Loading

அத்தியாயம் 20

 

தோழியின் உயரத்திற்குத் தக்கபடி உடலை சற்றே வளைத்து குனிந்து நின்றான் நவன்.

 

“ஏய் லூசு ரமி, நீ எங்க இங்க?”

 

“இங்க ஷிஃப்ட் ஆகிட்டேன்டா.”

 

“எப்ப?”

 

“லாஸ்ட் வீக். சிக்ஸ் சீ ல தான் ரெண்ட்டுக்கு இருக்கேன். பால்கனியில நின்னுட்டு இருந்தப்ப தான்‌, உன்னைப் பார்த்தேன். அதான் அப்படியே ஓடி‌ வந்துட்டேன்.”

 

“ஹோ.. இதைத்தான் சர்ப்ரைஸ்னு சொன்னியா நீ?”

 

‘எஸ் எஸ்..”

 

மெலிதாய் சிரித்தவன், “எங்க உன் ஹஸ்பெண்ட்?”

 

“பெங்களூர்.”

 

“இப்ப என்ன?”

 

“வொர்க் விஷயமா போயிருக்கான். ரெண்டு நாளாச்சு.”

 

கணவனைப் பற்றிப் பேசும் பொழுது, தோழியின் முகத்திலும் குரலிலும் உற்சாகம் மெல்ல வடிவதைக் கவனித்துக் கொண்டான் நவன்.

 

“சரி, உள்ள‌ வா.” என்றிட, நண்பனின் மனைவியை எட்டிப் பார்த்தாள்.

 

அதுவரை இருவரது நடவடிக்கைகளையும் பார்வையாளனியாய் பார்த்திருந்தாள் ஆசைக்கனி.

 

வீட்டிற்குள் வந்த ரம்யா, “உன் வொய்ஃபா?”

 

அவளோடு இணைந்து வந்து தலை அசைத்து புன்னகைத்தவன், “எஸ்.”

 

“என்னடா இது ஸ்கூல் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கா? மைனர் பொண்ணைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டியா?”

 

“உன்னைக் கொல்லப் போறேன் பாரு!”

 

“ச.. ச.. சஞ்சனா. நேம் கரெக்ட் தான? இன்விடேஷன்ல ஒன் டைம் தான் பார்த்தேன். அதான் சட்டுனு ஞாபகம் வரல.”

 

“நோ!” என்ற நவனை அவள் கேள்வியாய்ப் பார்க்க, “வெயிட், சொல்லுறேன்!” என உடைமைகளை எடுத்து வைத்தான்.

 

புதுமணப் பெண் வீட்டைச் சுற்றி கண்களை ஓட விட, உரிமையுடன் கூடத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள் மற்றவள். 

 

“கனி, இது என்னோட காலேஜ் ஃப்ரெண்ட் ரம்யா. எனக்கு, இங்க சென்னையில இருக்கிற ஒரே ரிலேசன், ஃப்ரெண்ட், ஃபேமிலி, இம்சை எப்படி வேணும்னாலும் சொல்லலாம். இன்ஜினியரிங் கவுன்சிலிங் வந்தப்ப டைம்ஷ, ஃபர்ஸ்ட் டைம் இவளை மீட் பண்ணேன். அப்ப, எனக்குச் சென்னை புதுசு. இவதான் ஹெல்ப் பண்ணா‌. அப்ப இருந்து பழக்கம் ஆனதுதான், பன்னெண்டு வருஷம் ஆச்சு!”

 

அவள் ரம்யாவைப் பார்த்துப் புன்னகைக்க‍, “என்னடா பேரு சொன்ன?” என வினவினாள்.

 

“லெட்ஸ் மீ இண்ட்ரொடியூஸ் யூ டூ மை வொய்ஃப். ஆசைக்கனி.” என்று அவளின் தோளில் கையிட்டு அறிமுகம் செய்து வைத்தான்.

 

ரம்யா விழித்து, “அப்ப சஞ்சனா?”

 

“பொண்ணு மாறிடுச்சு.”

 

“வாட்? என்கிட்ட எதுவும் சொல்லல.?”

 

“அந்த டைம்ல, சொல்லக்கூடிய நிலைமையில இருந்தியா நீ.?”

 

“ம்ம்..” எனத் தலை அசைத்த ரம்யா, “என்ன நடந்துச்சு?” என்று தீவிர மனோபாவத்திற்கு மாறினாள்.

 

நடந்ததைச் சுருக்கமாய் உரைத்தான் நவன்.

 

“இட்ஸ் ஓகே‌. உனக்கு இவ ஓகே தான.?”

 

மெலிதாய்ப் புன்னகைத்தவன், “கனி, அதுதான் பெட்ரூம். குளிச்சிட்டு, உன்னோட திங்க்ஸ் எல்லாம் செல்ஃப்ல அரேஞ்ச் பண்ணிக்கோ!” என மனைவியை அனுப்பிட, “எதுக்குடா, அவளைத் துரத்தி விடுற?” என்றாள் ரம்யா.

 

இருவரது உரையாடலும் செவியில் விழ, ஏதோ அடர்ந்த காட்டிற்குள் தனித்து செல்வது போன்ற மனநிலையில் படுக்கை அறையை நோக்கி நடந்தாள் பாவை.

 

“அவ டிரைன்ல நைட் எல்லாம் தூங்கல இம்சை. அதான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு அனுப்புனேன்.”

 

நண்பனைப் பார்வையால் அளந்த ரம்யா,‌ “அவ‌ தூங்கலயா? இல்ல, நீ தூங்க விடலயா?”

 

“என்ன பேசுறதுனு விவஸ்தையே இல்லையா உனக்கு? டிரைன்ல எத்தனை பேர் வருவாங்க?”

 

“நைட்ல முழிச்சு உட்கார்ந்து‍, என்ன நடக்குதுனு எல்லாரும் பார்த்துக்கிட்டா இருக்காங்க?”

 

“கொஞ்சம் கூட வெட்கமே இல்ல.?”

 

“அதை எல்லாம் எப்பவோ துடைச்சுப் போட்டுட்டேன்.”

 

மெலிதாய்ச் சிரித்தவன், “சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”

 

பெருமூச்சு விட்டு மறுத்துத் தலை அசைத்தாள்.

 

“விடு, அதுக்கான டைம் இன்னும் வரல போல.”

 

“அப்படித்தான் நானும் என்னைச் சமாதானம் செஞ்சுக்கிட்டேன்‌. ஆனா இப்ப, வர வர எனக்கும் கதிருக்கும் இடையில ரொம்ப கேப் விழுந்த மாதிரி ஃபீல் ஆகுதுடா. வொர்க்குனு அடிக்கடி என்னை விட்டுட்டு வேற போயிடுறான்‌. வீட்டுல இருந்தாலுமே பார்த்துக்கிறதும் ஒருத்தருக்கொருத்தர் பேசுறதுமே ரொம்ப ரேர் ஆகிடுச்சு.”

 

“ஹேய்.. ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத.‌ அது, உன் ஹெல்த்துக்கு நல்லது இல்ல.”

 

“ம்ம்..” எனப் புரிந்து கொண்டது போல் அவள் தலை அசைக்க, “ரமி எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் வேணுமே.?”

 

“என்னடா?”

 

“கிச்சன் திங்க்ஸ், அப்புறம் ஃபேமிலியை ரன் பண்ணுறதுக்கு என்னென்ன வேணும்னு பார்த்து வாங்கணும். எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல. கனிக்குமே எல்லாம் புதுசு. சோ..”

 

“ஓகே ஓகே.. இன்னைக்கு ஈவ்னிங் போகலாம்.”

 

“தேங்க்ஸ் இம்சை!”

 

“எப்ப ஆஃபிஸுக்கு?”

 

“நாளைக்கு!”

 

“ஏண்டா?”

 

“டூ வீக்ஸ் லீவ் ஆல்ரெடி முடிஞ்சிடுச்சு.”

 

“உன்னோட வொய்ஃப்?”

 

“அவ பார்த்துக்குவா‌.”

 

“சரிடா. பாய்!” என ரம்யா விடைபெற, அறைக்குள் சென்றான் நவன்.

 

எதுவும் செய்யாமல், படுக்கையில் பதுமை போல் அமர்ந்து இருந்தாள் கனி.

 

“ஏய் என்ன, அப்படியே உட்கார்ந்து இருக்க?” என வினவிட, “ஒன்னும் இல்ல!” என்றுவிட்டுக் குளியல் அறைக்குள் சென்றாள்.

 

பத்து தினங்களாய் கணவனுடன் இருந்த தருணங்களின் இனிமை, இன்றைய தினத்தில் மொத்தமாய் வடிந்து விட்டதைப் போல் உணர்ந்தாள்.

 

ஊரில் ஆண் பெண் பாலின வேறுபாடில் இடைவெளியோடு பழகிப் பார்த்தவளிற்கு, நவன் மற்றும் ரம்யாவின் தொட்டு அணைத்துக் கொள்ளும் படியான நட்பு ஒருவித அசௌகர்யத்தைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அத்தோடு, ‘ரூமுக்கு போ!’ என்ற ஆடவனின் இயல்பான செயல்பாடு, அவன் தன்னை அவர்களின் நட்பில் இருந்து விலக்கி நிறுத்துகிறான் என எண்ண வைத்தது.

 

உண்மை யாதெனில், தனது கணவனிடம் தன்னைக் காட்டிலும் நட்பு என்கிற பெயரில் வேறொரு பெண் நெருங்கிப் பழகுவதை, பாவையின் மனம் விரும்பவில்லை.

 

அவள் தயாராகி வர, “ஈவ்னிங் ஷாப்பிங் போறோம்‌ கனி. ரமியை ஹெல்ப்புக்கு வரச் சொல்லி இருக்கேன். ரெடியா இரு, போயிட்டு வந்துடலாம்!” என மனைவியின் மனநிலை அறியாது நவனும் தனது பங்கிற்கு, கனன்று கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிச் சென்றான்.

 

அதனின் அனலை மேலும் அதிகரிப்பது போல் நிகழ்ந்தன, அடுத்தடுத்த நிகழ்வுகள்.

 

மாலையில் பொருள்கள் வாங்குவதற்காக சென்றனர் மூவரும். நவனிடம் இரு சக்கர வண்டி மட்டுமே இருந்ததால், ரம்யாவின் நான்கு சக்கர வாகனத்தில் பயணம்.

 

அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்க, வழக்கம் போல அதற்கு அருகேயான இடத்தைப் பற்றிக் கொண்டாள் தோழி.‌ பின்பக்க இருக்கையில், தனித்து விடப்பட்டாள் கனி.

 

திருமணத்திற்குப் பின்னர் முதன்முறையாய், கணவனானவன் தன்னை விட்டு வெகு தூரம் விலகிச் செல்வதாய் தோன்றியது அவளிற்கு.

 

“ஹேய் இந்த ஷாப்ல, எலக்ட்ரான்னிக்ஸ் திங்க்ஸ் எல்லாம் பெஸ்டா இருக்கும். இந்த கடை, பாத்திரம் வாங்க ஓகே!” எனப் பயணத்தில் ஒவ்வொன்றாய் உரைத்துக் கொண்டே வந்தாள் ரம்யா.

 

“மெயின் ரோடு வேணாம், சிக்னல்ல டிராஃபிக் அதிகமா இருக்கும். சைடுல கட் பண்ணு.‌ தூரம் கொஞ்சம் அதிகம் தான், பட் டிராஃபிக் இல்லாம சீக்கிரம் போயிடலாம்!” என தான் வெளியே வரும் பொழுது, செல்லும் வழிகள் யாவையும் கற்றுத் தந்தாள்.

 

கடைக்குள் சென்ற பின்னரும், அவளின் பேச்சை பிரதானமாய் இருந்தது. நவன் பெரும்பாலும் தலையை மட்டுமே அசைத்தான். சிலவற்றில் தனது கருத்துகளையும் தெரிவித்தான்.

 

சமையல் அறை உபயோகத்திற்காக பொருட்கள் வாங்கும் பொழுது‍,

 

“தோல் சீவுறது எல்லாம் வாங்கணுமா என்ன? அதான் கத்தி இருக்கே, அதுலயே தோலை ரிமூவ் செஞ்சுக்கலாம்ல.?”

 

“உன்னை உட்கார்ந்து ஸ்கின் ரிமூவ் பண்ண விட்டா, தெரியும்? கத்தியில சீவவாம்? பிக்கங்காய் எல்லாம், சீவ முடியாதுடா!” என நண்பர்கள் தங்களிற்குள் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, 

 

“எனக்கு அரிவாள்மனை தான்‌ பழக்கம். கத்தியில எல்லாம் காய் வெட்டுனது இல்ல!” என்று கனி முணுமுணுத்தது இருவருக்குமே கேட்காமல் தான் போனது.

 

“எதுனாலும் அவன்கிட்டப் பயப்படாம பேசு!” என மாமனார் உரைத்திருந்த அறிவுரை, நவனிற்கும் ரம்யாவிற்குமான நெருக்கத்தைக் கண்ட பின்னர், நினைவில் இருந்து எங்கோ சென்று ஓடி ஒளிந்து கொண்டது. 

 

தனத சௌகரியங்களை முன்னிறுத்தி அதைப் போலவே நண்பனின் இல்லத்திற்காக என்று பொருட்கள் யாவையும் தேர்வு செய்த நவனின் தோழியும், அவனது மனைவியான கனியின் வசதியைப் பற்றி சிந்திக்காது தான் போனாள்.

 

பெண்ணாக இருப்பவளிற்கே அந்த யோசனை இல்லாத பொழுது, ஆணிற்கு மட்டும் தோன்றுமா என்ன?

 

இவர்கள்‌ இருவருமே பேசி வாதம் செய்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்க, தான் அங்கு தேவை இல்லாத ஒருவளாய் உணரத் துவங்கினாள் கனி.

 

இரவு இல்லம் திரும்பும் பொழுது, நவன் மனைவியிடம் பேசியதே அதிகபட்சம் இருபது வார்த்தைகள் தான் இருக்கும்‌. 

 

‘இது ஓகேவா? உனக்குப் பிடிச்சிருக்கா? ரமி வீட்டுல மிக்ஸி, ஃபிரிட்ஜ், கிரைண்டர் எல்லாம் இந்த கம்பெனி தான் யூஸ் பண்ணுறாங்க‌‌. நல்லா இருக்காம். வாங்கிக்கலாமா?’

 

இவை தான்.

 

ஆனால் ரம்யாவிற்கும் அவனிற்குமான உரையாடல் எல்லாம், மணிக்கணக்கில் நீண்டன. உணவையும் ஒன்றாய் இணைந்து வெளியிலேயே உண்டுவிட்டு வந்தனர்.

 

படுக்கையில் தன்னை நெருங்கிப் படுத்த கணவனின் செயலில் ஒருவித அன்னியத்தன்மை உருவெடுக்க, “எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கட்டுமா.?” என விலகிச் சென்றாள்.

 

அவளாக முதல்முறை தள்ளிப் படுத்திட, ‘பயணமும் அலைச்சலும் உடலை சோர்வடையச் செய்து இருக்கும். ஓய்வெடுக்கட்டும்!’ என்று மனைவியின் விருப்பத்திற்கே விட்டான் நவனும்.

 

ஆனால் இந்த விலகல் அவன் அறியாமலேயே நாளுக்கு நாள் தொடர்ந்தது‌. பணிச் சுமையின் காரணமாக ஆடவனது கருத்திலும் அது பதியாமல் போனது‌. அதேநேரம் நவனிற்கும் ரம்யாவிற்குமான நட்பு மட்டும், அதே உயிர்ப்புடன் நீடித்து வந்தது.

 

காலையில் இருவரும் இணைந்தே பணிக்குச் சென்றனர். இரவும் சேர்ந்தே இல்லம் திரும்பினர். 

 

இடையில் நான்கைந்து முறை, ‘இன்னைக்கு ரமிக்கும் சேர்த்து சமைச்சிடு கனி!’ என்று தோழிக்கும் உணவை வாங்கிச் சென்றான்.

 

இரண்டு மாத காலம் அப்படியே கடந்து சென்றது. நடுவே‍, இருமுறை மட்டும் ரம்யாவின் கணவன் கதிரைச் சந்தித்து இருந்தாள் கனி.

 

இருவருக்கும் தோற்றப் பொருத்தம் என எதுவும் இல்லை. படிப்பிலும், சம்பாத்தியத்திலும் மனைவியை விட கீழேயே இருந்தான் கதிர். ஆனால் குணம் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்ளும். அத்தனை வெள்ளை மனதினன்‌.

 

மனையாள் எள் எனும் முன்னர் எண்ணெயாய் நின்றான். அவளிற்காக எதைச் செய்யவும் எந்நேரத்திலும் சித்தமாக இருந்தான்‌. ஆனால் ரம்யா தான், கணவனைத் தன்னை விட்டு விலக்கியே நிறுத்தினாள். தோழனான நவனிடம் பேசும் அளவிற்குக்கூட கணவனிடம் அவள் உரையாடுவது இல்லை. 

 

இவை எல்லாம், கனி.. தான் பார்த்ததை வைத்து உணர்ந்து கொண்டது. 

 

இவ்விருவரின் நட்பு, அவரவரது தனிப்பட்ட குடும்ப வாழ்வை மெல்ல மெல்ல சிதைத்துக் கொண்டிருப்பதாய் தோன்றியது பாவைக்கு.

 

‘கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம், தப்பில்ல!‌’ என்ற சிற்றன்னையின் சொல்லிற்காக, தனது மன உணர்வுகளை வெளிக் காட்டாது அமைதியாகவே நாட்களை கடத்தினாள் கனி.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்