
”
அத்தியாயம் -9
அந்த சங்கடத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே யோசனையில் இருந்தாள்.அவளின் முகமாற்றத்தைக் கண்ட தர்ஷன் நேராக அவளுக்கு அருகில் சென்று “ஆதிரை” என்று அழைத்தான்.
“சொல்லுங்க”
“ஆதி என் மேல வருத்தப்படாதீங்க இந்த டிரெஸ் நான் வேணும்னு போட்டுக்கலை ஏதேச்சையாக அமைந்தது என் அம்மா எனக்கு டிரெஸ் பார்சல் அனுப்பி இருக்கிறதாக சொன்னாங்க வந்து போட்டப் பிறகு தான் தெரியும் வேணும்னா நீங்களே பாருங்க” என்று தன் கையில் வைத்திருந்த கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்தியைக் காட்டினான்.
அதில் அவர் இரண்டு நாட்களே முன்னரே அனுப்பி இருந்தது தெரிய வந்தது.அப்போது தர்ஷன் “உங்கள் வாழ்க்கை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாய் இருக்குமானால் எவருடனும் எந்த பொருளின் மீதும் முரண்பாடு இருக்காது” என்றான்.அவள் விரும்பும் அந்த இனியக் குரலில்.
அதைக் கேட்டதும் ஏதோ ஒரு தைரியம் ஒட்டிக் கொள்ள சுற்றி இருந்தவர்கள் தன்னைப் பற்றி யோசிப்பார்கள் என்பதை விட தான் வந்திருந்த இனிமையான நினைவுகளுக்கு தயாரானாள்.
அங்கே நடந்த அழகிய தருணங்களை புகைப்படத்தில் முகம் முழுக்க புன்னகையோடும் விளையாட்டு பேச்சுகளுக்கு புன்னகையோடு நேரம் செல்ல நினைவாக தன் அம்மாவிற்கும் வியன்காவிடமும் அங்கே நடந்த முக்கிய நிகழ்வினை வீடியோ மூலம் காட்டினாள்.
ஆதிரையைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்கே” என்று மகளும் அம்மாவும் பாராட்டிக் கொண்டனர்.அன்றைய இரவு ஆடலும் பாடலோடு சிரிப்பும் சந்தோஷமுமாய் நிறைந்து இருந்தது.
மறுநாள் விடியற் காலையில் வெகு சீக்கிரமே எல்லோரும் தயாராகி கோவிலுக்குச் சென்றனர்.குறித்த முகூர்த்த நேரத்தில் சிந்தியா மணப்பெண் கோலத்தில் மணமேடையை நோக்கி வரும் போது ஆதிரையும் இன்னும் சில பெண்களும் கையில் விளக்கேந்தி வந்தனர்.
பெற்றோர்,நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் முன்னிலையில் சிந்தியாவின் கழுத்தில் மதன் தாலியிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
சிந்தியாவின் விழிகளில் கண்ணீரையும் முகத்தில் புன்னகையோடு இருக்க அவன் நெற்றியில் திலகம் இடும் போது மெதுவாக “இனிமேல் இப்படி எல்லாம் அழக் கூடாது சிந்தியா உன் முகத்தில் புன்னகை தான் நிலைச்சு இருக்கனும்” என்ற போது சரியென்று தலையசைத்தவள் “இனிமேல் என்னை எப்பவும் தனியா விட்டுற மாட்டீங்கல்ல” என்று அவள் ஏக்கமாய் கேட்கவும் அவள் கையை இறுக அணைத்தவன் “இல்லை நாம எப்பவும் சேர்ந்து தான் இருப்போம்” என்றான் அன்போடு…
இதை எல்லாம் அருகில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரைக்கு சிந்தியாவுக்கு கிடைத்த வாழ்க்கையினை எண்ணி மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விழிகளில் நிரப்பிக் கொண்டது.இதை எல்லாம் தர்ஷன் பார்த்துக் கொண்டிருந்தான்.
திருமாங்கல்யத்தை வாங்கியவளின் பாதத்தில் மெட்டியிட்டான் மதன்.பின்னர் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
இடையினில் குட்டிம்மா வந்து இரண்டுபேருடைய கையையும் பிடித்துக் கொண்டாள்.ஆதிரையும் கொஞ்சம் தள்ளி தர்ஷனும் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அருகில் வரவும் ஆதிரையும் சிந்தியாவும் கட்டிக் கொண்டனர்.
“வாழ்த்துக்கள் சிந்தியாமதன் உன் வாழ்க்கையில் அன்பும் சந்தோஷமும் நிறைஞ்சு இருக்கனும்” என்றவள் கன்னத்தில் லேசாக அன்பாக முத்தமிட்டாள் ஆதிரை.
அவள் அப்படி செய்ததும் சிந்தியாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.அவளை இறுக அணைத்தவள் “உன் வாழ்க்கையிலும் அன்பும் சந்தோஷமும் இனிமேல் நிறைந்து இருக்கனும்னு என் கல்யாண முடிந்த உடனே கடவுள்கிட்ட வைச்ச முதல் பிராத்தனையே உனக்காகத் தான் ஆதிரை” என்ற போது சரியென்று தலையசைத்தாள்.
இங்கே மதனும் தர்ஷனும் முதலில் கைக்கொடுக்கவும் “கங்கிராட்ஸ் மதன்” என்ற போதூ மதன் “ரொம்ப தாங்ஸ் தர்ஷன் உன்னாலத் தான் இந்தக் கல்யாணமே நடந்துச்சு இதுல எல்லாமே நீ எனக்காக செய்தது பெரிய விஷயம்” என்றான் அன்போடு ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
தர்ஷன் “உனக்காக நான் இதுக்கூட செய்ய மாட்டேனா நீ என்னோட நண்பன்” என்றான்.
மதன் “தர்ஷா உனக்கான ஒருத்தி சீக்கிரம் கிடைக்கனும்டா நீ பழசை எல்லாத்தையும் மறந்து உனக்காக வாழனும்” என்ற போது அவனோ சற்றே முக வாட்டத்தோடு சரியென்பது போல் தலையசைத்தான்.
ஏதோ நிறைவாய் இருந்தது ஆதிரைக்கு. “ரொம்ப பாசமோ?” என்று கேட்டதும் திரும்பிப் பார்க்க அங்கே தர்ஷன் நின்றுக் கொண்டிருந்தான்.அவனுக்கு தெரியக்கூடாது என்று வேக வேகமாக கண்ணீரை துடைக்க போகும் போது அவனோ “நான் எல்லாத்தையும் ஏற்கனவே பார்த்துட்டேன் அவசரமா துடைக்கிறேன்னு விழிகளை நிரப்பிக் கொண்டிருக்கும் அழகு மையையும் சேர்த்து அழிச்சிடாதீங்க நல்லா இருக்காது” என்ற போது அவனைப் பார்த்து முறைத்தாள்.
அதைப் பார்த்து சிரித்தவனிடம் “ம்ம்… என்னை நோட்டம் இடுவது தேவையில்லாதது இதுக்கு ஒரு பொண்ணை ரூட் விட்டாலாவது எதாவது வழி கிடைச்சிருக்கும்” என்றாள் கிண்டலாக…
அதைக் கேட்டவனோ “ச்சே இத்தனை நாளாக இந்த யோசனை எனக்கு இல்லாமல் போயிடுச்சு நீங்க சொல்லித் தான் இந்த மரமண்டைக்கு புரியனும்னு நினைக்கிறேன்” என்றதும் அவளோ “புரிந்தால் சரி தான்” என்றாள்.
அவனோ “நமக்கு தெரிஞ்சவங்க அதுவும் தீவிர ரசிகை கவலையா இருக்காங்களே கொஞ்சம் ஆறுதல் படுத்தலாம்னு வந்தேன் அதுக்கு எனக்கு இது தேவை தான்” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.
அவளோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை சிந்தியாவும் மதனும் பார்த்தனர்.
தர்ஷன் “அப்புறம்?”
“என்ன அப்புறம்?” என்று ஆதிரை கேட்க…
“கல்யாணம் முடிஞ்சது அடுத்து என்ன?”
“என்ன வீட்டுக்கு போய் பழைய லைவ் ஸ்டார்ட் ஆகிடும்” ஆதிரை உடனே பதிலளித்தாள்.
அவனோ “அவ்வளவு தானா?” என்று அவன் அழுத்திக் கேட்டதும் அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பதிலைச் சொன்னவள் இப்போது தான் நிமிர்ந்து அவனை உற்று நோக்கினாள்.
தன்னை விட உயரத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே உயரம்.வெள்ளை நிற பட்டுவேட்டி பட்டுச் சட்டையில் கலைந்த தேகம் விரிந்த நெற்றியில் சின்னதாய் சந்தனப் பொட்டு வைத்து கூர்மையான விழிகளோடு லேசான தாடியில் சட்டையின் கையை பாதி மடக்கி வைத்திருக்க அதில் இவள் கொடுத்திருந்த வெள்ளி பிரேஸ்லேட் இன்னும் அது அவன் கையில் இருந்தது.
முப்பது வயதிற்கு மேல் இருக்கும் என்று அவனைப் பார்த்தால் ஓரளவு கணித்து விடலாம் கொஞ்சம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு நிற்கும் அவனைப் பார்க்க அவனோ இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது பார்வையின் அர்த்தத்தை சட்டென்று புரிந்தவனோ மெலிதாக புன்னகத்தவன் “இப்போத் தான் பக்கத்துல ஒரு மனிதன் நிற்கிறதையே கவனிக்கிறீங்க போல பார்க்க எப்படி இருக்கேன்? நல்லா இருக்கேனா?” என்று அவன் கேட்டதும் தான் தாமதம் வேகமாக பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவனோ அதற்கும் சிரித்தப்படியே நின்றவன் “ஓகே நான் வெயிட் பண்றேன்” என்றான் தர்ஷன்.
ஆதிரை “எதுக்கு?” என்று கேட்டு திரும்பும் போது அங்கு அவன் இல்லை.சுற்றும் முற்றும் விழிகளாலேயே ஒருமுறை தேடி அலசினாள்.அவன் தான் அங்கே இல்லை.
சிந்தியாவையும் மதனையும் பூஜை செய்வதற்காக அழைத்துச் செல்ல எல்லோரும் கிளம்பவும் இவளும் சென்று விட்டாள்.அடுத்தடுத்து சடங்கு சம்பிராதயங்கள் நிறைய இருக்க எல்லாவற்றிலும் சிந்தியாவிற்கு துணையாக நின்றாள் ஆதிரை.
நேரம் வேகமாக போனது.அடுத்து புடவையை மாற்றி ஒப்பனைக்காக சிந்தியா உட்கார்ந்து இருக்கும் போது ஆதிரை இதோ வருகிறேன் என்று இரண்டுமுறை வெளியே சென்று தர்ஷனைத் தேடினாள்.அவன் எப்போதும் யாராவது ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது இல்லை வேலையில் இருப்பதைப் பார்த்து விட்டு அமைதியாக வந்தாள் ஆதிரை.
அதைப் பார்த்து சிந்தியா “ஏன் ரொம்ப பரபரப்பாக இருக்கே நான் தான் அப்படி இருக்கனும் உனக்கு என்னாச்சு?” என்ற போது
“ஒன்னுமில்லை வியன்கா கால் பண்ணுறேன்னு சொன்னாள் போன்ல டவர் இல்லை அதான்”
“ஓ அப்படியா! அப்புறம் தர்ஷனோட தீவிர ஏதோ டிஸ்கஷன் போயிட்டு இருந்துச்சு போல” என்று அவளைப் பார்த்துக் கேட்க…
ஆதிரை சிந்தியாவை நேராக பார்க்காமல் எங்கேயோ பார்த்தப்படி “சும்மா அடுத்து என்னன்னு பேசிட்டு இருந்தோம்” என்றாள்.
அவள் அடுத்து கேட்பதற்குள் மதனின் அம்மா அடுத்த சடங்கிற்காக அழைத்தார்.அதனால் இவர்கள் அதற்கு தயாராகி சென்றனர்.
மணமக்களை அவர்களுக்கான அறைக்கு அனுப்பி விட்டு ஆதிரை தன் அறைக்கு வந்து படுக்கும் போது இரவாகிப் போனது.இரண்டு நாட்களாக தொடர்ந்து நிகழ்ச்சியில் சோர்வாக இருக்க அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்தவள் மொட்டை மாடியில் வந்து அவளுக்கு கொடுத்து அனுப்பிய காபியை குடித்துக் கொண்டிருக்கும் போது சிந்தியா வந்தாள்.
சிந்தியாவைப் பார்த்து சிரித்தவள் “என்ன மேடம் இப்போத் தான் எழுந்தீங்க போல?” என்று கேட்கவும்
“நான் சீக்கிரமா எழுந்திட்டேன் நீ தான் அசந்து தூங்கிட்டு இருந்தே இன்னும் கொஞ்ச நேரத்துல க்ரஹபேரவேசம் இருக்கு ரெடியாகி வா” என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
ஆதிரை “ஹேய் என்ன ஒன்னுமே சொல்லாமல் போறே?”
“என்னச் சொல்லனும்?”
“என்ன ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறே?”
“சின்னப் பசங்ககிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது” என்று சொல்லி சிரித்து விட்டு சென்று விட்டாள் சிந்தியா.
சிந்தியா சொல்லி சென்ற பத்து நிமிடத்தில் கீழே சென்றாள்.பாதி சொந்தங்கள் கிளம்பி இருக்க முக்கியமானவர்கள் மட்டும் இருந்தனர்.சிந்தியாவும் அவளது பெற்றோரும் இதே வீட்டில் இருப்பதால் சடங்கை மறுநாளைக்கு வைத்திருந்தனர்.
மணப்பெண் மணமகன் வீட்டோடு இணக்கமாக மாறுவதற்கு அந்தச் சிறிய விழாவுடன் சேர்த்து செய்யப்படும் ஒரு சின்ன சடங்கு.மணப்பெண்ணை வரவேற்பதாக செய்யும் மென்மையான வெளிப்பாடு நிகழ்ச்சி.அதில் சிந்தியா தன்னுடைய சடங்கை செய்துக் கொண்டிருந்தாள்.
ஆதிரை சுற்றி இருந்தவர்களில் தர்ஷன் இருக்கிறாரா? என்று பார்த்தால் அங்கு அவன் இல்லை.இத்தனை நாட்களாக எல்லாவற்றிலும் முன்னாடி நின்றவன் காணவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

