Loading

அத்தியாயம் 18 

 

தனது அணைப்பிற்குள் இருந்த மனைவியை எண்ணுகயில், காரணம் ஆராயத் தோன்றாது ஏனோ நவனின் மனம் குதூகலித்தது.

 

பெயரிலேயே ஆசையை வைத்துக் கொண்டு எதிரில் இருப்பவர்களிடம் குழந்தைத் தனத்தோடு வாதாடுபவளின் மீது ஆசை வராமல் போனால் தான், அதிசயம்!

 

உண்மையில் ஆசைதான் அவனிற்கு பாவையின் மீது. உள்ளங்கை நிறைய நீரை அள்ளி வைத்து, அப்போது பிறந்த மீன் குஞ்சை அதனுள் நீந்த விட்டு ரசிப்பது போலான மகிழ்ச்சியின் சாயல், அந்தப் பிடித்தத்திற்கு. 

 

மீனின் நிந்தலில் கரம் குறுகுறுப்பு போல், உணர்வுகளும்‌ குறுகுறுத்தது நவனிற்கு.

 

“அப்ப, உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா.?” எனக் கேட்டவளின் வினாவில் சிரிப்பு வர, அணைப்பைத் தளர்த்தி முகம் நோக்கினான் நவநீதன்.

 

“ஆமா பிடிச்சிருக்கு. போதுமா?”

 

“எனக்கும்!” என்று மறுமொழி உரைத்தவளின் முகம் சிவந்து இருந்தது. 

 

இதழ்கள், நிலவுப்பற்கள் வெளியே தெரியும் படியாய் சிரிப்பைச் சிந்திக் கொண்டிருந்தன.‌ 

 

ஆனால் கருவிழிகள் மட்டும் அவனைக் காணத் தயங்கி, அங்கும் இங்குமாய் ஓடி ஒளிந்து விளையாடியது.

 

“அடடா! கனிக்கும் என்னைப் பிடிச்சு இருக்காமே? என்ன காரணமாம்?”

 

“தெரியல. ஆனா பிடிச்சிருக்கு.”

 

“எங்க, அதை என்னைப் பார்த்துச் சொல்லு பார்ப்போம்.”

 

“ம்கூம்ம்..” என அவள் மறுப்பாய் தலை அசைக்க, “ஹேய் ப்ளீஸ்‌..”

 

“இல்ல, எனக்கு ஒரு மாதிரி இருக்கு!”

 

“நீ என்கூட வர்றதுக்கும், இங்க இருக்கிறதுக்கும் இதுதான் வித்தியாசம்.”

 

அவள் திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்க்க, பாவையின் இதழ்களில் சட்டென்று தனது அதரங்களைப் பதித்தான் ஆடவன். இரு கரங்களும் இறுக்கமாய் அவளை தழுவி, உடலோடு ஒட்டி வைத்துக் கொண்டன. 

 

இருவருக்கும் இடையே புகுந்து செல்வதற்கு இடைவெளி இல்லாது, திணறி விலகிச் சென்றது இரவு நேரத் தென்றல்.

 

முதலில் இதழ் உரசல், அடுத்ததாய் ஒற்றல், மென் முத்தம், அது சற்று அழுத்தமாய், இன்னும் அழுத்தம் கூடுதலாய், இதழ்கள் பிரிந்து உறவை வரவேற்கும் பரிமாற்றம், சுவை அறிதல் என சிறிது சிறிதாய் முன்னேற்றம் அடைய, பத்து நிமிடங்களின் முடிவில் மூச்சு வாங்க கணவனைத் தள்ளிவிட்டாள் கனி.

 

அவன் புன்னகையுடன் பார்த்திருக்க, “இப்படி இறுக்கிப் பிடிச்சா, எப்படி நான் மூச்சு விடுறது.?” எனப் புகார் வாசித்தாள் பாவை.

 

“என்ன செய்ய? கையால உன்னை ஃபீல் பண்ண முடியாத அளவுக்கு ஒல்லியா இருக்கியே? அதான் கொஞ்சம் இறுக்கமா கட்டிப் பிடிச்சிட்டேன்.” என்று நவன் சிரிக்க, “என்ன‌ கிண்டலா?”

 

“கிண்டல் எல்லாம் இல்ல, உண்மையை தான் சொல்லுறேன்!” என உரைத்தபடியே  மீண்டும் முத்தப் பயணத்தைத் தொடர்ந்து, அதனை இரவு முழுவதும் முடிவில்லாமல் நீட்டிச் சென்றான் நவன்.

 

விலகாமலும் விலக்காமலும் சலிக்காமலும் சரி தவறை ஆராயாமலும், கணவனிற்கான உரிமையை தன்னிடம் முழுமையாய் அனுமதித்தாள் அவளும்.

 

கிழக்கே கதிரவன் உதயமாக, மூடியிருந்த ஜன்னலின் இடைவெளியில் மெலிதான வெளிச்சம் அறைக்குள் நுழைந்தது.

 

அதைக் கவனித்த கனி, “என்னங்க, விடிஞ்சிடுச்சு போல.?”

 

“விடிஞ்சா விடியிது, உனக்கு என்ன?”

 

“நான் தூங்கவே இல்ல, போங்க.”

 

“நானா உன்னை தூங்க வேணாம்னு சொன்னேன்? ஏன் முழிச்சு இருந்த.?”

 

“ஏன் முழிச்சிருந்தேன்னு என்னைக் கேட்குறீங்களாக்கும்? முதல்ல தூங்க விட்டீங்களா நீங்க?” என அவனின் மார்பில் அடிக்க, “சரி சரி, என்மேல தான் தப்பு. நான்தான் உன்னை தூங்க விடல‌.” என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்தான் நவன்‌.

 

“போங்க, நீங்க ஒத்துக்கிறதால மட்டும் இப்ப என்ன ஆகிட போது?” என அவள் எழ, “ஏய் கனி, என்ன செய்யிற.?” என்று தடுத்து நிறுத்தினான்.

 

“குளிக்கப் போறேன். விடிஞ்சிடுச்சே? சீக்கிரமே எழுந்திரிச்சு ரெடி ஆகிடணும்னு அத்தை சொல்லி இருக்காங்க.”

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்‌. பேசாம படு.”

 

“அச்சோ! அத்தைத் திட்டுவாங்க.”

 

“அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நான் பேசிக்கிறேன்.”

 

“அது நல்லா இருக்காதுங்க‌.”

 

“கனி!” என அவளின் இரு கன்னங்களையும் சேர்த்து ஒற்றைக் கையால் பற்றிட, புன்னகைத்தாள் பாவை‌.

 

“என்னடி சிரிக்கிற.?”

 

“சிரிப்பு வந்துச்சு, சிரிக்கிறேன்.”

 

“ஓய்! என்ன நக்கலா? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? “

 

“ம்ம்‌.. நல்லாதான் இருக்கீங்க. உயரமா, கலரா, நிறைய முடியோட, கொஞ்சம் அழகா..”

 

“அடடா, அப்புறம்.?”

 

“அவ்வளவு தான்!” என மேலும் புன்னகை சிந்தினாள்.

 

நவனும் புன்முறுவல் அளித்து, இளமையின் வேகத்தில் இருளின் அடர்த்தியில், கழட்டி எறிந்த மனைவியின் உடைகளை எல்லாம் தேடி எடுத்துக் கொடுத்தான்.

 

உடுத்திக் கொண்டு அவள் ஓய்வறைக்குச் செல்ல, இவன் உறங்குவதற்கு ஆயத்தமானான்.

 

*

 

இரவில் பணி முடிந்து வீடு வந்து சேர்ந்தான் விஜயன். அவனின் அறை, ஆள் அரவம் இன்றி இருந்தது.

 

கையைத் திருப்பிப் பார்த்தான். கடிகாரம் மணி ஒன்பது எனக் காட்டியது. வழக்கத்தை விட ஒருமணி நேரம் தாமதமாய் அன்று வந்திருந்தான்.

 

‘வீட்டில் தனியாய் இருப்பாள்.’ என முன்னரே மனைவிக்குத் தகவல் தெரிவித்து விட்டான்‌. ஆனால், வந்து பார்த்தால் அவளைத் தான் காணவில்லை.

 

அடுத்த நொடியே கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். மூன்று முயற்சிக்குப் பின்னர், நான்காம் முறைதான் பதில் அளித்தாள்.

 

“சஞ்சு, எங்க இருக்க?‌” என இவன் பதற்றத்துடன் வினவ, “வெளிய வந்தேன்!” என்று நிதானமாய்ப் பதில் வந்தது.

 

“இந்த நேரத்துலயா?”

 

“ஏன், இந்த நேரத்துக்கு என்ன? நயன் ஓ கிளாக் தான ஆகுது.?”

 

“அது ஓகே. பட், எங்க போன?”

 

“ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ணலாம்னு வந்தேன் விஜி. நீ வேற கால் பண்ணி, இன்னைக்கு வர்றதுக்கு லேட் ஆகும்னு சொன்னியா?‌ அதான் அப்படியே கிளம்பி எல்லாரும் ஹோட்டலுக்கு வந்துட்டோம். நீ வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடலாம்னு நினைச்சேன்.‌ ஆனா லேட் ஆயிடுச்சு. ஸாரி.”

 

அவள் காத்திருப்பாள்‌ என ஓட்டமும் நடையுமாக வந்தவனிற்கு மனைவியின் இச்செயல் சற்றே எரிச்சலைத் தர, “என்கிட்ட ஏன் சொல்லல?”

 

“ஃப்ரெண்ட்ஸை பார்க்க வர்றது ஒரு விஷயமா? இதை எல்லாம் இன்ஃபார்ம் பண்ணணுமா என்ன?”

 

“நான் லேட் ஆகும்னு உனக்குக் கால் பண்ணி சொன்னேன்ல, சஞ்சு?”

 

“நீயும் அப்படிச் சொல்லணும்னு அவசியம் இல்ல. வெளிய போறவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். முன்ன பின்ன லேட் ஆகத்தான் செய்யும். ஒவ்வொரு தடவையும் வீட்டுல இன்ஃபார்ம் பண்ண முடியுமா, சொல்லு? பட் நீ அதைச் செய்யிற, எனக்கு அதுல ஹேப்பி தான்.”

 

“ஹோ..‌ சரி, எப்ப வருவ.?”

 

“ஹோட்டல்ல இருக்கோம். இன்னும் கிளம்பல.”

 

“எங்கனு சொல்லு. நான் வந்து,‌ உன்னைக் கூட்டிட்டு வர்றேன்.”

 

“ஹேய் வேணாம். இங்க இருந்து நாம பஸ்ஸு ஆட்டோனு மாறி மாறிப் போகணும். என்னோட ‌ஃப்ரெண்ட் டிராப் பண்ணுறேன்னு சொல்லி இருக்கான், சோ நான் வந்துடுவேன். எனக்காக வெயிட் பண்ணாத விஜி. சாப்பிட ஏதாவது உனக்கு மட்டும் பிரிபர் பண்ணிக்கோ!” என்று அவள் பேச்சை முடித்திட, பீப் ஒலி கேட்ட கைப்பேசியைப் பார்த்தபடி வீட்டின் வாயிலில் மெல்ல அமர்ந்தான் விஜயன்.

 

ஐந்து, பத்து நிமிடங்கள் எனக் கால் மணி நேரம் கடந்தது. ஒரு பெருமூச்சு விட்டு அவன் எழ, பின்னால் நின்று மகனைப் பார்த்திருந்தார் சிவநாதன்‌.

 

தந்தையை எதிர்கொள்ள இயலாமல் ஆடவன் தலைகுனிய, “நீயா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. உன்னோட லட்சியத்துக்காக என்னையும், நான் சேர்த்து வச்ச சொத்தையும் வேணாம்னு சொல்லிட்டு நீ போகும் போது கூட, உன்னோட உறுதியை நினைச்சுக் கொஞ்சம் பெருமையா இருந்துச்சு விஜய். ஆனா இப்ப எதிர்ல நிக்கிற உன்னைப் பார்க்கும் போது.. ப்ச்ச்..” எனத் தோன்றியதை சொல்லாமல் நிறுத்தினார்.

 

அவர் உரைக்கவில்லை எனினும்‍, அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

 

“நீ எப்பவும் எல்லாத்துலயும் ஜெயிக்கணும்னு தான் விஜயன்னு பேர் வச்சேன்.‌ எல்லாத்துலயும் ஜெயிக்கணும்னு கூட அவசியம் இல்ல. ஆனா.. வாழ்க்கையில தோத்துட்டா, அப்புறம் நீ எதுல ஜெயிச்சாலும் அது சந்தோஷத்தைக் கொடுக்காது!” என்றுவிட்டு அவர் நகர, வாழ்வில் முதல் முறையாய் சஞ்சனாவின் மீது தனக்கு உண்டான பிடித்தத்தை நினைத்து வருந்தினான்.

 

மதியம் ஒரு மணிக்கு அரை வயிறு உண்டது‌. பசித்தது, எனினும் சாப்பிட மனம் வரவில்லை‌. புத்தகத்தை எடுத்துப் படிக்க முயன்றான். கவனம் அதில் செல்ல மறுத்தது‌. எதையும் செய்யத் தோன்றாது படுத்துக் கொண்டான். 

 

உடல் அயர்வு, சில நிமிடங்களிலேயே அவனைத் தூக்கத்தின் வசம் இழுத்துச் சென்றது.

 

செவியோரம்‌ கைப்பேசியின் ஒலி. இமைகளைப் பிரித்துப் பார்த்திட, திரையில் சஞ்சனாவின் பெயர்.‌

 

தொடர்பை இணைத்து, “சொல்லு.”

 

“விஜி, டோர் லாக் பண்ணி இருக்கு. நான் எப்படி உள்ள வர்றது?”

 

சிவநாதன் நகைக்கடையின் பொறுப்பை ‌மருமகனிடம் கொடுத்த பின்னர், அவ்வப்போது சென்று வியாபாரத்தை மேற்பார்வை மட்டும் செய்துவிட்டு நேரத்தோடு வீட்டிற்கு வருவதை வழக்கமாய் வைத்திருந்தார்‌. 

 

விஜயனுமே நெடுநேரம் வெளியில் இருக்கும் பழக்கம் இல்லாதவன்‌. அதனால் பத்தரை மணிக்கு எல்லாம் வாயிலை பூட்டி விடுவர். 

 

“பூட்டிட்டாங்களா, டைம் என்ன.?” என்றிட, “விசாரணை  நடத்துற நேரமா இது? வந்து ஓப்பன் பண்ணு விஜி!” எனக் குரல் உயர்த்தி மொழிந்தாள்.

 

சொற்களில் கடுமையும் எரிச்சலும் எட்டிப் பார்த்தது. 

 

விஜயனிற்கு அந்தத் தொனியைக் கேட்டதுமே, சட்டென்று ஒருவித சலிப்பு எங்கிருந்தோ ஓடிவந்து உணர்வுகளோடு ஒட்டிக் கொண்டது. ஏதேனும் மறு மொழி பேசி இருக்கலாம். எனினும் அவளிடம் வாதாடுவதற்கு மனம் விரும்பாததால், அமைதியாய் எழுந்து சென்றான்.

 

கூடத்தில் இருந்த ஆணி ஒன்றில் திறவுகோல் தொங்க விடப்பட்டு இருக்க, எடுத்துப் பூட்டைத் திறந்தான்.

 

“எவ்வளவு நேரம் வெளிய நிக்கிறது‍? என்ன செஞ்சிட்டு இருந்த?” என்றவாறே அவள் உள்ளே செல்ல, எதுவும் சொல்லத் தோன்றாது பின் தொடர்ந்தான்.

 

அறைக்குள் வந்தவள் அங்கிருந்த ஜன்னலைத் திறந்து வெளியில் காத்திருந்த தனது நண்பனிற்குக் கையசைத்து விடை கொடுத்தாள்‌. எதிர்வினையாய் நான்கு சக்கர வாகனத்தின் உள்ளிருந்த அவனும் கையை அசைத்துவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

 

“யார் அது.?”

 

“ஃப்ரெண்ட் விஜி. என்னை டிராப் பண்ணீட்டுப் போறாரு.”

 

“பதினோரு மணி வரைக்கும், என்னதான் செஞ்சீங்க?”

 

“எனக்கு மேரேஜ் ஆனதை அவங்கக்கிட்ட சொல்லலனு வருத்தப்பட்டாங்க. அதான், சின்ன கெட் டூ கெதர் மாதிரி அரேஞ்ச் பண்ணேன்‌‌.”

 

“கெட் டூ கெதரா? நம்ம மேரேஜுக்காகவா?”

 

“ஆமா விஜி!” என அவள் புன்னகைக்க, “மாப்பிள்ளை இல்லாம கல்யாணமா?”

 

புரியாமல் பார்த்தவள், “என்ன சொல்லுற நீ?”

 

“இதுதான் விஷயம்னு ஏன் என்கிட்டச் சொல்லல.”

 

“ப்ச்ச் சொல்லல. சொல்லணும்னு தோணல.” என்று அவள் உரைத்த பதிலில், எதிலோ தோற்றுப் போனது போலான உணர்வு விஜயனிற்கு. ஆடவனின் சுயமரியாதை, முதன் முறையாய் மனைவியிடம் அடிபட்டதாய் பிம்பம் தோன்றியது.

 

ஒரு பெருமூச்சை வெளியிட்டு, அவளை நிர்மலமாய் பார்த்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்