
மாயோன் 10
“வர்ஷா”என்ற பெயரை கேட்டு , சரத்தின் கண்கள் அகல விரிந்து கொண்டது…
” நீ உண்மையாவே அவளை விரும்புனியா அதி? ” என்று சந்தேகமாக கேட்ட சரத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், நொடியில் அருகில் இருந்த கத்தியை கொண்டு தனது கை நரம்பினை அறுத்துக் கொண்டான்…
” ஒஹ் மை காட்… பைத்தியமாடா நீ?” என்ற சரத் விரைந்து வந்து, காயம் பட்ட அவன் கரத்தை பார்க்க… காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக தரையில் கொட்டியது….
” இது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு நான் அவள் மேல வச்சி இருந்த காதலும் உண்மை, அவளுக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லை, உனக்கு கூடவா என் மேல நம்பிக்கை இல்லாமல் போச்சு…” என்றவனின் விழியோரம் நீர் தேங்கி நிற்க, வலியுடன் சரத்தின் முகம் பார்த்தான் அதியன்…
” நம்பாம இல்லடா… உன்கிட்ட எப்படி சொல்லுவேன்… ” என்ற சரத், அவனது காயத்தை சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டு போட்டுவிட்டான்…
காயம் ஆழமாக இருக்கவே, கட்டு போட்டபின்னும்,அதன் வழியே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது… அதனை பார்த்தவன் ” என்னடா அதி இது எல்லாம், நீ ஏதோ அன்னைக்கு போதையில உளருறன்னு நினைச்சேன், ஆனால் இந்த அளவுக்கு சின்சியரா இருப்பன்னு நான் கற்பனை பண்ணி கூட பார்க்கலடா… தயவுசெய்து இப்படி இருக்காத, இது உனக்கு நல்லது இல்லை ”
” நீ சொல்லுறது எனக்கு புரியுது சரத் … இருந்தாலும் என்ன பண்ணுறது, என்னால எதையும் மறக்க முடியலடா… நான் நிம்மதியா தூங்கி மூணு வருஷம் ஆச்சு… நெஞ்சுக்குள்ள உறுத்திகிட்டே இருக்காள்டா… தாங்க முடியல ” என்ற அதியனின் கண்களில் தெரிந்த வலி சரத்தை வெகுவாக பாதித்தது…
அதியனோ மீண்டும் அவள் நினைவுகளை எண்ணி, கண்ணீருடன் மேசையில் தலை சாய்க்க… இருபக்கமும் தலையாட்டி பெரு மூச்சு விட்டபடி அங்கிருந்து வெளியே சென்ற சரத் தனது நண்பனும், வழக்கறிஞருமான சிவாவிற்கு அழைப்பு விடுத்தான்…
” சிவா அங்க என்ன நிலவரம் ? ”
” இன்னும் ரெண்டு வாரத்தில கோர்ட்ல லாஸ்ட் ஹீயரிங் வருதுடா… இந்த ஹீயரிங் மட்டும் முடிஞ்சது அப்படின்னா அடுத்து ஜட்ஜ்மெண்ட் தான், அதுக்கு முன்னாடி விக்ரமன் கைக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் பார்த்துக்கணும் ”
” சரி அதை நான் பாத்துகிறேன்… நந்தினியை பத்தி விசாரிக்க முடிஞ்சா கொஞ்சம் விசாரிச்சு சொல்லுடா, அவளை பத்தி எந்த தகவலும் தெரியல… ”
” ஏன்டா நான் உயிரோட இருக்குறது உனக்கு பிடிக்கலயா? ”
” ஏன்டா இப்படி சொல்லுற? ”
” பின்ன என்ன? நான் நந்தினியை பத்தி விசாரிக்கிறது மட்டும் விக்ரமனுக்கு தெரிஞ்சது… அவனோட அடுத்த டார்கெட் நானா தான் இருப்பேன்… அவன் கிட்ட அடி வாங்குற அளவுக்கு எல்லாம் எனக்கு தெம்பில்லைடா… அவன் ரெண்டு அடி அடிச்சாலே போதும் நான், நீ எங்க இருக்கன்னு எல்லா உண்மையும் சொல்லிடுவேன்… நந்தினி அளவுக்கு எல்லாம் என்னால விக்ரமனை சமாளிக்க முடியாதுடா ஆள விடு… ” என்றவன் அழைப்பை துண்டிக்க…
” ஷிட் ” என்று தரையில் காலை தூக்கி உதைத்து கொண்ட சரத்… மீண்டும் தங்கள் அறைக்குள் வந்து, அதியனின் மடிக்கணினியை பார்க்க துவங்கி இருந்தான்…
” இதுல வேற எதுவுமே வரலயே ” என்றவன் எரிச்சலுடன் அதியனை திரும்பி பார்த்து ” உன்கிட்ட நந்தினி கடைசியா என்ன சொன்னா? ” என்று கேட்டான்.
” கீர்த்தி கோயம்புத்தூர் வருவாள், வந்த அப்புறம் நமக்கு போன் பண்ணுவான்னு சொன்னாள்… ”
” அவ்ளோ தானா? சரி விடு” என்று அதியனிடம் கூறியவன் ‘ இன்னும் ரெண்டு வாரம் தான்… அப்புறம் அந்த பைல் விக்ரமன் கைக்கு கிடைச்சாலும் அவனால அதை வச்சி ஒன்னும் பண்ண முடியாது… அது அவன் கையில் கிடைக்கிறதுகுள்ள எப்படியாவது அதை எடுத்து அழிச்சாகனும்… ‘ என்று தன் மனதில் நினைத்து கொண்டான்…
அவனது யோசனையான முகத்தை கண்டு புருவம் உயர்த்திய அதியன்… ” என்ன யோசிச்சிட்டு இருக்க? அடுத்து என்ன தான் பண்ண போறீங்க? ” என்று கேட்டான் சலிப்பாக…
” அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது அதி, எல்லாம் நம்ம நல்லத்துக்கு தான், ” என்ற சரத் அவன் தோள்களில் தட்டி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றான் …
*******
விக்ரமன் வாங்கி கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்டு சென்னை செல்ல புறப்பட்டு தயாராக நின்றவள் கண்ணாடியின் முன் தன்னை பார்க்க, அப்போது தான் தன் கழுத்தில் இருந்த ‘v’ செயினை நன்றாக பார்த்தாள்…
” இது யாரோடது? எப்படி என் கழுத்துக்கு வந்தது… ” என்றவள் அதனை கழட்ட பார்க்க… அப்போது சரியா கதவினை திறந்துகொண்டு உள்ளே வந்தான் விக்ரமன்…
அந்த சத்தம் கேட்டு அவனை திரும்பி பார்த்தாள் கீர்த்தி
உள்ளே வந்தவன் ” கிளம்புவோமா? ” என்று கேட்க… ” கதவு தட்டிட்டு உள்ள வர பழக்கமே இல்லை போல ” என்று முணுமுணுத்து கொண்டாள் கீர்த்தி…
அவள் உதடுகளின் அசைவை கொண்டு, வார்த்தைகளை புரிந்து கொண்டவன் ” டோர் லாக் பண்ணுற பழக்கம் உனக்கு இருந்து இருந்தால், நான் ஏன் இப்படி உள்ள வர போறேன் ?” என்றவன் புருவம் உயர்த்தி அவளை பார்க்க…
” ரொம்ப தான் ” என்று சலித்து கொண்டவள் அமைதியாக அவன் பின்னே சென்று காரில் அமர்ந்து கொண்டாள்…
ஒருவழியாக கீர்த்தியை அழைத்து கொண்டு சென்னை வந்து இறங்கினான் விக்ரமன்… அந்த மூன்று மணி நேர விமான பயணத்திற்குள் விக்ரமனை மூச்சடைக்க செய்திருந்தால் பெண்ணவள்…
ஒருவழியாக சென்னையில் இருக்கும் அவனுடைய இல்லத்திற்கு கீர்த்தியை அழைத்து வந்தவன்… ” கீழே இறங்கு ” என்று கூறியபடி வேகமாக உள்ளே செல்ல… வாசல் கதவருகில் நின்றுகொண்டிருந்த வேலையாட்கள் அவனை வரவேற்றனர்…
அப்போது தான் எங்கே? தன் உடன் வந்தவளை காணவில்லை என்று சுற்றும், முற்றும் கீர்த்தியை தேடிய விக்ரமன்… வெளியே வந்து பார்க்க… அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தபடி வெளியே நின்று கொண்டிருந்தாள் கீர்த்தி…
அதனை கண்டு வாய்க்குள் அவளை திட்டி கொண்டவன், வேகமாக அவள் அருகில் வந்து அவளது காதை பிடித்து திருகினான்… ” அங்க என்ன தெரியுது உனக்கு ? எப்போ பாரு வேடிக்கை பார்த்துகிட்டு ” என்றவன் அவளை இழுத்து கொண்டு உள்ளே வந்தான்…
” ரெண்டு பேருக்கும் காஃபி எடுத்துட்டு வாங்க ” என்று வேலையாட்களிடம் கூறி விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான் விக்ரமன்…
” இப்போ எதுக்கு என்னை தரதரவென இழுத்துட்டு வந்தீங்க? சென்னை வரை தான் உங்க கூட வர ஓகே சொன்னேன்… அது தான் இங்க வந்தாச்சு இல்லை இனி நானே எங்க அப்பா வீட்டுக்கு போய்க்குவேன்… இனி எனக்கு உங்க உதவி ஒன்னும் தேவை இல்லை நான் போறேன் ” என்றவளை அமைதியாக பார்த்தவன், நன்றாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டபடி… சட்டையை முட்டிவரை மடக்கி விட…
அவன் அமர்ந்திருக்கும் தோரனையை கண்டு அவள் பேச வந்த வார்த்தையை முழுங்கிக்கொண்டாள்…
அவள் அமைதியை கண்டு ” இப்போ பேசு ” என்றான் விக்ரமன், தெளிவான குரலில்…
” அது … அது ஹான், எனக்கு ட்ராவல் பண்ண டயர்ட்ல தூக்கம் தூக்கமா வருது அதான் இவ்ளோ பெரிய வீட்டில என் ரூம் எங்க இருக்குன்னு கேட்டேன் ” என்றவளை விழி மறைவில் புன்னையுடன் பார்த்தவன்… அங்கிருந்த ஒரு அறையை நோக்கி கை காட்டினான்…
அவளோ அவனை வாயுக்குள் திட்டியபடியே அவன் கை காட்டிய அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
அப்போது சதிஷிடம் இருந்து விக்ரமனுக்கு அழைப்பு வர அழைப்பை ஏற்றவன் ” ம்ம்ம் சென்னை வந்துட்டேன்… இன்னும் ஒன் ஹார்ல ஷூட்டிங் ஸ்பாட்டில இருப்பேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்…
இந்த தகவலை கூற கீர்த்தியின் அறை கதவை தட்டியபடி உள்ளே வந்தான் விக்ரமன்…
” நான் ஷூட்டிங் போயிட்டு வரேன்… உனக்கு சாப்பிட ஏதாவது வேணும்னா வேலை செய்யுறவங்க கிட்ட கேளு பண்ணி கொடுப்பாங்க ” என்றவன் மென்மையாக புன்னகைத்தபடி அவளிடம் இருந்து விடைபெற்று சென்றான்…
என்ன தான் கீர்த்தி இங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறினாலும், ஏதோ ஒரு ஓரத்தில் அவனது துணையை மனம் நாடியது என்னவோ உண்மை தான்… இதற்கும் ஒருவகையில் விக்ரமன் தான் காரணம்…
ஒருவேளை இவனிடம் இருந்து சென்ற பின் மீண்டும் அந்த அடியாட்களிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது ! என்று பயம் கீர்த்தியின் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது… மேலும் அபிமன்யு ஊர் அறிந்த நடிகன் அவனை மீறி தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற எண்ணத்தில் தான் அவனுடன் இருக்க சம்மதித்தாள்…
விக்ரமன் கூறிவிட்டு சென்றதை போலவே வேலையாட்கள் நேரத்திற்கு கீர்த்திக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தனர்…
அவளும் அதனை வாங்கி உண்டவள், நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்…
ஷூட்டிங் முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தான் அபிமன்யு…
வீட்டிற்குள் வந்தவன், நேராக கீர்த்தியின் அறைக்குள் நுழைய… அங்கு அவளோ அசந்து தூங்கி கொண்டிருந்தாள்…
புன்னகையுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தவன், மெல்ல அவள் காது பக்கமாக குனிந்து ” ஸ்ருதி … ” என்று அழைக்க… சட்டென்று கண்களை திறந்து கொண்ட கீர்த்தி, பயத்தில் நடுங்கியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்…
அவனுடைய அந்த ” ஸ்ரூதி ” என்ற அழைப்பு பெண்ணவளுக்கு விகர்மனை பற்றிய எண்ணத்தை நினைவு படுத்த… முகம் முழுவது வியர்வைத்துளிகள் வழிய மிரண்டு போய் அமர்ந்திருந்தாள்…
” என்ன ஆச்சு? ” என்ற அபிமன்யு அவளது அச்சம் கண்டு, ஆதரவாக அவளை நெருங்கி அமர…
” அது… அவன்… அந்த விக்ரமன் ” என்றவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்…
அவள் விக்ரமன் என்று கூறி பயம் கொண்டதை பார்த்து சலிப்பாக தலையாட்டி கொண்டவன்…
” யார் அந்த விக்ரமன் ? ” என்று கேட்டான்…
” அது அவன் தான் அன்னைக்கு என்னை ஒரு இடத்தில் அடைச்சு வச்சு, கொல்ல பார்த்தான், என் அக்கா ,மாமா எல்லாரையும் கூட அவன் தான் என்னமோ பண்ணிட்டான், அன்னைக்கு அவன் என்னை ஸ்ரூதின்னு சொல்லி கூப்பிட்டது இப்போ கூட என் காதில் கேட்டது… அவன் என்னையும் கண்டிப்பா கொன்னுடுவான் ” என்று பயத்தில் பிதற்றியவள்… அறையை சுற்றி தனது பார்வையை சுழல விட்டாள்… கீர்த்திக்கு அபி நிஜத்தில் அழைத்த ” ஸ்ரூதி ” என்ற வார்த்தை அவளுக்கு கனவில் ஒலித்தது போல இருந்தது…
ஆனால் இருவரும் ஒருவர் தான் என்பதை அவள் மூளை உணரவில்லை… நிஜத்திற்கும் நிழலுக்கு வித்யாசம் அறியாத பேதை பெண்..
அன்று இருந்த பதட்டத்திலும், அசதியிலும், விக்ரமனின் குரல் அவளுக்கு சரிவர அடையாளம் தெரியவில்லை… அன்று அவன் குரலை அவள் நன்கு உணர்ந்து கேட்டிருந்தாள், நிச்சயம் ஏதோ ஒரு கட்டத்தில் அபியின் குரலில் அந்த உணர்வு தோன்றி இருக்கும்… ஆனால் விக்ரமன் கூறிய ” ஸ்ரூதி ” என்ற வார்த்தை இன்று வரை அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது… அதுவே அவளது நடுக்கத்திற்கு காரணம்…
” நான் போகணும் அவன் வந்திடுவான் ” என்று பயத்தில் பிதற்றியவளை எப்படி சமாதான படுத்துவது என்று புரியாமல் தவித்து போனான் விக்ரமன்…
” இங்க பாரு உனக்கு ஒன்னும் ஆகாது… நீ ரொம்ப பாதுகாப்பா இருக்க… நான் உங்கூட தானே இருக்கேன் உனக்கு ஒன்னும் ஆகாது புரியுதா? ” என்றவன் தனது இரு கரங்களால் அவளது கன்னத்தை பற்றி கொள்ள…
“இல்லை உங்களுக்கு அவனை பத்தி தெரியாது, அவன் பெரிய கொலை காரன், எங்க நந்தினி அக்கா சொல்லி இருக்காள்… “என்று கீர்த்தி கூற… நந்தினியின் பெயரை கேட்ட விக்ரமனின் முகம் நொடியில் மாறியது, அதை அவள் உணரவில்லை…
” ஒஹ் உங்க அக்கா சொன்னாங்களா? ” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்,
அவன் குரல் மாற்றத்தை உணராமல் ” ம்ம்ம் ஆமா ” என்றவளை கோவமாக பார்த்தவன்…
” முழுசா எந்த ஒரு விஷயமும் தெரியாமல் ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் கெட்டவர்ன்னு சொல்லுறது…அடுத்தவனை நம்பி கயிரு கட்டி கடலுக்குள்ள இறங்குறதுக்கு சமம்… ” என்றவன் கோவமாக அவள் அருகில் இருந்து எழுந்து கொண்டான்…
அவன் கூறிய விதத்தில் சினம் துளிர்க்க ” ஆனால் இதை சொன்னது ஒன்னும் அடுத்தவங்க இல்லை என் அக்கா! நான் ஒன்னும் பொய் சொல்லல அதுவும் இல்லாமல் அவனே சொன்னான்… என் கண்ணு முன்னாடியே என் வீடு வெடிச்சி சிதறி போச்சு… அதுல இருந்த என் அம்மா…. அம்மா ” என்றவளுக்கு அதற்கு மேலும் பேசமுடியாமல் போக கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது…
” ஒருத்தர் செய்யுற எல்லாம் காரியத்துக்கு பின்புலம் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும் ” என்றான் விக்ரமன் எப்படியாவது தன் நிலையை அவளுக்கு உணர்த்திவிடும் நோக்கத்தில்…
” காரணம் எதுவா இருந்தாலும், தன் தேவைக்காக ஒரு உயிரை எடுக்கிறவன் கெட்டவன் தான்… அவன் சாக வேண்டியவன் தான்… இந்த உலகத்தில் வாழ தகுதியே இல்லாதவன்…அவன் எல்லாம் மனுசனே கிடையாது… எவ்ளோ பெரிய சாடிஸ்ட்டா இருந்திருந்தால் இந்த மாதிரி என் குடும்பத்தை ஒன்னும் இல்லாமல் பண்ணி இருப்பான்… அவன் நல்லாவே இருக்க மாட்டான்.. அவனுக்கு நல்ல சாவே வர… ” என்று ஆக்ரோஷமாக பேசிய கீர்த்தியை ஆழ்ந்து பார்த்த விக்ரமன்..
” போதும்!!! என்னைக்கும் பேசும் போது யோசிச்சு பேசணும்… ஒருவேளை நீ சொல்லுறது எல்லாம் நடந்ததுனா… அப்புறம் அதை சரி பண்ண நீ தான் கோவில் குளம் தேடி அலையனும் ” என்றவனை அவள் புரியாமல் பார்த்தாள்… எங்கேயோ ஆரம்பித்த பேச்சு எங்கேயோ வந்து முடிந்தது… விக்ரமனும் தன் நிலை மறந்து அவளிடம் தன் சுயம் வெளிப்படுத்தி பேசி இருந்தான்… அதை உணர்ந்து நெற்றியை நீவி கொண்டவன்…
” ரைட்… அப்போ தன் தேவைக்காக இந்த உலகத்தில் ஒரு உயிரை கொல்லுறது தப்பு அப்படி தானே! ” என்றவன் அவள் விழிகளை ஊடுருவி பார்க்க… “ம்ம்ம் ” என்று தலை அசைத்தாள் கீர்த்தி…
” நல்லது… சிலருக்கு சில விஷயம் சொன்னால் புரியாது… அனுபவிச்சால் தான் புரியும்” என்று கூறி, அவளை பார்த்து குரூரமாக புன்னகைத்தபடி வெளியே வந்தவன், தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேசினான்… அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு இருவர் அவனது வீட்டிற்கு வந்தனர்…
அதில் ஒருவன் விக்ரமனிடம் ஒரு பாக்ஸை கொடுக்க, அதனை பெற்று கொண்ட விக்ரமன்… அருகில் கை குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து ” கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கமா ” என்று கூறி விட்டு அருகே இருந்த ஒரு இரும்பு கம்பியை கையில் எடுத்துக்கொண்டு திரும்பி தன் வீட்டிற்க்குள் நுழைந்தான்…
உள்ளே வந்தவன் நேராக கீர்த்தியின் அறைக்குள் நுழைய.. அவளோ தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள்.. அவள் அருகில் வந்து அவளது கரத்தை பற்றி தர தரவென வெளியே இழுத்து வந்த விக்ரமன்…
பொருட்கள் எதுவும் இல்லாத ஒரு காலி அறைக்குள் அவளை தள்ளி விட்டு, தன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து அவள் அருகில் வீசினான்.
அவனது இந்த திடீர் செயலில் அச்சம் உச்சம் அடைய கீழே விழுந்து கிடந்தவள் அவனை மிரட்சியுடன் பார்க்க… அவளை பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன்…
தன் கையில் வைத்திருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த நாகபாம்பை வெளியே எடுத்தான்…
அதனை பார்த்து ” ஆஆ.. ஆஆ ” என்று அலறியவள்… அமர்ந்திருந்தபடியே ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்…
அவள் பயத்தை வெகுவாக ரசித்து பார்த்தவன்… அவள் அருகில் மண்டியிட்டு அமர…. அவன் கையில் இருந்த பாம்பை கண்ட பெண்ணவளின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கியது…
” பயமா இருக்கா? ” என்றவன் அவளை பார்த்து ஏளனமாக புன்னகைக்க, கண்களில் இருள் சூழ இமைகளை தட்டி தட்டி முழித்தவள், அவனை பயத்துடன் பார்த்தாள்.. அவனது இந்த முகம் பெண்ணவளுக்கு மரண பயத்தை கொடுத்தது… அவன் தன்னிடம் அத்து மீறி இம்சை செய்யும் போது கூட பெண்ணவளுக்கு தோன்றாத அச்சம், இப்போது அவள் கண்களில் தெளிவாக தெரிந்தது…
கையில் வைத்திருந்த பாம்பை பார்த்தவாறே அவளை பார்த்தவன்… ” உனக்கு ரெண்டே வழி தான் இருக்கு ஒன்னு இது கிட்ட கடிபட்டு நீ சாகனும், இல்லை உன்கிட்ட அடிபட்டு இது சாகனும்… வாழனுங்குற ஆசை இருந்தால் இதை கொன்னுட்டு வெளியே வா… இல்லை அதுக்கு பாவம் பார்த்து… அதுகிட்ட கடிபட்டு இங்கேயே சாவு, ” என்றவன் தன்னை அதிர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்த கீர்த்தியை பார்த்து ” தகுதி உள்ளது தப்பி பிழைக்கும் ” என்று கூறி ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு, குரூரமாக சிரித்தவன், அந்த அறைக்குள் பாம்பினை விட்டவிட்டு கதவை தாழிட்டான்…
கிழே அவன் விட்டு சென்ற பாம்பு நெளிந்த படியே கீர்த்தியின் அருகில் வர… ” ஆஆ ” என்று கத்தியவள்… எழுந்து கொண்டு அந்த அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி ஓட தொடங்கினாள்… ” காப்பாத்துங்க… ஏன் இப்படி பண்ணுறீங்க எனக்கு பயமா இருக்கு? நான் உங்களை என்ன பண்ணேன், ப்ளீஸ் கதவை திறங்க ” என்று கதறியவளை .. எந்த வித உணர்வும் இன்றி, அவள் அறையில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்தான்… விக்ரமன்.

