Loading

இதயம்-3

ஆதனின் அலுவலகத்திலிருந்து சிம்மவாஹினி வெளியேறுவதைப் பார்த்தபடியே காரிலிருந்து இறங்கினாள் நிஷா.

“இது யாரு புதுசா? இவளை நான் பார்த்ததே இல்லையே?” யோசனையாய் புருவம் சுருக்கிய படியே உள்ளே நுழைந்தாள்.

ஆதனின் அறைக்குள் நுழையப் போகும் முன், குறுக்கே வந்து நின்றான் பிரபு.

“மேம்! மேம்! பாஸ் யாரையும் உள்ளே வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கார் மேம்!”

“அது மத்தவங்களுக்கு, எனக்கு இல்லை. நீ முதலில் வழியை விடு. இரிடேட்டிங்கா இடையில் வந்து நின்னுகிட்டு!”

“மேம்! மேம்! கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க! சார் கிட்டே கேட்டுட்டு வந்து சொல்றேன்.!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பிரபுவை தள்ளி விட்டுவிட்டு உள்ளே நுழைந்திருந்தாள் நிஷா.

“ஹாய் பேபி!” எனத் தன் எதிரே நின்றவளைப் பார்த்தவன், கேள்வி தாங்கிய கண்களோடு பிரபுவைப் பார்த்தான்.

“நான் சொன்னேன் சார்! கேட்காமல் உள்ளே வந்துட்டாங்க சார்!”

“நான் பார்த்துக்கிறேன், நீ போ!” என அவனை அனுப்பிவிட்டு நிஷாவின் புறம் திரும்பினான். ஆனாலும் அவனே அறியாத வண்ணம் வார்த்தைகளில் எரிச்சல் எதிரொலித்தது.

“சொல்லு நிஷா! இங்கே எதுக்கு வந்தே?”

“இப்போ ஒரு பொண்ணு வந்துட்டு போறாளே அவ யாரு?”

“எந்தப் பொண்ணு?”

“அதுதான் அந்த யெல்லோ டாப், ப்ளு ஜீன்ஸ் அந்தப் பொண்ணு தான்.!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ இங்கே எதுக்கு வந்தே? அதை முதலில் சொல்லு!”

“ஏன் பேபி! நான் உன்னைப் பார்க்க வரக் கூடாதா.?”

“கூடாது தான்! ஆஃபிஸில் நீ என்னை வந்து பார்க்கக் கூடாது.!”

“ஏன் அப்படி ரித்வி? நீயும் நானும் வேற இல்லையே?” அவள் குரல் குழைவதும், வழிவதும் இவனுக்கு உள்ளுக்குள் எரிச்சலை மூட்டியது.

“ம்ப்ச்! உனக்கு ஷூட் எதுவும் இல்லையா? திடீர்ன்னு இங்கே வந்திருக்க?”

“ஷூட் இன்னைக்குக் கேன்ஸல் ரித்வி! ஆட் (Add) ஷூட் பண்ணப் போற அந்தக் கடையில் ஏதோ ஃபயர் ஆக்ஸிடெண்டாம். அதனால் ஷூட் டேட் போஸ்போண்ட் ஆகிடுச்சு!”

“ஓ! உனக்குப் பொழுது போகாமல் இங்கே வந்தியா?”

“என்ன ரித்வி! நான் வெட்டியாய் இருக்கேன்னு சொல்லாமல் சொல்றியா?”

“ஹேய்! நான் போய் அப்படிச் சொல்வேனா? நீ பொழுது போகலைன்னா தானே என்னைப் பார்க்கவே வருவே! என்னை விட உனக்கு முக்கியமான கமிட்மெண்ட்ஸ் நிறைய இருக்குமே?” சிரித்துக் கொண்டே சொன்னான் ஆதன்.

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? இந்தக் குட்டி ஹார்ட் வலிக்குது தெரியுமா? இன்னைக்கு என்னோட ஒட்டுமொத்த கமிட்மெண்ட்ஸும் நீ மட்டும் தான் பேபி!. நாம ஏன் இன்னைக்கு டேட் (Date) பண்ணக் கூடாது? ஈ.சி. ஆர் -ல் காட்டேஜ் கூடப் புக் பண்ணிட்டேன். போகலாமா ரித்வி? என்னை நீயும் உன்னை நானும் புரிஞ்சிக்க வசதியாய் இருக்குமே!”

“நாட் இண்ட்ரஸ்டட் நிஷா!” பட்டென அவன் பதில் சொல்லவும்,

“ஏன்?!” எனக் கேட்ட நிஷாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

“ஏன் இவ்வளவு ஷாக் ஆகிறே நிஷா? டேட் பண்றதுன்னா என்ன? முதலில் அதைச் சொல்லு.!”

“டேட் பண்றதுன்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்து டைம் ஸ்பெண்ட் பண்ணுறது. பிஸிக்கலி, மெண்டலி உனக்கு நானும், எனக்கு நீயும் ஃபிட்டான்னு (Fit) தெரிஞ்சுக்கத் தான் இந்த டேட்.!”

“ஓ! அப்போ நான் ஃபிஸிக்கலி ஃபிட் இல்லைன்னு தெரிஞ்சால் என்னை வேணாம்ன்னு சொல்லிடுவியா?” குறி பார்த்த அம்பைப் போல் நேரடியாய் ஆதன் கேட்டக் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறினாள் நிஷா.

“அப்படி இல்லை பேபி! நான் என்ன சொல்ல வர்ரேன்னா..!” லிப்ஸ்டிக் இதழ் சுளித்து அவள் எதோ சொல்ல வர, கை நீட்டி அவளைத் தடுத்தவன்,

“ஜஸ்ட் ஸே எஸ் ஆர் நோ!” எனக் கேட்டான்.

அவளோ பதில் சொல்லாது அமைதியாய் நின்றிருக்க,

“நீ நிச்சயமாய் நோ சொல்லுவேன்னு எனக்குத் தெரியும் நிஷா! பட் நீ நினைக்கிற மாதிரி, உடல் பொருத்தம் பெருசுன்னு நினைக்கிறவன் நான் இல்லை. மனசு பொருந்தி இருக்கணும்.”

“என்ன நீ, என்னவோ சாமியார் மாதிரி பேசறே? இப்போ இருக்கிற சொசைட்டியில் கல்யாணமே ஃபிஸிக்கல் நீட்ஸ்காக மட்டும் தானே? என்னால் டிப்பிகல் ஹவுஸ் ஃவொய்ஃபா இருக்க முடியாதுப்பா. கல்யாணம், குழந்தை அது இதுன்னு வாழ்க்கை முழுசும் சுமையைக் கழுதை மாதிரி சுமந்துட்டே இருக்க வாழ்க்கை எனக்கு வேணாம். நான் கல்யாணத்துக்கு முன்னமே நாம நல்ல பார்ட்னர்ஸா இருக்க முடியுமான்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் டேட் கூப்பிட்டேன். நீ என்னவோ பெரிய தத்துவமெல்லாம் பேசறே? ஜஸ்ட் இர்ரிடேட்டிங்! உன் கூடப் பேசினாலே ஏதோ ஆதி காலத்துக்குப் போன ஃபீல் வருது.”

“நீ பேசறதும் எனக்கு இரிடேட்டிங்கா தான் இருக்கு. நாம மீட் பண்ணி முழுசா ஒருமாசம் இருக்குமா? அதுக்குள்ளே இதெல்லாம் எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கல. எனக்குத் தெரிஞ்சவரை நீ சம்யூவோட ஃப்ரெண்ட் அவ்வளவு தான். வேற எதுவும் எனக்கு உன்னைப் பத்தி தெரியாது. நீயும் அப்படித்தான் என்னைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. முதலில் நாம நம்மைப் பற்றித் தெரிஞ்சுப்போம். வெறும் ஃபிஸிக்கல் நீட்ஸ் மட்டும் வாழ்க்கையில்லை நிஷா. முதலில் அதைப் புரிஞ்சுக்கோ!”

“என்ஃப் ரித்வி! இந்த மாதிரி முட்டாள் தனமான பேச்செல்லாம் எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது. உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு வந்தேன் பாரு என்னைச் சொல்லணும். மனசு, காதல், ப்ளா ப்ளா இதெல்லாம் என் காதில் இரத்தம் வர வைக்குது.!”

“அந்த அளவிற்கு என் பேச்சு இர்ரிடேட்டிங்கா இருக்குன்னா இன்னும் ஏன் இங்கே நிக்கிறே நிஷா? எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அதை யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன். உனக்குப் பிடிக்கலைன்னா இந்தக் கல்யாணம் தேவையே இல்லை. உன் தாட்ஸை என் மேல் திணிக்க முயற்சிக்காதே! இன்னும் இங்கே நின்னு என் வேலையைக் கெடுக்காமல், முதலில் கிளம்பு!”
நிதானமாய்ச் சொல்வதைப் போல் தெரிந்தாலும் ஆதனின் குரலில் அத்தனை அழுத்தம் இருந்தது.

சட்டென முகத்தில் அடித்தார் போல் அவன் சொன்னதில் நிஷாவின் முகம் கன்றிக் கருத்துப் போனது.

“என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுறே ரித்வி! இதுக்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகணும்!” என்றவள், பூமியதிர நடந்து வெளியேறினாள்.

‘என்ன பண்ணிடப் போறா? சம்யூவோட மறுபடியும் வந்து நிற்பாள்’ என மனதில் நினைத்தவனுக்குத் தன் தங்கை சம்யுக்தாவின் மீது தான் கோபம் வந்தது.

‘இவள் மட்டும் சரியாய் இருந்திருந்தால் இதெல்லாம் தேவையே இல்லை.’அந்த ஆகாஷ் மீதும், ஆதனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் இதையெல்லாம் அவன் சகித்துத் தான் தீர வேண்டியிருக்கிறது.

*********

“திமிர் பிடிச்சவன்! எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட கேக் ஷாப்பை பொட்டிக் கடைன்னு சொல்லுவான் இடியட்! பார்க்குறதுக்கு ஆறடிக்கு வளர்ந்த அணகோண்டா மாதிரியே இருக்கான். இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனாய் இருந்தும் என்ன செய்ய அடுத்தவங்க தொழிலை மதிக்கணும்ங்கிற அடிப்படை கூடத் தெரியலையே! என்னவோ பெரிய சமூகச் சேவை பண்ணுற அரசியல்வாதி மாதிரியே பேசறான் முட்டாள்.!”

“என்னாச்சு வாஹினி! ஏன் இப்படி மூச்சு விடாமல் கத்தறே?” என்றபடியே வந்து நின்றான் ஷியாம்.

“வாடா! உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். எல்லாம் உன்னால் தான். நீ மட்டும் சரியாய் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?”

“என்ன வாஹினி சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலையே?”

“அப்படியே இங்கே வாயேன்! நான் புரிய வைக்கிறேன்.!” என்றவள் பக்கத்திலிருந்த பூரிக் கட்டையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள்.

“வேணாம்! உன் பக்கத்தில் வந்தால், என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. நான் இப்படியே தப்பிச்சு ஓடிப் போயிருவேன்.!”

“வாசலைத் தாண்டி காலை வெளியே எடுத்து வச்ச, கொன்னுடுவேன் டா.!”

“என்ன தான் நடந்துச்சு அதை முதலில் சொல்லு வாஹினி. அதை விட்டுட்டு இப்படிப் பத்திரகாளியாட்டம் பூரிக் கட்டையைத் தூக்கிட்டு நிக்கிறது நல்லாவா இருக்கு?”

“என்ன பிரச்சனைன்னு உனக்குத் தெரியவே தெரியாதா ஷியாம்?”

“ஒருநாள் டெலிவர் பண்ண போகலை. அதுக்குப் போய் என்னைப் பாடாய் படுத்தறே வாஹினி!”

“நீ மட்டும் அன்றைக்கு சரியா டெலிவர் பண்ண போயிருந்தால்.. அவன் என்னை..!” ஏதோ சொல்ல வந்தவள் பட்டெனப் பாதியில் நிறுத்தினாள்.

“அவன் உன்னை, மீதியைச் சொல்லு வாஹினி!”

“அது ஒண்ணுமில்லை, நம்ம ஷாப்போட டை-அப் வச்சிக்கிறதுக்காக நளபாகத்தோட சி.இ.ஓ கேட்டான். உனக்குப் பதில் நான் போய் மிட் நைட் டெலிவரி பண்ணினேனே அது அவனுக்குத்தான்.!”

“ஏய்! என்ன சொன்னே? நளபாகத்தின் சி.இ.ஓ ஆதன் தானே? அவரையா சொல்றே? அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவரைப் போய் அவன் இவன்னு திட்டறே? அன்னைக்கு மிட் நைட் அவருக்குத் தான் டெலிவர் பண்ணியா? நான் மிஸ் பண்ணிட்டேனே, நிஷான்னு பொண்ணு பேரில் ஆர்டர் வரவும் கொஞ்சம் அசால்ட்டாய் இருந்துட்டேனே.! இப்போ இருக்கிற யங்ஸ்டர்ஸோட ரோல் மாடல் அவர் தான். அவர் நம்ம கூட டை-அப் கேட்டிருக்கிறார். இது எவ்வளவு ஹாப்பியான நியூஸ்.! நீ அவர் கிட்டே எதுவும் தப்பா பேசிடலியே? பொலைட்டா (Polite) தானே பேசினே?”

“போடா லூசு! நான் பொலைட்டா பேசறதுக்கு அவன் என்ன கஸ்டமரா டா? நீயும் லூசு மாதிரியே பேசறே? உன்கிட்டே போய்ச் சொன்னேன் பாரு. பேசாமல் அவனுக்குப் பேனர் வச்சுப் பாலாபிஷேகம் பண்ணு!”

“ஏய்! அவர் கேட்டதுக்கு நீ என்ன சொன்னே? ஓகே தானே சொன்னே?” தோழியின் அருகினில் வந்து கூர்மையாய் முகத்தைப் பார்த்தபடியே கேட்டான் ஷியாம்.

“இப்போ நீ என்னத்துக்கு இப்படி உத்துப் பார்க்கிறே! நான் ஒண்ணும் ஓகே எல்லாம் சொல்லலை. என் பார்ட்னர் மரமண்டைகிட்டே அதவது உன்கிட்டே டிஸ்கஸ் பண்ணாமல் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன்.!”

“சீரியஸா அப்படியா சொன்னே? வெளியே திட்டினாலும் என் மேலே உனக்கு எம்புட்டு பாசம்.?” எனச் சிலாகித்துக் கொண்டவன்,

“இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லை வாஹினி! எனக்கு டபுள் ஓகே! நீ கால் பண்ணி டீலுக்கு ஓகேன்னு சொல்லிடு!” எனச் சொன்னான்.

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. அவன் கூட டீலிங் வச்சிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் வேண்டாம் சொல்லிட்டேன். நம்ம ஷாப்பை அவன் பொட்டிக் கடை சொல்றான் டா. அதனால் ஸ்ட்ரிக்ட்லி நோ சொல்லிட்டேன். நமக்கு அந்த டீலிங் வேணாம் ஷியாம்.!”

“ஏய் வாஹினி! பைத்தியமா நீ? இது எவ்வளவு பெரிய வாய்ப்பு. வேணாம்னு சாதாரணமா சொல்லிட்டு வந்திருக்கே? நாம க்ரோ அப் ஆகிறதுக்கு நல்ல சான்ஸ் வாஹினி! நிஜமாவே வேணாம்ன்னு தான் சொன்னீயா?”

“நான் தான் நோ சொல்லிட்டேன்னு சொல்றேனே? திரும்பத் திரும்ப ஏன் கேட்கிறே? இது பெரிய வாய்ப்பாய் இருக்கலாம். ஆனால் அதுக்காக என் ஷாப்பை பொட்டிக் கடைன்னு சொன்னவனோட காலில் எல்லாம் விழ முடியாது.! அவன் என்னமோ பெரிய நியாயவாதி மாதிரி போசறான். என்னவோ பிச்சை போடற மாதிரி. எனக்கு அவனோட ஆட்டிட்யூட் சுத்தமா பிடிக்கலை.!”

“இங்கே பாரு வாஹினி! என்னைப் பாரேன். நான் சொல்றதைப் பொறுமையாய் கேளு!”

“நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்குத் தெரியும்.!”

“ப்ளீஸ் வாஹினி!”

“ம்! சொல்லு!”

“இங்கே பாரு! நாம இப்போ சென்னையோட எல்லா இடங்களுக்கும் டெலிவர் பண்ணுறதில்லை. அதோட நாம இதை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிற அளவிற்கு மேன் பவரும் (man power) நம்ம கிட்டே இல்லை. பணமும் நம்மகிட்டே இல்லை. ஆனால் நாம இதெல்லாம் பண்ணாமலே, நம்ம ப்ராடக்ட்டை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிற வாய்ப்பு நமக்குக் கிடைச்சிருக்கு. அதை ஏன் நாம மிஸ் பண்ணணும்? நமக்கு டெலிவரி பண்ணுற வேலை இல்லை. அந்த நேரத்தை நாம இன்னும் புதுசா ரெசிப்பீஸ் பண்ணுறதுக்குப் பயன்படுத்தலாம். நாம எங்கேயும் போகத் தேவையில்லை. ஆனால் நம்ம கேண்டி க்ரஷ் எல்லார் கிட்டேயும் ரீச் ஆகிடும். எனக்காக இன்னொரு முறை யோசியேன் வாஹினி.!” ரொம்பவே பொறுமையாகத்தான் சொன்னான் ஷியாம்.

ஆனால், ஆதன் மீதிருந்த கோபத்தில், எதையும் காதில் வாங்காது, அமைதியாய் இருந்தவள்,

“போதும் டா! இப்போ என்ன? என்னை அவன் காலில் போய் விழச் சொல்றீயா? என்னால் முடியாது. எனக்கு அவன் கூடப் பிஸ்னஸ் பண்றதில் விருப்பமில்லை.!”

“எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ணாதே வாஹினி! உனக்குத் தான் தெரியுமே, நான் கேண்டி க்ரஷை நம்பி மொத்தப் பணத்தையும் இதில் இன்வஸ்ட் பண்ணியிருக்கேன். நம்ம வாசல் தேடி வர்ர வாய்ப்பை நழுவ விடுறதில் எனக்கு விருப்பமில்லை.!”

“ஓ! நான் தான் ஃபண்ட் (Fund) பண்ணிருக்கேன்னு என்னைக் குத்திக் காட்டறியா ஷியாம்? என்ன இருந்தாலும் நான் ஆஸ்ரமத்தில் வளர்ந்த அநாதை தானே? எனக்கு எந்த உறவும் தேவையில்லை. என் ஃப்ரெண்ட் எனக்கு இருக்கான்னு நினைச்சுட்டு கர்வமா இருந்தேன். ஆனால் பணத்தை நடுவில் கொண்டு வந்து என் நம்பிக்கையை உடைச்சுட்டே!” என அவள் சொன்ன நொடியில், ஷியாமின் முகம் இயல்பை தொலைத்து இறுக்கத்திற்குப் போனது.

“போதும் வாஹினி! இதுக்கு மேல் நான் எதாவது பேசினால், வார்த்தைகள் தடிச்சுடும். நீ மனசில் ஒண்ணை முடிவு பண்ணிட்டே. யார் சொன்னாலும் நீ கேட்கப் போறதுமில்லை. மாறப் போறதுமில்லை. அதனால் நான் எதையும் பேச விரும்பலை. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். நீ எப்பவும் என் ஃப்ரெண்ட் தான். இந்த ஷாப், பணம் எல்லாம் ரெண்டாவது தான். ஒண்ணு மட்டும் மனசில் வச்சிக்கோ வாஹினி, எப்போவும் நான் உனக்காக இருப்பேன்.!” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான் ஷியாம்.

‘இத்தனை தூரம் எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மறுக்கிறாளே!’ என்ற ஆற்றாமை அவன் முகம் முழுதும் விரவியிருந்தது.

*********

அப்போது தான் இரண்டு டெலிவரிகளை முடித்துவிட்டு வேர்க்க வியர்க்க வந்தமர்ந்தாள் சிம்மவாஹினி. கோபம் கொண்டு வெளியேறிய ஷியாம் இன்னும் வந்து சேரவில்லை. இவள் அழைத்தால் வந்திருப்பான் தான். இவளுக்குத் தான் அழைப்பதற்கு மனமில்லை.
நீ இல்லையென்றாலும் என்னால் தனியாய் சமாளிக்க முடியுமென்ற வீம்பு, அவளை அழைப்பதற்கு விடவில்லை என்பதே நிஜம்.

மணி பத்தைத் தாண்டி விட்டது. இன்னுமும் இரண்டு டெலிவரிகள் மீதமிருக்கிறது. ஒன்று சரியாய் பனிரெண்டு மணிக்கும், மற்றொன்று பதினோரு மணிக்கும் டெலிவரி செய்ய வேண்டும். இன்று ஏனோ தனியாய்ச் செல்வதற்கு ஒருமாதிரியாய் தயக்கமாய் இருந்தது.

‘ஷியாமைக் கூப்பிட்டுடலாமா?’ என யோசித்தபடியே கைகள் நீண்டு அலைபேசியை எடுத்தது. ஆனாலும் ஏதோ தயக்கம் எட்டிப்பார்த்தது.

‘பேசுறதெல்லாம் பேசிட்டு, இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? ஷியாமை ஹர்ட் பண்ணினது நீ தானே? அப்போ இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும். அவனைப் போய்ப் பணத்தோட கம்ப்பேர் பண்ணி பேசிட்டியே?’ மனசாட்சி கேள்வி கேட்ட போதும் பதில் தான் அவளிடம் இல்லை.

“பேசாமல் கால் பண்ணிடலாமா?”

“வேணாம்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான். அவன் கிட்டே நான் ஏன் பேசணும்? அந்த ஆதன் கிட்டே இவனுக்குச் சேர்த்து தான் பேசினேன்னு இவனுக்கு ஏன் புரியவே இல்லை. இருக்கட்டும், அவன் துணையில்லாமல் என்னால் பண்ண முடியும்ன்னு காட்டறேன்.!” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டவள், கருப்பு நிற அருவியாய் வழிந்துக் கிடந்த கூந்தலை அள்ளி போனி டெய்லில் அடக்கியவள், டெலிவரி செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கும்மிருட்டை அப்பிக் கொண்டிருந்த ஆகாயத்தில் வெட்டி வைத்த ஆப்பிள் துண்டாய் சிரித்துக் கொண்டிருந்தது வளர்பிறை நிலா. கொய்ங் கொய்ங் என்ற பூச்சிகளின் ரீங்காரங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. எங்கோ ஓர் மூலையில் நாய்கள் ஊளையிட்டன. கடையைப் பூட்டிக் கொண்டு, வெளிய வந்து வண்டியைக் கிளப்பியவளுக்குள் சுற்றியிருந்த சப்த நிசப்தங்கள் ஏதோ செய்தன. இத்தனை நாட்களாய் இதையெல்லாம் லட்சியம் செய்யாதவளுக்கு, ஏதோவொரு பயம் மனதைப் பிசைந்தது.

‘நானே ஏதேதோ கற்பனை பண்ணிக்கிறேன். இந்த ஷியாம் இல்லாததால் என்னென்னவோ தோணுது.’ என மனதில் நினைத்துக் கொண்டவள் தன் ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.
அவள் ஓட்டிக் கொண்டிருந்த ஸ்கூட்டி கூட நண்பனையே ஞாபகப் படுத்தியது.

“ஏன் இந்த ஸ்கூட்டியில் மெஜந்தா, பீச், லெமன் யெல்லோ கலரில் எல்லாம் கிடைக்கவே மாட்டேங்குது?”

“ஹான்! கேட்டு சொல்றேன்!”

“நிஜமாவா ஷியாம்? கேட்டு சொல்லேன். எனக்கு லெமன் கிரீன் கலரில் ஸ்கூட்டி வேணும்.!”

“ஆத்தா மகமாயி! இதில் எதாச்சும் செலெக்ட் பண்ணேன். இதுக்கே நீங்க பார்ட் டைமா வேலை பார்த்த சேவிஸ்ங்ஸ் எல்லாம் கரைச்சாச்சு. நான் வாங்கித் தர்ரேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறே? என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சால் வாங்கிப்ப தானே?”

“லூசு! சில விஷயங்களில் நான் இப்படித்தான். நான் என்னை நம்பி இருக்கணும்ன்னு நினைக்கிறேன். நான் என் காலில் நிக்கணும் டா!”

“இப்போ மட்டும் பக்கத்து வீட்டுக்காரன் கிட்டே கடன் வாங்கியா நிக்கிறே? லூசு, இன்னும் அந்தக் காலம் மாதிரியே பேசறே!”

“சரி அதெல்லாம் விடு! என்ன கலர் செலெக்ட் பண்ணலாம் சொல்லு!”

“உனக்குப் பிடிச்சதை செலெக்ட் பண்ணு வாஹினி!”

“நான் ப்ளாக் வாங்கிக்கறேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

“ஏய்! ப்ளாக் உனக்குப் பிடிக்காதே? எனக்குப் பிடிக்கும்ன்னு தானே வாங்கறே?”

“ப்ளாக் தான் உன்னை மாதிரி அழுக்கா ஆகாமல் இருக்கும்.!” எனச் சொல்லிவிட்டு அவள் சிரித்ததையும், அவன் முறைத்ததையும் இப்போது நினைத்தாலும் இவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் ஓட்டிக் கொண்டிருந்த கருப்பு நிற ஸ்கூட்டியை கண்கள் மென்மையாய் வருடியது.

“ஐ மிஸ் யூ டா எருமை! ஏதோ கோபத்தில் பேசிட்டேன். அதுக்காக ஒரு ஃபோன் கூடப் பண்ண மாட்டியா? இடியட்! நீ வா உன்னைச் செமத்தியா கவனிக்கிறேன்.” என இதழ்களில் புன்னகையுடன் வாகனத்தைச் சாலையில் செலுத்தினாள்.
சற்று முன் இருந்த கலக்கம், குழப்பமெல்லாம் மாயமாய் மறைந்து போக, ஏதோ நள்ளிரவில் வீதி உலா போகும் தேவதையைப் போல், எதிர்க்காற்று முகத்தில் மோத, காற்றுக்கு ஏற்ப கற்றைக் குழல் நாட்டியமாட, ஒற்றைக் கையால் முகம் மறைத்த கூந்தலை ஒதுக்கியபடியே, நிதானமான வேகத்துடன் பயணித்தவள், பதினோரு மணிக்குச் செய்ய வேண்டிய, டெலிவரியை முடித்து விட்டு, அடுத்த டெலிவரிக்காகத் தயாரானாள்.

வலக்கை மணிக்கட்டைத் திருப்பி, செவ்வக வடிவத்தில் இருந்த கை கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டாள். மணி சரியாய் பதினொன்று இருபது. இன்னும் நாற்பது நிமிடங்களுக்கு முன்பாகவே டெலிவரி செய்ய வேண்டும். வாகனத்தை வேகமாய்ச் செலுத்தி ஆர்டரில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்தும் விட்டாள்.

அவள் வந்திருந்த இடம், லக்ஸரி அப்பார்ட்மெண்ட்ஸ் எனப்படும் சொகுசுக் குடியிருப்புகள் நிறைந்திருந்த பகுதி. கையிலிருந்த அலைபேசியை எடுத்துக் குடியிருப்பின் பெயரைச் சரிபார்த்துக் கொண்டாள்.

“ட்வின் லோட்டஸ் அவின்யூ சி ப்ளாக்!” தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவள், குடியிருப்பின் நுழைவாயிலில் இருந்த வாட்ச் மேனிடம், தான் செல்ல வேண்டிய குடியிருப்பின் எண்ணைச் சொல்லி, எத்தனையாவது மாடி என்பதைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

ஏழாவது மாடியில் பதினான்காவதாய் இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் கதவு திறப்பதற்காய் காத்திருந்தாள்.

உள்ளே அலறிக் கொண்டிருந்த இசையும் உற்சாகக் கூச்சலும் இவள் காதுகளிலும் விழுந்தது. மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, காத்திருக்க, அரைகுறை ஆடையுடன் கதவைத் திறந்த அந்தப் பெண்,

“ஹேய்! கேக் வந்துடுச்சு டா!” என்றபடி உற்சாகக் கூச்சலிட, கதவைத் திறந்து அவளை உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே நுழைந்த மாத்திரத்தில் வாஹினியின் நாசிதனை போதை வஸ்துகளின் நெடி நிரடியது. அந்த வித்தியாசமான நெடி அவளுக்குப் பிடிக்காத போதும், எதையும் முகத்தில் காட்டாமல் மறைத்தவள், செயற்கையாய் இதழில் நெளிந்தப் புன்னகையுடன் அவர்கள் ஆர்டர் செய்தவற்றை அடுக்கி வைத்தவளின் செவிகளில், அவர்கள் பேசிய சில விஷயங்கள் அரைகுறையாய் விழுந்தது. அங்கிருந்த ஆண்களின் பார்வையும் இவளை அங்குலம் அங்குலமாய் அளந்தது.

ஆனாலும் எதையும் காதில் வாங்காமல், அனைத்தையும் அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு,

“தேங்க் யூ ஸோ மச் சார்! அன் ஹாப்பிப் பர்த்டே!” என அவசரமாய்ச் சொல்லி விட்டு, அந்த வீட்டிலிருந்து வெளியேற முயன்ற தருணம், அந்த வீட்டின் இன்னொரு அறையில் கட்டிலில் மயங்கிக் கிடந்த பெண்ணின் முகம் கதவிடுக்கின் வழியே இவள் கண்களில் விழுந்தது.

‘பசங்களும், பொண்ணுங்களும், இப்படிப் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழிச்சுக்கிறாங்க. முதலில் நாம இந்த இடத்தை விட்டுக் கிளம்பணும்’ என மனதில் நினைத்தவள் வேகமாகவே வெளியேறினாள்.

முதலில் இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும், என்ற உந்துதல் அவளிடம் அதிகமாக இருக்க, அந்தச் சூழ்நிலையின் தாக்கமும், அங்கிருந்த ஆண்களின் பார்வையும், இவளைத் துரத்துவது போல் பிரம்மை எழ, வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில், வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு, வேகமாய்ப் பறந்திருந்தாள்.

சிறிது தூரம் வந்த பிறகே அவளால் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது. இத்தனை நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை நிதானமாய் வெளியேற்றி, வாகனத்தை மெதுவாய் அவள் செலுத்திய நேரம், ஏதோ ஒன்றி மீது ஏறி, இருசக்கர வானத்தின் சக்கரம் பழுதாகிப் போக, கடினப்பட்டுக் கீழே விழாமல், நிதானித்து அவள் வாகனத்தை ஓரமாய் நிறுத்திய போது தான், அவசரத்தில் வழி மாறி வந்திருக்கிறோம், என்ற நிதர்சனம் நெற்றியில் அறைந்தது.

“ச்சே! எப்படி வழி மாறி வந்தேன்.? சுத்தியும் ரோடு கண்ணுக்கே தெரியலையே?” என அவள் முணுமுணுத்த அதே நேரம் விதி தன் விளையாட்டை வேறு விதமாய்த் துவக்கியிருந்தது.
பயம் அப்பிய விழிகளுடன், எதிரே பார்த்துக் கொண்டிருந்தவளின் கரம் அவசரமாய் ஷியாமிற்கு அழைக்க முயன்று கொண்டிருக்க, மற்றொரு கரம் தன் வாகனத்தில் எதையோ பதற்றமாய்த் தேடிக் கொண்டிருக்க, அருகில் வந்த ஆபத்தை உணர்ந்ததும் அவளின் பூப் பாதங்கள் வேகமாய் ஓடத் துவங்கியிருந்தன.

இசைக்கும்..!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்