
தன் செல்பேசி தரையில் போடப்பட்டு, உடைந்து கிடக்க, எதிரே அனல் தெறித்தப் பார்வையுடன் நின்று இருந்த அபூர்வனை நிமிர்ந்து பதட்டத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் ஆராத்ரிகா.
அவளுக்குத் தன் கணவனின்இந்தக் கோபம் நிஜமாகவே புதிதாகத் தான் இருந்தது!
ஏனெனில், அத்தனைச் சீக்கிரத்தில் தனது கோபத்தை மனைவியிடம் காண்பித்து விட மாட்டான் அபூர்வன்.
ஆனால் இன்றோ அவன் உச்சபட்சக் கோபத்தில் இருக்கிறான் என்பது ஆராவிற்குப் புரிந்து போனது.
தன் முன்னால் ஆக்ரோஷமாக நின்றக் கணவனைப் பார்த்துத் திடுக்கிட்டவளுக்கோ பேசத் துணிவு எழவில்லை.
ஆனாலும் அமைதியாக இருந்து விட முடியாதே?
அதனால்,”அபூ”என்று பேசத் தொடங்கியவளை ஆட்காட்டி விரலைத் தன் உதட்டின் மேல் வைத்துப்,’பேசாதே!’என்று சைகை செய்தான்.
அவனது கட்டளைக்கு இணங்கி இவளும் பேசவில்லை.
“ரொம்ப முக்கியமான ஃபைல் ஒன்னை மறந்து வச்சுட்டுப் போயிட்டதால் அதை எடுக்கத் தான் வந்தேன்! அப்படியே நீ எப்படி இருக்கன்னு அம்மாகிட்ட கேட்டால், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நீ மயங்கி விழுந்தன்னு சொன்னாங்க! அவங்க ரெண்டு பேரும் ரொம்பப் பதறிப் போய், பயந்து இருக்காங்க! உன்னை நினைச்சு கவலைப்பட்ற எங்களை நினைச்சு நீ கொஞ்சமாவது கவலைப்பட்டியா ஆரா?”என்றத்,
அவனது சொல்லம்புகள் ஆராத்ரிகாவை இடைவிடாது தாக்கிக், காயப்படுத்தி இருந்தது.
அவளோ, தன்னுடைய செயலால் தான், தன் கணவன் தன் மேல் இந்தளவிற்குக் கோபம் கொண்டு இருக்கிறான் என்பதை நினைத்து தானும் வருந்தினாள் ஆராத்ரிகா.
ஆனால் அவளையே மௌனமாகப் பார்த்து விட்டுத் தன் தாயார் கூறியதை நினைத்துப் பார்த்தான் அபூர்வன்.
சிறிது நேரத்திற்கு முன்னர் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த மகனைத் திகைத்துப் போய்ப் பார்த்தனர் அவனது பெற்றோர்.
“என்னடா அபூர்வா! சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட?”என்று அவனிடம் வினா எழுப்பினார் நீலவேணி.
“இன்னும் ஆஃபீஸ் முடியலம்மா. ஒரு ஃபைலை எடுக்க வந்தேன். ஆரா எங்கம்மா? ரூமில் இருக்காளா?”என்று தன் மனைவி அங்கு இல்லாததைக் கண்டு அவளைப் பற்றித் தாயிடம் விசாரித்தான்.
“அவளுக்கு டயர்டா இருக்குப்பா. அதனால் ரூமில் ரெஸ்ட் எடுக்குறா”எனப் பதிலளித்தார்.
“காலைச் சாப்பாடு சாப்பிட்டாளாம்மா?”என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அபூர்வன்.
“சாப்பிட்டாப்பா. அதுக்கு அப்பறம் தான் ரெஸ்ட் எடுக்கப் போயிருக்கா”என்று நாச்சிமுத்து அவனுக்குப் பதில் சொல்லி விடவும்,
சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டு இருந்த குவளையை எடுத்து அதிலிருந்த தண்ணீரைப் பருகினான்.
தனது மனைவித் தன் குரலைச் செருமிக் கொண்ட விதத்திலேயே, அவர் தங்களது மருமகள் மயக்கம் போட்டு விழுந்ததை மகனிடம் தெரிவிக்கத் தயாராகி விட்டார் என்பதைப் புரிந்து கொண்டு,
அந்த விஷயத்தை மகனிடம் கூறுவது தங்களது கடமையே என்பதைப் போல் தானும் மனைவியின் முடிவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமைதியாக அமர்ந்து இருந்தார் நாச்சிமுத்து.
தண்ணீரைக் குடித்து முடித்ததும் தன்னுடைய முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அபூர்வன்.
“அபூர்வா! இன்னைக்குக் காலையில் சாப்பிட்றதுக்கு முன்னாடி ஆரா ஃபோன் பேசிட்டு வர்றேன்னுப் போனாள்! சரி, பேசிட்டு வரட்டும்னு விட்டுட்டேன். ஆனால் அவ ரொம்ப நேரமாகப் பேசியதால் சாப்பாடு சாப்பிடக் கூப்பிடலாமேன்னு போறதுக்குள்ள கீழ்ப் படியில் மயக்கம் போட்டு விழுந்துக் கிடந்தாள்டா!”என்று தன்னுடைய தாய் விளக்கமாகக் கூறியவற்றைக் கேட்டதுமே அபூர்வனுக்குக் கொஞ்ச, நஞ்சப் பதட்டம் ஏற்படவில்லை!
அவனது சரீரம் முழுவதுமே ஆடிப் போய் விட்டிருந்தது.
“என்னம்மா நீங்க? இந்த விஷயத்தை அப்போவே எனக்குக் கால் பண்ணிச் சொல்லி இருக்கலாம்ல?”என்று கலக்கத்துடன் கேட்டான் அபூர்வன்.
“உனக்கு இந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருக்கும்னு தான் நான் அப்போவே உங்கிட்ட இதைச் சொல்லலைடா! இப்பவும் சொல்லாமல் இருந்தேன்னா அது சரியா இருக்காதுன்னு தான் உங்கிட்ட மறைக்காமல் சொல்லிட்டேன்”என்றதுமே,
தனது தலையில் கை வைத்து அமர்ந்த மகனின் சிகையைக் கோதி விட்டு,”நீ போய் மருமகளைப் பாருப்பா”என்று அவனை மாடிக்கு அனுப்பி வைத்தார் நாச்சிமுத்து.
“என்னங்க நான் பண்ணது சரியா? தப்பா?”எனக் கணவனிடம் தனது செயல் சரிதானா என்று கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள எண்ணினார் நீலவேணி.
ஏனெனில், தான் ஆராவைப் பற்றி அபூர்வனிடம் சொல்லியது தவறோ? என்று அவரது மூளை யோசித்தது.
“நீ செஞ்சது தப்பே இல்லம்மா! இப்பவும் நாம அவன்கிட்ட இதைச் சொல்லாமல் விட்டு இருந்தால் தான் தப்பாகி இருக்கும்”என்றுரைத்து மனைவியைச் சமாதானப்படுத்தினார் நாச்சிமுத்து.
தன் மனைவி மயக்கமுற்றாள் என்றதைக் கேட்டதும் நிலை கொள்ளாமல் தவித்து தாமதிக்காமல் அவளைப் பார்க்கத் தங்களது அறைக்கு ஓடினான் அபூர்வன்.
அந்தச் சமயத்தில் தான், வெகு சிரத்தையாக காரிகாவிடம் செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்தாள் ஆராத்ரிகா.
அதைப் பார்த்ததுமே கட்டுக்கடங்காத கோபத்தில் அவளது செல்பேசியைப் பிடிங்கித் தரையில் உடைத்து இருந்தான் அபூர்வன்.
இப்போது அவன் தன் மனைவியையேப் பார்த்துக் கொண்டு இருக்க, அவளும் தனது விழிகளில் தவிப்புடன் அவனைத் தான் ஏறிட்டாள்.
“நீ மயக்கம் போட்டு விழுந்த விஷயத்தைக் கேட்டு நான் எவ்ளோ பதறிப் போய் ஓடி வந்து இருக்கேன்னு உனக்குத் தெரியுமா ஆரா? நீ என்னடான்னா கொஞ்சம் கூடக் கவனம் இல்லாமல் இருந்து இருக்கிற?”என்று தன்னிலை மறந்து ஆராவிடம் பேசிக் கொண்டு இருந்தான் அபூர்வன்.
ஏனெனில் ஒரு வருடத்திற்குப் பிறகு இவ்விருவருக்கும் பிள்ளைப் பாக்கியம் கிடைத்திருக்கும் சமயத்தில் தன் மனைவியின் இப்படியான அலட்சியமான நடவடிக்கைகள் அபூர்வனுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை!
“அபூ நான் கனி கிட்டப் பேசிட்டு இருக்கும் போது…!”என்றவளைக் கணவன் முறைக்கத் தொடங்கவும்,
அதில் அவளால் நிமிர்ந்து தைரியமாக எதையும் கணவனிடம் சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் தப்பு செய்தது அவளல்லவா?
“என் ஆரா இப்படி கூனிக் குறுகி எப்பவும் எங்கிட்ட பேசினதே இல்லை! அவ எங்கிட்ட தலை நிமிர்ந்து பேசித் தான் பார்த்து இருக்கேன்! உனக்கே உன்னோட மாறுதல்களைத் தெரிஞ்சிக்க முடியுது தானே? சொல்லு? உனக்கு என்ன ஆச்சுடி?”என்று தள்ளாடியபடியே கட்டிலில் அமர்ந்தவளைப் பார்த்தான் அபூர்வன்.
“இப்போ தான் சாப்பிட்டு வந்தன்னு அம்மா சொன்னாங்க! அதுக்குள்ளேயே இப்படி தள்ளாடுற! அப்படின்னா நீ அவ்வளவு பலவீனமாக இருக்கிறன்னு அர்த்தம்? உனக்கு நம்மக் குழந்தையைப் பத்திக் கவலை இருக்கா? இல்லையா?”என்று அவளிடம் முடிவாகக் கேட்டான் கணவன்.
அவன் தான் தன்னுடைய மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே என்பதை போகிறது எப்போதோ கவனித்து விட்டானே!
அதனால் தான் அவளைத் தன் பெற்றோருடன் தங்க வைத்தால் அவர்கள் இவளைப் பார்த்துக் கொள்வார்கள் என்று அழைத்து வந்திருக்க, ஆனால் இவளோ மேலும், மேலும் தன்னுடைய உடல்நிலையைத் தானாகவே மோசம் செய்து கொள்வதைக் கண்ணுற்றவனுக்குக் கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!
“அபூ! எனக்கு நம்மக் குழந்தை மேல் ரொம்பவே அக்கறை இருக்கு. ஆனால் என்னைச் சுயநலவாதி ஆக இருக்கச் சொல்றீங்களா? ஒருத்தருக்குப் பிரச்சினைன்னுத் தெரிஞ்சும், அதுவும் அந்த நபர் என்னோட ஃப்ரண்ட்ன்னுத் தெரிஞ்ச பிறகும் நான் சும்மா இருக்கனுமா?”என்ற ஆராத்ரிகாவின் குரலில் ஏனோ கலக்கமும், பதட்டமும் வெளிப்பட்டு இருந்தது.
அவளுக்குமே, தான் படியில் மயங்கி விழுந்தது உண்மையிலேயே பயத்தை உருவாக்கி விட்டிருந்தது!
ஆனாலும்,’தோழிக்கு உதவி செய்யாதே?’என்று தன்னவன் சொல்வதை மட்டும் அவளால் ஏற்க முடியவில்லை.
“உன்னை யாரு சுயநலவாதி ஆக இருக்கச் சொன்னது? ஆரம்பத்தில் இருந்தே உங்கிட்ட நான் சொல்ற விஷயம் ஒன்னே ஒன்னு தான்! நீ உதவிப் பண்ணு! நான் அதை எதிர்க்க மாட்டேன்! ஆனால் உன் உடல்நலத்தை வருத்திக்கிட்டு, மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டுச் செய்யாதேன்னு தான் சொல்றேன். இந்த விஷயத்துக்காக நீ எனக்கு டிவோர்ஸ் தரேன்னுக் கூட சொன்னியே ஞாபகம் இருக்கா? அதைக் கேட்டதில் இருந்து எனக்கு எவ்ளோ கஷ்டமாக இருக்குன்னு உனக்குத் தெரியுமா?”எனக் கசங்கிய முகத்துடன், கலங்கிய குரலுடன் பேசிய கணவனைப் பார்த்த ஆராவிற்கு முதல்முறையாக தான் செய்தது அதிகப்படியோ என்றக் குற்ற உணர்வுத் தோன்றியது.
தனது கையில் இருந்த கோப்பையே வெறித்துப் பார்த்த கணவனின் அருகில் உட்கார்ந்தாள் ஆராத்ரிகா.
அதில் அவளை உறுத்து விழித்தவனோ எதுவும் பேசாமல் இதுவரை பேசியதே அவளுக்குப் புரிந்திருக்கும் என்று வாய் திறவாமல் இருந்து விட்டான் அபூர்வன்.
அவனது கைகளைத் தன் கரங்களுடன் பிணைத்துக் கொண்டு அவனது தோளில் சாய்ந்து கொள்ள உந்திய மனதை ஏமாற்றாமல் தன்னவனின் தோளில் சலுகையாகச் சாய்ந்து கொண்டாள் ஆராத்ரிகா.
உடனே அதில் சிலிர்த்துப் போய் மனைவியின் கரங்களை இறுக்கமாகப் பற்றி அதில் இதழ் பதித்து விட்டு அவளிடமிருந்து விலகி எழுந்து,
“ஆஃபீஸூக்குப் போகனும் ஆரா. எனக்கு நேரமாச்சு. நீ தூங்கு. லன்ச் கரெக்ட்டா சாப்பிடு. நான் ஈவ்னிங் வரேன்”என அவளிடம் பட்டும் படாமல் பேசியவனையே குற்றம் சாட்டும் பார்வையுடன் விழி எடுக்காமல் பார்த்தாள் ஆராத்ரிகா.
ஆனால் அவளது பார்வையின் பொருளை உணர்ந்தாலும் கூட அதற்கு மறுமொழியாக எதுவும் கூறாமல் மௌனமாகவே அறையிலிருந்து வெளியேறிச் சென்று விட்டிருந்தான் அபூர்வன்.
அதில் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் உருவாகி கன்னத்தை தாண்டி வழிந்தோட தங்கள் இருவருக்கும் இடையில் இதுவரையில் இருந்த அந்த நம்பிக்கை, புரிதலால் ஆனப் புனிதமான பந்தம் உடைந்து விடுமோ? என்ற அச்சம் ஆராத்ரிகாவிற்குத் தோன்றாமல் இல்லை.
தன்னுடைய அளவில்லா அன்பால் தன் கணவன் தன்னைத் திக்குமுக்காடச் செய்த அந்தத் தருணங்கள் யாவும் தனக்குக் கானல் நீராகி விடுமோ?
இப்படியாக, நிறைய எதிர்மறையான கொடிய எண்ணங்கள் அவளுள் முளை விட்டுக் கொள்ளத் தொடங்கி விட்டிருந்தது!
அதற்கு அஸ்திவாரம் போட்டதே அவளது இந்த நடவடிக்கைகளுக்கான முக்கியமாக இருந்த ஒரு விஷயம் தான்!
அது மட்டும் அபூர்வனுக்குத் தெரிந்தால் அவன் தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதை எண்ணிக் கலக்கம் அடைந்தவளோ,
மறுபுறம்,”அவர் என் மேல் கோபப்பட்றதும் நியாயம் தானே? இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்? என்னோட அந்த முடிவு தானே காரணம்? அதனால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படப் போறாங்கன்னுத் தெரியலையே! ஆனாலும் என்னால் அவர் கிட்டே எந்த உண்மையையும் சொல்ல முடியலையே! ஏன்னா, எனக்கு அவர் வேணுமே”என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்தாள் ஒழிய,
இப்போதும் கூட இம்மையும், மறுமையும் புரிந்து தன் கணவனிடம் உண்மையை உரைத்து இருந்தால் அனைத்தும் சரியாகி விட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற யோசனையை மட்டும் தவிர்த்து விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
இப்படியே போனால் அடுத்து வரப் போகும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க முயலவில்லை அவள்!
இவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்க, கீழே வந்த அபூர்வனோ, மேலே நடந்த எதையும் தன்னுடைய பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமலேயே அவர்களிடம் சொல்லிக் கொண்டுத் தன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய் விட்டான்.
“அவன் நம்ம மருமக கிட்டே என்ன சொன்னான்னுத் தெரியலையே! நீ போய் ஆராவைப் பாத்துக்கோம்மா! இந்த மாதிரி நேரத்தில் அவளுக்கு வேண்டாத சிந்தனைகள் வரலாம்” என்று மகனின் செய்கையைப் பார்த்த நாச்சிமுத்துவோ, உடனே ஆராவிடம் செல்லுமாறு தன் மனைவிக்கு அறிவுறுத்த,
நீலவேணியும்,”சரிங்க”என்று மருமகளிடம் சென்றார்.
இதே சமயம் தன் அலுவலகத்தை அடைந்து தனது கவனத்தை வேலையில் செலுத்தி அதன் உதவியுடன் தன் மனதைச் சமன்படுத்திக் கொள்ளலானான் அபூர்வன்.
சிறிது நேரம் கழித்து,”மொபைலை உடைச்சுட்டோமே! வீட்டுக்குப் போகும் போது வேற வாங்கிட்டுப் போயிடலாமா?”என்ற எண்ணம் தோன்றினாலும், தன் மனைவிக்குப் புதிய செல்பேசியை வாங்கித் தந்தாலும் கூட அவள் காரிகாவுடன் தான் பேசுவாள் எனவே குழந்தை பிறக்கும் வரை அவளுக்குச் செல்பேசி வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தான்.
தன் மனைவியாக மனம் உந்தி தன்னிடம் வந்து செல்பேசி வாங்கிக் கொடுக்கச் சொன்னால் அப்போது வாங்கித் தரலாம் என்றும், அதுவரையிலும் ஆராவிற்குத் தப்பித் தவறிக் கூடச் செல்பேசியை வாங்கிக் கொடுக்கக் கூடாது என உறுதியாக முடிவெடுத்து விட்டிருந்தான் அபூர்வன்.
ஆனால் ஆராவிற்கோ தன் செல்பேசி உடைந்து போனதைப் பற்றிய கவலையே இல்லை!
அவளது கவலைகள் எல்லாம், தன்னுடைய கணவனுக்குத், தான் ஏற்படுத்திய காயங்களைப் பற்றித் தான்!
இதற்கு முன்னர் எல்லாம் தனக்குக் கோபம் வந்தாலும் கூடப் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பான் அபூர்வன்.
ஆனால் இப்படி பொருளைப் போட்டு உடைத்துச்,தாரப்படுத்தும் அளவிற்கு அவன் சென்றது கிடையாது!
அந்த நிதானம் தன்னால் தான் மாறியதோ? என்றெண்ணிக் குமைந்து போனாள் ஆராத்ரிகா.
– தொடரும்

