Loading

மனசாட்சி கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திணறியது ஒரு நிமிடம் தான். அடுத்த நொடி, மனசாட்சியை கழுத்தை நெரித்து கொல்லும் அளவு கோபம் வந்தது பைரவிக்கு.

“உன் வேலை என்னமோ அதைப் போய்ப் பாரு. இங்க வந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க இடியட்” என்று தலையில் தட்டி துரத்தி விட, தேவா பேச ஆரம்பித்தான்.

பைரவி உடனே அதை கவனிக்க ஆரம்பித்து விட, மனசாட்சி காணாமல் போனது. தேவா கேட்ட கேள்விக்கு, சேகரன் வாயை திறக்காமல் தலையாட்டி வைத்தார். உடனே அன்னையிடம் பேச ஆரம்பித்தான்.

“இது ஒரு பிரச்சனையாமா? ஸ்கூல்க்கு அனுப்புறதுல என்ன பிரச்சனை இருக்கு? நானே அனுப்பனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஜூன்ல அட்மிஷன் போட தான் நானும் யோசிச்சேன். உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்காதுனு தெரியும். பைரவி வேண்டாத மருமக. இப்படி பிரச்சனை வந்துட்டே இருந்தா, உங்களால நிம்மதியா இருக்க முடியாது. அதான் நாங்க மட்டும் அந்த வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க கவல படாதீங்க. இந்த வயசுக்கு மேல கோபப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க. நான் பைரவி கிட்ட பேசிக்கிறேன் சரியா?” என்று தேவா கூற, மல்லிகா பேயறைந்தது போல் நின்று இருந்தார்.

“பைரவி நான் சந்துருவ தூக்கிட்டு மேல வரேன். நீ போ” என்று கூறி விட்டு தேவா அறைக்குள் சென்றான்.

மாலை விளையாடிக் கொண்டே தூங்கி விடும் சந்துருவை, கீழே இருக்கும் அறையில் தான் தூங்க வைப்பாள். இரவு உணவிற்கு பின் தான், மாடிக்கு அழைத்துச் செல்வாள்.

தேவா சந்துருவை தூக்கிக் கொண்டு வர, பைரவி எதுவும் பேசாமல் மேலேறி சென்று விட்டாள். அறையில் சந்துருவை படுக்க வைத்தவன், “பத்து நிமிஷத்துல வரேன்” என்று கூறி விட்டு, உடை மாற்றச்‌ சென்று‌ விட்டான்.

பைரவிக்கு அங்கேயே இருக்க முடியவில்லை. வெளியே எட்டிப் பார்த்தாள். மல்லிகாவும் சேகரனும் ஹாலில் இல்லை. உடனே வேலை செய்பவரை அழைத்து, தேவேந்திரனுக்கு காபி பலகாரம் எடுத்து வரச்சொன்னாள். அதன் பின் தான், அவளால் நிம்மதியாக அமர முடிந்தது.

தேவேந்திரன் வெளியே வரும் போது, அவனுக்காக காபி சூடாக காத்துக் கொண்டிருக்க, அதை ஆச்சரியமாகப் பார்த்தான். பைரவி அவனை கண்டு கொள்ளாமல் நின்று இருந்தாள்.

சோபாவில் அமர்ந்து காபியை எடுத்துக் கொண்டவன், அவளையும் அமர சொன்னான். எதிரில் அவள் அமர்ந்து கொள்ள, “இப்ப சொல்லு என்ன நடந்தது?” என்று கேட்டான்.

சேகரனிடம் பேசியதை மட்டும் சொல்லி விட்டு, நிறுத்திக் கொண்டாள் பைரவி. மல்லிகாவின் பேச்சை தான் கீழே இருக்கும் போது சொல்லியாயிற்றே. திரும்பவும் கோள் மூட்டுவது போல் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.

அவளது இந்த குணம் தேவேந்திரனை ஈர்த்தது. முதல் முறையாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். க்ரேப் சில்க் புடவை. அழகாக அவள் உடலை தழுவி இருக்க, இயற்கையான நிமிர்வுடன் அமர்ந்து இருந்தாள். கையில் மெல்லிதாக இரண்டு தங்க வளையல்கள். காதிலும் கழுத்திலும் அதே கதி தான்.

முகத்தை கழுவி துடைத்து பொட்டு வைத்திருக்கிறாள். அதற்கு மேல் எந்த ஒரு அலங்காரமும் இல்லை. அதிலேயே பளிச்சென்று இருந்த முகம், தேவேந்திரனின் மனதில் ஆழமாக பதிந்தது.

காபியை முழுதாக குடித்து முடித்தவன், பலகார தட்டை கையில் எடுத்துக் கொண்டான்.

“உன் கேள்விக்கு பதில் கிடச்சுருச்சா? அம்மா முன்னாடி கேட்டா, இப்படித் தான் ஆகும். வந்த மறுநாளே பிரச்சனைய பெருசாக்க வேணாம்னு, தான் உன் கிட்டக் கேட்கல” என்று கூறினான்.

பைரவி ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“சரி சந்துருக்கு எந்த ஸ்கூல் பெஸ்ட்னு தோனுது?” என்று கேட்டு பேச்சை வேறு திசைக்கு எடுத்துச் செல்ல, அவளும் பேச ஆரம்பித்தாள்.

அலசி ஆராய்ந்து ஒரு பள்ளியை தேர்வு செய்து ,அந்த பள்ளியில் லாப்டாப்பிலேயே அட்மிஷன் வாங்கி விட்டான் தேவேந்திரன்.

“இது வீட்டு பக்கத்துல தான் இருக்கு. சோ ஸ்கூல் பஸ் வந்துரும் பிரச்சனை இல்ல. உனக்கு வொர்க்கு போக வசதிப்படும் தானே?” என்று கேட்டான்.

‘வீட்டுக்கு பக்கத்திலையா? ஆமா கீழ கூட சொன்னானே. அந்த வீடுனு. அது எந்த வீடு?’ என்று யோசித்தவள், நேராக கேட்டாள்.

“எந்த வீட்டுக்கு போகனும்?”

“நம்ம வீட்டுக்கு… ஐ மீன் நான் கட்டின வீடு”

“அப்போ இது?”

“இது அப்பா கட்டின வீடு”

“ஓஓ..”

“அப்பாவோட சொந்த ஊர் வேற. இங்க வேலை பார்க்கத் தான் வந்தாங்க. இப்போ ரிட்டயர்ட் ஆகிட்டாங்க. அம்மாக்கும் கிராமம் தான். அங்க அம்மா வீடு பெருசா இருந்தாலும், ஆளுங்க நிறைய பேர். அட்ஜஸ்ட் பண்ணித் தான் இருக்கனும் . இங்க, அப்பா அம்மாவுக்காகவே பெருசா வீடு கட்டுனாங்க. அம்மாக்கு இந்த வீடு தான் எல்லாம். பெரிய அரண்மனைய காட்டினாலும், இத விட உங்கப்பா கட்டுன இந்த வீடு தான் பெருசுனு சொல்லிடுவாங்க.

நான் கட்டுன வீட்டுக்கு, பால் காய்ச்ச வந்ததோட சரி. இங்க தான் இருப்பாங்க. நாம மட்டும் தான் போக போறோம். அடிக்கடி வந்து பார்த்துக்கலாம் பிரச்சனையில்ல”

‘எஸ்டிடி நிறைய இருக்கும் போலயே’ என்று நினைத்தவள், வாய்விட்டு கேட்கவில்லை.

“சந்துருக்கு சாப்பாட இங்கயே எடுத்துட்டு வந்து ஊட்டி விட்டுடு. நாம மட்டும் கீழ போய் சாப்பிடலாம்” என்று கூறி விட்டு தேவா லாப்டாப்பை பார்க்க, பைரவி எதுவும் சொல்லவில்லை.

சந்துருவை சாப்பிட வைத்து தூங்க வைத்து விட்டு கீழே வர, மல்லிகா அழுக தயாராக இருந்தார்.

‘அட… இதுக்குத் தான் சந்துருவ வேணாம்னு சொன்னானா? இன்னொரு பஞ்சாயத்தா..? ராமா…’ என்று கடுப்பாக நினைத்து விட்டு, ஒன்றுமே பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

எல்லாரும் சாப்பிட அமர்ந்து விட, “தேவா நீ பேசுறது உனக்கே சரியாப்படுதா? நீ எங்களுக்கு ஒரே மகன்பா. இப்படி இவளுக்காக எங்கள விட்டு போறேன்னு சொல்லுறியே.‌.” என்று கேட்டு மல்லிகா கண்ணை கசக்க, பைரவி அதிர்ந்து போனாள்.

இதை யாராவது கேட்டால், பைரவி தனி குடித்தனம் செய்வதற்கு அவர்கள் மகனை பிரித்துக் கொண்டு போகிறாள் என்று தானே நினைப்பார்கள்?. அதிர்ச்சியில் அவள் உறைந்து விட, தேவேந்திரன் அவளைப் பார்த்தான்.

அவளும் அவனை பார்க்க, தட்டை காட்டி சாப்பிடச் சொன்னான். அவள் அசையாமல் இருக்க, ‘நான்‌ பார்த்துக் கொள்கிறேன்’ என்பது போல் கண்ணை மூடித் திறக்க, அதில் பைரவி சற்று அமைதியானாள் .

“இல்ல மா. இது சரி வராது. இதுக்கு முன்னாடியும் நான் சந்துரு கூட அங்க தான இருந்தேன். இனியும் அங்க இருக்கேன். அவ்வளவு தான். நீங்க வேணும்னா எங்க கூட வந்து கொஞ்ச நாள் இருங்க. இது தான் முடிவு. இதுக்கு மேல பேசாதீங்க” என்று முடித்து விட்டான்.

பைரவி பெருமூச்சோடு சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டாள். படுக்கையில் பைரவி அமரும் போது, “உன்‌ செல் நம்பர் சொல்லு?” என்று தேவா கேட்க, பைரவி முழித்தாள்.

அவளிடம் தான் கைபேசி இல்லையே. எதைச் சொல்வது? சொல்லும் எண்ணை குறித்துக் கொள்வதற்காக தன்னுடைய கைபேசியை எடுத்தவன், பதில் வராததை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

“என்னோடது உடஞ்சு போச்சு. புதுசு வாங்கிட்டு சொல்லுறேன்” என்று பைரவி கூற, “ஓகே.” என்று சாதாரணமாக கூறி விட்டு அவனும் படுத்துக் கொண்டான்.

இயல்பாக சந்துருவின் மீது தேவேந்திரன் கை வைக்க, பைரவி தன் கையை வேகமாக இழுத்துக் கொண்டாள். இருவரது கையும் உரசவில்லை தான். சந்துருவின் தலையை தான் அவள் தடவிக் கொடுத்தாள். தேவா அவள் கையை நெருங்கவில்லை . ஆனாலும் பைரவிக்கு சாதாரணமாக இருக்க முடியவில்லை. அவசரமாக மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

இனம்‌‌ புரியாமல் மனதில் ஒரு படபடப்பு உருவாகியது. இத்தனை நாள் இல்லாத படபடப்பு. சந்துரு நடுவில் இருப்பதால், தேவேந்திரனுடன் தனித்து இருப்பதாக அவளுக்குத் தோன்றியது இல்லை.

இன்று தனித்து இருப்பது போன்ற பிரம்மை உருவாக பயந்து போனாள்.

‘இல்ல சந்துருவும் இருக்கான்’ என்று மனதிற்குள் உரு போட்டுக் கொண்டதில், சற்று தெளிவு பெற்றாள். அப்படியே தூங்கியும் விட்டாள்.

*.*.*.*.*.*.*.*.

மூன்று நாட்களாக மல்லிகா முகத்தை தூக்கி வைத்து இருந்தார். தேவா போகிறேன் என்று சொன்னதில் இருந்து இப்படித் தான் இருக்கிறார். ஆனால், தேவாவின் வேலைகளை எல்லாம் அவர் தான் செய்கிறார். மருமகளை மகனின் பக்கத்தில் விட, அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.

திருமணம் முடிந்த நாளில் இருந்து, இன்று வரை, பைரவி தேவாவை கவனித்தது இல்லை. கவனிக்க விட்டது இல்லை. காலை காபியிலிருந்து இரவு பால் வரை, அவரே தான் மகனுக்குச் செய்தார். பைரவி என்னவோ செய்துக் கொள் என்று கண்டு கொண்டதே இல்லை.

நான்காம் நாள் மினி டெம்போ வந்து நிற்க, மல்லிகா ஒப்பாரியே வைத்து விட்டார். இருந்தும் தேவேந்திரன் அசைந்து கொடுக்கவில்லை. உடமைகளை ஏற்றி, அந்த வீட்டில் இறக்கி வைத்து விட்டு வந்தான்.

“காலையில எங்கள விட நீங்களும் அம்மாவும் வரீங்களா பா?” என்று தேவா கேட்க, “எதுக்குடா எங்களுக்கு அலச்சல்? நீங்க கிளம்புங்க. உங்கம்மா அங்க வந்தாலும் அழ தான் செய்வா. பைரவி உள்ள நுழைஞ்சதும், அவ கண்ணீர் விட்டா நல்லாவா இருக்கும்? வேணாம்” என்று சேகரன் கூறி விட்டார்.

சந்துருவை பிரிவது அவருக்கு துக்கமாக தான் இருந்தது‌‌ . ஆனால், இந்த வீட்டில் இருந்தால், மகன் மருமகளின் வாழ்க்கை இப்படியே தான் இருக்கும் என்று அவருக்கு நன்றாகப் புரிந்தது.

மனைவியை கண்டிக்க முடியவில்லை என்றாலும், பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். இங்கிருந்து இவர்கள் செல்வதே சாலச்சிறந்தது என்று தோன்றியது.

காலையில் விடை பெற்று கொண்டு மூவரும் கிளம்ப, எதோ பெண்ணை திருமணம் முடித்து அனுப்புவது போல் மல்லிகா அழுது கொண்டிருந்தார். தேவா அவரை சமாதானபடுத்தி கிளம்பி விட்டான்.

முதல் முறையாக தேவாவுடன் காரில் செல்லும் படபடப்பு சிறிதும் இல்லாமல், சந்துருவுடன் பேசிக்கொண்டே பைரவி வந்தாள்.

வீட்டின் இரும்பு கேட்டை காவலாளி திறக்க, கார் உள்ளே நுழைந்தது. சரி இறங்கலாம் என்று பைரவி நிமிர்ந்து பார்க்க, கார் நிற்கவில்லை. நீண்ட நடைபாதையில் கார் சென்று கொண்டிருந்தது.

பக்கவாட்டில் இருந்த செடிகளும், அதில் இருந்த மலர்களின் அழகும் அவளை வசீகரிக்க, ‘வாவ்..’ என்றால் மனதில். சந்துருவும் அதை ஆர்வமாக வேடிக்கை பார்த்தான்.

நான்கைந்து கார்களை நிறுத்தி வைக்கப் போதுமான அளவு பெரிய போர்ட்டிக்கோவில் கார் நின்றது. கீழே இறங்கி வீட்டினை நிமிர்ந்து பார்த்தாள். வீடு அல்ல பங்களா. அதுவும் கலைநயத்துடன் கட்டப்பட்ட அழகிய பங்களா.

அவள் விழிகளில் ரசனை தெரிய, சந்துரு துள்ளி குதித்தான். இருவரையும் உள்ளே அழைத்து வர, வேலை செய்பவர் ஆரத்தி எடுத்தார். சந்துரு உள்ளே வேகமாக ஓட, பைரவி நிதானமாக அந்த வீட்டை ரசித்துக் கொண்டே நடந்து வந்தாள்.

திடீரென சிந்தனை தடைபட்டது. இது சந்துருவின் அன்னையும் இவனும் வாழ்ந்த வீடு. நினைத்த அடுத்த நொடி ரசனை கெட்டுப் போக அவளது முகம் உணர்வுகளை தொலைத்தது.

ஏனென்று தெரியாமல் அந்த வீடு பிடிக்காமல் போனது. பைரவியின் ரசனை முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த தேவா, அவள் உணர்வுகள் சட்டென மறைந்ததில் யோசனையாகப் பார்த்தான்.

“வீடு பிடிச்சுருக்கா?” என்று அவளை ஆராய்ந்த படி கேட்க, “ம்ம்.. நல்லா இருக்கு” என்றால் பட்டும் படாமல்.

‘அதுக்கு ஏன் இப்படி முகத்த வச்சுருக்க?’ என்று கேட்க நினைத்து வாயைத் திறக்க, சந்துரு ஓடி வந்தான்.

“ப்பா.. இது நம்ம வீடாப்பா?” என்று சந்துரு கேட்க, “ஆமாடா கண்ணா.. நல்லா இருக்கா?” என்று கேட்டான்.

சந்துரு பலமாக தலையாட்ட, “இனிமே இங்கயே. இருக்கலாமா?” என்று கேட்க, சந்துரு துள்ளி குதித்தான்.

வேலை செய்பவரை அழைத்தவன், சந்துருவிற்கு பாலும், அவர்கள் இருவருக்கும் காபி கொண்டு வரச் சொன்னான். பைரவிக்கு நிற்கவே முடியவில்லை. முள்ளின் மேல் நிற்பது போல் அவஸ்தையாக இருந்தது.

‘அப்படியே ஓடி விடுவோமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

சந்துருவை தோட்டத்தின் பக்கம் விளையாடச் சொல்லி தேவேந்திரன் விட்டு விட்டு வர, காபி வந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டவன்,

“நீயும் எடுத்துட்டு என் கூட வா” என்று அழைத்துச் சென்றான்.

சந்துருவிற்கான பாலை கொண்டு போய் கொடுக்கச் சொல்லி விட்டு, முன்னால் நடந்தான்

பைரவி மனமே இல்லாமல் அவன் பின் சென்றாள். முதலில் மாடிக்கு அழைத்து சென்றான். அந்த வீடு போல் படிகள் வாசலில் இல்லாமல், வீட்டிற்குள்ளேயே இருந்தது.

“வீட்ட சுத்தி காட்டுறேன். உனக்கு பிடிச்ச மாதிரி மாத்தனும்னா மாத்திக்கோ” என்க, ‘அது ஒன்னு தான் குறைச்சல்’ என்று நினைத்துக் கொண்டாள்.

முதலில் அவர்கள் அறையை காட்டினான்.

“இது நம்ம ரூம் ” என்று காட்ட, பைரவியின் கால்கள் அசையவில்லை.

“நோ.. இது நீயும் சந்துருவோட அம்மாவும் வாழ்ந்த ரூம்” என்று மனம் கூப்பாடு போட்டது.

“உள்ள வா” என்று தேவா வற்புறுத்த, ‘கடவுளே எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை?’ என்று மனதில் அரற்றினாள்.

“ப்ச்.. வா” என்று அவள் கையைப் பிடித்து தேவா உள்ளே இழுத்தான்.

அவனது முதல் ஸ்பரிசத்தை கூட உணராத நிலமையில் இருந்தாள் பைரவி.

“ரூம்ம பாரு. பிடிச்சா இப்படியே விடு. இல்லையா பிடிச்சு மாதிரி மாத்திடு. இது பசங்க மட்டுமே இருந்த ரூம். சோ உனக்கு தேவை படுற போல மாத்திக்கோ” என்றான் தேவா.

‘என்ன சொன்னான் பசங்க மட்டுமா?’ என்று மனம் கேள்வி கேட்க, “ஏன் சந்துரு அம்மா இருந்தது இல்லையா?” என்று நேராகவே கேட்டாள். எந்த உணர்வுகளையும் காட்டி விடாமல் இருக்க போராடி, வெற்றியும் கண்டாள்.

“சந்தியா இந்த வீட்டுக்கே வந்தது இல்ல” என்று சாதாரணமாக கூறிவிட்டு, சன்னல் திரை சீலைகளை சரி செய்தான்.

ஒரே வரியில் அவளது மொத்த கலக்கமும் பறந்து விட, அந்த வீடு முன்னை விட அழகாக அவள் கண்ணுக்குத் தெரிந்தது.

அடுத்தவளின் வாழ்க்கையை தான் வாழவில்லை என்று அவள் மனதின் ஓரம் நிம்மதி பரவ, முகத்தில் வெளிச்சம் பரவியது. சன்னலை திறந்து விட்டு திரும்பிய தேவா, அவளது மலர்ந்த முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தான்.

‘எதற்காக இந்த மலர்ச்சி?’ என்று யோசித்தவன், சற்று நேரம் முன் இருவரும் பேசியதை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தான்.

அதில் மெல்ல மெல்ல காரணம் விளங்கி விட, இப்போது அவன் முகமும் மலர்ந்து கனிந்தது.

கையிலிருந்த காபியை அப்போது தான் பைரவி கவனித்தாள். அந்த வீட்டில் பச்சை தண்ணீரை கூட குடிக்க அவளுக்கு அப்போது விருப்பம் இல்லை. இப்போது நன்றாக ரசித்து குடிக்க, அதை தேவா ரசித்தான்.

“பால்கனிக்கு போகலாம் வா” என்றவன், பாதி மரமும் பாதி கண்ணாடியுமாக செய்யப்பட்டு இருந்த பால்கனி கதவை திறந்து விட்டான்.

காற்று சிலுசிலுவென முகத்தில் மோத, பைரவி அதை ஆழ்ந்து சுவாசித்தாள்.

இருவரும் அங்கு சென்று நின்றனர். காற்றை ரசித்தவர்கள் மனநிலை, காற்றை விட லேசாக இருந்தது. அதில் அமைதி தானாக வந்து அமர்ந்து கொள்ள, காபியை மட்டும் அல்லாமல், அந்த நிமிடத்தையும் ருசித்தார்கள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்