Loading

அத்தியாயம் – 27

 அவளின் மடியையே தலையணையாக்கி, அவளின் கண்ணிற்குள்ளேயே தன் காயங்களையும் புகுத்தி, சத்தம் இல்லாமல் கண்ணீரில் நனைந்தான் தேவ செழியன். அதற்கு மேல் தன்னவனின் கசங்கிய முகத்தைக் காண இயலாது, அவனின் தலை முடியை கோதிக் கொண்டிருந்த, இசையின் கரங்கள் மென்மையாக, அவன் கண்ணீரைத் துடைத்தது.

இருவருமே அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல், மௌனங்களையே வார்தைகளாக்கி, பார்வைகளையே வாதங்களாக்கி நிமிடங்களைக் கடத்தினர். தேவா அவள் நெற்றியில் ஏற்பட்டிருந்த காயத்தில், மிருதுவாக ஒரு விரலை வைத்துப் பட்டும் படாமல் அதனை வருடினான்.

அதில் லேசாக வலி எடுத்ததில், சட்டென அவள் முகம் ஒரு நொடி சுருங்க, அதில் பதறி எழுந்தவன் “ரொம்ப வலிக்குதா இசை… டாக்டரை வரச் சொல்லவா?” எனக் கேட்க, அவனிடம் தோன்றிய பதட்டத்தை கண்டு எழுந்த சிறு புன்னகையுடன், “ம்ம்ஹும்” என்று இடவலமாகத் தலையசைத்தாள். 

“நீ ரெஸ்ட் எடு. நான் வெளிய இருக்கேன்… ஹ்ம்ம்?” என்றவன் எழுந்து, அவளைப் படுக்க வைத்தான். அவளுக்குப் போர்வையை போர்த்தி விட்டு, வெளியில் செல்லப் போக, அவன் சுண்டு விரலை லேசான தயக்கத்துடன் தன் சுண்டு விரலால் பிடித்தவள், 

 

அவனை அனுப்ப மனம் வராமல் அவனையே பார்க்க, தேவா உதட்டில் பூத்த குறுநகையுடன், அவள் அருகில் சென்று அமர்ந்து, தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான். அவன் அருகாமையில் அவளும் உறங்கி விட, தேவா ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்து விட்டு விறுவிறுவென வெளியில் வந்தான்.

விஷ்வாவை மருத்துவமனை முழுதும் அம்மு துரத்திட, இறுதியில் ஒரு மருத்துவர் வந்து, “இதென்ன ஹாஸ்பிடல்லா இல்ல ப்ளே கிரௌண்டா?” என்று திட்டி விட்டுச் சென்றதும் தான், விஷ்வா ஓட்டத்தை நிறுத்தி விட்டு, அம்முவை நக்கல் சிரிப்புடன் பார்த்தான்.

அவளோ ‘இன்னைக்கு நேரமே சரியில்லை போல! எல்லார்டையும் திட்டு வாங்குறோம்…’ என நொந்து, விஷ்வாவை முறைக்க, அவன் அவளையே ஆழமாகப் பார்த்தான்.

அதன் பிறகே, தேவா பற்றித் தெரிந்தும் அவனிடம் சொல்லவில்லை என்றே உரைக்க, “சாரி பேபி! நான் உங்கிட்ட சொல்லிருக்கணும். ஆனால்…” என்று இழுத்தவளின், பேசும் இதழ்களை விரல்களால் தடுத்து, “என் நல்லதுக்கு தான் நீ மறைச்சுருப்பன்னு எனக்குத் தெரியும் அம்மு… நீ மறைச்சது மறைச்சதாவே இருக்கட்டும். எனக்கு எதுவும் தெரியவே வேணாம்” என்று தலையைச் சாய்த்து சொன்னதில், சற்று திகைத்தவள், அவனை ரசனையுடன் பார்த்தாள்.

‘இவள் வேற ஆன்னா ஊன்னா குறுகுறுன்னு பார்ப்பா’ என்று செல்லமாகத் திட்டியவன் “சரி வா, அங்க என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்…” என்று அழைக்க, 

“நான் வரல. அவள் என் மேல கோபமா இருக்கா” என்று முகத்தைச் சுருக்கினாள். 

விஷ்வா “ஹ்ம்ம்… மேடம் மட்டும் தேவா அன்னைக்கு என்ன அடிச்சதுக்கு கோபப்பட்டீங்க? அதே மாதிரி தான அவளுக்கும் இருக்கும்.  அப்பா அம்மாகிட்டயே, அவன் மரியாதைய விட்டுக் குடுக்க கூடாதுன்னு நினைக்கிறா… அப்போ நீ பேசுனதை மட்டும் எப்படி ஒத்துப்பா? உன் ப்ரெண்ட பத்தி உனக்குத் தெரியாததா?” என்று கேள்வியுடன் நிறுத்த, அவள் முறுக்கிக் கொண்டு நின்றாள்.

தமி திருதிருவென விழித்துக் கொண்டு நின்றதைக் கண்ட அருண், “உன்னால என்ன பண்ண முடியுமோ, அதைச் சிறப்பா பண்ணி, ரெண்டு பேருக்கும் சண்டை இழுத்து விட்டுட்ட… மிகச் சிறப்பு” என்று நக்கலடிக்க, அவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

அதனை ரசித்தவன், சட்டென முகம் மாறி, “ரொம்ப பயந்துட்டேன் யது… உன்னைப் பார்க்குற வரை என் உயிரே என்கிட்ட இல்ல. விஷ்வா ஏன் ஆஸ்ரமம் வரும்போது அழுதுகிட்டே வந்தான்னு, நீ என்கூட இல்லாத நேரத்துல தான் புரிஞ்சுது. ஒருத்தரோட இழப்பு இந்த அளவுக் காயம் தரும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்…” என்று கண் கலங்கி கூறியவனை காதலுடன் பார்த்தவள், அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.

“உனக்கு தேவா பத்தி ஏற்கனவே தெரியுமா ஷான்?” என்று கூர்மையுடன் கேட்டாள் வைஷு. அம்மு பேசும்போது அவன் முகத்தில் அதிர்ச்சி இல்லை. மாறாகக் குழப்பமே இருந்ததில் தான் அவள் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.

அதில் திடுக்கிட்டவன், “ம்ம்” என்று தலையாட்டினான் வேதனையான முகத்துடன். வைஷு அவன் தோளைத் தொட்டு, “எப்படி தெரியும்? எப்போ தெரியும்?” என்றதில், “நாங்க பெங்களூர்ல இருக்கும் போதே…!” என்றான் மெல்லிய குரலில்.

அதில் திகைத்தவள் “அப்போ மத்த ரெண்டு பேருக்கும் தெரியுமா?” எனக் கேட்டிட, “லைட் ஆ தெரியும்…” என்றான். வைஷு புரியாமல் பார்த்ததில், 

நிஷாந்த், “நாங்க பெங்களூர்ல இருந்தப்போ என் மனநிலை என்னனு உனக்கே தெரியும்ல… ஒரு உயிரைக் கொன்னுட்டேன், நீயும் இல்லை, அதோட என் பிரெண்ட்ஸ்க்கும் என்னால கஷ்டம்ன்னு ,ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்த டைம். எதுலயும் கான்செண்ட்ரேஷன் இல்லாம ஏனோ தானோன்னு இருந்தேன். அப்போ தான் திலகன் சார் வேலை விஷயமா அங்க வந்தவர், என்னைப் பார்த்துட்டு ரொம்ப திட்டுனாரு… நான் இப்படியே இருந்தா மீதி இருக்குற மூணு பேரோட வாழ்க்கையும் இப்படியே போயிடும்னு சொன்னவர், தேவா பத்தி சொல்லி, அவன் இவ்ளோ கஷ்டத்தோடயும் போராடி வாழணும்னு நினைக்கிறான். ஆனால் அவன் பிரெண்டா இருந்துட்டு, நீ இப்படி இருக்கலாமான்னு கேட்டப்போ தான் எனக்கு அவனைப் பத்தியே தெரிஞ்சுது.

மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. அவன் கோபத்துக்குப் பின்னாடி, இப்டி ஒரு வலி இருக்கும்்னு நாங்க நினைக்கவே இல்லை.  அதுக்கு அப்பறம்,  விஷ்வாவும், அருணும் வற்புறுத்திக் கேட்டதுல, நான் மேலோட்டமா சொல்லிருந்தேன். அவங்களுக்கு இதான் அவன் ப்ராப்ளம்ன்னு புரிஞ்சுருக்கும். அதுக்கு அப்பறம் அவன் கிட்ட இருந்து எங்களுக்கு உண்மை தெரியும்ன்றதை மறைச்சு, நார்மல் ஆகவே ரொம்ப கஷ்டப்பட்டோம். திலகன் சார், எப்படியும் இந்த உண்மையை நீங்க கேட்டா சொல்லமாட்டாருன்னு நினைச்சு தான் தைரியமா ஆருவை அவர்கிட்ட பேச அனுப்புனேன். ஆனால் அவள் அவரைப் போட்டு வாங்கி உண்மையைத் தெரிஞ்சுப்பானு நான் எதிர்பார்க்கல நவி. ஷி இஸ் கிரேட்” என்றிட, 

வைஷு அவன் கையை ஆதரவாகப் பற்றி, “நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துடு ஷான்… கண்டிப்பா தேவாண்ணாவும் மாறிடுவான்…! எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றாள். 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் வந்த தேவா, அவர்களுக்குக் கண்ணைக் காட்ட, மூவரும் புரியாமல் அவன் பின்னே சென்றனர்.

வெகுநேரம் நால்வரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, பின், தேவா மூவருக்கும் வேலை கொடுத்து அனுப்பியவன், மீண்டும் ஆருவின் அறைக்கு வந்தான். அவள் அப்போது தான் கண் விழித்து, தீக்காயம் பட்ட கையில் ஏற்பட்ட வலியில், பல்லைக் கடித்து எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டு எழ முயற்சிக்க, தேவா வேகமாக அவளருகில் வந்து, 

“என்னைக் கூப்பிட வேண்டியது தானடி… வலியோட ஏன் எந்திரிக்கிற?” என்று கடிந்தவன், அவளை அமர வைத்திட, அவள் எதுவும் பேசாமல் சிறு சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

தேவா, “என்ன இளிப்பு” என்று புருவத்தை உயர்த்தி வினவ, அவள் தோளைக் குலுக்கி மறுப்பாக தலையாட்டியதில், அவனுக்கும் இந்த நிலை ரசிக்கவே வைத்தது.

இப்போது,   அவன்  காதலை அவளிடம் காட்டத் தயங்க வில்லை, ஆனால் பழையதை பற்றிப் பேசவும் மனமில்லை. சாதாரணமாக இருப்பது போன்றே இருக்க முயன்றவனுக்கு அவளின் இந்த அமைதி கூட, கவிதையாகத் தான் இருந்தது. இருந்தாலும் ‘வாயைத் திறந்து பேசுனா தான் என்னவாம்!’ என்று திட்டவும் தவறவில்லை.

பின், செவிலியர் வந்து அவளைச் சாப்பிட வைக்கச் சொன்னதில், உடனே சாப்பாடு வாங்கி வந்த தேவா, வெளியில் கன்னத்தில் கை வைத்து உம்மென்று அமர்ந்திருந்த அம்முவின் அருகில் இருந்த வைஷுவிடம் சென்று ஒரு கவரை கொடுத்து, “சாப்பிட்டுட்டு கன்னத்துல கை வைச்சு உட்காருங்க…” என்று விட்டு, அம்மு கன்னத்தில் இருந்த கையை வெடுக்கெனத் தட்டி விட்டுப் போனான்.

அதில் கீழே விழச் சென்றவள், கடுப்பாகி, “இவனை” என்று திட்டப் போக, அவன் எப்போதோ உள்ளே சென்றிருந்தான். 

தமி தான் “இவ பேசுன பேச்சுக்கு இவன் சாப்பாடு வேற வாங்கிட்டு வந்து குடுக்குறான்னா, விஷம் எதுவும் கலந்துருப்பானோ?” என்று மிரள, வைஷு “சே!சே! இருக்காது. அப்படியே இருந்தாலும் அண்ணன் கையால விஷம் சாப்புட்றது வரம்” என்று நக்கலடித்தாள்.

தமி, “நீ சாப்டு மேன். வை மீ…?” என்று தப்பிக்க பார்க்க, அம்மு புன்னகையுடன் “செத்தா சேர்ந்து தான் சாகணும்னு நம்ம கூட காலேஜ் படிக்கும் போது சபதம் எடுத்தோமே! உனக்கு ஞாபகம் இல்லயா தமி?” என்றிட

 தமி, “கருமம் ஒரு ட்ரீட்க்காக இவ்ளோ கேவலமான சபதம்லாமா குடுத்தோம்!” என்று நொந்ததில், வைஷுவும் அம்முவும் கலகலவெனச் சிரித்தனர்.

“எவ்ளோ நேரம்டி தட்டையே பார்த்துட்டு இருப்ப? சாப்பிடுடி…!” என்று அவள் கையில் இருந்த தட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு அதட்ட, ஆராதனா வாயைத் திறக்கவே இல்லை. தேவா கோபமாக “இப்போ என்ன உனக்குப் பிரச்சனை? சாப்பிட போறியா இல்லையா?” என்றதும்,

அவள்,   “டேய் லூசு…! கையில  அடிபட்டருக்கும் போது,  எப்படி டா சாப்பிட முடியும்?” என்றாள் முறைப்பாக. அதில் அவன், “நீ தான்டி லூசு… லெஃப்ட் ஹாண்ட்ல தான அடிப்பட்டுருக்கு… இந்தக் கையில எடுத்துச் சாப்பிட வேண்டியது தான?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறியவன், முதலில் ஊட்டி விடத்தான் நினைத்தான். 

ஆனால் அவள் பேசாமல் இருந்ததில் அவளைச் சீண்டிடவே இப்படி செய்தான்.

அவள் “ப்பே! எனக்கு சாப்பாடே வேணாம்.” என்று சிலுப்பிக் கொண்டு வேறு புறம் திரும்ப, உதட்டை மடித்து குறு நகையுடன் அவள் அருகில் வந்த தேவா, சாதத்தை பிசைந்து அவள் வாயருகில் கொண்டு செல்ல, அவள் வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

ஆனால், ஊட்டிவிடத் தெரியாமல், பாதி சாதத்தை அவள்மேல் தான் கொட்டினான். அதில் அவள் கடுப்பாகி “ஒழுங்கா ஊட்டி விடுடா திருட்டுப் பயலே…!” என்றிட, “நீ நல்லா வாயைத் திறந்து வாங்குடி, மியூசிக் டப்பா…” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

அவளோ அவன் வைத்த பேரில் பொங்கி, “என்னது நான் மியூசிக் டப்பாவா?” என்று முறைத்திட “ஆமா, உன் வாய் என்னைக்காவது மூடிருக்கா? எப்போவுமே எதையாவது பேசும், இல்லைன்னா சாப்பிடும்!” என்று கேலியுடன் நகைத்தவனை பொய்யாய் முறைத்தவள், மீண்டும் கீழே சாதத்தை சிந்தியதில், “ஒழுங்கா ஊட்டி விடத் தெரியுதா…?” என்று திட்டி விட்டு, சாதத்தை எடுத்து அவன் வாயில் வைக்கப் போனாள்.

 

அவளின் திடீர் தொடுதலில் திகைத்தவன், எப்போதும் போலச் சட்டென விலகிட, அவள்  தான்  அவன்  செயலில் எழுந்த வலியுடன், கையை மடக்கி “சா சாசாரி… நான் எதார்த்தமா தான் ஊட்ட…” என்று திணறியவள், அவனை சங்கடப்படுத்தி விட்டோமோ என்று வருந்தினாள்.

அவனின்    நிலையோ,  சொல்லவே   வேண்டாம். ‘சே    இப்படியா,  ஆசையா  ஊட்ட வந்தவளை கஷ்டப்படுத்துவோம்…’ என்று தன்னையே திட்டிக் கொண்டு, அவள் கையைப் பிடித்து, அவன் வாயருகே வைத்து, மெல்ல இதழ்களைத் திறந்தான்.

அவனின் இந்த, தன்னை மாற்றிக் கொள்ள விழைந்த முயற்சியைக் கண்டு, அவளுக்குக் கண்கள் கலங்கி விட, அவனோ நிலைமையைச் சரி செய்யும் பொருட்டு, “எவ்ளோ நேரம்டி வாய திறக்கிறது, பசிக்குது சீக்கிரம் ஊட்டு…” என்று கண்ணைச் சுருக்கி போலியாக மிரட்டிட, அதில் விழைந்த சின்னச் சிரிப்புடன், அவனை அன்பாகப் பார்த்து, ஆசையாக ஊட்டி விட்டாள்.

அதில் அவனுக்கும் கண் கலங்கி விட, ஏதோ அப்போது தான் முதன் முதலாகப் புதிதாக சாப்பிடுவது போல் ரசித்து ருசித்து, அவளின் கையாலேயே சாப்பிட்டு முடித்தவன், இடை இடையே அவளுக்கும் ஊட்டி விட்டான்.

அடுத்த நாளே அவளை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட, அவள் பெற்றோரிடம்,  நடந்த விபத்தைப் பற்றிச் சொல்லக் கூடாது என்று வைஷுவிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். தேவாவோ காலையில் வெளியில் சென்றால் இரவு தான் வீடு திரும்பினான். ஆனால் முன்பு போல் இல்லாமல் அவளிடம் சகஜமாகப் பேசி, வீட்டில் இருக்கும் நேரத்தில் அவளை ஊட்டச் சொல்லி, அவள் மடியிலேயே தயக்கம் இல்லாமல் படுத்து உறங்கும் வரை வந்திருந்தான்.

ஆனால் எதைப் பற்றியும் பேசவில்லை. அவளும் அவனே ஆரம்பிக்கட்டும் என்று அமைதி காத்தாள். இப்படியே நான்கு நாட்கள் சென்றிட, ஒரு நாள் இரவு “நான் வெளியூர் போகணும். கேஸ் விஷயமா…” என்று கிளம்பியவன் மறுநாள் இரவுவரை ஒரு போன் கூடச் செய்யவில்லை.

ஆரு தான், அவனைக் காணாமல் தவித்து விட்டாள். ஒரு அளவுக்கு மேல் பொறுக்க இயலாமல் நிஷாந்திடம் “மாம்ஸ் தேவ் எப்போ வருவான்?” எனக் கேட்டாள் சற்று ஏக்கமாக.

விஷ்வா “அவன் வேலை விஷயமா எங்கயாவது போயிருப்பான் ஆரு வந்துடுவான்…” என்று அமைதிபடுத்த, அம்மு “ஆமா! ஆமா! அவன் தான் ஊரை அடிச்சு உலையில வச்சுடுவானே… வந்துடுவான்! வந்துடுவான்!” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.

ஆரு மெலிதாக நகைத்து “என்ன விச்சு மாம்ஸ்… உன் ஆள் பயங்கர சூடா இருக்கா போல?” என்று வினவ, “உனக்காக சப்போர்ட் பண்ணி பேசுனவளை, நீ திட்டிருக்க கூடாது ஆரு…” என்று இழுத்தவனை, ஆரு கேலியாகப் பார்த்தாள்.

விஷ்வா “உள்ள கூப்பிட்டு வச்சு கும்மாங்குத்து குத்திருக்கணும்… தப்பு பண்ணிட்ட” என்று சலிப்பாகப் பேசிட, அம்மு அவனைத் தீயாக முறைத்தாள்.

அதில் அவன், “குழம்புக்கு போடுவோம் உரைப்பு! என்கிட்ட வேணாம் உன் முறைப்பு!” என்று அவனின் ரைமிங்கை எடுத்து விட, அம்மு அங்கிருந்த பொருட்களை அவன் மேல் அவள் தூக்கி எறிந்ததில் வீடே போர்க்களமாகக் காட்சி அளித்தது.

கூடவே சிரிப்பலைகளும் எழும்ப, அப்போது தான் தேவா உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் ஆருவின் விழிகள் மின்ன, அவனுக்குப் பின்னே அவளின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

அவளுக்கு ஏற்பட்ட காயத்தைக் கண்டதும் அவர்கள் பதட்டத்துடன் அவளை நலம் விசாரிக்க, அவளின் அம்மாவோ “ஒரு போன் ஆவது பண்ணனும்னு தோணுச்சாடி உனக்கு” என்று கடிந்து கொண்டிட, அவளின் அப்பா பாண்டியனோ பூஜை செய்து கொண்டு வந்திருந்த விபூதியை பூசி விட்டு, “எல்லாம் கண்ணேறு தான்! சீக்கிரம் சரி ஆகிடும் ஆரும்மா” என்றார் பரிவாக.

‘என்னடா இது? இந்தத் திடீர் மாற்றம்’ என்று குழப்பத்துடன்  தேவாவை கண்டவளுக்கு, அவன் கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்ததிலேயே, புரிந்து விட்டது, இந்தத் திருட்டுப்பய தான் ஏதோ செய்திருக்கிறான் என்று. கணேசனும் கண்ணம்மாவும் ஒரு புறம் அவளைத் தாங்க, கண்மணியோ சொல்லவே வேண்டாம். அவளைப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டிருந்தார்.

ஆரு “அத்தை எனக்குத் தான் ஒண்ணும் இல்லைல. அப்பறம் என்ன? ப்ளீஸ் அத்தை அழுவாதீங்க…” என்று தாடையை பிடித்துச் சமாதானப்படுத்த, அவர், “இல்ல ஆரும்மா, இந்த மனுஷன் என் வாழ்க்கையை தான் கெடுத்தாருன்னு பார்த்தா, இப்போ உன் வாழ்க்கையையும் கெடுக்குறாரு… உனக்கு ஏதாவது ஆகிருந்தா நான் உயிரோடயே” என்று வருத்தத்துடன் கூறியவர், தேவா “மா” என்று கண்டிப்பான குரலில் சட்டென அமைதி ஆகிட, ஆராதனாவோடு சேர்த்து அங்கிருந்த அனைவருக்குமே ஒரே ஆச்சர்யம்.

ஆருவோ ‘இந்த அத்தை யாரை பத்தி பேசுறாங்க’ என்று சிந்திக்க, தேவா அவளை யோசிக்க விடாமல், “சாப்ட்டியா இசை” எனக் கேட்டான்.

அவள், அவனை முறைத்து “இப்போதான் நான் சாப்பிட்டேனா இல்லையான்னு ஞாபகம் வந்துச்சாக்கும்?” என்றதில் புன்னகைத்தவன், அவளுக்கு ஊட்டி விட அவளின் குடும்பமே அவர்களை நிம்மதியாகப் பார்த்தது. இதில் பாண்டியன் வேறு வார்த்தைக்கு வார்த்தை ‘மாப்பிள்ளை’ என்று தேவாவை அழைத்ததில் அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் தேவாவை பார்த்துக் கொண்டே பதில் கூறி விட்டு, அவர்களை உறங்க அனுப்பி விட்டு, அவசரமாக அறைக்குள் தேவாவை இழுத்து சென்று 

“என்னடா நடக்குது இங்க…? ஐயோ மண்டை காயுது! எப்போவும் புரியாத மாதிரி எதையாவது பேசுவ… இப்போல்லாம் நீ செய்ற விஷயம் கூடப் புரிய மாட்டேங்குது” என்று குழப்பத்தில் அங்கும் இங்கும் நடந்தாள்.

அவளைக் கண்டு புன்னகைத்தவன் “ஹே மியூசிக் டப்பா, இங்க உட்காரு…” என சோபாவில் அமர வைத்திட, அவள் விடாமல் “ஆமா! அத்தை யாரை பத்தி பேசுனாங்க? என் வாழ்க்கையை யாரு கெடுக்கப் பார்த்தா” என்று புரியாமல் கேட்டவளிடம் “வேற யாரு, உன் மதிப்பிற்குரிய மாமா சிவன் தான்” என்றான்.

அவள் “வாட்” என அதிர்ந்து விட்டு, “அவரு தான் திருந்தி ஜெயிலுக்கு போய்ட்டாரே…!” என்றிட, அவன் நக்கலாக “எதை வச்சு இப்படி சொல்றீங்க மேடம்” என்றான்.

அவள் “ப்ச், நான் அன்னைக்கு நாக்கு தள்ள டயலாக் பேசினதுல, அவர் கூட என்னைப் பார்க்க முடியாம குனிஞ்ச தலை நிமிராம போலீஸ் ஜீப்ல போய் உட்காந்தாரே…” என்று பெருமையாகச் சொன்னதும், அதற்கு மேல சிரிப்பை அடக்க இயலாது சிரித்தே விட்டான்.

“ ஹையோ ஹாஹாஹா…, இவள் பெரிய ஐயா படத்துல வர்ற சரத்குமாரு, அவரு ப்ரகாஷிராஜு! இவள் நாலு மொக்க வசனம் பேசுனதும் அவரு திருந்தி ஜெயிலுக்கு போய்ட்டாராம்… ஹாஹா” என்று சத்தம் போட்டே சிரித்திட, 

அவள் தான் ‘என்ன இப்படி அசிங்கப்படுத்திட்டான்… அப்போ பேசுன டயலாக்லாம் வேஸ்ட்டா கோபால்’ என்ற ரீதியில் அவனைப் பாவமாகப் பார்த்திருந்தவள், முதல் முதலாக அவன் வாய் விட்டுச் சிரித்ததில் எப்போதும் போல் அவன் கன்னத்தில் தோன்றிய ஆழமான சிறு குழியில் தொம்மென விழுந்து விட்டவள் அவனையே ரசிக்க ஆரம்பித்தாள்.

அவளின் காதல் பார்வையில், சிரிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியவன் புன்னகையுடன் “ஓய் என்ன பார்க்குற?” என்று விழி உயர்த்திக் கேட்டிட, ‘சே! இப்படியா வெளிப்படையா பாப்போம்.’ எனத் தன்னையே திட்டியவளுக்கு,

கூடவே வெட்கம் வேறு ஒட்டிக் கொள்ள ‘ஒண்ணும் இல்ல’ என்று தலையாட்டி விட்டு, ஓடிப் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

தேவாவும் அவள் அருகில் சென்று படுத்துக் கொள்ள, இசை அவன் புறம் திரும்பாமலேயே “ஆமா, மாமா அப்போ திருந்தவே இல்லையா” எனக் கேட்டதும், 

 

“என்ன கேட்குறதா  இருந்தாலும்,  திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டா பதில் வரும்…!” என்ற அவனின் குறும்பில், வெட்க புன்னகையுடன் “எனக்குத் தூக்கம் வருது” என்று கண்ணை மூடிக் கொண்டாள்.

அவன், “அந்தக் கையில அடிப்பட்டுருக்குல இசை, இந்தப் பக்கம் திரும்பு…” என்று மென்மையாக அவளை அவன் புறம் திருப்பி, அவள் கண்களையே ஊடுருவ, அவள் தான் ‘ஐயோ இன்னைக்குன்னு பார்த்து, ஏன் இப்படி வெட்கம் வருது’ என்று தன்னை நொந்து, “தேவ், ஏன் அப்படி பார்க்குற?” எனக் கேட்டாள் வெளிவராத குரலில்.

அவன் அவள் உள்ளங்கையை எடுத்து, அவன் கைக்குள் வைத்துக் கொண்டு, “இசை, எனக்கு நெத்தியில ஒரே ஒரு கிஸ் தரியா?” என ஏக்கத்துடன் தாயிடம் கேட்கும் தொணியில் கேட்டிட, அவள் சில நொடிகள் என்ன கேட்கிறானெனப் புரியாமல், கண்ணிமைக்காமல் பார்த்து விட்டு,

பின் வெட்கத்தையும் கை விட்டு, சட்டென எழுந்து மென்மையாக, அதே சமயம் அழுத்தமாக அவன் நெற்றியில் முத்தமிட்டவள் செய்கையில் நிச்சயமாகக் காதலும் இல்லை, ஆசையும் இல்லை.

தன் குழந்தைக்குக் கொடுக்கும் அரவணைப்பாகவே இருந்தது. ஆனால் அவனுக்குத் தான் அவள் தொடுகையில் சிறு நடுக்கம் பிறந்திட, அவன் தான் கேட்டான் என்றாலும், இந்த நடுக்கத்தையும் பயத்தையும் அவனால் தடுக்க இயலவில்லை.

 

தன் நடுக்கத்தை கண்டு அவள் வருத்தப்படுவாளோ என்றெண்ணி, “சாரி இசை… நான் பிடிச்சு தான் கேட்டேன். ஆனா ஆனா” என்று தவித்தவனின் தலையை எடுத்து அவள் மடியில் வைத்தவள், மீண்டும் மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு,

“கண்ணை மூடி நிம்மதியா தூங்கு தேவ்! நீ என்கிட்ட ரொம்ப சேஃப் ஆ இருக்க… ம்ம்?” என்று மிருதுவாகக் கூறியவள் அவன் தலையைக் கோதி விட, அவனுக்குத் தான் கண்ணீர் ஆறாக ஓடியது. அவள் அதனைத் துடைத்துக் கொண்டே இருக்க, மீண்டும் மீண்டும் கண்ணீர் வற்றாத நதியாகக் கன்னத்தில் வழிந்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணீரும் நின்று விட, அவளையே பார்த்திருந்தவன், “நான் ஒண்ணே ஒன்னு குடுக்கவா இசை…?” என்று சிறு பிள்ளையாய் கேட்டான்.

“என்கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா?” என்று பொய்யாக முறைத்தவளுக்கு மெலிதான புன்னகையை கொடுத்தவன், அவள் மடியிலிருந்து எழுந்து அவள் கன்னத்தைக் கை நடுக்கத்துடன் தாங்கி, மெல்ல அவள் நெற்றியில் இதழ் பதித்திட, இருவரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் ஒன்றாக வெளி வந்து, அவர்கள் கன்னங்களை நனைத்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்