Loading

அகம் 1

“திக்கெல்லாம் புகழேறும் திருநெல்வேலி” என்று கம்பர் பாடிய பூமி, தென்றல் தவழும் தென்பொதிகையாம் திருநெல்வேலி, நெல்லை என்ற செல்லப் பேருடன் அழைக்கபடுகிறது.

அன்றைய நாளின் விடியல் அழகாய்ப் புலர்ந்திருந்தது, செல்லும் வழியெல்லாம் வயலின் மனம் கமழும், வாழைத்தோட்டங்கள் அணிவகுத்து நிற்க, காணும் இடமெல்லாம் பசுமையைப் பரிசாய் தரும் நெல்லை மாவட்டத்தில், கடலோரம் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அதிலிருந்து கிடைக்கும் நுங்கின் சுவையும், பதநீரும் கற்கண்டாய் இனிக்க, கடுங்காப்பியுடன் இலவச இணைப்பாய் பனங்கிழங்கும், இவ்வூரின் பெருமையைப் பறைசாற்றும்.

பொதிகை மலையில் உதித்தவளாம், அவள் குற்றால அருவியாகி அழகாய் விழுந்து, தென்னக பரணி எங்கும் பாய்ந்துக் கொண்டிருக்கிறாள், தன் இறுதி பயணத்தைக் காயலில் பெருங்கடலுடன் சங்கமிக்கிறாள் அவள், அவளின் பெயர் தாமிரபரணி, திருநெல்வேலி சுற்று வட்டார பகுதிகளில் இவளே நீராதாரமாய், வாழ்வாதாரமாய்த் திகழ்கிறாள், வற்றாத ஜீவ நதியாய் விளங்கும் இவளின் கரையோரம் பல கிராமங்களும், நகரங்களும் உள்ளன, அதில் ஒன்றான விக்கிரமசிங்கபுரம்., சிங்கை, பாவநாசம் என்றும் அழைக்கபடும் இந்த ஊர், மேற்கு தொடர்ச்சி மலையான பொதிகை மலையின் தெற்கு முனையில் அமைந்துள்ளதோடு, அகஸ்த்தியர் நீர்வீழ்ச்சிக்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் அருகில் அமைந்துள்ளது., பச்சை நெல் வயல்களால் சூழப்பட்ட இந்த நகரத்தின் முதன்மை தொழிலே விவசாயம் தான்.

காற்றோடு தவழும் நெற்கதிர்களின் மணம் பரவ, ஆகாயச் சூரியன் அப்பொழுது தான் விழித்திருந்தான் போலும், ஆங்காங்கே மயிலினங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, வயல் வரப்புகளில் நாற்று நடும் வேலையும் அமோகமாய் நடந்திக்கொண்டிருந்தது, இத்தகைய எழில்மிகு சூழலக்கு சற்றும் ஒவ்வாத வகையில் இளம் பெண்ணொருத்தி தலை முடியை விரித்துப் போட்ட படி அந்த வயல் வரப்பில் ஓடிக்கொண்டிருந்தாள், அவளின் குழல் கற்றைகள் இடையைத் தாண்டி எழிலாய் ஆட, கத்தரிப்பூ நிறத்தில் தாவணி உடுத்தியிருந்தவளின் பூ போட்ட பாவாடையும் வரப்பில் பரந்தபடி அவளோடு சேர்ந்து ஆடியது. ஓடுவதற்கு இடைஞ்சலாக எண்ணியவள் பாவடையைத் தூக்கி இடையில் சொருகி விட்டு மீண்டும் விரைந்து ஓடினாள். அவளின் தலை விரிக் கோலத்தைப் பார்த்துப் பதறியவர்கள்..

“ஏட்டி எவாட்டி அது, தலையவிரிச்சு போட்டுச் சில்லாட்டையாட்டம் ஓடுறது, ஏட்டி நில்லு” வரப்பில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்மணி குரல் கொடுக்க, எதையும் காதில் வாங்காது ஓடிக் கொண்டிருந்த இளம் தேவதையின் விழிகளில் சோகம் வழிந்தோடியது, ஒப்பனையின்றி எப்போதும் கலையாய் இருக்கும் அவளின் முகத்தில், இன்று சோகம் குடிக்கொண்டிருந்தது. அவளின் ஓட்டத்தில் இன்னும் வேகம் கூடியது, வரப்புகளைத் தாண்டி ஓடியவள் பனைமரக் காட்டின் பக்கம் ஓடிச்சென்றாள், அவளின் இந்தக்கோலத்தைக் கண்டிருந்தால் அந்தப் பாரதியின் கவிகளில் இவளும் இடம் பெற்றிருப்பாள். கொள்ளை கொள்ளும் அழகு இல்லை என்றாலும் பார்ப்பதற்கு தெய்வீக முகத்தைக் கொண்டிருப்பாள், கடுங் காப்பியில் பால் கலந்த நிறத்தைக்கொண்டவள், மான் விழிகளுக்குச் சொந்தக்காரி, மங்கையின் இமைகள் மயில் தோகையை ஒத்திருந்தது, அவளின் இதழ்கள் இந்தியாவின் கிவி எனப்படும் கள்ளிப் பழத்தின் சாயத்தை இயல்பாகவே பூசியிருந்தது, தண்ணீரே இல்லை என்றாலும் வறட்சியில் துளிர் விடும் கள்ளிச் செடியைப்போல், இவளும் வறுமை என்னும் வறட்சியில் முளைத்த கள்ளிச்செடி, கள்ளிச்செடியில் இருக்கும் முற்களைப் போல் இவளும் சிறிய பாதுகாப்பு வளையத்தை அவளுக்கு அவளே ஏற்படுத்திக்கொண்டாள், அவளை வக்கிரமாக நெருங்குபவர்களைக் குத்தி கிழித்துவிடும் குணம் கொண்டவள், கள்ளிப்பழத்தின் தித்திக்கும் சுவையைப் போல் அவளிடம் நன்கு பழகுபவர்களிடம் இனியவளாய் இருப்பாள்.

“ஏக்கோய் அந்தப் புள்ள கிழக்க பாத்துல ஓடுது” என இன்னொரு பெண்மணி சொல்ல,

“யாரு மவடி இவ, இப்படித் தலைய விரிச்சு போட்டு பேய்கணக்கா ஓடுதவ, கிழக்க இவளுக்கு என்ன சோலி” என ஓடிக்கொண்டிருந்தவளை பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களின் கைகள் அழகாய் நாற்று நட்டுக்கொண்டிருந்தது.

மீண்டும் திடுமெனத் திடுமென இன்னொரு பெண் ஓடி வந்தாள்.

“ஏக்கோய் யாரவது என் அக்காவ பார்த்தியளா..? இந்தாலை தான் ஓடி வந்தா, எங்க போனானு தெரியலையே” எனக் குழப்பம் கலந்த முகம் தாங்கி நின்றாள் சின்னவள்,

“ஏட்டி, நீ செயக்கொடி மவ தான, உன் அக்கா ஏன்ட்டி இந்த ஓட்டம் ஓடுதா.? அவளுக்குக் கிறுக்கெதுவும் பிடிச்சுட்டோ.?இவ்வளவு வெள்ளன சில்லாட்டையாட்டம் முடிய விரிச்சு போட்டு போறா” என நாற்று நட்ட படி அந்தப் பெண்மணி சொன்னாள்.

“ஏக்கோய் நான் வந்து எல்லாத்தையும் விளாவரியா சொல்லுதேன், அவ எந்தத் திசையில ஒடுதான்னு மட்டும் சொல்லுங்க” பதற்றமாய்க் கேட்டாள் சின்னவள்..

“கிழக்காலத் தான்டி ஒடுதா, போ போய்ப் பிடிச்சுக்கோ.” எனச் சொன்ன கணம் மின்னல் வேகத்தில் ஓட, அங்கே அவளோ கிணற்றைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தன் விழிகளை மூடி ஒன்று இரண்டு என எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.

“ஏட்டி அவி குதிச்சுறாதட்டி” சின்னவள் இங்கிருந்து அலற பெரியவள் அவந்திகை கிணற்றுக்குள் குதித்திருந்தாள்.

சில நொடி கூடத் தாமதிக்காது சின்னவள் சக்தியும் குதித்திருந்தாள் ..

“எக்கோய் எங்க இருக்கா.?” எனக் கிணற்றின் நீரில் தன் அன்பு அக்காவை தேடினாள்., இவள் முழுவதுமாய் நனைந்திருக்க.., அவள் கைகளை நீரில் அலைமோதிக்கொண்டிருந்தது, அக்காவை காணவில்லை என்றதும் சிவசக்திக்கு மனம் கலங்கியது., அந்தச் சமயத்தில் அக்காவுக்கு நீச்சல் தெரியும் என்பதையே மறந்து பதைபதைத்துபோனாள் சிவசக்தி.

“ஏக்கோய் பனம்பழத்தை உனக்கே தாரேன் வாயேன்ட்டி, பயங்காட்டாதட்டி” என அழுதபடி அவள் சொல்ல., அவ்வளவு நேரம் உள் நீச்சல் செய்துக்கொண்டிருந்த அவந்திகை., மேலே எழும்பி தங்கையைக் கட்டிக்கொண்டாள். அவள் எழுந்த போது நீர் துளிகள் சிதற, ஒவ்வொரு துளி நீரும் அவளை விட்டு பிரிய மனமின்றி மீண்டும் கிணற்று நீரில் கலந்தது.

“ஏட்டி சக்தி., இதை நீ ஓடி வந்தாலையே சொல்லிருந்தா., கிணத்துக்குள்ள குதிச்சிருக்கமாட்டேன்ல” எனச் சொன்னவளை பார்த்த தங்கையோ.,

“போயான்ட்டி நீ கிணத்துக்குள்ள குதிச்சு பயங்காட்டிட்டா, விழுந்து செத்திருந்தீனா, அம்மைக்கு நான் தானே பதில் சொல்லியாகணும்” எனக் கோபமாய்ப் பேசினாள் சிவசக்தி.

“சவத்த மூதி எனக்குத் தான் நீச்சல் தெரியுமே நீ ஏம்ட்டி குதிச்சா.?” அன்பு தங்கையைச் சாடினாள் அவந்திகை.

“ஏக்கோய் உனக்கு நீச்சல் தெரியும்னு மறந்துட்டேன், அப்போ உனக்குப் பனம்பழம் கிடையாது, என்னையவா பயங்காட்டுத.?” என விரலாட்டி நக்கல் செய்தவளை முறைத்தாள் அக்கா.

“ஏட்டி சக்தி அம்மைக்கு விசயம் தெரியாம பாத்துக்கிடணும், அம்மைக்குத் தெரிஞ்சு விளக்குமார்லையே சாத்தி எடுத்துருவா, பனம் பழத்துக்கா சண்டை போட்டியன்னு” எனப் பேசியபடி கிணற்றின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவளின் கால்களில் ஒற்றைக் கொலுசு இருக்க, அதைக் கவனிக்கத் தவறிவிட்டாள் அவந்திகை, அவளின் ஒற்றைகால் கொலுசு, கிணறின் அடி பகுதிக்கு சென்று அழகாய் மின்னியது.

“பிறவு உன்னை அம்மை மடில போட்டு தாலாட்டுவான்னு நினைச்சியோ” எனச் சொல்லி கிலுக்கிட்டு சிரித்தாள் சின்னவள் சிவசக்தி.

“நான் செயக்கொடி மவாடி, எப்படிச் சமாளிக்கேன்னு மட்டும் பாரு” தாவணியை இடையில் சொருகியபடி அவந்திகை சொல்ல.,

“இருட்டி அவி, ஊரெல்லாம் பனம்பழத்துக்குச் சாவ போனான்னு பரப்பிவிடுதேன், பிறவு உன்ன எந்த மகாராசானும் கட்டிக்க மாட்டான், என்ன இந்தப் பிள்ளை திண்ணே நம்ம சொத்தை அழிச்சிருமேன்னு., ஓடிதுவானுவ” சின்னவள் பெரியவளை நக்கலடிக்க.,

“நீ பள்ளிகொடம் போவால்லட்டி, உன் ப்ரெண்டு பிள்ளைகள்கிட்ட சொல்லுதேன்டி இந்தப் பிள்ளைக்கி நீச்சல் தெரியாது யாரும் கூட்டு வச்சிகாதீக புள்ளைகளான்னு” என அவந்திகை பதில் கொடுக்க.,

“ஏக்கோய்” சிணுங்கினாள் சின்னவள்.

“சக்தி உனக்குன்னு வரும்போது மட்டும் கசக்குதோ”

“எக்கோய் ப்ளீஸ்க்கா என் கூட்டு பிள்ளையால்ட்ட சொல்லிடாத, அவளுவ கிண்டல் செய்வளுவ, ஒரு பயலையும் என்கிட்ட பேசவிடமாட்டளுவக்கா” எனக் கொஞ்சலாய் சிவசக்தி கேட்க, மறுப்பாய் தலையசைத்தாள் அவந்திகை.

“என்னோட அவியக்கா, என்னை யாருகிட்டையும் விட்டுக்கொடுக்க மாட்டா” அவந்திகையின் தாடையைப் பிடித்து ஆட்டியவள், அவந்திகையின் கன்னம் தொட்டு முத்தம் வைத்தாள்.

“நீ மணத்திட்டா (முத்தமிடுதல்) நான் யாருக்கிட்டையும் சொல்லமாட்டேனோ.? பனம்பழத்தை எனக்கே கொடுத்திராம்ட்டி, யாருகிட்டையும் சொல்லமாட்டேன்”

“போவாம்ட்டி கோட்டிக்காரி” எனத் தன் அக்காவை திட்டிவிட்டு அந்தப் பனங்காட்டு பகுதியை தாண்டி ஓடினாள் சிவசக்தி.

“யாருட்டி கோட்டிக்காரி நீ தான் கோட்டிக்காரி” எனச் சொல்லிய அவந்திகையும் துரத்திக்கொண்டு ஓடினாள்.

அதற்குள் அந்த வயல் பகுதியை நெருங்கி கொண்டிருந்தனர் இருவரும்., அங்கே நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்கள் இளைப்பாரிக்கொண்டிருக்க.,

“ஏம்ட்டி நீ தலையை விரிச்சு போட்டு பேய் கணக்கா ஒடுனவ.?” நடவு செய்த பெண்ணில் ஒருத்திக் கேட்க

“எக்கோய் சொல்லிடதவா..?” குறும்பாய் அவந்திகையைப் பார்த்தாள் சிவசக்தி.,

“சும்மா கெடயேன்ட்டி நான் பேசிக்கிடுதேன்” குரலில் எரிச்சல் ததும்பச் சொன்னாள் அவந்திகை.,

“பனங்காட்டைச் சுத்தி பாக்கலாம்னு ஓடி வந்தேன்கா” எனச் சிரிக்காமல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

******

“ஏட்டி காலைலயே கடைய தொறக்காமா, ஈரக் கோழியாட்டம் வந்திருக்கியளே அக்காவும் தங்கச்சியும், என்ன சங்கதின்னு கேக்குதேன், திருத் திருன்னு முழிச்சிட்டு இருக்கிய”

“எம்மா பக்கத்து வீட்டு ராசு மச்சான் பனங்காட்டுல இருந்து பனம் பழம் ஒண்ணு தந்தாவ பார்த்துக்க, அதை நான் நார் கட்டிலுக்கு அடியில ஒழிச்சு வச்சிருந்தேன், எப்பபடியோ அவி மோப்ப பிடிச்சு, எனக்குத் தான் பனம்பழம்ன்னு மல்லுக்கு நின்னா பார்த்துக்கமா” என மூச்சு வாங்க சொன்ன சிவசக்தியை முறைத்தார் ஜெயக்கொடி.

“எம்மா மிச்சத்தை நான் சொல்லுதேன் கேளு” என அவந்திகை எதோ சொல்லவர, கனப்பொழுதில் ஒற்றைக் காலில் கொலுசு இல்லாததைக் கவனித்த ஜெயக்கொடி.

“ஏட்டி அவி, காலுல கிடந்த கொலுசை எங்கட்டி” நங்கென்று நடு மண்டையில் கொட்டினர் ஜெயக்கொடி.தமக்கை அடி வாங்கியதை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் சிவசக்தி, சிரித்தவளை பார்த்து முறைக்கவும் தவறவில்லை அவந்திகை.

“எம்மா என்னை ஏன்மா என்ன கொட்டின.? இரு அப்பா வரட்டும் உன்னைச் சொல்லி கொடுக்குதேன், என் மேல கைய வச்சிட்டல்ல என் சங்கத்துகிட்ட சொல்லுதேன்” எனச் சொன்னவள் விரலை வாயில் வைத்து நறுக்கென விசில் அடிக்க, வீட்டின் வெளியே இருந்த பூவரச மரத்தில் கொஞ்சிக்கொண்டிருந்த கிளியினங்கள் இவளின் விசில் சத்தம் கேட்டுப் படையெடுத்தது போல் உள்ளே வந்து, கீச்சிலிடும் சத்தத்தில் இசை மீட்ட, வீட்டில் இருந்த பரண்கள், கட்டில் சோபா அனைத்திலும் கிளி கூட்டங்கள், நூறுக்கு மேற்பட்ட கிளிகளின் சத்தம் அவளுக்கு இன்னிசையாய் இருந்தாலும், ஜெயக்கொடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“ஏட்டி அவி வெளிய தொரத்தி விடேன்டி” உரக்க கத்தினார் ஜெயக்கொடி

“ஏசமாட்டேன்னு சொல்லு” விடப்படியாய் மல்லுக்கு நின்றாள் அவந்திகை, திட்ட மாட்டேன் என ஜெயக்கொடி சொன்ன பிறகே மீண்டும் விசில் அடிக்க, மீண்டும் பூவரசமரத்திற்கு அனைத்து கிளிகளும் சென்று விட, ஒரு கிளி மட்டும் அவள் தோளில் அழகாய் அமர்ந்து போனது.,

“அவி..! அவி..!” அவள் பெயரை அழகாய் மொழிந்தது அந்தக் கிளி பிள்ளை,

“கீ.! கீ.!” எனக் கிளியின் மொழியில் இவள் பேச, என்ன புரிந்ததோ அவள் நாசியை அதன் சிவந்த அலகை கொண்டு உரசியது,

“என்னட்டி மீனு நெல்லு வேணுமா.?” அவந்திகை கேட்க.

“வேணும் வேணும்” எனப் பதில் கொடுத்தாள் மீனு(கிளி) எதைச் சொன்னாலும் இரண்டு முறை சொல்லவாள் மீனு, ஒரு சில வார்த்தைகளை அவந்திகையிடமிருந்து கற்றுக்கொண்டாள்.இத்தனை கிளிகள் இருந்தாலும் அவளுக்கு மிகவும் நெருக்கமானவள் மீனு தான்.அவள் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கவில்லை ஆனால் இவளை தேடி வந்துவிடுவாள் மீனு.

“திருடன்..! திருடன்.!” ஆண்களைக் கண்டாலே திருடன் எனச் சொல்வாள் மீனு,

“ஏட்டி மீனு அது அப்பாடி, இன்னைக்கு எனக்குப் பூசை தான், நீ பிறத்தால போ நெல்லுக் கொண்டு தாரேன்” எனக் கிளியிடம் கிசுகிசுத்தாள் அவந்திகை.

“ஒகே..! ஒகே..!” என உறக்க கத்திய மீனு அவந்திகையைத் தவறாமல் தந்தையிடம் மாட்டிவிட்டு பறந்துச் சென்றாள் மீனு.

“அவந்திகை.!” தந்தையின் கண்டிப்பான அழைப்பு, நடுங்கி போனாள் பெண்ணவள்.

“என்ன பிள்ளைகளா ஒரே கிளி சத்தமாயிருக்கு, இது வீடா இல்லை காடா.?” எனப் பேசியபடி படி வீட்டின் வரவேற்பரைக்குள் நுழைந்தார் முத்துவேல், அவளுடைய தந்தையின் மீது பயமெல்லாம் கிடையாது அவந்திகைக்கு, மரியாதையைத் தான் பயம் போல் காட்டிக்கொள்வாள், சின்னவள் சிவசக்தியும் தம்கையைப் போல் தான், முத்துவேல்க்கு பயந்து நடுங்கும் ஒரே ஆள் ஜெயக்கொடி மட்டும் தான், முத்துவேல் அந்த ஊரின் தலையாரி என்பதால், அந்த ஊர் மக்களுக்கு அவர் மீது தனி மதிப்பும் மரியாதையும் உண்டு, ஆனால் அவரின் செல்லமகள்களுக்கு முன் அதெல்லாம் செல்லுபடியாகாது.

“எப்போய் அக்காவ பருங்கப்பா சீட்டி அடிச்சு அவா வளக்குற கிளி அவ்வளோத்தையும் உள்ள கூப்பிட்டுட்டா, அவ்வளவும் வீட்டை அசிங்கம் பன்னிட்டு போயிருச்சு” எனச் சொன்ன சிவசக்தி கையைக் கொண்டு வாய்பொத்தி சிரிக்க,

“இதுக்கு ஏன் மக்களே சிரிக்குத” முத்துவேல் கேட்க,

“எப்போய் உங்க வெள்ளை சட்டைய பாருங்களேன்” என மீண்டும் கலகலவெனச் சிரிக்க, அவளுடன் சேர்ந்து அவந்திகையும் ஜெயக்கொடியும் சிரித்துவிட, முறைத்தபடி நின்றிருந்தாலும், உள்ளுக்குள் சிரிக்கத் தான் செய்தார், ஆண்கள் அப்படித் தானே, உணர்ச்சிகளை மறைத்து முரடன் முரடன் என்று சொல்லி வளர்க்கபட்டு, சிரித்தால் மகள்கள் மதிக்கமாட்டர்கள் என்ற நினைப்பில் உணர்ச்சிகளைக் காட்டாது அங்கிருந்து நகர்ந்து சென்றார்,

“உங்களை வச்சிகிட்டு சிரிக்கதா அழுவதா தெரியலை பிள்ளைகளா, போங்க போய் வேலை வெட்டிய பாருங்க எனக் கண்டித்துச் சென்றார் ஜெயக்கொடி

அக்காவும், தங்கையும் விறு விறுவெனக் குளித்துவிட்டு உடைகளை மாற்றினர், தங்கை பள்ளி சீருடையை அணிந்துக்கொண்டாள், அவந்திகை கருப்பு நிற தாவணியும், வெள்ளை நிற பாவாடையில் கருப்பு நிற பூக்கள் பூத்திருக்க, மூலிகை வேர்கள் நிறைக்கபட்டிருந்த எண்ணெயை தனக்கும் தங்கைக்கும் தேய்த்து விட்டவள், அவளது கேசத்தைக் கொண்டையிட்டு விட்டு, தங்கைக்கு இரட்டை ஜடை போட்டுவிட்டு அழகாய் சிவப்பு ரிப்பனில் பூவைத்தவள், அவளுடையைத் தலை முடியை நேர்த்தியாய் பிண்ணலிட்டு புறப்பட வெளியே இருவரும் வர.

“அவி சாப்பிட்டு போயான்ட்டி” கரிசனத்துடன் சொன்னவர் சின்னவளுக்கு இட்லியை பிய்த்து ஊட்டிக்கொண்டிருந்தார்,

“தாமசம் ஆயிட்டு மா, பிறவு நான் போறதுக்குள்ள கடைய பூட்டிருவான், இந்த மகாராணிய வேற பள்ளிகொடத்துல உடனும், ஏட்டி தின்னுட்டு விரச வாயேன்ட்டி” கடிந்தாள் அவந்திகை.

“எக்கோய் நாட்டுக் கோழி கொழம்பும், இட்லியும் அள்ளுதுக்கோ, நீயும் சாப்பிடேன்” எனச் சொன்னவள் சப்புக்கொட்ட,

“நீ வாயேன்ட்டி, நான் வண்டியை வெளியே எடுத்து வைக்குறேன்” என உணவு உண்ணாமல் கிளம்பிய மகளை அனுப்ப மனமில்லாது, ஒரு சொம்பு நிறைய மோர் தயார் செய்து கொடுத்தார், ஜெயக்கொடி மகள் மீது அவ்வளவு ப்ரியம், குடும்பப் பாரத்தைச் சிறுவயதிலே தன் தலையில் போட்டுக்கொண்டவள் தான் அவந்திகை, தன் படிப்பை விட்டுவிட்டு, குடும்பத்தின் முன்னேற்றதிற்காகத் தலையைத் தூக்கியவள்., தான் அவந்திகை.

அவளின் டி.வி, எஸ் 50 ஐ அவள் இயக்க முற்பட்ட போது, எனக்கு நெல்லிடாமல் எங்கே செல்கிறாய் தத்தைப் பெண்ணே, என்பதைப் போல் அவளின் வண்டியின் மீது வந்தமர்ந்தாள் கிள்ளை மொழி பேசும் மீனு.,

“அவி..! அவி.!” என மீனு அழைத்தப்பின், வீட்டின் பின்புறம் நோக்கி துரிதமாய் ஓடியவள் மாமாரத்தில் சாய்த்து வைத்திருந்த நெல் மூட்டையிலிருந்து நெல்லை இரு கை கொண்டு அள்ளி வீசயவள், விசில் அடிக்க, அனைத்து கிளிகளும் நெல் உண்டுக்கொண்டிருந்த வேளை மீனு அவந்திகையின் தோளில் வந்தமர்ந்தவள்,

“நன்றி.! நன்றி.!” என அழகாய் உரைத்தாள் மீனு, பெயருக்கு தான் கிளி, ஆனால் அவந்திகையின் வாழ்வில் ஒரு அங்கமாய்த் தான் இருந்தாள் மீனு.

“எக்கோய் நேரமாச்சு” வாசலில் நின்றபடி குரல் கொடுத்தாள் சிவசக்தி,

“இந்தா வர்றேன்ட்டி” மீண்டும் வாயிலை நோக்கி ஓடினாள் அவந்திகை.

சில நிமிடங்களில் அவந்திகை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, பின்னே அமர்ந்தபடி அவந்திகையிடம் பேச்சுக்கொடுத்தாள் சிவசக்தி.

“அவிக்கா, நீ பள்ளிகொடத்துக்குப் பாதிலையே மட்டம் கட்டிட்ட, நானும் பள்ளிக்கொடம் போகாம உன் கூடவே இருந்துக்குவா.?”

“ஏட்டி சக்தி, இந்த ஒரு வருசத்தை மட்டும் பல்லைக் கடிச்சுட்டு முடிச்சிறாம்ட்டி, பிறவு அக்கா பாத்துக்குறேன், நான் படிக்காத படிப்பெல்லாம் நீ படிக்கணும்ட்டி, அதுக்குத் தான் அக்கா இவ்ளோ கஸ்டபடுறேன்” என நிலைமையை எடுத்துரைத்தாள் அவந்திகை.

“இல்லைக்கா பள்ளிக்கொடம் போகப் பயமா இருக்கு”

“ஏன்ட்டி வாத்தியர் திட்டுறவாளா.?

“இல்லைக்கா”

“பிறவு”

“கணக்குப் படிக்கக் கஸ்டமா இருக்கோட்டி”

“நீ வீட்டுல யாருக்கிட்டையும் சொல்லிட மாட்டியே” தயங்கியபடி கேட்டாள் சிவசக்தி.

“எதுவும் பிரச்சனையோட்டி சக்தி”

“ஆமாக்கா” எனச் சிவசக்தி சொன்ன நொடியில் வண்டியை நிறுத்தியிருந்தாள் அவந்திகை. அடுத்து சிவசக்தி சொன்ன விசயங்களைக் கேட்டவளுக்கு இந்த உலகமே இருண்டு விடும் போலிருந்தது,

“யாருகிட்டையும் சொல்லாதக்கா” எனப் பேசியவள் அக்காவின் முன் கலங்கிய முகத்துடனும், ஈரமான விழிகளுடன் நிற்க, தாங்காத அவந்திகையின் மனம் கொதித்தெழுந்தது.

“எனக்கு யாருன்னு மட்டும் காட்டுட்டி சக்தி” எனச் சொல்லியவள் கிளம்பிய பத்து நிமடத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றிருந்தாள், அது ஒரு அரசுப் பள்ளி, பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடம்.

“யாருட்டி சக்தி..?” என அவந்திகை கேட்ட போது தங்கை ஒருவனை விரல் நீட்டிக் காண்பித்தாள், அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனோ உள்ளூர நடுங்கி போனான். நொடிப்பொழுது தாமாதிக்காமல் அவனருகே சென்ற அவந்திகை,அவள் கால் செருப்பைக் கழற்றி அவனை அடித்து வெளுத்துவிட்டாள், அதைப் பார்த்த சிவசக்தி கைக்கொட்டி சிரித்தாள்.

“இனி எந்தப் பொண்ணு மேலையாவது கைய வச்ச, பாளை அருவாளை வச்சி சீவிருவேன் சீவி” என எச்சரிக்கும் தோணியில் அவந்திகை எச்சரிக்கை விடுக்க, பள்ளிச் சீருடை அணிந்திருந்த மாணவனோ, அவளின் எதிர்பார தாக்குதலில் திகைத்து நின்றான். அதோடு மட்டும் விடாமல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்துவிட்டு வந்தாள் அவந்திகை.

“இதோ பாருட்டி சக்தி, அடுத்த முறை யாராவது எதாவது செஞ்சான்னு வச்சுக்க, நம்ம குலசாமி உன் மேல இறங்கிட்டத நினைச்சிக்கோ, அவனுகளை உண்டு இல்லைன்னு செஞ்சிரணும் சரியாட்டி, அடுத்தத் தடவை அக்காகிட்ட அவனை அடிச்சிட்டு வந்துட்டேனக்கான்னு, என் தங்கச்சி சொல்லணும், அதுதான் இந்த அக்காக்குப் பெருமை” எனச் சொன்னவள் வாஞ்சையாய் தங்கையின் தலையைக் கோதிவிட்டாள். அவந்திகை, அக்கா சொல்லை கேட்டு தலையாட்டி பள்ளிக்குச் சென்றாள் சிவசக்தி.

**********************

சென்னை மாநகரத்தில் பண்ணை வீடு என்று சொல்லபடும் சொகுசு வீட்டில், தென்னை மரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த சமாதியில் பூக்களை வைத்தவன், அங்கே கதறி அழுதுக்கொண்டிருந்த தன் தாயான காயத்ரியை தேற்றிக்கொண்டிருந்தான் அகத்தினியன், தந்தை இறந்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டதால் அதற்கான பூஜைகள் நடந்துக்கொண்டிருந்தது, காயத்ரியின் கணவரான செந்தில் நாதனை நினைத்து வருந்தியவரின் விழிகளில் நீர் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது.

“அம்மா அழாதீங்க, அப்பா நம்மக் கூடத்தான் இருக்காங்க” ஆறுதல் சொல்லியவனின் மனதை தேற்ற அங்கு யாருமில்லை, எங்கே தான் உடைந்து விட்டால் அன்னை இன்னும் உடைந்து விடுவாரோ என்ற பயம் அவனுள்., அவனுக்கும் தந்தை மீது பாசமில்லாமல் இல்லை அதுவும் எதிர்பாராத இறப்பு தான் என்றாலும், அவர் கடைசியாய் வாங்கிச் சென்ற சத்தியம் என்னவோ அவன் மனதை வேப்பங்காயாய் கசக்கதான் செய்தது, சத்தியம் வாங்கி விட்டு அவர் என்னவோ நிம்மதியாய் போய்ச் சேர்ந்துவிட்டார், தந்தைக்குச் செய்துக்கொடுத்த சத்தியம் அவன் மனதில் நெருடலை ஏற்படுத்தியது, இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிவிட்டது அவன் விழிகள் உறக்கத்தைத் தழுவி.

“அம்மா பதினாறு நாளும் அழுதுக்கிட்டே இருக்கீங்க, ப்ளீஸ் அழாதீங்க” என்று அண்ணனோடு சேர்ந்து அன்னையை ஆறுதல் படுத்தினாள் சந்தியா, அவள் தந்தையை நினைத்து அழுது அழுது உறக்கம் இல்லாமல் போனாள், தாயும், அண்ணனும் படும் துயரத்தை அனு தினமும் பார்த்து நொந்து போனாள், ஆனால் அவளுடன் தந்தையிருப்பதாய் நினைத்துக் கொண்டாள். அண்ணனின் உருவத்தில்.

“இனியன் அவருக்குச் செய்துக்கொடுத்த சத்தியத்தையாவது காப்பாற்றிவிடேன் அவர் ஆன்மா சாந்தியாகட்டும்” என மகனின் மார்பில் முகம் புதைத்துக் கேவி அழுதார் காயத்ரி.

“லேட் சி அம்மா” என அவனின் பதிலே சொல்லாமல் சொல்லியது அவன் விருப்பமின்மையை,

அதன் பின் தன் தந்தைக்கு நிறைவேற்ற வேண்டிய சடங்குளை நிறைவேற்றியவன், மனதை அரித்துக்கொண்டிருந்தது அவன் செய்துக்கொடுத்த சத்தியம், மரணப் படுக்கையிலும் அவரின் விருப்பத்திற்காக என்னைப் பகடைக் காய் ஆக்கிவிட்டாரே, என்ற கோபம் ஒரு புறம் எழுந்தாலும், அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய மகனாகி விடக்கூடாது என மனம் கொந்தளித்தது.

இன்னும் இரண்டு நாட்களில் குடும்பமே திருநெல்வேலி நோக்கி பயணம் செய்தாக வேண்டும், அதற்கான எற்பாடுகளை அவன் இன்னும் செய்யத் துவங்கவில்லை, என்ற சிந்தனையுடன் அந்த நள்ளிரவில், பால்கனியில் அங்கும் இங்கும் நடையிட்டுக்கொண்டிருந்தான் அகத்தினியன்.

“அண்ணா” என்ற அழைப்பு கேட்டுத் திரும்பினான் அவன். சந்தியாவும் உறக்கம் வராமல் தன் அண்ணனை தேடி வந்திருந்தாள்.

“சொல்லுமா சந்தியா.? தூங்கலையா.?”

“இல்லை அண்ணா, அப்பா நினைப்பாவே இருக்கு” எனச் சொன்னவள் அழுதுவிடக்கூடாது என எண்ணியவன், உடனே பேச்சை மாற்றினான்

“அப்பா நம்மக் கூடத்தான் இருக்காருமா, அடுத்து நீ என்ன படிக்குறதா இருக்கமா சொல்லு அப்ளீக்கேசன் போட்டுறலாம்” என அவளைத் திசைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட,

“என்னோட ஃப்யூச்சர் இருக்கட்டும் அண்ணா, நீ என்ன செய்யலாம்ன்னு முடிவு பண்ணிருக்க, அப்போவோட கடைசி ஆசையை நிறைவேற்ற போறீயா.? இல்லை” என அவள் இடைநிறுத்த.

“தெரியலைம்மா” ஒற்றைச்சொல்லில் பதில் அளித்தான் அவன்.

“நீ கவலைபடாத அண்ணா, எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ பழசை மறந்திட்டு அப்பா சொன்னதைச் செய்யுறது நல்லதுன்னு தோணுதுனா, அதே இடத்துல நிண்ணுறாத” என அன்னையைப் போல் அறிவுரையும் சொன்னாள். அவனின் கடந்த காலம் ஒரு புறம் என்றால், அவனின் எதிர்காலம் அவன் முன் கண்சிமிட்டி சிரித்தது.

“ஆமா அப்பா சொன்ன பொண்ணு பேரு என்ன அண்ணா..?” எனச் சந்தியா கேட்க,

“அவந்திகை” என்றான் குரலில் ஒரு வகை இறுக்கத்துடன்.

“பரவாயில்லையே அண்ணா, அண்ணி பேரை நியாபகம் வச்சிருக்க” எனச் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

அவனுக்கு எப்படி மறக்கும், இவள் தான் உன் எதிர்காலம், எனச் செந்தில் நாதன் மரணப் படுக்கையில் கடைசியாய் உதிர்த்த பெயர் தான் அவந்திகை.

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்