
மரம் தேடும் மழைத்துளி 18
சுபத்ராவின் வீட்டு வாசலில் சொந்த பந்தங்கள் நிறைந்த வேண் ஒன்று வந்து நின்றது.
மணி, “அன்னம்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. செத்த முன்னாடி வா.” என்று அன்னத்தை அழைக்க.
அன்னமும் வேகமாக வாசலுக்கு வந்து நின்று, வேனில் இருந்து இறங்கி வரும் சரவணன் விட்டாரை, மணியோடு சேர்ந்து நின்று கைகூப்பி “உள்ள வாங்க. உள்ள வாங்க. என்று வரவேற்றார்கள்.
தரகர், மணியிடம், “அண்ணாச்சி சவுக்கியங்களா?” என்று நலம் விசாரித்தபடி அருகில் வந்து நின்று கொண்டு. சரவணன் குடும்பத்தினருக்கு மணி அன்னத்தை, “இவங்கதான் பொண்ணோட அப்பா அம்மா”. என்று வாசலிலேயே அறிமுகம் செய்து வைத்தார்.
கிருஷ்ணரும் லட்சுமியும் வணங்கியபடி நாங்க தான் மாப்பிள்ளையோட அப்பா அம்மா என்று தங்களை சுயமாக அறிமுகம் செய்து கொண்டார்கள்.
அன்னம், “வணக்கம் அண்ணி, வணக்கம் அண்ணே… உள்ள வாங்க. மத்தத வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்.” என்று வரவேற்க அனைவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
விசாலமான வீட்டில் முன் அறையில் மரத்தால் ஆன பென்ச் இரண்டு புறங்களிலும் போடப்பட்டிருந்தது. வந்தவர்களை பெஞ்சில் அமரச் சொன்னார்கள். அதில் ஆண்கள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். பெண்கள் தரையில் விரிப்பில் அமர்ந்தார்கள்.
தரகர், மணியை “அண்ணாச்சி சொந்தக்காரங்க யாரையும் அழைக்கலையா?” என்று கேட்க
மணி, “பொண்ணு பாக்குறதுதானே.பூ வைக்கிறதுக்கும் நிச்சயதார்த்தத்துக்கும் அழைச்சுக்கலாம்னு சொல்லல”
அந்த அறையின் வாசலில் வந்து நின்ற மீனா மற்றும் உமாவை பார்த்த சுசீலா (சுந்தரியின் மாமியார்) “உங்களுக்கு மொத்தம் மூணு பொண்ணா?” என்று மணியை கேள்வி கேட்டார்.
மணி, “இல்லல்ல. எனக்கு ஒரே பொண்ணு தான். இவங்க ரெண்டு பேரும் என் பொண்ணு கூட படிச்சவங்க.”
அன்னம், உமாவை பார்த்து, “வந்திருக்கவங்களுக்கு நீ காபி எடுத்துட்டு வா.” என்று சொல்லிவிட்டு மீனாவிடம் “நீ சாப்பிட எடுத்து வச்சிருக்கிறதை கொண்டு வந்து கொடு” என்றார்.
தரகர், “அன்னம்மா… பிள்ளைகளை ரொம்ப விரட்டாதீங்க. பயப்படுற மாதிரி தெரியுது.”
அன்னம், “காலையிலிருந்து ஒரு வேலை பாக்கல. இவளுக ரெண்டு பேத்துக்கும் நான் எடுபிடி வேலை பார்த்து இருக்கேன். சுபாவை அலங்காரம் பண்ண போறேன்னு அங்க போய் உட்கார்ந்துக்கிறாளுக. இப்போ சமைய கட்டுல எடுத்து வைத்திருக்கிறதை, கொண்டு வந்து கொடுக்கிறது. வெரட்டி வேலை வாங்குறதுன்னு சொல்றீங்க நீங்க. பாக்குறதுக்கு பயந்த பிள்ளைகள் மாதிரி தெரிவாளுக. பயம் காட்டிடுவாளுக.”
அன்னம் சொன்ன தொணியில் அனைவரும் சிரித்து விட்டார்கள்.
மணி, “அதெல்லாம் இருக்கட்டும். சம்பந்தகாரக வீட்டில இருக்கிற உறவுக்காரங்க. யார் யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? என்று கேட்க.
கிருஷ்ணன், அங்கிருந்த அனைவரையும், ஒருவர் ஒருவராக உறவு முறை சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.
மணியும் அன்னமும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நின்றார்கள்.
உமாவும் மீனாவும் வந்திருந்தவர்களுக்கு காபியும் காரமும் கொடுத்து உபசரித்தார்கள்.
இத்தனை கலகலப்பு, கலவரங்களுக்கு நடுவில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான் சரவணன்.
சுசீலா, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க. அப்பவாவது மாப்பிள தலை நிமிர்ந்து பார்க்கிறாரான்னு பாக்கலாம்.”
சரவணனை சேர்ந்து அமர்ந்திருந்த முருகன், சரவணனை தோளோடு சேர்த்து கொண்டு. அவன் எப்போதுமே அமைதியா இருக்கிறவன். புது இடத்தில கொஞ்சம் கூச்சம் படுவான்.
கிருஷ்ணன் ருக்மணியை இந்த பிள்ளைகளோட போய் பொண்ணு கூட்டிட்டு வாம்மா என்று சொல்ல ருக்மணி எழுந்து நின்றார் அவளோடு மீனாவும் உமாவும் சுபத்ராவை அழைத்து வர அறைக்குள் சென்றார்கள்.
நீள வாக்கில் அமைந்திருந்த, 6 பத்திகளை உடைய வீட்டில். கடைசியாக இருக்கும் சமையல் கூடத்துக்கு பக்கத்து அறையில், புது விதமான பரிதவிப்பில் அமர்ந்திருந்தாள் சுபத்ரா.
ருக்மணி, மீனா, உமாவோடு ஒவ்வொரு அறையாக கடந்து வரும்போது இவ்வளவு நீளமான வீடா என்று பிரமித்துக்கொண்டே வந்தாள்.
சுபத்ராவை கண்டதும் ஒரு புன்னகை செய்தாள் ருக்மணி. பதிலுக்கு சுபத்ராவும் இதழ் மலர்ந்தாள்.
ருக்மணி, ஏதாவது பேச வேண்டுமே… என்பதற்காக “உங்க வீடு ரொம்ப நீளமா இருக்கே இவ்வளவுதானா? என்று சுபத்ராவிடம் கேட்க.
சுபத்ரா, “சமையல் கட்டை தாண்டி கொல்லைப்புறம் இருக்கு. அதுல ஒரு கிணறு இருக்கு. அவ்வளவுதான்”. என்று சாதாரணமாகச் சொன்னாள்.
உமா ருக்மணியை, “நீங்க மாப்பிள்ளையோட தங்கச்சியா?”
ருக்மணி இல்லை என்று தலையசைக்க.
“இல்ல வீட்டோட மதிப்பை, கணக்கு பண்றீங்களே… அதனால நாத்தனாரா இருப்பீங்களோன்னு ஒரு டவுட்டுக்கு கேட்டேன். சாரி…” என்றாள் உமா.
சுபத்ரா, தன்னுடைய கண்களை திரட்டி உருட்டு பயம் காட்டுவதை போல் மிரட்டினாள்.
உமா, “சரிம்மா… நான் வாயை திறக்கல” என்று அமைதியானாள்.
ருக்மணியும் மீனாவும் களுக் என்று சிரித்தார்கள்.
மீனா, “நாங்க எப்பவும் இப்படித்தான் பேசிப்போம். நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க.” என்று ருக்மணி இடம் சொல்ல.
அதற்கும் சரி என்று தலையாட்டினாள் ருக்மணி.
ருக்மணி, கட்டியிருக்கும் புடவையின் நேர்த்தியை பார்த்த சுபத்ரா, “எனக்கும் இது மாதிரி கட்டுறதுக்கு சொல்லிக் கொடுப்பீங்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது அன்னம் வந்துவிட்டார்.
அன்னம் ருக்மணியிடம், “என்னம்மா நீயும் இவகளோடு சேர்ந்து அரட்டை அடிக்க நின்னுகிட்டே.?” என்று உரிமையாக கேட்கவும்.
ருக்மணி, “இல்லம்மா இந்தா அழைச்சிட்டு வரேன்.”
சுபத்ரா அன்னத்திடம், “யாரு எவருன்னு தெரியாத ஒருத்தர், வாம்மான்னு கூப்பிட்டதும் கூடவே எந்திரிச்சு போயிடுவமா? நீங்க யாருன்னு? கேள்வி கேட்க மாட்டோமா? அது மாதிரி தான். அவங்க வந்து பேசிட்டு இருக்காங்க. அரட்டை அடிக்கிறாங்கன்னு அசால்டா பேசிட்டே. அவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு நினைப்பு இருக்கா இல்லையா?” என்று அவள் மிரட்டல் விடுக்கும் தொணியில் அவளது தாயை கேட்டுக் கொண்டிருக்க.
ருக்மணி மறைக்கப்பட்ட புன்னகையோடு அன்னத்தைப் பார்த்தாள்.
அன்னம், ருக்மணியை ஓர விழியால் பார்த்துக் கொண்டு, சுபத்ராவிடம், “பொண்ணு சரியான வாயாடி கழுதைனு இந்த பிள்ளை போயி வீட்ல சொல்ல போகுதுடி.” என்றார்.
முன் அறையில் இருந்த மணி, “எம்மா வெளியில வாங்க.” என்றார்.
அன்னம், “அப்பா கூப்பிட்டாரு கிளம்புடி.” என்று ஒரு புறம் கையைப் பிடித்து இழுக்க. மறுபுறம் ருக்மணி, சுபத்ராவின் கையைப் பிடித்துக் கொள்ள. இருவரும் அழைத்துக் கொண்டு முன் அறைக்கு வந்தார்கள். மீனாவும் உமாவும் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.
“பொண்ணு லட்சுமி கடாட்சமா இருக்கு.” என்று லட்சுமி சொல்ல.
”அதனாலதான் லட்சுமியோட வீட்டுக்கு மருமகளா வரப்போறாள்.” என்று கிருஷ்ணன் சொன்னார்.
சுபத்ரா, ஓரவிழியால் அமர்ந்திருக்கும் ஆண்களில் மாப்பிள்ளையை சரியாக அடையாளம் கண்டு கொண்டாள். தலைநிமிராமல் கவிழ்ந்து கிடக்கும் சரவணனின் கண்ணியம் அவளுக்கு பிடித்திருந்தது. சரவணன் அழகிலும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. கருப்பாக இருந்தாலும், கம்பீரமான தோற்றத்தில் மிடுக்காக இருந்தான்.
சுசீலா, சுபத்ராவை “உன்னோட பேரு என்னம்மா?” என்று கேட்க
“என் பேரு சுபத்ரா” என்றாள்.
சுசீலா, சரவணனை “மருமகனே பொண்ணு எப்படி நிமிர்ந்து பதில் சொல்றா…. நீங்க ஏன் குனிந்த தலையை நிமிர மாட்டேங்கறீங்க? என்றார்.
புன்னகை முகமாக நிமிர்ந்து அமர்ந்தான் சரவணன்.
சுசிலா “பொண்ணை நல்லா பாத்துக்கோங்க.” என்று சரவணனையும் “நீயும் மாப்பிள்ளையை நல்லா பாரும்மா.” என்று சுபத்ராவையும் சொல்ல.
இருவரும் அடக்கப்பட்ட புன்னகையோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சுசீலா, “ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு இல்ல.?” என்று கேட்டதும்.
இருவரும் ஒன்றுபோல பிடிச்சிருக்கு என்று தலையை அசைத்தார்கள்.
சுசீலா, “சம்பந்தக்காரங்க ரெண்டு பேரும் மேற்கொண்டு பேச வேண்டியதை பேசுங்க.”
கிருஷ்ணன், “எங்களுக்கும் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருந்தால் காலம் கடத்தாமல் சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்.”
மணி, “எங்களுக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. பங்குனி சித்திரை கழிக்கட்டும். வைகாசியிலே கல்யாணத்தை நடத்திடலாம்.”
குருசாமி (சுசீலாவின் கணவர்), “வைகாசியில கல்யாணத்தை வச்சுக்கோங்க. அதுக்கு முன்ன ஒரு நல்ல நாள் பார்த்து, நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்.”
தரகர், “வர்ற வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள்தான். அப்போ வீட்டு மாட்டுக்கு பூ வச்சுக்கிடுவோம். சோசியரை பார்த்து நாள் குடிச்சிட்டு வந்து. ஒரு நாள் நிச்சயதார்த்தமும். வைகாசி மாசம் கல்யாணமும் வச்சுக்கிடுவோம்.” என்று அவர்களுக்கு விளங்கும்படி எடுத்துச் சொன்னார்.
அன்னம் “தரகர் சொன்னபடி செஞ்சுக்க்கலாம்.” என்றார்.
லட்சுமி, “எங்களுக்கும் பரிபூரண சம்மதம்”. என்று சம்மதம் தெரிவித்தார்.
அனைவரும் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்கள்.
அன்றைய இரவு பொழுது. மாடியில் இருக்கும் தனி அறையில், ருக்மணியின் அருகில் வந்து அமர்ந்தான் முருகன்.
ருக்மணியின் கையை ஆதூரமாக பிடித்தவன், “என் தம்பிக்கு பார்த்திருக்கிற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ இல்லயா ருக்கு?”
“உங்க தம்பியும் கொடுத்து வச்சவர் தான். நல்ல பொண்ணு. ஒரே பொண்ணு. நிறைய சொத்து பத்து இருக்கிற இடம்.”
“என்னதான் சொத்து பத்து இருந்தாலும், சரவணன் மாதிரி மாப்பிள்ளை கிடைக்கிறதுக்கு, அவள் கொடுத்து வச்சவ. என்னை மாதிரி சரவணன் குடிகாரன் கிடையாது. அயோக்கியத்தனம் பண்ண தெரியாதவன். பொண்டாட்டியை மரியாதையா நடத்த தெரிஞ்சவன். அந்த வகையில அந்த பொண்ணு ரொம்ப பாக்கியசாலி.”
ருக்மணி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“இப்போ நான் நல்லவன். ஆனா ஆரம்பத்துல ரொம்ப மோசமா நடத்திட்டேனே. என்னை பார்த்த என் தம்பி, என்னை மாதிரி பொண்டாட்டியை நடத்தக்கூடாதுன்னு அவனோட மனசுல உறுதிமொழி எடுத்திருப்பானில்லயா அதனால சொன்னேன்.” என்று வெள்ளந்தியாய் சிரித்தான்.
ருக்மணி “நான் உங்கள கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா. எதனால உங்களுக்கு என்னை பிடிக்கல?” என்று வெளிப்படையாகவே கேட்டாள்.
முருகன், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ருக்கு. நீயும் எங்க அம்மா பிறந்த வீட்டுலேயே… பிறந்த பிள்ளையா இருக்கிறதால. எங்க அம்மாவோட குணம் உனக்கும் இருக்கும்னு ஒரு பயம், ஒரு சிந்தனை.”
“உங்க அம்மாவுக்கு, அப்படி என்ன குணம் குறைஞ்சு போச்சு?
“ எங்க அம்மாவும் நல்லவதான் ஆனா அவளுக்கு எங்க அப்பாவை பார்த்தாலே பிடிக்காது. அமைதியா இருக்கிற வீட்டுல அவரை பார்த்த உடனே சண்டைக்கு இழுப்பாள். எங்க அப்பாவும் நல்ல மனுஷன் தான். எங்க சித்தப்பா எப்படி இருக்காரு? அவரைப் போல எங்க அப்பாவும் பொறுப்பான நல்லவர்தான். ஆனா எதுக்கு எங்க அம்மாவுக்கு அவரை பிடிக்கலைன்னு தெரியல எங்க அப்பாவுக்கு பிடிக்காத விஷயத்தை பார்த்து பார்த்து செய்வாள். எங்க அப்பா அவளை வேலைக்கு போகக்கூடாதுன்னு சொன்னாரு. ஆனா எங்க அம்மா வீம்புக்காக வேலைக்கு போய். அங்க இருக்கிற மேஸ்திரிகள் கூட சகட்டுமேனிக்கு பேசி சிரிக்கிறதோ, விளையாடுறதும். எங்க அப்பாவ வெறுப்பேத்துறதுமா நடந்துக்குவா. ஒரு கட்டத்துல எங்க அப்பா அந்த மேஸ்திரியை நீ வச்சிருக்கியான்னு கேட்டு சண்டை போட ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கு பிறகாவது எங்க அம்மா வேலையை விட்டு நின்னிருக்கணும். ஆனா எங்க அப்பா கேட்ட கேள்விக்கு ஆமான்னு பதில் சொல்லிட்டு. வேலையை தொடர்ந்து பார்க்க கிளம்பிட்டா. இவளோட இருந்து தினம் தினம் சண்ட போட முடியாமல் எங்க அப்பா வீட்டை விட்டு வெளியேறி போயிட்டாரு. நான் அஞ்சாப்பு வரைக்கும் பள்ளிக்கூடம் போனேன். என்னை அதுக்கப்புறம் அந்த மேஸ்திரி கிட்ட கூட்டிட்டு போய். அவருக்கு தெரிஞ்ச கொத்தனார் கூட வேலைக்கு அனுப்பி வச்சிட்டா.

