Loading

24

 

ஐந்து நெடிய வருடங்களுக்குப் பிறகு…

 

கடற்கரை ஓரத்தில், கடலை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தனர், சக்கரவர்த்தி மற்றும் ராஜலட்சுமி.

 

“நம்ம குழந்தை எப்படி இருக்கான் ராஜி..” என்று சக்கரவர்த்தி முடிக்கும் முன், “என்னோட பையன்” என்று ராஜலட்சுமி திருத்தியிருந்தார்.

 

ஒரு பெருமூச்சு விட்டவர், “நான் சொல்றத கேளு ராஜி.. ப்ளீஸ்..” என்க,

 

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க” என்றார்.

 

“புரிஞ்சுக்கோ ராஜி.. நிதானமா கேளு..” என்ற சக்கரவர்த்தி, “நம்ம புள்ளைங்க உயிருக்கு ஆபத்து இருக்குடா.. ப்ளீஸ்.. நாம இந்த ஊரைவிட்டுப் போகனும்” என்று கூற,

 

ராஜலட்சுமி அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தார்.

 

“அபூர்வா மேல தெரியாம நான் செய்த முயற்சி, என் தொழில் சார் எதிரிகளுக்குத் தெரிஞ்சுடுச்சு.. அவங்க அவனை டெஸ்ட் பண்றதுக்கு யூஸ் பண்ண ட்ரை பண்றதா எனக்கு அரசல் புரசலா செய்தி வருது. நம்ம ரெண்டாவது குழந்தைக்கும் இதனால ஆபத்து வர வாய்ப்பிருக்கு” என்று அவர் கூற,

 

அவர் சட்டைப் பாட்டாவை ஆத்திரத்துடன் பிடித்த ராஜலட்சுமி, “தள்ளி இருந்தாகூட நிம்மதியா வாழ விட மாட்டீங்களா? உங்க வாசமே அண்டாதபடிதான அவன வளக்குறேன் நானு? நீங்க இருக்குற இடத்தைவிட்டு தள்ளியிருக்க நினைச்சா அங்கயும் வந்து சாவடிக்கிறீங்களே.. மனுஷனாயா நீ? என் மூத்த பிள்ளையை எங்கிட்டருந்து பிரிச்சு, என் ரெண்டாவது குழந்தை உயிருக்கும் பாதகம் விளைவிக்கிறியே? நல்லா இருப்பியா நீ?” என்று ராஜலட்சுமி கத்தினார்.

 

“ராஜி ப்ளீஸ்.. தயவுசெஞ்சு இப்பவாவது என்னைப் புரிஞ்சுக்கோ. அது தெரியாம நடந்தது.. இட்ஸ் அன் ஆக்ஸிடென்ட்.. பட் அது தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தது என் சுயநலம் தான்.. அதுக்கு இன்னும் எனக்கு எத்தனைத் தண்டனை கொடுப்ப? உனக்கு நான் தேவையில்லாம இருக்கலாம்.. ஆனா அபூக்கு நீ வேணாமா? நம்ம ரெண்டாவது புள்ளைக்கு அப்பா வேண்டாமா? உன் பிடிவாதத்துக்காக நம்ம பிள்ளைகளை ஏன் வதைக்கிற?” என்று சக்கரவர்த்தி கேட்க,

 

“யாரு நான் வதைக்குறேனா? நீ தான் எல்லாத்துக்குமே காரணம்.. நீ மட்டும் தான் காரணம்” என்று அவர் புஜங்களில் அடித்தபடி மடிந்தமர்ந்து அழுதார்.

 

உடைந்து போன ஒன்றை, ஒட்டாத, ஒட்ட வைக்க இயலாத ஒன்றை, இனி என்ன செய்திடத்தான் இயலும் என்ற ஆற்றாமை கொடுக்கும் ஆற்றுப்படுத்த இயலாத வேதனையை சுமந்துத் தவித்து நின்றார் சக்கரவர்த்தி.

 

காதல் எத்தனை கொடிய உணர்வல்லவா? வலி பெற்றவரையும் வருத்துகிறது, வலி கொடுத்தவரையும் வருத்துகிறது…

 

கண்ணீரோடு மனைவியின் கோபத்தில் உள்ளூர உடைந்துருகிய சக்கரவர்த்தி, “சரிடி.. நான் தான்.. அதை சீர் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தரமாட்டியா?” என்று கேட்க,

 

கணவரைக் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தவர், “உன்னைப் பார்த்தாலே நீ பண்ண ஏமாற்றம்தான் நினைவு வருது..” என்று கதறினார்.

 

“எனக்கு மனைவியா உன்னைக் கூப்பிடலை.. நம்ம பிள்ளைகளுக்கு அம்மாவாதான் கேட்குறேன்.. ப்ளீஸ்.. நம்ம பிள்ளைகளுக்காக வா. வேற எங்கயாவது போவோம். புது வாழ்க்கையைத் தேடுவோம்.. உனக்கு என்னைப் பிரிஞ்சாதான் நிம்மதினு அங்கப் போனப் பிறகும் தோன்றினா, சத்தியமா உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன்” என்று சக்கரவர்த்தி கூறினார்.

 

மனமொடிந்து அழுதவர் வேறு வழி தெரியாது சம்மதம் கூறினார்.

 

அன்றைய இரவு, புறப்பட ஆயத்தங்கள் செய்த ராஜலட்சுமி, உறங்கியத் தன் ஐந்து வயது குழந்தையான, கருப்பசாமியைத் தோளில் போட்டுக் கொண்டு, மூன்று சக்கர வாகனத்தில், சக்கரவர்த்தி இல்லத்தினை அடைந்தாள்.

 

வீட்டு வாசலில் பெரும் கலவரமான சப்தம் கேட்டு, ராஜலட்சுமி குழப்பமாய் வாகனத்தை விட்டு இறங்க,

 

“ராஜி.. போ..போயிடு..” என்று சக்கரவர்த்தி குரல் கொடுத்தார்.

 

அவர் கண்ட காட்சி, வாழ்நாள் முழுதும் மறந்துவிட இயலாத ஒரு காட்சியாகத்தான் சர்வ நிச்சயம் அமைந்திருக்கும்.

 

சக்கரவர்த்தியைக் கழுத்தோடு நெறித்தபடி ஒருவன் அடிக்க, “குழந்தை எங்கடா?” என்று மற்றவன் கத்தினான்.

 

“உன்னால அவனை எங்க தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறிய சக்கரவர்த்தி, “ராஜி.. போ.. போயிடு” என்று கத்த,

 

அக்கம் பக்கத்திலிருந்து சலசலப்பு ஏற்பட்டது.

 

சக்கரவர்த்தியைத் தாக்கிய அடியாட்கள், ராஜியை நெருங்க முற்பட, ராஜலட்சுமி வேகமாக மூன்று சக்கர வாகனத்தினுள் நுழைந்திருந்தார்.

 

ஓட்டுனரும் நிலை உணர்ந்து விரைந்து வாகனத்தை எடுக்க, ராஜலட்சுமி தன் மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறத் துவங்கினார்.

 

‘இந்த கொடுமைக்குத்தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. என் வாழ்க்கையோட சேர்ந்து என் பிள்ளைகள் வாழ்க்கையும் நாசமா போகுதே’ என்று அவர் கதறியதைக் கேட்கக்கூட யாருமில்லை…

 

தன் ஒரு மகனையாவது காத்துவிட வேண்டும் என்று, அவரது தாய் உள்ளம் கதறித் துடித்தது. அப்போது அவருக்குத் தோன்றிய யோசனைதான், அவருக்கு குழந்தை பிறந்த மருத்துவமனைக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம்.

 

வண்டியை அங்கு விடும்படி பணித்தவர், விரைந்து சென்று, கருப்பசாமியை அவர்களிடம் ஒப்படைத்தார்.

 

“தயவுசெஞ்சு இவனை யாருக்கும் தத்து கொடுக்காதீங்க.. பெத்தவ நானே வந்து கேட்டாகூட தராதீங்க.. இ.. இவனுக்கு பெத்தவங்களா வாழும் தகுதியையே நாங்க இழந்துட்டோம்.. இவனோட அப்பானு சொல்லிக்கிட்டு யாரு வந்தாலும் கொடுத்துடாதீங்க” என்று அழுதபடி தன் மகனைப் பார்த்தவர், ஆசைதீர அவனுக்கு முத்தங்கள் இட்டு, அவர்களிடம் ஒப்படைத்தார்.

 

கணவரின் நிலையும் மனதை அறுத்தது. மகனின் பாதுகாப்பு உறுதியான நிலையில், இனி தன் உயிருக்கு என்ன வந்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றிவிட, மீண்டும் கணவரைத் தேடிச் சென்றார்.

 

அவரது வீட்டில் மயான அமைதி.

 

அக்கம் பக்கத்தார் வந்துவிட்டதில், அடிதடிக்கு வந்தவர்கள் ஓடிவிட, அருகிலிருக்கும் மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த சக்கரவர்த்தி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

விரைந்து சென்று கணவரைப் பார்த்தவர், பொறுக்க முடியாமல் வெடித்து அழுதார்.

 

“இதெல்லாம் தேவையா? இந்த அவதியெல்லாம் தேவையா?” என்று முகத்தைக் கரங்களில் புதைத்து அவர் விக்கி வெதும்பி அழ,

 

சக்கரவர்த்திக்கு வாழ்க்கையே அந்த நொடி வெறுத்துப் போனது.

 

நல்ல ஆராய்ச்சியாளனாகவும் தான் இல்லை. நல்ல கணவனாகவும் இல்லை. நல்ல தந்தையாகவும் இல்லை.. இந்த ஒரு எண்ணம் போதாதா அவர் தம் வாழ்வை வெறுக்க?!

 

“எங்க என் பையன்? எங்க என் பையன்?” என்று ராஜலட்சுமி கதற,

 

“அம்மா..” என்று ஒரு பிஞ்சு குரல் அவர் நெஞ்சை அறுத்தது.

 

அழுது கொண்டிருந்த ராஜலட்சுமி, மகனைத் திரும்பிப் பார்க்க, அரை தூக்கத்தில், “அம்மா..” என்ற பிதற்றலுடன் வந்தான்.

 

“அபூ..” என்று அழுதவர் அவனை வாரி அணைத்துக் கொண்டார்.

 

அந்த தருணத்தை அவரால் சொல்லில் வடித்திட இயலாது. வலியின் உச்சம், பாசத்தின் மிச்சம்…

 

ஐந்து நெடிய வருடங்களின் பிரிவு, அந்நொடி பூதாகரமாய்த் தோன்றியது. தான் பெற்ற இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக இருக்க முடியவில்லையே? என்ற வலி அவரைத் தீயாய் சுட்டது.

 

“எல்லாம் உங்களாலதான்.. நான் உங்களை காதலிச்சிருக்கவே கூடாது.. காதலுங்குற ஒத்த பாவத்தை செஞ்சு தொலைச்சுட்டு நான் அல்லாடுறது மட்டுமில்லாம, நான் பெத்த பிள்ளைகளையும் தவிக்க வச்சுட்டேன்” என்று ராஜலட்சுமி கதற,

 

“ராஜி..” என்று படுக்கையிலிருந்து எழுந்து வந்து மனைவியை அணைத்துக் கொண்டார் சக்கரவர்த்தி.

 

“சத்தியமா சொல்றேன்.. இப்படியெல்லாம் நடக்கும்னு நானும் எதிர்பார்க்கவே இல்ல.. நம்ம குழந்தைங்களோட பாதுகாப்புக்குத்தான் நானும் இப்பத் தவிக்குறேன்டா.. இங்கிருந்து எங்கயாவது கண்காணாம போயிடலாம்.. இந்த ஆராய்ச்சியே வேணாம்.. எனக்கு இந்த வேலையும் வேணாம்.. எனக்கு நீங்க போதும்டா.. நீங்க போதும்.. சத்தியமா நான் இதையெல்லாம் அடியோட விட்டுடுறேன்டா..” என்க,

 

“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்?” என்று அழுதார்.

 

“என்கூட வேலைப் பார்த்தவங்களே, இப்படியெல்லாம் என் பிள்ளையை வச்சு ஆராய்ச்சிப் பண்ண நினைப்பாங்கனு நான் கனவுல கூட நினைக்கலைடாமா.. அவனைக் குணப்படுத்த நான் உதவி கேட்கப் போகும்போதுதான் இப்படியெல்லாம் நடக்குதுனு எனக்குத் தெரிஞ்சது. உன்னை மீட் பண்ணி நான் இங்கிருந்து போயிடலாம்னு சொன்னதை தெரிஞ்சுகிட்டு நம்ம அபூவைக் கடத்த பார்த்தாங்க. நான் அவனை வீட்டு பேஸ்மென்ட்ல யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சுட்டேன்.. அ..அக்கம் பக்கத்திலிருந்து ஆட்கள் வரவும், அவங்கள்லாம் போயிட்டாங்க.. அபூவோட நான் ஆஸ்பிடல் வந்துட்டேன்.. நீ வாடா.. நாம போயிடலாம்.. குழந்தை.. குழந்தை..” என்றவர், “குழந்தை எங்க?” என்று கேட்க,

 

ராஜலட்சுமி பெருங்குரலெடுத்து கதறினார்.

 

“ரா..ராஜி.. ராஜி.. அழாதடா.. ப..பயமா இருக்குடா.. ந..நம்ம பிள்ளைக்கு ஒன்னுமில்ல தான? சொல்லுடா” என்று ஏகத்துக்கும் சக்கரவர்த்தி பதற,

 

“அப்பா அம்மானு இருந்தும் எம்புள்ளய அநாதையா வளர விட்டுட்டீங்களே.. இப்படியெல்லாம் ஆகனுமா அவனுக்கு?” என்று கதறினார்.

 

“என்னடி சொல்ற?” என்று சக்கரவர்த்தி அதிர்வாய்க் கேட்க,

 

“எல்லாம் நான் வாங்கி வந்த சாபம்.. தயவுசெஞ்சு இந்த புள்ளையையாவது நல்லபடியா கூட்டிட்டுப் போய் எங்கயாவது விட்ருங்க.. உங்கக் கூடவோ என்கூடவோ வளரும் வரை நம்ம பிள்ளைகளுக்கு நிம்மதியே இல்ல” என்று அழுதாள்.

 

“ராஜி.. என்ன பேசுற நீ? நம்ம பிள்ளைகள நாம இருக்கும்போது ஏன் அநாதையா விடனும்? முட்டாளா நீ? பைத்தியமா?” என்று அவர் கத்த,

 

“பைத்தியம் தான்.. உங்களைக் கட்டினேன்ல? நான் பைத்தியம் தான்..” என்று கத்தினார்.

 

இதற்கிடையில் கண்விழித்த அபூர்வன் சப்தத்தில் அழத் துவங்கிட, வெளியே பெரும் சலசலப்புக் கேட்டது.

 

“டேய் தேடுங்கடா.. அந்த பிள்ளையைப் பிடிக்காமப் போகக்கூடாது.. சைலென்டா போங்க..” என்று கேட்ட சப்தத்தில் தம்பதியரின் முகம் வெளுத்தது.

 

அழுது சிணுங்கிய மகனின் வாயை பொத்திய ராஜலட்சுமி, கணவனை நோக்க,

 

சக்கரவர்த்தி அடுத்து என்ன செய்வதென்று புரியாது தவித்தார்.

 

மெல்ல தான் மட்டுமாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்த சக்கரவர்த்தி, மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு, மருத்துவமனையின் பின்வாசல் வழியாக செல்ல முற்பட்ட நேரம், அவர்களைத் தேடி வந்தோரின் கண்களில் பட்டுத் தொலைத்தனர்.

 

“டேய் அந்தோ போறாங்க புடிங்கடா..” என்று ஒருவன் கத்தவும் பரபரப்பானவர்கள் விரைந்து ஓடத் துவங்கினர். மகனைத் தோளில் போட்டுக் கொண்டு, மனைவியையும் இழுத்துக் கொண்டு சக்கரவர்த்தி ஓட,

 

தூரத்திலிருந்து அவர்களை நோக்கிக் கத்தியை வீசியிருந்தான் ஒருவன்.

 

சரியாக அது ராஜலட்சுமியின் முதுகில் குத்திவிட, “ஆ…” என்று வலியில் அலறினார்.

 

“ராஜி..” என்று சக்கரவர்த்தி மனைவியைத் தாங்க,

 

“புடிங்கடா..” என்று பின்னே சப்தம் கேட்டது.

 

ரத்தம் படிந்த கரத்தோடு, தன் மகனின் முகம் வருடிய ராஜலட்சுமி, ஓட முயல, அவரால் சுத்தமாக முடியவில்லை.

 

“ப்ளீஸ்.. என்னை விட்டுட்டுப் போங்க..” என்று அவர் கூற,

 

மனைவியையும் தரதரவென்று இழுத்துக் கொண்டு, அத்தெருவைக் கடந்து, லாரி ஒன்றின் பின் சென்று பதுங்கினார்.

 

இதற்குள் அதிர்ச்சியினால் அபூர்வனும் மயங்கியிருந்தான்…

 

“ர..ராஜி..” என்று மெல்லொலியில் அழைத்தவர், கண்ணீரோடு ‘அய்யோ’ என்று ஓசையின்றி கதற,

 

“எ..எம்புள்ளைங்க.. ந..நல்லபடியா வாழனும்.. ரெண்டாவது ப..பையன.. எம்மேல ஆணையா..எ..எங்கயும் தேடிப் போகாதீங்க.. அ..அவன். அவனாவது.. நிம்மதியா வாழட்டும்..” என்று திக்கித் திணறி ராஜலட்சுமி கூறினார்.

 

“அய்யோ ராஜி..” என்று அவரை அணைத்தபடி அவர் அழ,

 

“இ..இவன எப்படியாவது காப்பாத்திடுங்க சக்ரா..” என்று கண்ணீரோடு மகனின் தலை வருடியபடி ராஜலட்சுமி கூறினார்.

 

“எ..என்னால எ..எந்த பிள்ளைக்கும் நல்ல அம்மாவா இருக்க முடியலைனுதான் க..கடவுளே எ..என்னை எடுத்துக்குறார் போல..” என்று விரக்தியும் வலியுமாக ராஜலட்சுமி கூற,

 

“அய்யோ.. எல்லாம் என்னாலதான் ராஜி..” என்று அழுதார்.

 

“இ..இல்லனு சொல்ல மாட்டேன்.. உ..உங்களால தான்.. தி..திருந்த வாய்ப்பு கேட்டீங்க தானே? தி..திருந்தனும்னு நினைச்சா இ.. இந்த வேலையை விட்டுட்டு என் பிள்ளைய காப்பாத்திக் கூட்டிட்டு எங்கயாவது கண்காணாமப் போயிடுங்க.. ப்..போயிடுங்க” என்றவர், கணவரைக் கண்களில் நிறைந்தபடியே உயிர் நீத்தார்..

 

“ராஜி..” என்று உணர்ச்சி மிகுதியால் அவர் சிரத்தைத் தன் நெஞ்சோடு புதைத்து சக்ரவர்த்தி கதற,

 

ஓசை கேட்டு, கயவர்கள் ஓடி வந்தனர்.

 

தன் மனைவியின் கடைசி ஆசையையாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று மகனைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடியவர் லாரி ஒன்றைப் பிடித்து ஏறி திசை தெரியாமல் தொலைந்து தப்பித்தார்.

 

கிடைக்குமிடத்தில் வேலை செய்து, மகனை வளர்த்தவருக்கு, வாழ வேண்டுமென்ற கடமையாக அவன் தான் திகழ்ந்தான்.

 

தந்தை கூறியவற்றையெல்லாம் கேட்ட அபூர்வன் அதிர்ந்து போன குரலில், “அ..அப்படி என்னதான்பா எனக்குப் பண்ணீங்க?” என்று விக்கித்துப்போன குரலில் வினவ,

 

“ஹி..ஹியூமன் ஃபோட்டோஸிந்தஸிஸ்” என்று பெரும் அதிர்வை அவனுக்குக் கொடுத்தார்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்