
சலனம்-4
“என்னடா நான் பேசிட்டே இருக்கேன். நீ சிலை மாதிரி நிற்கிறே?”
அவள் கேள்வி என் செவிகளை எட்டியது. இதுவரை அவள் வார்த்தைகளில் சமாதானமாகாத என் மனம், அவள் கேள்வியை அலட்சியம் செய்தது.
“நான் உன்னைத் தேடிவர யார் அனுமதியும் கேட்கலையே சம்யூ?”
என நான் கேட்ட கேள்வி அவள் மனதைக் குத்தும் என எனக்குத் தெரியும். நீயொரு பெண் உன்னால் தனியாக முடிவெடுக்க முடியாது எனக் குத்திக் காட்டுவதற்குத் தான் சொன்னேன் என்றும் எனக்குத் தெரியும்.
ஆனால், எனக்குள் இருக்கும் ஆண் எனும் அகம்பாவம், அவளைக் காயப்படுத்தி திருப்திப்பட்டுக் கொள்கிறது. இதில் என் தவறு எதுவுமே இல்லை, இது Manufacturing defect..
இல்லை இல்லை, இது உற்பத்தி சிக்கல் இல்லை. Creative defect எனப்படும் படைப்புச் சிக்கல். என்னைப் படைத்தவனைத் தான் போய் கேட்க வேண்டும்.
என் பின்னிருந்து எனை வளைத்தக் கரத்தினை, என் கரத்தோடு சேர்த்துக் கொண்டேன். அவள் என்னை விட்டு விலகுவதை, என்னால் இரசிக்க முடியவில்லை. இப்போதே, இப்படியே என்னுடன் அழைத்துப் போய்விட வேண்டும், என்கிற எண்ணம் மட்டுமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“இப்படியே என்னுடன் வந்துடேன் சம்யூ!” எனச் சொன்னேன். ஆனால் இன்னும் நான் அவள்புறம் திரும்பவே இல்லை.
“இப்போ என் பேரண்ட்ஸ் முக்கியமில்லை, நீ மட்டும்தான் முக்கியம்ன்னு நிரூபிக்க நான் உன்னோட வந்துடணும். அதுக்குத்தானே, இப்படி மூஞ்சியைத் திருப்பிட்டு நிற்கிறே?” சரியாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்ததைக் கேள்வியாகக் கேட்டாள் சம்யூ.
நான் பதில் பேசவில்லை. என்னோடு வராமல் கேள்விக் கேட்டுக் கொண்டே நிற்கிறாளே? என்கிறாளே என்ற எண்ணம் அவள் கரம் விலக்கி, அவளை விட்டு விலகி முன்னே நடக்க வைத்தது.
“விக்ரம்.. விக்ரம்.. விக்ரம் நில்லு டா!” அவளின் சத்தமான விளிப்புகள் என் செவிகளில் விழாததைப் போல் நடக்கத் துவங்கியிருந்தேன்.
“இடியட்! திமிர் பிடிச்சவன் டா நீ..!”
“ஆமா டி! எனக்கு ஆண் என்கிற திமிர் அதிகம் தான்.!” திரும்பி நின்று அவள் கண்பார்த்துச் சொன்னேன்.
“உன் ஆம்பிள்ளைத் திமிரை என்கிட்டே காட்டாதே விக்ரம். நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு என் பேரண்ட்ஸும் முக்கியம் தான். உன்னை மாதிரி ஜஸ்ட் லைக் தட் என்னால் வர முடியாது. என் பேரண்ட்ஸ் நம்ம கல்யாணத்திற்கு சம்மதிக்கிறாங்களோ, இல்லையோ? நம்ம விஷயத்தை அவங்களுக்கு சொல்ல வேண்டியது என் கடமை. இப்போவே உன்னை இண்ட்ரோ கொடுக்கிறது ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனால், நீ இருக்கும் போது, அவங்க தயக்கமில்லாமல் பேசுவாங்களான்னு தெரியலையே? அதுக்குத்தான் அவங்கக் கிட்டே பேசிட்டு உன்னைக் கூப்பிடுறேன்னு சொன்னேன். உன்னை மாதிரி யாரைப் பற்றியுமே யோசிக்காமல் என்னால் சட்டுன்னு வர முடியாது விக்ரம்! இந்த விளக்கம் போதுமா? இல்லை இன்னும் எதாவது சொல்லனுமா?” அவள் கண்களில் வழிந்தக் கோபம் எனக்குப் புரிந்தது.
ஆனாலும், அவள் தைரியமாய் நிமிர்ந்து நின்று பேசும் தோரணை எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது.
“ஓ! எனக்கு யாரைப் பத்தியுமே அக்கறை இல்லைன்னு சொல்றியா? உன்னை பத்தி மட்டுமே யோசிச்சுட்டு, உன் பின்னாடியே வந்ததற்கு எனக்கு இது தேவைதான்டி! அப்படி நான் யாரைப் பத்தி யோசிக்காமல் போனேன்?!” பதில் தெரிந்துக் கொண்டே எதிர்கேள்வி கேட்டேன்.
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மதுரையில் ஒரு பொண்ணு காத்திருக்கே, அந்தப் பொண்ணை மறந்துட்டியே விக்ரம்? இப்போவும் நீ உன்னை மட்டும் தான் யோசிக்கிறே! ஏன்டா இவ்வளவு சுயநலவாதியாய் இருக்கே? நான் கிளம்பி வந்ததும், வேகமா என் பின்னால் வந்துட்டியே, உங்க வீட்டுக்கு கால் பண்ணி உன் நிலமையை எடுத்து சொன்னியா? இல்லை கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொன்னியா? எதையும் யாருக்கிட்டேயுமே சொல்ல மாட்டே! யாரையும் புரிஞ்சுக்கவும் மாட்டே! உன்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் உன்னை மட்டும் புரிஞ்சுட்டு உன் இஷ்டப்படி நடந்துக்கணும். அப்படித்தானே?!” கண்கள் அகல விரிய, மூக்கு நுனி சிவக்க கோபமாய் என்னைப் பார்த்துக் கேட்டாள் சம்யுக்தா.
‘கடவுள் ஏன் இவளை இப்படி படைத்தான்? கொஞ்சம் விவரம் தெரியாத பச்சை மண்ணாய் இவள் இருந்திருக்கலாம். என்னை எதிரே நின்று இவள் கேள்வி கேட்பதே எனக்கு எரிச்சலாக இருக்கிறது! இவளுக்கு வேண்டியது நான் மட்டும் தானே? எனக்காக யார் காத்திருந்தால் இவளுக்கென்ன?’ என எனக்குள் இரகசியமாய் சொல்லிக் கொண்டேன்.
வாய்விட்டுச் சொல்லியிருந்தால், அதற்கும் என்னைக் கேள்வியாய்க் கேட்டு கொல்லுவாள் இந்த இராட்சசி.
“இப்போ என்ன செய்யணும்ங்கிற? நான் வேணும்ன்னா அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கட்டா? நீ தான் வேணும்ன்னு உன்னைத் தேடி வந்த என்னை, இப்போ நீ தான் கழற்றி விட முயற்சி பண்ணுற! அதுக்குத்தானே இந்த ட்ராமாவெல்லாம்? நல்லா நடிக்கிற சம்யூ! ஆனால் ஒண்ணு, உனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவனே நான் தான். உன் நடிப்பெல்லாம் என்கிட்டே வேலைக்கே ஆகாது!.” அவளின் உணர்வுகளை நடிப்பென்று சொல்லி அதன் பின் மறைந்துக் கொள்ள முயன்றேன் நான்.
“போடா! உன்கிட்டே பேசுறதெல்லாம் டோட்டல் வேஸ்ட்! நான் சொல்றது என்ன? நீ புரிஞ்சுக்கறது என்ன? நீ யாரை கட்டிக்கணுமோ, கட்டிக்கோ! ஐ டோன்ட் கேர். நீ முதலில் இங்கிருந்து கிளம்பு விக்ரம்.!” கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாய் சொன்னாள்.
என்னை வெளியே போகச் சொல்லிவிட்டாளே, என்ற கோபம் என் உச்சந்தலைக்கு சுறுசுறுவென ஏறியது. என்னை வெளியே போகச் சொல்ல இவள் யார்? இவள் இப்போது நிற்கும் நிலைக்கு நான் தானே காரணம்! நான் மட்டும் இல்லையென்றால், திரைப்படத்தில், ஒரேயொரு காட்சிக்கு நடித்துக் கொடுத்துவிட்டு, காணாமல் போயிருப்பாள். இவள் என்னை வெளியே போகச் சொல்வதா? என்றக் கோபம், எரிமலையாய் வெடித்துக் கிளம்ப காத்திருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாய் நின்றேன் நான்.
“கிளம்பு விக்ரம்! சொல்றதைக் கேளு! மாத்தி மாத்தி பேசிட்டே இருந்தால், சண்டை தான் வரும். இப்போ கிளம்பு! நாளைக்கு பொறுமையாய் பேசிப்போம்!” மீண்டும் அவள் ஏதோ சொல்லி என்னைச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் ஒற்றை வார்த்தைக் கூடப் பேசாமல் அவளை அழுத்தமாய் பார்த்தபடி நின்றேன் நான்.
“விக்..ரம்!” அவள் குரல் கொஞ்சமாய் உயர்ந்தது.
“நீ வராமல் நான் எங்கேயும் போகப் போறதில்லை சம்யூ! எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்.!” நான் நிறுத்தி நிதானமாய் உச்சரித்த வார்த்தைகளில், சம்யூவின் பொறுமை காற்றில் பறந்தது.
“நான் வேணும்ன்னா என்ன அர்த்தம்? முன்னே மாதிரியே, ரிலேஷன்ஷிப்ன்னு சொல்லிக்கிட்டு, என்னை யூஸ் பண்ணிக்கிறதுக்கு நான் வேணுமா? இல்லை ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணிக்க கூப்பிடுறியா? நீ வேணாம்ன்னா தூக்கிப் போடுறதுக்கும், வேணும்ன்னா பக்கத்தில் வச்சிக்கிறதுக்கும் நான் ஒண்ணும் பொம்மை இல்லை விக்ரம். நான் உயிரோட நிற்கிற மனுஷி! எனக்கும் உணர்ச்சிகள் உண்டு. என்னை வெறுப்பேற்ற தானே, என் முன்னால் பொண்ணு ஃபோட்டோவை செலெக்ட் பண்ணி ஓகே சொன்ன? இப்போ எதுக்கு உனக்கு நான் வேணும்? பேசாமல் ஊருக்குப் போய் அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.!”சொல்லிவிட்டுத் திரும்பி நடந்துவிட்டாள்.
“அப்போ அவ்வளவு தானா சம்யூ? உன்னோட முடிவு இது தானா?” என்ற என் கேள்வி அவள் செவியைத் தீண்டிய மாத்திரத்தில், அவள் நடை தடைபட்டு நின்றது. நின்ற இடத்திலேயே, தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தவள்,
“இது தான் என் உறுதியான முடிவு! உனக்கு வரப்போற மனைவியையாவது, புரிஞ்சுக்க முயற்சி பண்ணு விக்ரம்! அவங்களுக்காவது உண்மையாய் இரு!” எனச் சொல்லிவிட்டு முகத்தில் அடித்தாற் போல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் சென்றுவிட்டாள் எனத் தெரிந்தும் கூட, நான் அசையாமல் நின்றிருந்தேன். என் மனம் அவள் நின்ற இடத்திலேயே நின்றிருந்தது. இன்னும் அவள் வாசம் என்னைச் சுற்றியே நிறைந்திருப்பதைப் போன்ற பிரம்மை எனக்குள்.
எத்தனை உற்சாகத்தோடு ஓடி வந்தேனோ, அத்தனையும் மிச்சமில்லாமல் வடிந்திருந்தது. அவள் என் முகத்திலடித்தாற்போல் கதவைச் சாத்தியதை நான் மிகவும் அவமானமாய் உணர்ந்தேன். நிதானமாய் யோசித்துப் பார்க்கும் போது, நான் வந்ததிலிருந்தே அவள் என்னை விரட்ட முயற்சித்தது புரிந்தது. ஆனாலும், நான் திருமணத்தைத் தவிர்த்துவிட்டு, அவளுக்காக வந்திருக்கிறேன், என நான் சொன்ன போது, அவள் கண்களில் வந்த பளிச்சிடல் என் மனதில் வந்து போனது.
“இனி நான் அவளைத் தேடி நான் வர மாட்டேன். அவள் என்னைத் தேடி வருவாள்!” என முடிவு செய்துக் கொண்டேன். வடிந்த உற்சாக மனநிலை மீண்டும் குடியேறியது.
ஒருபெண், என்னை நிராகரித்துவிட்டாள் எனத் தெரிந்தால், இந்தச் சமூகம் என் ஆண்மையையே கேள்விக்குறியாக்குமே? தேர்ந்தெடுப்பதும், நிராகரிப்பதும் நானாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு அவள் வேண்டும் என நான் முடிவெடுத்துவிட்டேன். என் முடிவை மாற்ற சம்யூவால் கூட முடியாது.
மனதில் தெளிவு வந்ததும், அலைபேசியை எடுத்து சித்தார்த்திற்கு அழைத்தேன்.
“எங்கே டா இருக்கே?”
“நம்மளோட வழக்கமான ஸ்பாட் தான் மச்சி! இன்னைக்கு அந்த ப்ரெடியூஸர் வச்சி செஞ்சுட்டார் டா. நெக்ஸ்ட் மீட்டிங் நீ வரலைன்னா டைரக்டரை மாத்திடுவேன்னு சொல்றாரு டா. நீ என்னடான்னா அந்த சம்யுக்தா பின்னாலேயே அலையுற? என்னதான் டா நினைச்சுட்டு இருக்கே?” என சித்தார்த் சொன்னதைக் கேட்கும் பொறுமையெல்லாம் எனக்கு இல்லவே இல்லை.
“பத்து நிமிஷம் வந்துடுவேன்.! அங்கேயே இரு!” எனச் சொல்லிவிட்டு நான் சென்ற இடம் நவீன மதுபான விடுதி. எனக்கு முன்னமே சித்தார்த் அங்கே இருந்தான்.
“காலையிலேயே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு போனவன் இப்போ என்னடா இங்கே வந்து நிற்கிறே?!” என்ற சித்தார்த்தின் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னமே, கண்ணெதிரே இருந்த கேப்பை மதுவை தொண்டைக்குள் சரித்துக் கொண்டு சித்தார்த்தின் எதிரில் தொப்பென அமர்ந்தேன்.
“அந்த இராட்சசி என்னைப் பைத்தியக்காரனாய் அலைய விடுறா டா! நான் அவளுக்கு வேணுமாம். ஆனால், கல்யாணத்திற்கு ஏன் ஓகே சொன்னே? நீ எனக்கு வேணாம்ன்னு சொல்றா மச்சான். நான் இப்போ அவளுக்கு வேணுமா? வேணாமா? நீயே சொல்லு?!” என நான் சித்தார்த்திடம் கேட்க,
“அதை நீ அவள் கிட்டே தானே கேட்கணும்! நான் சம்யுக்தா இல்லைடா. நான் சித்தார்த்!” எனச் சொல்லிவிட்டு சித்தார்த் சிரிக்க, இத்தனை நேரமாய் நான் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த கோபமெல்லாம் பூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரத் துவங்கியது.
“ஸ்டாப் இட், சித்தார்த்! சும்மா சிரிச்சு என்னைக் கடுப்பேத்தாதே டா!”
“அவள் பின்னாடி போகாதேன்னு சொன்னேன் கேட்டியா? இப்போ பைத்தியக்காரன் மாதிரி சுத்து. இப்படியே அவள் பின்னாடி சுத்திட்டு இருந்தால், சினிமா உன்னை சுத்தலில் விட்டுடும்.!” என சித்தார்த் மீண்டும் சிரிக்க, கண்மண் தெரியாதக் கோபத்தில், மேஜைமீது ஒய்யாரமாய் வீற்றிருந்த அந்த உயர்ரக மதுபானத்தை, தண்ணீர், எதுவும் கலக்காமல், அப்படியே அருந்தத் துவங்கினேன்.
கால்வாசி காலி செய்யும் முன்னமே, போதை என் தலைக்கு ஏறியிருந்தது. கண்கள் சிவந்து வயிறு எரியத் துவங்கியது.
“டேய் விக்ரம்! வேணாம் டா! நீ இவ்வளவெல்லாம் குடிக்க மாட்ட டா, உனக்கு ஒத்துக்காது!” சித்தார்த் தடுத்ததை நான் காதில் வாங்கவே இல்லை. முடிந்தவரை குடித்துவிட்டு, கண்ணெதிரே தெரிந்த காட்சிகள் இரண்டு மூன்று பிம்பங்களாகத் தெரிய, தள்ளாடி, தள்ளாடி வாசலை நோக்கி நடந்தேன்.
“விக்ரம்! நான் ட்ராப் பண்ணுறேன் இருடா!” என்றபடியே சித்தார்த் பின்னாலேயே ஓடி வந்தான்.
“இந்த இராட்சசியை நினைச்சுக்கிட்டே, காரை ஓட்டிட்டு போய், டேங்க்கர் லாரியில் மோதப் போறேன். நான் செத்துட்டா அவள் வருவாள் தானே?” எனக் கேட்டபடியே, தடுமாறி நடந்து வந்து, வாகனத்தில் ஏறியமர்ந்து வாகனத்தைக் கிளப்பினேன்.
கண்களுக்குள் காட்சிகள் இரண்டு மூன்றாகத் தெரிந்தது. எதிரே வந்துக் கொண்டிருந்த வாகனத்தின் வெளிச்சம் கண்ணைக் கூச வைத்தது. எங்கே செல்கிறேன் என்பதைத் தெரியாமலே, வாகனத்தைக் கன்னாபின்னாவெனச் செலுத்தி, எதன் மீதோ மோதியிருந்தேன். நான் எதில் மோதினேன் என உணரும் முன்னமே, நெற்றியோரமாய் வெதுவெதுப்பாய் வழிந்த உதிரத்தின் வெப்பத்தை உணர்ந்தேன்.
கண்களுக்குள் காரிருள் பரவ, நான் இமை மூடும் முன்னதாக என் கண்களுக்குள் வந்து சிரித்தாள் சம்யுக்தா.
“நீ இப்போ என்னைத் தேடி வந்து தான் ஆகணும் சம்யூ! நீ வருவ.. நான் உன்னை வர வைப்பேன். நான் ஜெய்ச்சுட்டேன் சம்யூ!” என நான் எனக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே, என் கண்கள் மெதுவாய் மூடத் துவங்கியது.
ஆனால், என் செவிகளுக்குள்,
“விக்ரம்!” என்ற என் சம்யூவின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

