
சுழலி-16
ஐந்தாம் நாள் – முகிழ்
அனைவரும் குகைக்குள் சென்றிட, மஞ்சரியின் சொல்படி வள்ளி நடந்த, கடந்த காலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“பல நூறு வருசத்துக்கு முன்னாடி இந்த இடம் சேரர்களோட ஆட்சிக்கு கீழ இருந்தது. அதாவது, இப்போ சொல்ற கொங்கு நாடு, கேரளம் தென்னாடு முழுக்க சேரர்களோட ஆட்சி தான். இந்த சேலத்துக்கு கூட சேரலம்னு இன்னொரு பேர் இருந்ததா சொல்லுவாங்க. அப்போ, இந்த பகுதிய ஆண்டுட்டு வந்தவருதான் சேரமான் வஞ்சன்.”
வள்ளி சொன்னதை ஆமோதித்த சிவரஞ்சன், அவன் அறிந்ததை சொல்லலானான்.
“ஆமா, இது வரலாறுல இருக்குற விசயம் தான். மூவேந்தர்கள்னு சொல்றோம், ஆனா, சோழர்கள், பாண்டியர்கள் பத்தி தெரிஞ்ச நமக்கு சேரர்கள் பத்தி தெரிஞ்சிக்க முடியல. முடியலன்னு சொல்றத விட, சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் முன்னாடி அழிவ சந்திச்சது சேர நாடு தான்.
கிட்டத்தட்ட சொல்லனும்னா இப்போ இருக்குற பொதிகை மலைல இருந்து வடபெண்ணையாறு வரைக்கும் வடக்கிழக்கா இருபது டிகிரி சாய்வா ஒரு கோடு போட்டா, அதுல மேல இருக்குற நாடுகள் அதாவது பகுதிகள் எல்லாமே சேரர்களோடது. கீழ இருக்குறது, அதோட புதுக்கோட்டைக்கு வடக்கு பகுதிலாம் சோழர்களோடது. அதுக்கு தெற்குல இருக்குற தென்பகுதி எல்லாம் பாண்டியர்களோடது. இப்போ அழிஞ்சு போய் இருக்குன்னு சொல்ற குமரிக் கண்டம் பகுதிக் கூட பாண்டியர்களோட ஆட்சின்னு தான் குறிப்பிடுறாங்க.
சேரநாடு பல பகுதிகளா பிரிஞ்சு இருந்தது. அதாவது, இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருக்குற பெரும்பாலான பகுதி எல்லாமே சேர நாட்டோட ஆட்சிப் பகுதிதான். குடமலைன்னு தமிழ் நூல்கள்ல குறிப்பிட்டு இருக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்குல இருக்குறது கடன்மலைநாடு அப்டின்னும், கிழக்குல இருக்குறது தான் கொங்குநாடுன்னும் பிரிச்சாங்க.
அந்த கடன்மலை நாட்டின் வடபகுதிய குட்டம், குடம், துளுவம், கொங்கணம் அப்டின்னு பல பகுதிகளா பிரிச்சாங்க. கொங்கு நாட்ட, குடகொங்கு அதாவது மேல்மண்டலம், குணகொங்கு கீழ்மண்டலம் அப்டின்னு பிரிச்சாங்க.
இதுல இன்னும் நாம ஆழமா பாத்தா, அந்த குடகொங்கு பகுதிய கூட மறுபடியும் குடகு, கருநாடு, கங்கநாடு, கட்டியநாடு அப்டின்னு பல பகுதிகளா பிரிச்சு இருக்காங்க. குடகை நாட்ட ஆண்ட கோசர் மன்னர்கள கொங்கிளங்கோசர் அப்டின்னும், கங்கை நாட்ட ஆண்ட கங்கர் மன்னர்கள கொங்கு நாட்டரசர் அப்டின்னும் குறிப்பிட்டாங்க.
சேரர்கள் கீழ ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் அடுத்தடுத்து தனக்கு கீழ் இருக்குற நாட்ட பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் கொங்கு மண்டலம் மட்டும் சேரர்களோட ஆட்சில இருந்தது. அதுக்கு அப்புறம் வந்த ஒவ்வொரு படையெடுப்புலயும் சில பகுதிகள் போய்டுச்சு. கடைசியா கொங்கு நாடுன்னு கோயம்புத்தூர்ல இருந்து சேலம் மாவட்டம் வரை இருக்குற பகுதிகள் மட்டும்தான் இருந்தது. என்னதான் கடன்மலை நாடும் கொங்கு நாடும் பிரிஞ்சாலும் சேரன் செங்குட்டுவன் அரசாட்சிக்கு கீழ தான் இருந்தாங்க. அப்புறம் நடந்த பல்வேறு கால மாற்றங்கன்னால, சேரர்கள் ஆட்சிப் பகுதியா கொங்கு நாடு, குட்ட நாடு, குடநாடு அப்புறம் பூழி நாடு மட்டும் தான் கடைசி வரைக்கும் சேரர்களோட ஆட்சிப்பகுதியா இருந்து இருக்கு.
இதுல முன்ன சொல்லப்பட்டிருக்க சேரநாட்டோட வடபகுதியான துளுவம், கொங்கணம், குடகு, கருநாடகம் இதுலாம் வேறு மொழி பேசக்கூடிய மாநிலத்துல ஒரு பகுதியா போய்டுச்சு.
இதுல, கருநாடு, கங்கநாடு, கட்டிய நாடு எல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டுலயே முழுக்க கன்னட நாடாகிடுச்சு. அதுக்கு அப்புறம் பதினொன்னாம் நூற்றாண்டுல நடந்த ஹொய்சாள நாட்டு படையெடுப்பால அந்த பகுதி முழுக்க ஹொய்சாள ஆட்சிக்கு வந்துடுச்சு.
பன்னிரெண்டாம் நூற்றாண்டு ஆரம்பத்துல ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தன் சேரநாட்டு மேல போர்த் தொடுத்து சேர அரசனை வென்று நீலமலை அதாவது இப்போ சொல்ற நீலகிரிய கைப்பற்றுனாங்க.
இதுக்கு அப்புறம் தான், சேர நாட்டோ வட எல்லை முழுக்க ரொம்ப தெற்கு பக்கம் போய்டுச்சு. கேரள பக்கம் போகவும் ஆரம்பிச்சுடுச்சு.” நீண்ட பெரும் வரலாற்றை சுருங்கச் சொல்லி முடித்தான்.
அனைவரும் தற்போதே கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சேரர்களின் ஆட்சிப் பகுதியை எண்ணி வியக்கவே செய்தனர்.
அடுத்த வியப்பாக அமைந்தது வள்ளியின் கூற்று. “ஆமாங்க, இவரு சொன்ன மாதிரி தான் சேர மன்னர்கள் ஆட்சி இருந்தது. அப்போ இருந்த மக்கள்லாம் நகர வாசிங்க, நாட்டு வாசிங்க, மலைவாசிங்க, காட்டுவாசிங்கன்னு இருந்தோம். என்னதான் பிரிவு இருந்தாலும் அதுலாம் வெறும் பேரோட மட்டும்தான் இருந்துச்சு.
எல்லாரும் ஒன்னும்மண்ணா பொலங்கிட்டுதான் இருந்தாங்க. இவரு சொன்ன மாதிரி நம்ம நாடு இன்னும் எங்க அழிவ நோக்கி போய்டுமான்னு பயத்துல தான் சேர நாட்டு ராசா எங்க வஞ்சன் உபாயத்த தேடி அலஞ்சாரு.”
…..
சில நூறு வருடங்களுக்கு முன்பு…
கொங்கு நாடு.
அரண்மனையின் பஞ்சு துயிலும் மன்னனவனுக்கு நெருப்பாய்தான் சுட்டது. சுற்றிலும் ஒவ்வொரு பக்கமும் நடைபெற்று வந்த அந்நிய நாட்டு படையெடுப்பு தாயவளை சூறையாடிக்கொண்டு வந்துக்கொண்டிருந்த நேரம். குறுநில மன்னர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி வஞ்சனிடம் வந்து சேர்ந்தனர்.
அரசவையை சூழ்ந்திருந்த அமைதியை தன் கட்டைக் குரலால் கலைத்தார் கடன்மலைநாட்டின் குடநாட்டு மன்னன் செம்பியன்.
“அரசர்க்கரசே! சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். கோமான், தாங்களே அமைதிக்காத்தால் எங்களின் நிலை என்னாகும் அரசே? மக்கள் அனைவரும் பசி பட்டினியால் வாடி வதங்கி இருக்கின்றனர். ஆயிரம் பிரிவினைகள் இருந்தாலும் அனைவரும் சேரநாட்டின் குலம்தானே. போர்த்தொடுத்து வந்தால் வெட்டி வீழ்த்திடுவோம் என்று அறிந்தே சூழ்ச்சி என்னும் ஆயுதம் ஏந்தி வருகின்றனர். குடநாட்டில் பத்தாயிரம் வீரர்களை இரவு காவலுக்கு நியமித்தும் அவர்களைக் கடந்து சூறையாடிவிட்டு சென்றிருக்கின்றனர் மன்னவா!
அதிகாலையில் பிஞ்சு குழந்தை ஒன்று பசியால் இறந்தத் தன் தாயின் மார்பில் சுரக்காத பாலுக்கு ஏங்கி அவளின் மார்புக்காம்பை கடித்திழுப்பதை கண்டவுடன் என் உயிர் ஏன் இன்னமும் உடலோடு இணைந்திருக்கிறது என்று பெரும் பாரம் கொண்டேன் மன்னவா, பெரும் பாரம் கொண்டேன். இனி நீங்கள் ஒருவரே வழியென்று திருவடி தேடி வந்துள்ளேன்” என்றும் மனம் தளராதவர், தம் மக்களுக்காக வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு வந்ததைக் கண்ட வஞ்சனுக்கும் கண்கள் கலங்கத்தான் செய்தது.
முதன்மை அமைச்சர் தயக்கமாக எழுந்தார். “அரசே!”
“ம்ம். கூறுங்கள் அமைச்சரே!” வழிய இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன், நிமிர்ந்து அமர்ந்தான்.
“பழுத்த வயதுடையவன், பிழையாக ஏதும் கூறின் முதலில் பொறுத்தருள வேண்டும் கோமானே! நெடுங்காலமாக இறைவனிடம் நாட்டம் கொள்ளாது, குடமுழுக்கு, வேள்வி ஏதும் நிகழ்த்தாமல் இருப்பதுதான் இத்தகை சகுணத்திற்கு காரணமாக இருக்கும் என்று உன் உள்மனம் உரைக்கிறது.” என்று சற்று நிறுத்தினார்.
“ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அபாயம் என்று நீங்கள் கருதினால், அதற்கு உபாயம் என்று ஒன்றை மனத்தில் சிந்தித்தே வைத்திருப்பீர்கள் அல்லவா? அதையும் முழுதாகக் கூறிவிடுங்கள் அமைச்சரே!”
பெருத்த மூச்சொன்றை விட்டவர், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவரறிந்த உபாயத்தை கூறினார்.
“பொதிய மலையின் தெற்கு அடிவாரப் பகுதியில் சித்தமுனி ஒருவர் இருப்பதாய் கேள்வி. அவரைக் கண்டறிந்து அவரிடம் உபாயம் கேட்டால் தகும் என்று எண்ணுகிறேன்.”
வஞ்சன் கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார். மணமாகி மனத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் இன்னும் இந்த பேரரசுக்கு வாரிசு என்று ஒன்றும் உருவாகிடவில்லை. எதிரிகளின் கண்ணிற்கு இதுவும் ஒரு வாய்ப்பாகத்தான் அமைந்து இருக்கிறது, இப்போது. அதுவே, வஞ்சனிற்கு பெருத்த மனத்தளர்வு. இதில், நாட்டு மக்களின் நிலை, பசி, வறுமை போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்று திண்டாடித்தான் போனான்.
“செம்பியன் அவர்களே! சேர நாட்டு கருவூலத்தில் இருந்து தேவையான பொற்காசுகளை எடுத்து அண்டை நாட்டிலிருந்து உணவினை வருவியுங்கள். பிள்ளைப் போன்ற நெல்லிற்கு தீ வைத்துவிட்டதனால், மண் மகள் தன் நிலைக்கு வர சற்றுக் காலமெடுக்கும். அதற்குள் மாரி பெய்தால் நலம். பொய்த்துப் போகாது என்று நம்பிக்கைக் கொள்கிறேன். இன்றே, ஆயிரம் வீரர்கள் கொண்ட படைகளை ஏற்பாடு செய்யுங்கள் தளபதி. அனைவரும் பொதிய மலைக்கு சென்று அந்த சித்தரைக் கண்டு அழைத்து வருவதே அவர்களின் தலையாய வேலை.” வஞ்சன் பேசிக்கொண்டிருக்க, அரசவை வாயில் கதவு திறந்தது.
கங்கநாட்டின் மன்னன் கொங்கு நாட்டரசன் செந்தூரன் வீறுநடைப் போட்டு வந்துக் கொண்டிருந்தான். கட்டிளங்காளையவன், நெஞ்சை நிமிர்த்தி வரும் தோரணையே எதிரிகளுக்கு சவால் விடும். இதுவரை அவன் நாட்டில் மட்டுமே எந்தவொரு படையும் உள்நுழையவில்லை என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இதற்காக அவன் பல வேள்விகளையும் மந்திர உச்சாடனங்களையும் செய்து யட்சினிகளை காவலுக்கு வைத்துள்ளான் என்று அரசல்புரசலாக வஞ்சனுக்கு தகவல் வந்திருந்தது. ஆனால், அதில் நம்பிக்கை இல்லாதவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
செம்மை நிற பட்டாடை காற்றில் பறந்து வர, இடது கை, வலது இடையில் சொருகி இருக்கும் வாலை கம்பீரத்தோடு பிடித்துக் கொண்டிருந்தது.
“நாட்டையும் நாட்டு மக்களையும் நலம்பெற வைக்கும் அரசே! செந்தூரனின் பணிவுகள். கங்கை நாட்டிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்துள்ளேன். தாங்கள் அனுமதிக் கொடுத்தால் மக்களுக்கு கொடுத்துவிடலாம்.”
வஞ்சனைவிட, வயதில் சிறியவன் செந்தூரன். இவனின் தந்தை அந்நிய நாட்டு படையால் இவனது பதினைந்தாம் பிராயத்தில் வீரமரணம் எய்திருக்க, அன்றிலிருந்து இன்றுவரை கங்கைநாட்டை தன் கைக்குள் வைத்திருக்கிறான் செந்தூரன், வஞ்சனே கண்டு வியக்கும் வீரன்.
என்னே, இவனுக்கு அனைத்தும் தன்னகம் இருக்க வேண்டும் என்ற பேராசை சற்று அதிகம். ஒரு மனிதன் எத்தகைய நல்லவனாக இருந்தாலும், ஆசை பேராசையாக மாறும் தருணம்தனில் அவன் வாழ்வு வரமளிக்காது போகும்.
வஞ்சன், செந்தூரனைத்தான் கூர்ந்துப் பார்த்தான். இவனை ஏன் சித்தமுனியைத் தேடும் படைக்கு தலைவனாக அமர்த்தக் கூடாது என்பதே வஞ்சனின் எண்ணமாக இருந்தது.
செந்தூரன் கொண்டு வந்த பொருட்களை வஞ்சனின் கையசைவு மூலம் பணியாளர்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
“செந்தூரா! உன்னிடம் நான் சற்று உரையாட வேண்டும். சபை முடிந்ததும் சந்திக்கலாம். காத்திரு”
“உத்தரவு கோமானே!” என்றவன், செம்பியனைப் பார்த்து எள்ளல் நகை வீசிச் சென்றான்.
….
காத்திருக்கும் மண்டபத்தில் சாளரம் வழியாக தன்னை தழுவிச் செல்லும் சுகந்தக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.
கீழே தாமரைக் குளத்திற்கு பணிப்பெண்கள் சூழ அவள் நடந்து வந்தாள், மஞ்சரி.
“தேவி, பொறுமையாக வாரும். தங்களின் தங்க மேனி தகதகப்பில் தேவர்கள் இறங்கி வந்தாலும் அதிசயப்படுவதற்கில்லை” கிண்கிணி சிரிப்போடு சொன்னாள் மஞ்சரியின் தோழி நீலா.
ஆனால், இவளின் நகைப்பில் மஞ்சரியின் கவனம் செல்லவில்லை. அதனை நீலாவும் உணர்ந்தாள்.
“என்னவாயிற்று மஞ்சரி? வதனம் சூம்பிப்போய் இருக்கிறது?” தனது கேலியைக் கைவிட்டவளாய், அக்கரையாய் வினவினாள்.
“நாட்டின் நிலைதான் என்னவோ? மனது கிடந்து பிசைகிறது நீலா. மக்கள் அனைவரின் நெஞ்சமும் மன்னர் பெயர் சொன்னாலும், பசியால் வாடும் அவர்களுக்கு உண்டி நிரப்ப ஏதேனும் வழி கிட்டுமா என்ற சிந்தனையிலேயே இருக்கிறது.” கவலை தோய்ந்த முகத்திலும் பேரழகியாய் மிளிர்ந்தாள் வஞ்சனின் சகோதரி மஞ்சரி.
மலரின் மணத்தில் மதிமயங்கி செல்லும் வண்டுபோல, பெண்ணவளின் எழிலில் மயங்கிய செந்தூரனின் கண்கள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.
“அரசவையில் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். யாரோ, சித்தமுனியாம். பொதியமலையில் தவம் மேற்கொண்டுள்ளாராம். இத்தனை நாட்கள் குடமுழுக்கு ஏதும் நிகழ்த்தாமல், வேள்வி புரியாமல் இருந்ததனால் இப்படி நடக்கிறது என்று எண்ணிய அமைச்சர்கள், அரசரிடம் ஆலோசனைக் கேட்டு, ஆயிரம் வீரர் படைகளை அவரைத் தேடி அனுப்பவதாய் பேச்சு. இதற்கு தலைமை தாங்குபவர்தான் யாரோ? இது எனது கேள்வி”
“சித்தமுனியா? நமக்கு தேவையானதை நாம்தானே நீலா சென்று கேட்க வேண்டும். வீரர்களை அனுப்பி அவரை அழைத்து வரச் சொல்வது அவ்வளவு உத்தேசமாய் எனக்குத் தெரியவில்லை. சோதரனே சென்று அழைத்தால் நலம் என்றே எண்ணுகிறேன்.”
“நாம் சொல்வது அனைத்தையும் அவர் கேட்டுவிட்டுதான் மறுவேலை காண்பார் என்று எண்ணுகிறாயா மஞ்சரி?” பாத சலங்கை கானத்தோடு வந்து சேர்ந்தாள் வஞ்சனின் மனையாள், நாட்டின் மகாராணி கோதையிசையாள்.
“மகாராணிக்கு எமது வந்தனங்கள்” பணிப்பெண்கள் அனைவரும் வணங்கி ஒதுங்கி நின்றனர்.
மஞ்சரி ஏதும் பேசாமல் எழுந்து நிற்க, வாஞ்சையாய் அவளின் குழல் கோதியவள், “கன்னிப் பெண் இப்படி பொழுது சாயும் நேரத்தில் வெளியில் இருக்கலாமா? சஞ்சலத்திற்கான வழியை அவர் பார்த்துக் கொள்வார். நீ வா மஞ்சரி” என்று அழைத்து சென்றவர், நீலாவிற்கு கண்களாலேயே செய்தி தெரிவித்துவிட்டு சென்றார்.
…
அனைத்தையும் பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் கருவிழிப் பார்வை, மஞ்சரியின் பின்னோடே சென்றது. கண்டதும் காதல் வலையில் விழுந்துவிட்டான் மன்னன் இவன். மங்கையவளின் நிலைதான் என்னவோ?
….
மஞ்சரி அறைக்குள் சென்றதும் தனது பார்வையை திருப்பினான் செந்தூரன். சரியாக அப்போது அவனைக் காண வந்தார் அரசர் வஞ்சன்.
“அழைப்பு விடுத்திருந்தால் நானே தங்களைக் காண வந்திருப்பேனே மன்னவா? தாங்கள் இந்த எளியோனைத் தேடி இத்தனை தூரம் வரவேண்டிய அவசியம் யாதோ?” அவருக்கு இருக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் உரையாடினான்.
“அவசியம் இருந்தால்தான் கங்கைநாட்டு மன்னனை சந்திக்க இயலும். இல்லையேல், அவையோருக்குக் கூட அனுமதி கிடையாது என்றே நான் கேள்வியுற்றேன்.” மன்னரின் பதிலில் புன்னகைத்தான் செந்தூரன்.
“மன்னரும் மற்றவர்களும் ஒன்றல்ல வஞ்சா! நாம் நினைத்ததை விட காரியம் கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறது போலவே?” சட்டென்று ஒருமையில் தாவிய செந்தூரனை சின்ன சிரிப்போடு அணைத்துக் கொண்டார் வஞ்சன்.
“எமகாதகன்தான் நீ! ஆம் செந்தூரா! அந்நிய படையெடுப்புக்கு கள்ளர் கூட்டம் ஒன்று உதவி செய்துக் கொண்டு வருகின்றன. எத்தனை காவல்வீரர்களை நிறுவினாலும் எப்படியேனும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி கொள்ளையடித்துவிட்டு சென்று விடுகிறார்கள். நாட்டின் கருவூலம் தீர்ந்த பிறகு, மக்களுக்கு ஆட்சியின்மீதும் ஆட்சியாளனின்மீதும் நம்பிக்கையற்றுவிடும். அத்தகைய கையறு நிலையில் நம்மை வளைத்து பிடித்து நாட்டை கைப்பற்றுவதே அவர்களின் திட்டம். ஒற்றன் சேதி இது” இருவரும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.
“இருக்கட்டும். நமக்கு கிட்டிய செய்தி கிட்டாததுபோல் நாம் இருந்துக் கொள்ளலாம். இப்போது சித்தமுனியைத் தேடி புறப்படும் வேலையை சற்று ஒத்தி வைக்கலாம். நான் கங்கை நாட்டில் ஒரு வேள்வியை நடத்த திட்டமிட்டுள்ளேன். அது முடிந்ததும், நானே படைகளுக்கு தலைமைத்தாங்கி செல்கிறேன். உனக்கு இதில் எதேனும் மாற்றுக்கருத்து இருக்கிறதா?”
“என் நண்பனாக இருந்தாலும், ஒற்றர்களின் தலைவன் நீ. திட்டம் தயாரானதும் மேற்கொண்டு முன்னேறலாம் செந்தூரா.”
“எனக்கொரு வேண்டுகோள், அதனை நீ செய்வாயா வஞ்சா?”
“நான் விரும்பாத ஒன்றை செய்ய சொல்லப் போகிறாய். கேளும்!” புன்னகை மாறாமல் வஞ்சன் கேட்டிட, செந்தூரன் தனது வேண்டுகோளைக் கேட்டான்.
“நாட்டின் நிலையைப் பற்றி ஆட்சியாளன் உன்னிடம் மொழிய ஒன்று உள்ளது. விளம்புகிறேன். இன்னும் சிறிது மாதங்களில் வானில் மாற்றங்கள் நிகழவிருக்கிறது. அதனால், நம் நாட்டிற்கு ஏதேனும் நிகழ வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக, கட்டியம் ஒன்று பார்க்கலாம் என்பது எனது எண்ணம். கணியர் சொல்படி வேள்விகளும் குடமுழுக்கும் நிகழ்த்திவிட்டால் மக்களுக்கு சற்று ஐயமும் விலகும் வஞ்சா”
சிறிது நேரம் வஞ்சன் சிந்தனையில் ஆழ்ந்தார். வஞ்சனும் செந்தூரனும் குருகுலத்தில் ஒன்றாகப் பயின்றவர்கள். செந்தூரனைவிட, வஞ்சன் வயதில் பெரியவனானாலும்கூட, அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த நட்பு என்றும் ஒருபடி மேலேதான் இருந்து வருகிறது. ஆனால், காலமாற்றத்தால், வஞ்சனே செந்தூரனை கொல்லும் சூழ்நிலையும் வரலாம். அல்லது, செந்தூரன் தனது கைகளால் வஞ்சனை வெட்டியும் வீழ்த்தலாம். விதியின் விளையாட்டை யாரறிவாரோ?
நீண்ட சிந்தனையில் இருந்து வெளிவந்த வஞ்சன், “மற்ற அரசர்களும் இதையேத்தான் மறைமுகமாக மொழிந்தார்கள். ஆகட்டும், வேண்டிய ஏற்பாடுகளை செய் செந்தூரா. நான் சென்று கோதையை சந்தித்துவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டார்.
வஞ்சன் அறையைக் கடந்ததும், நளின இடையோடு, கருநாகக் கூந்தலை முன்னேவிட்டு, முல்லையும் மல்லியும் முடிந்து சரசமாட, செந்தூரன் அறைவந்து சேர்ந்தாள் மஞ்சரி.
இவள் தாமரைக் குளத்தில் நாம் கண்ட மஞ்சரிதானோ? ஏனோ, ஐயப்பாடு கொள்ளத்தான் மனது கூப்பாடு போடுகிறது.
“கங்கை நாட்டு அரசரே! சாளரத்திலேயே கண்கள் பதித்திருந்துவிட்டு, தற்போது மங்கையைக் காண தயக்கம் என்னவோ?” தேன்சொட்டும் பேச்சில் திரும்பிப் பார்த்தான் செந்தூரன். அவளின் கண்களில் மோகம் ததும்பியது.
ஆனால், எதையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. வானக்கோட்பாடு அறிந்தவனாதலால், இன்னும் சில காலங்களில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை அனுமானமாக அறிந்தே இருந்தான். அவனின் பார்வை இன்னும் தன்பக்கம் திரும்பவில்லை என்பதை உணர்ந்தவள், அவனை நெருங்கி, முதுகோடு ஒன்றி நின்றாள்.
அவ்வளவுதான், இத்தனைநேரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த செந்தூரன் தற்போது கோபத்தின் உச்சியில் இருந்தான். அவளின் கையைப் பிடித்து முன்னே இழுத்தவன், தற்போது கழுத்தை பிடித்திருந்தான்.
“உன் தந்திரத்தை என்னிடமே காட்டுகிறாயா யட்சினி?” வார்த்தைகளிலேயே கோபம் தெரித்தது.
“கண்டுக்கொண்டாயா? இத்தனை யுகங்களில் உன்னை மட்டுமே என்னால் மயக்க முடியவில்லை செந்தூரா” கழுத்து நெரிப்பட்டாலும் சிரித்துக்கொண்டே பேசினாள்.
அவளை விடுவித்தவன், “காவலுக்கு யார் இருக்கிறார்கள்?”
“கவலை வேண்டாம். ஏற்பாடு செய்துவிட்டே உன்னை சந்திக்க வந்தேன். சித்தமுனியை நீ தேடிச்செல்லும் போது பல அபாயங்கள் உன்னை சூழ நேரிடும். உனக்கு துணையாக என்னால் வர இயலாது.” தான் வந்ததற்கான காரணத்தை உரைத்தாள் செந்தூரனிற்கு உதவி செய்யும் யட்சினி.
அவன் அவளை யோசனையாகப் பார்க்க, “எனக்கு சாபமளித்தவரே அவர்தான். அவரின் யோகநிலையை கலைத்ததற்காகத்தான் தேவலோகம் செல்ல இயலாமல் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். பின், எப்படி உன்னிடம் வந்தேன் என்பதையும் நீ அறிவாய் தானே! அதனைவிடு. இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு நீ உன் பயணத்தைத் துவங்கு. அப்போதுதான், அவரின் பார்வை கனிந்து, நாட்டிற்கான உபாயத்தை மொழிவார்.”
“ஆக, உனக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்துவிட்டது போலவே?” பழச்சாறுக் கோப்பையை கையில் எடுத்தபடி கேட்டான்.
“தெரிந்து என்ன பயன்? எதனையும் யாருக்கும், ஏன் உன்னை உட்பட சொல்லக்கூடாது என்றே எனக்கு நீ கட்டளை விதித்துள்ளாய்.”
“ம்ம்… இங்கு எதுவுமே அதன்போக்கிலேயே நிகழட்டும் யட்சினி. தெரிந்துவிட்டால் வாழ்வில் ரசனையிருக்காது.”
“ஆமாம், கண்டேன் நானும் உன் ரசனையை. இந்த யட்சினியைவிட, அந்த மஞ்சரி எவ்விதத்தில் உயர்ந்துவிட்டாள்?” பொறாமை எட்டிப்பார்த்ததோ என்னவோ அவளின் தொனியில்?
“காதல், மையல், அவள்மேல் நான் கொண்ட பித்து என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். தாய்தந்தையை இழந்தபிறகு, எனக்கு ஆறுதலாக இவ்வுலகில் ஒரு உயிர் இருக்கிறதென்றால் அது அவள் மட்டுமே” காதல் நோய் அவனையும் பாதித்தது.
“சரி, நான் அரண்மனையை சுற்றியே இருக்கிறேன். ஏதேனும் தேவையெனில் அழை. புறப்படுகிறேன்” என்றபடி சட்டென்று மறைந்துபோனாள் யட்சினி.
…
படுக்கையில் எதையோ சிந்தித்தபடி படுத்திருந்தவள், திடீரென்று எழுந்தாள் மஞ்சரி.
அருகேயிருந்த நீலா பதறியபடி வர, மஞ்சரியின் முகமெல்லாம் வியர்த்துப்போய் இருந்தது.
“என்னவாயிற்று மஞ்சரி? கனவு ஏதேனும் கண்டாயா?”
“அவர்… அவர் வந்திருக்கிறாரா?” நாக்கு தந்தியடித்தது.
“எவர்?” நீலா குழப்பத்துடன் கேட்டாள்.
“விளையாடாதே நீலா. அவருக்கு ஏதோ நிகழப்போகிறது. எனது கனாவில் தோன்றியது.”
“அதெல்லாம் ஒன்றும் நடவாது மஞ்சரி. வீண் குழப்பமும் பயமும் வேண்டாம். அவர் இங்குதான் இருக்கிறார். அரசரும் அவரும் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”
“அப்படியா? அவர் எப்போது வந்தார்? ஏன், நீ என்னிடம் கூறவில்லை.?”
“அடடா! தேவி உங்களின் கோபத்தை கண்டால் அவள் எப்படி மொழிவாள்?” சிரிப்புடன் வாயிலில் தன் கைகளைக் கட்டியபடி நின்றுக்கொண்டிருந்தான் செந்தூரன்.
நீலா அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர, மஞ்சரியோ கண்கள் படபடக்க, உதடு துடிக்க வெட்கத்தில் புதைந்திருந்தாள்.
அவன் அருகில் வர, இவளோ மஞ்சம் விட்டு எழுந்து சாளரம் நோக்கி சென்றாள்.
அவன் சிரிப்புடனேயே சாளரம் நோக்கி செல்ல, இவளோ அங்கிருந்து விலகி மீண்டும் மஞ்சம் நோக்கி வந்தாள்.
“இப்படியே எத்தனை நேரம் விளையாடலாம் என்றிருக்கிறாய் மஞ்சரி? உன்னிடம் தனித்து உரையாடவே வந்துள்ளேன். ஆனால், நீயோ என்னை நெருங்கவே விடமாட்டேன் என்கிறாய்” என்று மீண்டும் நெருங்க, அவள் நகரும் சமயம், அவளின் இடைவளைத்து அருகே இருத்தினான்.
கயல்விழிகள் சிமிட்டிக்கொண்டே இருக்க, கன்னக்கதுப்புகள் இரண்டும் செந்தூரன் அவனின் நிறத்தை பூசிக்கொண்டது.
“இப்படியெல்லாம் உன் முகம் ஓராயிரம் இரசனையை மொழிந்தால், நான் எப்படி கண்ணே விலகுவது? என்னை மீறி ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டால், உன் சோதரன் எனது சிரத்தை கொய்து விடுவான்” சொல்லிய மறுகணம் அவனின் வாயைப் பொத்தினாள் மஞ்சரி.
“அப்படியேதேனும் மொழியாதீர்கள்! தற்போதுதான் கொடுங்கனவு ஒன்றுக் கண்டேன். நீங்களும் இப்படி சொன்னால் உங்களின் நினைவுகளிலே நான் எப்படி உயிர்வாழ்வேன் பிரபோ?” கண்ணீர் ததும்பியது அவளது விழிகளில்.
“தீ என்று கூறினால் நா சுட்டுவிடுமா? வாய்வார்த்தைகள் அனைத்தும் மெய்யாகிவிடாது அன்பே! நீ வருத்தம் கொள்ளாதே. என்றும் அப்படியொரு சூழ்நிலை நிகழாது.” அவளை அவனின் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.
அவள் ஏதும் பேசாமல் அந்த அணைப்பு கொடுத்த சுகந்தத்தை இரசிக்க, இவன் சின்ன சிரிப்போடு அவளின் தலையை கோதிவிட்டவாறு நின்றிருந்தான்.
“நான் ஒன்று கேட்கலாமா?”
“கேள் மஞ்சரி! ஆனால், இப்படி அணைப்பிலிருந்தே கேள். அப்பொழுதுதான் சரியாக பதில் வரும்.”
“ம்ம்.. ம்ம்..” என்றவாறு அவனின் நெஞ்சத்தில் வாகாக சாய்ந்துக் கொண்டவள், “தாங்கள், நாட்டின் காவலுக்கு யட்சினியை வைத்திருப்பதாய் பேசிக்கொள்கிறார்களே அது உண்மையா? மாயமந்திரங்கள் எல்லாம் நிகழ்கிறதாமே! கேட்டதும் நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. தாங்களுக்கு இதில் ஏதும் நேரக்கூடாது என அனுதினமும் நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
சிறிது நேரம் அமைதிக் காத்தவன், “நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் நலனிற்காகவும் நல்லதைக் கூட இப்படி யாருக்கும் தெரியாமல்தான் செய்ய வேண்டியுள்ளது மஞ்சரி. நான் என்ன செய்யட்டும்? ஆம், நம் நாட்டை யட்சினிதான் காவல் புரிகிறாள். அதனாலேயே அங்கே இன்னும் ஏதும் சூறையாடப்படவில்லை. இதைப்பற்றி உனக்கு விளக்கவே தற்போது இங்கு வந்துள்ளேன். நான் கூறுவதை செவிமடுப்பாயா?”
அவனின் பதிலில் மஞ்சரி சற்று ஆடித்தான் போனாள். இந்த மாயங்கள் மந்திரங்கள் அனைத்தும் எங்கோ எப்போதோ செவி வழிக் கேட்டது மட்டுமே. ஆனால், தற்போது அவற்றை தனது மணாளனாக வரப்போகிறவனே செய்கிறான் என்பதில் அவளுக்கு சிறிதும் உவப்பாக அமையவில்லை. ஆனால், காதல் கொண்ட மனது நாட்டின் நலனிற்கே இவையனைத்தும் என்று அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.
அவள் அமைதியை இவன் சம்மதமாய் எடுத்துக் கொண்டான்.
“நானும் வஞ்சனும் சிறுவயது முதலே குருகுலத்தில் ஒன்றாக பயின்றவர்கள் என்பதை நீ அறிவாய். பதின் வயதில் எனது தந்தை வீரமரணம் அடைந்துவிட, நாட்டின் அரசாட்சி பெரும் சூழ்ச்சிக்கு ஆளானது தேவி. ஆயுதம் ஏந்தி வருபவனை பிட்டத்தில் வைத்து நசுக்கியே நான் தோற்கடித்துவிடுவேன். ஆனால், நயவஞ்சகனை? துரோகம் புரிபவனை? மாயமந்திரங்கள் கொண்டு மதிமயங்க செய்பவரை எப்படி இனம் கண்டறிய மஞ்சரி? என் அன்னை எப்படி மரணம் எய்தினார் என்பதை நீ அறிவாயா?”
“பயிற்சிக்களத்தில் யானை மிதித்து…”
“அப்படித்தான் ஊரும் உறவும் நாடும் மக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், என் தாயாரை கொலைதான் செய்திருக்கின்றனர், நயவஞ்சகர்கள். யானைக்கு மதிமயக்கி கொடுத்து, மதம் பிடிக்க வைத்து, சரியாக அன்னையை அதனிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர். தந்தையை இழந்த ஆட்சியை நெறிப்படுத்துவதா, அல்ல அன்னை இழந்த துக்கத்தில் துவளுவதா என்று இரண்டுக்கும் நடுவில் சிக்கித்தவித்தேன் மஞ்சரி. அப்போதுதான் உனது தந்தையார் எனக்கு துணையாக இருந்தார். நான் மீண்டு வந்ததற்கு வஞ்சனின் நட்பும், உனது பாசமும் பெரிதும் துணையிருந்தது.
பாலகனிவன் என்ன செய்துவிடப் போகிறான் என்று எண்ணி கொலையை அப்படியே விபத்தாக முடித்துவிட்டனர். அப்போது மீண்டும் நான் எனது குருவை சந்திக்க நேர்ந்தது. அவர்தான் பொதிய மலைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு, ஒரு பெரிய இராஜநாகம் உயிர் போகும் தருவாயில் துடித்துக் கொண்டிருந்தது. குருகுலத்தில் கற்ற மருத்துவக் கல்வியினால் அதற்கு சிகிச்சையளித்து, என்னோடே சிறிது காலம் வைத்துக் கொண்டேன். அது பதினைந்து அடி பெரிய இராஜநாகம். அதற்கு உடல்நலம் தேறியதும், ஒருநாள் என்முன் படமெடுத்து நின்றது. கையில் இருந்த குடுவையில் நீர் அருந்தக் கொடுத்ததும், சட்டென்று அது மனித உருவமாக மாறியது மஞ்சரி”
அன்று…
‘பயம் வேண்டாம் செந்தூரா. நான் நாகலோகத்தில் வசிக்கும் தேவநாகவேடர் குலத்தின் தலைவன். நாங்கள் அனைவரும் கல்வராயன் மலையில்தான் வசித்து வருகிறோம். எங்களது மகள் முனிவரின் தவத்தைக் கலைத்து, அவரிடம் பெற்ற சாபத்தால் நிரந்தர மனித உருவில் இருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்து சாபவிமோர்சனம் அளிக்கவே நான் பயணித்து வருகிறேன்.
கருணையுள்ளம் கொண்ட தயாளனே! எங்களிடம் இருக்கும் நஞ்சை மட்டுமே அனைவரும் கருத்தில்கொண்டு வாழ்வை பறிக்கும் முயற்சியில் ஈடுபட, என்னையும் சக உயிராகக் கருதி உயிர் காப்பாற்றிய உமக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
தேவநாகவேடர் குலம் என்றும் உனது கட்டளைக்கு அடிபணியும். உனக்கு நான் நாகவசியக் காப்பை உபதேசிக்கிறேன். அது என்றும் உனக்கு துணைபுரியட்டும்.’ என்று நாகவசியக் காப்பை உபதேசித்தது.
பின், தனது சக்திகளை ஒன்று திரட்டிய இராஜநாகம், ‘செந்தூரா, நீ மிகப்பெரிய பணிக்கு செல்கிறாய். வழியில் கண்ணிற்கு அகப்படாத பல்வேறு ஆபத்துக்கள் உன்னை சூழும். இது வழிவழியாக எங்களது பாதுகாப்பில் இருக்கும் சிவன்காப்பு. இதை அணிந்துக் கொள். தக்க சமயத்தில் இது உனக்கு உறுதுணையாக இருக்கும். மீண்டுமொரு பயணத்தில் நாம் சந்திப்போம். தற்போது விடைபெறுகிறேன் செந்தூரா’ என்று சென்றுவிட்டது.
….
அதன்பிறகு, நான் வெகுதூரம் பயணிக்க, பொதியமலையினை அடைந்ததும், சித்தரின் அருவத்தை அந்த சிவன்காப்புக் காட்டியது. அவரின் சீடனாக நான் சிலகாலம் தங்கினேன். நான் சென்ற சமயம்தான் அவரின் வாழ்நாள் முடியும் தருவாய். அதனாலேயே, இறைவனே என்னை அனுப்பி வைத்ததாக எண்ணி, அவர் அறிந்த வித்தைகளையும், மந்திரங்களையும் எனக்கு உபதேசித்தார். அதனோடு, அதனை குறிப்பாகவும் எழுதி, சில சொல்ல முடியாத மந்திரங்களை சில பொருட்களில் பாதுகாத்து வைத்தார். அந்த பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், இந்த உலகினையே கைக்ககுள் அடக்கலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. அனைத்து சக்திகளுக்கும் காவலாக பல தடைகளையும் வைத்துள்ளார். அனைத்தும் என் கைப்படவே ஓலையில் செதுக்கிக் கொடுத்தேன்.
அதை அவரின் திருப்பாதங்களில் வைத்ததும், கனநேரத்தில் சுவடிகள் மறைந்து போனது. அதை எழுதிய எனக்கும் நினைவுகள் மறந்தும் போனது. ஆனால், அவர் கற்றுக்கொடுத்த வித்தைகளும் மந்திரங்களும் தான், இன்றுவரை எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் எனது நாட்டையும் என் மக்கள்களையும் நான் காத்து வருவதற்கான காரணம் மஞ்சரி. தற்போதுவரை இவையனைத்தும் இரகசியமாகவே என்னுள் புதைந்து கிடந்தது. இனி, நமக்குள் புதைந்துக் கிடக்கும்”
இருவரும் பேசிக்கொண்டே மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர்.
“அப்படியெனில், இவையனைத்தும் நம் நாட்டு மக்களின் நன்மைக்கு மட்டுமே என்பது தற்போது புரிகிறது பிரபோ. ஆனாலும்…”
“மனதில் இருப்பதை உதிர்த்துவிடு. இல்லையேல், இருவருக்கும் அதனால், மனவிரயம்தான்”
“அந்த யட்சினி?”
“இங்கிருக்கிறேன் தேவி” என்று ஒயிலாக அவள்முன் வந்தாள் செந்தூரனின் யட்சினி தேவி.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

