அத்தியாயம் 2

Loading

 

பெங்களூரின் குளிரிலும் அதிகாலை ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான் தாரகேஷ், அவன் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கில் பூத்துக்குழுங்கிக் கொண்டிருந்த பல வித பூக்களை ரசித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். மஞ்சள், வெள்ளை சிவப்பு என விதவித பூக்கள் அதிகாலை சுத்தமான காற்றின் இதத்தோடு மென்மையான மணம் பரப்பிக்கொண்டிருந்தது.

 

ஐந்து சுற்றுகள் ஓடி முடித்துவிட்டு ஒரு பெஞ்சில் அமர்ந்தவன், அந்தப் பூக்களையே உற்றுப் பார்த்தான். அவன் கண்கள் ஒருவிதமான பரவசத்தில் விரிந்தன.

 

மனதிற்குள். ‘நீங்கள் இப்படியே இருந்தால் தான் அழகு. அதை விட்டுவிட்டு தேனீக்களிடம் தேனை கொடுப்பதும், யாரோ ஒருவர் உங்களை பறிக்க அனுமதிப்பதும் என்ன முட்டாள்தனம் இது. நீங்கள் எப்பொழுதும் இதே செடிகளில் இதே நிறங்களில் இதே மணத்தை பரப்பிக்கொண்டிருக்க வேண்டும் என்று தான் இயற்கை சொல்கிறது. அப்படி யாராவது உங்களை அபகரிக்கப் பார்த்தால் நான் உங்கள் காப்பானாக காப்பாற்றி உங்கள் செடியிலேயே கொண்டுவந்துவிடுவேன். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு என்று’ கூறிக் கொண்டான்.

 

பெங்களூரு டிராஃபிக்கை கடந்து 10 மணிக்கு அலுவலகம் வந்து சேர்ந்தான். மாலை வரை வேலை அவனை இழுத்துக்கொள்ள, மாலை 6 மணி போல் கிளம்பும் போது அவன் முன்னே வந்து நின்றாள் சரண்யா.

 

“சொல்லுங்க மிஸ் சரண்யா எதாவது பிரச்சனையா?”

 

“உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது தாரகேஷ்.. என் மனசு உங்களுக்கு புரியலையா?” என்று கண்களில் மின்னல் வெட்ட, கொள்ளை அழகுடன் கேட்டாள் சரண்யா.

 

“எனக்குப் புரியுது சரண்யா… ஆனா இது சரிவராது,” தாரகேஷ் அவளது உணர்வுகளைக் கொஞ்சம் கூடச் சலனமின்றி நிராகரித்தான்.

 

அதில் மனம் சுனங்கினாலும், “டிரையே பண்ணாம நோ சொல்றது சரியில்ல தாரகேஷ். நாம பழகி பாப்போம். உங்களுக்கு கல்யாணம் தான் பிரச்சனைன்னா லிவ் இன் கூட முயற்சி செய்வோம். எதுவும் ஒர்கவுட் ஆகலன்னா நாம பிரிஞ்சிடலாம். பட் எடுத்ததும் நோ சொல்லாதீங்க. இட்ஸ் ஹர்டிங்..” என்று தன் வாதத்தை வைத்தாள்.

 

தாரகேஷ் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வையில் இப்போது கோபம் கலந்த ஒரு பரிதாபம் இருந்தது.

 

”நோ மிஸ்.சரண்யா.. பூக்கள் எப்பவும் செடில தான் இருக்கணும். அதை பறிக்க நினைக்கிறது தப்பு. இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று அவள் பதில் பேச வாய்ப்பே கொடுக்காமல் கிளம்பிவிட்டான்.

 

“இடியட்!” என்ற சரண்யாவின் ஆத்திரமான முனகல் அவன் காதுகளில் விழவில்லை.

 

மாலை வீட்டிற்கு வந்தவன், அங்கு மேசையில் இருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்தான். நாளை அவனுக்கு கீழ் வேலை செய்யும் ப்ரீத்தாவிற்கு திருமணம். ஏற்கனவே மூன்று நாட்களாக அலுவலகம் வரவில்லை. இன்னும் ஒரு வாரமும் வர மாட்டாள்.

 

திடீரென தாரகேஷின் உடல் நடுங்கியது. என்ன முயன்றும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டிலின் ஓரத்தில் சுருண்டு படுத்துக்கொண்டான். “ஐயோ… என்னோட பூ போச்சே! நான் என்ன செஞ்சும் அந்தப் பூவைக் காப்பாத்த முடியலையே… அந்தப் பூவை அவன் கசக்கி கொன்னுறுவானே!” என்று ஒரு குழந்தையைப் போலக் கதறி அழுதான்.

 

அடுத்த நிமிடம், வெறி வந்தவனைப் போல எழுந்தான். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். “இல்லை… என்னால முடியும். என்னால மட்டும்தான் அந்தப் பூவைக் காப்பாத்த முடியும். நான் காப்பாத்தலைன்னா வேற யார் காப்பாத்துவா? அந்தப் பூ என்னைத் தேடுமே!”

வேகமாகக் குளித்துவிட்டு, விலை உயர்ந்த ஆடையை அணிந்து கொண்டு திருமண மண்டபத்திற்குப் புறப்பட்டான். அவனது மனம் முழுவதும் ‘பூவை மீண்டும் செடியுடன் சேர்க்க வேண்டும்.’ என்பதில் மட்டுமே இருந்தது.

 

அன்று மாலை வரவேற்பு. நாளை காலை திருமணம் என மண்டபமே களைகட்டியது.

 

8 வருட காதலை வென்ற கர்வத்துடன் மாப்பிள்ளை சுந்தரின் கைபிடித்து அழகாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள் ப்ரீத்தா.

 

ப்ரீத்தாவை பார்த்த தாரகேஷின் கண்கள் மீண்டும் கலங்க தயாராகின. சட்டென தன்னை நிதானப்படுத்தியவன், ’என்ன செய்வது?’ என்று மீண்டும் யோசித்தான்.

 

மறுநாள் காலை அழகாக விடிந்தது. தன் பல வருட கனவு தன் கை சேரும் நாளுக்காக ப்ரீத்தா மிகவும் ஆர்வமாக காத்திருந்தாள். காதல் திருமணம் அதுவும் பெற்றோர் சம்மதத்துடன். நினைக்க நினைக்க மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் திருமணம் என்னும் நிலையில் மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

அவளது தாய் பதற்றமாக உள்ளே வந்தார். மகளின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை ஒரு முறை பார்த்தவர், “ப்ரீத்தா மாப்பிள்ளைய காணோம் டி. மண்டபம் முழுக்க தேடியாச்சு. உங்கப்பா வேற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்காருடி.” என்று தவிப்புடன் கூறினார்.

 

“என்னம்மா உளறுற.. சுந்தர் இங்க தான் எங்கயாவது இருப்பான். இரு நான் கால் பன்றேன்” என நடுங்கும் கைகளுடன் தன் கைபேசியை எடுத்தாள்.

 

இங்கு சுந்தரோ தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் காரில் மயங்கிக் கிடந்தான். சுந்தரின் ஃபோனை கையில் வைத்திருந்த தாரகேஷோ, “இனி எனக்கு கால் பன்னாத ப்ரீத்தா இட்ஸ் ஓவர். இதுக்கு மேலயும் உன்ன லவ் பண்ண மாதிரி என்னால நடிக்க முடியல.. ஐ வாண்ட் டூ ஃபைண்ட் மைசெல்ஃப் (I want to find myself). இப்போதைக்கு கண்காணாம தான் போனேன். இனியும் என்னை தேடுனா மொத்தமா இல்லாமலே போவேன்” என மெசேஜை அனுப்பிவிட்டு அந்தப் போனை சுவிட்ச்-ஆஃப் செய்தான் தாரகேஷ்.

 

8 வருடமாக அவனது வீட்டிலும் தன் வீட்டிலும் பல போராட்டங்களை தனியே சமாளிக்கத் தெரிந்த ப்ரீத்தாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று தெரியவில்லை. அதைவிட நின்று போன கல்யாணம்?

 

தன் காதலை அவன் பயன்படுத்திக்கொண்டானா அல்லது தான் அவனைப் புரிந்துகொள்ளவே இல்லையா எனப் புரியாமல், திருமணக் கோலத்திலேயே சிலையாக உறைந்து நின்றாள்.

 

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தாரகேஷின் முகத்தில் ஒரு புனிதமான அமைதி நிலவியது. தனது பூவை அதன் செடியிலேயே மீண்டும் சேர்த்துவிட்ட திருப்தி அவனிடம் இருந்தது.

 

அன்று வந்த தாரகேஷ் பல நாட்கள் கழித்து நிம்மதியாக தூங்கினான்.

 

மீண்டும் 2 நாட்கள் கழித்து வந்த ப்ரீத்தாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லை. அதைக் கவனித்த தாரகேஷ், அவளுக்கு வேலைப்பளுவை அதிகமாக்கினான். அவளது மூளை பழைய நினைவுகளில் சிக்கித் தவிக்கக் கூடாது என்பதில் அவன் குறியாக இருந்தான். அதே நேரம் அலுவலகத்தில் இருக்கும் மற்ற ஆண்களிடம் அவள் தானாகவே ஒதுங்க, மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

 

அன்று மாலை வீட்டிற்கு வந்த தாரகேஷ், தனது வழக்கமான தேடலோடு பூங்கா தோட்டத்திற்கு பூக்களை தேடி சென்றான்.

 

அங்கே ஒரு செடி மட்டும் சற்று வாடிக் கிடந்ததை பார்த்து அவன் மனம் பதறியது. தான் கொண்டு வந்த தண்ணீரை ஊற்றினான். தண்ணீர் பட்டதும் செடியின் செழுமை சற்று மெருகேறியது போல் அவனுக்கு தோன்றியது. அதை பார்த்த தாரகேஷின் மனதில் ப்ரீத்தாவின் முகம் ஒரு நொடி மின்னி மறைந்தது. அவன் உதட்டிலும் சிறு புன்னகை அரும்பியது.

 

அவன் சிரிப்பை பார்த்த பூ ஒன்று அவனுடன் பேச ஆரம்பித்தது.

 

“என்ன தாரு.. ஒரே குஷியோ.. முகம் எல்லாம் பிரைட்டா இருக்கு.” என அந்த பூ கேட்டது.

 

தாரகேஷ் பெருமிதத்துடன், “ஆமா பூஸ்.. இன்னைக்கு உன்ன மாதிரி ஒரு பூவை அதோட செடிக்கிட்ட சேர்த்துட்டேன்..”

 

”நிஜமாவா.. ஆனா அந்த பூ உண்மைலயே சந்தோஷமா இருந்ததா?” பூ இதழ் அசைத்துக் கேட்டது.

 

சற்று சிந்தித்த தாரகேஷ், “இப்போதைக்கு சோகமாதான் இருக்கு ஆனா சீக்கிரமே சந்தோஷம் ஆகிரும். பூக்கள் செடில இருக்கது தான அழகு.

 

“அப்படின்னு நாங்க சொன்னோமா.. இல்ல நீயா நினைச்சிகிட்டியா..” பூவின் கேள்வி அவனின் மனதை தைத்தது.

 

“நானா நினைக்க என்ன இருக்கு. இந்த உலகம் ரொம்ப மோசமானது பூ. இங்க இருந்து உங்கள புடுங்குனா உங்க இயல்பே மாறிடும். உங்க வாசத்த வேற யாராவது யூஸ் பண்ணுவாங்க. அது போனதும் கசக்கி தூக்கி போட்டுருவாங்க. உங்களுக்கு வலிக்கும். உங்கள கொன்னுடுவாங்க. நீங்க என் செல்ல பூஸ் தான.. நான் சொன்னா கேக்க மாட்டிங்களா?” என தவிப்புடன் கேட்டான்.

 

“ஓஹ். அப்படியா? அப்போ நீ மட்டும் ஏன் வேலைக்கு போற.. உனக்கு நாங்க தான் இருக்கோமே நீயும் இங்கயே பாதுகாப்பா இருக்கலாமே.. ஏன் இந்த பொல்லாத உலகத்துல போட்டி போட்டு வேலைக்கு போற. நீ குட்டி பையனா இருக்கும் போது ஸ்கூல் போன.. கொஞ்சம் பெருசா ஆனதும் காலேஜ் போன. அப்பறம் வேலைக்கு போற.. உன்னோட வயசுக்கு நீ வளர்ச்சி அடைந்து மற்றவர்களுக்கு பயன் தருவது போல நாங்களும் மற்றவர்களுக்கு பயன் தர வேண்டாமா?

 

இங்கே நீயும் சாகா வரம் வாங்கலை நாங்களும் வாங்கலை. ஆனா வாழும் போது நீ எப்படி மற்றவர்களுக்கு பயன்படுறியோ அதே மாதிரி நாங்களும் மணம் பரப்ப வேண்டாமா? நாங்கள் பிறந்த, நாங்களும் வாழ்கின்ற இந்த உலகை பார்க்க வேண்டாமா? உண்மைலயே இப்படி செடியில் இப்படி முடங்கிக் கிடப்பது தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று உனக்கு தெரியுமா?” என சரமாரியாகக் கேட்டது.

 

பூ கேட்ட கேள்விகளில் ஒரு நொடி தாரகேஷின் மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவனது இத்தனை காலத் தர்க்கம் அந்தச் சிறிய பூவின் கேள்விகளுக்கு முன்னால் தவித்தது.

 

“என்ன பூஸ் என்னனென்னமோ சொல்ற. நீ சொல்றத பார்த்தா நான் தப்பு பண்றது போலல இருக்கு. உங்க நல்லதுக்கு சொன்னா என்னையவே நீங்க குறை சொல்லுவீங்களா.. போங்க நான் கோச்சிட்டு போறேன்.” பூ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல், தன் பிம்பமே உடைந்துவிடுமோ என்ற பயத்தில் அங்கிருந்து ஓடினான் தாரகேஷ்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்