
காட்டம்மன் கோவிலின் மணி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது, காற்றில் தானாய் மணிகள் ஒலியெழுப்ப, பூசாரியின் உடுக்கை சப்தத்தில், மெய் சிலிர்த்துத் தரிசனம் செய்துக்கொண்டிருந்த வேளையில்., அரக்கு நிற புடவையில், நெற்றியில் குங்குமம் துலங்க, ஒரு கையில் வேப்பிலையும், மறுகையில் சூலாயுதத்துடன், இதழ் மலர்ந்து சிரித்தபடி, அழகாய் ஆடிக்கொண்டிருந்த அவந்திகையின் மேல் அம்மன் இறங்கியிருந்தாள். புன்னகையும் மகிழ்ச்சியும் அவள் முகத்தில் தாண்டவமாடியது. அவளின் புன்னகையில் மெய்மறந்து குடும்பமே தரிசிக்க. கலகலவெனச் சிரித்தாள் அவந்திகை. அவளின் சிரிப்பைக் கண்டு புரியாது விழித்தபடி தன் தாயிடம் கேட்டான் அகத்தினியன்
“ம்மா அவந்தி ஏன் ஒரு மாதிரி சிரிக்குறா..?”
“இனியன் அவ மேல சாமி வந்திருக்குடா”
“சாமி வந்தா கோபமா தான ஆடுவாங்க, இவ என்ன சிரிக்குறா.?” கேள்வியாய் தாயின் முகத்தைப் பார்த்தான் அகன்.
“நம்ம சாமி அப்படித் தான்டா, அமைதியா நின்னு சாமி கும்பிடு” எனக் கண்டிப்புடன் வந்தது காயத்ரியின் குரல்.
அதே சமயம் அவளின் சிரிப்பொலி எதிரொலிக்க முத்துவேலிடம் ஆடியபடி நெருங்கியிருந்தாள் அவந்திகை.
“சேராது..! கூடாது சொன்னீயே இப்ப என்னாச்சு..?” என முத்துவேலை பார்த்து கேட்டவள் மீண்டும் சிரித்தாள்
“அது வந்து தாயி” என முத்துவேல் எதோ பேச, தீருநீற்றை அள்ளி முத்துவேலின் நெற்றியில் ஓங்கி அடித்தவள், “உன் பாவத்தைக் கரைக்க என்ன நாடி வந்திருக்கியா..?” சிரித்துக்கொண்டிருந்தவள் முறைத்தபடி கேட்க,
“அம்மா தாயி அவரை மன்னிச்சு எங்க குடும்பத்துக்கு நல்ல திசையைக் காட்டுமா” அவந்திகையின் காலில் விழுந்தார் ஜெயக்கொடி.
“நல்லது செய்யுன்னு கேக்குதியே, குடும்பத்தோட என்னைக்காவது கொடை கொடுத்திருக்கியா..? இல்லை என்னை நினைச்சு தான் பாத்திருக்கியளா..?” சிரித்தபடி கேட்டவள் ஆடியபடியே அனைவருக்கும் தீருநீறு பூசிவிட்டாள்.
அவந்திகை சாமி ஆடுவதைப் பார்த்து, பயந்து போய் நின்றிருந்தான் அகன்,
“ம்ம் சொல்லுங்க..! என்ன உத்தரவு கேக்கணும்..?” சாந்த ரூபினியாய் இருந்தவளின் விழிகள் ரத்த சிவப்பாய் மாறியது,
“அவந்திகைக்கும், அகனுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாமா தாயி, உன்னோட சம்மதத்தையும் உத்தரவையும் கேட்டு வந்திருக்கோம்” எனக் கை கூப்பிக் கேட்டார் காயத்ரி.
“நான் உத்தரவு தரலனா..? இந்தக் கல்யாணம் நடக்காதா என்ன..?” முத்துமுரல்கள் தெரிய, தெய்வீக கடாட்ஷம் முகத்தில் நிறைந்த படி அவந்திகை கேட்க, அனைவரும் பயந்தபடி நிறக், மீண்டும் சிரித்தவள்,
“எல்லாரும் என் புள்ளைகளா போயிட்டிய, ஆக வேண்டியதை பாருங்க” எனப் பேசியபடி தன் கழுத்தில் தொங்கிங்கிண்டிருந்த மாலையை அகன் கழுத்தில் போட்டுவிட்டு, முன்னே நடந்தாள்.
“தாயி எங்க புள்ளைக்கு ஒரு வழிய காட்டு” என மன்னராசாவை காட்டி பார்வதி, ராஜபூபதி கேட்க,
“எல்லாத்தையும்கும் எல்லாருக்கும் நல்லபடியா செஞ்சு தர்றேன்,எனக்கு என்ன செய்வீய..? ”
அவந்திகைக்குள் இருந்த அம்மன் கேட்க, அனைவரும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர். இவ்வளவும் நடந்துக்கொண்டிருக்கச் சிவசக்தியும் சந்தியாவும் கோவிலின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர்
“குடும்பமா சேர்ந்து கொடை எடுங்க போதும்” எனச் சொல்லி முடித்த நொடியில் மயங்கி சரிந்த அவந்திகையைத் தாங்கி பிடித்திருந்தான் அகன். சில விநாடிகளில் கண் விழித்தவள், அமைதியாய் அமர்ந்திருந்தாள். அனைவரின் முகத்திலும் சந்தோசம் தவழ்ந்தது, பார்வதி குடும்பத்தைத் தவிர.
“ஏட்டி அவந்தி சாமி நல்ல வாக்கு சொல்லுச்சுட்டி” எனப் பேசியபடி சாமிக்கு படைத்த பிரசாதமான பொங்கலை அவள் கையில் கொடுத்து,
“இதை உன் மாப்பிளைக்கிட்ட கொடு” எனப் புன்னகைத்தார் ஜெயக்கொடி.,
“எம்மா சிரிக்காத, உன்ன வந்து வச்சிகிடுதேன்” எனத் தாயிடம் கோபம் முகம் காட்டியவள் அகனை தேடிச் சென்றாள்.
“ஏட்டி சக்தி அகனை பார்த்த.?” தங்கையிடம் வினவியபடி நடந்தாள்.
“அகன் மாமா தென்னந்தோப்புகுள்ள போனாவக்கா” எனப் பதில் கொடுத்தபடி பொங்கலை அள்ளி வாயில் அடைத்தாள் சக்தி.
“அவந்தி அண்ணி, அண்ணன் உங்களுக்காகத் தான் காத்திருங்காங்க போங்க” எனச் சந்தியா புன்னகையுடன் சொல்ல, தென்னந்தோப்புக்குள் நுழைந்தாள் அவந்திகை.
“அகன்.! எங்க இருக்கீங்க” அவள் குரல் கொடுத்தாள், அவனிடமிருந்து பதில் வரவேயில்லை.
“அகன்..!” மீண்டும் அழைத்தாள்.
“அவந்தி இங்க இருக்கேன்” என்ற குரல் மட்டும் கேட்க, அவனைக் காணவில்லை என்றவள் தேடிக்கொண்டிருந்தாள்.
“கீழ பார்க்காத மேல பாரு” என அவன் சொல்ல, தலையை உயர்த்தி அவள் பார்த்த போது தென்னை மரத்தில் ஏறி அமரந்திருந்தான் அவன்.
“அய்யோ அகன் அங்க என்ன பண்ணுதியா..? விழுந்திராதிய” எனப் பதறி போய் அவள் குரல் கொடுக்க,
“ஆசையா இருக்குன்னு ஏறினேன் எப்படி இறங்கன்னு தெரியலை அவந்தி” என அகன் கூறினான்.
“சரியா போச்சு, நேத்து முன்ன மரம் ஏறியிருந்த தான தெரியும், நான் சொல்லியபடி கேளுங்க, கீழ பார்க்காம, எப்படி ஏறினியலோ அப்படியே இறங்குங்க பார்ப்போம்” அவந்தி உரக்க கத்தினாள்.
“நீ கண்ண மூடு அவந்தி நான் இறங்குறேன்” எனச் சொல்லியவன்., விறுவிறுவெனத் தென்னை மரத்திலிருந்து இறங்கியவன் அவள் முன் வந்து நின்றான்.
“இறங்க தெரியாது சொன்னீங்க.? எப்படி இறங்குனீங்க” வியந்தபடி கேட்டாள் அவந்திகை.
“உண்மைய சொல்லணும்னா உன்ன பார்த்து பயந்து தான் மரத்து மேல ஏறினேன், பயத்துல ஏறுனதால வேகமா ஏறிட்டேன்” என அவளைப் பார்த்து பயந்த படி சொன்னான் அகன்.
“என்னது என்னைப் பார்த்து பயந்துடியளா..? இதென்ன புதுக் கூத்தா இருக்கு” தன் விழிகளை உருட்டிக் கேட்டாள்.
“ஆமா தீடிர்ன்னு சாமி வந்து ஆடிட்டனா, நான் என்ன பண்ணுறது” பேசவே தயங்கினான் அகன்.
“அய்யோ அகன் இதுக்கா பயந்திய.? அதெல்லாம் ஒண்ணும்மில்லை நான் கட்டிருக்கேனே இந்தச் சீலைய தான், போன வருசம் சாமிக்கு சாத்துனாகப் பார்த்துகிடுங்க, அதனால தான் சாமி வந்திட்டு எப்போதும் வராது, உடுக்கச் சத்தமும் மணி சத்தமும் கேட்டா தான் மேலையே இறங்கும்” என விவிரித்தவள் பொங்கலை அவளிடம் நீட்டினாள், மறுக்காமல் வாங்கிக் கொண்டவன்,
“உன்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் அவந்தி”
“நானும் உங்ககிட்ட, சில விசயங்களைத் தெளிவுபடுத்தணும் பார்த்துகிடுங்க” அவளும் பதில் சொல்ல.
“சரி நீயே சொல்லு அவந்தி” மொழிந்தான் அவன்.
“அகன் எனக்குக் கோபம் அதிகம் பார்த்துகிடுங்க, பொய் சொன்னாலோ, தப்பா எதாவது பேசினாலோ கோபம் வந்திடும், சமையல் விசயம்னு பார்த்திங்கன்னா எனக்குத் தெரிஞ்ச அளவுக்குச் சமைப்பேன், சுட்டுப் போட்டாலும் இங்கிலீஷ்ல பேசிகிட மாட்டேன் பார்த்துகிடுக, இதெல்லாம் என் பக்கத்துல இருக்கச் சின்னச் சின்னக் குறை, கலியாணம் பண்ணிட்டு தொடக்கத்துல இனிச்சாலும் காலம் கடந்ததுக்கு அப்பறம் சின்ன விசயம் கூடக் குறையா தெரியும், அதுக்குத் தான் முன்னயே சொல்லிகிடுதேன், பெரியவிய மனசு நோவாம நடந்துகிடணும்” என அவள் சொல்லி முடித்தாள்.
“அவ்வளவு தானா வேற எதாவது மிச்சம் இருக்கா.?”
“நியாபகம் வந்தா அப்போ அப்போ சொல்லுதேன் அகன்” எனத் தலைக்கவிழ்ந்தாள் அவந்திகை.
“அவந்தி நானும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும், நீ வர்றதுக்கு முன்னாடியே என வாழ்க்கைல ஒரு பொண்ணு இருந்தா” எனத் தயங்கி சொன்னான் அவன்.
“யாரு அந்தப் பொண்ணு..?”
“நாங்க லவ் பண்ணிணோம், கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிணோம், சடன்னா அப்பா டெத், அப்பாவோட ப்ராமிஸ், அவகிட்ட எதுமே சொல்லாம, அப்போவோட ப்ராமிஸ்காக இந்த ஊர்க்கு வந்தேன், உன்கிட்ட சொல்லி நிலைமைய புரிய வச்சு அவளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சப்ப தான் தெரிஞ்சுது அவ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு” அவன் சொல்லி முடிக்க, அவந்திகை எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
“அவந்தி..!”
“அகன்..! இப்பயும் அவ உங்க மனசுல இருக்காளா..?” விழிகளில் ஒரு வித படபடப்புடன் கேட்டாள்.
“இப்ப இதுக்கு நான் என்ன சொல்லணும் நினைக்குற அவந்தி”
“உண்மைய மட்டும் சொல்லுங்க அகன்”
“அவந்தி இரு ஒரு நிமிசம் கை கழுவிட்டு வந்தறேன்” எனச் சொன்னவன் சீறிப் பாய்ந்துக்கொண்டிருந்த பம்ப் செட்டில் கைகளைக் கழுவி விட்டு, அவள் அருகில் நெருங்கி வந்தவன்.
“அவ எப்பயோ என் மனசுல இருந்து போய்ட்டா அவந்தி, இப்போ கொஞ்ச நாளா என் மனச ஒரு கிளி கொத்திட்டு போயிருச்சு, அந்தக் கிளி மனசுல இந்த அகன் இருக்கானான்னு தெரிஞ்சுக்கணும்” என மொழிந்தான் அகன்.
“ஓ..! அந்தக் கிளி கிட்ட சொல்லாம இருந்தா அந்தக் கிளிக்கு எப்படித் தெரியும்.?” என நக்கலாய் கேட்டாள் அவந்திகை.
“அகம் கொய்த அவந்திகையே..! உனக்காக” என எதையோ அவள் முன் மண்டியிட்டுக் கைகளில் எதையோ ஏந்தி நின்றான். அவனை வியந்த படி பார்த்தாள் அவள்.
“அகன் எனக்காகவா..?”
“உனக்காகத் தான் அவந்தி” எனச் சிரித்தான் அவன்.
“நிஜமாவா அகன்.?”
“நிஜமா தான்” அவன் அழுத்தி சொல்ல, அவன் கையிலிருந்த கிளியை அன்போடு வாங்கிக் கொண்டவள்.
“அவந்திகை கையில் இன்னொரு அவந்திகை..!” எனப் புன்னகைத்தான்.
“அகன் என் பேரோட அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா.?” விழிகள் விரிய கேட்டாள்.
“நானும் தமிழ் படிச்சிருக்கேன் அவந்தி” என அவன் சொல்ல.,
“ரொம்ப நன்றி அகன், இந்தக் கிளி ரொம்பப் பிடிச்சிருக்கு, என்ன பேர் வைக்கலாம்” என அவள் யோசிக்க.
“பேரு வைக்கறதெல்லாம் ஓரமா வை, நான் பண்ணின ப்ரோபஸ்க்கு பதிலே இல்லையே..?” ஏக்கம் தாங்கிய விழிகளுடன் அவளைப் பாரத்தான்.
“என்ன பதில் சொல்லணும் அகன்”
“பிடிச்சிருக்கா.? இல்லையான்னு”
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்” எனச் சொல்லி நாணம் கொண்டு ஓட முயன்றவளின் கை பிடித்துத் தடுத்திருந்தான் அகன்.
“அகன் இது ஒண்ணும் உங்க மெட்ராஸ் இல்லை, வயசு பொண்ண இப்படிக் கைபிடிச்சு இழுக்குறது ரொம்பத் தப்பு, அப்பறம்” என அவள் எதோ சொல்ல வர அவனை நோக்கி இழுத்தான்.
“அப்பறம்.! சொல்லு அவந்தி” என விசமபுன்னகையுடன் அவளை ஊற்று நோக்கியவனின் விழிவீச்சில் பெண்ணவள் பரிதவித்துப் போனாள்.
“இதெல்லாம் தப்பு ஊர்காராவிய பார்த்தவன்னா,கதை கெட்டி விட்டுருவாவ” எனத் திக்கி திணறி மொழிந்தாள்.
“வயசு பொண்ண தான் கை பிடிச்சு இழுக்கக் கூடாது அவந்தி, அத்தை பொண்ணயோ, மாமா பொண்ணயோ தாராளமா கை பிடிச்சு இழுக்கலாம் தப்பில்லை, அதுவும் நீ நான் கட்டிக்கப் போற பொண்ணு” என அவள் நோக்கி குணிய, அவனைத் தள்ளி விட்டு வெட்க புன்னகையுடன் தென்னந்தோப்பை விட்டு வெளியே வந்தாள் அவந்திகை.
******************
“என்ன ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்போ சென்னை போகணும் சொல்ற” கோபமாய்க் கத்தினார் காயத்ரி.
“ம்மா அங்க நான் போனா தான் வேலையே நடக்கும், சில ஃபைல்ஸ்ல கையெழுத்து போட வேண்டியது இருக்கு” அகன் மறுபேச்சுப் பேசினான்.
“ஒரு வாரம் கழிச்சுக் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் கையெழுத்துப் போட்டுக்கலாம் இப்ப எந்த அவசரமும் இல்லை”
“ம்மா நான் இங்க இருந்திகிட்டா அங்க இருக்க வேலைய யாரு பார்ப்பாங்க..? புரிஞ்சு தான் பேசுறிங்களா..?” கோபம் முகம் காட்டினான் அகன்.
“அதான் பிஏன்னு ஒரு வாணரத்தை கூடயே வச்சிருப்பியே அவன் பார்த்துபான், அவனுக்கு ஃபோன் போட்டு கொடு நான் பேசுறேன்” அதிகாரமாய் விழுந்தது காயத்ரியின் குரல்.
“நான் ஃபோன்லாம் பண்ணி தர முடியாது” என இவன் பங்குக்குத் தன் அதிகாரத்தைக் காட்ட,
“இனியன்..!” கோபமான காயத்ரியின் குரலில் அறை முழுக்க நிசப்தம் நிலவியது. அதே சமயம் காபி குவளையுடன் அவந்திகை அறைக்குள் நுழைந்தாள்.
“அத்தை காபி” அமைதியாய் அவள் சொல்ல, கோப முகமாய் இருந்த காயத்ரியின் முகத்தில் பட்டெனப் புன்னகையைப் பூசிக்கொண்டார் காயத்ரி.
“வாமா அவந்தி.!” எனப் பேசியபடி காபியை கையில் எடுத்துக்கொண்டார்.
ஆனால் அவந்திகையோ சோர்ந்து போய் நின்றிருந்த தன்னவனின் முகத்தை ஏறிட்டாள், அவன் முகம் வாடி போயிருப்பதைக் கண்டு தானும் வாடி போனாள்.
“அத்தை எதாவது பிரச்சனையா.?” தயங்கி அளவாய் வார்த்தைகளைச் சொன்னாள் அவந்திகை.
“பெரிய பிரச்சனைலாம் இல்லைமா. இவன் எதோ உளறிகிட்டு இருக்கான்” எனக் காயத்ரி ஏளனமாய்ச் சொல்ல.
“ம்மா இது பெரிய பிரச்சனை இல்லையா, நான் இப்போ போகலைனா, லாஸ் ஆகிரும்மா” கண்கள் சிவக்க நின்றான். அவன் நிலையைத் தெளிவாய் உணர்ந்தவள் போல் அவனைப் பார்த்துக் கண் அசைவிலயே ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனச் சமிக்கை செய்தவள்.
“அத்தை அவங்க போயிட்டு வந்திருவாவ, சரின்னு சொல்லுங்களான்” கெஞ்சலாய் சொன்னாள் அவந்திகை.
“அது இல்லைடா கண்ணு..! கல்யாணத்தை நெருக்கத்துல வச்சிகிட்டு இப்படி ரொம்பத் தூரம் பயணம் செய்யக் கூடாதுடா” அவளிடம் சொன்னார் காயத்ரி.
“அதுகில்லை எதாவது முக்கியமான விசயமா இருந்திட போகுது அத்தை, அகன் போயிட்டு கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திடுவாக, இல்லை அகன்” என அகனை பார்த்து அவள் கண் சிமிட்ட, அவளின் கண் சிமிட்டலில், ஸ்தம்பித்து நின்றவன் சில நொடிகளில் நிதானித்து.
“ஆமா ம்மா, டூ டேஸ் முன்னாடியே வந்திருவேன்”
“சரி சரி போயிட்டு வா” என அகனிடம் சொன்னவர் அவன் காதருகே சென்று, “உனக்காக உங்க அப்பா எப்படிப் பொண்ண பார்த்திருக்காரு பாருடா, இப்போவே உனக்குச் சப்போர்ட் பண்ணி பேசுறா. நல்லா பார்த்துக்கடா அவளை” எனச் சொல்லி விட்டு அந்த அறையை விட்டு காயத்ரி வெளியே சொல்ல, கொண்டு வந்த காபி குவளையை எடுத்து அகனிடம் கொடுத்துவிட்டு, வீட்டின் கொல்லைபுறத்தை நோக்கி நடந்தாள்.
காபியை பருகியபடி. பார்வையிலே அவளையும் பருகியவன் அவள் பின்னே நடந்து சென்றான். அவளோ நெல் மணிகள் அடங்கிய கூடையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் பின்னே இருக்கும் மாமரத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தாள்.
“அவந்தி..!” அவள் முதுகின் பின் குரல் கேட்க திரும்பினாள்.
“சொல்லுங்க அகன்..!
“நான் ஊருக்கு போறதுக்கு ஹெல்ஃப் பண்ணினதுக்குத் தேங்க்ஸ் அவந்தி” வார்த்தைகளை அவன் தொடுத்தான்.
“வெறும் தேங்க்ஸ் மட்டும் தான..?”
“வேற என்ன செய்யணும்..?” கேள்வியாய் அவன் பார்க்க,
“ஊருக்குப் போகப் பேறீய” வார்த்தைகளை உள் இழுத்தாள்.
“சொல்லு அவந்தி என்ன பண்ணணும்”
“அது வந்து அகன், வந்ததுல இருந்து வீட்டுகுள்ளயே முடங்கிக் கிடக்குதிய வார்றியளா, எங்க ஊரை சுத்தி பார்ப்போமா.?” கண்களைச் சிமிட்டினாள் அவந்திகை.
“ஆமா உங்க ஊர்ல என்ன இருக்கப் போகுது, நாலு காத்தாடி, அப்பறம் மரம், வேற வயல் இருக்கு இதைச் சுத்தி பார்க்க சொல்லுறியா..?” கூர்மையாய் அவளைப் பார்த்து வைத்தான்.
“என்ன இப்படிச் சொல்லிட்டிய அகன், இதை விட இன்னும் நிறையாவே இருக்கு அகன், இருங்க கிளிக்கு நெல்லு போட்டு வார்றேன் சுத்திட்டு வந்த பிறவு, நீங்க ஊர்க்கு கிளம்புங்க” எனச் சொல்லிச் சென்றவள் மாமரத்தை அடைந்திருந்தாள்., அவள் அங்கே சென்றதும் கிளிகள் கீச்சலீடும் சத்தமும், அவளைச் சுற்றி நூற்றுக் கணக்கான கிளிகள் பறந்தாலும், அவள் தனித்துத் தெரிந்தாள் அகத்தினியனின் விழிகளுக்கு.
கொஞ்சி பேசும் அவந்திகையே..!
அகன் மனதை கொய்தாயே..!
என் தென்னகத்து பெண்ணே..!
உன் விழி பேசும் மொழியை
காட்டிலும்,
உன் இதழ் பேசும் நெல்லை மொழி..!
அழகோ அழகு..!
அகம் கொய்த அவந்திகையே..!

