால், என் தவப்பலனாய் யாம் பெற்ற நீரை பாவம் செய்தவனுக்கு புகட்டிவிட்டாய். இனி நடக்கவிருக்கும் அனைத்து இன்னல்களுக்கும் நீ ஒருவனே காரணமானவனாவாய். நமசிவாய

நீரை பருகியவுடன் தனது சுயஉருவத்திற்கு வந்தான் செந்தூரனின் தந்தை வடிவத்தில் இருந்த செம்பியனின் தந்தை கடுங்கோ கொங்கிளக்கேசர்.

நீ…” கொங்கிளக்கேசரின் உருவத்தைக் கண்டு திகைத்த செந்தூரன், அதிர்ந்து நிற்க, காளிங்கனின் படைகள் அவனை சூழ்ந்தது.

நான்தான்! நானேதான் செந்தூரா! உன் தந்தையின் நெஞ்சில் அம்பு தைத்தவன். அவனின் உடல்கூட யாருக்கும் கிடைக்காமல் செய்தவன்.”

நயவஞ்சகப் பேடியே! உன்னைவாளை உருவ முற்பட்டான். அதற்குள் காளிங்கன் அவனின் கழுத்தில் வாளை வைத்திருந்தான்.

என்னடா, திமிறிக்கொண்டு வருகிறாய். நீ அறியாத செய்தி ஒன்றை கூறுகிறேன் கேள். அரண்மனையில் உன் கந்தர்வ காதலி கருவுற்றிருக்கிறாள் தெரியுமா?” 

அதிர்விலும் பெரும் அதிர்வு செந்தூரனிற்கு. அதனைக் கண்டு கொங்கிளக்கேசரும் காளிங்கனும் நகைக்க, தன் முகத்திரையை விலக்கி வந்தாள் நீலா.

அன்பரே! வேள்வி முடியும் தருவாயில் இருக்கிறது. கலசநீர் கொடுங்கள்என்றாள்.

நீலா? அப்போதே உன்மேல் நான் சந்தேகம் கொண்டேன். இப்படி துரோகியாய் மாறுவாய் என்று நான் துளியும் எண்ணவில்லை. மஞ்சரி நின்மேல் அத்தனை நட்பாய் இருந்தாளே, அவளை ஏமாற்ற உனக்கு எப்படி துணிவு வந்தது.?” ஆக்ரோசமாகக் கத்தினான் செந்தூரன்.

எள்ளல் புன்னகை ஒன்றைச் சிந்தியவள், “நட்பாய் இருந்தால், என் சாபத்திற்கு விமோச்சனம் அவளால் நல்கிட இயலுமா? யார் துரோகி நானா? யட்சினியின் துணைக்கொண்டு நாட்டை கட்டுக்குள் வைத்துவிட்டால் நீ பெரிய வீரனா? நானாவது என் சுயநலத்தைதான் முன்னிறுத்தினேன். ஆனால், நீயோ? திடீரென கண்ட உன் தந்தையின் உருவத்தைக் கூட அடையாளம் காண இயலாமல் அவர் சொன்னதற்காக மொத்த கொங்கு நாட்டையும் ஆளும் எண்ணத்திற்கு வந்துவிட்டாய். இப்போது சொல், யார் துரோகி?” சீறினாள் மங்கையவள்.

அனைத்தும் உங்களின் சதிதானோ? முட்டாள்களே! யட்சினியின் உதவியால் நான் நாட்டை ஆளவில்லை. அவள் எனது கைப்பாவை மட்டுமே. வீரமிருப்பின் கைவிலங்கை அவிழ்த்துவிட்டு மற்போர் செய்துபாருங்களடா. அறிவுக்கெட்ட அரக்கர்களே. நீ அகோரி என்று சொன்னபோதே நான் சுதாரித்திருக்கவேண்டும். பாசம் என்னும் மாயை கொண்டு சாதித்துவிட்டதாய் மார்த்தட்டிக் கொள்ளாதே! முடிந்தால், என்னோடு போர் புரிந்து பெற்றுக்கொள்ளுங்களடா நாட்டையும் கலசத்தையும். பிச்சையாகக் கொடுக்கிறேன். பிழைத்துக் கொள்ளுங்கள்

செந்தூரனின் கழுத்தில் இருந்து வாளை எடுத்தவன், கோபமாக அவனின் நெஞ்சில் எட்டி உதைத்தான் காளிங்கன். “யாருக்கு யார் பிச்சை இடுவது? இன்னும் சற்று நேரத்தில் நீயும் கல்வராயன் மலைக்கு சென்றுக்கொண்டிருக்கும் உன் ஆருயிர் நண்பனும் மடிந்து மண்ணிற்கு உரமாகப் போகிறீர்கள். உங்களை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, அரண்மனையில் இருக்கும் பெண்களை வீழ்த்துவதா கடினம். இவ்வேள்வி முடிந்ததும், நீலா அவளின் சுய உருவத்திற்கு வந்திடுவாள். அதனைக் கண்கொண்டு கண்டபின் மடிந்துபோடா. வீரர்களே! இவனை சங்கிலியால் பிணைத்து விடுங்கள்உத்தரவிட்டவன், வேள்வி நடக்குமிடத்திற்கு சென்றான்.

செந்தூரன் மூளை விரைந்து இங்கிருந்து தப்பிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டது. ‘வஞ்சனைக் காப்பாற்ற வேண்டும். அங்கு மஞ்சரி கருத்தரித்திருக்கிறாள் என்றால், நிச்சயம் பஞ்சம் விலகும். ஆனால், நாட்டை ஆள மன்னர் வேண்டுமே! இங்கிருந்தால் யட்சிணியால் நமக்கு உதவிட இயலாது. எப்படியாவது கோட்டை வாயிலை நெருங்கிட வேண்டும். அங்கிருந்து நினைத்த நொடி யட்சிணி வந்துவிடுவாள். இச்சூழ்நிலையில், அவளைத் தவிர்த்து நமக்கு யாராலும் உதவிட இயலாது. இறைவா! இக்கயவர்களிடமிருந்து எம்மக்களை காத்தருள வேண்டுகிறேன். என் புண்ணிய பலன்கள் அனைத்தையும் இந்நொடி நின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நாட்டு மக்களையும் துரோகத்தால் சூழ்ந்திருக்கும் என்னவளையும் காப்பாற்றிடப்பா!’ திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதுபோல் தனது வேண்டுதல்களால் இறைவனை மனமுருகி தியானித்தான். விதியின் கணக்கிற்கு இறைவனும் பதிலெழுதித்தான் ஆகவேண்டும். இனி அனைத்தும் காலப்பயன்.

வேள்வி முடியும் தருவாயிலிருக்க, கலசநீரை சிறிது அருந்திய நீலாவும் காளிங்கனும் ஒன்றாக வேள்வியில் குதித்தார்கள். அந்நொடி சித்தமுனி அளித்த சாபம் நீங்கப்பெற்று இருவரும் நாகமாக உருவமெடுத்தனர்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனிற்கு மட்டுமல்ல, கொங்கிளகேசரும் சற்று அதிர்ந்துதான் போனார். நீலா மட்டுமே சாபம் பெற்றவள் என்று எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு, தனது பெயரன் காளிங்கனும் நாகஉருவெடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

காளிங்கா! என்ன நடக்கிறது இங்கே?” கோபத்தில் அவரின் முகம் கனன்றது.

தாத்தா! நீலா சாபம் பெற காரணமாக இருந்ததே நான்தான். ஆகவே, அவளோடு கூடி அவளின் சாபத்தை நானும் பெற்றேன். இனி யார் நினைத்தாலும் என்னையும் என்னவளையும் பிரித்திட இயலாதுஎன்றான்.

என்ன பிதற்றல் இது? மனிதஉரு எடு காளிங்கா. செம்பியனுக்கு நான் என்ன பதிலளிப்பேன்?” ஆட்சியைப் பிடிக்க தனது பெயரனை தன்னுடன் அனுப்பிய மகனிடம் இனி அவன் தேவநாகவேடர் குலத்தவரோடு சேர்ந்துவிட்டான் என்று எப்படி மொழிவார் இந்த கொங்கிளக்கேசர்?

தாத்தா! எனக்கு நாடும் பதவியும் எதுவும் வேண்டாம். இவள் ஒருவளே எனக்கு போதும்.”

காதல் பித்தால் உளறாதே! அவளின் தந்தை நிச்சயம் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார். மகளுக்காக நாடோடியாய் விமோச்சனம் தேடி அலைந்துக் கொண்டிருப்பவர், உன்னால்தான் அவள் சாபம் பெற்றாள் எனத் தெரிந்தால் நிச்சயம் உன்னைக் கொன்று குவித்துவிடுவார்

இவர்களின் சம்பாஷைணைகளில் செந்தூரன் முக்கியமான விசயத்தைக் கண்டுக்கொண்டான். ‘, அப்போது நான் வைத்தியம் அளித்த அந்த இராஜநாகம்தானே தேவநாகவேடர் குலத்தின் தலைவர். வசமாய் சிக்கிக்கொண்டீர்களடாஎன்று நினைத்தவன் எக்காளச் சிரிப்பு சிரித்தான்.

அவனின் சிரிப்பில் அனைவரின் கவனமும் செந்தூரனிடம் சென்றது. “அடேய், என்ன இங்கு கேளிக்கையா நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது? இப்போது நீ நிறுத்துகிறாயா இல்லையா?” கத்தினார் கொங்கிளக்கேசர்.

வயது முதிர்ந்த கிழமே! இனி நீர் என்ன நினைத்தாலும் என்னைத் தடுக்க முடியாது. நீலா! இந்நொடி நான் உனக்கு ஆணையிடுகிறேன். என் கைவிலங்கை அவிழ்த்துவிட்டு, இருவரும் வீரர்களை தாக்குங்கள்.”

தேவநாகவேடர் குலத்தலைவன் செந்தூரனிற்கு அளித்த நாகவசியக் காப்பும், அவர் கொடுத்த வாக்கும் சரியான நேரத்தில் செந்தூரனிற்கு உதவியது. சற்று நேரத்தில் காளிங்கனும் நீலாவும் அவர்களின் சுயத்திலேயே இல்லை. காளிங்கன் மனித உருவெடுத்தவன் செந்தூரனின் கைவிலங்கை அவிழ்த்துவிட, நீலா நாகமாய் மாறி அனைவரையும் தாக்கினாள். பின், காளிங்கன் மீண்டும் நாகமாய் மாற, நீலாவும் காளிங்கனும் கொங்கிளக்கேசர் முன் படமெடுத்து நின்றனர், கருநிற இராஜநாகமாய்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்