ஒரு நிப்பின் சுவாசம்

Loading

மாலைக்கதிர் மெதுவாக வீட்டுக்குள் ஊடுருவி வந்துகொண்டிருந்தது. அந்த பழைய மர டேபிளின் மீது, மை நிரப்பும் ஒரு பேனா—மூடியும் உடலும் பிரிந்தபடி—தனித்தனியாக கிடந்தது.
அது ஒரு சாதாரண காட்சி அல்ல. அந்தப் பேனா அங்கே வைத்திருந்த விதத்தில் கூட ஒரு கதையின் நிழல் இருந்தது.

டேபிளின் மேலே சுவரில் தொங்கியிருந்த பெரிய படம்—
“பரமேஸ்வரன்”
அந்தப் படத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த சந்தன மாலை, ஒரு அமைதியான மரியாதையை வெளிப்படுத்தியது.

அந்த நேரத்தில், துரையின் நண்பன் மோகன் வீட்டுக்குள் வந்தான்.
அவன் கண்களில் முதலில் பட்டது அந்தப் பேனாதான்.

“என்னப்பா துரை… இந்த பேனாவை இப்படி மூடி கழற்றிப் பிரிச்சு வச்சிருக்கீங்க?”

துரை சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு சோகத்தின் நிழல் இருந்தது.

“இது சாதாரண கேள்வி இல்ல மோகன்… இதுக்கு பதில் சொல்லணும்னா, ஒரு ப்ளாஷ்பேக் போகணும். கேட்க தயாரா?”

மோகன் ஆர்வமாகத் தலையசைத்தான்.

“எங்கப்பா பரமேஸ்வரன்… ரொம்ப நேர்மையானவர்.”

துரையின் குரல் மெதுவாகக் கனத்தது.

“ஆனா… ஒரு பொய் வழக்குல அவரை சிக்கவச்சுட்டாங்க. பெரிய ஆளுகிட்ட பகை வைத்ததால வந்த விபரீதம் அது.”

கோர்ட்டில் நடந்த போராட்டங்கள், சாட்சிகளின் பொய்கள், உண்மையை நிரூபிக்க முடியாத அவல நிலை—
இவை எல்லாம் துரையின் மனதில் இன்னும் உயிரோடு இருந்தது.

“மூணு வருஷம் ஜெயில்… அந்த வாழ்க்கை அப்பாவை ரொம்பவும் உடைச்சிருச்சு…”

ஒரு நிமிடம் அமைதி.

“அவர் ரொம்ப சென்சிடிவ் மோகன்… எறும்பா இருந்தாலும், கொசுவா இருந்தாலும்—அதையும் ஒரு உயிர்னு பார்த்தவர்.”

அவர் பயன்படுத்தும் பொருட்களையும் மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொள்வார்
சோப்பு, செருப்பு… எதுவாக இருந்தாலும்.

“ஜெயிலிலிருந்து வந்ததுக்கப்புறம்…”

துரையின் கண்கள் தொலைவில் ஏதோ பார்த்தது போல இருந்தது.

“வீட்டு கூண்டுல இருந்த கிளிகளை எல்லாம் பறக்கவிட்டாரு.. கட்டிப்போட்ட நாயையும் அவுத்துட்டாரு.”

“அவருக்கு எல்லாரும் சுதந்திரமா இருக்கணும்.”

அந்த எண்ணமே இந்தப் பேனாவிலும் பிரதிபலித்தது.

“இந்த பேனாவையும் மூடியையும் பிரிச்சு வச்சுட்டு… ‘நிப்பை சிறைப்படுத்தக் கூடாது’ன்னு சொல்லுவாரு.”

மை காய்ந்து போனால், அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி, அன்போடு துடைப்பார்.

அம்மா விமலாவுக்கு அது பொறுக்கவில்லை.

“இதெல்லாம் என்ன வேண்டாத வேலை?” என்று சத்தம் போடுவார்.

அதற்கு பரமேஸ்வரன் அமைதியாகச் சொல்வார்:

“விமலா… நான் ஜெயில்ல இருந்தேன். அடைபட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். இந்த நிப்புக்கும் சுதந்திரம் வேணும்… அது காற்றை சுவாசிக்கட்டும்.”

அம்மா கோபமாக:

“அப்படின்னா வீட்டையும் பூட்டாம போயிடலாம்னு சொல்லுவீங்க போல!”

அவர் மெதுவாகக் கெஞ்சுவார்:

“என்னை என் போக்குல விடு… நான் நிம்மதியா இருந்துட்டு போற நேரத்துல போயிருவேன்…”

துரை ஆழ்ந்த மூச்சு விட்டான்.

“அவர் போன பிறகும்… இந்த பேனா அப்படியே இருக்கு.”

“அம்மா தினமும் அதை துடைச்சு… கழுவி… மை ஊத்தி எழுத வைக்கறாங்க…”

“அதுல அவருக்கு ஒரு திருப்தி.”

மோகன் கண்களில் நீர் ததும்பியது.

“ஒரு பேனா போட்ட கையெழுத்துதான் 1947ல நமக்கு சுதந்திரம் வாங்கி தந்துச்சு.. ஆனா… உங்க அப்பா அந்த பேனாவுக்கே சுதந்திரம் கொடுத்திருக்காரு.”

“ரியலி… ஹி இஸ் கிரேட்.”

அவன் குரல் நடுங்கியது.

“ஒரு ரிக்வெஸ்ட் துரை… இன்னைக்கு ஒருநாள்… இந்த பேனாவ நானே கழுவி… மை ஊத்தி எழுதணும்… எனக்கு அந்த வாய்ப்பு தருவியா?”

துரை ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அவன் மோகனை அணைத்துக்கொண்டான்.
இருவரின் கண்களும் கலங்கியிருந்தன.

அந்த டேபிளில் இன்னும் அந்தப் பேனா இருந்தது—
மூடியும் உடலும் பிரிந்தபடி…

ஆனால்,
அது ஒரு பொருள் அல்ல.

அது அவர் எப்படி சுதந்திரத்தை மதித்தார் என்பதற்கான அடையாளம்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்