Loading

நின் இதயக் கூட்டிலே..!

இதயம்-1


அடர் நீலத்தைச் சுமந்து கொண்டிருந்த ஆகாயத்தில், ஆங்காங்கே முல்லைப் பூக்களைக் கொட்டிக் கவிழ்த்தாற் போல், கண் சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்த விண்மீண்கள், நிலவில்லாமல் இருண்டுக் கிடந்த ஆகாயத்தின் வெறுமையைப் போக்க முயன்றுக் கொண்டிருந்தன.

அந்த நடுநிசிப் பொழுத்தில் தன் அறையின் குறுக்கும் நெடுக்குமாய், நடந்து கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்துச் செவியோரம் ராவியது அலைபேசியின் ஓசை.

அலைபேசியின் ஓசை செவியைத் தீண்டிய மாத்திரத்தில், அவளின் கயல் விழிகள் கடிகாரத்தை நோக்க, அது பனிரெண்டாக இருபது நிமிடங்கள் இருப்பதாய்ச் சொன்னது.

கடிகாரத்தில் பார்வையை நிலைக்க விட்டபடியே, அழைப்பை ஏற்று அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தாள் அவள்.

“ஹலோ! இன்னும் என்னதான் செஞ்சு தொலையறே? சொன்னா சொன்ன நேரத்திற்கு டெலிவரி பண்ண வேணாமா?”

“என்னது வர மாட்டியா?”

“அப்போ டெலிவரி யார் செய்றது?”

“ஈவ்னிங் நல்லா தானே இருந்தே? இப்போ என்ன தீடீர்ன்னு?”

“நீ ஒரு மண்ணாங்கட்டியும் சொல்ல வேணாம். எல்லாத்தையும் நானே பார்த்துப்பேன்.!”

“நடுராத்திரின்னு தெரிஞ்சு தானே வர முடியாதுன்னு சொல்றே? இப்போ மட்டும் எதுக்குப் பொய்யான அக்கறை?”

“அதெல்லாம் கேன்சல் பண்ண முடியாது. நான் பார்த்துப்பேன். நீ ஒண்ணும் என் கிட்டே பேசத் தேவையில்லை. முதலில் ஃபோனை வை.!”

எரிச்சலுடன் பேசிவிட்டு அலைபேசியை அணைத்தவள், மீண்டும் அதே எண்ணிலிருந்து வந்த அழைப்பை அசால்ட்டாகத் துண்டித்துவிட்டு, டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களை, சரியாக எடுத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினாள்.

கும்மிருட்டைச் சுமந்து நின்ற அர்த்த ராத்திரியிலும் கூட, துளியும் பயமில்லாமல், வாகனத்தைச் செலுத்தியபடியே,

“இடியட்! இவனுக்கெல்லாம் கொஞ்சமும் பொறுப்பே இல்லை. தலைவலி மண்ணாங்கட்டின்னு சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு, நாளைக்கு வரட்டும் பார்த்துக்கிறேன்!” சற்று முன் அலைபேசியில் பேசியவனை வசைபாடிக் கொண்டிருந்தாள்.

சரியாகப் பதினைந்து நிமிடப் பயணத்தின் பின், ‘சரியான இடத்திற்கு வந்துவிட்டோமா?’ என அலைபேசியை எடுத்து முகவரியைச் சரிபார்த்துக் கொண்டாள்.

சரியான முகவரிக்கு வந்திருந்த போதிலும், கண்ணெதிரே தெரிந்த பத்துப் பதினைந்து வீடுகளில் எந்த வீடென்பது குழப்பமாக இருக்க, அலைபேசியை எடுத்து உரிய எண்ணுக்கு அழைத்தவள், அழைப்பு ஏற்கப்படுவதற்காய் காத்திருந்தாள்.

“ஹலோ! மேம், நீங்க சொன்ன ப்ளேஸ்க்கு வந்துட்டேன். எந்த வீடுன்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் உதவியாய் இருக்கும்.!”

“உனக்கெல்லாம் அறிவே இல்லையா? நான் தான் டெலிவரி அட்ரஸ் கூட, லெக்கேஷனும் பின் பண்ணிருந்தேனே? அந்த லொக்கேஷனில் டெலிவர் பண்ணினால் போதும்.”

“ஸாரி மேம்! ஸாரி! நான் லொக்கேஷன் பார்த்து டெலிவர் பண்ணிடுறேன்.!”

“இனிமே என்னை டிஸ்ட்ரப் பண்ணாதே! ரொம்ப ஒர்ஸ்ட் உங்க சர்வீஸ். இனிமே உங்க கிட்டே ஆடர் பண்ணவே கூடாது.!”

“ஸாரி மேம்! இனிமே இந்த மிஸ்டேக் நடக்காது.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவள், லெக்கேஷனை சரிபார்த்துவிட்டு, தன் வாகனத்தை ஓரமாய்ப் பார்க் செய்தவள், அந்தப் பெரிய வீட்டை நோக்கி நடந்தாள்.

******
வாசலிலேயே நின்று அழைப்புமணியைக் கிட்டத்தட்ட பத்து முறையாவது அழுத்தியிருப்பாள். ஒருவரும் வந்து கதவைத் திறக்கும் வழியைக் காணோம்.

“ம்ப்ச்! கால் பண்ணினால் கத்துவாங்களே, இங்கே கதவைத் திறக்க வழியைக் காணோம். எப்படி டெலிவர் பண்ணுறது?”

முணுமுணுத்தபடியே அவள் நின்றிருக்க,

“ஹேய்! பேபி! எனக்காகவா நீ இங்கே வந்தே?” என்ற குரலோடு வெதுவெதுப்பான வன்மையான கரங்கள் அவள் இடையை இறுக்கமாய் அணைத்திருக்க, கன்னக்கதுப்பை மீசையின் ஊசிகள் கொண்டு குத்தி முத்தத்தைப் பதித்திருந்தான் அவன்.

சில நொடிப்பொழுதுகளில், அவள் சுதாரிக்கும் முன்னதாகவே அனைத்தும் நடந்துவிட, இவளுக்கோ திடீரென, தன்னை உரசிய ஆணின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் ஏதோ செய்தது. சட்டெனச் சுதாரித்து அவனிலிருந்து துள்ளி விலகியவள்,

“ஸார்! நான் டெலிவர் பண்ணுறதுக்காக வந்துருக்கேன். ப்ளீஸ் விடுங்க!” குரலுயர்த்தி அவள் கத்த, பட்டென அவளை விலக்கி, விலகி நின்றான் அவன்.

“ஸாரி! ஸாரி! நான் என் கேர்ள் ஃப்ரெண்ட்ன்னு நினைச்சு.. அம் ரியலி ஸாரி!” என அவன் கேட்ட தோரணையிலேயே அவன் தவறுதலாய்ச் செய்திருக்கிறான் என்பது இவளுக்குப் புரிந்தது.

“இட்ஸ் ஓகே சார்! டோர் ஓப்பன் பண்ணிங்கன்னா நான் உள்ளே வச்சிட்டு கிளம்புவேன்.!”

“யா ஷுயர்! ஆனால் நான் இது எதுவும் நான் ஆர்டர் பண்ணவே இல்லையே?”

“ஸார்! இது நிஷா மேம் தான் ஆர்டர் பண்ணினாங்க!” என அவள் சொல்லவும் இவன் கதவைத் திறக்கவும் சரியாக இருக்க, உள்ளே வந்து தான் கொண்டு வந்த பொருட்களை அழகாய் டேபிளின் மீது அடுக்கினாள்.

அழகான இதய வடிவிலான ரெட் வெல்வெட் கேக்கும், சில சாக்லேட் வகையறாக்களும், இதய வடிவ பிங்க் நிற பலூன்களோடு, ஆர்க்கிட் வகைப் பூக்களாலான பூங்கொத்து ஒன்றும் இருந்தது.
அங்கிருந்த பூங்கொத்தை மென்மையாய் கரத்தினில் எடுத்துக் கொண்டவள்,

“மே யுவர் ஸ்மைல் பீ ப்ரைட் ஜஸ்ட் லைக் தி சன்ஷைன் எவ்ரி டே. ஹாப்பிப் பர்த்டே சார்! (May your smile be bright just like the sunshine everyday.)” எனச் சொல்லிவிட்டு பூங்கொத்தை அவன் கரத்தினில் கொடுத்தாள் அவள்.

“தேங்க் யூ ஸோ மச்!” எனப் புன்னகையுடன் அவன் பெற்றுக் கொண்ட அதே நேரம், அலைபேசி இசைந்து அவன் கவனத்தைத் திருப்பியது.

அவன் இணைப்பை ஏற்றுக் காதில் வைக்கும் முன்னமே,

“ஹேய் பேபி! ஹேப்பிப் பர்த் டே! எப்படி இருந்தது என் சர்ப்ரைஸ்? சரியா பனிரெண்டு மணிக்கு கால் பண்ணினேனா?”

“நான் இதை எதிர் பார்க்கலை நிஷா! நீ என் லைஃபில் வந்த பிறகு வர்ர முதல் பர்த்டே நீ என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.!”

“சைல்டிஷா பிஹேவ் பண்ணாதே! நான் எவ்வளவு பிஸி ஷெட்யூல்க்கு நடுவில் இதையெல்லாம் அரேன்ஞ் பண்ணியிருக்கேன் தெரியுமா? பத்தாததுக்கு நான் உன் பர்த்டேன்னு ஸ்டேடஸ் கூடப் போட்டிருக்கிறேன் தெரியுமா?”

“இப்போ இந்தக் கேக்கை நானே தனியா கட் பண்ணி தனியா சாப்பிட்டுக்கட்டுமா?”

“ஹேய் பேபி! ரெட் வெல்வெட் கேக் எனக்கு ரொம்பப் பிடிக்கும் கொஞ்சம் சாப்பிட்டு, எனக்குக் கொஞ்சம் வை. நான் நாளைக்கு வந்து சாப்பிடுறேன். இப்போ ஷூட்டுக்கு டைம் ஆச்சுப் பை! ஹேப்பிப் பர்த்டே பேபி!” எனச் சொன்ன நிஷா, இவன் பதிலையும் எதிர் பாராது அலைபேசியை அணைத்துவிட, எரிச்சலுடன் திரும்பியவன், எதிரே குழப்ப முகமாய் நின்றிருந்த கேக் டெலிவரி பெண்ணைப் பார்த்தான்.

“நீங்க தான் எல்லாம் டெலிவர் பண்ணிட்டீங்களே? இன்னும் கிளம்பலையா?”

“ஸார்! உங்க பர்த்டேக்காகக் கேண்டி க்ரஷிலிருந்து ஸ்மால் காம்ப்ளிமெண்ட்!” எனச் சொன்னபடி இனிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றையும், சிறிய ப்ரேஸ்லெட் ஒன்றையும் அவன் கரத்தினில் தந்தாள்.

“ஹேப்பிப் பர்த்டே ஆதன் (Happy Birthday Aadhan)” என எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்த அந்தச் சில்வர் ப்ரேஸ்லெட்டை கரத்தினில் வாங்கியவன்,

“தேங்க்ஸ் ஃபார் யுவர் லவ்லி காம்ப்ளிமெண்ட். தேங்க்ஸ் எ லாட்!” என அவன் சொன்னதும், அவள் கிளம்ப முற்பட,

“ம்ப்ச்! நானே கட் பண்ணி எனக்கு நானே ஊட்டிக்கிறதுக்குப் பேர் தான் பர்த்டேவா?” என அவன் முணுமுணுப்பதைக் கேட்டதும் ஏதோ தோன்றியவளாய் சட்டென நடையை நிறுத்தி அவனருகினில் வந்தவள்,தன் கையோடு கொண்டு வந்திருந்த, தீப்பெட்டியை வைத்து கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றியவள், கத்தியை அவன் புறமாய் நீட்டினாள்.

அவனோ திகைத்து விழித்தபடி நின்றிருக்க,

“கேண்டி க்ரஷோட கஸ்டமராய் உங்க ஸ்பெஷல் டேவை நீங்க தனியா செலிபிரேட் பண்ணுறதை நாங்க விரும்பலை. ஸோ கட் பண்ணுங்க சார்!” எனப் புன்னகை நிறைய அவள் சொன்னதும், மறுக்கத் தோன்றாமல், கத்தியை வாங்கியவன், மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கப் போக,

“பர்த்டே விஷ்ஷா உங்களுக்குப் பிடிச்சதை வேண்டிக்கோங்க சார்!” எனச் சொன்னவள், அவன் கண்கள் மூடி சில நொடிகள் நின்றுவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, கேக்கை வெட்டத் துவங்க,

“ஹேப்பிப் பர்த்டே டூ யூ!” எனப் பாடலைப் பாடினாள். புன்னகையோடே கேக்கை வெட்டி முதல் துண்டை அவளுக்குக் கொடுத்தவன்,

“தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்!” என நெகிழ்வுடன் சொன்னான். அவளும் விடைபெற்றுக் கிளம்பிவிட, முன்பின் தெரியாத ஓர் பெண்ணோடு, முதன்முதலாய் பிறந்தநாள் கொண்டாடிய புதுவித உணர்வோடு, கையிலிருந்த ப்ரேஸ்லெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதன் ரித்விக்.

********

மறுநாள் காலை, அந்தப் பெரிய காஃபி ஷாப்பில் ஆதனுக்காய் காத்திருந்தாள் நிஷா.
சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின்னர், ஆறடி ஐந்தங்குல உயரத்தில், மாநிறத்தில் கம்பீரமாய் அவள் எதிரே வந்தமர்ந்தான் ஆதன் ரித்விக்.

“விஷ் யூ எ ஹாப்பி ஹாப்பிப் பர்த்டே பேபி!” என்றபடி பற்கள் தெரிய புன்னகைத்தாள் நிஷா.

“என்ன பேபி பேசவே மாட்டேங்குறே? என்மேல் கோபமா? நான் தானே நைட் உனக்கு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணினேன். அப்பறமும் என்ன கோபம்?” என நிஷா கேட்டதும் தான், முதன்முதலாய் தனக்கு வாழ்த்துச் சொன்ன அந்தக் கேண்டி க்ரஷ் பெண்ணின் முகம் அவன் நினைவிற்கு வந்தது.

பெயர் தெரியா பெண்ணின் முகம் நினைவில் வரவும், சொல்லாமல், கொள்ளாமல் புன்னகையும் அவன் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. அவன் புன்னகையைத் தவறாய் புரிந்து கொண்ட, நிஷாவோ,

“நீ சிரிக்கிறியே, அப்போ என் கிஃப்ட் உனக்குப் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்.!” எனப் புன்னகையோடே கேட்டாள்.

“எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கலை நிஷா! உன் கிஃப்ட் எதுவும் எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை. அதோட நமக்குள்ளே செட் ஆகும்னு எனக்குத் தோணலை.” அழுத்தமாய் அதே நேரம் உறுதியாய்ச் சொன்னான் ஆதன் ரித்விக்.

“இங்கே பாரு ரித்விக்! நான் ஒண்ணும் சாதாரணப் பொண்ணு இல்லை. இந்தியாவோட டாப் மாடல் நான். என்னால் தேவையில்லாததுக்கெல்லாம் நேரத்தை செலவு பண்ண முடியாது. முக்கியமா எனக்கு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் சுத்தமாய்ப் பிடிக்காது.!”

“ஓகே எனஃப்! அப்போ, நான் உன் பர்த்டேக்கு உன் கூட இல்லைன்னாலும், நீ எதுவும் நினைச்சுக்க மாட்டே அப்படித்தானே?” அழுத்தமாய்த் துளைத்த பார்வையோடு அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அவள்.

“அதெல்லாம் விடு ரித்விக்! அதெல்லாம் என் பர்த் டே வரும்போது பார்த்துக்கலாம்.!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நிஷாவின் அருகில் வந்தமர்ந்தாள். ஆதனின் ஒற்றைத் தங்கை சம்யுக்தா.

“சம்யூ! நீ எதுக்காக இங்கே வந்தே?”

“நீ நிஷா மேல் கோபமாய் இப்பேன்னு நிஷா சொன்னாள் அதனால் தான் நான் வந்தேன் ஆது!”

“இங்கே பாரு, சம்யூ! முதலில் எனக்கும் நிஷாவுக்கும் நடுவில் மீடியேட்டராய் நீ இருக்காதே!”

“ஆது! நிஷா என் ஃப்ரெண்ட். அவளோட எல்லா விஷயத்திலும் நான் கூடவே தான் இருப்பேன்.!”

“சொன்னால் புரிஞ்சுக்கோ சம்யூ! என்னைக்காவது ஆகாஷுக்கும் உனக்கும் இடையில் நான் வந்திருக்கேனா?”

“ஏன் மேல் கோபமாய்த் தானே பேசறே! அப்போ இந்தத் தங்கச்சி மேலே உனக்கு அக்கறையே இல்லை தானே? நான் ஆகாஷை லவ் பண்ணப் போய்த் தான், அப்பா நிஷாவை உனக்குப் பேசினார். நான் இல்லாமல் நிஷா உனக்குக் கிடைச்சிருப்பாளா? நீ என் கிட்டே கோபப் படுறே தானே? உன் கிட்டே பேசறது வேஸ்ட். நான் அப்பா கிட்டே பேசிக்கிறேன்.” எனச் சம்யுக்தா சொல்ல,

“இப்போ என்ன என்ன செய்யச் சொல்றே சம்யூ?” எரிச்சலுடன் கேட்டான் ஆதன் ரித்விக்.

“நிஷா மேல் கோபப் படாதே!” எனச் சொன்னவள், சொடக்கிட்டுக் கடைச் சிப்பந்தியை அழைத்து,

“நான் சொன்னதைக் கொண்டு வாங்க!” எனத் திமிராகவே பணித்தாள்.
சில நிமிடங்களில், சிறிய சாக்லேட் ட்ரஃபிள் கேக் அவன் முன் வைக்கப் பட,

“உன் பர்த்டே செலிபிரேட் பண்ணும் போது, நிஷா உன் கூட இல்லைன்னு தானே உனக்குக் கோபம்? இப்போ நிஷா இருக்கா. நான் இருக்கேன். நீ கட் பண்ணு!” எனச் சொன்னாள் சம்யுக்தா.

“இல்லை சம்யூ! எனக்கு இப்போ, பர்த்டே செலிபிரேட் பண்ணுற மூட் எதுவும் இல்லை. எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன்.!” என அவன் எழப் போக,

“பாரு, சம்யூ உன் அண்ணனுக்கு என் மேல் லவ் கேர், எதுவுமே இல்லை. என்னோட எத்தனை கமிட்மெண்ட்ஸை விட்டுட்டு உங்க அண்ணணுக்காக நான் வந்துருக்கேன். கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் கிளம்புறார் பார் சம்யூ. ஐ கான்ட் எக்ஸ்பெக்ட் இட். நான் இதைச் சுத்தமாய் எதிர் பார்க்கவே இல்லை. இப்போவும் நான் இங்கே நின்னு பேசிட்டு இருக்கேன்னா அது உனக்காக மட்டும் தான் சம்யூ!” போலியான வருத்தத்துடன் பேசினாள் நிஷா.

“இப்போ என்ன இந்தக் கேக்கை கட் பண்ணணும் அவ்வளவு தானே?”

“இப்படிக் கோபப் பட்டெல்லாம் கட் செய்ய வேணாம் ரித்வி! எவ்வளவு ஆசையாய் உனக்காக வந்தேன். ஆனால் நீ என்னை அவாய்ட் பண்ணுற மாதிரி பிஹேவ் பண்ணுறே இல்லே?”

“இங்கே பாரு நிஷா! உன்னை அவாய்ட் பண்ணணும்னு நான் நினைக்கலை. சம்யுவுக்காக நான் உன்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாலும், எனக்கும் சில எக்ஸ்பக்டேஷன்ஸ் இருக்கு. என் வாழ்க்கைக்குள்ளே என்னோட சரி பாதியாய் வரப் போற பொண்ணுக்கிட்டே இருந்து ஃபர்ஸ்ட் விஷ் எதிர் பார்க்கிறதும், ஒண்ணா பர்த் டே செலிபிரேட் பண்ணணும்னு நினைக்கிறதும், என்னைப் பொருத்தவரை கொலைக் குற்றம் ஒண்ணுமில்லையே?”

“ஆது! இங்கே பாரு! நீ நிஷாவை ரொம்பவும் ஹர்ட் பண்ணுறே! அவ பாவம் தெரியுமா? முக்கியமான ஷுட்டை விட்டுட்டு உனக்காக வந்திருக்கா தெரியுமா? முதலில் நீ கேக்கை கட் பண்ணு. அவ இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுணுமாம்.!”

‘நேரில் இருக்கிறவனை விட, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுறது தான் முக்கியமா?’ என மனதில் நினைத்தவன், கடனே எனக் கேக்கை கட் செய்து நிஷாவிற்கு விருப்பமில்லாமலேயே ஊட்டினான்.

“ஹேய் பேபி! விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே!” எனக் காது வரை சிரித்தபடி சொன்னவள், உதட்டுச் சாயம் பதிய ஆதனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“தட்ஸ் யுவர் லிமிட் நிஷா! என் கிட்டே ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்காதே! அதுவும் பப்ளிக் ப்ளேஸில். எல்லா நேரமும் அமைமைதியாய் போக மாட்டேன். சம்யூவையும் தாண்டி சில விஷயங்களில் நான் நானாய் தான் இருப்பேன். மைண்ட் இட்.!” எனச் சொன்னவன், டிஷ்யூவால் கன்னத்தைத் துடைத்துக் குப்பையில் போட, நிஷாவின் முகம் கன்றி சிறுத்துப் போனது.

ஆனால், அவன் மனமோ, அந்த டெலிவரி பெண்ணின் கன்னத்தில் இதழ் பதித்ததை நினைத்துக் கொண்டிருந்தது. அவளின் ஸ்பரிசத்தை இதழ்கள் உணர்வதைப் போன்ற பிரம்மைக் கூட எழுந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்தோ என்னவோ, நிஷாவின் செயல்கள் ஒவ்வொன்றுமே அவனுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருந்தது.

“உங்க அண்ணன் சரியான பழமா இருக்கார் சம்யூ! இந்த மாதிரி கேரக்டரெல்லாம் எனக்குச் சத்தியமாய்ச் செட் ஆகவே ஆகாது. என்னோட ப்ரைவேட் ஸ்பேஸில் தலையிடுறவங்களை எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது.!” சம்யூவின் காதைக் கடித்தாள் நிஷா.

“ஹேய் நிஷா! என் அண்ணன் ஜெம் தெரியுமா? இதுவரை எந்தப் பொண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அவன் லைஃபில் வந்த முதல் பொண்ணு நீ தான்.!” உடன் பிறந்தவனுக்கு முதன்முதலாய் ஆதரவாய் பேசினாள் சம்யுக்தா.

“எனக்குத் தெரிஞ்சவரை, எதையும் அனுபவிக்கத் தெரியாத முட்டாள் தான் உன் அண்ணன்..!”

“அதை விடு, முதலில் கிஃப்டைக் கொடு, அப்படியே என் அண்ணன் மயங்கி விழுந்துருவான் பாரு.!” எனச் சம்யுக்தா சொல்லவும்,

“எல்லாத்தையும் விடு பேபி! இட்ஸ் டைம் ஃபார் கிஃப்ட்.!” எனச் சொன்னவள் அரக்கு நிற வெல்வெட் பெட்டியை அவன் முன் நீட்டினாள்.

“ஓப்பன் பண்ணி பாரு பேபி! உனக்கு ரொம்பப் பிடிக்கும்!” மீண்டும் அதே இன்ஸ்டன்ட் புன்னகை.

கடினப்பட்டுப் புன்னகைத்த இதழ்களோடு, அந்தப் பெட்டியை அவன் திறக்க, உள்ளே அவனைப் பார்த்துச் சிரித்தது பிளாட்டிணத்தில் வைரத்தை இழைத்துச் செய்யப்பட்டிருந்த பிரேஸ்லெட்.

“ரொம்ப நல்லா இருக்கு. பட் ஏன் இவ்வளவு காஸ்ட்லியா?”

“நான் உன் மேல் வச்சிருக்க லைவ்வை விட, இது ஒண்ணும் காஸ்ட்லி இல்லை ரித்வி!” என அவள் சொன்னதில் அப்பட்டமாய்ப் போலித்தனம் தெரிந்தது.

“கையைக் கொடு பேபி. உனக்கு நான் தான் போட்டு விடுவேன்.!” என்றபடி நிஷா, ஆதனின் கையைப் பற்ற, முழுக்கை சட்டையினுள் இத்தனை நேரமாய் ஒளிந்திருந்த பிரேஸ்லெட் அவள் கண்களில் விழுந்தது.

“ரித்வி! இது யார் கிஃப்ட் பண்ணினது? அதுவும் எனக்கு முன்னே?” என நிஷா கேட்ட பின்னே தன் கரத்தைப் பார்த்தவனுக்குச் சட்டென்று அந்தக் கேக் டெலிவரி பெண்ணின் முகம் வந்து போனது.

“என் ஃப்ரெண்ட் கிஃப்ட் பண்ணினது நிஷா!” எனச் சொன்னவனின் இதழ்களில், பெயர் தெரியாப் பெண்ணின் நினைவால் புன்னகை மலர்ந்தது.

“இந்த மாதிரி சீப்பான ஃப்ரெண்ட்ஷிப்பெல்லாம் உனக்குத் தேவையில்லை ரித்வி. உன்னை மாதிரி ஹேண்ட்ஸம் ஆனவனுக்கு, இப்படிச் சீப்பான கிஃப்ட்டும் தேவையில்லை.” எனச் சொன்னபடியே நிஷா அவன் கையிலிருந்த பிரேஸ்லெட்டைக் கழற்றி வீசிய நொடி, ஆதனின் முகம் அளவில்லா கோபத்தில் ரத்தமெனச் சிவந்தது.

“போதும் நிஷா! பரிசுங்கிறது அந்தப் பொருளோட பண மதிப்பில் இல்லை. கொடுக்கிறவங்களோட மனசில் உண்மையான அன்பு மட்டும் இருந்தால் போதும். அந்த அன்பு தான் இந்த உலகத்தில் உள்ள எல்லாத்தையும் விட விலை மதிப்பில்லாதது.!” எனச் சொன்னவன் அவள் தூக்கியெறிந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“அப்போ! நான் லட்ச கணக்கில் செலவு பண்ணி வாங்கினதை விட, இந்தப் பைசா பெறாத சில்வர் பிரேஸ்லெட் தான் உனக்குப் பெருசா?” என எரிச்சலுடன் கேட்டாள் நிஷா.

“அப்படியில்லை நிஷா! நான் சொல்ல வர்ரதை நீ புரிஞ்சுக்க மாட்டேங்குறே!”

“ஆது! நீ நிஷாவை ரொம்பத் தாழ்வா நடத்தறே! அவ கிஃப்ட்டை விட, உனக்கு உன் ஃப்ரெண்ட் கொடுத்தது தான் பெரிசு அப்படித்தானே? உனக்கு என்னைப் பத்தியும் கவலையில்லை. என் வாழ்க்கையைப் பத்தியும் கவலையில்லை. உனக்கு நீ மட்டும் தான் முக்கியம். நீ இவ்வளவு ஷெல்ஃபிஷ்ஷா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை ஆது!” எனச் சம்யுக்தா அழுகைக் குரலில் சொல்ல,

“சம்யூ! ப்ளீஸ் டோன்ட் க்ரை. நிஜமாவே எனக்கு நிஷாவோட கிஃப்ட் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீயே என் கையில் போட்டு விடேன். ஆனால் ஒரேயோரு கண்டிஷன் சிரிச்சுட்டே போட்டு விடணும்.!” எனச் சொல்லி தங்கையின் முகம் நிமிர்த்தினான் ஆதன்.

“நிஜமாதானே சொல்றே! அப்போ அந்தப் பிரேஸ்லெட்டை குப்பையில் போடு!” என நிஷா சொல்ல,

“ஆமா! அதைக் குப்பையில் போட்டுடு. ப்ளீஸ் எனக்காக!” எனச் சம்யுக்தாவும் கேட்டதும், சட்டைப்பையில் பத்திரப்படுத்தியதை அடுகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டவன், வலுக்கட்டாயமாய் வர வைத்த புன்னகையுடன் தங்கை முன் கையை நீட்டினான்.

அந்தப் பிரேஸ்லெட்டை அணிவித்ததும், நிஷாவும் , சம்யுக்தாவும் விடைபெற்றுக் கிளம்பிவிட, சற்று முன் குப்பையில் போட்ட பிரேஸ்லெட்டை அவசரமாய் எடுத்து, மீண்டும் தன் சட்டைப் பைக்குள் பதுக்கிக் கொண்டவனுக்கு, ஏனோ நிஷா தூரமாய்த் தெரிந்தாள்.

அதே நேரம், யாரென்றே தெரியாத, தன்னுடன் பிறந்த நாள் கொண்டாடிய அந்தப் பேர் தெரியாத தேவதை அவன் மனதிற்கு நெருக்கமானவளாய் தோன்றினாள். தன் தனிமையில் துணையாய் நின்ற அவளைப் பார்க்க, இவன் மனம் ஆவல் கொண்டது.

“யாருன்னே தெரியாத பெண்ணை எப்படிக் கண்டு பிடிக்கிறது?” என முணுமுணுத்தவனின் பார்வை அருகிலிருந்த கேக்கை தொட்டு மீண்ட நொடி, அவன் மூளைக்குள் பல்பு எரிந்து மின்சாரம் பாய்ச்சியது. சட்டென முகத்தில் பிரகாசம் பரவ, அலைபேசியில் எண்களை அழுத்தி காதுக்குக் கொடுத்திருந்தான்.

இசைக்கும்…!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்