Loading

இதயம்-2

காஃபி ஷாப்பிலிருந்து காரை கிளப்பிக் கொண்டு தன் நிறுவனத்திற்கு வந்தான் ஆதன் ரித்விக்.

பிரபல உணவகங்களுடன் டை-அப் செய்து கொண்டு, உணவுப் பொருட்களை வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்யும் நிறுவனமான “நளபாகம்” நிறுவனம் அவனுடையது.

 

சொந்தக் கட்டிடம் கூட இல்லாது குறைந்த முதலீட்டில் துவங்கிய நிறுவனம் தான். ஆனால் இப்போது அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வளர்ந்து நிற்பதில் அவனுக்குப் பெருமை தான்.

இப்போது இந்தியாவின் பெரு நகரங்கள் மட்டுமில்லாது, சிறிய கிராமங்களிலும் கூட, கிளைகளை நிறுவும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு கூட, நளபாகம் நிறுவனத்தின் வணிக விற்பனை உரிமை அதாவது Franchise பெறுவதற்கான போட்டியும் கூட அதிகரித்திருக்கிறது.

தன் இருக்கையில் யோசித்தபடியே அமர்ந்தவனின் விரல்கள் மேஜையில் தாளமிட்டது. சில நொடிகள் யோசனையின் பின், டேபிளின் மீதிருந்த தொலைபேசியை எடுத்து தன் உதவியாளனுக்கு அழைத்தான்.

“மே ஐ கம் இன் சார்?” எனக் கேட்டபடி கண்ணாடிக் கதவைத் திறந்தபடி உள்ளே வந்தான் பிரபு.

“யா! கம் இன்!” என அனுமதியளித்தவன், பிரபு உள்ளே வந்ததும் அமரும் படி சைகை செய்தான்.

“எஸ்! பாஸ் என்ன விஷயமா என்னைக் கூப்பீட்டீங்க?”

“இன்னைக்கு ஈவ்னிங் மீட்டிங்கில் எத்தனை பேர் கலந்துக்கப் போறாங்க?”

“ஃப்ரான்ச்சாய்ஸ் (Franchise) மீட்டிங் தானே பாஸ், மொத்தமா ஐம்பது பேர் வர்ராங்க பாஸ்.”

“ஓகே! நான் சொல்றதைச் செய்!” எனச் சொன்னவன், சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு,

“சொன்னபடி சரியா செய்யணும். இப்போவே கால் பண்ணி பேசு!” எனச் சொன்னான்.

“யெஸ் பாஸ்.! எல்லாத்தையும் பக்காவாய் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு!” எனச் சொல்லிவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்ற பிரபுவிற்கும் தன் முதலாளியின் செய்கை கொஞ்சம் இல்லை ரொம்பவே வித்தியாசமாகத் தான் தெரிந்தது.

“வாலண்டியரா யாரையும் தேடிப் போக மாட்டாரே..! இது என்ன புதுசா இருக்கு?” என முணுமுணுத்தபடியே அவன் சொன்ன வேலையைச் செய்வதற்காகப் போனான்.

*******

“டேய்! எருமைமாடு! உன்னையெல்லாம் என் கூடப் பார்ட்னராய்ச் சேர்த்துக்கிட்டேன் பாரு என்னைச் சொல்லணும்!”

“ஏய்! நிஜமாவே தலைவலி தான் வாஹினி!”

“நானே உன் மண்டையை உடைச்சுடுறேன். தலை இருந்தால் தானே வலிக்கும்.!”

“அப்படியெல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது! மீ ரொம்பப் பாவம்!”

“டேய்! அப்டேட் பண்ணாத அணகோண்டா! நம்மளோட அக்ரிமெண்ட் படி, உன்னோட வேலை என்ன?”

“கேக் அன் கேண்டீஸ் பண்ணுற வேலை உன்னோடது. டெலிவர் பண்ணுற வேலை என்னோடது.!”

“அப்போ நேத்து நீ ஏன் டெலிவர் பண்ண வரவே இல்லை.!”

“அது தான் சொன்னேனே வாஹினி! தலை வலின்னு..!”

“பொய் சொன்னே உன்னைக் கொன்னுடுவேன்.!”

“சரி! சரி! உண்மையைச் சொல்லிடுறேன். ஆனால் நீ திட்டக் கூடாது. பெரிய மனசு பண்ணி இந்தப் பச்சப் புள்ளையைப் பாவம் பார்த்து விட்டுடணும் ஓகே?”

“சொல்லித் தொலை. என் தலை எழுத்து, இப்படிப் பொறுப்பே இல்லாத உன் கூடவெல்லாம் கூட்டணி போட வேண்டியிருக்கு.!”

“அது ஒண்ணுமில்லை வாஹினி! நிஜமா திட்ட மாட்டே தானே?” மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான் அவன்.

“திட்ட மாட்டேன் ஷியாம்! நீ சொல்லு!”

“இல்லையே நீ என் பேரைச் சொல்ற மாடுலேஷனே சரியில்லையே!”

“இப்போ நீ மட்டும் உண்மையைச் சொல்லலைன்னு வையி, கேக்குக்குப் பதில் உன்னை மைக்ரோவேவில் வைச்சு வேக வச்சுடுவேன் பார்த்துக்கோ!”

“நான் உன் ஆருயிர் நண்பன் இல்லையா? என்னைப் பார்த்தால் பாவமா இல்லையா?”

“இல்லவே இல்லை! ஏன்னா நீ ஃப்ராடு பையன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியுமே! நீ முதலில் நேத்து எங்கே போய் ஊர் சுத்தினே? அதை முதலில் சொல்லு!”

“அது.. வந்து.. பசங்க பார்ட்டின்னு கூப்பிட்டாணுங்களா? அதனால் தான் அப்படியே பப்புக்கு போய்ட்டு, கொஞ்சமா..!” எனத் தயக்கமாய் இழுத்து நிறுத்த,

“ஓசியில் கிடைக்குதுன்னு மூக்கு முட்ட குடிச்சுட்டு, வீட்டுக்குப் போய்ப் படுத்துட்டே. அப்படித்தானே?” என நேராய் அவன் கண்ணைப் பார்த்துக் கேட்டாள் சிம்மவாஹினி. பெயருக்கேற்றாற் போல், அவளின் கோபக் குரல் சிம்மத்தின் கர்ஜனையையே ஒத்திருந்தது.

“சொல்லு ஷியாம்! நான் கேட்டதுக்கு என் கண்ணைப் பார்த்து நேராய் பதில் சொல்லு!”

“அதில்லை வாஹினி! உனக்குத் தான் குடிச்சிட்டு கடைக்குள்ளே வந்தால் பிடிக்காதே! அதனால் தான் வரலை. ஐ அம் ரியலி ஸாரி.!”

“பரதேசி! குடிச்சுப்புட்டு வந்து வியாக்கியானம் பேசறியா? உனக்கெல்லாம் கொஞ்சமும் பொறுப்பே இல்லையா? ஓசியில் கிடைக்கிதுன்னு விஷத்தைக் கொடுத்தால் குடிப்பியா? மாட்டே தானே? ஏன்டா உன் உடம்பை நீயே கெடுத்துக்கறே? இன்னொரு முறை இந்த மாதிரி, பார்ட்டி, மண்ணாங்கட்டின்னு குடிச்சுட்டு வந்தேன்னு வையி, என்னையும் மறந்துடு. நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பையும் மறந்துடு!” என அழுத்தமாய்ச் சிம்மவாஹினி சொல்ல,

“ஓகே! இனிமே பண்ண மாட்டேன். நிஜமா இது மாதிரி பண்ண மாட்டேன். உன் மேல் சத்தியம்.!” எனத் தோழியின் தலை தொட்டுச் சத்தியம் வைத்தான் ஷியாம்.

“என்னடா! பொய் சத்தியம் செஞ்சு என்னைக் கொன்னுடலாம்ன்னு பார்க்கிறியா?” என விளையாட்டாய் வாஹினி கேட்க, ஷியாமின் முகம் சட்டெனச் சுருங்கிப் போனது.

“ஏய் பைத்தியம்! சும்மா சொன்னேன் டா. ஏற்கனவே உன் மூஞ்சி பார்க்கவே சகிக்காது. இப்போ நீ உம்முன்னு இருந்தீன்னா நல்லாவே இல்லை. நீ இப்படியெல்லாம் இருந்தால், எந்தப் பொண்ணும் உன்னைத் திரும்பியே பார்க்காது.”

“அப்படிங்கிறே? இப்போ நல்லா இருக்கேனா? அட்லீஸ்ட் ரெண்டு பொண்ணாச்சு திரும்பிப் பார்க்குமா?” தலையைக் கோதியபடியே, இன்ஸ்டன்ட் புன்னகை இதழ்களில் வழிய கேட்டான் ஷியாம்.

“அடப் பாவி! நடிப்பின் சிகரம் டா நீ. அரை நொடியில் அப்படியே மூஞ்சிய மாத்திட்டீயே. போய் வேலையைப் பாரு. ரெண்டு மூணு டெலிவரி இருக்குப் போய்ப் பண்ணிட்டு வந்துடு. லெக்கேஷன் உனக்கு அனுப்பிட்டேன் டா ஷியாம்.!” என வாஹினி சொல்ல,

“உத்தரவு! இளவரசியாரே..!” என வணக்கம் செய்வதைப் போல் குனிந்து நிமிர்ந்தவனைப் பார்க்க சிம்மவாஹினிக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“டெலிவரி தானே பண்ணிடுவோம். நிஜமாவே என் மேல் கோபம் இல்லை தானே?”

“இப்போதைக்குச் சமாதானமாகிட்டேன். இன்னொரு முறை இதே தப்பைப் பண்ணினன்னு வை, சாவித்ரி ஆன்ட்டி கிட்டே சொல்லிடுவேன்.!” விரல் நீட்டி எச்சரித்தாள்.

“நான் தான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேனே வாஹினி! அப்பறம் ஏன் அம்மாகிட்டே சொல்லி அவங்களைத் தொந்தரவு பண்ணிக்கிட்டு..!”

“பண்ணாமல் இருந்தால் சரி தான். நீ போய் டெலிவரியை முடிச்சுட்டு வந்துடு. நான் இனி பண்ண வேண்டிய ஆடர்ஸ்க்கெல்லாம் கேக் ரெடி செய்றேன்.!”

“நெக்ஸ்ட் ஃபெஸ்டிவ் சீசன் தான் வருது. ஆடர்ஸ் நிறைய வருமே, எப்படிச் சமாளிக்கிறது? நீ ஒருத்தியாய் எவ்வளவு கேக்ஸ் பண்ண முடியும்?”

“முடிஞ்ச வரை பண்ணுவோம் டா. கேக் ஷாப் ஊரில் எல்லா இடத்திலேயும் இருக்கிறது தான். ஆனால் நாம மிட் நைட் டெலிவர் பண்ணினதால் மட்டும் தான், நமக்கு டே டைமிலும் கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி எதாவது புதுசா பண்ணுவோம். வேணும்னா ஹெல்ப்புக்கு யாரையாச்சும் இன்டர்வ்யூ பண்ணி சேர்த்துக்கலாம். நீ கவலைப் படாதே அதெல்லாம் பண்ணிடலாம்.!” எனச் சொன்ன வாஹினியின் கண்களில் நம்பிக்கை மிளிர்ந்தது.

“அஸ் எ ஃப்ரெண்டா உன்னை நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையாய் இருக்கு வாஹினி. நீ ஃப்ரெண்டா கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.!” என ஷியாம் சொல்ல,

“சும்மா சாம்பிராணி போடாதே போடா. போய் வேலையைப் பாரு! மொத்தம் மூணு ஆடர் எல்லாம் பேக் பண்ணி ரெடியாய் வச்சிருக்கேன் பாரு. கரெக்ட்டா டெலிவர் பண்ணிரு.!” என அவனை அனுப்பிவிட்டு அவள் உள்ளே வரவும் அலைபேசி இசைக்கவும் சரியாய் இருந்தது.

“ஹலோ! கேண்டி க்ரஷ்!”

“யா, எல்லாமே பண்ணுவோம் சார்! நீங்க எப்படிக் கேட்கிறீங்களோ அப்படியே பண்ணிடலாம்.!”

“புதுசா டிஃப்ரண்டா.. ஓகே சார்! நீங்க எத்தனை மணிக்குன்னு சொல்லுங்க, அரை மணிநேரம் முன்னதாவே டெலிவர் பண்ணிடுறோம்.!”

“ஓகே சார்! ஷுயர் சார்!” எனச் சொல்லிவிட்டு, அலைபேசியை அணைத்தவளின் புருவங்கள் யோசனையில் நெளிந்தது.

********

மலை ஐந்து மணி.
ஆதனின் நிறுவனமான நளபாகம் நிறவனத்துடன் தொழில் தொடர்பில் இருக்கும் அத்தனை பேரும் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

“நம்மோட நளபாகம் நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினது மட்டும் தான் நான். அதைக் கிட்டத்தட்ட முக்கால்வாசி இந்தியாவிற்குள் கிளை பரப்பினது நீங்கள் எல்லாரும் தான். உங்களால் மட்டும் தான் இது சாத்தியம். இப்போ நமக்கு இன்னொரு அங்கீகாரமும் கிடைச்சிருக்கு. இந்தியாவோட ஃபாஸ்டஸ்ட் டெலிவரி ஆப் நம்மளோடது தான். தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்.!”

“நாங்க முதலீடு மட்டும் தானே சார் போட்டோம். மத்ததெல்லாம் பண்ணினது நீங்க தானே ஆதன். ஆடர் டூ டெலிவரி வரை உங்களோட ஹார்ட் ஒர்க் தான் அதிகம். நாங்க ஜஸ்ட் பேங்க் அக்கௌண்ட்டில் தூங்கிட்டு இருந்த பணத்தை இதில் போட்டோம் அவ்வளவு தான்.!”

“அது தான் நீங்க செஞ்ச உதவி. நிஜமாவே நீங்க இல்லைன்னா நளபாகம் இவ்வளவு பெருசா வளர்ந்திருக்காது. தேங்க்ஸ் எ லாட்!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அனைவருக்கும் சிறிய தட்டுகளில் ஏதோ பரிமாறப்பட்டது.
ஆதன் முன்னாலும் சிறிய கப்பில் இரண்டு கேக்குகளும், கூடவே கருப்பு நிறத்தில் காபியோ தேநீரோ ஏதோ ஒன்று இருந்தது.

‘கேக்கும் காஃபியும் எப்படி ஒத்துப் போகும்.? நாம தப்பா யோசிச்சுட்டோமோ?’ என யோசித்தபடி அவன் அமர்ந்திருந்தவனின் விழிகள், எதிரில் இருந்தவர்களின் முகப் பாவனைகளைத் துல்லியமாய் ஆராய்ந்து கொண்டு தான் இருந்தது.

அனைவரின் முகங்களிலும், ஏதோ புதிதான சுவையை உணர்ந்தாற் போல் வியப்பு தான் எட்டிப் பார்த்தது.

‘பார்ப்பதற்குக் கேக் போலவே கிட்டத்தட்ட ப்ரௌனியைப் போலிருக்கும் இதற்குள் என்ன புதிதாய் இருக்கப் போகிறது?’ என யோசித்தபடியே கேக்கை எடுத்துக் கடித்தவனுக்கு நிஜமாகவே புதிதான ஒன்றாகவே இருந்தது.
முதலில் பஞ்சு போன்ற கேக், அதற்கு அடுத்து வாயில் கரையும் சாக்லேட் அதற்கு அடுத்ததாய் அவன் சற்றும் எதிர்பாரா விதமாய் நெய் மணத்துடன் சாஃப்ட் மைசூர் பாக். சற்றும் அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. சுவை ரொம்பவே வித்தியாசமாகவும் புதிதாகவும் இருந்தது.

“வாவ்!” அவன் உதடுகள் அவன் அறியாமலே உச்சரித்திருக்க, ஆர்வ மிகுதியில் அவன் கரம் தன்னால் அருகிலிருந்த கோப்பை தேநீரை எடுத்துப் பருகியது. துளசியும், லவங்கமும் சேர்த்துச் செய்யப் பட்டிருந்த தேநீர் நிஜமாகவே அவனை மெய் சிலிர்க்க வைத்தது.
இந்தத் துளசி தேநீர் அவனது தனிப்பட்ட விருப்பங்களில் ஒன்று.

 

இது எதேச்சையாய் அமைந்ததா? இல்லை அவனின் உதவியாளன் பிரபு சொன்னதன் பேரில் நிகழ்ந்ததா? எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கேக்கும் தேநீரும் பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசமானதாய் இருக்கிறதோ, அதே போல் சுவையும் மிக வித்தியாசமாகவே இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக,

“நீங்க யோசிக்கிற ஐடியாவிலிருந்து நீங்க சர்வ் (Serve) பண்ணின டீ வரை எல்லாமே ரொம்ப வித்தியாசமாய் இருக்கு மிஸ்டர்.ஆதன்.” என வந்திருந்தவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டும், அவனை அவசரமாய் அந்த முடிவை எடுக்க வைத்திருந்தது.

*****
அவள் அந்த அலுவலக வளாகத்தினுள் நுழைந்தது முதலே ஆதனின் விழிகள் கேமரா கண்களின் வழியே அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. லேயர் கட் செய்யப்பட்டிருந்த கூந்தல் இடை தாண்டி வழிந்து கொண்டிருக்க, கையில்லா மஞ்சள் நிற டாப்பும் அடர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து, வெயிலில் வந்த வெண்ணிலவாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் சிம்மவாஹினி. கழுத்திலும் காதிலும் எதுவுமே அணியாத போதும் கூட அழகாகவே இருந்தாள்.

“வெல்கம் மேம்! சார் உங்களுக்காகத் தான் வெய்ட் பண்றார்!” எனப் பிரபு சொன்னதை இளவரசியின் தோரணையோடு தலையசைத்து ஏற்றவள், அவன் கதவைத் திறந்து விடவும், கண்ணாடிக் கதவைத் தாண்டி உள்ளே வந்து அமர்ந்தாள். டக் டக் எனக் கேட்ட ஹீல்ஸின் ஒலி, அவனுக்கு ஏனோ இன்னிசை சங்கீதமாய் இருந்தது.

“வெல்கம் மிஸ்.கேண்டி க்ரஷ்! மிஸ் தானே?” கேள்வியாய் முகம் பார்த்தான் ஆதன் ரித்விக்.

“தட்ஸ் நாட் யுவர் ப்ராப்ளம் மிஸ்டர். ஆதன் ரித்விக்!” அவன் முன்னிருந்த பெயர் பலகையைப் பார்த்தாள்.

“யெஸ்! ஐ அம் ஆதன் ரித்விக்! நளபாகத்தின் சி.இ.ஓ” அவள் முன் கைக் குலுக்குவதற்காய் கையை நீட்டினான்.

“யா! ஐ க்நோ தட் வெர்ரி வெல்! ஐ அம் சிம்மவாஹினி.”

“நைஸ் நேம்! நீங்க எங்க மீட்டிங்கிற்கு ப்ரவைட் பண்ணின கேக் அன் டீ ரொம்பவே நல்லா இருந்தது. இட்ஸ் வெர்ரி நைஸ். நாங்க பண்ணின ஆர்டருக்கான பேமெண்ட்!” என்றபடி டேபிளில் இருந்த செக்கை அவள் புறமாய் நகர்த்தினான்.

“யூஷ்வலா நாங்க டீயெல்லாம் ப்ரவைட் பண்ணுறதில்லை. நீங்க ஸ்பெஷலா கேட்டதால் பண்ணினோம்.பட், இதை நீங்க உங்க பி.ஏ கிட்டேயே கொடுத்து விட்டிருக்கலாம் மிஸ்டர்.ஆதன். என்னை இவ்வளவு தூரம் அலைய வச்சிருக்க வேண்டிய அவசியமே இல்லையே? ஜஸ்ட் பேமெண்ட்காக மட்டும் என்னை வர வைக்க வேண்டிய அவசியம் இல்லையே?, என்கிட்டே வேற எதுவோ நீங்க எதிர் பார்க்கிறீங்க. அம் ஐ ரைட்?” அவள் கேட்ட தோரணையே அவனுக்குப் பிடித்திருந்தது.

“யா! யுவர் ரைட்! சிம்மவாஹினி! ரொம்பப் பெரிய பெயராய் இருக்கே ஷார்ட்டா சிமின்னு கூப்பிடலாம் தானே?” தலை சாய்த்து தோரணையாய் வினவியவனை எரிச்சலுடன் பார்த்தவள்,

“என் பேர் சிம்மவாஹினி! சிமின்னு கூப்பிடுற வேலையெல்லாம் வேணாம்.!” கோபம் கனன்ற விழிகளுடன் அவள் சொல்ல,

“இட்ஸ் ஓகே! சிம்மவாஹினி! போதுமா?” அவள் பெயரை அழுத்திச் சொன்னவன்,

‘எனக்கு நீ சிமி தான் கேண்டி க்ரஷ்’ என மனதிற்குள் ரகசியமாய்ச் சொல்லிக் கொண்டான்.

“இப்படி என் மூஞ்சியைப் பார்த்துட்டு இருக்கறதுக்குத் தான் வரச் சொன்னீங்களா ஆதன்? என்ன விஷயம்ன்னு சொன்னீங்கன்னா கேட்டுட்டு நான் கிளம்பிட்டே இருப்பேன்.!”

“நீங்க செய்ற கேண்டிஸ் அன் கேக்ஸ் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. சொல்லப்
போனால் ரொம்பவே புதுசா இருக்கு. அதனால் உங்களோட கொலாப்ரேட் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறோம். ஆர்டஸ் நாங்களே எடுத்துக் கொடுத்துடுவோம். டெலிவரியும் நாங்களே பண்ணிடுவோம். நீங்க ப்ராடக்ட் மட்டும் எங்கக் கிட்டே கொடுத்தால் போதும். மிட் நைட்டில் கேக் டெலிவர் பண்ண நீங்க அலைய வேண்டிய அவசியமே இல்லை. சின்ன லெவலில் இருக்கிற உங்க ப்ராடக்ட்ஸை இந்தியா முழுசும் கொண்டு போக ஒரு நல்ல வாய்ப்பு. அதை நீங்க பயன்படுத்திப்பீங்கன்னு நம்பறேன்.!”

“இது நான் மட்டும் முடிவு பண்ண முடியாது மிஸ்டர்.ஆதன். என் பார்ட்னர் ஷியாமும் இதில் இருக்கிறார் அவரிடம் கேட்காமல் நான் எந்த டெஷிஷனும் எடுக்க முடியாது. ஸோ, ஐ அம் ஸாரி!” அவள் எழுந்து செல்ல முயல,

“வெய்ட்! வெய்ட்! என் அவசரப் படுறீங்க? உங்க பார்ட்னரை உங்களால் கன்வீன்ஸ் பண்ண முடியாதா? நளபாகம் இது வரை உங்களை மாதிரி சின்னப் பொட்டிக் கடையோட எல்லாம் டை-அப் வச்சுக்கிட்டதே இல்லை. கொஞ்சம் உங்களோட ஐடியாவும் டேஸ்ட்டும் புதுசா இருக்கப் போய்த் தான் நீங்க இங்கே இருக்கீங்க. இதை நீங்க வேண்டாம்னு சொல்றீங்கன்னா கிடைக்கிற கோல்டன் ஆப்பர்சுனிட்டியை இழக்குறீங்கன்னு அர்த்தம் மிஸ்.சிம்மவாஹினி.!”

“மைண்ட் யுவர் ப்ளடி லாங்வேஜ் மிஸ்டர். ஆதன். நான் ஒண்ணும் உங்க கிட்டே டை- அப் வச்சிக்கணும்னு வந்து நிக்கலையே? என் பொட்டிக் கடையைத் தேடி வந்தது நீங்க தான். நீங்க தான்னு இன்னும் என்ன மரியாதை. உன்னை ஒண்ணும் நான் என் கடையைத் தேடி வரச் சொல்லலையே? நீயே உன் பி.ஏ வச்சு பேசினே. கொலாப்ரேட் பண்ணிக்கலாமான்னு கேட்டே. இப்போ என்னோடது பொட்டிக் கடையாய் தெரியுதா உனக்கு இடியட்.” கோபத்தில் எரிந்து விழுந்தாள் அவள்.

“ஹேய்! கூல் சிமி! எதுக்கு இவ்வளவு கோபம்? நான் சொல்ல வர்ரதை தப்பா புரிஞ்சுக்கிறீங்க. நாங்களும் சின்னதாய் ஸ்டார்ட் பண்ணிதான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். வெறும் ட்வென்டி ஃபைவ் ரெஸ்டாரண்ட்ஸேட, டை-அப் பண்ணி ஆரம்பிச்சது தான். இப்போ டென் தௌஸண்ட் ப்ளஸ் ரெஸ்டாரண்ட்ஸ் நம்ம கூட டை-அப்பில் இருக்காங்க. கிட்டத்தட்ட சிக்ஸ்டி ப்ளஸ் ஃப்ரான்ச்சாயீஸ் (franchisee) இருக்காங்க. இதில் நீங்களும் ஓர் அங்கமாய் இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.!” பொறுமையாகவே புரிய வைக்க முயன்றான் ஆதன்.

“என்ன ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா? என்னவோ பெரிய சமூகச் சேவை பண்ணுற மாதிரி பேசறே? உனக்கு ப்ராஃபிட்டே இல்லாமல் இதெல்லாம் பண்ணிடுவியா? நான் ஒண்ணும் முட்டாள் இல்லை, நீ சொல்றதையெல்லாம் நம்பறதுக்கு. என்னோட ப்ராடக்டை நான் விக்கிறதை விட, எப்படியும் அதிகமான விலைக்குத் தான் விற்பனை செய்வே. அது மட்டுமா, என் ப்ராடெக்டை உன் ஆப்பில் (app)சேர்க்கிறதுக்கே நீ ஆயிரம் கண்டிஷன்ஸ் போடுவே. உன் ஆப் மூலமா ஒவ்வொரு ஆடரிலும் இத்தனை சதவீதம் உனக்குன்னு டெர்ம்ஸ் அன் கண்டிஷன்ஸ் போட்டுத்தானே அக்ரீமெண்ட்டே போடுவே பெரிய நியாயவாதி மாதிரி பேசறே? என்ன இருந்தாலும் நீயும் பிஸ்னஸ் மேன் தானே? உனக்கும் பசிக்கும் தானே?” நக்கலாய் சொன்னவள்,

“நீ கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், எனக்கு உன் கூட டை-அப்பும் வேணாம் ஒண்ணும் வேணாம். உன் கூடச் சேர்ந்து நான் பெருசா வளர விரும்பலை. நான் நானாக இருக்கணும்னு நினைக்கிறேன். என் ஷாப்பை வச்சே எப்படி வளரணும்னு எனக்குத் தெரியும். உன்னை மாதிரி பிஸ்னஸ் மேக்னெட்ஸோட தயவு எனக்குத் தேவையே இல்லை.” என நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்.
அவன் எதுவுமே பேசாமல் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருக்க,

“ம்ப்ச்!” என வெளிப்படையாய் சலித்துக் கொண்டவள், டேபிளின் மீது அவன் வைத்த செக்கை அவன்புறமாய் நகர்த்தினாள்.

“நீங்க பே பண்ண வேண்டிய அமௌண்ட்டை விட இதில் அதிகமா இருக்கு. எனக்குக் கொடுக்க வேண்டிய அமௌண்ட்டைக் கொடுத்தால் போதும். அப்பறமாய் உங்க பி.ஏ கிட்டே கொடுத்து விடுங்க போதும்.!” எனச் சொல்லிவிட்டு அவள் கதவை நோக்கி செல்ல,

“ஒன் மினிட் சிமி!” என அவளை நிறுத்தினான் அவன்.
கேள்வி தாங்கிய முகத்துடன் அவள் திரும்பி அவனை நோக்க,

“என் பர்த்டேக்கு ஸ்பெஷலா நீங்க டெலிவர் பண்ணின கேண்டீஸ் (Candy) எனக்கு வேணும். கிடைக்குமா?” எனக் கேட்டான்.

‘இவன் என்ன லூசா? இவ்வளவு திட்டின பிறகும் கேண்டி வேணும்னு கேட்கிறான். பைத்தியமா இருப்பானோ?’ என நினைத்தபடியே அவனுக்குப் பதில் சொல்லாமல் வெளியேறியிருந்தாள்.

அவனின் நளபாகம் நிறுவனத்துடனான வணிகத் தொடர்பிற்காக எத்தனையோ நிறுவனங்கள் காத்துக்கிடக்க இந்தச் சிறு பெண், இவ்வளவு பெரிய வாய்ப்பை உதறிவிட்டுப் போவது அவனுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவுமே இருந்தது. அதே ஆச்சரியமும் வியப்பும் மேலோங்க, கேமரா கண்களின் வழியாய் அவளையே வெறித்திருந்தான் ஆதன்.

 

இசைக்கும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்