
அகம் 13
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை, சுறாவளி காற்றைப் போல் ஒரே இடத்தில் சுழன்றுக்கொண்டிருந்தது பாரிஜாத மலர்கள், எப்படிப் பேசிக்கொண்டே ஊரின் எல்லையை வந்து சேர்ந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை, அந்தச் சுழல் காற்று நெருங்க நெருங்க இருவரும் பயந்துபடி நின்றிருந்தனர்.,
கலகலவெனச் சிரிப்பு சத்தமும், கண்ணாடி வளையல்களின் சத்ததுடன் சேர்ந்துக்கொண்டது சலங்கை ஒலியும், ஒரு நிமிடம் நிதானமாய் யோசிக்கத் தொடங்கினாள் அவந்திகை, நேற்றிரவு நடந்தவற்றை மெல்ல நினைவுக்குக் கொண்டு வந்தாள். கடைசியாய் அகனை அந்தப் பெண் கைகாட்டியது, அவள் நினைவை எட்டியது.
“அகன் என்ன நம்புறிங்கல்ல”எனக் கேட்டவள் அவன் கைபிடித்தாள்.
“என்ன செய்யணும் சொல்லு அவந்தி”
“அப்படியே இரண்டடி பின்னாடி வாங்க” என அவள் சொல்ல, அவள் சொல்வதைக் கேட்டு இருவரும் ஒரே நேரத்தில் இரண்டடி பின்னே வர,
அவர்கள் சுழன்றுக்கொண்டிருந்த சுறாவளி பட்டென அடங்கியது, அனைத்து சப்தங்களும் நின்று போனது.
“அவந்தி இதெல்லாம் கற்பனையா.? ஏன் இப்படி நடக்குது” அகன் கேட்டான்.
“அகன் இது கற்பனையோ, கனவோ கிடையாது, இப்ப மறுபடியும் ரெண்டடி முன்னாடி நான் போகுதேன், பிறவு என் பின்னாடியே நீங்களும் வாங்க” அவள் சொன்னபடி முன்னே இரண்டடி வைத்தாள், எந்த மாற்றமும் தென்படவில்லை என்றதும் அகனை பார்த்து சிரிக்க, அவன் இரண்டடி முன்னே வைக்கவும் மீண்டும் சூறாவளியாய் எழுந்த பாரிஜாத பூக்களில் இருந்து சிரிப்பொலி கேட்டது.
“அவந்தி என்ன இது..!”
“ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை பதறாதிங்க, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்குதேன்” எனச் சொல்லியபடி அவனை முன்னே தள்ளிவிட்டவள்,
“இவிய தானா வேணும், இந்தா” என அவந்திகை சொல்ல, சுறாவளியில் இருந்த சிரிப்பொலி மேலும் பலம் பெற்றதோடு, அகனை நெருங்கி வந்த சூரைக்காற்று, அவனருகே வந்து மின்சாரம் தாக்கியது போலப் பின்னே சென்று கீழே விழுந்து பெண்ணாய் உருபெற, திகைத்தபடி நின்றான் அகன்.
“அகன் பயப்படாம அப்படியே நில்லுங்க” அவந்திகை அறிவுறித்தினாள்.
“நீ காவல் தெய்வமா இருந்திட்டு போ, என்ன வேணும்னாலும் இருந்திட்டு போ, எதுக்காகப் போறவ வரவியள பயமுறுத்துற” ஆக்ரோசமாய்க் கேட்டாள் அவந்திகை. அவள் சொன்னதைக் கேட்டு அழகாய் நின்றிருந்த காவல் தேவதையோ கோபம் கொள்ள, விழிகள் இரத்த சிவப்பாய் மாறியது.
“என்ன பாக்குத, நீ இந்த எல்லைக்கும் ஊர் மக்களுக்கும், காவலா இருக்க வேண்டியவ, நீயே இப்படிச் செய்யலாமா.?” ஆக்ரோஷமாய்க் கத்தினாள் அவந்திகை. ஆனால் அந்தக் காவல் தேவதையோ எதுவும் சொல்லமாலே மறைந்து போனது.
“அகன் எதோ தப்பா இருக்கு.! உங்களுக்கு எதாவது விளங்குதா..?” அவள் கேட்டாள்.
“எல்லாமே என்னால தான் அவந்தி” குற்ற உணர்வுடன் நின்றான்.
“என்ன சொல்லுதிய, இதுக்கு நீங்க காரணமா..?”
“ஆமா நம்ம மேரஜ்காக அவசரமா கார் ஓட்டிட்டு வந்தப்ப, இந்த மரத்தடியில இருந்த சிலை மேல இடிச்சுட்டேன்னு தான் அன்னைக்கி சண்டை வந்திச்சு” என அவன் சொல்லி முடிக்க, அதிர்ந்தே போனாள் அவந்திகை.
“என்ன காரியம் பண்ணிருக்கிய அகன்.?” என அவள் கேட்கும் போதே கண்களில் நீர் அடைமழையாய்க் கொட்டியது.
“அது சின்னச் சிலை தான், தெரியாமா நடந்தது தான்” அவன் சாதாரணமாய்ச் சொல்ல,
“அய்யோ அகன் அது தான் இந்த எல்லைய காக்குற தெய்வமா நினைச்சு கும்பிட்டு இருக்காவ, நம்ம கண்ணு முன்னாடி வந்து போனதும் அது தான்” என அவள் விளக்க,
“நான் மன்னிப்பு வேணும்னா கேட்டுருறேன் அவந்தி” அகன் சொன்னான்.
“இல்லை அகன் இதை இரண்டு ஊர்காரவியளும் சேர்ந்து தான் முடிவு பண்ணணும், பஞ்சாயத்தைக் கூட்டி இரண்டு ஊர் தலையாரியும் பேசி முடிக்கணும்” எனச் சொன்னவள், நேரே அந்தப் பாரிஜாத மரத்தடியில் மண்டியிட்டவள்.
“செய்தது தவறு தான், அதுக்கான பரிகாரத்தையும் நீயே காட்டிரு தாயி” என வேண்டியவள், அகனின் கைப்பிடித்து அங்கிருந்து கிளம்பினாள் அவந்திகை.
நேராய் அவள் வந்து நின்றதென்னவோ தந்தையின் முன் தான், அவந்திகையின் தீவிரமான முகத்தைக் கண்டு குடும்பமே பதறியது, மன்னராசாவின் வீட்டில் பார்வதியும், ராஜபூபதியும் ஊருக்கு சென்றுவிட்டதால் அவன் மட்டும் தான் இங்கு இருந்தான்.
“சொல்லுட்டி எல்லாத்தையும் கூட்டி வச்சிகிட்டு, அமைதியா இருக்குதவ” ஜெயக்கொடி கேட்க,
“இரும்மா..! பால்கனி பாட்டி வரட்டும்” அவந்திகை சொன்னாள்.
“அவியள எதுக்குட்டி வரச் சொன்ன,அப்படி என்ன விசயம் தலை போற காரியமா என்ன.?” அவர் கேட்டுக்கொண்டிருந்த போதே பால்கனி வீட்டிற்குள் வந்தார்.
“வாங்க சித்தி” ஜெயக்கொடி அழைக்க,
“வாங்க அத்தை” எனக் காயத்ரியும் அழைத்தார்.
“வாறேன் வாறேன்” எனச் சொன்னவர் நெகிழி நாற்காலியில் வந்தமர்ந்தார்.
“அவிம்மா இப்பச் சொல்லு என்ன விசயம்” முத்துவேல் கேட்க,
“எப்பா அது வந்து” எனச் சொன்னவள் அகனின் கைகளை இறுக பற்றிக்கொண்டாள், அவளின் கரம் சூடேறியிருப்பதை உணர்ந்தான் அகன்.
“அவந்தி நானே சொல்லுறேன்” என அகன் நடந்தேறியவற்றை விவரிக்க, வீட்டில் சில நொடி நிசப்தம், ஒருவர் மாறி ஒருவர் முகம் பார்த்துகொள்ள,
“அவி அந்தக் ஊருகாரவியிட்ட எப்படிம்மா பேசுறது.? ஏற்கனவே வம்பு வழக்குவானுவ, அதனால தான் காவல் தெய்வத்துக்கு இதுவரை எதுவும் செய்யாம இருந்தோம்” என அவர் இடைநிறுத்த, பால்கனியோ கலகலவெனச் சிரித்தார்.
“இது இன்னைக்கி நேத்து இல்லை, அந்தக் காலத்துல இருந்து நடக்குத கதை தான, அந்த ஊர்ல இருந்து இந்த ஊருக்கு வாக்கபட்டு வந்தேன், அந்தத் திசை பக்கம் வரக் கூடாது சொல்லிட்டானுவ, இப்போ அவளே நியாயத்தைக் கேட்க வந்துட்டா” என மீண்டும் கலகலவெனச் சிரித்தார் பால்கனி.
“என் மகராசா, உன்னால தான் இந்த ஊருக்கு விடிவு காலம் கிடைக்கணும்னு இருந்திருக்கு” அகனின் கன்னம் தொட்டு முத்தமிட்டார் பால்கனி.
விக்கரமசிங்கபுரத்தின் பக்கத்துக் கிராமம் தான் நரசிங்கபுரம்(கற்பனை பெயர்), பல ஆண்டுகளாக இரண்டு ஊருக்கும் பகை நிலவி வந்ததையொட்டி, இரு கிரமத்திற்கும் போக்குவரத்துக் குறைந்தது, இரண்டு கிராமமும் சேர்ந்து திருவிழா வைத்து கொண்டாடிய காவல்காரி, இரண்டு ஊரும் பிரிந்த பிறகு காவல் தேவதை கைவிடப்பட்டாள். அவளைக் கண்டுகொள்ள வைப்பதற்கு அவள் நடத்திய திருவிளையாடலாக இந்த விசயத்தைக் கருதினார் பால்கனி.
“முத்துவேலு விசனப்படாத அவனுவளே வருவானுவ, நம்மக்கிட்டையே இந்தக் காட்டு காட்டியிருக்கா, அவனுவல சும்மாவா விட்டு வச்சிருப்பா, தலை தெறிச்ச ஓட்டம் ஓடி வருவானுவ பாரு” எனப் பால்கனி சொல்லிமுடிக்க.
“அத்தை இனியனை அனுப்பி அந்த ஊர்காரவங்கள்ட்ட சமாதானம் பேச சொல்லி அனுப்பி வைக்காவ” பயத்துடன் கேட்டார் காயத்ரி.
“வேண்டாம் தாயி, ஏற்கனவே கைகலப்பு வர போயிருக்கு, கண்டிப்பா வருவானுவ” என ஆணித்தனமாய் அடித்துச் சொன்னார் பால்கனி.
“நான் பார்த்துகிடுதேன், யாரும் இதைப் பத்தி கவலைபட வேண்டாம்,மாப்பிளை நீங்க அவந்திகையைக் கூட்டிட்டு மெட்ராஸ் போற வேலைய பாருங்க, அது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது, இங்க வெட்டு குத்து எதுனாலும் நான் சொல்லாம, இந்தத் திசை பக்கம் வரவேண்டாம்” என விரைப்பாய் சொன்னார் முத்துவேல்.
“இல்லை மாமா, இவ்வளவு பிரச்சனையை வச்சிக்கிட்டு, நான் சென்னை போகமாட்டேன், அதோட நான் இனி இந்த ஊர்ல தான் இருக்கப் போறேன், நானும் அவந்திகையும் இருக்குறதுக்கு இந்த ஊர்லையே இடமும் வாங்கிட்டேன்” அவன் பேசிக்கொண்டிருந்த போதே காயத்ரி அதிர்ந்தார்.
“இனியன் என்ன இதெல்லாம்..? அப்போ பிஸ்னஸை யார் பார்ப்பாங்க..?”
“எல்லாத்தையும் சந்தியா பார்த்துப்பாம்மா, அவ ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை, எல்லா உரிமையும் உங்க பேர்லையும் சந்தியா பேர்லையும் எழுதி வச்சிட்டேன், அதுக்காகத் தான் சென்னை போயிட்டு வந்தேன்” என அகன் சொல்ல, காயத்ரி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“என்னடா இதைப் பத்தி எதுவுமே என்கிட்ட டிஸ்கஸ் பண்ணலை, நீயா எப்படி இப்படியொரு முடிவை எடுக்கலாம்” கோபமாய்க் கேட்டார்.
“அகன் ஏன் இப்படிச் செஞ்சீங்க, நம்ம மெட்ராஸூக்கே போயிரலாம்” என அவந்திகை எதோ சொல்ல வர,
“அவந்தி..! கொஞ்சம் அமைதியா இரு..!” எனத் தன்னவளை அமைதிபடுத்தியவன், அவன் கண் அசைவிலே அவளுக்கு நம்பிக்கை கொடுத்தான்.
“அகன் நீயில்லாம என்னால சென்னைல இருக்க முடியாது, நானும் இங்கயே இருந்தர்றேன்” எனக் காயத்ரி சொல்ல.,
“அண்ணா எனக்கும் இந்த ஊர் பிடிச்சிருக்கு, நானும் உன் கூடவே இருந்தறேன்” எனச் சந்தியாவும் சொல்ல., புன்னகைத்தான் அகன்.
“சரி உங்க விருப்பம், மத்தத நான் பார்த்துக்குறேன்” என அகன் தாய்க்கு நம்பிக்கை கொடுத்தான். கெட்டதிலும் ஒரு நன்மை நடந்ததை எண்ணி குடும்பமே சந்தோசம் கொண்டது. ஆனால் அவந்திகை மட்டும் ஒன்றும் விளங்காமல் நின்றால், அவர்கள் குடும்பத்தோடு இங்கேயே இருப்பார்கள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அவள் சென்னை சென்று விடுவாள் என்ற நினைப்பில் தான் அங்காடியின் பொறுப்பு மொத்தமும் மன்னராசாவிடம் ஒப்படைத்தாள், ஆனால் இதெப்படி சாத்தியம் என்ற கேள்வி அவளைக் குடைந்துக்கொண்டிருந்த சமயம், பக்கத்து ஊரின் தலையாரி வந்தார்.
கிட்டதட்ட முப்பது வருடம் ஊர் எல்லையைத் தண்டாது, பகையை அப்படியே மனதிலே வைத்திருந்த நாராயணன், முத்துவேலின் வீட்டு வாயிலில் வந்து நின்றவர்.
“முத்துவேலு.!” வாசலில் இருந்தபடி குரல் கொடுத்தார் நாராயணன். குரல் கேட்ட மறுநொடி, தடதடவென வெளியே வந்தார் முத்துவல்.
“விசயத்தைக் கேள்விபட்டேன், அதோட அந்தக் காவக்காரி, இரவைக்கி கனவுல வந்து உறங்க விட மாட்டேன்ற” எனத் தலைக்கவிழ்ந்த படி அவர் சொல்ல.,
“இதுக்குப் பரிகாரம் எதுவும் இருந்தா பகையைப் பார்க்காம செஞ்சிவிட்டுருவோம்” என முத்துவேல் கேட்க,
“பகை கிடக்கு மன்னாங்கட்டி, இப்போ வேற பிரச்சனையில் மாட்டிகிட்டேன், அதுக்கு உன்னால மட்டும் தான் உதவ முடியும்” எனப் பொடி வைத்து பேசினார் நாராயணன்.
“என்ன பிரச்சனை.? பண உதவி எதாவது செய்யணுமா..? எதுனாலும் நான் செய்யுதேன், அந்தக் காவக்காரி மனசு குளிர்ந்தா போதும் எனக்கு” என முத்துவேல் பேச,
“பணமெல்லாம் வேண்டாம், உன் பொண்ணு ஒரு பொட்டிக்கடையை வச்சிருக்கா போல அதை எனக்குக் கொடுத்திறாம்” பட்டென நாராயணன் கேட்டுவிட, அதிர்ந்து நின்றார் முத்துவேல். அதற்குள் பாய்ந்து கொண்டு வந்தான் மன்னராசா.
“யோவ் என்ன நல்லது செய்யுத மாதிரி வந்திட்டு உலையிலையே கை வைக்கப் பாக்குதியா.? பெரிய மனுசன்னு கூடப் பார்க்க மாட்டேன்” என எகிறிக்கொண்டு நின்றான் மன்னராசா.
“ஏலே மன்னராசா அமைதியா இரு, பெரியவிய பேசிக்கிட்டு இருக்கோம்ல” அதிகாரமாய் வந்து விழுந்தது முத்துவேலின் குரல்.
“எதுக்காக என்னோட கடை உங்களுக்கு வேணும்.?” அவந்திகை நேராய் கேட்டாள்.
“உன்னோட சோப்பு ஷாப்பு தான், சுத்துபட்டியில எல்லாரும் பயன்படுத்துறாவ, அதனால இதை எடுத்து நடத்தலாம் நினைக்குதேன்” நாராயணன் சொல்ல, அவந்திகையைப் பார்த்து கொடுக்காதே என்பது போல் தலையசைத்தான் அகன். விழியிலே சம்மதம் தெரிவித்தவள், மன்னராசாவை பார்த்துப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“யோவ் நாராயணா எனக்கு ஒன்னும் தெரியாது நினைச்சிட்டு இருக்கியா.?” கோபமாய்க் கேட்டான் மன்னராசா.
“என்னலே தெரியும் உ்னக்கு, அதென்ன உன் கடையா..?” கோபமாய் நாராயணன் கேட்க,
“அவி இந்தாள நம்பி கொடுத்திறாத, நம்ம ஊருக்குள்ள ரசாயணப் பொருளுவளை அனுப்பினது இவன் தான், இவன் யாருக்கு வேலை செய்யுதான்னு மட்டும் தெரியல பார்த்துக்க, விசாரிச்சிட்டு தான் இருந்தேன்” என மன்னராசா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க, நாசி சிவந்த அவந்திகை கிளியை போலவே கோபமாய்ப் பார்த்தாள்.
“என்னால கடைய தர முடியாது” நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் அவள் சொல்ல,
“என்ன தாயி பொறுமையா பேசுதென்னு நினைக்குதியோ..? நீங்க பரிகாரமும் செய்துக்க முடியாது ஒன்னும் செய்துக்க முடியாது பார்த்துக்க” நாராயணன் வெறியுடன் பேசிக்கொண்டிருந்த போதே, அவந்திகைக்கும் அவருக்கும் குறுக்கே வந்து நின்ற அகன்.
“இல்லை என்ன பண்ணுவிங்க, உங்க பின்னாடி யாரு இருக்காங்க, யாருக்காக இப்படிப் பேசுறிங்க எல்லாம் எனக்குத் தெரியும், ரொம்ப ஆடாதீங்க, உங்க ஊர்கார பசங்கல அடிக்கத் தெரிஞ்ச எனக்கு, உங்களை ஒரு தட்டுத் தட்டுறது பெரிய விசயமில்லை” என மிரட்டலாய்ச் சொன்னான் அகத்தினியன். அவனின் அருகாமையில் பாதுகாப்பாய் உணர்ந்தாலும், அவனின் சட்டையை இறுக பற்றிக்கொண்டாள் அவந்திகை.
“சரிங்க துரை, அந்தப் புள்ளையே தர ஒத்துக்கிட்டாலும், நீ விடமாட்ட போல” நாராயணன் நகைத்தார்.
“சாமிக்குச் செய்ய வேண்டிய கடமையை நாங்களே செஞ்சிகிறோம், நாங்க கடையைத் தந்திடுவோம்ன்னு எப்பயும் நினைக்க வேண்டாம்” எனப் பேசி அவன் திரும்ப,
“அகன் சாமி விசயம், கடையைக் கொடுக்கது தான் நல்லது தான்னு எனக்குப் படுது, இதனால இரண்டு ஊரும் சேர்ந்தா பரவாயில்லை தானா” அகனின் முகம் பார்த்து அவந்திகை கேட்டாள்.
“அவந்தி இது வேற பிரச்சனை, அதை நான் பார்த்துக்குறேன்” எனச் சொல்லி அவளைத் தேற்ற, வந்த காரியம் நிறைவேறாமல் கோபத்துடன் சென்றார் நாராயணன்.
அவர் காரில் சென்றுக்கொண்டிருந்த போது அவருக்கு அழைப்பு வந்தது.அதை ஏற்றுச் செவி கொடுத்தார்.
“அபிஷேக்க் பேசுறேன்.!”
“சொல்லுங்க தம்பி, உங்க விசயமா தான் பேச்சு வார்த்தை நடத்திட்டு வந்தேன்”
“ம்ம்ம் என்ன ஆச்சு சொல்லு” மரியாதை இன்றி ஒலித்தது அவனின் குரல்.
“தம்பி மரியாதை ரொம்ப முக்கியம் தம்பி” என்றார் நாராயணன்.
“அதெல்லாம் இருக்கட்டும்யா.! கடையைக் கொடுக்குறேன்னு சொன்னாங்களா.?”
“இல்லை தம்பி தரமாட்டவ போல, அதுவும் மெட்ராஸ்கார பையன் ஒருத்தன் இருக்குதான், அவன் தர விட மாட்றான்” என நடந்தேறியவற்றை ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பித்தார்.
“யோவ் கைநீட்டி காசு வாங்குனல்ல, இப்ப என்ன முடியாது சொல்லுற, நீ தான சொன்ன இரண்டு ஊருக்கும் பகைன்னு” கோபத்தில் பிதற்றினான்.
“தம்பி கொடுத்த காசை வேணும்னாலும் வாங்கிடுக, என்னால இந்த வேலையைச் செய்து தர முடியாது, இந்த ஊர்காரவியளுக்கு மானம் மரியாதை முக்கியம் தம்பி” எனக் கோபமாய்த் திட்டிவிட்டு அழைப்பை துண்டித்தார் நாராயணன்.
அதன் பின் மீண்டும் அழைப்பு வர அதை ஏற்றார், மறுபுறம் ஒரு பெண்ணின் குரல்.
“ஹாலோ மிஸ்டர் நாராயணன்” அவள் அழைத்தாள்.
“சொல்லுங்கம்மா..!” நாராயணன் பதில் கொடுத்தார்.
“நான் அபிஷேக்க்கோட வொஃய்ப் லேகா பேசுறேன்” தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள்.
“சொல்லும்மா என்ன விசயம் பேசதணும், நான் தான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தறேன்னு சொல்லியாச்சே, பிறவு என்னத்துக்குப் பேசிகிட்டு” அவளிடம் பேசுவதைத் தவிர்த்தார்.
“இங்க பாருங்க அய்யா.! கொடுத்த பணத்துக்கு மேலையே தர்றோம், ஆனா நாங்க சொல்லுற மாதிரி நீங்க செய்யணும்” என மிகவும் பவய்மாய்ப் பேசினாள் லேகா.
“இல்லை இல்லைம்மா, எனக்கு மனசு ஒப்பலை, சாமி காரியத்தை வச்சுப் பேரம் பேசுறது தப்போன்னு எனக்கே தோணுது, இது எங்க ஊர் பிரச்சனை நாங்க பேசி தீர்த்துகிடுதோம், இதுல இனி நீங்க தலையிடாதீங்க, எனக்கு ஃபோனும் செய்தீய” எனக் கோபமாய்ப் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் நாராயணன்.
*******************
அவந்திகை அங்காடி:
என்றும் இல்லாத திருநாளாய் அகனும் அவந்திகையும் ஒன்றாய் கடையில் அமர்ந்திருந்தனர்., ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக்கொள்ள.
“அகன் ஏன் இப்படிச் செய்தீய.?”
“நான் என்ன அவந்தி செஞ்சேன்.? உன்னோட இத்தனை நாள் உழைப்பை தூக்கி கொடுக்கப் போறியா..?” அவன் விழி அவளை ஆழமாய்ப் பார்த்து வைத்தது.
“சாமி விசயம் அகன், அதுக்காகத் தான் யோசிக்குதேன்” அவள் விழிகளில் பயம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“அவந்தி .! இந்த ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் நான் தான் காரணம், என்னோட தப்புக்காக, உன்னோட உழைப்பை தூக்கி என்னால கொடுக்க முடியாது, எல்லாத்தையும் சரி பண்ண வேண்டிய கடமை எனக்குத் தான் அதிகமா இருக்கு, உன்னோட தொழிலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது, எனக்ககாகக் கூட நீ விட்டு தரக் கூடாது.” அவன் அழுத்தமாய்ச் சொன்னான்.
“ஏன் இப்புடி பிரிச்சு பேசுதிய.? நல்லதோ, கெட்டதோ, சேர்ந்து சமாளிக்கலாம்” எனச் சொல்லி அவனின் தோள் சாய்ந்தாள் அவந்திகை, புன்னகையுடன் அவளின் தலைக்கோதினான் அகன்.
“என்ன அவி கடைக்குள்ளயே ரவுசா.? எலியும் பூணையுமா சண்டை போட்டுட்டு இருந்தவிய, ரவுசுக்கு அளவில்லாம போச்சே, அய்யோ பார்த்துட்டேனே” என இல்லாத பல்லை காட்டி சிரித்தார் பால்கனி.
“ஏய் கிழவி.! நீ தாத்தாகூடப் பண்ணாத ரவுசா நாங்க பண்ணிக்கிட்டோம், போ போய் வேலைய பாரு, சின்னச் சிறுசுக அப்படி இருக்கும்னு உனக்குத் தெரியாதோ.?” என அவந்திகை கேலியாய் சொல்ல, சிரித்தபடி தொழிற்கூடத்திற்குள் சென்றார் பால்கனி.
“ஏன் அவந்தி அந்தச் சாமி இனி தொந்தரவு செய்யாதா.?” கேள்வியாய் அவள் முகம் பார்த்தான்.
“இல்லை அகன் இனி வந்தாலும் பிரச்சனை இல்லை, நம்ம தான் அவளுக்குக் கொடை கொடுக்கப் போறோமே, நாளைக்குக் குறி சொல்லுத பாட்டிய வரச் சொல்லிருக்கு, அப்போ சாமி என்னைக் கேக்குதோ, அதைச் செஞ்சிட்டா போதும் அகன்” அவள் சொல்ல சம்மதமாய்த் தலையசைத்தவனின் அலைப்பேசி சிணுங்க, அதில் லேகா காலிங் என வருவதைப் பாரத்தவுடன், அவந்திகையிடமிருந்து விலகி, கடைக்கு வெளியே வந்து அழைப்பை ஏற்றான்.
“மிஸ்டர் இனியன்.!” அவளின் பேச்சை கேட்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
“என்ன வேணும் சொல்லு.!” எரிச்சலுடன் மொழிந்தான் அகன்.
“என்ன கேட்டாலும் தந்திருவியா அகன், அப்படித் தரதா இருந்தா உன் ஆசை பட்டிக் காட்டு பொண்டாட்டியோட, அந்தச் சோ கால்டு பொட்டிக்கடைய கொடுத்திரு” அவள் குழைந்தபடி கேட்க,
“எனக்குத் தெரியும் லேகா.! இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான்னு” அகன் எரிச்சல் தொனியில் சொன்னான்.
“ஹா ஹா..! பிஸ்னஸ் பிக் ஷாட் அகத்தினியன்ல இருந்து, பட்டிகாட்டு மாப்பிள்ளை ஆனா, இப்போ அதெல்லாம் விட்டுட்டு டிடெக்ட்டிவ் ஆகிட்டியா..? லுக் இனியன் உன் டிடெக்ட்டிவ் வேலையெல்லாம் என்கிட்ட வச்சிகாத” கோபமாய்க் கத்தினாள் லேகா.
“ஏன் நீ பண்ணலையா டிடெக்டிவ் வேலை, என்னோட வொய்ஃபோட ஸ்மால் பிஸ்னஸை அழிக்கப் பாக்குற, இனி மேலும் இதைச் செஞ்சிட்டு இருந்த, என்ன வேற மாதிரி தான் பார்ப்ப மைண்ட் இட்”
“எது அந்தப் படிக்காத பட்டிகாடு பண்றதுக்குப் பேரு பிஸ்னஸ்.? ஹா ஹா..!” ஏளனமாய்ச் சிரித்தாள்.
“ஷட் அப் லேகா, என்னை முட்டாள்னு நினைச்சிட்டு இருக்கியா.? அப்பறம் எதுக்காக அவளோட ப்ராடக்ட்ஸா நீ வாங்கி டெஸ்ட் பண்ணின.? உன்னால அதுல இருக்கச் சில இன்க்கரிடியன்ட்ஸை கண்டு பிடிக்க முடியலை, அதுக்காகத் தான் நீ இவ்ளோ வேலை பண்ணுறன்னு , எனக்குத் தெரியும் லேகா, இதுக்கு உன் வெளிநாட்டு புருசன் அபிஷேக்க்கும் துணைன்னு, எனக்குத் தெரியும் லேகா” அவள் என்ன செய்துக்கொண்டிருக்கிறாள், அவளுடைய திட்டத்தை இவன் எப்படி அறிந்தான், எனக் குழம்பி போனவள், மௌனம் சாதித்தாள்.
“என்ன சைலண்ட் ஆகிட்ட லேகா.! உன்கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம வந்தது தான் நான் செஞ்ச ஒரே தப்பு, ஆனா நீ தப்புக்கு மேல தப்பு பண்ணிகிட்டே போற, அப்பறம் உன் பார்ட்னர் அபிஷேக்க் கிட்டயும் சொல்லிரு, ஐ நோ யுவர் ப்ளான்ஸ்னு, என்கிட்ட இருந்து விலகியே இரு அதுவும் என்னோட அவந்திகிட்ட இருந்து விலகி இருக்குறது உனக்கு நல்லது, அவ பாட்டிகாடோ, சிட்டியோ, ஷி இஸ் மை வொய்ஃப்” எனப் பட்டென அழைப்பை துண்டித்துத் திரும்பி பார்த்த போது, அங்கே அவந்திகை மார்பின் குறுக்கே கைகட்டி நின்றுக்கொண்டிந்தவளின் வழிகள், அகனின் மீது நிலைக்குத்தி நின்றது.

