11 மாயோனின் மலரோவியம்

Loading

மாயோன் 11

கண்களில் இருள் சூழ அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தவள், உடனே தன்னை சுதாரித்து கொண்டு, அங்கிருந்த சன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு சன்னல் மீது ஏறி நின்றுகொண்டாள்…

பாம்போ! அவளை  தலையை தூக்கி பார்த்து, படமெடுத்து ஆடியது… அதனை கண்டு  மிரண்டு போனவள், ” அய்யோ காப்பாத்துங்க” என்று கத்தியபடியே சன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டவள், அதன் திண்டின் மீது கால்களை வைத்து சமாளித்து நின்று கொண்டாள்…

கால்கள் சிறிது கீழ் இறங்கினாலும் நாகம் தீண்டி விடும் என்ற நிலையில் தன் உயிரை கையில் பிடித்து கொண்டு கதறி கொண்டிருந்தாள் கீர்த்தி.

சிசிடீவி வழியே அவள் செயல் கண்டு மெல்ல புன்னகைத்தவன்… அமைதியாக அவளது அவஸ்தையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்…

அவனை உதவிக்கு அழைத்து அழைத்து, தொண்டை எல்லாம் வறண்டு போனது கீர்த்திக்கு…

ஒருகட்டத்தில் ” அம்மா… அம்மா…ம்மா ” என்று பேச முடியாமல் முனங்கி கொண்டிருந்தவள், பிடிமானம் இன்றி சன்னல் கம்பிகளின் மீது தலை சாய்த்து கொண்டாள்…

கம்பியை பிடித்திருந்த அவளது கைகள் இரண்டும் ரணமாய் தகிக்க… விழியோரம் கண்ணீர் வழிந்தது…

உடல் முழுவதும் சோர்வடைய, கண்களில் இருள் சூழ… மெல்ல மெல்ல அவளது கரம், சன்னல் கம்பிகளில் இருந்து தனது பிடியை தளர்த்தி கொண்டிருந்தது…

இப்போது அவள் பிடியை தளர்த்தி சற்று கீழ் இறங்கினாலும் நாகம் அவளை தீண்டி விடும்!

உடல் பலம் முழுவதும் இழந்து, உதவிக்கு அழைக்க கூட உதடு பிரிக்க முடியாமல் முற்றிலும் சுயநிலை இழந்து சன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவளது விரல்கள் மெல்ல மெல்ல சன்னல் கம்பிகளை விடுவிப்பதை பார்த்த விக்ரமன், உடனே அங்கிருந்து எழுந்து வாசல் நோக்கி வெளியே வந்தான்.

வெளியே வந்தவன், வெளியே நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணிடம் இருந்து கை குழந்தையை வாங்கி கொண்டு ” நான் சொல்லும் போது உள்ளே வாங்க ” என்று கூறி விட்டு மீண்டும் வீட்டிற்க்குள் நுழைந்தான்…

கீர்த்தி இருக்கும் அறைக்குள் இரண்டு கதவுகள் இருந்தன.. அதில் இருந்த இன்னொரு கதவின் வழியே குழந்தையுடன் உள்ளே நுழைந்தான் விக்ரமன்…

வலியுடன் இமைகளை பாதியாக திறந்தவள் எதிரில் அவனை கண்டதும்… எங்கு அவன் தன்னை தான் காக்க வந்து விட்டானோ என்று எண்ணி  இதழ்களில் வெளிப்படுத்த முடியாத புன்னகை அவள் மனதில் தோன்றிய நொடியே அது மறைந்தது.. அவன் செயல் கண்டு.

கைகுழந்தையுடன் உள்ளே வந்தவனை யோசனையாக பார்த்தவள், என்ன? என்று யோசிக்கும் முன்னே அவன் கையில் இருந்த குழந்தையை அந்த அறையின் தரையில் படுக்க போட்டவன்… அவளை பார்த்து இதழ் வளைத்து சிரித்தபடி நொடியில் அங்கிருந்து சென்றான்…

அவன் செயல் கண்டு ” ஐயோ என்ன பண்ணுறீங்க? அந்த குழந்தை” என்று அவள் பதற கூட நேரம் இல்லாமல் இருக்க…  தரையில் கிடந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் அரவம் உணர்ந்து கொண்டு, அந்த குழந்தையை தீண்ட பாம்பு தன் திசையை மாற்றி கொண்டது..

அதனை கண்டு பதறி போன கீர்த்தி குழந்தையை காப்பாத்தும் நோக்கத்தில் சன்னலின் மீதிருந்து குதித்தாள்…

பாம்பு குழந்தையை தீண்ட நெருங்கும் நேரத்தில் பதறி எழுந்தவள், எதையும் யோசிக்காமல் கிழே கிடந்த கம்பியை கையில் எடுத்தாள்…

கம்பியை கையில் எடுத்தவள் நொடியும் தாமதிக்காமல் அதனை கொண்டு பாம்பினை அடிக்க கை ஓங்க… சரியாக அறை கதவினை திறந்து கொண்டு உள்ளே வந்த விக்ரமன்… ” நிறுத்து ” என்று கூறவும், அவளது கைகள் அப்படியே காற்றில் நின்றது…

அவனை ஒரு நொடி திரும்பி பார்த்தவளின் கண்களில் பதட்டமும் கொலை வெறியும், கோபமும்  நிரம்பி இருந்ததே தவிர, கருணையோ, பரிதாபமோ துளி கூட இல்லை…

அதனை உணர்ந்து மனதிற்குள் புன்னகைத்து கொண்டவன், அவளை அமைதியா எதிர் நோக்க… அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்…

அப்போது திடீரென ஏதோ ஒன்று தனது காலில் உரசுவதை உணர்ந்தவள், கீழே குனிந்து பார்க்க, அந்த நாகமோ அவளது கால்களின் மீது  ஊர்ந்து கொண்டிருந்தது.   அதனை கண்டு பயத்தில் அலறிய  கீர்த்தி, தாவி குதித்து அருகில் இருந்த விக்ரமனின் கழுத்தில் கைகளை கோர்த்துக்கொண்டு  தொங்கி கொண்டவள் “அய்யோ அந்த குழந்தையை காப்பாத்துங்க ப்ளீஸ் ” என்று கதறி கண்ணீர் வடித்தாள்.

 

கீர்த்தியை ஒருகையால் தாங்கி பிடித்தபடியே ” லட்சுமி ” என்று அழைத்தான் விக்ரமன்… அவன் குரல் கேட்டு,  அந்த பக்க கதவின் வழியே உள்ளே வந்த அந்த குழந்தையின் தாய்..  கீழே  அழுதுக்கொண்டிருந்த குழந்தையை தூக்கி தன் மார்போடு அணைத்து கொண்டாள்…

” நீங்க போகலாம் ” என்று விக்ரமன் அந்த பெண்ணை பாரத்து கை அசைக்க…  அந்த பெண்ணும் அங்கிருந்து சென்றாள்…

இதையெல்லாம் உணரும் நிலையில் இல்லாத கீர்த்தி அவன் கழுத்தில் முகம் புதைத்து நடுங்கி கொண்டிருந்தாள்…

அவளோ பயம் கொண்டு வேக வேகமாக மூச்சினை இழுத்து விட… அவளது சூடான மூச்சு காற்றினை கழுத்தில் உணர்ந்தவனுக்கு தான், தன் உணர்வுகளை கட்டுப்படுத்த வழியின்றி போனது…

அவளோ இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் கங்காரு குட்டு போல அவனது கழுத்தை பிடித்து, தொங்கி கொண்டிருந்தாள்…

தன்னை ஒட்டி கொண்டிருப்பவளது இடையில் கைகொடுத்து தன்னோடு நெருக்கி கொண்டான்… மெல்ல இதழ் கொண்டு அவளது காது மடலை வருடியபடி ” கருணையின் மறு உருவமான இந்த காலத்து அன்னை தெராசா பேத்திக்கு என்ன ஆச்சு ? ” என்று நக்கல் குரலில் கேட்டான்…

அதனை கேட்டு அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்து முறைத்தவள்.. கீழே குனிந்து பாம்பு இருக்கிறதா என்று பார்க்க…

அந்த பாம்போ விக்ரமனின் காலை சுற்றி கொண்டு வந்தது… ” அய்யோ உங்க காலில் பாம்பு ” என்றவள் விக்ரமனின் கழுத்தை பிடித்து உலுக்க… ” கொண்ணுடாதடி கிறுக்கி, பாம்பு என் காலில தானே இருக்கு, எதுக்கு இப்படி உயிர் போற மாதிரி காதுக்குள்ள வந்து கத்துற” என்ற விக்ரமன் ஒரு கையில் அவளை பிடித்து கொண்டு கீழே குனிந்து அந்த பாம்பை மறு கையால் எடுத்தான்…

கீர்த்தியின் முகத்துக்கு வெகு அருகில் அந்த நாகத்தின் முகம்… அதை கண்டு அலறியவள் மீண்டும் விக்ரமனின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டாள்…

” பாவம் அது உன்னை என்ன பண்ணிச்சு… ஏன் இப்படி மூஞ்சை திருப்புற, வருத்தப்படும் இல்லை அது  ” என்று விக்ரமன் மீண்டும் கிண்டல் செய்ய…

” ப்ளீஸ் அதை கீழே விடுங்க…  ” என்று துள்ளி கொண்டிருந்தாள் கீர்த்தி…

” சரி சரி ” என்றவன் அங்கே வெளியே நின்றிருந்த ஒருவனை அழைத்து அந்த பாம்பினை அவன் கையில் கொடுத்து அனுப்பினான்…

இன்னும் பயத்தில் தன் கழுத்தில் முகம் புதைத்து கொண்டிருந்த கீர்த்தியை பார்த்து மெல்ல இதழ் பிரித்து சிரித்தவன் ” மேடம்… பாம்பு போயிடுச்சு நீங்க கொஞ்சம் கீழே இறங்கினால் நம்ம ப்ரீயா பேசலாம்… ” என்று அவன் கூறிய பின்பு தான், தன் செயல் உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்து கொண்டவள்… ” சாரி ” என்று கூறி அவன் மீதிருந்து கீழே இறங்கி நின்றாள்…

கீழே இறங்கி அந்த அறையை சுற்றி பார்த்தவள்… பாம்பும், குழந்தையும் அங்கு இல்லாமல் இருக்கவே அவனை நிமிர்ந்து பார்த்து ” அப்போ பாப்பா ” என்று கேட்க…

அவளை  குறும்பாக பார்த்தவன் ” வேணுமா? ” என்று கேட்க.. அவளோ புரியாமல் அவனது கண்களை பார்த்தபடி இருக்க… ” வேணுமாடி ” என்று மீண்டும் வசீகரமான குரலில் கேட்டான்.

” என்ன வேணுமா? ” என்று அவள் விவரம் அறியாமல் கேட்க…

” அதான் கேட்டியா பாப்பா வேணும்னு? ”

” ம்ம்ம்… எங்க  பாப்பா? ”

” நீ இப்போ ஓகே சொன்னால் பாப்பா வர பத்து மாசம் ஆகும் ” என்று அவளிடம் பேசிவிட்டு… ‘ சின்ன பொண்ணு கிட்ட என்னடா பேசுற ‘ என்று தனக்கு தானே திட்டி கொண்டவன்…

” சரி அதை விடு,  இப்போ எங்க போச்சு உங்க நியாயம் தர்மம்… பாவம், பரிதாபம் எல்லாம் ” என்று கைகளை கட்டிக்கொண்டு விக்ரமன் கேட்க…

“இதை எல்லாம் புரியவைக்க தான் இப்படி என்னை கொல்ல பாத்தீங்களா? ” என்று கேட்டு கண்களை உருட்டு உருட்டி அவனை கோவமாக பார்த்தாள் கீர்த்தி…

” என்ன பண்ணுறது உனக்கு தான் எதுவும் சாதாரணமா சொன்னால் புரிய மாட்டிங்குதே ”

” ரொம்ப சந்தோஷம்… ஆனால் நான் ஒன்னும் எனக்காக அந்த பாம்பை கொல்ல பார்க்கல… அது அந்த குழந்தையை கடிச்சிட கூடாதுன்னு தான் அதை அடிக்க முயற்சி பண்ணேன்… அப்போ எனக்கு நீங்க சொன்ன இந்த கருணை, பரிதாபம் எதுவுமே என் கண்ணுக்கு தெரியல.. எனக்கு தெரிஞ்சது எல்லாம் அந்த குழந்தையை காப்பாத்தனும் அவ்ளோ தான் ”

” குட் அதையே தான் நானும் சொல்லுறேன்.. நம்ம சூழ்நிலை தான் நம்மல நல்லவனவோ, கெட்டவனாவோ இந்த உலகத்துக்கு காட்டுமே தவிர… அடிப்படையில் இங்க எவனும் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை… எல்லாரும் சூழ்நிலை கைதிகள் மட்டும் தான்…

பிரச்சனையின்னு வரும் போது அதை எதிர்த்து செயல் படுற மனிதர்கள் ஒவ்வொரு விதம், அதில் ஒன்னு,  தனக்கு ஒரு பிரச்சனை வரும் போது அதை சரி பண்ண தெரியாமல் அதை விட்டு தப்பிச்சா போதும்ன்னு நினைக்கிறது… நீ இப்போ பாம்பை பார்த்த உடனே சன்னல் கம்பியில ஏறி தப்பிக்க பார்த்தியே அது மாதிரி… ஆனால் அது அந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வா இருக்காது…

இன்னொன்னு, இன்னும் சிலர் இருக்காங்க தனக்கு பிரச்சனை வந்தால் கூட அதை சுலபமா கடந்து போயிடுவாங்க… ஆனால் அதுவே நமக்கு வேண்டியவங்களுக்கோ, இல்லை நம்மளைவிட எளியோருக்கு ஒரு பிரச்சனை அப்படின்னா… அந்த பிரச்சனையை எதிர்த்து நிற்பாங்க… இதோ இப்போ அந்த குழைந்தைக்காக நீ பாம்பை கொல்ல துணிந்தியே அப்படி… ” என்று கூறியவன் அவளை ஆழ்ந்து பார்க்க… அவளோ பதில் பேசாமல் தலை குனிந்து கொண்டாள்…

” ம்ம்ம் சரி உன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு… ஒரு அறையில் உன்னையும் சேர்த்து  101 பேர்  இருக்காங்க… அதில் உன்னை தவிர எல்லாரும் ஊனமுற்றவர்கள்… அப்போ அந்த அறைக்குள்ள சைக்கோ ஒருத்தன் கத்தியோட உங்க எல்லாரையும் கொல்ல வரான்… அந்த ஊனமுற்றவர்கள் எல்லாரும் அவனை எதிர்த்து எதுவும் பண்ண முடியாத நிலைமையில் இருக்காங்க…  ஆனால் உன்னால அவனை எதிர்த்து தாக்க முடியும்…  அப்போ உன் கண்ணுக்கு அங்க ஒரு கண்ணாடி துண்டு தெரியுது… நீ நினைச்சா அதை வச்சு அவனை கொன்னுட்டு அங்க இருக்குற நூறு பேரையும் காப்பாத்தலாம்… அப்போ அந்த இடத்தில் நீ இருந்தால் உன்னோட முடிவு என்னவா இருக்கும்? ஒன்னு நீ அவனை கொன்னு அந்த நூறு பேரையும் காப்பாத்தனும்… ஆனால் அவனை கொல்லுறதால உனக்கு ஜெயில் தண்டனை கூட கிடைக்கலாம்… அதையும் மீறி நீ அந்த நூறு பேரை காப்பாத்துனும்னு நினைப்பியா? இல்லை… எல்லோரோட சேர்ந்து நீயும் அங்கேயே சாகணும்னு முடிவு எடுப்பியா? ” என்று கேட்டவன் அவளது பதிலை எதிர்பார்க்க… அவளோ கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள்,பின் ஏதோ கூற வாய் எடுக்கவும்… கை நீட்டி தடுத்தவன்.

” இப்போ அந்த நூறு ஊனமுற்றவர்களும் உன்கிட்ட காப்பாத்த சொல்லி உதவி கேக்குறாங்க  என்ன பண்ணுவ ? ” என்று அவன் அடுத்த கேள்வி கேட்க… கண்களை மூடி திறந்தவள்…

” எனக்கு தெரியல ” என்று கூறி அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து விட்டாள்..

அவள் அருகில் சென்று அமர்ந்த விக்ரமன் ” கண்டிப்பா நீ அவனை கொன்னு அந்த நூறு பேரையும் காப்பாத்தி இருப்ப… இதோ இப்போ அந்த குழந்தை விஷயத்தில் நடந்தது போல..  ” என்று அவன் கூற கீர்த்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…

 

” பிறர் உயிருக்காக நாம செய்யுற செயல்… சில சமயம் தண்டனைக்கு உரியதாக கூட இருக்கலாம்.. ஆனால் அது ஒரு நாளும் தவறாகாது… குற்றத்துக்கு கொடுக்கப்படும் தண்டனை கொலை ஆகாது… நூறு பேர் இருக்குற ஒரு அறைக்குள்ள ஒரு விஷ பாம்பு வந்திடுச்சின்னா..  அந்த நூறு பேர் உயிருக்காக அந்த பாம்பை கொல்லணுமே தவிர அது கிட்ட பாவம் பார்த்து கெஞ்சிட்டு இருக்க கூடாது… அப்படி பாவம் பார்த்தால் அது நம்மலயும் கொன்னுட்டு அங்கு இருக்குற நூறு பேரையும் கொன்னுடும்…புரியுதா? கருணையோ? அக்கரையோ?  எல்லார் கிட்டயும் எல்லாம் நேரமும் காட்ட முடியாது…  ”

அவன் கூறியதில் ஒன்று கூட அவளுக்கு புரியவில்லை இருந்தும் தலையை தலையை ஆட்டினாள்… ( பின்ன புரியல என்று சொன்னால் மறுபடியும் கிளாஸ் எடுப்பானே… அதுக்கு பயந்து தான் குழந்தை தலையை ஆட்டிடுச்சு)

 

” நீங்க எனக்கு ஏதோ ஒரு விஷயத்தை புரிய வைக்க தான் இதை எல்லாம் பண்ணுறீங்க சரி..  ஆனால் இந்த சன்னல் இல்லாமல் இருந்து அந்த பாம்பு என்னை கடிச்சி இருந்தால் நான் இந்நேரம்  செத்து போய் இருப்பேன்… அப்படியே நான் தப்பிச்சாலும் அந்த குழந்தை ” என்றவளின் கரத்தை பற்றி மேலே எழுப்பியவன்… அறையின் அந்த பக்கம் இருந்த இன்னொரு கதவை கைகாட்டி ” அந்த கதவை திறந்து வெளியே போ ” என்று கூறினான்…

அவளோ அவனை சலிப்பாக பார்த்தபடி கதவினை நோக்கி செல்ல… இடையில் ஏதோ ஒன்று தடுத்தது… அதில் கைகளை வைத்து பார்த்தவள் அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்க்க… ” அந்த பக்க கதவுக்கும் இந்த பக்க கதவுக்கு இடையில் கண்ணாடி  இருக்கு… சோ அந்த பாம்பால அந்த குழந்தை பக்கத்துல கூட போக முடியாது…  ” என்று நிதானமாக கூறினான்..

” அப்போ அந்த அந்த பாம்பு என்னை கடிச்சி இருந்தால்? ” என்று அவள் அதற்க்கும் முகம் சுளித்து கோவபட… அவளை முறைத்து பார்த்தவன்.. ” அது சினிமாக்கு யூஸ் பண்ணுற பாம்புடி… அதால கடிக்க முடியாது… வாய் ஸ்டிச் பண்ணி இருப்பாங்க ” என்று கூற..

” இது பாவம் இல்லையா? ஒரு வாய் இல்லாதா ஜீவனை இப்படியா கொடுமை படுத்துறது ”

” மறுபடியும் ஆரம்பிக்காதா!  அப்புறம் பாவம் பார்க்காமல் உண்மையான விஷ பாம்பை எடுத்துட்டு வந்து கடிக்க வைச்சிடுவேன் ” என்று கூறியவன் கோவமாக அங்கிருந்து வெளியே சென்றான்..

அவன் வெளியே சென்ற பிறகு மெல்ல தன் அறைக்குள் வந்த கீர்த்திக்கு பதட்டம் குறையவே இல்லை… எங்கு பார்த்தாலும் அந்த பாம்பு நிற்பதை போலவே இருக்க… அப்படியே கண்களை மூடி கொண்டு மெத்தையில் சுருண்டு படுத்து கொண்டாள்…

 

குளித்து முடித்து வந்த டையனிங் டேபிளில் அமர்ந்த விக்ரமன் சாப்பிட தொடங்கும் முன் ” அவள் சாப்பிட்டாளா? தெரியலையே ” என்று  கீர்த்தியை பற்றி யோசித்தவன்,நேராக அவள் அறைக்குள் நுழைந்தான்…

” ஓய் சாப்பிட்டியா?  ” என்றவன் அவள் அருகில் சென்று அமர… கீர்த்தியின் உடல் நடுங்கி கொண்டிருந்தது…

அதனை புருவம் சுருக்கி பார்த்தவன் ” ஏய் என்ன ஆச்சு ” என்று கேட்டுக்கொண்டே அவளை தொட்டு பார்க்க… அவளது உடல் அனலாக கொதித்தது…

‘பயத்துல பீவர் வந்துட்டு போல, இவளை வச்சிட்டு என்ன தான் பண்ணுறது ‘  என்றவன் அவளை மெல்ல மெத்தையில் இருந்து தூக்கி, கட்டிலின் விளிம்பில் சாய்த்து அமர வைத்தான்…

அவளோ கண்களை மெல்ல திறந்தவள் அவனது கையை தட்டி விட்டு. ” எல்லாம் உங்களால தான் ” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…

” சரி என்னால தான்,  நான் இல்லன்னு சொல்லலயே சாப்பிட்டியா? ” என்றவனை முறைத்து பார்த்தவள் முகத்தை திருப்பி கொள்ள…

அவளது நாடியை பிடித்து திருப்பி தன் முகம் பார்க்க வைத்தவன்  ” உன்கிட்ட தான்டி கேக்குறேன் சாப்பிட்டியா? ” என்று கேட்கவும் அவளோ ‘இல்லை’ என்று குறுக்கும் மறுக்கும் தலையை ஆட்ட… எழுந்து வெளியே வந்தவன் சூடாக பால் காய்ச்சி அவளுக்காக எடுத்து வந்தான்…

” இதை குடி ” என்று பால் டம்ளரை நீட்டியவன், அவள் அருகில் அமர… அவளோ அவனை முறைத்து விட்டு நகர்ந்து அமர்ந்தாள்…

அதனை பார்த்து  இன்னும் நன்றாக அவளை இடித்து கொண்டு அமர்ந்தவன்.. மீண்டும் அவள் நகர போகும் முன் அவளது இடையில் கை கொடுத்து தன் பக்கம் இழுத்தான்…

” நீ என்னை விட்டு எவ்ளோ தூரம் நகர்ந்து போகணும்னு நினைக்கிறியோ அதை விட பத்து மடங்கு உன்னை நான் நெருங்கி வருவேன்… என் நெருக்கத்தை நீ விரும்பினால் தள்ளி போ…  ” என்றவன் அவளது கண்களை காதலோடு பார்த்தான் என்றால் அவளோ அவனை புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்…

அவன் செயல் கண்டு எப்போது அடிப்பான், எப்போது அணைப்பான் என்று புரியாமல் கீர்த்தி தான் குழம்பி தவித்தாள்…

” இதை குடி ” என்றவனிடம் ” மாட்டேன் ” என்றாள் கீர்த்தி…

” ஏன் ? பீவர் சரி ஆகணும்னு எண்ணம் இல்லையா?  ”

” இல்லை ”

” விளையாடாத எனக்கு நாளைக்கு காலையில் சீக்கிரமாவே ஷூட்டிங் போகணும்… உன்கிட்ட ஆர்க்கியு பண்ண எனக்கு விருப்பம் இல்லை… குடி ”

” அப்போ இன்னிக்கு என்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு நீங்க மன்னிப்பு கேளுங்க அப்போ தான் குடிப்பேன் ” என்றவள் முகத்தை திருப்பி கொள்ள…

” மன்னிப்பு கேக்குற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணல ”

” அப்போ அந்த பாம்பை விட்டு என்னை கொல்ல பார்த்தது தப்பு இல்லையா? ”

” அது  நீ பேசினதுக்கான தண்டனை… டம்மி பாம்புக்கு இவ்ளோ டிராமா… ”

” அப்போ இந்த பீவர் கூட எனக்கு தண்டனை தான்… எனக்கு ஒன்னும் வேண்டாம் ” என்றவள் படுத்து கொள்ள பார்க்க… அவளது கழுத்தில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் ” ரொம்ப கொழுப்பு டி உனக்கு ” என்று அவளை திட்டியபடி… அவளது தாடையை பற்றி பாலை குடிக்க வைத்தான்…

அவன் வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கவும்… கீர்த்தி இரும தொடங்கினாள்… அதனை பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன், எழுந்து வந்து தன் கபோர்டை திறந்து அதில் இருந்து ஒரு மெடிசன் பாக்ஸை எடுத்துகொண்டு மீண்டும் அவளிடம் வந்தான்…

கீர்த்தியோ அவனை முறைத்து பார்க்க… ” என்னடி ” என்று புருவம் உயர்த்தியவன், அந்த மெடிசன் பாக்ஸில் இருந்து ஒரு ஊசியை எடுத்து மருந்துகளை அதில் நிரப்பி, கீர்த்திக்கு போட வந்தான்…

அதை பார்த்து பயந்து நகர்ந்தவள் ” ஊசி போட்டு என்னை கொல்ல பாக்குறீங்களா? ” என்று கேட்கவும்… கோவம் கொண்டவன், நொடி பொழுதில் ஊசியை  அவளது கழுத்துக்கு கொண்டு போனான்…

” என்ன சொன்ன ? ” என்றவன் அவளை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்க்க…

” ஒன்னும் சொல்லல… முதலில் கழுத்தில் இருந்து ஊசியை எடுங்க ” என்று பயந்தபடியே  கூறினாள்.

அதன் பிறகு அவளது கழுத்து பக்கத்தில் இருந்த ஊசியை எடுத்தவன், அவளது கை ஆடையை மேலே உயர்த்தி ஊசி போட பார்க்க… அது இறுக்கமாக இருக்கவும் ” ட்ரெஸ் லூசா போட மாட்டியா ? இவ்ளோ டைட்டா போட்டால் எப்படி இன்ஜெக்சன் போட முடியும் ” அவன் வாங்கி கொடுத்த ஆடை தான் என்றாலும் அதற்கும் அவளையே திட்டினான்…

அவளோ சிறுபிள்ளை போல உதட்டை பிதுக்கி கொண்டு அழ தயாராகவும் ” ஒன்னு ஓ ன்னு அழு..  இல்லை பே ன்னு முழி ” என்று மீண்டும் திட்டி விட்டு அவளது ஒருபக்க  ஆடையை தோள்பட்டை  வழியாக  கீழே  இழுக்க பார்க்கவும், பெண்ணவளோ பதறி போய் அவனது கையை பிடித்து கொண்டாள்…

அவளது கையை கோவத்துடன் பார்த்தவன் ” கையை எடு ” என்று கூறவும்,

” எதுக்கு சும்மா சும்மா என்னை திட்டிகிட்டே இருக்கீங்க ” என்றவள் அழ தொடங்கினாள்.

” ப்ச் எதுக்கு எடுத்தாலும் அழுது அழுது சாவடிக்காதடி ” என்றவன் அவள் செயலை கண்டு கொள்ளலாம் ஆடையை தோள்பட்டை வழியே கீழிறக்கி கையில் ஊசியை போட்டு விட்டு ” தூங்கு ” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டான்… கீர்த்தியோ கண்ணீருடன் உடலை குறுக்கி மெத்தையில்  படுத்துக்கொண்டாள் …

*****

இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்து,  மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தான் மகிழன்…

தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தவன் அது மருத்துமனை இல்லை என்று கண்டு கொண்டு… மெல்ல எழும்ப முயற்சிக்கவும், அவனது நெஞ்சில் வலியை உணர்ந்து ” ஆஹ் ” என்று  குண்டடி பட்டு காயம் ஆன இடது பக்க மார்பை பிடித்து கொண்டான்…

அப்போது சரியாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த  சத்யனை கண்ட மகிழன் ” நீயா? ” என்று வலியில் முகம் சுருக்கி கேட்க…

” நானே தான்டா நல்லவனே கண் முழிச்சிட்ட போல  ” என்று கூறி அவன் அருகில் வரவும் அவனது சட்டையை வலது கை கொண்டு இழுத்து பிடித்த மகிழன் ” எங்க நந்தினி எங்கடா அவளை என்ன பண்ண ? ” என்று கேட்க…

அவன் செயலில் கோவம் கொண்டு திமிறியவன் ” கையை எடுடா ” என்று கூற, மகிழனோ இன்னும் அவனது சட்டையை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்தான்..

” எங்க நந்தினி  ஒரு அப்பாவிடா அவளை போய் காயப்படுத்த உங்களுக்கு எப்படிடா மனசு வந்தது. ”

மகிழன் நந்தினியை அப்பாவி என்று கூறவும் கோவம் கொண்டு அவனது கையை தட்டி விட்ட சத்யன் ” யாரு அவள் அப்பாவியா?  அந்த அப்பாவி செய்த காரியம் மட்டும் உனக்கு தெரிஞ்சால் நீயே அவளை வெட்டி போட்டுடுவடா ”

“அப்படி அவள் என்ன செய்தா? எங்க நந்தினி கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டாள்” என்று கூறிய மகிழனை அனல் தெறிக்க பார்த்தவன்…  மகிழனது சட்டையை பிடித்து தரதரவென  இழுத்து கொண்டுவந்து வர்ஷாவின் அறைக்குள் நுழைந்தான் சத்யன்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்