Loading

இரவின் பனி இருவரின் மீதும் போர்வையாகிப் பொழிய, வானம் முழுவதும் கண்கவர் வர்ணஜாலங்களாக வானவெடிகள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, பட்டாசின் மணம் அவ்விடத்தை மெல்ல மெல்ல ஆட்கொண்டே வந்தது. அந்நொடி வானத்தின் வர்ணஜாலத்தை தன் கண்களால் ரசித்தவளது இமை தாண்டி உவர் நீர் சுரந்திருந்தது.

அவளையும் மீறி கண்கள் கலங்க, அவள் முன் நின்றிருந்தவனது பிம்பம் அவள் விழிகளில் விழுந்த அந்நொடி அவள் மனம் எதை பற்றியும் யோசிக்கவில்லை. அவனை நோக்கி வேகமாக வந்தவள், அவன் முகத்தை தன் இரு கைகளால் தாங்கிப் பிடிக்க, அவனோ திருட்டு முழி முழித்தான். அவன் மனமோ, ‘இவ பார்க்குற பார்வையே சரியில்லையே அடி பின்னி எடுக்கப் போறாளா?’ என்றவனின் இதயம் அடித்துக் கொண்டிருந்தது அந்நொடி.

அவளோ எதுவும் பேசாமல் அவனது முகத்தை வலுக்கட்டாயமாக தன்புறமாக இழுத்தபடி, அவனது இதழை வன்மையாக சிறைப்பிடித்திருந்தாள். அவளது அதிரடி செயலை அவன் நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவனது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.

பெண்ணவளின் தேகம் அவன் மேனியை ஒன்றொடொன்று உரசிக் கொண்டிருக்க, அந்த வன்மையான முத்தம் ஆணவனை ஆட்டம் காண செய்தது. அவளுக்கு முத்தம் கொடுக்கத் தெரியவில்லையா? இல்லை இவன் அவளுக்கு வாகாக நிற்கவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவள் முத்தம் என்ற பெயரில் அவனிடம் யுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

அவளது செயல் அவனது உணர்ச்சிகளைத் தூண்டியது. அதுவரை அந்தரத்தில் விரிந்தவனது கைகளோ பெண்ணவளின் இடையை அலங்கரிக்க, அவளை மேலும் இறுக்கி தன்னோடு அவன் அணைக்க முயன்ற வேளையில் அவனிடமிருந்து தன் இதழை பிரித்தெடுத்தவள் தன்னறை நோக்கி அங்கிருந்து ஓடியிருந்தாள்.

அவள் வந்ததும் முத்தம் புரிந்ததும் பின் ஓடியதும் எதுவுமே அவனுக்கு புரியவில்லை. பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்தவனது கவனத்தை கலைத்தது என்னவோ கீழே பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த இருவரது குரல் தான்.

“பாஸ் போதுமா? இல்லை இன்னும் வெடிக்கவா?”

“டேய், போதும்டா நீங்க இப்போ கிளம்புனா மட்டும் போதும்.” என்றவன் அவர்களை அனுப்பிவிட்டு விரைந்து அறை நோக்கி ஓடினான். அறைக்குள் நுழைந்தவனது பார்வை அவளைத் தான் தேடியது.

கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தவன் அவளை தேட, பெண்ணவளோ கொடி மலர் போல் பால்கனியின் அருகே வானை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் அவனையும் மீறி புன்முறுவல் பூத்தது அவனது அதரங்கள். சற்று முன் பெண்ணவள் கொடுத்த முத்தம் அவனது நினைவிற்கு வந்து சென்றது.

‘ப்பா என்னா ஒரு கிஸ். இந்தக் கிஸ் நம்ப லிஸ்ட்லயே இல்லையே. இங்க என்னதான் நடக்குது.’ என்றவன் மனம் சிந்தித்தது.

அவளை நோக்கி தன் அழுத்தமான காலடிகளை பதித்தவன் செல்ல, அவன் ஓசை கேட்டு தன் கண்களை மூடித் திறந்தாள் பெண். அவள் மேனியை தீண்டிக்கொண்டிருந்த வெளிப்புற காற்றுக்கு மத்தியில் அவனது சூடான காற்று அவள் பின்னங்கழுத்தில் தீண்டிய நொடி அவளையும் மீறி அவளது தேகத்தில் அப்படி ஒரு சிலிர்ப்பு உண்டாகியது.

முதன் முறையாக தன்னை நினைத்து வருந்தினாள் மது. அவளையும் மீறி அவளது கன்னத்தை தாண்டி சென்ற கண்ணீர் கீழே விழும் முன்னர் அவனது பெருவிரல் அவளது கண்ணீரை துடைத்திருந்தது. மேலும் அவளை தன்புறமாக திருப்பியவன் அவளது கன்னத்தை தன்னிரு கைகளில் ஏந்தினான்.

“இப்போ உன் மனசுல என்ன ஓடுதுனு எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னை புருஞ்சுக்க என்னால முடியும். எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத. நான் ஜஸ்ட் நடிக்கத் தான வந்திருக்கேன். போயிடுவேன். நீ எப்போதும் போல இரு. என்னால நீ வருத்தப்பட வேண்டாம்.” என்றவன் கூறவும் அவள் மனதில் இனம்புரியாத வலி ஒன்று தீண்டி சென்றது.

‘நான் பண்றது சரியில்லைனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் இது தவிர எனக்கு வேற வழி தெரியலை.’ அவள் மனதிற்குள்ளே கூறிக் கொண்டாள்.

“என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க? நீங்க முறைச்சு பாருங்க அது தான் உங்களுக்கு அழகு.” என்றவன் புன்னகையுடன் கூறிவிட்டு நகர்ந்து செல்ல, அவனது கரத்தை பற்றி நிறுத்தியிருந்தாள் மது.

“என்னாச்சு மது?” என்றவன் கேட்க,

“இப்போ உனக்கு ஹேப்பியா?” என்றவளை புரியாது பார்த்தவன், “என்ன புரியல?” என்றவன் கூறவும் அவனை நெருங்கியவள் மீண்டும் அவனது அதரங்களை முத்தமிட்டு விலக, மீண்டும் அதிர்ந்தவன் அவளை புரியாது போய் பார்த்தான்.

“இது தானே எதிர்பார்த்த? அத கொடுத்துட்டேன். ஐ நோ நீ இதுக்கு மேலயும் எங்கிட்ட எதிர்பார்த்திருக்க, அது கொடுக்கவும் நான் ரெடி தான்.” என்றவளது சொல் அவனை முற்றிலும் காயப்படுத்தியிருந்தது.

“மது…” என்றான் பற்களை கடித்தபடி.

“ஏய், கூல் ரிலாக்ஸ். நீ எதிர்பார்த்தது நானே தரேன்னு சொல்றேன். அதுக்கு ஏன் கோபப்படுற, வா.” என்றவளோ அவன் கரம் பற்றி கட்டிலை நோக்கி இழுத்துச் செல்லப் பார்க்க, அவளது கைகளை உதறி தள்ளியவனோ அவளை அடிப்பதற்காக கைகளை ஓங்கியிருந்தான்.

“மது…” என்றவன் கைகளை ஓங்க, அவளோ அசையாது அவனையே பார்த்தாள்.

“இப்போ எதுக்கு இந்த சீன் எல்லாம்? உனக்கு இது ஒண்ணும் புதுசு இல்லையே? எதுக்காக வந்தியோ அதை எடுத்துக்க வேண்டியது தானே. நான் கத்தவோ கூச்சல் போடவோ மாட்டேன்.” என்றவளது கழுத்தை இறுக பற்றியிருந்தது அவன் கரம். அவளோ வலியில் முகம் சுளிக்க, அவளை உறுத்து விழித்தவனுக்கோ அவளது வலியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

கைகளை விடுத்தவன் அவளை வலியுடன் பார்த்தான். “அப்போ அந்த முத்தம் கூட நீ என்னை கேவலமா நினைச்சு தான் கொடுத்தியா? உன்னை பொறுத்த வரைக்கும் நான் அவ்ளோ மோசமானவனா? இது நாள் வரைக்கும் நீ எங்கிட்ட நடந்துகிட்ட எந்த ஒரு விசயமும் என்னை இந்தளவுக்கு பாதிக்கலைடி. ஆனால் இந்த விசயம் செத்தாலும் மறக்க முடியாத அளவுக்கு ரணத்தைக் கொடுக்குது. வலிக்குதுடி… இங்க… ரொம்ப வலிக்குது.” தன் இதயத்தை அவளிடம் சுட்டிக் காட்டியவன், அவளது கரம் பற்றி தன் நெஞ்சோடு வைத்தான்.

“படபடனு அடிக்குது இல்ல. அப்படியே இன்னும் வேகமா அடிச்சு போய் சேர்ந்தா கூட பராவாயில்லைனு தோணுது.” என்றவனின் கூற்று அவளையும் ஆட்டம் காண செய்தது.

“போதும் போதும். இதுக்கு மேல மேடம் நீங்க கஷ்டப்பட வேண்டாம். போய் நிம்மதியா தூங்குங்க. போங்க.” என்றவன் அவளது கைகளை உதறிவிட, ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சாரி வலிக்குதா? இல்லை உங்களுக்கு எதுக்கு வலிக்க போகுது. போங்க.” என்றவனை இமை மூடாமல் அவள் காண,

“போங்க” என்றவன் மீண்டும் அழுத்தமிட்டு கூற, அவளது கால்கள் நகராது நின்ற நொடி “போ…போடி.” என்றவன் கர்ஜிக்க, அதிர்ந்து போய் பின்னோக்கி கால்களை வைத்தவள், தடுமாறி விழப் போனாள்.

அந்நொடியும் அவளது கரத்தை பற்றி விழாமல் காத்தவனது விழிகள் அவளது விழிகளை சந்தித்த நொடி, ரணமான தன் வலியை கண்ணீராக பிரதிபலித்தது. அவனது இமை தாண்டி வந்து அவளது கழுத்தில் சிறு துளி போல் கண்ணீர் விழ, தன் இமை மூடி திறந்தவளது விழியோரமும் உவர்நீர் கசிந்தது.

“பார்த்து போ. இனி நீ விழுந்தால் பிடிக்க நான் இருக்க மாட்டேன்.” என்றவன் அவளை நிற்க வைத்தது மட்டுமின்றி அவளை விடுத்து அங்கிருந்து சென்றிருந்தான்.

கட்டிலின் மீது படுத்தவளோ விட்டத்தை வெறித்துப் பார்த்தாள். “இது எல்லாம் உன் நல்லதுக்காக தான்.” அவள் உதடுகள் முணுமுணுத்தது.

ஆணவனோ வீட்டை விட்டு வெளியே வந்தவன், நடந்தே சென்றான். அவனையும் மீறி முகம் இறுக்கத்துடன் காட்சியளித்தது. அவ்விடத்திலிருந்து சற்று தூரம் தள்ளியிருக்கும், இரயில் செல்லும் தண்டவாளத்தின் அருகே வந்தவன் அமைதியாக நின்றான். அந்நொடி அவனைக் கடந்து இரயில் ஒன்று வேகமாக சத்தம் எழுப்பிக் கொண்டு செல்ல, அவன் கைகளை விரித்துக் கொண்டு கத்தினான். அவனது குரலின் ஒலியை தொடர்வண்டியின் சப்தம் மறைத்திருந்தாலும் அவனது மொத்த வலியும் ஓவென்று சத்தத்துடன் காற்றோடு கலந்தது.

எத்தனை புன்னகையுடன் அவனிருந்தாலும் அவனுக்கும் வலிக்கும் அல்லவா? இத்தனை நாள் வார்த்தைகள் கொண்டு வதைத்தவள் இன்று முத்தமிட்டு வதைக்கிறாள். தன்னை பார்த்தால் அவளுக்கு எப்படி தெரிகிறது? என்ற கேள்வி அவன் நெஞ்சை தைத்தது.

“மது… ஏன்டி இப்படி என்ன வதைக்குற? ஐ லவ் யூ டி. ஒவ்வொரு முறையும் உனக்காக தானடி நான் வரேன். உனக்காக மட்டும் தானே வரேன். ஐ லவ் யூ மது. ஐ லவ் யூ.” என்று கூறியவன் அவ்விடத்தில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“மது, ஐ லவ் யூ. நீ எவ்ளோ வெறுத்தாலும் என் காதல் உண்மை டி. உன்னை மட்டும் நேசிக்குற என் காதலை ஏன்டி கொச்சப்படுத்துற?” என்று வாய்விட்டு அழுதவனது உதடுகள் வலியில் துடித்தது.

வார்த்தை கொண்டு அவள் ஆற்றிய காயம் ஒவ்வொன்றும் அவனுக்கும் வலியைக் கொடுக்கும் அல்லவா? அடித்தால் கூட தாங்க அவனால் இயலும். ஆனால் அவன் காதலே அவனை சுட்டு பொசுக்கும் ஒவ்வொரு நொடியும் வெளியே சிரித்து உள்ளே அழும் அவனது அன்பு அவளுக்கு ஏன் புரியவில்லை?

தன்னிலை மறந்து அமர்ந்திருந்தவனது தோளை பற்றியிருந்தது ஒரு கரம். அந்நொடி அவன் அதிர்ச்சியில் திரும்பி பார்க்க, அங்கு நின்றிருந்த பெண்ணவளோ அவனை வேதனையுடன் பார்த்தாள். அவளைக் கண்டதும் துடித்து எழுந்தவன், தாயின் மடியைக் கண்ட சேயை போல அவளது கால்களை வளைத்து பிடித்து தலை சாய்த்தான்.

அவனது தலைமுடியினை கோதி ஆறுதல் புரிந்தவளோ, “ப்ளீஸ்டா அழாத? உன் அழுகையை பார்க்க தான் நான் வந்திருக்கேனா?”

“அம்மு, முடியலைடி. ரொம்ப வலிக்குது. நான் தோத்துட்டேன்.” என்றவனது தலையில் பட்டென்று அடித்தவளது செயலில் மீண்டும் அவன் தலை கவிழ்ந்து கொள்ள, மீண்டும் மீண்டும் அடித்தவள், அடுத்துக் கூறிய வார்த்தையில் நிமிர்ந்து எழுந்தான் நந்தா.
***
அடுத்த நாள் காலை தூங்கி எழுந்த மதுவின் கண்கள் முதலில் தேடியது அவனை தான். நேற்று அவனது கண்களில் தெரிந்த வலியை நினைக்கும் போதே ஒரு வித நடுக்கம் அவளது உடலில் தோன்றியது. எழுந்தவள் முகத்தை கழுவிவிட்டு, அவனை தேடி வெளியே வந்தாள்.

“குட் மார்னிங் வருணி.” என்ற அன்னையின் குரலுக்கு தலையை மட்டும் அசைத்தவள் நாலாபுறமும் அவனையே தேடினாள்.

அங்கு யாருக்குமே அவளது பிறந்தநாள் நினைவில் இல்லை. நினைவில் வைத்து வாழ்த்தியவனுக்கு நல்ல பரிசை நேற்றே அளித்துவிட்டாள் மதுவர்ணிகா. அது தவறு என்றாலும் அதுவே சரியென்று வாதிட்டது அவள் மனம். கீதா கலக்கி வைத்த காபியை கூட வேண்டாம் என்று மறுத்தவள் அவனை ஒவ்வொரு இடமாக தேடி களைத்துப் போனாள். இறுதியாக தன்னறைக்கு வந்தவளுக்கோ அவன் கூறிய வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

“பார்த்து போ. இனி நீ விழுந்தா பிடிக்க நான் இருக்க மாட்டேன்.” என்றவனின் வார்த்தைகள் அவளுக்கு சுருக்கென்று வலியைக் கொடுத்தது அந்நொடி.

“எனக்கு எதுக்கு வலிக்குது. அவன் போனா எனக்கென்ன? போகட்டும் போய் தொலைஞ்சா சந்தோசம் தான்.” என்றவளின் மனசாட்சியோ, ‘அவனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா? செத்தாலும் சந்தோசப்படுவியா?’ என்ற கேள்வியினைத் தொடுக்க,

“ச்சே ச்சே… எதுக்கு சாகுறது பத்தி எல்லாம் நினைக்கிற? அவன் எங்க இருந்தாலும் அவனை பார்த்துக்க அவனுக்கு தெரியும். இப்படி எல்லாம் யோசனை கூட பண்ணாத” தன் மனதையே கடிந்துக் கொண்டாள்.

பின் குளிக்க சென்றவள், லாவண்டர் நிற சல்வார் ஒன்றை அணிந்தபடி வெளியே வந்தாள். கண்ணாடியை காணும் போது கூட அவளது உதடு நேற்று புரிந்த செயலை நினைவுப் படுத்திவிட்டு சென்றது. அந்நொடி கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிவது போல பிரம்மை அவளை பிடித்து ஆட்டியது.

“எனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சா? ஏன் அவனை பத்தி யோசிக்கிறேன். போயிடு நந்து. என் மனசுல இருந்து போயிடு.” என்று கத்தியபடி கண்ணாடியைக் காண, அவனோ அவ்விடம் இல்லை.

“அவன் தான் இல்லையே? ஆனால் அவன் இருக்குற மாதிரியே இருக்கு.” என்று புலம்பியவள் அவன் மனதை அறியாமல் இருந்தது தான் அவள் செய்த தவறு.

ஒரளவு தன்னை தயார்படுத்தியவள் கீழே வர, முகப்பு அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவளுக்கோ அது ஆச்சரியமாக இருந்தாலும், அந்நொடி நந்தாவின் ஞாபகம் தான் கருத்தில் வந்து சென்றது.

‘நந்து இதுவும் உன் வேலை தானே’ அன்னிச்சையாக அவள் கண்கள் அவனை தேட, அவள் பெற்றோர் தொடங்கி அனைவரும் கைகளை தட்டி, பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டே வந்தனர்.

வலுக்கட்டாயமாக அவர்களைக் கண்டு புன்னகைத்தவள், “எப்படிமா? அதுக்குள்ள இப்படி ஒரு சர்ப்பிரைஸ்?” என்றவள் பார்வை மட்டும் ஒரு இடத்தில் நிற்கவே இல்லை.

“என்ன வரு…ஹேப்பியாடா? நேத்தே மாப்பிள்ளை போன்ல சொல்லிட்டாரு. ஆமா மாப்பிள்ளை எங்க?” என்று தாமோதரன் கேட்ட நொடி அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“அப்பா அது வந்து.” என்றவள் தடுமாற, பின்னிருந்து அவளது கண்களை இருகரம் மூடி மறைத்தது.

“யா…யாரு?” என்றவள் தடுமாறி போய் நிற்க, அங்கிருந்த அனைவரும் அவளைக் கண்டு புன்னகைத்தனர்.

“வர்ணி, எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவங்க தான்.” என்று உமாபதி கூற, அவள் கூறிய ஒரே வார்த்தை, “நந்து” என்று தான். அவனையே காலையிலிருந்து தேடிக்கொண்டிருந்தவளது பதில் கூட அவனாகிப் போக, அவளது கண்களிலிருந்து கைகளும் விடுவிக்கப்பட்ட அந்நொடி, திரும்பி பார்த்தவளது கண்களோ கலங்கிப் போனது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்