

அது ஒரு பரபரப்பான ஊரின் ரயில் நிலையம். மதுரை செல்லும் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிப்பு ஒலித்தது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள, நிலையத்துக்கு வெளியே உள்ள டீக்கடைக்குச் சென்றேன்.
கடையின் முன்புறம், சாலையோரத்தில் கைலி கட்டி நின்றுகொண்டிருந்த ஒருவன் என்னைக் கண்டு வணக்கம் சொன்னான்.
“தம்பி, நீங்க யாருன்னு தெரியலையே?” என்று கேட்டேன்.
“சார்… என் பேரு முருகேசன். உங்களை எனக்குத் தெரியும். முன்னாடி நான் வேலை பார்த்த மெக்கானிக் ஷாப்புல நீங்க சர்வீஸ் விடுவீங்க,” என்றான்.
அந்த நேரத்தில், ஒரு டூ-வீலரில் இருந்து நடுத்தர வயதான ஒரு பெண் இறங்கினார். கையில் பெரிய பை. அவளைப் பார்த்தவுடனே முருகேசன் சைகை காட்டி, மெதுவாக
“லவ்லி… லவ்லி…” என்று சொன்னான்.
எனக்கு எரிச்சல் ஏறியது.
“என்ன தம்பி இது?” என்று கேட்டேன்.
“சார்… அந்தம்மா எங்க முன்னாள் ஓனரோட ஆள்… லலிதாஞ்சலி கம்பெனில வேலை பார்த்தவங்க…” என்றான்.
அதை கேட்டவுடனே கோபம் உடம்புக்குள் ஏறியது.
“ரோட்டுல போற பெண்களைப் பற்றி இப்படி பேசக்கூடாதுன்னு தெரியாதா?” என்று கடிந்து கொண்டேன்.
முருகேசன் சிரிச்சான். அந்த சிரிப்புல அவமானமும், ஏமாற்றமும் கலந்திருந்தது.
“சார்… இப்ப அவன் எனக்கு ஓனர் இல்ல. அந்த லலிதாஞ்சலி கம்பெனியிலிருந்து எப்பவோ விலகி வந்துட்டேன்,” என்றான்.
அவன் பேச ஆரம்பித்ததும், அடக்கி வைத்திருந்த கசப்பு எல்லாம் ஒரே மூச்சுல வெளிவந்த மாதிரி இருந்தது.
“அவன்லாம் ஒரு ஓனரா சார்? வேலைக்காரனை மனுஷனாகவே பார்க்க மாட்டான். கெட்ட வார்த்தைல திட்டுவான்… வீட்டுப் பேச்சு எடுத்து வைவான்… யாரையும் ரொம்ப வருஷமா வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டான் சார்… ஏன்னா சம்பளம் கூடிரும்ல. அதுக்குள்ள வேலைக்காரனை அவனாவே போற அளவுக்கு டார்ச்சர் பண்ணுவான். இல்லன்னா நேரடியா விரட்டிவிடுவான். லலிதாஞ்சலி கம்பெனில இந்த மாதிரி வேலைய விட்டுட்டு என்னை மாதிரி போனவங்க வயித்தெரிச்சல் அவனை சும்மா விடாது. ஆமா சார்… இதுதான் ஓனரோட நல்ல மனசு… ஆனா… வெளியில பெரிய மனுஷன் மாதிரி சீன் போடுவான். என்னமோ ஊர நட்டம நிறுத்துறதுக்கே பொறந்தவன் மாதிரி பிலிம் காட்டுவான்.
ஊருக்கு எந்த அதிகாரி வந்தாலும் மொத ஆளா போயி நிப்பான். சேவை பண்ணுறானாம் சேவை… ஆனா கம்பெனிக்காக உழைக்கிறவனை மதிக்கிறதே கிடையாது.
நம்ம ஊரு மொதலாளிங்க எல்லாம் அவனைப் பார்த்து.. அவன் பப்ளிசிடிக்காக அலையிறத பார்த்து சிரிப்பா சிரிக்கிறாங்க சார்… இது தெரியாம ஓனரு பையன் காலரை தூக்கிட்டு திரியுறான்…”
அவன் பேச்சு குத்துக்குத்தாக விழுந்தது.
நான் இடையில் நிறுத்தினேன்.
“தம்பி… என்ன இருந்தாலும் அவர் உன் முன்னாள் முதலாளி. ஓனரு படுற கஷ்டம் உனக்கு தெரியாது. அவர் கொடுத்த சம்பளத்துலதான் உன் வீட்டுல அடுப்பு எரிந்திருக்கும். அந்த விசுவாசம் இல்லாம பேசாத,” என்றேன்.
முருகேசன் உடனே எதிர்த்தான்.
“அட போங்க சார்… நல்ல மொதலாளின்னா தலையில தூக்கி வைப்போம். இவிய்ங்க மாதிரி இருந்தா எப்படி?”
அந்த நேரத்தில், முன்னர் பார்த்த அந்த பெண் டீக்கடைக்கு வந்து பிஸ்கட் வாங்கினார். முருகேசன் உடனே வாயை மூடிக்கிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவள் சென்றதும் மீண்டும் பழைய குரல்
“லவ்லி… லவ்லி…”
“அது என்ன லவ்லி?” என்று கேட்டேன்.
அவன் கிண்டலா சிரிச்சான்.
“அது ஒரு லவ் ஸ்டோரி சார்… அந்தம்மா பேரு பத்மஜா ரோஜா. நீளமா இருக்கே… அதனால ஓனர் சுருக்கி ‘லவ்லி’ன்னு மெல்ல கூப்பிடுவான்.
அதை ஒருத்தன் கேட்டுட்டு கம்பெனி முழுக்க பரப்பிட்டான். அப்புறம் எல்லாருக்கும் அவங்க லவ்லிதான்…”
எனக்கு உடனே வெறுப்பு வந்தது.
“ஒரு பெண் வேலைக்கு வர்றது பெரிய விஷயம். குடும்பத்துல இருக்கவங்க நம்பி அனுப்புறாங்க. இப்படி பேசக் கூடாது,” என்றேன்.
முருகேசன் இந்த முறை சிரிக்கவில்லை. நேராக கண்ணால் பார்த்தான்.
“சார்… ஓனருக்கும் குடும்பம் இருக்கு… அந்த லவ்லி மேடத்துக்கும் குடும்பம் இருக்கு.
ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்கு தெரியாம கசமுசா பண்ணிட்டு இருக்காங்க.
அதை நேர்ல பார்த்துத்தான் சொல்லணும்னு இல்ல… அவங்க நடந்துக்கிறத பார்த்தாலே தெரியும். நான் தப்பா பேசுறதுக்காக பேசல… கம்பெனில எல்லாரும் பேசுறதைதான் சொல்றேன்…”
அவன் இன்னும் நெருங்கி, சன்னமான குரலில்,
“ஓனருக்கு லவ்லி மேடம் ஒருத்தரோட மட்டும் தொடர்பு இல்ல. இப்ப வேலை பார்க்கிற இன்னொரு பொண்ணுகிட்டயும் அதே மாதிரி தான்…”
“போதும்!” என்று நான் கடுமையாக நிறுத்தினேன்.
ஆனா அவன் விடவில்லை.
“சார்… கம்பெனிங்கிறது கோயில் மாதிரி. அத சுத்தமா வச்சிக்கணும். நம்மள ஒர்க்கர்ஸ் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறாங்கன்னு கூட தெரியாம இப்படி நடந்துக்கிட்டா…
அவன் என்ன ஓனரு?
அதே கம்பெனில இன்னொரு ஓனரு இருக்கான் சார்… அவன் வேற மாதிரி. கான்ட்ராக்ட்ல வேலை பார்க்க வர்றவங்கள கூட விடமாட்டான். எங்க வீட்லயும் பொம்பள புள்ளைங்க இருக்கு சார்..” என்று தழுதழுத்தான்.
அவன் சொன்ன வார்த்தைகள் கெட்டவையாக இருந்தாலும்… முழுக்க பொய்யா இல்லைன்னு மனசுக்குள் ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது.
என் முகத்தைப் பார்த்து இன்னொரு விவகாரத்தை அவன் சொல்ல முயற்சித்தபோது, நான் சத்தம் போட்டேன்
“டேய் முருகேசா… நீ மொதல்ல திருந்து!”
அவன் சிரிச்சான்.
“சார்… நான் சொன்னது நிஜக் கதை. நீங்க நல்லா எழுதுவீங்கள்ல… உண்மையை மட்டும் எழுதுங்க…” என்று சொல்லிவிட்டு கை அசைத்துவிட்டு போனான்.
ரயிலில் ஏறி அமர்ந்தபோது, மனம் அமைதியாக இருக்கவில்லை. முருகேசன் பேச்சு மனதுக்கு உள்ளே எங்கோ மாட்டிக்கொண்டது.
ஒரு நிறுவனம் என்பது சும்மா கட்டிடம் இல்ல. அது நம்பிக்கையும், மரியாதையும் சேர்ந்த இடம்.
அதில் முதலாளி ஆனாலும், தொழிலாளி ஆனாலும்… யாராக இருந்தாலும், பிறர் கண்களில் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கணும்.
ஏன்னா…
ஒரு முதலாளியின் சந்தேகத்துக்கிடமான நடத்தை, அவரை மட்டும் அல்ல…
முழு நிறுவனத்தையே களங்கப்படுத்தும்.

