Loading

கீதை 4

கிட்டார் சொல்லி தரும் பயிற்சி வகுப்பின் வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் என்ன சொல்லி கேட்டபதென்று புரியாமல் திணறி போய் நின்றிருந்தான் ஆதித் கிருஷ்ணா.

“சார் சொல்லுங்க, என்ன டீடெய்ல்ஸ் வேணும்” என மெலிதாய் ஒலித்தது வரேவற்பரையில் இருந்த பெண்ணின் குரல்.

“இங்கே பட்டர்ஃப்ளை கிளிப், ஒரு பொண்ணு” என அவன் வாய்க்கு வந்ததை உளறினான்.

“சார் பேர் சொன்னால் தான் நீங்க யாரை கேட்கிறீங்கன்னு சொல்ல முடியும்” அந்தப் பெண் அவனை நோக்கி கேட்க,

“ஆரா.! என்னோட ஆரா இப்போ கிட்டார் மாட்டிக்கிட்டு இங்கே தான் வந்தாள், ப்ளாக் கலர் சுடிதார்” என அவன் சற்று நிதானமாய் விவரித்தான்.

“ஓ அவங்களா.? இதோ வர சொல்றேன் சார்” எனச் சொன்ன பெண் கிட்டார் பயிற்சி நடக்கும் அந்த வகுப்பிற்குள் நுழைந்து அந்தப் பெண்ணை அழைத்து வந்த போது, தன் ஆராவை சற்று நேரத்தில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்துடன் திரும்பி நின்றிருந்தவனை,

“யார் நீங்க என்ன வேணும்” என்ற குரல் அவன் சிந்தையைக் களைக்க விரைந்து திரும்பியவன்,

“ஆரா.! வந்துட்டியா.?” எனச் சொல்லியபடி அவன் திரும்பியபோது,

“சொல்லுங்க நான் ஆராதனா தான்” என அந்தப் பெண் பேசிய வார்த்தைகள் அவன் செவிக்குள் செல்ல மறுத்தது.

“ஐ யெம் சாரி” என்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் மீண்டும் சோழிங்கநல்லூர் சாலையின் நடைபாதையில் நடக்க ஆரம்பித்தான்.

அவனை அவள் விட்டுச் சென்றுவிட்டாள் என்று அவன் புத்திக்கு உரைத்தாலும், அவளின் சாயலில் கண்ட பெண்ணை நாடிச் செல்ல மனம் துடித்தது, எங்கே தன்னவளாய் இருக்குமோ என்னும் பேராசையில், காதலை தேடி யாரோ ஒருத்தியின் பின் சென்றவனின் மனதில் ஆராவின் மீதான கோபம் அதிகரித்தது, அதிகரித்தது கோபம் மட்டுமில்லை காதலும் தான்.

“மீண்டும் ஒருமுறை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், என்னை விட்டு சென்ற நீ.! மீண்டும் வந்து விட மாட்டாயோ” என்று அணைத்து வைக்கபட்டிருந்த எண்ணுக்கு அவனின் குரல் பதிவை அனுப்பிவிட்டு அவளின் புகைப்படத்தை மெல்ல வருடியபடி அவள் கண்களைப் பார்த்தான்.

காரணம் ஒன்றும் சொல்லாமல் ஏன் தன்னை விட்டுச் சென்றாள், காதலால் ஏமாற்றிச் சென்றாள். பிரிவின் அர்த்தம் சொல்லி சென்றவள் அவனுக்கு நிரந்தரமான தனிமையும் கொடுத்து சென்று விட்டாள். அவளை நினைத்து, நினைத்து நொடிகள் கடக்க, தன்னிலை அடைந்தவனாய் யோசித்தவனுக்கு அப்போது தான் நினைவிற்கு வந்தது, சோழிங்கநல்லூர் சிக்னலில் காரை அப்படியே விட்டு வந்தது. அய்யோ என நினைத்தவன். விக்னேஷ்ற்கு அழைப்பு விடுத்தான்.

“ஹே விக்கி!” அவன் எதோ சொல்ல வரும் போதே,

“பாஸ்.! பாஸ் பதட்ட படாதீங்க உங்க சிறுத்தைகுட்டியை சிக்னலில் இருந்து காப்பாத்தியாச்சு, நீங்க எங்கேன்னு சொன்னீங்கன்னா வந்து பிக்கப் பண்ணிப்பேன்” என விக்னேஷ் பதில் கொடுத்ததும் நிம்மதி அடைந்தான் ஆதித் கிருஷ்ணா. அவனின் எண்ணத்தை அறிந்து முதலில் செயல்படுபவனாய் அவன் தான் இருக்கிறான் என்று அவன் மனம் மெச்சிக்கொண்டது.

“இங்கே தான் பக்கத்திலே டிசிஎஸ் இருக்கே அங்கே தான் நிற்கிறேன்” என ஆதித் பதில் கொடுத்த இரண்டு முன்று நிமிடத்தில் அவனுடைய கருஞ்சிறுத்தை பாந்தமாய் அவன் முன் வந்து நின்றிருந்தது. அதை விக்னேஷ் இயக்கி வந்திருந்தான், வெகு நாட்களாய் இந்தக் கருஞ்சிறுத்தையை இயக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறிய பூரிப்பில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. காரின் ஓட்டுநர் இருக்கையின் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி விக்னேஷை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான் ஆதித் கிருஷ்ணா.

“பாஸ் புரியுது.! நான் எப்படி இங்கே வந்தேன்னு தானே பாக்கிறீங்க.? எல்லாம் நம்ம மஹதி மேடம் வேலை தான், ஜெகன் சார்க்கு போன் பண்ணி கத்தியிருக்காங்க, அவர் எனக்குப் போன் பண்ணி காட்டு காட்டுன்னு காட்டிட்டாரு, நான் வர்றதுக்குள்ள மஹதி மேடம் கேப் பிடிச்சு போயிட்டாங்க சார்” என நடந்தேறியவற்றை ஒப்பிக்க ஆரம்பித்தான் விக்கி. அனைத்தையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்தவன்,

“ஆராவை ட்ரெஸ் பண்ண சொன்னேன்ல செஞ்சியா.?”

“பாஸ் அந்தப் பொண்ணைப் பத்தி எந்த டீடெயில்ஸூம் கிடைக்கலை” எனப் பதில் கொடுத்தான்.

“அவ ஏன் என்னை விட்டுட்டு போனான்னு தெரியணும்டா விக்கி” எனப் பேசியவனின் விழிகளில் குடிக்கொண்டிருந்த பெண்ணவளை பார்க்க விழிகள் ஏங்கியது, அவளைக் கண்டவுடன் புருவம் உயர்த்தி ரசிக்கும் அவனது விழிகள் கூட அவளைத் தேட ஆரம்பித்தது. அவள் ஒரு பரிசு, அவள் ஒரு ஆச்சரியம், ஆரா ஒரு பொக்கிஷம் அவனுக்கு.

“ஆதித்.! நான் இப்போ உன்னோட பி.ஏ, வா சொல்லலை, உன்னோட உயிர் தோழனா சொல்லுறேன். ஆராவை இதோட மறந்திடுடா. நான் ஏன் சொல்லுறேன்னா மஹதி இப்போ உன் வாழ்க்கையில் இருக்கிறாள். ” என அறிவுறுத்திய போதும், மஹதியை தனக்கு உரியவளாய் பார்க்க தடுத்தது ஆராவின் நினைவுகள்.

ஆரா அவள் தானே அவனின் நினைவலைகளில் ஒட்டிக்கொண்டு நகர மறுக்கிறாள். அவனின் கனவுகளும் ஆசைகளும் நிழல் தரும் மரத்திலிருந்து உதிர்ந்து போன இலையாக ஆனது, அவள் விட்டு சென்றாள் என்று அறிந்தும் அவளுக்காக, அவனின் ஆராவுக்காகக் காத்திருக்கிறான் இந்தக் கலியுக கிருஷ்ணன்.

********************************************************************************************

நிலவின் வரவுக்காக நட்சத்திரங்கள் காத்திருந்த வேளையில் ஒளிவீசும் முழுநிலவு அவதரிக்க, நிலவின் வரவை கொண்டாடிய நட்சத்திரங்கள் மின்னி மின்னி உற்சாகம் கொண்ட இரவு பொழுதில்,

பிருந்தாவனம் பேலஸ் இன்னும் உற்சாகமாய்க் காணப்பட்டது.

தகத் தகக்கும் பொண்ணிற உடையில் ஜொலித்தாள் மஹதி. பேலஸின் பின்புறம் அவளின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யபட்டிருந்து, உள்துறை அமைச்சர் ஜெகன்நாத்தின் இல்லா விழா என்பதால், முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

கோதண்டத்தின் பிஸ்னஸ் பார்டனர்களும், அதாவது கோதண்டத்தையும், ஜெகன்நாத்தையும் ஆதரிப்பவர்களும் வந்திருந்தனர்,

மஹதியின் அருகே புன்னகைத்தபடி நின்றிருந்தாள் லாவண்யா, அவள் அணிந்திருந்த பிங்க நிற சுடிதாரில் ஆரி வொர்க் எனச் சொல்லப்படும் வேலைப்பாடுகள் செய்யபட்டிருந்தது. லாவண்யாவின் புன்னகையைக் கண்டு ரகசியமாய் ஒருவன் ரசித்துக்கொண்டிருந்ததோடு, அவளை ரகசியமாய்ப் புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தான்.

“என்ன ஜெகன் இப்படிப் பண்ணிட்டீங்க.? ஒரே பொண்ணோட பொறந்த நாளு நம்ம பங்களால வைக்காமல், இந்தச் சின்னப் பேலஸ்ல வச்சிகிட்டு நல்லாவா இருக்கு.?” எனக் கேட்ட தன் நண்பரை பார்த்து மெலிதாய் சிரித்த ஜெகன்.

“என் பொண்ணு ஆசை தானே முக்கியம், அவ மாப்பிள்ளை வீட்ல தான் பிறந்த நாளை கொண்டாடணும்னு ஆசைபட்டாள்” எனச் சொல்ல,

“ஆனால் இன்னைக்கி உங்க பொண்ணை ஆதித் கிருஷ்ணா நடு ரோட்லையே விட்டுட்டுப் போயிட்டதாகச் செய்தி கிடைச்சுதே, உங்களுக்கு இருக்கிற வசதி வாய்ப்புக்கு இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்குப் போய் உங்க பொண்ணைப் பலியாக்கிட்டிங்களே”

“என்ன மணிகண்டா உன் பையனுக்கு என் பொண்ணைக் கட்டி வைக்கலைன்னு பொறமையில் பிதற்றாதே, ஆதித் கிருஷ்ணாவை பத்தி உனக்கு என்ன தெரியும்.? அவன் நினைத்தால் துரும்பையும் தூணாக்கிடுவான், உன் மகனுக்குக் கட்டிக்கொடுத்தால் என்ன பண்ணியிருப்பான்.? அப்பன் காசுல உதாரியா சுத்திட்டு இருந்தவன் பொண்டாட்டி காசுலையும் மாமனார் காசுலையும் ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்திருப்பான் அதுக்குத் தானே ப்ளான் பண்ணுற.?” தன் நண்பனிடம் முகத்தில் அடித்தாற் போல் பேசிவிட்டு அவர் திரும்பிய போது,

 கோதண்டம் புன்னகையுடன் தன் ஆருயிர் நண்பர் ஜெகனை கட்டிக்கொண்டார். இவர்களைப் பார்த்து பொறாமையுடன் அங்கிருந்து நகர்ந்தார் மணிகண்டன்.

“டேய் ஜெகன், எங்கே இன்றைக்கி நடந்த விசயத்தைப் பெருசாக்கிடுவியோன்னு பயந்திட்டு இருந்தேன்டா, நீ பெருந் தண்மையாய் பேசினது ரொம்பச் சந்தோசம்டா” எனப் புகழாரம் சூட்டினார் கோதண்டம்.

“கோதண்டம் உன் பையன் விசயத்தில இன்னைக்கி ஒரு முடிவு கட்டுறேன் நீ பொறுமையாகப் பாரு” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தவர் தன் மகள் மஹதியின் காதுகளில் எதோ கிசுகிசுக்க,

“அப்பா ரொம்பத் தேங்க்ஸ் அப்பா, இதை நான் எதிர்பார்க்கல” எனக் குதுகலித்தாள் மஹதி.

“என்ன அப்பாவும் பொண்ணும் ரகசியம் பேசிகிட்டு இருக்கீங்க” புன்னைகை முகமும் தங்கத்தால் இழையோடிய புடவையில் மங்களகரமாய் வந்து நின்ற யசோதாவின் வட்டக் கொண்டையில் மல்லிகை பூச்சரம் சுற்றபட்டிருந்து, அவரின் கண் கண்ணாடி அவருக்கு இன்னும் அழகு சேர்த்தது.

“ஆன்ட்டி யூ லுக் கார்ஜியஸ்” எனக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் இதழ் பதித்தாள் மஹதி.

“நீ மட்டும் என்ன மஹதி, என் மகனுக்கேத்த தேவதை மாதிரி ஜொலிக்கிறேடா”வாஞ்சையாய் மஹதியின் கன்னம் தடவியபோது.

“மருமகள் வந்ததும் இந்த மகளைக் கண்டுக்கிறதே இல்லை” போலியாய் கோபம் காட்டினாள் லாவண்யா.

“லாவா நீ என்னை விடப் பேரழகி” என லாவண்யாவின் அழகுகிற்குச் சான்றிதழ் வழங்கினாள் மஹதி.

“ஆமாம் அவ அழகி தான் என்னோட அழகி” எனச் சொன்ன மர்ம உருவம் மர்ம்மாய்ச் சிரித்தது.

“சரி பேச்சை மாற்றாமல், அப்பாவும் பொண்ணும் என்ன ரகசியம் பேசிகிட்டு இருந்தீங்கன்னு சொல்லுங்க”என ஆர்வமானார் யாசோதா.

“எல்லாம் நம்ம முடிவு பண்ணின விசயம் தான் சம்மந்தி”

“ஓ சொல்லிட்டீங்களா ஆதித் வந்ததும் நான் சொல்லிக்கலாம்ன்னு பார்த்தேன்” என் புன்னகை வீசினார் யசோதா.

“அதோ அண்ணா வந்துட்டான்” என உற்சாகமானாள் லாவண்யா.

புல்வெளியின் மேல் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளத்தில் தன் ஷூ கால்களைப் பதித்துக் கம்பீரமாய் நடந்துவந்தான், தன் முன் நெற்றியில் தவழ்ந்த கேசத்தை ஒதுக்கியபடி வந்தவனின் நீல கோர்ட்டில் இருந்து எட்டி பார்த்தது அவனின் பிங்க் நிற சட்டை.

அவனின் வரவை பார்த்தவுடன் சண்ட மேளங்கள் முழங்கியது, அனைவரின் கவனமும் ஆதித் கிருஷ்ணாவின் மீது நிலைக்குத்தி நின்றது. அவனின் கூர் பார்வை ஏனோ மஹதியை உற்று நோக்கியது, வெட்கத்தில் கன்ன கதுப்புகள் சிவக்க நின்றிருந்தாள் மஹதி.

மஹதியின் முன் பிரம்மாண்டமான கேக் வைக்கப்பட்டது, ப்ளூ பெர்ரி கேக்கை ஆசையாய் பார்த்தாள். ஹப்பிப் பர்த்டே மஹதி என ப்ரவுன் நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதுக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் அவளை நடு ரோட்டில் தன்னந்தனியே வாகன நெருக்கடியில் தன்னைத் தவிக்க விட்டுச் சென்றவன் இப்போது கம்பீரமாய்ச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருபவனை பார்த்து, அவன் மீது கோபம் கொப்பளித்தது.

ஆனால் அவளின் கோபத்தைக் காட்டும் இடம் இது அல்ல என உணர்ந்தவளாக, கோபத்தைத் தனக்குள் அடக்கியவள் கடினப்பட்டுப் புன்னகையை வெளிபடுத்தினாள். அவளின் எண்ணங்களை அறிந்தவன் போல், அவளை நெருங்கியிருந்த ஆதித் கிருஷ்ணா.

“சாரி மஹதி.! உன்னை அப்படித் தனியாக விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது, ஐ யெம் சாரி அகெய்ன், எனி வே ஹாப்பிப் பர்த் டே” எனச் சொன்னவன் அங்கிருந்து நகர முற்பட்ட போது.

“ஆதித்.!” தடுத்தது ஜெகனின் குரல்.

“ஜெகன் அங்கிள்.! சாரி”

“நீங்க சாரி சொன்னவுடன் நான் இழந்த மானம் மரியாதை திரும்பக் கிடைச்சிடுமா.? ஒவ்வொரு நியூஸ் சேனலும் கார் ஓட்ட தெரியாமல் நடு ரோட்டில் தத்தளித்த உள்துறை அமைச்சரின் மகள்ன்னு போடுறான், இதுக்கெல்லாம் காரணம் நீங்க தானே.? என்ன பதில் சொல்லப்போறீங்க”

“என்னோட மிஸ்டேக் தான் மன்னிச்சிருங்க, நான் மீடியாவை கூப்பிட்டு எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கிறேன்” என உறுதியாய் சொல்லி நகர்ந்தான்.

“அப்போ என் பொண்ணையும், உங்களையும் சேர்த்து வச்சு வர்ற கிசுகிசுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க”

“நான் தான் அன்னக்கே சொல்லிட்டேனே மஹதியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லி”

“என்ன ஆதித்.? இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுறீங்க, உங்களுக்காகத் தானே என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க வீட்ல வந்து தவம் கிடக்குறா”

“நான் ஒன்னும் உங்க பொண்ணைத் தவமிருக்கச் சொல்லை, நீங்க தாரளமா உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போகலாம்” ஆதித் சொன்ன பதிலில் தடுமாறி நின்றாள் மஹதி.

“இத்தனை நாள் உங்க வீட்ல இருந்த பொண்ணை, நான் யாருக்கு கட்டி கொடுக்க முடியும், ஊர் உலகம் ஏத்துக்குமா.?” கோபமாகச் சாடினார் ஜெகன்.

“இப்போ அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்லுறீங்க உங்களோட ஆசைக்காக எல்லாம், மஹதியை கட்டிக்க முடியாது, எனக்கு அவள் மேல் காதலும் இல்லை ஒண்ணும் இல்லை”

“நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு தெரிஞ்சு தான் ஆதித் இன்றைக்கே, என் பொண்ணோட பர்த்டே சர்ப்ரைஸா உங்களோட நிச்சயதார்த்தையும் அரேஜ் பண்ணிட்டேன்”

“வாட்.! உங்க பொண்ணுக்கிட்ட கேளுங்க இதில் அவளுக்குச் சம்மதமான்னு, ஏன்னா அவளுக்குத் தெரியும் என்னோட மனசு முழுக்க யாரு இருக்கிறாங்கன்னு” அவன் சொல்லி நகர்ந்த போது.

“அப்பா நான் ஆதித்கிட்ட பேசிகிறேன்” எனச் சொன்னவள் “ஆதித் எனக்குச் சம்மதம்” எனச் சொன்ன மஹதி அவனருகே நெருங்கியிருந்தாள்.

“மஹதி.! என் மனசுல ஆரா மட்டும் தான் இருக்கிறான்னு உனக்குத் தெரியும். அப்பறம் எதுக்காக இப்படிப் பண்ணுற.?”

“உங்க மனசுல இருக்கிற ஆரா, உங்க வாழ்க்கையிலையும் இருந்திருந்தால் நான் உங்க மேல வச்ச காதலை எனக்குள்ளயே வச்சுப் புதைச்சிருப்பேன். ஆனால் ஆரான்னு ஒருத்தி நிஜாமாவே இருக்கிறாளா.? இல்லை உங்களோட கற்பனையா ஆதித்.?”

“மஹதி திஸ் இஸ் நாட் ஃபேர், எங்க வீட்ல உன்னோட பர்த்டே பார்ட்டியை வச்சிட்டு என்னோட பர்சனல்லை மேடை போட்டு சொல்லுற வேலையைப் பண்ணாதே. ஆரா இஸ் மை பர்சனல்”

“நான் ஆராவை பத்தி பேசலை நீங்க தான் பேசினிங்க” என அவள் சொல்லி நக்கலாய் சிரிக்கும் போதே அவளின் எண்ணம் என்னவென்று அவன் புரிந்துக்கொண்டான்.

“இப்போ இங்கே நான் உங்க மனைவியாகப் போறவன்னு நீங்க உறுதிபடுத்தணும் ஆதித், இல்லைனா நான் எந்த எக்ஸ்டீரீமும் போறதுக்குத் தயாராக இருக்கிறேன்” என மஹதி ஆதித் கிருஷ்ணாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.

“உன்னால் ஆனதை பார்த்துக்கோ மஹதி” என உறுதியாய் சொன்னவனின் கரங்களில் கர்ப்பமாய் இருப்பதாய் உறுதி செய்யும் கருவியை அவன் கையில் வைத்தவள்.

“இது உங்களால தான்னு ஊருக்கே தெரியுற மாதிரி சொல்ல போறேன் ஆதித், நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலை தான் பட், ஒரு மாசமா உங்க மனசை கரைக்கிறதுக்காக நான் உங்க வீட்ல தங்கியிருக்கேன், இந்த ஒரு காரணம் போதுமே, அப்பறம் ஆதித் கிருஷ்ணாவின் லீலைகள்ன்னு மீடியால வெளியாகும், உங்க அருமை தங்கச்சி லாவண்யாவோட வாழ்க்கையைப் பத்தி யோசிச்சிட்டு முடிவு எடுங்க மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா” எதையோ சாதித்தது போல் கர்வத்துடன் பேசினாள் மஹதி.

“வாட்.? மஹதி லூசா நீ? இல்லாத கர்பத்தை இருக்குன்னு சொல்லுறே.? இதுல உன்னோட மானமும், உங்க அப்பவோட அரசியல் வாழ்க்கையும் அடங்கி இருக்குன்ற உறுத்தல் இல்லாமல் பேசிகிட்டு இருக்க, பர்த் டே கேக்கை கட் பண்ணிட்டு இங்கே இருந்து கிளம்புற வழியைப் பாரு, இனி நீ என்னோட வாழ்க்கை குள்ளையும் நுழைய முடியாது, என்னோட வீட்டுக்குள்ளையும் நுழைய முடியாது” அவன் அதட்டலாய் சொன்ன போது, லாவண்யா அங்கு வந்து நின்றிருந்தாள், ஆதித்தின் கரங்களில் இருந்த கர்பத்தை உறுதி செய்யும் கருவியைப் பிடிங்கி லாவண்யாவின் கரங்களில் வைத்த நொடியில் இருந்து மஹதியின் எண்ணம் நிறைவேற துவங்கியிருந்தது.

லாவண்யா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுபட்டு அவளை நிச்சயம் செய்துக்கொள்ளச் சம்மதித்தான் ஆதித் கிருஷ்ணா. அவன் இங்கு மஹதியின் கரம்பற்றி மோதிரம் பூட்டிக்கொண்டிருந்த அவ்வேளையில், அத்தருணத்தில், எங்கோ ஒரிடத்தில்,

“க்ரிஷ் என்னை மறந்துட்டியா?” என்ற குரல் அவனின் மண்டைக்குள் கேட்பதை போல் ஒரு பிரம்மை ஏற்பட, மோதிரம் பூட்டிக்கொண்டிருந்தவன் ஷாக் அடித்ததைப் போல் கையை உதறினான். வைரமோதிரம் நிலத்தில் விழுந்து பளபளக்க,

“ஆதித்.?” எனக் கோபமாய் ஏறிட்டவளை,

“கட்டாயபடுத்திக் காதலை வர வைக்க முடியாது மஹதி! அது ஒரு கலை யார் மேலையும் திணிக்க முடியாது. நீ பண்ணுற எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணும்” எனக் கோபமாய் அவளின் விழி பார்த்து முறைத்தான்.

“அண்ணா மோதிரம்” என லாவண்யா நீட்ட, மீண்டும் அதை வாங்கி மஹதியின் விரலில் பூட்டிய போது.

“ரொம்பச் சந்தோசபடாத மஹதி! என்னோட போன்ல உன் நம்பரை வொய்ஃப்னு பதிஞ்சு வச்சது எப்படிக் கனவாகப் போகுதோ, அதே மாதிரி இந்த மோதிரமும் உன் கையை விட்டு போகும்”

“ட்ரை யுவர் பெஸ்ட் ஆதித்!! ஓடி போனவ, ஓடி போனவ தான் அவ வரமாட்டா, என்னை விட்டா உனக்கு வேற சாய்ஸே இல்லை” எனச் சிரித்தபடி சொன்னவள் அவன் விரலில் மோதிரம் பூட்டியவுடன் ஆரவாரமாய் அனைவரும் கைதட்ட, மலர்கள் ஆசீர்வாதமாய் அவர்கள் மேல் மழைப் போல் பொழிந்தது.

தொலைவில் கேட்கும்

உன் குரலை.!

அறியாமல்,

நின் நினைவுகளை

துரத்தி செல்கிறேன்

என் காதலே.!

*******

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்