Loading

மாடியின் கடைசிப் படியில் மயங்கி விழுந்து இருந்த ஆராவைக் கண்ட மாத்திரத்தில் அலறி விட்டார் நீலவேணி.

 

அவளது அருகில் சென்று தலையைத் தன் மடியிலிருத்தி கன்னத்தை மெதுவாக தட்டிப் பார்த்தார்.

 

ஆனால் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கண் மூடிக் கிடந்தவளை எப்படி கண் விழிக்க வைப்பது என்று தெரியாமலும், ஆரா கர்ப்பமாக இருக்கும் இந்தச் சமயத்தில் மயக்கம் வருவது இயல்பான விஷயம் தான்.

 

ஆனால் நீலவேணிக்குத் தான் பதட்டத்தில் அந்த விஷயம் தோன்றவில்லை.

 

அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த நாச்சிமுத்துவும் கூடப் பதறிப் போனார்.

 

“ஆராம்மா…!”என அவளைப் பார்த்துப் பதறியவரோ, 

 

“மருமகளுக்கு என்ன ஆச்சு நீலவேணி?”என மனைவியிடம் பதட்டத்துடன் கேட்டார்.

 

“மாடிக்கு ஃபோன் பேசப் போனால், நான் சமைச்சிட்டு வந்து சாப்பிடக் கூப்பிடலாம்னு வந்தால் கடைசிப் படியில் இருந்து இறங்கிட்டு இருக்கும் போதே மயங்கிக் கீழே விழுந்துட்டா”என்றதுமே,

 

அங்கிருந்த ஜக்கில் நிறைந்திருந்த தண்ணீரை கையில் சிறிதளவு ஊற்றி ஆராவின் முகத்தில் தெளிக்கலானார் நாச்சிமுத்து.

 

தன் வதனத்தில் தண்ணீர் பட்டதும் மெதுவாக விழி திறந்தவள் தன் முன்னே இருந்த மாமனார் மற்றும் தன்னை மடியில் படுக்க வைத்திருந்த மாமியாரின் கலவர முகத்தைத் தான் முதலில் கண்டாள்.

 

‘ரெண்டுபேரும் என்னால் பயந்துட்டாங்க போலவே!’என்று மனதில் நினைத்துக் கவலை அடைந்து மெல்ல எழுந்தாள் ஆராத்ரிகா.

 

“என்னம்மா? ஏன் இப்படி மயங்கி விழுந்துட்ட?”என அவளிடம் கேட்ட

நீலவேணிக்கு இன்னும் பதட்டம் குறைந்தபாடில்லை. 

 

“இரு வேணி. இப்போ தானே கண் முழிச்சு இருக்கா. அதுக்குள்ளே கேள்வி கேட்காதேம்மா”என்று மனைவியிடம் அறிவுறுத்தினார் நாச்சிமுத்து.

 

“இதில் அத்தையோட தப்பு எதுவும் இல்லை மாமா. நான் தான் காலைச் சாப்பாடு சாப்பிடாமல் ஃபோன் பேசப் போயிட்டேன். ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அதனால் தான் பசி மயக்கம் வந்துடுச்சு. வேற ஒன்னும் இல்லை! இதுக்கு நான் தான் காரணம். சாரி மாமா! அத்தையை ஒன்னும் சொல்லாதீங்க ப்ளீஸ்”என்று குற்ற உணர்ச்சியால் தலையைக் குனிந்து மன்னிப்புக் கேட்டவளைத் திட்டி இன்னும் வருத்த நினைக்கவில்லை நாச்சிமுத்து.

 

தனது முகத்தில் கனிவுடன் அவளை ஏறிட்டு, 

 

“சரிம்மா விடு. வா, வந்து சாப்பிடு”என அவளை மெதுவாக எழுப்பி நடத்திக் கூட்டி வந்தவர் சாப்பாட்டுத் தட்டில் உணவைப் பரிமாறி அவளிடம் கொடுத்தார் நீலவேணி. 

 

“சாரி அத்தை. என்னால் தானே நீங்க மாமா கிட்ட பேச்சு வாங்கிட்டீங்க”என்று அவரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு இட்லியை விண்டு ஒரு வாய் வைத்தாள் ஆராத்ரிகா.

 

இதைக் கவனித்த நாச்சிமுத்துவும் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தார்.

 

“ஆரா சொல்றது கரெக்ட்மா. என்னை மன்னிச்சுரு வேணி”எனச் செய்யாத தவறுக்காக மனைவியைப் பேசியதில் வருத்தம் தெரிவித்தார்.

 

“நீங்க எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க? நான் பொலம்பறதை விடவா நீங்க திட்டி இருக்கீங்க?” என்றவரோ,

 

“ஆரா! நீ எதுவும் பேசாமல் சாப்பிடு. அப்பறமா ஜூஸ் தர்றேன். வாந்தி வந்தாலும் அதைக் குடிச்சிடு”என்று அவளிடம் அறிவுறுத்தி விட்டு அவள் நன்றாக காலை உணவை உண்டு முடித்ததும் தான் அவளை அங்கிருந்து எழுந்து செல்ல அனுமதித்தார் நீலவேணி.

 

தனது மாமனார் மற்றும் மருமகளின் அன்பில் கரைந்து உருகத்தான் செய்தாள் ஆரா.

 

வீட்டிற்கு வந்த நாள் வரை தன்னை இவர் கடிந்து பேசியதே இல்லையே! கர்ப்பம் ஆனதூைக் கூடத் தாமதமாகத் தானே சொன்னோம்? 

 

அதற்கு முன்பு வரையும் அவரது அணுகுமுறை ஆராவிற்கு இதமாகத் தான் இருந்தது.

 

இப்போதும் தன்னைத் தாங்க ஆரம்பித்து இருப்பதும் இவளுக்கு நிறைவைத் தந்தது.

 

“நீ ரூமூக்குப் போய் ரெஸ்ட் எடும்மா. ஜூஸ் குடுத்து விட்றேன். இனிமேல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை நீ ஜூஸ் குடிச்சுட்டே இருக்கனும்”என அவளுக்கு அறிவுறுத்தி அறைக்கு அனுப்பி வைத்தார் நீலவேணி.

 

“என்னங்க இந்தப் பொண்ணு மயக்கம் போட்டதும் எனக்கு என்னப் பண்றதுன்னே தெரியாமல் பதறிப் போய்ட்டேன்! நல்லவேளை நீங்க சரியான நேரத்துக்கு வந்தீங்க”என்றவரின் கலக்கத்தையும் தான் நாச்சிமுத்து பார்த்தாரே? 

 

இப்போது ஆராவைத் தன் மனைவி சரியான விதத்தில் தான் கவனித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அவருக்கு இப்போது எல்லாம் நிம்மதியாக இருக்கும்.

 

நீலவேணியுமே அவ்வாறு நினைத்து இருக்க திடீரென்று அவள் மயக்கம் போட்டு விழுந்ததால் நீலவேணிக்கு பக்கென்று தானே இருக்கும்? 

 

அதைச் சரியாகப் புரிந்து கொண்டார்.

 

“விடும்மா. இனிமேல் இதைப் பத்தி நினைக்காதே. ஆரா நல்லா சாப்பிட்றாளான்னு மட்டும் கவனி. ஆமா, இதை அபூர்வனுக்குக் கால் பண்ணி சொல்லிடலாமா?”என்று இந்த விஷயத்தைத் தங்கள் மகனுக்குத் தெரிவிக்க நினைத்தார் நாச்சிமுத்து.

 

ஆனால் நீலவேணி அதை மறுக்கும் விதத்தில் பேசினார்.

 

“வேணாம்ங்க. நாமளே இவ்வளவு பதட்டப்பட்டோம்! அவன்கிட்ட சொன்னால் அலறி அடிச்சுட்டு வந்துருவான்! ஆரா ரெஸ்ட் எடுக்கட்டும். அவன் சாயந்தரம் வீட்டுக்கு வந்தவுடனேயே சொல்லிடலாம்”

 

இந்நேரத்தில் அபூர்வனுக்கு அழைத்து விஷயத்தை அறிவித்து இருந்தால் ஏற்கனவே மனைவியின் நலனை நினைத்து வருந்திக் கொண்டு இருக்கும் அவன் தன் தாய் சொன்னதைப் போல் அலறி அடித்துக் கொண்டு தான் வந்திருப்பான்.

 

எனவே, மகன் அலுவலகத்தில் இருந்து அடித்துப், பிடித்து வருவதற்குப் பதிலாக மாலை அவனிடம் பக்குவமாக விஷயத்தைக் கூறலாம் என்று கணவரிடம் இப்படி கூறினார் நீலவேணி.

 

மனைவி கூறுவதும் சரியென்று நினைத்தவர் அவரிடம் தனக்கு உணவுப் பரிமாறச் சொல்லிச் சாப்பிட்டார் நாச்சிமுத்து

 

மாடியில் அறையிலிருந்த ஆராவிற்கு உணவருந்தி இருந்ததால் சட்டென்று உறங்க முடியவில்லை.

 

அவளது மனதில் கனிஷ்கா கூறிய விஷயங்கள் தான் உறுத்திக் கொண்டு இருந்தது.

 

ஒரு முடிவுடன் மொபைலை எடுத்துக் காரிகாவின் எண்ணிற்கு அழைத்தாள்.

 

நீண்ட நேரம் ரிங் போனதற்குப் பிறகு அழைப்பு எடுக்கப்பட்டது.

 

“ஹலோ”என்றக் காரிகாவின் குரல் கேட்டதும் அவள் தான் பேசுகிறாள் என்று உறுதி செய்து கொண்டதும் தான் பேசத் தொடங்கினாள் ஆராத்ரிகா.

 

“ஹாய் காரிகா”தோழியின் குரலில் அழுத்தம் அதிகமாக இருந்ததை உணர்ந்தாள்.

 

வழக்கத்திற்கு மாறாக ஆரா இவ்வாறு பேசுவது காரிகாவிற்கு விநோதமாகத் தோன்றியது.

 

“ஆரா! ஏன் ஒரு மாதிரிப் பேசுற? எப்பவும் துறுதுறுன்னுப் பேசுவியே? உன் குரல் ஒரு மாதிரி இருக்கே?”என அவளிடம் தயக்கமாக கேட்க, 

 

இருக்காதா பின்னே?  

 

‘தான் கனிஷ்காவிடம் அத்தனை விரக்தியாகப் பேசி இருக்கிறோமே? 

 

அது இந்நேரம் இவளது காதிற்கு வந்திருக்கும்’என்பதை யூகித்து விட்டிருந்தாள், இல்லையில்லை தெளிவாக உணர்ந்திருந்தாள் காரிகா.

 

“உங்கிட்ட வேற எப்படி பேச சொல்ற?”என்றவளோ, தலையணையில் சாய்ந்து வாகாக அமர்ந்து கொண்டு பேசினாள் ஆராத்ரிகா.

 

அவள் இதற்குப் பதிலேதும் சொல்லாததால் தானே மேலும் தொடர்ந்து, 

 

“நீ திடீர்னு எங்க வீட்டுக்கு வந்து நிற்கிற! கனிஷ்கா கிட்ட அப்படி பேசி இருக்க? உன் மனசில் என்ன தான் நினைச்சுட்டு இருக்கிறன்னுத் தெரிலடி?”என்று அவளைக் கன்னாபின்னாவென்றுத் திட்டினாள்.

 

“சாரி ஆரா”என்றவளது அழுகையுடனான அவளது குரல் ஆராவிற்குச் சரியாக கேட்கவில்லை.

 

“நீ முதல்ல அழுகாமல் சத்தமாகப் பேசுடி! எப்போ பார்த்தாலும் அழுதுக்கிட்டே இருக்கிற?”

 

ஆராவும் கல்லூரியில் படிக்கும் காலங்களில் இருந்தே காரிகாவைத் தைரியமானப் பெண்ணாக மாற்றத் தான் அத்தனை முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தாளே!

 

தன்னுடன் கனிஷ்காவும் சேர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க, இவள் கனியிடம் எளிதாக வார்த்தைகளை விட்டிருந்ததை எண்ணிக் கடுப்பில் இருந்தாள் ஆராத்ரிகா.

 

“நான் ஒரு உண்மையா சொல்லவா காரிகா! அபூர்வனுக்கு இந்த விஷயம் தெரிஞ்ச நாளில் இருந்து எங்களுக்குள்ள நல்ல பேச்சு வார்த்தையே இல்லை! நாங்க ரெண்டு பேரும் ரொம்பவே மாறிட்டோம். எனக்கு அடிக்கடி மூட் ஸ்விங்ஸ் வேற!”

 

இதைக் கேட்டும் கூடக் காரிகா பேசாமல் அமைதியாக இருப்பது வேறு இவளுக்கு மேலும் கோபத்தை வரவழைத்தது.

 

“எதையாவது பேசு! சைலண்டா இருந்து சாகடிக்காதடி”எனத், 

 

தான் சேமித்து வைத்திருந்த, கொஞ்ச, நஞ்ச நிதானத்தையும் இன்று முழுவதுமாக இழந்து விட்ட ஆராவோ தன் தோழியிடம் உரக்கக் கத்தினாள்.

 

“ப்ளீஸ் கத்தாதே! டென்ஷன் ஆகாதே ஆரா! நீ ப்ரக்னன்ட் ஆக இருக்கடி. இப்படி கத்துனா குழந்தைக்கும் சேர்த்துப் பாதிப்பு ஆகும்”

 

தன்னுடைய தோழியின் உடல்நலம் தன்னால் பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்ற எண்ணத்தில் அவளிடம் கெஞ்சினாள் காரிகா.

 

“அந்த அக்கறை, அதிரசம்லாம் இருக்குல்ல! அப்பறம் உனக்கு என்ன பெரியக் கஷ்டம் வந்துச்சுன்னுக் கனிக் கிட்ட அப்படி பேசி இருக்கிற?” 

 

என்று முடிந்த அளவு தன்னைக் கட்டுப்படுத்திப் பார்த்தும் முடியாமல் போக குரலில் கோபத்தின் காட்டம் குறையாமல் கேட்டாள் ஆராத்ரிகா.

 

“என்னால் உங்களுக்குச் சிரமம் அதிகம் ஆரா. அதைத் தாங்கிக்க முடியல! என்னோட வாழ்க்கை எப்படியோ போகட்டும்! அட்லீஸ்ட் நீங்களாவது நிம்மதியா இருங்க”என்று கனியிடம் கூறியதை அப்படியே இவளிடமும் சொன்னாள் காரிகா.

 

“எங்களுக்கு அட்வைஸ் பண்றது இருக்கட்டும். நீங்க ஏன் அப்படி விரக்தியாகப் பேசினீங்கன்னு முதல்ல சொல்லுங்களேன்?”என்ற ஆராவின் பொறுமை எல்லாம் பறந்து எங்கோ போய் விட்டிருந்தது.

 

“எனக்காக நீங்க மெனக்கெட்றது, இப்போ கூட நீ சொன்னியே உனக்கும், அபூர்வன் அண்ணாவுக்கும் இயல்பான பேச்சுவார்த்தை இல்லன்னு, அப்பறம் நான் அப்படித் தானே யோசிப்பேன்”என நண்பியிடம் பரிதாபமாகக் கேட்டாள் காரிகா.

 

“அப்பறம் … சொல்லு”என்று அடுத்துக் கூறுமாறு அவளுக்குக் கட்டளை இட்டாள் ஆராத்ரிகா.

 

அதைச் சொல்லத் தான் உன் வீட்டுக்கு வந்தேன்டி”என்றவளோ, தோழியின் வீட்டுக்கு வந்த நோக்கத்தையும் அவளிடம் சொல்லி முடித்திருந்தாள்.

 

“நான் கூடப் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்து இருக்க போல அப்படி நினைச்சு ஹேப்பியாக ஆனேன்”என்று ஏமாற்றத்துடன் கூறினாள். 

 

“இல்லை ஆரா. நான் உன் வீட்டுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம் தான்” என்று அவளது ஏமாற்றம் நிறைந்த குரலைக் கேட்டதுமே வேகமாக அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தாள் காரிகா.

 

“அதுவும் தான் காரணமே தவிர அது மட்டும் தான் காரணம் இல்லையே?”என்றிருந்தாள் ஆராத்ரிகா. 

 

அதானே! பேச்சில் ஆராவை மிஞ்ச முடியுமா எவராலும்? 

 

அவள் கேட்ட கேள்விக்குத் தன்னிடம் விடை இல்லாததால் மௌனமாக இருந்தாள் காரிகா.

 

“உனக்கு என்னவோ, ஏதோன்னுக் கனி பதறிட்டு எனக்குக் கால் பண்ணினாள் தெரியுமா?”என்றவளுக்குச் சோர்வின் காரணமாக குரல் சற்று இறங்கி இருந்தது.

 

“அது ஆரா…! ப்ளீஸ்”என அவளிடம் வெகுவாகவே இறைஞ்சினாள் காரிகா.

 

“போடி”என்று அலுத்துக் கொண்டு சற்று நேரம் எதுவும் பேசவில்லை ஆராத்ரிகாவோ, 

 

ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததும், அடுத்துப் பேச வாயெடுக்கும் போது அவளது கரத்தில் இருந்து பறிக்கப்பட்ட செல்பேசியைத் தரையில் எறிந்து உடைத்து இருந்தான் அவளது கணவன் அபூர்வன்.

 

– தொடரும்

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்