
கண்களை சுருக்கிக் கொண்டு, தன் மென்மையான இரு கைகளையும் ஒன்றாக குவித்தபடி நின்றிருந்தவளின் குதிரைவால் முடி இங்கும் அங்கும் அசைந்தாடிக் கொண்டிருக்க, பெண்ணவளின் இதழ்களோ, “ஃபர்ஸ்ட் மார்க் கடவுளே… ஃபர்ஸ்ட் மார்க் கடவுளே” என்று அர்ச்சனை போல முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சற்று நேரத்தில் வரவிருக்க, ஆவலோடு காத்திருந்தாள் பதினைந்து வயது பாவையான மதுவர்ணிகா. ஆர்ப்பாட்டமில்லாத அழகும், அறிவும் கொண்ட பெண். வீட்டிலிருப்பதைக் காட்டிலும் பள்ளியில் இருப்பதை பெரிதும் விரும்புபவள் தான் மது. இன்று எப்படியாவது முதல் மதிப்பெண் எடுத்துவிட வேண்டும் என்று துடிக்க காரணம் இல்லாமல் இல்லை. எடுத்தால் மட்டுமே இந்த பள்ளியினைவிட்டும் தன் நண்பர்களை விட்டும் பிரியாமல் இருக்க முடியும் என்பதே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கண்களை மூடி வேண்டியவளது தோளினை உலுக்கினாள் மதுவின் தோழி வைஷ்ணவி. அவளது தொடுகையில் கண்களை திறந்தவள் பெரும் ஆவலோடு வைஷ்ணவியை பார்த்தாள்.
“ரிசல்ட் வந்திடுச்சா?” உற்சாகமும், பதட்டமும் நிறைந்த குரலில் கேட்பவளை சோகமே உருவான முகப்பாவனையில் வைஷ்ணவி காண, இவளுக்கும் சோகம் தொற்றிக் கொண்டது.
“என்னடி வைஷு?”
“வரு, அது வந்து… நீ தான் ஃபர்ஸ்ட் மார்க் டி.” என்று கடைசி வார்த்தைகளில் கூச்சலிட்டு குதித்தபடி பெண்ணவள் கூற மதுவின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.
கண்களில் ஆனந்த கண்ணீர் நிரம்ப, நின்றவளை பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி, பிற ஆசிரியர் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்க திக்குமுக்காடி போனாள் பெண். அன்று அவளடையாத உவகையினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டை அடைந்தவள் உற்சாக குரலில் தாயை அழைக்க, அன்னை பிரபாவதியோ, தன் சக தோழிகளோடு உரையாடிக் கொண்டிருந்தார்.
“மாம்… மாம்… ஒரு ஹாப்பி நியூஸ்.” என்று தாயிடம் ஓடி வர,
“வருணி, என்ன பழக்கம் ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருக்கேன்ல. இப்படி குறுக்க ஓடி வர. முதல்ல பிரஷ் ஆகிட்டு வா போ.”
“மா… நான் சொல்லப் போற விசயம் கேட்டால் சந்தோசப்படுவீங்க மாம்.”
“எதுனாலும் அப்புறம் சொல்லுடா. போ போய் பிரஷ் ஆகு.” என்றவர் தோழிகளிடம் பேசத் தொடங்கினார்.
அவரது சொல்லில் மதுவின் முகமே வாடியது. என்றும் தன்னிடமும், தம்பியிடமும் சற்று தள்ளியே இருக்கும் அன்னை புதிது அல்லவே. இருந்தும் வருத்தம் தான் இந்த சிறியவளுக்கு. வேண்டா வெறுப்பாக அறைக்கு சென்றவள் தனது டெடியை பார்த்தபடி,
“உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்கேன். என் டீச்சர்ஸ் எல்லாம் விஷ் பண்ணாங்க. ஆனால் மாம்…” தயங்கியவள் பின், “எனக்கு தெரியும். அம்மாக்கு தெரிஞ்சா சந்தோசப்படுவாங்க.” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். அதன் பின்னர் தயாராகி கீழே வந்தவள் அன்னையைக் காண ஓடிவர, அவர் எப்போதோ தன் தோழிகளுடன் வெளியே சென்று விட்டார் என்ற செய்தியே அவளை அடைந்தது.
அப்போது நீச்சல் வகுப்பு முடிந்து வந்த உமாவோ, தன் அக்காவிடம் மதிப்பெண் பற்றி விசாரிக்க, தன் தம்பியிடம் புன்னகையோடு உரைத்தாள் மது.
“வாழ்த்துக்கள் வருணி. அப்போ இதே ஸ்கூல் தான். அப்படி தானே.”
“ஆமாடா உமா. இனி அம்மா வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க.” என்று மகிழ்ச்சி பொங்க உரைத்தாள்.
அம்மா என்று சொல்ல தான் அவளுக்குமே பிடித்திருந்தது. ஆனால் பிரபாவதியோ தன்னை மாம் என்று மற்றவர் முன்பு அழைக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்தியிருந்ததால் அவ்வாறு உரைக்கிறாள் மது.
அதன் பின் நேரம் செல்ல, தாமதமாகவே வீடு வந்தார் பிரபாவதி. அவருக்காக காத்திருந்தவளோ, “ம்மா…” என்று ஆவலோடு செல்ல,
“தூங்கலையா வருணி.” என்று அவள் கன்னம் தொட்டு கேட்க, உமாபதியும் ஓடி கீழே வந்திருந்தான்.
“ம்மா… வருணி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்கா.” என்று உற்சாக குரலில் கூறினான் உமாபதி.
“அடடே வெரிகுட் வருணி குட்டி.” என்று வீட்டிற்குள் நுழையும் போதே பெருமையாக கூறியபடி வந்தார் தாமோதரன்.
தந்தையின் குரல் கேட்டதுமே வருணிக்கு மகிழ்ச்சி அதிகமானது. “அப்பா” என்றவள் அவரை தாவி அணைத்துக் கொண்டாள்.
“கங்கிராட்ஸ் வருணிமா.” என்று தன் பிள்ளையின் தலையை வருடிய பிரபாவதி தன் கணவனைப் பார்த்து, “ஏங்க ஊட்டில இருக்க கான்வென்ட்ல பிளஸ் 1 சேர்த்திடுவோம். அவ இப்போ படிக்குற ஸ்கூல் விட மச் பெட்டர் கோச்சிங்.” என்று புன்னகையுடன் கூறவும் மதுவின் முகம் வாடியது. ஏற்கனவே அவர் கூறியிருந்தது தான் இருந்தும் கேட்ட பொழுது வலிக்காமல் இல்லை.
“வேண்டாம் மாம். இங்கையே நான் நல்லா படிப்பேன். பாருங்க ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருக்கேன்”
“வருணி, நீ எவ்ளோ மார்க் எடுத்திருக்க?”
“மாம் 484.”
“அதுக்கு தான் சொல்றேன். நீ ஸ்டேட் லெவல் வரணும்டா. எல்லாம் உன் நல்லதுக்காக தான். சரி நீ போய் தூங்குடா.” என்றவர் அவளை தூங்க அனுப்பிவிட, மதுவின் முகமே வாடிவிட்டது.
தன்னைவிட குறைவாக மதிப்பெண் வாங்கிய தோழிகளின் வீடுகளிலே அத்தனை சந்தோசமாக பாயசம் செய்து தருவதும், உச்சி முகர்ந்து தங்களது மகள்களை பாராட்டுவதுமாக இருக்க, தன் வீட்டில் மட்டும் இதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவே இல்லையே? என்ற கவலை தான் முதலில் தோன்றியது.
பணமிருந்தும் அவள் வாழ்வு அவளுக்கு பிடிக்காமல் தான் இருந்தது. என்றுமே பிஸ்னஸில் மூழ்கியிருக்கும் தந்தை, ஆடம்பர செலவுகளும், தோழிகளோடு விமன்ஸ் கிளப் என்று நேரத்தை செலவிடும் அன்னையும், வீட்டிற்கு வந்தால் அறைக்குள்ளே முடங்கி கிடக்கும் இந்த சூழலும் அவள் மனதில் வெறுப்பை ஏற்படுத்த, அவள் மகிழ்ச்சியாக இருந்த ஒரே இடம் அவள் பள்ளி மட்டும் தான். தற்போது பள்ளியை மாற்றிவிட்டு செல்ல சொல்கிறார்களே என்ற கோபம் பெண்ணவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது.
ஏற்கனவே பிரபாவதிக்கு வருணி படிக்கும் பள்ளிக்கூடத்தை சுத்தமாக பிடிக்கவில்லை. அவருடைய தோழிகள் கூட தங்களது பிள்ளைகளை பெரிய பெரிய பள்ளிகளில் சேர்த்திருப்பதாக பெருமை பேச, எப்படியாவது பதினொன்றாவது வகுப்பு வேறு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். பிரபாவதி அவ்வாறு செய்துவிடக் கூடாது என்பதற்காகவே முதல் மதிப்பெண் எடுக்க போராடி படித்தாள் மதுவர்ணிகா. கடைசியில் முதல் மதிப்பெண் பெற்றும் அன்னை இவ்வாறு சொல்கிறாரே என்ற கவலை அவளை பெரிதும் தாக்கியிருந்தது.
விடுமுறை முடிந்ததும் முதல் வேளையாக மதுவை அவள் விருப்பமே இன்றி ஊட்டி கான்வென்டில் சேர்த்து விட்டிருந்தனர் மதுவின் பெற்றோர்கள். வசதியாகவே வளர்ந்தவளுக்கு விடுதியில் தங்கி படிக்கும் சூழல் சிரமமாக இருந்தாலும், பெற்றோரை விட்டு தனித்து இருப்பது ஒன்றும் புதிது அல்லவே. சில நேரம் அழுகையிலும், சில நேரம் தனிமையிலும் செல்லும் நாட்களில் அவளுக்கு தோழியாக கிடைத்தவள் தான் சைத்ரா. அதுவும் நேரடியாக அல்ல அதிரடியாக.
விடுதியில் தன்னறைக்குள் முடங்கியே கிடப்பாள் வர்ணிகா. அன்றொரு நாள் அவளது அறைக்கதவு தட்டப்பட்டது. “யாரு?” என்று தயங்கியபடியே கதவை திறந்தாள். வெளியே பார்த்தால் யாரும் இல்லாது இருக்க, மீண்டும் கதவை அடைத்து தன் அறைக்குள் வந்தாள். மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட இம்முறை பயந்து தான் போனாள் மது.
“யாரா இருந்தாலும் இப்படி பண்ணாதீங்க? நான் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்.” என்று உள்ளிருந்தபடி இவள் கூற சத்தம் அடங்கியிருந்தது. இப்படியே அடுத்தடுத்த நாள் செல்ல, இதே போல் வேறு ஒருத்திக்கும் நடக்க, அவள் வார்டனிடம் கூறியிருந்தாள். வார்டனும் அது யார் என்று விசாரித்து எச்சரிக்கை விடுத்திருக்க, இதற்கு காரணம் மது தான் என்று நினைத்திருந்தது அந்த தொந்தரவு செய்யும் கும்பல்.
அந்த கும்பலின் தளபதி பியூட்டி க்யூன் மாயா. அவளுக்கு அவளே வைத்த புனைப் பெயர் அது. என்றுமே இப்படி தான் மற்றவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொந்தரவு செய்தபடி இருக்கும் இவர்களது குழு.
உதாரணமாக தண்ணீரை அடைத்து வைப்பது, மற்றவர்களது பொருட்களை திருடுவது, தனியாக மாட்டுபவர்களை கேலி செய்வது என ஏதோ ஒன்றாவது செய்திடாமல் இருக்க மாட்டார்கள். யாருமே இவர்களுக்கு பயந்து புகார் தெரிவிக்காமல் இருக்க, இன்று வார்டனிடம் புகார் சென்றிருக்க காரணம் நிச்சயம் மதுவாக இருக்கும் என்று நினைத்த மாயாவும் அவளது குழுவும், மதுவை தனியாக சுற்றி வளைத்தது மட்டுமின்றி அவளை மிரட்டத் தொடங்கினர்.
“எதுக்கு இப்படி பண்றீங்க. வழி விடுங்க.” என்றவள் நகரப் பார்க்க, அவளது இடையை கிள்ளி விளையாடினர் பெண்கள் நால்வரும். அவர்களது செயலை வெறுத்தவள், “ச்சீ விடுங்க.” என்று கத்தி கூச்சலிட,
“எவ்வளவு தைரியம் இருந்தால் எங்களையே மாட்டிவிட பார்ப்ப? நான் யார் தெரியுமா? வாங்கடி நம்ம யாருனு இவளுக்கு காட்டுவோம்.” என்று மாயா கைகளை மடக்கிக் கொண்டு அவளை நோக்கிச் செல்ல, அவள் பின்னே மூவரும் சென்றனர்.
“நீங்க யாரா வேணாலும் இருங்க. நீங்க எல்லாரும் லூசா? எதுக்கு பைத்தியம் மாதிரி பண்றீங்க?”
“மாயா, உன்னையவே பைத்தியம்னு சொல்றா பாரு. இவளுக்கு நீ யாருனு காட்டு மாயா.” மற்றவர்கள் கூற, மதுவோ புரியாது விழித்தாள்.
“செஞ்சுட வேண்டியது தான் வெப்பென்ஸ் ப்ளீஸ்.” என்றவள் சில முட்டைகளை வாங்கி மதுவின் மீது அடிக்க, முட்டைவாடையில் தவித்து போனவள் மிரண்டு குதித்தாள்.
“அடுத்த வெப்பென்ஸ் ப்ளீஸ்” என்று கத்திரியை வாங்கியவள் அவளது கூந்தலை வெட்டிவிட, செல்லும் நேரம் அரண்டு போனாள் மது.
“என்ன பண்ற, நீயெல்லாம் பொண்ணா இல்லை ரவுடியா? கிட்ட வந்தா கம்ப்ளைண்ட் பண்ணுவேன்” என்றவள் கத்தவும் அவளது கைகளை மற்ற இருவர் பிடித்துக் கொள்ள, கத்திரியை பெண்ணவளின் கூந்தல் நோக்கி செலுத்தினாள் மாயா.
அந்நொடி அவளது கரத்தை பற்றியது ஒரு கரம். மாயாவோ முறைத்தபடி திரும்ப, அவளது மூக்கின் மீதே ஓங்கி குத்தியிருந்தாள் ஒருத்தி. அவள் சைத்ரா. மூக்கை பற்றியபடி மாயா மிரண்டு போய் நகர, மத்த தோழிகள் கூட ஆடிப் போனார்கள். அடுத்த நொடியே வார்டனும் வர, கையும் களவுமாக மாட்டப்பட்டிருந்தனர் மாயாவும் அவளது தோழிகளும்.
சைத்ரா கராத்தே தொடங்கி விளையாட்டு வரையிலும் இறங்கி கலக்கும் ஒருத்தி. இதற்கு முன் அவளை மது கவனித்ததில்லை என்றாலும் தற்போது அவளை பார்த்தாள். பிரவுன் நிறம் கலந்தது போல கூந்தல், கூர்மையான மூக்கு, சிறிய அழகான கண்கள் என பார்த்தால் ரசிக்காமல் இருக்க இயலாத அழகில் மிளிர்ந்தாள் சைத்ரா. அவளையே ஆச்சர்யமாக பார்த்தவள், தன் கண்களால் நன்றியையும் தெரிவித்தாள்.
ஆதாரத்துடன் அவர்களை வசமாக மாட்ட செய்து பிடித்து கொடுத்திருந்த சைத்ராவோ, அதற்காக தான் அமைதியாகவே இவர்களை பின் தொடர்ந்தும் வந்திருந்தாள். அந்த நிகழ்வு மாயாவிற்கு டீசியையும், மதுவிற்கு ஒரு நல்ல தோழியையும் உருவாக்கியிருந்தது. அதன்பின்னரே சைத்ராவும், மதுவும் சிறந்த தோழிகளாக மாறினர்.
நாட்கள் செல்ல விடுமுறை நாளில், இறுக்கமான அடர் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டீசர்ட் அதற்கு மேல் ஸ்வட்டர் அணிந்தபடி தயாராகி இருந்தாள் சைத்ரா.
“என்ன சைத்து இந்த வீக்கும் வெளிய போறியா? ஜாலி பண்ணு.” உற்சாகமாக பேசிய மதுவின் முகத்தில் தோன்றிய வருத்தம் அவளுக்கும் புரிந்தது.
“நெக்ஸ்ட் வீக் நம்ம ரெண்டு பேரும் போலாமா மச்சி..?”
“என்ன சைத்து காமெடி பண்றியா?”
“சீரியஸ்லி பர்மிஷன் உனக்கும் கேட்டு வெளியே கூப்பிட்டு போறேன். ஜாலியா என்ஜாய் பண்ணுவோம் சேர்ந்து.” என்று கூறும் சைத்ராவை தாவி அணைத்துக் கொண்டாள் மதுவர்ணிகா.
“லவ் யூ டி சைத்து.” என்று புன்னகையுடன் அவள் கூற, இவளும் மகிழ்ந்தாள்.
நாட்கள் உருண்டோட சைத்ராவின் பாதுகாப்பாளர் உதவியால் ஞாயிற்றுக்கிழமை நாளில் விடுதி என்னும் கூண்டிலிருந்து வெளியே வந்திருந்தாள் மது.
“வாவ்! ஊட்டி இவ்ளோ அழகா இருக்குமாடி சைத்து.”
“ம்ம்ம்… இத விட அழகான பிளேசஸ் நிறைய இருக்கு மச்சி. ஆமா பேபி நம்ம வந்து இவ்ளோ டேஸ் ஆகுது ஏன் உங்க வீட்டிலிருந்து யாரும் வரலை.” சைத்ரா கேட்டதும் மதுவின் முகம் முற்றிலும் வாடியது.
“அவங்க பிஸியா இருப்பாங்க. அப்புறம் என்னை பார்க்க வந்தா என் கான்சன்ட்ரேசன் மிஸ் ஆகுமாம். சரி அதவிடு, நாம இன்னைக்கு எங்க போறோம்?” ஆவல் பொங்க கேட்டாள் மது.
“மொதல்ல பிரவுசிங் சென்டர் போறோம். அப்புறம் வெளியே போறோம்.”
“பிரவுசிங் சென்டர்னா என்ன சைத்து?”
“அடிப்பாவி..! அப்படினா என்னனு தெரியாதா? அங்க கம்ப்யூட்டர் இருக்கும் வித் நெட் கனெக்சனோட, அங்க நம்ம மெயில் பார்க்கலாம், பிரிண்ட் எடுக்கலாம். பிராஜெக்ட் பண்ணலாம். எவ்ளோ டைம் எடுக்குறோமோ அதுக்கேத்த மாதிரி சார்ஜ் பண்ணிப்பாங்க.”
“ஓ! ஓகே ஓகே… நீ என்ன பண்ண போற சைத்து.”
“அதான் போறோம்ல அப்போ சொல்றேன்.” என்று புன்னகையுடன் கூறியவள் அவளை அழைத்துச் செல்ல, பாதி வழியிலேயே ட்ரைவரை நிற்க சொல்லிவிட்டு இறங்கியவர்கள், கடையை நோக்கி நகர்ந்துச் சென்றனர்.
“கார் இந்த வழியா வராது மது. அதான் நடந்தே போயிடலாம்.”
“ஓகே சைத்து. யூ நோ ஒன் திங் இப்படி சுதந்திரமா நடந்து போறது கூட சந்தோசமா இருக்குடா.”
“ஐ அண்டர்ஸ்டாண்ட் மச்சி.” என்றவள் புன்னகையுடன் மதுவின் கைகளை பற்றி அழைத்துச் செல்ல, அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர் இருவர்.
இவையாவும் அறியாத மதுவும், சைத்ராவும் செல்ல, மதுவின் வாழ்வையை மாற்றி அமைக்க காரணமாக இருந்த நிகழ்வும் நடக்க இருந்தது.

