Loading

இதயம்-16

தன்னுடன் இணைத்து, கரம் பிடித்து அவளை அழைத்துப் போனவன், மின் தூக்கியின் மூலம், வாகன நிறுத்ததில் (Car parking) அவளைக் கொண்டு நிறுத்தினான்.

மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்த அந்த அன்டர் க்ரௌண்ட் பார்க்கிங்கில், பத்துப் பதினைந்து கார்களின் நடுவே, அதீத பளபளப்போடு நின்றிருந்த அந்த கருப்புநிற மகிழுந்தின் முன் சென்று நின்று, அவளுக்காக கதவை அவன் திறந்துவிட,

“நான் என் டூ வீலரில் வந்துடுறேன். நீ கிளம்பு!” எதுவுமே தன்னைப் பாதிக்காதது போல் வெகு சாதாரணமாய் உரைத்தாள் வாஹினி.

“இனிமே எங்கேயும் உன்னைத் தனியா விடப் போறதில்லை சிமி! நீ என் கூடத்தான் வந்தாகணும்!” அவ்வளவு தான் இனி பேசுவதற்கு எதுவுமில்லை என்பதைப் போல், துளி அசைவின்றி தீர்க்கமான பார்வையால் அவளைத் துளைத்தபடி அவன் நிற்க, எரிச்சலுடன் அவனைப் பார்த்தபடியே முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள் சிம்மவாஹினி.

ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்தவனைப் பார்க்கப் பிடிக்காது, தன் பார்வையை வெளிப்பக்கமாய் திருப்பினாள் அவள்.

கண்கள் இலக்கில்லாமல் எங்கோ வெறித்தது. அவனின் மனைவி என்கிற பந்தத்திலிருந்து நிரந்தர விடுதலை வேண்டும் என்ககிற காரணத்திற்காக அவனைத் தேடி வந்துவிட்டாள் தான். தைரியமாக முடிவெடுத்துவிட்டாள் தான். ஆனால் அதை செயல்படுத்துவதென்பது ரொம்பவே கடினமாக இருந்தது.

அவனின் அண்மை அவளுக்கு எரிச்சலைத் தவிர வேறொன்றையும் தரவே இல்லை. பிடிக்காத பந்தத்தில் பிணைத்து வைத்துவிட்டு, கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கும் அவனைப் பார்த்து கோபம் தான் வந்தது.

‘இவனை நான் கேட்டேனா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டேனா? ஃப்ராடு! என்னை ஏமாத்திட்டான். ஆண் அப்படிங்கிற காரணத்திற்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? விருப்பமில்லாத பொண்ணுக்கு கட்டற தாலி, விலங்குக்கு சமம். இது ஏன் அவனுக்குப் புரியவே இல்லை.’ தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தவள், ஏதோ தோன்றவும் அவனைத் திரும்பிப் பார்தாள்.

“எப்படி சிமி! நம்ம கார் எப்படி இருக்கு? செம ஸ்டைலிஷ் இல்லை?”

“உன் காரைப் பார்த்து உன் கிட்டே மயங்கிருவேன்னு நினைக்கிறியா? எனக்கு வேண்டியதெல்லாம் உன்கிட்டே இருந்து டிவோர்ஸ் மட்டும் தான்.!” அழுத்தம் திருத்தமாய் சொன்னாள் அவள்.

“அது ரொம்ப கஷ்டம் சிமி! டிவோர்ஸ் பண்ணிக்கிறதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கலை! ஆயுசு முழுசும் உன்னோட வாழணும்ன்னு தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.!”

“விருப்பமில்லாத வாழ்க்கை எனக்கு மட்டுமில்லை! உனக்குமே நரகம் தான் ஆதன். என் மேல் உனக்கு ஈர்ப்பு இருந்திருக்கலாம். என்னை பிடிச்சிருக்கலாம்! அழகா இருக்கேன்னு தோணியிருக்கலாம்! அவ்வளவு ஏன் என் மேலான ஆசையில் வந்த லஸ்ட் (lust) ஆகவும் இருக்கலாம்! இது வெறும் லஸ்ட் தான். அதற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கையை ஏன் பாழ் பண்ணிக்கிற ஆதன்?”

“உன் பைத்தியக்காரத் தனமான பேச்சை கொஞ்சம் நிறுத்தறியா? என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? நான் உன் மேல் இருக்கிற இச்சையில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? உன் மேலே இருக்கிறது லஸ்ட் தான்னு உனக்கு தெரியுமா? கேவலம் என்னை எப்படி நினைச்சிட்டே இல்லே? நான் உன் மேலே ஆசை கொண்டு, தெளிவா உனக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா, உன் உடம்பு மேலே ஆசைப் பட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? அப்படி நான் ஆசைபட்டு இருந்தேன்னா உன்னை தாலி கட்டித்தான் படுக்கையில் விழ வைக்கணும்ங்கிற அவசியம் எனக்கு இல்லை. உனக்கு தெரியாமல் உன் கழுத்தில் தாலி கட்டின மாதிரி, உனக்கு தெரிஞ்சே உன்னை என் கட்டிலில் விழ வச்சிருக்க முடியும்.! நான் உன் கழுத்தில் கட்டின தாலி நீ நினைக்கிற மாதிரி ஃபிஸிக்கல் நீட்ஸ்க்கான லைசென்ஸ் இல்லை” வார்த்தைகளில் அழுத்தத்தோடு ஆத்திரமும் தெறித்தது.

அவள் பேசிய வார்த்தைகள் அவன் இத்தனை நேரமாய் கடைபிடித்த பொறுமையை, காற்றில் கரைய வைத்து வார்த்தைகளாய் வெளிப்படுத்தியிருந்தது.

“எப்படியும் ஏமாத்தி கல்யாணம் பண்ணினவன் தானே நீ..? பெரிய நியாயவாதி மாதிரி பேசாதே! கல்யாணம் பண்ணிக்கிறது எதுக்காக, சும்மா காட்சிப் பொருளா கையைக் கட்டி பார்த்துட்டு இருக்கிறதுக்கா கல்யாணம் பண்ணிப்பாங்க? அதுவும் உன்னை மாதிரி ஆம்பிள்ளைகள் பத்தி எனக்கு தெரியாது?!” அவனுக்கு பதில் சொல்வதாய் நினைத்துக் கொண்டு, வாய்க்கு வந்ததை அவள் சொல்லிவிட, ஆதனுக்குள் கோபம் கொழுந்துவிட்டெரிந்தது.

“இதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசக் கூடாது நீ! எனக்கு ஃபிஸிக்கல் நீட்ஸ் தேவையாய் இருந்திருந்தால், யார்கிட்டே வேணும்னாலும் போயிருப்பேன். நிச்சயம் உன்னை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்! எதிரில் இருக்கிறவங்களை ஹர்ட் பண்ணணும்ன்னா என்ன வேணும்ன்னாலும், பேசலாம்ன்னு நினைச்சு பேசாதே! வார்த்தைகள் இருமுனை கத்தி மாதிரி, பேசறவங்களையும் ஒருநாள் பதம் பார்க்காமல் விடாது!” எனச் சொன்னவன் விருட்டென வாகனத்தைக் கிளப்பினான்.

காருக்குள் அசாத்திய மௌனம்! துளி சத்தமில்லாத நிசப்தம். சூழ்நிலை மட்டுமே நிசப்பதமாய் இருந்தது. ஆனால் இருவரின் மனதிற்குள்ளும் ஆயிரம் யோசனைகள் விரைவு இரயிலைப் போல் வேகமாய் ஓடிக் கொண்டே இருந்தது.

‘என்ன வார்த்தை பேசி விட்டாள்? அதுவும் என்னைப் பார்த்து.. என்னைப் பார்த்தால் உடல் தேவைக்கு அலைபவன் மாதிரியா இருக்கு? உடல் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், நான் நிஷாவையே கல்யாணம் பண்ணியிருப்பேனே? இவளை என் தேடியிருக்கப் போகிறேன்? துளி கூட புரிந்துக் கொள்ள முயலாமல் பேசுகிறாள்.’ என மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் ஆதன்.

அவள் பேசிய வார்த்தைகள் இதயத்தைச் சுட்டது. எதை நீ விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும் என்பது உண்மை தானோ? வார்த்தை எனும் வாள் கொண்டு இதயம் அறுக்கக் காத்திருக்கிறாள் அவள். சுமக்க முடியா காதலை இதயம் முழுதும் நிரப்பிக் கொண்டு, அவளின் இமை சிமிட்டலுக்காக காத்திருக்கிறான் அவன்.
இவளின் வெறுப்பு விருப்பமாய் மாறிவிட்டால், அங்கே இருவரின் வலிகளுக்குமே இடமில்லை.

ஆனால், அவள் வெறுப்பின் காரணம் அறிய முற்படாது, அவளிடம் அவன் காதலை எதிர்பார்ப்பதும் சரியில்லை. இதற்கு தீர்வு ஒன்றே ஒன்று தான். புரிதல். ஆம்! புரிதல் மட்டுமே இதற்கான தீர்வாக முடியும். ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை விட்டுவிட்டு ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்ள முயற்சிப்பது மட்டுமே புத்திசாலித்தனம்.

அவள் பேசிய பேச்சுக்களால், தன்னைச் சுட்ட அவளின் வார்த்தைகளால் கற்பாறையாய் இறுகிப் போன முகத்துடன், வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின், பக்கவாட்டு தோற்றம் கூட, வில்லில் கோர்த்த நாண் போல் விரைப்பாகத்தான் இருந்தது. அவனின் இறுகிய தோற்றத்தைக் கடைக் கண்ணால் பார்த்தவளுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

அவனின் வெறுப்பை சம்பாதித்து விலகி விடலாம் என முடிவு செய்திருந்தாள் வாஹினி. ஆனால் அவன் தன்னை வெறுப்பதற்காய் இவள் பேசிய பேச்சுக்கள் காரணமே இன்றி, அவனை மட்டுமல்ல, இவளையுமே வதைக்கத்தான் செய்தது.
அவனின் கண்ணியமான பேச்சு அவளுக்குத் தெரியும், கண்களைத் தாண்டிப் போகாத அவனின் பார்வையும் அவளுக்குத் தெரியும்.

குற்றமே செய்யாதவனைக் குற்றம் சுமத்துகிறோமே? என்ற குற்றவுணர்வு அவளை ஒட்டுமொத்தமாய் ஆட்டிப்படைத்தது. தன் சுயநலத்திற்காக அவன் மீது வீண்பழி சுமத்துகிறோமே? என்ற எண்ணம் அவள் இதயத்திற்குள் பிரளயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

வாழ்வில் நேர்மையைக் கடைபிடித்து உண்மையாய் வாழ்பவர்களுக்கு இந்த உறுத்தல் இருப்பது இயல்பு தான். மனதால் நேர்மையாய் இருப்பவர்களால் இன்னொருவர் மீது வீண்பழி சுமத்த முடியாது. அப்படியே சூழ்நிலையால் அவர்கள் அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டாலும், உள்ளம் உறுத்திக் கொண்டுத்தான் இருக்கும். அந்த நிலையில் தான் வாஹினியும் இருந்தாள். தான் அவனிடமிருந்து பிரிவதற்கும், தனது சுயநலத்திற்காகவுமே, அவனைக் குற்றம் சொல்கிறோமே, என்ற எண்ணமே அவளைக் கொல்லாமல் கொன்றது.

யாருக்கு என்ன நடந்தால் என்ன? என் நலன் தான் எனக்குப் பெரியது, நான் வெற்றி பெறுவது தான் எனக்கு முக்கியம். நான் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனத் தான்தோன்றித் தனமாய் அவள் நடந்துக் கொள்ளவில்லை. பிறருக்காக வருத்தப்படுவதும், அவர் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துக் கொள்வதும் தானே மனிதனாய் நம்மை அடையாளப்படுத்துகிறது.

வாஹினி மனதளவில் மனிதியாய் இருந்தாள். ஆனாலும், அவளின் சூழ்நிலையோ, விதியோ, ஏதோவொன்று அவளை ஆதனுக்கு எதிராய்க் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

ஏகப்பட்ட, மனக்குழப்பங்களோடு பார்வையை ஜன்னல் பக்கமாய் திருப்பினாள் சிம்மவாஹினி. மழை வரும் அறிகுறி இல்லாத போதும், பனித்தூறலாய் மழை தூறிக் கொண்டு இருந்தது.

மகிழுந்தின் கண்ணாடி ஜன்னலில் படிந்திருந்த நீர்திவலைகள் அவள் மனதின் பாரங்களைச் சற்று குறைத்திருந்தது.

வாகனத்திற்குள் ஏ.சி இயக்கத்திலிருப்பதையும் பொருட்படுத்தாது, மகிழுந்தின் ஜன்னலைத் திறந்து, தன் கரம் கொண்டு மழையை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தாள் அவனின் சிமி.

கண்களில் ரசனை வழியே, சிறுபிள்ளையாய் மாறி அவள் மழையோடு விளையாடுவதைப் பார்த்தவனின் இதழ்களில் புன்னகை வந்து போனது. இத்தனை நேர இறுக்கம் தொலைந்து அவன் இயல்புக்கு வந்திருப்பது அவன் புன்னகையில் தெரிந்தது.

“மழை வந்ததும் மழையை ரசிப்பதை விட..
மழையில் நனையும் உன்னைத்தான்..
அதிகம் ரசிக்கிறேன்..!” எங்கோ படித்தக் கவிதையை இதழ்கள் முணுமுணுத்தது அவளுக்குக் கேட்காமல். அவன் மனதிற்குள் இப்போது மழையடித்துக் கொண்டிருந்தது.. காதல் மழை.

மழை பெய்ததும் வரும் மண்வாசத்தைப் போல், மனம் முழுதும் அவள் வாசனை! துளித்துளியாய் மனதிற்குள் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வெளியே மழை வேகமாகப் பொழியத் துவங்கியிருந்தது.

அவளின் முழுக் கவனமும் மழை மீதே இருக்க, இவன் மனதிற்குள்ளோ மழை மீதே துளி பொறாமை எட்டிப் பார்த்தது.

ஆனாலும் அவள் விளையாடுவதற்கு வசதியாய் தன் வாகனத்தை ஓரமாய் நிறுத்தினான். இத்தனை நேரமாய் இயங்கிக் கொண்டிருந்த வாகனம் இயக்கத்தை நிறுத்தியதும், சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவள் கண்களின் வழியாய் இதயத்தைத் துளைக்க முயலும் அவன் பார்வை அவளை என்னவோ செய்தது. இமை சிமிட்டி அவன் பார்வையைத் தவிர்க்க முயன்றாள் அவள். முகம் முழுதும் துளித்துளியாய் அழகு சேர்த்த மழைத் துளிகள் இவனுக்குள் கிறக்கம் சேர்த்தது. இருவரின் பார்வைகளும் சங்கமித்துக் கொள்ள, மனைவி என்னும் உரிமை உணர்வு, அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ளச் சொல்லி அவனை உந்தித் தள்ளியது.

உள்ளுணர்வின் உந்துதலால் அவள் அருகே நகர்ந்தவனின் கரமிரண்டும், மழைநீரால் சில்லிட்ட அவள் கன்னங்களில் பதிந்தது. மழையில் நனைந்த மலராய், முன்நெற்றி கேசத்தில் நீர் சொட்ட, கொள்ளை அழகாய் அருகே அமர்ந்திருந்தவளைக் கண்களால், படம்பிடித்து தன் இதயக் கூட்டிற்குள் பதுக்கியபடியே, அவள் இதழ்களை நோக்கி அவன் குனிந்தான்.

இருவரின் இதழ்களுக்கான தூரம் செண்டி மீட்டரிலிருந்து மில்லி மீட்டராய் குறைந்த அந்தத் தருணம், ‘நீ என்னைக் கல்யாணம் பண்ணினதற்கான காரணம், என் மேல் இருந்த ஆசையினால் வந்த லஸ்ட் ஆகவும் இருக்கலாம்!’ என அவள் சற்று முன் அவள் உச்சரித்த வார்த்தைகள் நினைவிற்கு வந்து அவன் இதயத்திற்குள் அமிலம் ஊற்றியது.

“இப்போ நான் கிஸ் பண்ணினால், இதையும் லஸ்ட் தானே சொல்லுவே..?” எனக் கேட்டவன் அப்படியே அவளை உதறிவிட்டு, வாகனத்தை விருட்டெனக் கிளப்பினான். உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தக் கோபத்தில், வாகனம் படுவேகமாய் அவன் கரங்களில் பறந்தது.

அவள் திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியே, மழைச் சாரல் அவளை நனைத்து நடப்பிற்குக் கொண்டு வர, வாகனத்தின் வேகத்தில் தட்டுத் தடுமாறி, பொத்தானை அழுத்தி ஜன்னலைப் பூட்டியவளின் செவிகளுக்குள் அவன் சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், அவனிடம் மயங்கினேன்? ஏன் அவன் பக்கத்தில் வரும் போது என்னால் உதறித் தள்ள முடியவில்லை? அப்போ என் மனசே எனக்கு எதிரா இருக்கா? அவன் கோபப்பட்டு விலகாமல் இருந்திருந்தால், அவனிடம் நான் இழைந்திருப்பேனோ?’ என நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே அருவருப்பாய் இருந்தது.

எந்த ஆண்மகனைப் பார்த்தாலும், இரும்பைப் போல் இறுக்கமாய் இருப்பவள், அவன் அருகாமையில் மட்டும் இளக்கம் காண்கிறாள். ஆதன் எனும் நெருப்பு அவள் மனப் பூட்டைத் திறந்துக் கொஞ்சம் கொஞ்சமாய் உருக்கிக் கொண்டிருக்கிறதோ என்னவோ?

“சிவப்பு பூசியக் கோபமும்..
உன் சிவந்த முகத்தால்
சாயம் போய் விடுகிறதடி..!
இல்லாதக் கோபத்தையும்
இழுத்துப் பிடிக்க முயற்சிக்கிறேன்..!
நீ உச்சரித்துவிட்டுப் போன வார்த்தைகள்..
என் உள்ளத்தின் காதலை
ஒட்டுமொத்தமாய் உருக்கிவிட்ட காரணத்தால்..!”

******-****

அவன் கரங்களில் காற்றுக்குப் போட்டி போடும் வேகத்தோடு பறந்த வாகனம், தன் வீட்டுவாசல், புகையைக் கிளப்பியபடி கிரீச்சிட்டு நின்றது. மனதிற்குள் கோபத்தின் சுவடுகள் இன்னும் மிச்சமிருந்தது. அந்தக் கோபத்தோடு ஒலிப்பானை விடாமல் அழுத்தி அலறவிட்டான் அவன்.

“ஏன் இப்படி செய்றே? பொறுமையே இல்லையா உனக்கு?”

“இல்லை!” அவள் கேட்ட கேள்விக்கு எரிச்சலாய் பதில் தந்தவன், அதற்குள் கேட் திறக்கப்படவும், வாகனத்தை உள்ளே நிறுத்திவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

எரிச்சலுடனே பொறுமையாய் காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள் வாஹினி. அவன் வீட்டின் பிரம்மாண்டமும், நவீனமும் அவளிடம் துளி மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

‘உன் பணமோ வசதியோ எதுவுமே என்னை மாற்றாது.’ எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். பரந்து விரிந்த புல் தரையில் கால்பதித்து அவள் நடந்து சென்று வீட்டின் முன்னே நிற்க, அங்கே சம்யுக்தா ஆலம் கரைத்து வைத்துக் காத்திருந்தாள்.

“இதெல்லாம் அவசியமில்லை சம்யூ! இந்த வீட்டில் வாழணும்ன்னு நினைச்சு வர்ரவங்களுக்குத்தான் இதெல்லாம் செய்யணும்.! உன் அண்ணி பிரிஞ்சு போகணும்ங்கிற முடிவு எடுத்த பின்னாடி தான் இந்த வீட்டு வாசலையே மிதிச்சிருக்கிறாள். இவளுக்கு இதெல்லாம் தேவையில்லை!” எனச் சொன்னவன்உள்ளே செல்ல முயல,

“ஆது! ப்ளீஸ்..! வாஹினி வந்த அன்னைக்கே இப்படியெல்லாம் பேசணுமா.? பேசாமல் இரு!” என அவள் இருவரையும் ஒன்றாய் நிற்க வைத்து ஆலம் சுற்றிய அதே நேரம், சம்யுக்தாவின் கரத்தை யாரோ தட்டி விட, தரையில் உருண்டு ஓடியத் தட்டைப் பார்த்தபடி திடுக்கிட்டு விழித்தபடி சம்யுக்தா நிற்க, எதிரே ஆக்ரோஷமும் கோபமுமாய் நின்றிருந்தார் சதாசிவம்.

“இவர் ஏன் இங்கே வந்திருக்கிறார்ன்னு கேளு சம்யூ! ரோஷக்காரர் நம்ம வீட்டு வாசலையெல்லாம் மிதிக்க மாட்டாரே..!” ஏகத்திற்கும் நக்கல் வழிந்தது ஆதனின் குரலில்.

“அப்பா! நல்லது நடக்கும் போது ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க? எதுவா இருந்தாலும் உள்ளே வந்து பேசுங்க!” தன் தந்தையிடம் நேரடியாய் பேசாது, தங்கையின் வழியே பண்ட பரிமாற்றம் போல், தகவல் பரிமாற்றம் செய்துக் கொண்டிருக்கும் ஆதனை விநோதமாய்ப் பார்த்து வைத்தாள் வாஹினி.

“ஆமா! எனக்கு எல்லா கெட்டதையும் பண்ணிட்டு, இவனுக்கு மட்டும் நல்லது நடக்கணுமா? அப்படி என்ன நல்லது நடந்துப் போச்சு? ஊரு பேரு தெரியாத அநாதைப் பொண்ணைக் கூட்டி வந்து நடு வீட்டில் நிறுத்தி வச்சிருக்கான் அறிவு கெட்டவன். நம்ம தகுதி என்ன? ஸ்டேடஸ் என்னன்னு தெரிய வேண்டாம்? எல்லாம் போச்சு! இவனால் ஒட்டு மொத்தமாய் எல்லாமே போச்சு! என் அரசியல் சாம்ராஜ்ஜியமே சரிஞ்சுப் போகப் போகுது. எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் இவன் மட்டும் தான்!” உச்சபட்ச கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார் சதாசிவம்.

“இங்கே பாருங்க! இது என் வீடு! என் வீட்டில் வந்து என் பொண்டாட்டியைப் பத்தி என் முன்னாலேயே தப்பா பேசுனீங்க, வயசுக்குக் கூட மரியாதை கொடுக்க மாட்டேன். வாட்ச்மேனை விட்டு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்.!” தன் மனையாளை தோளோடு இறுக்கிக் கொண்டவன், கண்களில் கோபம் படர வார்த்தைகளால் எச்சரித்தான்.

“நான் போட்ட விதையில் என் நிழலில் முளைச்சவன்டா நீ, என்னையே வெளியே போகச் சொல்லுவியா? நான் இல்லைன்னா இந்த உலகத்தைப் பார்த்திருப்பியா?” எனக்குள்ளிருந்து உதித்தவன் தானே நீ? என்ற அகம்பாவம் தெரிந்தது சதாசிவத்தின் குரலில்.

“நான் இந்த உலகத்துக்கு வரணும்ன்னு விதி இருக்கும் போது, நீங்க தடுத்திருந்தாலும் கூட, குந்தி தேவிக்குப் பிறந்த கர்ணனைப் போல், நானும் இந்த உலகத்தில் உங்க தயவு இல்லாமலே பிறந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு அமைச்சரே! அதனால் வார்த்தையைப் பார்த்து பேசுங்க! என்னை மடக்கறேன்னு நீங்க அசிங்கப்பட்டு போய்டாதீங்க!” எனச் சொன்னவனின் நிமிர்வு துளி குறையவில்லை.

“கொஞ்சமாவது அவர் வயசுக்கு மரியாதைக் கொடுத்து பேசு ஆதன்! என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா தானே?” முணுமுணுப்பாய் வாஹினி அவன் செவியோரம் முனக,

“இவருக்கு இந்த மரியாதையே கொஞ்சம் அதிகம் தான். நீ வாயை மூடிட்டு இரு.!” அழுத்தமான பேச்சில் அவள் வாயை அடைத்தவன்,

“இவரை இங்கிருந்து போகச் சொல்லு சம்யூ! எனக்கு இவரைப் பார்த்தாலே எரிச்சலாய் வருது!”சதாசிவத்தின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பாமல் சம்யூவிடமே பேசினான் ஆதன்.

“பெத்த அப்பனை மதிக்காதவன், நல்ல புள்ளையாய் இருக்கவே முடியாது. என் திட்டைத்தையெல்லாம் முறியடிச்சுட்டேன்னு ஆடாதே! இப்போ நினைச்சாலும் உன் வாழ்க்கையை என்னால் தலைகீழாய் மாற்ற முடியும். அதையும் உன் மனசில் நல்லா பதிய வச்சுக்கோ! என்னை நம்ப வச்சு கழுத்தறுத்து துரோகம் பண்ணிட்டல்லா? எல்லாத்துக்கும் அனுபவிப்பே பாரு!” ஆவேசம் பொங்க சதாசிவம் பேச,

“நான் செஞ்சது துரோகமா? அப்போ நீங்க என் அம்மாவுக்கு செஞ்சதுக்கு பேர் என்ன? சேவையா?!” நக்கலாகவே கேட்டான் ஆதன்.

“என்னடா சும்மா, அம்மா அம்மான்னு பூச்சாண்டி காட்டுறே? உன் அம்மா செத்துப் போய்ட்டால் அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?”

“ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க! நீங்க எதை விதைச்சீங்களோ, அதைத்தான் இப்போ வட்டியும் முதலுமாய் அறுவடை பண்ணிட்டு இருக்கீங்க! நீங்க ஊருக்குள்ளே என்ன வேணும்னாலும் சொல்லி வச்சிருக்கலாம்! ஆனால், அங்கே என்ன நடந்ததுன்னு கண்ணால் பார்த்த ஒரே சாட்சியான என்கிட்டே நீங்க பொய் சொல்ல முடியாது! நீங்க என் அம்மாவுக்கு பண்ணின துரோகத்திற்கான தண்டனையை நீங்க அனுபவிக்க வேண்டாமா? அந்த ஆண்டவன் தண்டிக்கிறானோ, இல்லையோ, நான் நிச்சயமாய் நீங்க செஞ்சதுக்கெல்லாம் திருப்பி கொடுப்பேன். வட்டியும் முதலுமாய்..!” என அவன் சொல்ல இங்கே விதிர்விதிர்த்துப் போய், உடல் வியர்வையில் நனைய, அதிர்வுடன் நின்றிருந்தார் சதாசிவம்.

தான் செய்த குற்றத்திற்கு தன் மகனே சாட்சியாய் வந்து எதிரில் நிற்பான் என அவர் எதிர்பார்க்கவே இல்லை! அதிர்ச்சியிலும் பயத்திலும், அவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதில் முதன்முதலாய் மகன் மீது பயம் முளைத்திருந்தது.

இசைக்கும்..!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்